தம்பியின் திறமை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: August 21, 2021
பார்வையிட்டோர்: 4,950 
 

அண்ணன் தம்பிகள் ஐந்து பேர் தங்கள் தாயோடு ஓர் ஊரிலே வசித்து வந்தார்கள். அவர்களுடைய தந்தை இறந்து போய்ப் பத்தாண்டுகளுக்குமேல் ஆகிவிட்டது. தாய்தான் அவர்களைக் காப்பாற்றி வளர்த்து இளைஞர்களாகச் செய்தாள்.

அந்தத் தாய்க்கு எல்லாக் குழந்தைகளிடத்திலும் அன்பு தான். ஆனால் நல்லமுத்து என்னும் கடைசிப் பையனுக்கு அவள் அதிகமான உரிமை கொடுத்திருந்தாள். அவன் செல்லப்பிள்ளை. அதைக் கண்டு மற்ற நால்வருக்கும் அவனிடத்திலே பொறாமை. அவர்கள் எப்பொழுதும் நல்லமுத்துவைப் பழித்துப் பேசுவார்கள்.

“அம்மா, நீ நல்லமுத்துவைப் பற்றிப் பிரமாதமாக நினைத்துக் கொண்டிருக்கிறாய். அவன் மண்டையிலே களிமண்கூடக் கிடையாது” என்று ஆரம்பிப்பான் எல்லோருக்கும் மூத்தவனான சாமிநாதன். அண்ணன் சொல்லுவது முற்றிலும் உண்மை என்று ஒத்துப்பாடுவார்கள் மாணிக்கம், சுந்தரம், வேலுச்சாமி ஆகிய மூவரும்.

“நல்லமுத்துக்கு மூளையில்லை என்று சொல்லுகிற உங்களுக்குத்தான் மூளையில்லை” என்று சில சமயங்களில் சற்று கோபமாகவே தாய் பதில் சொல்லுவாள். அவர்கள் நல்ல முத்துவைப்பற்றி இழிவாகப் பேசுவதைக் கேட்டுக் கேட்டு அலுத்துப்போய் அவளுக்கு அப்படிக் கோபம் வருவதுண்டு.

தாய்க்குக் கோபம் வரவர மூத்தவர்களுக்குக் கடைசித் தம்பியிடம் வெறுப்புத்தான் அதிகமாயிற்று. அதைக் கண்டு தாயார் மனம் வருந்தினாள். நல்லமுத்து எல்லோரையும்விடப் புக்தி கூர்மையுடையவன் என்பதை அவர்களுக்கு நன்றாக விளங்கும்படி செய்து அவனிடத்திலே அன்போடு இருக்கச் செய்யவேண்டுமென்று அவள் ஆசை கொண்டான்.

அவள் ஒரு நாள் தன் மக்களை அருகே அழைத்து, “உங்கள் எல்லோருக்கும் வயது வந்து விட்டது. இனிமேல் நீங்கள் கலியாணம் செய்து கொண்டு தனித்தனிக் குடும்பமாக வாழவேண்டியவர்கள். அப்படி வாழ்வதற்கு முன்னால் நமது நாட்டை விட்டு அடுத்த நாடுகளுக்குச் சென்று சுற்றிப் பார்த்து உலக அனுபவம் பெற்று வரவேண்டும். அப்படிச் செய்தால் அறிவும் வளரும். உங்களுடைய புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தவும் சந்தர்ப்பம் கிடைக்கும்” என்று சொல்லி அவர்களுக்கு வேண்டிய பொருள் கொடுத்து அனுப்பினாள்.

ஐந்து பேரும் சேர்ந்தே சுற்றுப் பிரயாணத்தை நடத்தினார்கள். சென்ற இடங்களிலெல்லாம் நல்லமுத்துவைப் பற்றி இழிவாகப் பேசுவது தான் மற்றவர்களின் வேலை.

நல்லமுத்துக்கு அவர்களிடத்திலே உண்மையான அன்பு இருந்ததால் அவன் அவர்களுடைய இழிவுப் பேச்சைப் பொறுமையோடு சகிததுக் கொண்டிருந்தான். மூன்று மாதங்களுக்குப் பிறகு அவர்கள் வீரசிங்கபுரம் என்ற ஒரு நகரத்திற்குப் போய்ச் சேர்ந்தார்கள். அந்த நகரத்தை ஆண்ட அரசனுக்கு ஒரே ஒரு மகள் தான் உண்டு. அவள் பெயர் பொற்கொடி. பெயருக்கு ஏற்றவாறு அவள் அழகாக இருந்தாள். ஆனால் அவளுக்குத் தற்பெருமை அதிகம். தன் படிப்பைப் பற்றியும் திறமையைப் பற்றியும் அவள் மிக உயர்வாக எண்ணிக்கொண்டிருந்தாள். அவள் ஒரு வேடிக்கையான தீர்மானம் செய்து கொண்டிருந்தாள். யார் வேண்டுமானாலும் அவளிடம் சென்று எப்படிப் பட்ட பொய்யையும் கட்டுக்கதையையும் வாழ்க்கையிலேயே உண்மையாக நடந்தது என்று கூறலாம். யார் கூறுவதைக் கேட்டு அதைப் பொய் என்று அவள் சொல்கிளோ அவரை அவள் மணந்துகொள்வதாக அறிவித்திருந்தாள். ஆனால் இதுவரையிலும் அவளிடத்திலே யாரும் வெற்றியடையவில்லை. யார் எதைச் சொன்னாலும், “நீ கூறுவது உண்மைதான். அது நடந்ததாக நான் நம்புகிறேன்” என்று அவள் பதில் சொல்லுவாள். வந்தவர் ஏமாந்து திரும்புவார்.

இந்த விஷயம் சாமிநாதன் முதலான ஐவருக்கும் தெரிய வந்தது. அவர்களும் பொற்கொடியிடம் சென்று பேசி வெற்றியடையத் தீர்மானித்தார்கள். ஒவ்வொருவனுடைய புத்திக் கூர்மையைச் சோதிக்கவும் நல்ல சந்தர்ப்பம் கிடைத்தது.

முதல் நாள் எல்லோருக்கும் மூத்தவனான சாமிநாதன் பொற்கொடியிடம் தனது வாழ்க்கை அனுபவம் என்று ஒரு கட்டுக் கதையைச் சொல்லப் போனான். அவன் சொல்லும் கதையை யாராலும் மெய்யென்று நம்ப முடியாது. ஏனென்றால் அவன் சொல்லுவதுபோல் வாழ்க்கையிலே நடக்கவே முடியாது. அதனால் பொற்கொடி தனக்கே மனைவியாகப் போகிறாள் என்று அவன் நிச்சயமாக நம்பினான். பொற்கொடியிடம் அவன் உற்சாகத்தோடு கீழ்க்கண்டவாறு தனது வாழ்க்கையில் நடந்ததாகச் சொல்லலானான்.

“எனக்குப் பதினைந்து வயதாக இருந்தபொழுது ஒரு நாள் நான் ஒரு கப்பலில் ஏறி மீன் பிடிப்பதற்காகக் கடலில் நெடுந்தூரம் சென்றேன். என்னுடன் வந்த வேலைக்காரர்கள் கடலில் பெரிய பெரிய வலைகளை வீசினார்கள். ஆனால் அன்று ஒரு மீன்கூட அகப்படவில்லை. எல்லோருக்கும் இது ஆச்சரி யத்தை உண்டாக்கிற்று. கடலிலிருந்து மீன் கிடைக்காத நாளே கிடையாது. அப்படியிருக்க அன்றுமட்டும் ஒரு சிறு மீன்கூட அகப்படாதது எல்லோரையும் திகைக்க வைத்தது. அப்படி மீன் கிடைக்காத காரணத்தை ஆராய வேண்டுமென்று நான் கடலுக்குள் குதித்தேன். குதித்து வேகமாக உள்ளே மூழ்கினேன். ஐந்து மைல் ஆழம் உள்ளே போகும் வரையி லும் கண்ணுக்கு ஒரு பிராணிகூடத் தென்படவில்லை. அதுவும் ஆச்சரியமாகத்தான் இருந்தது. நான் மேலும் மேலும் மூழ்கிக் கடலின் அடிப்பாகத்திற்கே சென்றுவிட்டேன். அங்கே மலையைப்போல ஒரு பெரிய திமிங்கிலம் இருந்தது. அது தன் வாயைத் திறந்து அந்தப் பக்கத்திலுள்ள எல்லா மீன்களையும் விழுங்கிக் கொண்டிருந்தது. அன்று வலை வீச்சில் மீன் கிடைக்காமற் போனதற்குக் காரணம் தெரிந்துவிட்டது. நான் கொஞ்சம்கூடத் தயங்காமல் அந்தத் திமிங்கிலத்தின் திறந்த வாய்க்குள் நுழைந்து அதன் வயிற்றுக்குள் சென்றேன். அந்தச் சமயத்தில் எனக்கு அடக்க முடியாத பசி உண்டாகி விட்டது. அதனால் திமிங்கிலத்தின் வயிற்றுக்குள்ளேயே ஒரு அடுப்புக் கூட்டி நெருப்பு மூட்டினேன். வயிற்றுக்குள் கிடந்த ஏராளமான மீன்களில் நல்ல மீன்களாகப் பொறுக்கி அவற்றை அந்த அடுப்பிலே போட்டுப் பக்குவம் செய்தேன். பசி தீரும் வரையில் சாப்பிட்டேன். பிறகு வெளியே வந்து அந்தத் திமிங்கிலத்தின் முதுகில் ஓங்கி ஒரு குத்துவிட்டேன். அது துடித்துச் செத்து விழுந்தது. கொஞ்ச நேரத்தில் திமிங்கிலம் மிதந்து கடலின் மேல் மட்டத்திற்கு வந்துவிட்டது. நான் அதன் முதுகில் ஏறிக்கொண்டு வந்து கப்பலுக்குச் சென்றேன். அந்த திமிங்கிலத்தையும் கப்பலில் ஏற்றிக் கொண்டு எல்லோரும் கரைக்கு வந்து சேர்ந்தோம்…” என்று இவ்வாறு சாமிநாதன் சொல்லி முடித்து ஆவலோடு பொற் கொடியைப் பார்த்தான்.

“நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை; அது அப்படியே நடந்த தென்று நான நம்புகிறேன்” என்று அவள் தயங்காமல் சொல்லிவிட்டாள். சாமிநாதன் ஏமாந்து திரும்பினான்.

இரண்டாவது நாள் சாமிநாதனுக்கு அடுத்த தம்பியாகிய மாணிக்கம் பொற்கொடியிடம் சென்று பேசலானான்.

“எனக்குப் பத்து வயதிருக்கும்போது ஒரு நாள் இரவு முழு நிலா அழகாக வான வெளியிலே பிரகாசித்துக் கொண் டிருந்தது. எனக்குச் சந்திரமண்டலத்திற்கு அப்பொழுதே போக வேண்டுமென்ற ஆசை உண்டாயிற்று. உடனே என்னுடைய தொழிற்சாலைக்குப் போனேன். ஒரு நொடியிலே ஒரு புஷ்பக விமானம் செய்தேன். அதில் ஏறிக்கொண்டு ஆகாயத்திலே ஜிவ்வென்று பறந்தேன். அடுத்த நொடியிலே சந்திரனுக்குப் போய்விட்டேன். சந்திரன் இங்கிருந்து பார்ப்ப தற்கு அழகாக இருக்கிறதே ஒழிய அங்கே சென்று பார்ப்பதற்கு அழகாக இல்லை. அங்கு இருந்த பெண்களும் குரங்குமூஞ்சிப் பெண்களாக இருந்தார்கள். அதனால் அங்கே தங்கியிருக்கப் பிடிக்கவில்லை. உடனே திரும்பலாம் என்று நினைத்தேன். ஆனால் அதற்குள்ளே ஒரு குரங்குப் பெண் என் புஷ்பக விமானத்திலே குரங்கு வேலை செய்துவிட்டாள். நுட்பமான அந்த விமானம் கெட்டுப்போய்விட்டது. அதைப் பழுது பார்ப்பதற்குத் தொழிற்சாலை இல்லை. அதனால் நான் நிலாவின் வெண்மையான கிரணம் ஒன்றைக் கையில் பற்றிக்கொண்டு அதோடு பூமியை நோக்கிக் குதித்தேன். பூமியைச் சுற்றிலும் வான வெளியிலே கருமேகங்கள் நெருக்கமாகப் படர்ந்திருந்தன. ஆகையால் நான் கையில் பற்றிக்கொண்டு வந்த நிலாக்கதிர் மேகத்திலேயே அறுந்து நின்றுவிட்டது. நான் அந்தக் கதிரை விட்டுவிட்டு ஒரு மேகத்தின்மேல் படுத்துக்கொண்டு ஆகாயத்தில் பறந்தேன். கொஞ்ச நேரத்தில் அந்த மேகம் மழையாகப் பெய்ய ஆரம்பித்தது. நான் ஒரு மழைத்துளிக்குள் புகுந்துகொண்டு பூமிக்கு வந்து சேர்ந்தேன்”.

இவ்வாறு அவன் சொல்லி முடித்து வாய் மூடுவதற்கு, முன்னாலே பொற்கொடி, “நீங்கள் சொன்னது எல்லாம் உண்மை. நான் அதை முற்றிலும் நம்புகிறேன்” என்று கூறினாள். மாணிக்கமும் தோல்வியடைந்து திரும்பினான்.

மறுநாள் காலையில் சுந்தரம் தனது திறமையைக் காட்டப் பொற்கொடியிடம் புறப்பட்டான். பொற்கொடி அவன் சொல்வதைக் கூர்ந்து கேட்கலானாள்.

“எனக்கு ஐந்து வயதாக இருக்கும்பொழுது ஒரு நாள் நான் காட்டிலே ஒரு சிங்கத்தின் மீதேறிக் கொண்டு உல்லாச மாகச் சுற்றிக் கொண்டிருந்தேன். கொஞ்ச நேரத்தில் எனக் குப் பசிக்க ஆரம்பித்தது. அதனால் அங்கே தென்பட்ட ஒரு மாமரத்தின் அருகே சென்றேன். அது ஒரு விசித்திரமான மாமரம். அடிமரமானது நுனிமரம் போலச் சிறியதாகவும், நுனிமரம் அடிமரம் போலப் பருத்தும் இருந்தன. அந்த மரத் தில் ஏராளமாகப் பலாப் பழங்களும் ஆப்பிள் பழங்களும் பழுத் துத் தொங்கின. நான் மரத்தின் மீதேறி விருப்பமான பழங் களைச் சாப்பிட்டுக்கொண்டே இருந்தேன். சாப்பிடச் சாப்பிட என் உடம்பு வளர்ந்து கொண்டே இருந்தது. கைகளும் கால் களும் பனைமரங்களைப்போல நீண்டு வளர்ந்து விட்டன. வயிறு ஒரு சிறிய குன்றுபோல ஆகிவிட்டது. அந்த நிலையிலே நுனிமரத்தைவிட்டு அடிமரத்திற்கு இறங்கினால் மெல்லியதான அடிமரம் முறிந்து விழுந்துவிடு மென்று எனக்குத் தோன்றியது. அதனால் உச்சியிலிருந்தபடியே காலை நீட்டி ஒரு அடி எடுத்து வைத்து என் வீட்டிற்குச் சென்று அங்கிருந்த ஒரு ஏணியை எடுத்து வந்தேன். அந்த ஏணியை மரத்தின்மீது சாய்த்து வைத்துக் கீழேயிறங்கி வீட்டிற்கு வந்து சேர்ந்தேன்”.

இவ்வாறு சுந்தரம் சொல்லி முடிக்கு முன்பே பொற்கொடி “நீங்கள் சொன்னது அவ்வளவும் உண்மைதான். நான் அது அப்படியே நடந்ததாக முற்றிலும் நம்புகிறேன்” என்று சொல்லிவிட்டாள். சுந்தரமும் தலையைத் தொங்கவிட்டுக் கொண்டு திரும்பினான்.

மறுநாள் பொழுது விடிந்ததும் வேலுச்சாமி பொற்கொடியிடம் புறப்பட்டான். அவன் சொல்லுவதையும் அவள் உற்றுக் கேட்டுக்கொண்டிருந்தாள்.

“நான் பிறப்பதற்கு முன்பே ஒரு வீரச்செயல் புரிந்திருக்கிறேன். அப்பொழுது என் தாய் வயிற்றில் கருப்பைப்பையில் நான் வளர்ந்து வந்தேன். ஒரு நாள் என் தாயார் காட்டு வழியில் தனியாகச் சென்று கொண்டிருந்தாள். அவள் பக்கத் தில் துணையாக யாருமில்லை. மாலை நேரமாயிற்று. திடீரென்று ஒரு வேங்கைப்புலி பாய்ந்து வந்தது. என்ன செய்வதென்று தோன்றாமல் என் தாயார், நடுங்கிக்கொண்டு அலறினாள். ‘அம்மா பயப்படாதே’ என்று தைரியம் சொல்லிக்கொண்டே நான் கருப்பைப் பையைவிட்டு வெளியே குதித்தேன். அதற் குள்ளே வேங்கைப் புலி மிக அருகிலே வந்துவிட்டது. அதன் மூக்கிலே நான் எனது இரண்டு கைவிரல்களை விட்டு அந்தப் புலியைத் தூக்கித் தரையிலே ஓங்கி அடித்தேன். புலி வீறிட்டுக் கீழே விழுந்து எலும்பெல்லாம் நொறுங்கி மாண்டு போயிற்று. நான் மகிழ்ச்சியோடு மீண்டும் கருப்பைப்பைக்குள் புகுந்து கொண்டேன்”.

வேலுச்சாமி இவ்வாறு சொல்லி நிறுத்துவதற்குள் பொற்கொடி “ நீங்கள் சொன்னது அவ்வளவும் உண்மை. அப்படியே நடந்ததாக நான் நம்புகிறேன்” என்று கூறினாள். நான்காவது தம்பியான அவனும் தோல்வியுற்றுத் திரும்பிவிட்டான்.

அடுத்த நாள் பொழுது விடிந்ததும் கடைசித் தம்பியாகிய நல்லமுத்து புறப்பட்டான். பொற்கொடி அவன் கூறுவதையும் கவனமாகக் கேட்கத் தொடங்கினாள்.

“மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் நான் மந்திரத்தீவு என்னும் ஒரு தீவிலே வசித்துவந்தேன். வாணிகம் செய்து ஏராளமான பொருள் சம்பாதித்து அந்தத் தீவின் அரசிளங் குமரனைப் போல வாழ்ந்து வந்தேன். அந்தச் சமயத்தில் ஒரு நாள் ஒரு முனிவர் என்னிடம் வந்தார். அவருக்கு நான் அன் போடு பணிவிடை செய்து நிறையப் பொன்னும் மணியும் கொடுத்தேன். அவர் மகிழ்ச்சியடைந்து எனக்கு ஒரு அற்புத மான தாமரை மொக்கைக் கொடுத்துவிட்டுச் சென்றார். அத் தாமரை மொக்கை நான் கையில் வைத்துக்கொண்டு அதன் அழகைப் பார்தது வியந்து கொண்டிருந்தேன். தாமரை மொக்கு பொதுவாக விரியத் தொடங்கியது. அதற்குள்ளிருந்து மிக அழகான ஒரு இளங்கன்னி வெளியே வந்தாள். அவள் என்னைக் காதலித்தாள். நானும் அவளைக் காதலித்தேன். இருவரும் திருமணம் செய்து கொண்டு ஓராண்டு இன்பமாக வாழ்ந்து வந்தோம். பிறகு அவள் திடீரென்று ஒரு நாள் எப்படியோ மறைந்து போய்விட்டாள். என்னால் அவளைப் பிரிந்து வாழ முடியவில்லை. அதனால் எனது பொருள்களை யெல்லாம் தானம் செய்துவிட்டு நான் அங்கிருந்து புறப்பட்டேன். இரண்டு ஆண்டுகளாக எங்கெங்கோ சுற்றி அவளைத் தேடி அலைந்துவிட்டுக் கடைசியில் இங்கு வந்து சேர்ந்தேன். வந்து சில நாட்களாயின. இன்று தான் இந்த நகரத்து அரசிளங்குமரியாகிய உன்னைப் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இங்கு வந்து பார்த்தால் என் மனைவியே இந்த நகரத்து அரசிளங்குமரியாக இருக்கிறாள். இது எனக்கு அளவில்லாத மகிழ்ச்சியை உண்டுபண்ணுகிறது”.

இவ்வாறு நல்லமுத்து சுருக்கமாகக் கூறி முடித்தான். பொற்கொடி ஒன்றும் பேசாமல் மௌனமாக அமர்ந்திருந்தாள். அவளுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. அவன் சொன்னதை உண்மை யென்று சொன்னாலும் அவள் அவனுக்கு மனைவியாக வேண்டும். பொய்யென்று சொன்னாலும் நிபந்தனையின்படி அவனுக்கு மனைவியாக வேண்டும். அதனால் பொற்கொடி பேசாமல் இருந்தாள். நல்லமுத்து வெற்றியடைந்தான்.

சில நாட்களில் அவனுக்கும், பொற்கொடிக்கும் திருமணம் சிறப்பாக நடைபெற்றது. நல்லமுத்துவே அறிவில் மிக்கவன் என்று அவனுடைய அண்ணன்மார்கள் ஒப்புக்கொண்டார்கள். ஒப்புக்கொண்டதோடு தங்கள் பொறாமைக் குணத்தையும் விட்டு விட்டார்கள். தாயார் மிகுந்த மகிழ்ச்சியடைந்தாள்.

– தம்பியின் திறமை (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: 14-11-63, பழனியப்பா பழனியப்பா பிரதர்ஸ், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *