சமயோசித புத்தியால் தப்பித்தாள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: March 1, 2022
பார்வையிட்டோர்: 8,401 
 

சித்திராங்கி என்ற இளம்பெண், ஒரு பணக்காரச் செட்டியிடம் வேலைக்கு வந்து சேர்ந்தாள்.

செட்டியின் மனைவி இறந்து பல ஆண்டுகள் ஆயின. குழந்தைகளும் இல்லை, செட்டியிடம் தங்க நகைகள், வைரநகைகள், பொன், வெள்ளி நாணயங்கள், ஏராளமாக இருந்தன. என்றாலும், செட்டி ஒரு கஞ்சன். தர்மம் என்பதையே அவன் அறியாதவன்.

செட்டியிடம் கணக்கன், தோட்டக்காரன், வண்டிக்காரன், சமையல்காரன் ஆகியோர் வேலைக்கு இருந்தனர்.

பணிப் பெண்ணாக வந்து சேர்ந்த சித்திராங்கி, செட்டியின் குணத்துக்கு ஏற்றவாறும், அவனுடைய குறிப்பு அறிந்தும், சாமர்த்தியமாக நடந்து கொண்டாள். அதனால் செட்டியின் நம்பிக்கைக்கு உரியவள் ஆனாள்.

செட்டி தன்னுடைய நகைகள் முதலானவை இருக்கும் இடத்தை சித்திராங்கிக்கு காட்டி வைத்தான்.

எவ்வளவு நாட்கள் தான் செட்டியிடம் வேலை செய்து கொண்டிருப்பது? இளமைப்பருவம் கழியும் முன்னே, ஒருவனை திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கை நடத்தி, குழந்தைகளைப் பெற்று வாழவேண்டும் என்ற ஆசை, அவளுக்கு உண்டாயிற்று.

வியாபாரத் தொடர்பாக, செட்டி வெளியூர் சென்றான்.

அதைப் பயன்படுத்திக் கொண்டு, செட்டி வைத்திருந்த நகைகள், முதலானவற்றை எடுத்து, சிறு மூட்டையாகக் கட்டிக் கொண்டு, சித்திராங்கி வீட்டை விட்டு வெளியேறினாள்.

செட்டி திரும்பி வந்தான். சித்திராங்கியைக் காணவில்லை. நகைகள் வைக்கப்பட்டிருந்த பெட்டியும் காலியாக இருந்தது.

செட்டிக்கு அதிர்ச்சி ஏற்பட்டது.

செட்டியின் ஆட்கள் சித்திராங்கியைத் தேடிச் சென்றனர்.

எவரிடமும் அகப்படாமல் இருக்கவேண்டுமே என்று எண்ணி, பயத்துடன் சித்திராங்கி பயணத்தை தொடர்ந்தாள்.

அப்போது தெருப்பாடகன் ஒருவன் அவளைப் பின் தொடர்ந்தான்.

சித்திராங்கி ஊரைக் கடந்து, காட்டு வழியே சென்றாள். அப்போதும் அவன் அவளைப் பின் தொடர்ந்து சென்று கொண்டிருந்தான்.

அவனிடமிருந்து தப்புவதற்காக அவள் ஒரு யோசனையுடன் திமரென்று நின்றாள்.

அவனும் நெருங்கி அவள் அருகில் வந்தான்.

அவள் அழுது கொண்டே, “ஐயா, என் கணவனின் கொடுமை தாளமுடியாமல், மனம் வெறுத்து, வீட்டைவிட்டு வெளியேறி தான் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தோடு இங்கே வந்து சேர்ந்திருக்கிறேன். ஆனால், தூக்கு மாட்டிக் கொள்ள மரக்கிளையில் கயிறு கட்டத் தெரியவில்லை , நீ அதற்கு உதவி செய்தால் நல்லது” என்று கண்கலங்கியபடி சொன்னாள்.

அவள் அணிந்திருந்த நகைகளைக் கவர்ந்து செல்லும் எண்ணத்தில் தெருப்பாடகன் இருந்தான். அதனால், அவள் தூக்கில் தொங்கி, செத்துத் தொலைந்தால், நகைகளை எளிதாக எடுத்துக் கொள்ளலாமே என்ற ஆசையில் சரி என்று சொல்லி, மரத்தில் ஏறினான். கயிறைக் கட்டி, மற்றொரு நுனியில் சுருக்கு முடிச்சுப் போட்டு விட்டான்.

“ஐயா, எனக்கு எட்டாத உயரத்தில் கருக்கு தொங்குகிறதே! அதிலே எப்படி நான் கழுத்தைக் கொடுப்பது? அரை குறையாகச் செய்து, உயிர் போகாவிட்டால், அவமானப்பட்டு தண்டனைக்கும் அவமானத்துக்கும் ஆளாக நேரிடுமே. ஆகையால், நீ முதலில் செய்து காட்டினால், நான் அப்படியே செய்வேன்” என்றாள் அவள்.

தெருப்பாடகனுக்கு மகிழ்ச்சி பொங்கியது. தன்னுடைய மிருதங்கத்தை நிமிர்த்தி வைத்து, அதில் ஏறி நின்று, சுருக்கு முடிச்சை கழுத்தில் மாட்டிக் கொண்டு எட்டுமா என்று சோதித்துப் பார்த்தான்.

அந்தச் சமயம் சித்திராங்கி, படரென்று மிருதங்கத்தை காலால் உதைத்துத் தள்ளிவிட்டாள். சுருக்கு முடிச்சு தெருப் பாடகனின் கழுத்தை நெறித்தது.

தனக்கு வந்த ஆபத்தை சமயோசிதமாக நீக்கிக் கொண்ட சித்திராங்கி, மகிழ்ச்சியோடு பயணத்தைத் தொடர்ந்தாள்.

கருமி பறிகொடுத்தான்; சமயோசித புத்தியினால் அவள் தப்பித்துக் கொண்டாள்.

– சிறுவர் சிறுமியருக்கு நீதிக் கதைகள், முதற் பதிப்பு: நவம்பர் 1997, முல்லை பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *