குருவி வயிற்றுக்குள் மரம்!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தி இந்து
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: December 10, 2017
பார்வையிட்டோர்: 13,877 
 

செண்பகக் காட்டில் ஏராளமான பறவைகள் இருந்தன. அவரவர் வேலைகளைக் கவனமாகச் செய்து வந்தன. சூரியன் உதிப்பதற்கு முன்பே, அதிகாலையில் இரைத் தேடப் புறப்படும் பறவைகள், மாலை வேளைதான் தங்களின் கூடுகளுக்கே திரும்பும்.

புங்கை மரத்தில் குருவி ஒன்று கூடுகட்டி வாழ்ந்துவந்தது. அது இரண்டு முட்டைகளை இட்டது. குஞ்சுகளுக்காக இலைகளை மெத்தைப்போல அலங்காரம் செய்து வைத்திருந்தது.

சில நாட்களில் முட்டைகளிலிருந்து குருவிக் குஞ்சுகள் வெளியே வந்தன. அதைப் பார்த்ததும் தாய்க் குருவிக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

இரண்டு குருவிக் குஞ்சுகளும் பார்ப்பதற்கு மிகவும் அழகாக, துறுதுறுவென்று இருந்தன. ’க்ரிக்… க்ரிக்…’ என்று சத்தம் போட்டுத் தாயை அழைத்தன.

தாய்க் குருவி குஞ்சுகளுக்குப் பசி என்று புரிந்துகொண்டது. உடனே தயாராக வைத்திருந்த சிறியப் புழுக்களை உணவாகக் கொடுத்தது.

சில வாரங்கள் சென்ற பிறகு, குஞ்சுகளுக்கு இறக்கைகள் முளைக்க ஆரம்பித்தன. அவை பறப்பதற்கு முயற்சி செய்தபடியே இருந்தன.

குஞ்சுகளுக்காக உணவு தேடிப் போன தாய்க் குருவிக்கு ஒரு சப்போட்டா பழம் கிடைத்தது. அது மிகவும் இனிப்பான, சுவையான பழம். அதைத் தாய்க் குருவி, தன் குஞ்சுகளுக்காகக் கொண்டுவந்தது.

“பசங்களா! இது இனிப்பான சப்போட்டா பழம். இதைச் சாப்பிடுவதற்கு முன்னாடி குளிச்சிட்டு வாங்க. நான் இலை கொண்டு வரேன்” என்று கூறிவிட்டுச் சென்றது தாய்க் குருவி.

இரண்டு குஞ்சுகளில் ஒன்று தாய் சொல்லைத் தட்டாமல் உடனே குளிக்க ஆற்றுக்குப் பறந்தது.

இன்னொரு குருவிக்கு, அந்தச் சப்போட்டாவை உடனே சுவைக்க ஆசை வந்தது. முதலில் கொஞ்சமாக ருசித்துப் பார்த்தது. பழத்தின் சுவை குருவிக் குஞ்சுக்கு மிகவும் பிடித்துவிட்டது. ‘அம்மாவும் தம்பியும் வருவதற்குள் மீதியையும் தின்றுவிடலாம்’ என்று எண்ணி, முழுப் பழத்தையும் அப்படியே விழுங்கியது.

சற்று நேரத்தில் தம்பிக் குருவி வந்தது. அது வந்த சிறிது நேரத்தில் தாய்க் குருவியும் வந்தது.

இலையை விரித்து வைத்தது. சப்போட்டா பழத்தை எடுக்கச் சென்றது. வைத்த இடத்தில் பழம் இல்லை. திடுக்கிட்ட குருவி. தன் குஞ்சுகளைப் பார்த்து, “யார் பழத்தைத் தின்றது?” என்று கேட்டது.

இருவருமே “நான் இல்லை” என்றனர்.

“உங்கள் இருவரில் யார் தின்றீர்கள் என்று தெரியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக உண்டிருந்தால் அதன் விதைகள் இந்தக் கூட்டில்தான் விழுந்திருக்கும். ஆனால் கூட்டில் விதைகள் இல்லை. ஆக யாரோ ஒருவர் முழுப் பழத்தையும் விழுங்கிவிட்டீர்கள். அது வயிற்றுக்குள் சென்ற 24 மணிநேரத்தில் செடியாக முளைக்கத் தொடங்கிவிடும்” என்று அச்சுறுத்தியது தாய்.

குஞ்சுகள் இரண்டும் அம்மாவைப் பார்த்தபடியே இருந்தன.

“உங்கள் வயிற்றில் வளர்ந்த செடி, அடுத்த ஆறு வாரத்தில் மரமாகும். அந்த மரம் வளர்வதற்கு வயிற்றில் இடமிருக்காது. அதனால் வயிறு லேசாக விரிசல் விடும். அப்புறம்…” என்று தாய்க் குருவி சொல்லி முடிப்பதற்குள் குறுக்கிட்டது ஒரு குருவிக் குஞ்சு.

“அம்மா! என்னை மன்னிச்சுடுங்க. நான்தான் அந்தப் பழத்தை அப்படியே முழுங்கிவிட்டேன். இனி இதுபோன்ற தவறைச் செய்ய மாட்டேன். என் வயிற்றில் செடி முளைக்காமல் இருக்க ஏதாவது வழி இருந்தால் சொல்லுங்கள்” என்று பயந்து அழுதது அந்தக் குருவிக் குஞ்சு.

“நீதானா! சரி… சரி.. அழாதே” என்று ஆறுதல் சொன்னது தாய்க் குருவி.

“ஐயையோ அண்ணன் மரத்தை முழுங்கிட்டான்” என்று அழுதது மற்றொரு குருவிக் குஞ்சு.

“மகனே! பயம் வேண்டாம். விதைகள் மண்ணில் புதைந்தால்தான் செடிகளாகும். அந்தச் செடிகள்தான் மரங்களாகும். பழத்தைத் தின்றது யார் என்பதைக் கண்டறியவே அப்படிச் சொன்னேன்” என்றது தாய்க் குருவி.

குருவிக் குஞ்சுகள் நிம்மதியடைந்தன.

அன்று முதல் பறவைகள் பழங்களை உண்ட பிறகு, விதைகளைப் பூமியில் எச்சங்களாக விடுகின்றன. அவற்றிலிருந்து தாவரங்கள் முளைக்கின்றன!

– 27 Sep 2017

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *