ஓணான் வேட்டை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: August 9, 2012
பார்வையிட்டோர்: 12,386 
 

சோமுவும் முருகனும் பள்ளி விட்டு வந்துகொண்டிருந்தார்கள். முருகன் ரோட்டின் இருபுறமும் உள்ள முட்செடிகளைப் பார்த்தபடி வந்தான். ஒரு ஓணான் முட்செடியின் கிளையில் மண்டையை ஆட்டிக்கொண்டு நின்றது. ‘‘முருகா, ஓணான் பிடிப்போமாடா?’’ என்று ஆவலுடன் கேட்டான்.

‘‘சரிடா, போய் கடையில பத்து பைசாவுக்கு நரம்பு வாங்கிட்டு வா, நான் ஓணானைப் பார்த்துக்கிறேன்’’ என்று முருகனை அனுப்பினான். ஒரு நீளமான குச்சியை எடுத்து வைத்துக்கொண்டான். ஓணான் சற்று நகர்ந்தது. ஓடி விடுமோ என்று பயந்தான். அது கண்களை உருட்டி உருட்டி அடுத்து நடக்கப்போவது தெரியாமல் அப்பாவியாக சுற்றும்முற்றும் பார்த்துக்கொண்டிருந்தது.

முருகன் வந்துவிட்டான். ‘‘நான் போய்ட்டு வர்றதுக்குள்ள குச்சியை ரெடி பண்ணிட்டியே’’ என்று பாராட்டினான். இருவரும் குச்சியின் நுனியில் நரம்பை சுருக்கு முடிச்சு போட்டுக் கட்டினார்கள்.

வேட்டைக்குப் போவது போல் பதுங்கிப் பதுங்கி, முட்செடியின் அருகில் போனார்கள். மெதுவாக குச்சியை, முருகன் ஓணான் கழுத்திற்கு கொண்டுபோனான். ஆபத்து வருவதை அறியாமல் நின்றது ஓணான்.

முருகன், ஓணானின் கழுத்தில் மாட்டினான். நன்றாக இறுக்கி சுண்டி இழுத்தான். ஓணான் துடித்தது. உயிர் போகும் வலியில் உடலை நாலாபுறமும் அசைத்தது. சோமுவும் முருகனும் ஓணான் மாட்டிய சந்தோஷத்தில், எகிறி எகிறிக் குதித்தார்கள். ‘‘முருகா, சரியா புடிச்சிட்டடா, நல்லா மாட்டிக்கிச்சு, இனிமே அது தப்பிக்க முடியாது’’ என்றான் சோமு.

சோமுவின் புகழ்ச்சியில் மயங்கிக் கொண்டு இருந்த முருகன் திடீரென காலைப் பிடித்துக்கொண்டு கீழே விழுந்தான். அவனை எதுவோ கடித்துவிட்டது. ‘‘ஐயோ.. அம்மா..’’ என்று கத்தினான் முருகன். பார்த்துக்கொண்டிருந்த சோமு பதறிப்போய், ‘‘முருகா.. முருகா, என்னடா ஆச்சு?’’ என்று எதுவும் புரியாமல் கேட்டான். முருகன் மயங்கிக் கீழே விழுந்தான்.

சோமுவிற்கு கை, கால் ஓடவில்லை. பக்கத்திலிருந்த முருகன் வீட்டுக்கு ஓடினான். முருகனின் அம்மாவிடம் நடந்த விஷயத்தைச் சொன்னான். முருகனின் அம்மா ‘‘ஸ்கூல் விட்டா நேரா வீட்டுக்கு வரவேண்டியதுதானே… யாருடா உங்கள ஓணான் புடிக்கச் சொன்னது..? அறிவில்ல உங்களுக்கு..?’’ என்று திட்டிக்கொண்டே வந்தார்.

சோமு பயந்து போயிருந்தான். மயங்கிக்கிடந்த முருகனிடம், ‘‘முருகா… முருகா… என்னடா கடிச்சுச்சு..’’ என்று கன்னத்தில் கைகளால் அடித்துக் கேட்டார் அம்மா. அவன் பதில் பேச முடியாமல் இருந்தான்.

சோமு, ‘‘ஆன்ட்டி, எங்க வீட்டுக்குப் பக்கத்தில ஒரு ஆஸ்பத்திரி இருக்கு, அங்க போகலாம்’’ என்று கூட்டிக்கொண்டு விரைந்தான்.

முருகனைப் பரிசோதித்த டாக்டர், ‘‘நல்லவேளை, ஓலைப்பாம்புதான் கடிச்சிருக்கு. மருந்து போட்டிருக்கேன். ஒரு மணி நேரத்தில கண் முழிச்சிருவான்’’ என்று சொன்னதும்தான் முருகனின் அம்மா நிதானத்துக்கு வந்தார். சோமுவைப் பார்த்து மெள்ளச் சிரித்தாள். அவனும் சிரிக்க முயன்றான்.

ஒரு மணி நேரம் போனது. முருகன் கண்விழித்தான். சோமுவையும் அம்மாவையும் பார்த்தான். அம்மாவின் அருகில் ஒரு பல்லி ஊர்ந்தது. ‘‘அம்மா, மிதிச்சுடாதீங்க’’ என்று சொல்லிவிட்டு வெட்கத்தோடு பார்வையைத் திருப்பிக்கொண்டான் முருகன்.

வெளியான தேதி: 01 செப்டம்பர் 2006

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *