இல்லாத திருடனைப் பிடித்த கதை

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 11, 2013
பார்வையிட்டோர்: 10,464 
 

முன்னொரு காலத்தில் “ஓஹோ ராமன்’ என்று ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் எப்பொழுதும் தன்னைப் பற்றி “ஓஹோ’ என்று புகழ்ந்து பேசிக் கொண்டே இருந்ததாலும் அவ்வூரில் மேலும் பலர் ராமன் என்ற பெயரில் வாழ்ந்து வந்ததாலும் அவ்வூர் மக்கள் அடையாளத்துக்காக அவனை “ஓஹோ ராமன்’ என அழைத்து வந்தனர்.

ஓஹோ ராமன் அரண்மனையில் சமையல் வேலை, குதிரைலாய வேலை, பாத்திரம் கழுவுதல், துணிகளைத் துவைத்தல் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவிதமா எடுபிடி வேலைகளைச் செய்து வந்தான்.

இல்லாத திருடனைஆனால் தனது தெரு நண்பர்களிடம் அரண்மனை முழுவதற்கும் தானே மேற்பார்வை அலுவலர் என்றும், தனக்குக் கீழே 100 பேர் வேலை செய்கிறார்கள் என்றும் கூறிக் கொண்டிருந்தான்.

மன்னரிடம் தனக்கு மிகுந்த செல்வாக்கு இருப்பதாகவும் முக்கிய விஷயங்களில் மன்னர் தன்னிடம் ஆலோசனை பெற்றே முடிவெடுப்பார் என்றும் கூறுவான்.

மகாராணியார் நோய்வாய்ப்பட்ட சமயத்தில் அரண்மனை வைத்தியர் கொடுத்த மருந்தில் குணமாகாத நோய் தான் வைத்துக் கொடுத்த மிளகு ரசத்தால் குணமானது என்றும் அதனால் மகாராணி, “ராமனின் கைப்பக்குவமே பக்குவம்’ என்று அவனைப் புகழ்ந்ததாகவும் பொய் கூறினான்.

ஒருசமயம் அரண்மனை உப்பரிகையில் விளையாடிக் கொண்டிருந்த இளவரசர் தவறிக் கீழே விழுந்துவிட்டதாகவும் தான் கையால் தாங்கிப் பிடித்து அவர் உயிரைக் காப்பாற்றியதாகவும் இதனால் மன்னர் தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் கூடியவிரைவில் விருந்தளிக்க இருப்பதாகவும் எல்லோரிடமும் கூறிக் கொண்டிருந்தான்.

இப்படியாக நாளொரு பொய்யும் பொழுதொரு புனைக் கதையாகவும் கூறி வந்தான்.

ஆனால் அவன் மனைவியோ அவன் பொய் கூறுவதை மிகவும் வெறுத்தாள்.

“”ஏன் இப்படித் தேவையில்லாமல் பொய் கூறுகிறீர்கள்? இதனால் நமக்கு என்ன லாபம்? உங்கள் தற்பெருமையாலும் பொய்யாலும் ஒருநாள் நமக்குத் தீங்குதான் நேரும்!” என்று கூறிக் கண்டிப்பாள். ஆனால் ராமனோ திருந்த மாட்டான். அவன் வாயிலிருந்து வரும் வார்த்தைகளில் உண்மை எது, பொய் எது? என்பது அவனுக்கேகூடத் தெரியாது.

மக்கள் நம்ப வேண்டும் என்பதற்காகப் பகட்டான ஆடை அணிந்து கொண்டு வேலைக்குச் செல்வான். அரண்மனை சென்றதும் பணியாளர்களுக்கான சீருடைகளை அணிந்து கொள்வான்.

அவன் ஊரைவிட்டுத் தள்ளி ஒதுக்குப்புறமான தெருவில் ஒரு எளிய ஓலைக்குடிசையில் வாழ்ந்து வந்தான்.

மக்களில் சிலர், “”அரண்மனையில் உயர்ந்த பதவியில் இருக்கும் நீங்கள் இந்தக் குடிசையில் வசிப்பது ஏனோ?” என்று கேட்டனர்.

“”நான் எளிமை விரும்பி, எனக்கு ஆடம்பரமே பிடிக்காது! என் தகுதிக்கும் திறமைக்கும் மன்னரே எனக்கு வீடு கட்டித் தருவதாகக் கூறினார். நான்தான் வேண்டாம் என்று கூறிவிட்டேன்…” என்றெல்லாம் அளந்து கொண்டிருப்பான்.

இப்படி இருக்கையில் ராமன் ஒருநாள் இரவு தனது வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தான். அன்று அமாவாசையாக இருந்ததால் எங்கும் இருள் சூழ்ந்து காணப்பட்டது. ராமன் வசித்த தெருவில் முதல் வீடு குயவர் ஒருவருடையது. அவர் மண்பானைகளை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வைத்திருந்தார். நன்கு தின்று கொழுத்த பெருச்சாளி ஒன்று அப்பானைகளுக்கிடையே ஓடியது. இதனால் அடுக்கி வைத்திருந்த பானைகளில் சில கீழே விழுந்து உடைந்தன.

திடீரென்று பானைகள் உருண்டு விழுந்ததைக் கண்ட ராமன் பயந்து ஓடத் தொடங்கினான். பானைகள் உடைந்த சத்தத்தைக் கேட்ட குயவர் வீட்டுக்குள்ளிருந்து வெளியே வந்து பார்த்தார்.

பானைகளில் சில உடைந்திருப்பதையும் ராமன் வேகமாக ஓடிக் கொண்டிருப்பதையும் கண்ட, அவர் அவனருகே ஓடிச் சென்று, “”என்ன ஆச்சு?” என்று கேட்டார்.

அவரிடம் தான் பயந்திருப்பதைக் காட்டினால் அவமானம் என்று கருதியதாலும் பொய் சொல்லியே பழக்கப்பட்டதாலும், “”பல நாட்களாக இங்கு ஒரு திருட்டுப் பயல் உலவிக் கொண்டிருக்கிறான். அவன் உங்கள் வீட்டுப் பானைகளைத் திருட முயற்சிக்கும்பொழுது நான் வந்து விட்டேன். என்னைக் கண்டதும் பயந்து போய், பானைகளைக் கீழே போட்டுவிட்டு ஓடிவிட்டான்…” என்று கூறினான் ராமன்.

இதைக் கேட்ட குயவரும், “”ஆமாம் ஐயா! பல நாட்களாக என் பானைகள் எண்ணிக்கையில் குறைந்து கொண்டே வருகின்றன. அந்தத் திருட்டுப் பயல் மட்டும் என் கையில் கிடைத்தால் தோலை உரித்து விடுவேன்” என்ற கூறினார்.

இவர்கள் பேச்சுக் குரலைக் கேட்ட அக்கம்பக்கத்து வீடுகளைச் சேர்ந்தவர்கள் அங்கு கூடினர். உண்மையிலேயே அத் தெருவில் சில நாட்களாகப் பொருள்கள் திருடு போய்க் கொண்டிருந்தன. எனவே அங்கு கூடியிருந்தவர்கள் அன்று இரவே எப்படியாவது அந்தத் திருடனைப் பிடித்து விடவேண்டும் என்று முடிவு செய்தனர்.

இதைச் சற்றும் எதிர்பாராத ராமன் வியர்த்து வெளிறிப் போனான். இதற்கிடையில் குயவர் வீட்டைவிட்டு நகர்ந்த பெருச்சாளி, வேகமாகக் காய்ந்த சருகுகளின் மீது ஓடி அடுத்த வீட்டின் சுற்றுச் சுவர் மீது ஏறி தொப்பென்று கீழே குதித்தது.

இந்தச் சத்தத்தைக் கேட்ட, அங்கிருந்த கூட்டம், “”டேய், யாரடா அது? நீ எங்கு போனாலும் உன்னைவிடமாட்டோம்” என்று கூறிக் கொண்டே வீதிகளில் ஓட ஆரம்பித்தனர்.

இவர்களின் சத்தத்தைக் கேட்ட பெருச்சாளி பயந்து போய் இருட்டில் அங்குமிங்கும் ஓடியது.

இதனால் அந்த வீட்டின் சுவரில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த சவுக்குக் கம்புகள் சரிந்து விழுந்தன. கம்புகளில் ஒன்று வெளியே பானையில் வைக்கப்பட்டிருந்த மற்றொரு மண்சட்டியின் மேல் விழுந்தது. இதனால் பானை உடைந்து தண்ணீர் தரையெங்கும் கொட்டியது. இந்த ஓசையைக் கேட்டுத் தெரு நாய்கள் குரைக்க ஆரம்பித்தன.

இதனால் அந்த வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்தவரும் கையில் தடியுடன் ஓடி வந்தார். இப்பொழுது இருபது பேர் கையில் தடியுடனும் தீப்பந்தங்களுடனும் இல்லாத திருடனைப் பிடிக்க வெறியோடு அங்குமிங்கும் ஓடினர்.

இவர்களுக்குப் பயந்த பெருச்சாளி இப்பொழுது ராமன் வீட்டுச் சுற்றுச் சுவரின் மீது ஏறி உள்ளே ஒரு பெரிய வைக்கோல் போரின் அருகே குதித்தது. வைக்கோல் போரின் மேல் தூங்கிக் கொண்டிருந்த பூனை விழித்தெழுந்து பெருச்சாளியைப் பிடிக்க ஓடியது. இதனால் வைக்கோல் போர் அசைய ஆரம்பித்தது.

இதைக் கண்ட அத் தெருவாசிகள் ராமன் வீட்டருகே ஓடி வந்தனர். இதற்குள் பெருச்சாளி வேகமாக ஓடி சாக்கடைக்குள் சென்று மறைந்து கொண்டது. மனிதர்களைக் கண்ட பூனை இருட்டில் எங்கோ சென்று மறைந்து விட்டது.

“”அந்தத் திருட்டுப் பயல் இந்த வைக்கோல் போருக்குள்தான் ஒளிந்து கொண்டிருக்கிறான்” என்று கூட்டத்தில் ஒருவர் கூறினார்.

நிலைமையின் விபரீதத்தை உணர்ந்த ராமன், “”ஐயா, உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி! இந்த இருட்டில் தூங்காமல் என்னுடன் நீங்களும் திருடனைப் பிடிக்க அலைந்தீர்கள். அத் திருடன் இப்பொழுது என் வீட்டில்தான் ஒளிந்து கொண்டிருக்கிறான். நான் மன்னரின் படை வீரர்களுக்கு மல்யுத்தப் பயிற்சி அளிப்பவன். எனவே நானே அவனைக் கையும் களவுமாகப் பிடித்து மன்னரிடம் ஒப்படைத்து விடுகிறேன். நீங்கள் எல்லோரும் அவரவர் வீடுகளுக்குச் செல்லுங்கள்” என்று கட்டளையிடாத குறையாகக் கூறினான்.

இதைக் கேட்ட அக்கூட்டத்தினர், “”இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டுவிட்டு அவன் முகத்தைப் பார்க்காமல் போவதா? அவனை எங்களிடம் ஒப்படைத்து விடுங்கள், நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்…” என்று கூறினர்.

இவர்கள் இப்படிப் பேசிக் கொண்டிருக்கும்பொழுது கையில் தீப்பந்தம் ஏந்திய ஒருவர், “”நீங்கள் இப்படிப் பேசிக் கொண்டிருந்தால் அவன் மறைந்து விடுவான். இந்த வைக்கோல் போருக்குள் ஒளிந்து கொண்டிருக்கும் அவனை எப்படி வெளியே கொண்டு வருவது என்று எனக்குத் தெரியும்!” என்று கூறித் தன் கையிலிருந்த தீப்பந்தத்தை வைக்கோல் போரின் மீது எறிந்தார். இதனால் வைக்கோல் போர் திகுதிகுவென தீப்பற்றி எரியத் தொடங்கியது.

வைக்கோல் போர் திடீரென்று எரியத் தொடங்கியதைக் கண்ட ராமனின் மனைவியும் மகனும் அலறியடித்துக் கொண்டு வீட்டைவிட்டு வெளியே ஓடிவந்தனர்.

காற்று வேகமாக அடித்ததால் வீட்டுக் கூரையின் மீதும் தீப்பற்றிக் கொள்ள ஆரம்பித்தது. இப்பொழுது ராமன் செய்வதறியாது திகைத்தான். தன் மனைவியின் முகத்தைப் பார்க்கத் துணிவில்லாமல் தலை குனிந்தான்!

அங்கு கூடியிருந்த மக்கள் ராமனின் மனைவியிடம், “”அம்மா, கவலைப்படாதீர்கள். இந்தப் பகுதியில் வெகுநாட்களாக அலைந்து கொண்டிருந்த திருடனைப் பிடிக்கவே நாங்கள் தீ வைத்தோம். இந்நேரம் அவன் எரிந்து சாம்பலாகி இருப்பான். மன்னரிடம் உங்கள் கணவருக்கு இருக்கும் செல்வாக்குக்கு மன்னரே உங்களுக்கு வேறு வீடு கட்டித் தருவார்” என்று கூறினர்.

ராமன் தான் கூறிய ஒரு சிறிய பொய்யின் விளைவை எண்ணி வருந்தினான். தன் மனைவியை சமாதானப்படுத்துவது எப்படி என்று தெரியாமல் தவித்தான்.

– ந.லெட்சுமி (நவம்பர் 2012)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *