கதையாசிரியர்:
தின/வார இதழ்: கோகுலம்
கதைத்தொகுப்பு: குடும்பம் சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: June 5, 2022
பார்வையிட்டோர்: 22,138 
 

(1981ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

குழந்தை இலக்கிய முன்னோடிகள்

மு.வ. என்று இலக்கிய அன்பர்களால் செல்லமாக அழைக்கப்பட்ட அமரர் டாக்டர் மு. வரதராசனார் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக இருந்தவர். எண்ணற்ற நாவல்களின் ஆசிரியர். இன்று ஒனிவித் திகழும் தமிழ்ப் பேரறிஞர்களில் பெரும்பாலோர் இவரது மாணவர்களே. புகழ் பூத்த இத்தமிழ் அறிஞர் ஒரு குழந்தை எழுத்தாளர் என்பது குழந்தைகளுக்காக எழுதுவோரை நிமிரச்செய்யும் உண்மை. 1981 ஆம் ஆண்டு வெளியான இக்கதை, அனுமதி பெற்று இங்கு உங்களுக்காக வெளியிடப்படுகிறது.

***

ஊரின் எல்லையில் ஆலமரமும் ஒரு தென்னை மரமும் இருந்தன. பல ஆண்டுகளாகவே அந்த இரண்டு மரங்களும் அடுத்து அடுத்து இருந்து வந்தன. ஆலமரம் அகலமாய்ச் செழித்து வளர்ந்து நீண்ட விழுதுகளும் விட்டிருந்தது. தென்னை ஆர மரத்தைவிட இரண்டு பங்கு உயரம் ஓங்கியிருந்தது.

ஒரு நாள் மாலை இருள் சிறிது பரவியபின் இளைஞன் ஒருவன் கையில் வெட்டரிவாளுடன் ஆலமரத் தில் ஏறினான். நீண்ட கிளைகள் இரண்டை வெட்டினான். அவற்றை எடுத்துக் கொண்டு தன் வீட்டை நோக்கி நடந்தான். அவன் தலை மறைந்தவுடன் தென்னை களுக் கென்று சிரித்தது. 1

“ஏன் சிரிக்கிறாய்?” என்று ஆலமரம் கேட்டது.

“வேறு ஒன்றும் இல்லை. யாரோ ஒருவன் வந்தான். இரண்டு கிளைகளை வெட்டினான். பேசாமல் எடுத்துக் கொண்டு போகிறான். நீ வாய் மூடிக் கை கட்டிக் கிடக்கிறாய். நீயும் என்னைப்போல் உயரமாக வளர்ந்திருந்தால் உனக்கு இந்தக் கதி வந்திருக்காது. அதற்காகத்தான் சிரித்தேன்!” என்றது தென்னைமரம்.

அப்போழுது காற்று இல்லை. ஆலமரம் சோர்ந்து நின்றது. “வெட்டிக் கொண்டு போனால் போகட்டும். எப்படியாவது மற்றவர்கள் பயனடைந்தால் போதும். நான் மண்ணின் வயிற்றில் அடங்கி இருந்தபோது ஒரு சான்றோர் வந்தார். அவர் அப்போது சொன்ன அறிவுரையை நான் இன்றும் மறக்கவில்லை. யார் என்ன பறித்தாலும், என்ன தீமை செய்தாலும் பொறுமையுடன் இருக்குமாறு அவர் சொல்லிவிட்டுச்சென்றார். அதனால் அந்த இளைஞன் என்னை வெட்டிய போதிலும் தடுக்காமல் இருந்தேன்; பொறுமையுடன் இருந்தேன். அதற்காக நீ என்னைப் பார்த்துச் சிரிக்கலாமா?” என்றது ஆலமரம்.

இதைக் கேட்டுத் தென்னை மரம் மறுபடியும் சிரித்தது: “என்னைப் போல் உயரமாக வளர உன்னால் முடியாது. முடியாது என்பதை மறைத்துவிட்டுப் பொறுமை பொறுமை என்று பேசுகிறாய்!”

ஆலமரம் சிறிது நேரம் அசையாமல் நின்றது. அப்போது ஒரு காற்று வந்தது. மரம் புதிய ஊக்கமும் புதிய சிந்தனையும் பெற்றது. இரக்கத்தோடு தென்னைமரத்தைப் பார்த்தது: “நீ உயரமாக வளர்ந்ததன் காரணத்தை மறந்துவிட்டாய். நீ சிறிது காலம் என் நிழலில் இருந்தாய். அப்போது உனக்குப் போதுமான வெயிலும் காற்றும் கிடைக்கவில்லை. என்னைப் போல் சுற்றுப்புறத்தில் உணவு தேட உன்னால் முடியவில்லை. அதனால் தான் நேராக வானத்தை நோக்கி உயர்ந்து சென்றாய். உணவுப் பஞ்சத்தால் உனக்கு ஏற்பட்ட நெருக்கடி அது. அதையே நீ பெருமையாகப் பேசுகிறாய்!”

தென்னைமரம் உடனே அதை மறுத்தது. “எனக்குப் போதுமான உணவு கிடைக்கிறது. அப்படி ஒன்றும் பஞ்சம் இல்லை. நீதான் ஆயிரம் கைகளோடு வளர்த்திருந்தும் உணவு போதாமல், விழுதுகள் விட்டு இன்னும் உணவு தேடுகிறாய். நான் அளவோடு சாப்பிட்டு அளவோடு வாழ்கிறேன். உனக்கு அளவே தெரிய வில்லை!” என்று ஒரு கேலிச் சிரிப்புச் சிரித்தது.

ஆலமரம் சிறிது தளர்ந்து வாடி யது. அப்போது அங்கே இருவர் வந்தார்கள். அவர்களில் ஒருவர் “அன்று பகல், நாங்கள் இங்கே வந்த போது நல்ல வெயிலாக இருந்தது. முப்பது பேருக்கும் இந்த ஆலமரம்தான் நிழல் கொடுத்து உதவியது. இது எங்களுக்கு ஒரு பெரிய வீடுபோல் இருந்தது. இதன் நிழலில் எப்போது பார்த்தாலும் இந்த ஊரார் கூடியிருக்கிறார்கள். வழிப்போக்கர்களும் தங்கி விட்டுப் போகிறார்கள. மரத்திற்கு என்ன வயது ஆனதோ தெரியவில்லை!” என்றார். அப்போது அங்கே வந்த ஊர்க்கிழவர் ஒருவர். “இது என்னுடைய பாட்டன் வைத்த மரமாம். எனக்கே தொண்ணூறு வயது ஆகிறது. இதற்கு என்னைவிட இரண்டு பங்கு வயது இருக்கலாம்” என்றார். மறுபடியும் அவரே. “எங்களுக்கு இந்த மரம்தான் ஒரு பெரிய மண்டபம் போல உதவியாய் இருக்கிறது. இங்கே எத்தனையோ முறை ஊர் கூடியிருக்கிறது. எவ்வளவோ திருமணக் கூட்டங்களையும், எவ்வளவோ வழக்குகளையும் இந்த மரம் பார்த்திருக்கிறது. கேட்டிருக்கிறது. நான் பையனாக இருந்தபோது வாத்தியாரிடத்தில் படித்ததும் இந்த மரத்தடியில்தான். மழை வந்தால் தான் வாத்தியார் வீட்டுத் திண்ணைக்குப் போவோம்” என்றார்.

அப்போது வந்தவர்களில் ஒருவர், “இந்தத் தென்னை மரத்துக்கு என்ன வயது இருக்கும்?” என்று கேட்டார்.

உடனே அந்தக் கிழவர். “இதுவா? என் மகன் கலியாணத்திற்குப் பிறகு வளர்ந்த மரம். இது உதவாத மரம். நிழலும் இல்லை. அவ்வளவாகக் காயும் இல்லை” என்றார்.

ஆலமரத்திற்குப் புதிய ஊக்கம் ஏற்பட்டது. மரத்திலிருந்த நூற்றுக் கணக்கான காக்கைகள் எப்படியோ கலைந்து எழுந்து அதை வாழ்த்துவன போல், கா கா கா என்று சுற்றிச் சுற்றிக் கரைந்தன. இவற்றையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த தென்னை மரம் தன் மகிழ்ச்சி அடங்கி வாடி நின்றது. வந்தவர்களெல்லாம் போன பிறகு மறுபடியும் அதற்குச் செருக்குத் தோன்றியது. “ஏ ஆலமரமே! அவர்கள் சொன்னதையெல்லாம் கேட்டு ஏமாந்து விடாதே! பிச்சைக்காரப் பயல்கள் சத்திரத்தைப் புகழ்வது போல அவர்கள் உன்னைப் புகழ்ந்து பேசினார்கள். நீயே உன்னைக் காப்பாற்றிக் கொண்டு வாழ முடியாத போது ஊருக்கும் உலகத்துக்கும் உதவி செய்கிறாயாமே! எல்லாம் வீண் பெருமை! நீயும் என்னைப் போல் உயரமாக வளர்ந்திருந்தால் உன்னுடைய கிளைகளெல்லாம் நெடுசுப் போய் எவ்வளவோ உயரமாக இருப்பாய்! ஒரு பயலும் அப்போது உன்னிடம் அணுக மாட்டான், நீ கிளைகளை அகலமாகப் பரப்புவதால்தான் நிழல் கிடைக்கிறது என்று எல்லோரும் அங்கே வந்து கூடி ஆரவாரம் செய்கிறார்கள். உன்னால் என்னுடைய அமைதியும் கெடுகிறது. நீயும் என்னைப் போல் கணக்காக இருந்தால் உதவாத மரம் என்று என்னை எவலும் பழிக்கடமாட்டான். உன் பக்கத்தில் நான் இருப்பதே தவறாக இருக்கிறது” என்று கடிந்து பேசியது.

சிறிது நேரத்தில் வானத்தில் வடகிழக்கு மூலையில் மின்னல் தோன்றியது. மேகங்கள் திரண்டு வந்தன. குளிர்காற்று வீசியது. இடி முழக்கம் கேட்டது. தூரல் தொடங்கியது. பெருமழை ஆயிற்று. மரத்தடியில் நான்கு பேர் வந்து ஒதுங்கினார்கள்.

“டேய்! மழையும் இடியுமாக இருக்கும்போது மரத்தடியில் தங்கலாமா? ஊருக்குள் ஓடிப் போவோம்” என்றான் ஒருவன்.

“ஆலமரத்தடியில் அவ்வளவு பயம் இல்லை. மரம் அகலமாகப் பரந்து இருப்பதால் பெரும்பாலும் இதன் மேல் இடி விழுவதில்லை” என்றான்.

“அடடே! இங்கே ஒரு தென்னை மரமும் இருக்கிறது. உயரமாகவும் இருக்கிறது. இப்படி உயரமாக இருக்கும் மரங்களின் மேல்தான் இடி விழுவது வழக்கம். இதனால் ஆலமரத்துக்கும் ஆபத்து. இந்த ஊரார் இதை வெட்டிப் போடக் கூடாதா? இதை ஏன் ஆலமரத்தின் பக்கத்தில் விட்டு வைத்திருக்கிறார்கள்?” என்றான் மற்றொருவன்.

“உண்மைதான். நாம் இங்கே இருக்கக் கூடாது. இடி முழக்கம் மிகுதியாகிறது. சின்ன இடி விழுந்தால் கூடப் போதும். இந்தத் தென்னை மரத்தின் வாழ்வு போச்சு. ஆனால் ஆலமரத்தில் தப்பித் தவறி இடி விழுந்தாலும், நாலு கிளை போனால் நாற்பது கிளை வாழும். அடிமரமே போனாலும் விழுதுகள் காப்பாற்றும்” என்று இன்னொருவன் சொல்லிக் கொண்டே ஊருக்குள் ஒரு திண்ணையை நோக்கி ஓடினான். அவனைத் தொடர்ந்து மற்றவர்களும் ஓடினார்கள்.

தென்னை மரம் செருக்கு அடங்கி ஏக்கத்தோடு நின்றது.

– 1991-05-01

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *