கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 24, 2022
பார்வையிட்டோர்: 9,521 
 

(1953ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அல்ஹாம்ரா நீரூற்று : கிரானடா வெப்பம் மிகுந்த நாடு . குடிதண்ணீருக்குக்கூட அங்கே பஞ்சமாயிருந்தது.

கிரானடா மன்னன் அரண்மனையின் பெயர் அல் ஹாம்ரா என்பது. அதன் அருகே தண்ணீருக்குப் பஞ்சமில்லை. நிழலும், குளிர்ச்சியான காற்றும் போது மான அளவு இருந்தன. ஏனென்றால் அங்கே ஒரு நறுநீர்க் கேணி இருந்தது. அதிலிருந்து நீரூற்றுப் பொங்கி வழிந்து கொண்டிருந்தது. அதன் குளிர் நீர் வளத்தால் சுற்றுமுற்றும் குளிர்மரக் காவும் தென்றலும் படர்ந்தன. மக்கள் தங்கியிருக்கப் படிக்கற்களும் மண்ட பங்களும் இருந்தன. நகரின் செல்வர்களும் இளைஞர் களும் இங்கே அடிக்கடி வந்து தங்கிப் பொழுதுபோக் கினர். கேணியில் தண்ணீர் எடுக்கப் போகிறவர்கள், தண்ணீர் எடுத்து வருகிறவர்கள் அவ்வழியாக எப் போதும் திரள் திரளாகச் சாய்ந்து கொண்டிருந்தனர்.

கேணியருகேயுள்ள மக்களிடையே அடிக்கடி ஒரு குரல்,

பன்னீர் போலத் தண்ணீர்,
மன்னரும் விரும்பும் நன்னீர்,
அல்ஹாம்ராவின் அமுதம்,
தண்ணீர் வாங்கலையோ தண்ணீர்!

என்று களிப்புடன் பாடிச்செல்லும். அதுதான் தண்ணீர் விற்கும் பெரிகிலின் குரல்.

தாமே நேரில் சென்று அல்ஹாம்ராவின் அமுதத்தை எடுத்துக்கொண்டு வரமுடியாத உயர்குடிச் செல்வர் களுக்குப் பெரிகிலும் அவனைப்போன்று தண்ணீர் விற்கும் தண்ணீர்க்காரரும் அந்நீரைக் கொண்டு சென்று விற்றுப் பிழைத்தார்கள்.

பெரிகில் பார்வைக்கு அந்தசந்தமானவன் அல்லன். ஆனால், அவன் நல்ல உழைப்பாளி. சுறுசுறுப்பானவன். எனவே அவன் உடல் உருண்டு திரண்டு உறுதியுடைய தாயிருந்தது. அவன் சலியாமல் உழைத்ததனால், அவன் கையில் பணம் பெருகிற்று. தண்ணீர்க் குடங்களைச் சுமப்பதற்குப் பதில், ஒரு நல்ல கழுதையை வாங்கி அதன் மீது குடங்களை ஏற்றிச்சென்று, அவன் தன் தொழிலை இன்னும் வளர்த்தான்.

பெரிகிலின் சுறுசுறுப்பையும், கலகலப்பையும் பார்ப்பவர்கள் அவன் கவலையற்றவன் என்று நினைப் பார்கள். ஆனால் அவன் எவ்வளவு உழைத்துப் பொருள் ஈட்டினாலும், அவன் குடும்பநிலை மட்டும் உயர வில்லை. அவன் மனைவியின் தான் தோன்றித்தனமான நடையே இதற்குக் காரணம். அவள் அவன் பணத்தை ஊதாரித்தனமாகச் செலவிட்டு இன்பவாழ்க்கை வாழ்ந்து, பகட்டும் ஆரவாரமும் மேற்கொண்டாள். ‘பசியோபசி’ என்று வாடும் பிள்ளைகள் பலர் அவளுக் கிருந்தும், அவள் அவர்களை வீட்டில் கணவனிடம் விட்டுவிட்டு, ஊர்சுற்றி வம்பளந்தாள். கணவனை ஓயாது கடிந்தும் திட்டியும் தொல்லைக்கு ஆளாக்கினாள். பெரிகில் இத்தனையும் பொறுத்துக்கொண்டு, வீட்டு வேலைகளை எல்லாம் தானே செய்து, பிள்ளைகளையும் தன்னாலானவரை பேணிவளர்த்தான். வெளியிலே யுள்ள கடுமையான உழைப்பு, வீட்டுவேலை. குழந்தை கள் தொல்லை ஆகிய இத்தனைக்கிடையே கூட அவன் மன உறுதியும் கிளர்ச்சியும் குன்றாமல் எப்போதும் போலக் கலகலப்பாகத் தொழில் நடத்தினான்.

பெரிகில் இளகிய உள்ளம் உடையவன். யாராவது அவன் உதவி கோரினால், அவன் தன் வேலையைக்கூடக் கவனியாமல் அவர்களுக்கு உதவி செய்வான். அவன் மனைவி இதற்காக அவனைக் குறைகூறிக் கண்டிப்ப துண்டு. ” பிழைக்கும் மதியிருந்தால் உன் காரியத்தை யாவது ஒழுங்காகப் பார். அடுத்தவர் காரியங்களை மேற் கொண்டு எனக்குத் தொல்லை வருவிக்காதே” என்பாள். ஒருநாள் இவ்வகையில் அவனுக்குப் பெருத்த சோதனை ஏற்பட்டுவிட்டது.

அன்று பகல் முழுவதும் வெப்பம் மிகுதியா யிருந்தது. தண்ணீர்க்காரர் எல்லோருக்குமே நல்ல வருவாய் கிடைத்தது. எனவே எல்லாரும் கிடைத்த பணத்தைக்கொண்டு ஆர அமரப் பொழுது போக்கப் போய்விட்டனர். ஆனால் இரவில் முழுநிலா எறித்தது. மக்கள் அதன் அழகில் ஈடுபட்டு இரவிலும் பொழுது போக்க எண்ணி வெளியே நடமாடினர். வேறு தண் ணீர்க்காரர் இல்லாததால், பெரிகில் தனக்கு இன்னும் வேலையிருப்பது கண்டான். அன்று சற்று மிகுதிப்படி காசு ஈட்டித் தன் குழந்தைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை யன்று ஏதாவது வாங்கிக்கொடுக்க அவன் எண்ணினான். ஆனால் அங்ஙனம் செய்வதற்குள் ஒரு தடை ஏற்பட்டது.

பெரிகிலின் இரக்கச்செயல் : மூர்மரபைச் சேர்ந்த ஓர் ஆண்டி கேணியண்டை உட்கார்ந்திருந்தான். அவன் தோற்றம் இரக்கமூட்டுவதாயிருந்தது. பெரிகில் பையில் கையிட்டு ஒருகாசைப் பிடித்த வண்ணம் அவனை அருகே வரும்படி சைகை செய்தான். ஆண்டி அசையவில்லை. ஆனால் அவன் முகத்தில் ஏக்கம் தென்பட்டது. பெரிகில் அவனை அணுகினான். அவன் ஈனக்குரலில், “இரக்கமுள்ள ஐயனே! முதுமை, பிணி, அலுப்பு ஆகிய மூன்றினாலும் பேசக்கூட முடியாதவனாகிவிட்டேன். எனக்குக் காசு வேண்டாம். நகரத்துக்கு உன் கழுதை மீது இட்டுக்கொண்டு போய்விடு. உனக்குப் புண்ணியம் உண்டு. தண்ணீர் விற்பதனால் உனக்கு வரக்கூடும் ஊதியத்தில் இரண்டத்தனை கொடுத்துவிடுகிறேன்,” என்றான்.

பெரிகில் அவன் நிலைகண்டு உருகி விட்டான். அவன் மிகுதி ஆதாயத்தை விரும்பவில்லை. விரைந்து அவனை நகரில் கொண்டுவிட்டான். வேண்டுமானால், பின்னும் உழைக்கவே எண்ணினான்; “நான் உதவி செய்கிறேன்; ஆனால் பணம் வேண்டாம். துன்பமடைந்தவருக்கு உதவி செய்யும்போது பணம் வாங்கப்படாது!” என்றான்.

ஆண்டி அசைய முடியவில்லை. அவனைக் கிட்டத் தட்டத் தூக்கியே கழுதைமீது ஏற்றவேண்டியிருந்தது. கழுதை நடக்கத் தொடங்கிய பின்னும் தன்பிடி சாய விட்டால் அவன் விழுந்து விடுவான் என்று கண்டு பெரிகில் அவனைக் கையால் தாங்கிக்கொண்டே சென்றான்.

நகருக்குள் வந்தபோது பெரிகில் “அன்பனே! நகரில் எங்கே போகவேண்டும்?” என்று கேட்டான்.

“அவன், “அப்பனே! தண்ணீர் கண்ட இடம்தானே ஏழைக்குத் தங்குமிடம்? நான் அயலான். அயல் மர பினன். எனக்கு நகரில் இடம் ஏது? நீ பெருந்தன்மை உள்ள நாயன். உன் வீட்டில் ஓரிரவு தங்க இடம் கொடு. உனக்கு நன்மை உண்டு,” என்றான்.

பெரிகிலுக்கு இக் கோரிக்கையை மறுக்கவும் மனம் இல்லை. ஏற்கவும் முடியாது கலங்கினான். மனைவியின் பொல்லாக் கோபம் அவன் மனக்கண் முன்பு நின்று அவனை அச்சுறுத்தியது. ஆயினும் மன உறுதியில்லா மலே, ஆண்டியுடன் வீடுநோக்கி நடந்தான்.

கழுதையின் காலடியோசை கேட்டு, அவன் பிள்ளை கள் ஆவலுடன் வழக்கம்போல் ஓடிவந்தனர். அயலான் முகமும் தோற்றமும் கண்டு அவர்கள் அஞ்சிவிலகினர் . ஒவ்வொருவராகத் தாயின் கால்களைச் சுற்றி நின்று ஒளித்தனர். தாய் குஞ்சுகளைப் பாதுகாக்க வரும் பெடைக் கோழிபோல் திமிறிக்கொண்டு ‘என்ன காரியம்?’ என்று பார்க்க வந்தாள்.

“இது யார்? என்ன சாதிப்பயல்? இந்த மதத் துரோகியை ஏன் இங்கே கொண்டுவந்தாய் , அதுவும் இந்நேரத்தில்?” என்று அவள் அலறினாள்.

“நான் செய்தது தப்புத்தான். ஆனால் என் மீது காட்டும் கோபத்தை இந்த ஏழைமீது காட்டாதே. அவன் ஆளற்றவன். சத்தியற்றவன், ஒர் இரவு தங்கியிருந்துவிட்டுப் போகட்டும்,” என்றான் பெரிகில்.

அவள் கேட்கவில்லை. “உடனே வெளியே அனுப்பி விடு,” என்று ஆர்ப்பரித்தாள்.

அவன் வாழ்க்கையில் முதல் தடவையாக, அவன் கேட்கவில்லை. “இன்று இந்த இரவில் நான் அனுப்ப முடியாது. நாளை அனுப்பலாம்,” என்றான்.

அவன் துணிவுகண்டு மனைவி மலைப்படைந்தாள். வெறுப்புடன் ‘சீ, நீ ஒரு மனிதனா’ என்ற குறிப்பை வீசி எறிந்துவிட்டு உள்ளே சென்றுவிட்டாள். குழந்தை கள்கூட அவளுடன் சென்று பதுங்கின.

எவர் உதவியுமின்றிப் பெரிகில் ஆண்டியைத் தானே இறக்கி, ஆதரவாகத் தாங்கி, படுக்கை விரித்து, கிடத்தினான். அவன் சோதனை பெருகிற்று. ஆண்டி யின் நோய் அவன் கழுதையில் ஏறிவந்த அதிர்ச்சியால் பன்மடங்காயிற்று. பெரிகில் செய்வதொன்றும் அறி யாமல், கவலையே வடிவாய் அருகில் இருந்தான்.

ஆண்டியின் புதையல் ஆண்டியின் கண்கள் அவனை நோக்கின. ஒரு முழு வாழ்நாளின் கனிவு அதில் இருந்தது. அவன் நெஞ்சி லிருந்து எறும்பின் குரல் போல மெல்லிய ஓசை எழுந்தது. “அன்பனே! உன் அன்புக்கு ஓர் எல்லையில்லை. என் வாழ்வின் இறுதியில் வந்த தெய்வம் நீ. நீ எனக்காகக் கவலைப்படாதே. என் இறுதி அணுகி விட்டது. உன் அன்புக்குக் கைம்மாறு தரமுடியாது. ஆயினும் இதோ இதை ஏற்றுக்கொள்.” என்று கூறித் தன் இடுப்பிலிருந்து ஒரு சந்தனப் பெட்டியை எடுத்துக் கொடுத்தான். பெரிகில் அதை வாங்குமுன் ஆண்டியின் உயிர் உடலைவிட்டுப் போய்விட்டது.

துயரமும் கழிவிரக்கமும் – பெரிகிலுக்குச் சந்தனப் பெட்டியைப்பற்றி நினைக்கவே நேரமில்லை. அதை அவன் மறந்து விட்டான். “தங்க இடம் கொடுத்த இடத்தில், வந்தவன் பிணமானான். இனி, பிணத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வது?” என்று கலங்கினான்.

“என் சொல்லை மீறி நீ நடந்து கொண்டதன் விளைவு பார்த்தாயா? உன்னை நான் கட்டிக் கொண்டழுகிறேனே” என்று மனைவி பிலாக்கணம் தொடங்கலானாள்.

“செய்தது செய்துவிட்டேன். நீ ஓசையுண்டுபண்ணினால் இன்னும் காரியம் கெட்டுவிடும். விடிய இன்னும் நேரம் இருக்கிறது. வெளிக்குத் தெரியாமல் பிணத்தை அப்பால் கொண்டு சென்று புதைத்துவிட வேண்டும். என்ன சொல்கிறாய்?” என்று தொடங் கினான் பெரிகில்.

பொது ஆபத்து மனைவியின் வழக்கமான ஒத் துழையாமைக்குத் தடை விதித்தது. இருவரும் ஒத்துழைத்துப் பிணத்தை நகர்ப்புறத்துள்ள பாலைவன மணலில் புதைத்துவிட்டனர்.

அவர்கள் செயலை வேறு யாரும் அறியவில்லை. ஆனால் அறியக்கூடாத ஒருவன் கண்களில் அவர்கள் திரும்பிவரும் கோலம் ஐயத்தைக் கிளப்பிவிட்டது. அதுவே அந்தஊர் அரண்மனை அம்பட்டன் பெட்ரூகோ. இன்னது என்று தெரியாவிடினும், எதையும் துளைத் தறியும் திறம் உடையவன் அவன். அவன் கூரிய பார்வையைக் கண்டு எவருமே நடுங்குவர். இரவு ஓர் ஆண்டியைப் பெரிகில் இட்டுச் சென்றதையும் இரவே என்றும் ஒருங்கே கூடிச் செல்லாத கணவன் மனைவியர் அவ்வளவு தொலை ஒன்றாகச் சென்று மீள்வதையும் சேர்த்து இணைத்து அவன் கற்பனை ஊகம் வேலை செய்தது.

அவன் அவர்கள் வந்த திசையில் சென்று, புது மணல் கிளறப்பட்டிருப்பதைக் கண்டான். அதைத் தானும் கிளறினான். அவன் எதிர்பார்த்ததற்கு, மேலாக அவன் கண்ட காட்சி அவன் ஆவலைக் கிளப்பிவிட்டது. பிணத்தைக் கண்டதே அவன் முதலில் மலைப்படைந் தான். பின் கிளர்ச்சியும் எழுச்சியும் கொண்டு, மன்ன னிடம் ஓடோடியும் சென்று விவரமறிவித்தான்.

மன்னன் அல்காதியும் பேராசையுடையவன் கொடியவன். மக்கள் உயிரோ, பணமோ அவன் கைப் படுவதுதான் தாமதம். அவன் கொடுமையும் பேராசை யும் இறக்கை விரித்துப் பறக்கும்! அம்பட்டன் சொற் கள் அவனைக் கிளர்ந்தெழச் செய்தன. “ஒரே இரவில் கொள்ளை நடந்து, கொலை நடந்து, பிணமும் புதைக்கப் பட்டு விட்டதா! இதில் பணத்தின் தொடர்பு நிறைய இருக்கவேண்டும். அப்படியானால் பார்ப்போம்” என்று அவன் துடையைத் தட்டிக்கொண்டு வீறிட்டான்.

உண்மையைத் தவிர வேறு எதுவும் தன்னைக் காக்கமுடியாது என்று பெரிகில் தெரிந்துகொண்டான். ஆனால் அவன் உண்மையைக் கூறியும் பயனில்லை. பொருளில்லாத ஆண்டிக்கு ஒருவன் இரக்கப்பட்டான் என்பதை அவனைத் தவிர வேறு யாரும் நம்பவில்லை ஆனால் இறக்கும்போது அவன் தந்த சந்தனப்பெட்டி யின் செய்தி வந்ததே, மன்னன், ”ஆ , அப்படிச்சொல்லு. எங்கே அந்தப் பெட்டி? அதைக் கொடுத்துவிடு. நீ போகலாம்,” என்றான்.

பிணத்தைப் புதைக்கும் போது பெட்டியைப் பெரி கில் கழுதை மீதிருந்த ஒரு பையில் செருகி வைத்திருந் தான். அது இன்னும் அதில் தான் இருந்தது. அதைச் சுட்டிக்காட்டினான். மன்னன் பெரும்பொருள் அல்லது அணிமணி இருக்குமென்று ஆவலுடன் அதைத் திறந்து பார்த்தான். ஆனால் அதில் பாதி எரிந்து போன ஒரு மெழுகுவத்தியும் புரியாத ஏதோ ஒரு மொழியில் எழுதப் பட்டிருந்த ஒரு தாளுந்தாம் இருந்தன. இதனைக் கண்டு ஏமாற்றமடைந்து மன்னன், இனி வழக்கினால் பயனில்லை என்று கண்டு, பெரிகிலை விடுதலை செய்தான். சந்தனப் பெட்டியையும் அவன்மீதே வீசி எறிந்துவிட்டான்.

பெரிகில் இப்போது உண்மையிலேயே தன் இரக்கச் செயலுக்காக வருத்தப்பட்டான். அவன் மனைவி அவன் மடமையைச் சுட்டி இடித்துக்காட்டிப் பின்னும் மிகுதியாகக் கொக்கரித்தாள். ஆனால் உள்ளூர இருவரும் தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போயிற்று என்று கருதி அமைதியடைந்தார்கள்.

ஆண்டியின் புதையல் சந்தனப்பெட்டி – பெரிகிலின் மனத்தில் மட்டும் தான் செய்த நற்செயல் தனக்கு இவ்வளவு தொல்லை தந்ததே என்ற எண்ணம் இருந்து அறுத்துக்கொண்டி ருந்தது. ஆண்டியின் முகத்தில் படர்ந்த இறுதிக் கனிவை நினைக்குந்தொறும், தன் செயல் எப்படியும் தீங்கு தராது என்று அவன் ஆறுதல் பெறுவான். அத்தகைய தருணங் களில் ஒருநாள் அவன் நினைவுத்திரையில் சந்தனப் பெட்டி நிழலாடிற்று. அதை ஒரு பெரிய பரிசைத் தரு வது போலல்லவா தந்தான் ஆண்டி! அவன் ஆண்டியே யானாலும், செப்புக்காசுகூடப் பெறாத வெறுந்தாளையா தருவான் என்று அவன் எண்ணம் சுருண்டோடிற்று.

“தாளில் எழுதப்பட்ட எழுத்துகளில் தான் ஏதோ இருக்கவேண்டும்” என்று அவன் உள் மனம் கூறிற்று.

“அஃது என்ன மொழி என்று தெரியவில்லை, மூர் மரபினர் இனமொழியாகிய அரபு மொழியாகத்தான் இருக்கவேண்டும். அம் மரபினரைத் தேடிச்சென்று கேட்போம்,” என்று அவன் எழுந்தான்.

அடுத்த நாள் சட்டைப்பையில் அந்தத் தாளைச் செருகிக்கொண்டு பெரிகில் வெளியேறினான். தண்ணீர் விற்கும் தன் வாடிக்கைக்காரரான மூர்மரபுக்காரர் ஒருவர் கடையில் இறங்கி அதைக் காட்டினான். கடைக் காரன் அதைக் கூர்ந்து நோக்கினான். “இது ஒரு வழி பாட்டு மந்திரம். இதைப் படித்தால் புதையல்கள் எங்கி ருந்தாலும் அதற்கு வழி ஏற்படும். இடையே எத்தனை பெரிய பாறை இருந்தாலும் அதைத் தகர்த்து வழி உண்டாக்கும்,” என்றான்.

பெரிகிலுக்கு இதைக் கேட்பதில் சிறிதும் உணர்ச்சி ஏற்படவில்லை. அவன் முகத்தைச் சுளித்துக்கொண்டே “இதைப் படிப்பதால் இஃதெல்லாம் வருமென்று நீ நம்புகிறாயா?” என்று கேட்டான்.

“ஆம். ஏன்?”

“இப்போது நீ படித்தாயே! உனக்கு என்ன நேர்ந்தது?”

“அதற்குள் நீ ஏன் இப்படிக் கலவரப்படுகிறாய் இதோ. சிறு எழுத்துக்களில் பக்கத்திலும் ஏதோ எழுதப்பட்டிருக்கிறது. படித்து ஆய்ந்தோய்ந்து பார்க்க வேண்டும்,” என்றான்.

“நீயே படித்துப் பார்த்துவை . நான் பிறகு வருகிறேன்.” என்று பெரிகில் கூறித் தாளையும் அவனிடமே விட்டு வந்தான்.

அடுத்தநாள் பெரிகில் தாளைப்பற்றிய எதுவும் மறந்து வழக்கம்போல் வேலை செய்தான். அச்சமயம் பலர் பேசிய பேச்சுக்கள் அவன் காதில் விழுந்தன. பலரும் ஒரே பேச்சுப் பேசுவதாகத் தெரியவே, அவன் கவனித்து ஒட்டுக் கேட்டான்.

அல்ஹாம்ராவிலிருந்து ஏழு கல் தொலைவில் ஏழு கோபுரங்கள் இருந்தன. ஏழாவது கோபுரத்தின் உள்ளே எங்கோ புதையல் இருப்பதாக அறிந்த பல மூர்மரபு ஆண்டிகள் அங்கே சுற்றித் திரிந்து வந்ததாக மக்கள் பேசிக்கொண்டனர்.

பெரிகிலுக்கு உடனே சந்தனப்பெட்டியிலுள்ள தாள் நினைவுக்கு வந்தது. அதைக் கொடுத்தவன் ஒரு மூர்மரபினன் என்பதும் அதை மூர்மரபினன் ஒருவனே வாசிக்க முடிந்தது என்பதும் அவன் மூளையில் மின்னல் போல் ஒளி வீசின. “தன் வீட்டில் வந்து இறந்த ஆண்டி அப்புதையலைத் தேடி அலைந்த ஒரு மூராகத் தான் இருக்கவேண்டும். பாவம், அதை அடையுமுன் அவன் இறக்க நேர்ந்திருக்கவேண்டும். தன் கைம்மாறு கருதாத உதவிக்குக் கைம்மாறாகவே அவன் தன் உள்ளத்தின் உள்ளவாவுக்குரிய இரகசியத்தைத் தனக் குத் தந்திருக்க வேண்டும்.” இவ்வெண்ணங்கள் அவன் உள்ளத்தில் அலையாடின. அடுத்து அவன் தான் அணிமையில் செய்த செயலை அவன் எண்ணினான். “இந்தப் பெரிய இரகசியத்தை நாம் சிறிதும் கருத்தில்லாமல் இன்னொருவனிடம் விட்டு வந்துவிட்டோமே. அந்தக் கடைக்காரன் நம்மிடம் அதை முழுதும் வாசித்து ஏன் கூறவேண்டும்? அவனே சென்று எடுத்துக் கொள்ளலாமல்லவா?” என்று எண்ணியபோது அவன் புறமனம் அவனை மீண்டும் சுட்டது.

அடுத்தநாள் அவன் கடைக்காரனைச் சென்று கண்டான். கடைக்காரன் தான் வாசித்தறிந்ததை முற்றிலும் விளங்கக் கூறினான். “அன்பனே ! நீ நல்ல வன். ஆனால் மிகவும் அவசரப்பட்டுவிடுகிறாய். உன் கையில் கிடைத்தது கிட்டத்தட்ட ஒரு புதையலேதான். நீ அதன் அருமை அறியாதவன் என்பதில் ஐயமில்லை. இல்லையென்றால், அதை என்னிடம் விட்டுவிட்டுப் போயிருக்கமாட்டாய்!” என்றான்.

தான் எண்ணியதை அவனும் எண்ணியது கண்டு பெரிகில் வியப்படைந்தான்.

“உண்மைதான். ஆனால் அதன் அருமை அறிந்த நீ இப்போது என்னை ஏமாற்ற எண்ணியதாகத் தெரிய வில்லையே” என்றான்.

கடைக்காரன் முகத்தில் பெருமித ஒளி ஒன்று பரந்தது. “அன்பனே / உன்னை நான் நன்கு அறிவேன். நீ வேறு இனம்தான். நான் வேறு இனம்தான். நீ வேறு மதம், நான் வேறு மதம். ஆனால் எல்லா இனங்களையும் மதங்களையும் படைத்த ஆண்டவன் ஒருவன் தான். நீ மத வேறுபாடு, இன வேறுபாடு கடந்த நல்லவன் என்பதை நான் அறிவேன். நீ அன்று கூறிய சந்தனப் பெட்டியின் கதை என்னை உருக்கிவிட்டது. என் குலத் தான் ஒருவனுக்கு நீ செய்த மறக்கமுடியாத நன்மைக்கு அவன் செய்த நன்றி இது. இஃது உனக்கே உரியது. இதில் நான் குறுக்கிட்டால், நான் இனத்துரோகி மட்டு மல்ல. மனித இனத்துரோகி, ஆண்டவனுக்குத் துரோகி ஆவேன். இதன் அருமை அறியாத உனக்கு இதன் அருமைகாட்டி உனக்கு நன்மை செய்துவிட்டால், ஆண் டவன் திருமுன்னில் செல்லும்போது நானும் தன்னல மற்ற ஒரு நற்செயலாவது செய்திருக்கிறேன் என்ற ஆறுதல் என் கால்களுக்கு உரம் தரும்,” என்றான்.

தன் மனைவி அறிந்த உலகத்தினும் பரந்த ஒரு உலகம் உண்டு’ என்ற நம்பிக்கையால் பெரிகில் உள்ளம் குளிர்ந்தது. ”அண்ணா , நானும் ஒரு வகையில் ஆண்ட வனை நேசித்ததுண்டு. ஆனால் நம்பிக்கையும் உறுதியும் என்னிடம் இல்லை. எனக்கு நீ அதை அளித்தாய். நான் செய்த நற்செயலுக்கு இதுவரை நான் எவ்வளவோ கழிவிரக்கப்பட்டு என்னையே நொந்து கொண்டிருந்தேன். நீ ஆறுதல் தந்தாய். இந்தத் தாளின் இரகசியத்தால் நன்மை வராவிட்டால் அதற்காக நான் இனி வருந்த மாட்டேன். ஆனால் நன்மை வந்தால், இருவரும் பகிர்ந்து கொள்வோம். இம் முயற்சியில் என்னிடம் உண்மையாய் இருந்த உனக்கும் ஒரு பங்கு இருக்க வேண்டும். அதை ஏற்றுக்கொள்ள வேண்டுகிறேன்,” என்றான்.

கடைக்காரன் இதை மனமுவந்து ஏற்றான்.

தாளில் சிறு எழுத்தில் குறித்திருந்தவற்றை அவன் இப்போது பெரிகிலுக்கு விளக்கினான். “இந்தத் தாளுடன் பெட்டியில் ஒரு மெழுகுவத்தி இருந்ததாகக் கூறப்பட்டிருக்கிறது. அதைக் கையிலெடுத்துக்கொண்டு ஏழு கோபுரங்களில் ஏழாவது கோபுரத்தின் அடிவாரம் செல்லவேண்டும். நடு இரவு நேரத்தில் இந்த மந்திரத்தை கூறிக்கொண்டே அதனை ஏற்றவேண்டும். அப்போது புதையலை நோக்கி வழி ஏற்படும். கையில் விளக்கு இருக்கும் வரை வழியில் எந்த இடருக்கும் அஞ்ச வேண்டாம். ஆனால் விளக்கு அணையத் தொடங்கும் போதே வெளியே வந்துவிட வேண்டும். ஏனென்றால், அணைந்தவுடன் திறந்த வழி அடைத்துக்கொள்ளும்.

பெரிகிலுக்கு இப்போது பெட்டியிலிருந்த பாதி எரிந்த மெழுகுவத்தி நினைவுக்கு வந்தது. நல்லகாலமாக அஃது இன்னும் தன் கழுதையின் மேலுள்ள பையிலேயே தான் இருந்தது. அடுத்தநாள் இரவு மனைவி மக்கள் தாங்கிய பிறகு அந்த மெழுகுவத்தித்துண்டை எடுத்துக் கொண்டு கடைக்காரனுடன் புறப்பட்டு ஏழுகோபு ரத்தை நோக்கிச் சென்றான்.

புதையல் – நள்ளிரவு. பாலைவனத்தில் அனல் மாரி யும், மண்மாரியும் ஓய்ந்திருந்தன. ஆனால் பனிக்காற்று எல்லாவற்றையும் துளைத்துக்கொண்டிருந்தது. நீண்ட அங்கியும் தலைப்பாகைகளும் அணிந்து, போர்வைகளால் உடல்முழுதும் போர்த்துக்கொண்டு இரண்டு உருவங்கள் ஏழாவது கோபுரத்தை அடைந்து அதன் அடிவா ரத்தில் குந்தியிருந்தன. தொலையில் எங்கிருந்தோ நள் ளிரவுத் தொழுகைக் கூக்குரல் காற்றில் மிதந்து வந்தது. அதன் பின் பேயும் அஞ்சும் இரவின் பேரமைதி எங்கும் நிலவிற்று.

கடைக்காரன் நெஞ்சின் ஆழத்திலிருந்து அரபு மொழி மந்திரம் பனிக்காற்றினுடன் கலந்து பரந்தது. பெரிகில் மெழுகுவத்தியை ஏற்றினான். ஏற்றினவுடன் கோபுரத்தின் ஒரு பக்கமுள்ள பாறை வெடித்து ஒரு சுரங்கவழி தெரிந்தது. அவ்வோசை கேட்டு முதலில் இருவரும் கலங்கினர். பின் தேறி, பெரிகில் முன்செல்ல, கடைக்காரன் பின் சென்றான்.

கீழே படிக்கட்டுகள் வழியாக அவர்கள் உட்குகை ஒன்றை அடைந்தார்கள். வாயிலில் இரு பூதங்கள் உருவிய வாளுடன் நின்றன. கடைக்காரன், “அஞ்சாமல் செல்” என்றான். இருவரும் உட்சென்றனர். பூதங்கள் ஒன்றும் செய்யவில்லை. குகை மிக அகலமுடையதாக இருந்தது. அதன் நடுவே ஒரு பெரிய இரும்புப் பெட்டி இருந்தது. நான்கு மூலைகளிலும் நான்கு பூதங்கள் காவ லிருந்தன. கடைக்காரன் முணுமுணுத்த மந்திரம் கேட்டு அவைகள் ஓங்கியவாளைக் கீழே தொங்கவிட்டன. பெரிகில் கையில் ஏந்திய விளக்கொளி பட்டதும் அவை இருளுடன் இருளாக விலகின.

பெட்டியினுள் குடங் குடமாகத் தங்க வெள்ளி நாணயங்கள் மணிக்கற்கள் நிறைத்து வைக்கப் பட்டிருந்தன. இருவரும் கைகொள்ளுமட்டும் எடுத்து, மடிகொள்ளும் மட்டும் போர்வையில் சுற்றினர். அதற்குள் விளக்கொளி மங்கத்தொடங்கியது. கடைக்காரன் ‘போதும், தம்பி; மூடிவிடு; புறப்படவேண்டும்’ என்றான். அவர்கள் மூடிவிட்டுப் புறப்பட்டு வெளி வந்தனர். அவர்கள் வரும்போதே விளக்கணைந்து விட்டது. படாரென்ற ஓசையுடன் கதவடைத்துக் கொண்டது. நல்லகாலமாக இருவரும் அதற்குள் வெளி வந்துவிட்டனர். பெரிகிலின் தலைப்பாகை மட்டும் அடை பட்ட கதவால் தள்ளப்பட்டு, குகைக்குள் சிக்கிவிட்டது!

தாம் தப்பி வந்துவிட்டது பற்றி அவர்கள் மிகவும் ஆறுதல் அடைந்தனர். விளக்கு வகையில் இனி முன் னெச்சரிக்கையாயிருக்க வேண்டும் என்றும் ஒருவருக் கொருவர் எச்சரிக்கை செய்து கொண்டனர்.

நகருக்குள் நுழையுமுன் கடைக்காரன் பெரிகிலுக் குப் பல அறிவுரைகள் கூறினான். “தம்பி , நீ நல்லவன். ஆனால் நீ எச்சரிக்கையாயிருக்க வேண்டும். நாம் திடீ ரென்று பணக்காரராய் விட்டதாகக் காட்டிக்கொள்ளப் படாது. மன்னன் பேராசைக்காரன். ஊரோ பொல் லாதது. மேலும் இந்தச் செய்தி ஊருக்குத் தெரியாம லிருக்கவேண்டும். நீ உன் மனைவியிடம் இதைக் கூறினால் கூட, எல்லாம் கெட்டுவிடும். விழிப்பாயிரு,” என்று எச்சரித்தான். பெரிகிலும் உறுதி கூறிவிட்டுத் தனியே வீட்டிற்குள் சந்தடியின்றி நுழைந்து படுத்துக் கொண்டான்.

பெரிகிலும் கடைக்காரனும் விரைவில் பெருஞ் செல்வராயினர். அவர்கள் நட்பும் வளர்ந்தது. அவர் களிடம் பலர் பொறாமை கொண்டனர். அவர்கள் விரைந்து செல்வரான துபற்றிப் பலர் வியப்படைந்தனர். ஆனால் எவரும் இரகசியத்தை உணரவுமில்லை. மலைக்கவு மில்லை. கடைக்காரன் அவன் தொழிலாலும் பெரிகில் தன் உழைப்பாலும் முன்வந்ததாக எவரும் நம்ப முடிந்தது. கடைக்காரன் முன்பே பெரிகிலுக்கு நல்ல வாடிக்கைக்காரனாதலால் அவர்கள் நட்பும் வியப்புக்கு இடம் தரவில்லை.

பெண்புத்தி – ஆனால் உழைப்பின் பயனையே ஊதா ரித்தனமாகச் செலவிட்ட பெரிகிலின் மனைவி இப் போது நினைத்த நினைத்த ஆடையணிகளையெல்லாம் வாங்கத் தலைப்பட்டாள். கேட்டதையெல்லாம் அவன் சிறிது கண்டித்தபின் தருவது கண்டு, அவளே வியப் படைந்து அவன் இரகசியத்தைத் துளைக்கத் தொடங்கினாள்.

“பெரிகில், நீ எங்கிருந்து இத்தனை பணமும் கொண்டுவருகிறாய்? நீ முன் ஆண்டிப்பயல்களுடன் உறவாடி எவ்வளவோ இக்கட்டுகளைக் கொண்டுவந் தாயே. இப்போது ஒன்றும் திருட்டு, கொள்ளைக்காரர் களுடன் சேர்ந்து கொண்டு…”

மனைவி தன்னிடம் கொண்ட அவநம்பிக்கை பெரிகில் உள்ளத்தைச் சுட்டது. அவளிடம் இரகசி யத்தைச் சொல்லவும் விரும்பவில்லை. ஆயினும் அவள் ஐயமகற்ற எண்ணி , “நீ ஏன் எப்போதும் இப்படித் தவறாகக் கருதுகிறாய்? அப்படி நான் என்றும் தவறான வழியில் சென்றவனும் அல்லன்; செல்கிறவனும் அல்லன்; இந்தப் பணம் ஒவ்வொரு காசும் நல்லவழியில் வந்தது தான்,” என்றான்.

“உழைத்து வந்ததுதானா இத்தனையும்?”

அவன் ஆம் என்று கூறமாட்டாமல் மௌனமாய் இருந்தான்.

ஆண்டியின் புதையல் “முன்பே நீ ஆண்டிப்பயலை நம்பி ஏமாந்தாய். இப்போதும்………”

“முன்பும் ஏமாறவில்லை. அந்த ஆண்டி செய்த நன்மைதான் எல்லாம்!” என அவன் கூறவேண்டிய தாயிற்று.

அவள் அத்துடன் விடவில்லை. “அப்படியா அவன் என்ன செய்தான், சொல்லு!” என்றாள்.

“அஃது ஓர் இரகசியம். அது யாருக்கும் தெரியக் கூடாது. தெரிந்தால் கெடுதல் வரும்,” என்று அவன் எச்சரித்தான்.

கணவன் தனக்குத் தெரியாத இரகசியம் வைத் திருப்பதறிந்த அவள் பெண்மனம் அதை அறியத் துடிதுடித்தது. “உன் மனைவி உனக்கு வேண்டா தவளா? எனக்கு மட்டும் தெரிவித்தால் என்ன? நான் உன் நேர்பாதியல்லவா?” என்று அவள் அவனைக் கரைத்தாள்.

எப்போதும் கடிந்துகொள்ளும் மனைவி இப்போது கனிந்து கேட்டால் அவன் எப்படிக் கடுமையாயிருப் பான்? அவன் மெள்ள மெள்ளச் சந்தனப்பெட்டி யினால் வந்த செல்வத்தின் வரலாறு யாவும் கூறிவிட் டான். அத்துடன் தான் முன் ஆண்டிக்குச் செய்த நற்செயலுக்கு அவள் தன்னைத் தடுத்ததையும் பின் திட்டி யதையும் சுட்டிக் காட்டி, “இனி நற்செயல் செய்வதைத் தடுக்காதே,” என்றும் அறிவுரை கூறினான்.

ஆனால் நாய் வாலை நிமிர்க்க யாரால் முடியும்? அவள் பண ஆசை , பகட்டாரவார ஆசை, சமூக ஆதிக்க ஆசை ஆகிய யாவும் அவள் உடலின் ஒவ்வோர் ‘அணுவையும் துளைத்தரித்தன. அவளால் பெரிகிலும் அவன் நண்பனும் நடித்த நடிப்புக்கோட்டைக்குள் அடங்கியிருக்க முடியவில்லை.

அவள் தான் எண்ணப்படித்த அளவும் பொன் காசுகளை எண்ணுவாள். அப்படி எண்ணி எண்ணிச் சேர்த்தவைகளை எண்ணிப் பூரிப்பாள். அரசி இளவரசி யர் அணியக்கூசும் அணிமணிகளில் தன்னை ஒப்பனை செய்து கண்ணாடி முன் நின்று தன் அழகில் தானே சொக்குவாள்; ஆடுவாள், பாடுவாள்.

தன்னையொத்த பிறரிடம் தன் செல்வத்தைக் காட்ட அவள் துடித்தாள். ஆனால் பெரிகில் எதையும் வெளியில் காட்டிக்கொள்ளக் கூடாதென்று பன்முறை எச்சரித்திருந்தான். இதனால் அவள் முழு ஆட்டமும் வீட்டுக்குள்ளேயே ஆடவேண்டியதாயிற்று. என்றாலும் வெளியில் அவள் பிறரிடம் – சிறப்பாக மற்றப் பெண்க ளிடம் – முன்போலப் பேசிப் பழக முடியவில்லை. புழுப் பூச்சிகளிடையே பறவைகள் பறப்பதுபோலப் பறந்தாள். அவள் நடையுடைகள் ஊரெங்கும் பேச்சாயிற்று.

பொறாமைப்பேய் – அம்பட்டன் பெருகுவோவுக்குப் பெரிகில் என்றால் பிடிப்பதில்லை. முன் தான் அவனை மாட்டிவைத்த பொறியினின்றும் அவன் தப்பிவிட்ட போது, அவன் பெரிகிலால் தனக்கு அவமதிப்பு நேர்ந்த தாகக் கருதினான். இப்போது அவன் செல்வனானதும் வெறுப்புப் பன்மடங்காயிற்று. ஆகவே பெரிகில் மனைவியின் ஆர்ப்பாட்டங்களைப்பற்றிக் கேள்வியுற்றதே அவன் வழக்கமான கற்பனை ஊகம் வேலை செய்தது. பெரிகிலை மீண்டும் சிக்கவைக்க, அவன் இரகசியம் ஏதேனும் இருந்தால் கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆவல் அவனிடம் எழுந்தது.

அவன் பெரிகிலின் போக்குவரத்தை ஒற்றாடினான். அவன் வீட்டினருகே அடிக்கடி சுற்றி நோட்டமிட் டான். அத்துடன் அவன் கடை பெரிகிலின் வீட்டுக்கு எதிர்ப்புறம்தான் இருந்தது. அதன் வாயிலுக்கு எதி ராகப் பெரிகில் வீட்டுப் பலகணி ஒன்று உண்டு. அவன் வாயிலில் வந்து நின்று பலகணி வழியாக என்ன நடக்கிறது என்று கவனிப்பான்.

ஒருநாள் பெரிகிலின் மனைவி வழக்கத்திற்குமேல் பட்டும் அணிமணிகளும் அணிந்து கண்ணாடிமுன் வந்து தன்னைப் பார்ப்பதும் பித்துக்கொள்ளிபோல் அறைக் குள் உலாவுவதுமாக இருந்தாள். இந்தக் கோலத்துட னேயே வெளியே ஏதோ அரவங்கேட்டு, பலகணி வழியாக எட்டிப்பார்த்தாள். அச் சமயம் அம்பட்டன் பெட்ரூகோ தன் கடையின் வாயிலில் எதிரேதான் நின்று கொண்டிருந்தான். அவள் அவனைக் கவனிக்க வில்லை. ஆனால், அவன் கவனித்தான். முற்றிலும் வியப்பும் மலைப்பும் கொண்டான். பெரிகிலின் செல்வம் உழைத்து ஈட்டியவன் செல்வமல்ல, ஒரு புதையல் செல்வமாயிருக்கவேண்டும் என்று கண்டான்.

சூழ்ச்சியில் வல்ல பெட்ரூகோ மீண்டும் மன்னன் சீற்றத்தைக் கிளறிவிட்டான். “அரசே ! முன்பு அந்தப் பயல் பெரிகில் சொல்லை நம்பி என் சொல்லைத் தட்டி விட்டீர்கள். அவன் காட்டிய சந்தனப்பெட்டியை நம்பி அவனை விடுதலை செய்தீர்கள். நான் கூறியது முற்றிலும் சரி என்று இப்போது அறிகிறேன். ஆண்டி யிடமிருந்து பெற்றது சந்தனப்பெட்டி என்று ஏமாற்றி யிருக்கிறான். உண்மையில் அவன் பெற்ற செல்வம் அஃது அன்று. உங்கள் அரண்மனைச் செல்வத்தை விட மிகுதி யான செல்வம் அவன் மனைவியின் அணிமணிகளிலேயே அடங்கிக் கிடக்கிறது. அவள் அவற்றுடன் வெளிவருவ தில்லை – நான் பலகணி வழியாகக் கண்டேன்,” என்றான்.

பெரிகில் பொய் சொல்வதில் வல்லவன் அல்லன். மன்னனுக்கு இவ்வளவு தெரிந்தபின் பொய் சொல்வ தும் யாருக்கும் அரிது. அவன் மீண்டும் உண்மை முழுவதும் சொன்னான். அந்தோ ! இதனால் அவன் தன்னை மட்டுன் மறிக் கடைக்கார நண்பனையும் காட்டிக் கொடுக்க வேண்டியதாயிற்று.

பெரிகிலையும் அவன் நண்பனையும் சிறையிலிட்டு அவர்கள் செல்வமுழுதும் பறிமுதல் செய்யும்படி மன்னன் கட்டளையிட்டான்.

ஆண்டியின் புதையல் பண ஆசைகொண்ட தன் மனைவியைத் தான் நம்ப நேர்ந்ததற்காகப் பெரிகில் வருந்தினான்.

சூழ்ச்சிக்கு எதிர்சூழ்ச்சி – கடைக்கார நண்பன் மூளை மட்டும் சுறுசுறுப்பாக வேலை செய்தது. அவன் தன்னை யும் தன் அப்பாவி நண்பனையும் காப்பாற்ற ஒரு சூழ்ச் சித் திட்டம் செய்து கொண்டான்.

“அரசே! எங்கள் செல்வம் முழுதும் உங்களுடைய யதுதான். உங்களிடம் எல்லாவற்றையும் ஒப்படைக்க நாங்கள் தயங்கவில்லை. சிறையில் தங்கள் விருந்தாளி யாக இருப்பதிலும் மகிழ்ச்சியே. ஆனால் இவ்வளவும் உங்களுக்குச் செய்தால் போதாது. இன்னும் எவ் வளவோ பணம் இருக்கும் இரகசியக் குகையைச் சிறை செல்லு முன் தங்களுக்குக் காட்ட விரும்புகிறேன். உலகத்தின் செல்வமுழுதும் அதற்கு ஈடில்லை. அதை நீங்கள் அனுபவிக்கவேண்டும்,” என்றான்.

மன்னன் உள்ளத்தில் பேராசைத் தீ கொழுந்துவிட் டெரிந்தது. அவன் “சரி, அப்படியே செய்,” என்றான்.

“அரசே! இந்த இரகசியத்தை நீங்கள் மட்டும் அறியவேண்டும். பெட்ரூகோவையும் மற்ற எல்லாரை யும் அனுப்பிவிடுங்கள்,” என்றான்.

எல்லாரும் வெளியே சென்றனர். பெட்ரூகோ காரியம் போகும் போக்குப் பிடிக்காவிட்டாலும் வேறு வழிகாணாமல் நண்பர் பக்கம் திரும்பிக் கறுவிக் கொண்டே சென்றான்.

பெரிகில் ஒன்றும் தெரியாமல் விழித்தான்!

விளக்கணைவதால் ஏற்படும் செய்தி தவிர மற்ற எல்லாவற்றையும் கடைக்காரன் மன்னனுக்குச் சொல்லி, நள்ளிரவில் ஏழாம் கோபுரத்தண்டை செல்ல ஏற்பாடு செய்தான். தனியே இருக்கும் சமயத்தில் பெரிகிலிடம் தன் திட்டத்தையும் கூறி எச்சரித்தான்.

அன்று மூவரும் பாலைவனத்தின் வழியே சென்ற னர். மந்திரத்தின் உதவியாலும், மெழுகுவத்தியின் உதவியாலும் மூவரும் குகைக்குள் புகுந்தனர். வெளியே மன்னன் கழுதைகள் மூன்று காத்திருந்தன. முதலிரு கழுதைகளும் கொள்ளும் அளவு பொன்னைக் கடைக் காரனும் பெரிகிலும் எடுத்துக்கொண்டனர். மன்னன் சுமக்கமாட்டாத அளவு வாரிச் சுற்றிக்கொண்டிருந்தான்.

கடைக்காரன் மெழுகுவத்தியைத் தான் வாங்கிக் கொண்டான். பெரிகில் வெளியே வந்துவிட்டான்.

விளக்கணையுமுன் கடைக்காரனும் வெளியே ஓடி வந்துவிட்டான். மன்னன் தன் பளுவாள சுமையுடன் பின்தொடர்ந்து வருமுன் கதவு மூடிக்கொண்டது.

மன்னன் பாறையினுள் பூதங்களுடன் அடைபட்டான்.

பெரிகிலும் கடைக்காரனும் இரவே மூட்டை முடிச்சுகளுடன் அந் நகர்விட்டு வெளியேறி விட்டனர். பெரிகிலின் மனைவிக்கும் குழந்தைகளுக்கும் அவர்கள் வேறு எதுவும் சொல்லவில்லை. மன்னன் சிறையி லிருந்து தப்பியோடி வந்ததாக மட்டும் கூறி அவர்களையும் விரைவுபடுத்திக் கூட்டிக்கொண்டு சென்றனர்.

கிரானடா மன்னன் ஆட்சி மட்டுமன்றி, அவன் பெயர் கூட எட்டாத தொலை நாட்டில், குகையின் பெருஞ் செல்வத்துடன் அவர்கள் வாழ்ந்தனர்.

மன்னன் மாண்ட கதையை மட்டும் பெரிகில் என்றும் தன் மனைவியிடம் கூறவேயில்லை.

– ஆண்டியின் புதையல், முதற் பதிப்பு: ஏப்ரல் 1953, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட், திருநெல்வேலி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *