சிவகாமியின் செல்வன்
கதையாசிரியர்: சாவி
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: சாவி
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: December 8, 2025
பார்வையிட்டோர்: 70
(1990ல் வெளியான வாழ்க்கை வரலாறு, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15
அத்தியாயம் – 10

“பன்னிரண்டு ஆண்டுக் காலம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராகத் தொடர்ந்து இருப்பதென்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. 1940-இல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்ட காமராஜ் 1952 வரை மீண்டும் மீண்டும் தேர்தல் நடந்த போதெல்லாம் அவரே தலைவராகிக் கொண்டிருந்தார். தமிழ் நாடு காங்கிரஸில் அவருக்குள்ள செல்வாக்கும் சக்தியும் அத்தகையவையாயிருந்தன. ‘காமராஜ்’ என்ற மாபெருஞ் சக் தியைத் தமிழ்நாட்டில் யாரும் எதிர்த்து நிற்க முடியவில்லை. பிரகாசம், ராஜாஜி, சி.பி.சுப்பையா, ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், ம.பொ.சி. எல்லோருமே ஒவ்வொரு சமயங்களில் காமராஜுக்கு எதிராக நின்று வேலை செய்தவர்கள் தாம். அவர்களுடைய எதிர்ப்புக்களாலும், போட்டிகளாலும், ராஜ தந்திரங்களாலும் காமராஜ் என்னும் இமயத்தை அசைக்க முடியவில்லை. மக்களின் ஆதரவும், காங்கிரஸ் ஊழியர்களின் பக்கபலமும் காமராஜுக்கு எப்போதும் ஒரே மாதிரியாக இருந்து வந்தன; இருந்து வருகின்றன.
1946-இல் ஆகஸ்ட் போராட்டத்துக்குப் பிறகு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைமைக்கு நடைபெற்ற தேர்தலில் காமராஜுக்கு எதிராகத் திரு. சா. கணேசனை நிறுத்தி வைத்தார்கள். இவரைப் போட்டியிடச் செய்வதற்கு முன்னால் முத்துராமலிங்கத் தேவரைப் போட்டியிடச் செய்தால் காமராஜ் நிச்சயம் தோற்றுப் போவார் என்று சிலர் அப்போது எண்ணினார்கள். தேவர் அதற்கு இணங்க மறுத்து விட்டதால் சா.கணேசன் என்று முடிவாயிற்று. ஏற்கெனவே திருப்பரங் குன்றத்தில் நடைபெற்ற ராஜாஜி எதிர்ப்பு மகாநாட்டில் சா.கணேசன் கலந்து கொண்டார். ஆனாலும் அவர் காமராஜுக்கு எதிராகப் போட்டியிட முன்வந்தபோது பலருக்கு ஆச்சரியமாகவே இருந்தது.
அந்தத் தேர்தலில் காமராஜுக்கு 152 வோட்டுகளும், சா.கணேசனுக்கு 90 வோட்டுகளுமே கிடைத்தன. இதற்குப் பிறகு 1948-இல் நடைபெற்ற தலைவர் தேர்தலில் காமராஜை எதிர்த்துப் போட்டியிடும் துணிவு யாருக்கும் உண்டாகவில்லை. ஆகவே, காமராஜே காங்கிரஸ் தலைமைப் பதவிக்கு ஒருமுகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் 1950 -இல் மீண்டும் தலைமைப் பதவிக்குத் தேர்தல் நடந்தபோது கோயமுத்தூர் சி.பி.சுப்பையா, காமராஜை எதிர்த்து நின்றார். அப்போதும் காமராஜே வெற்றி பெற்றார். சுப்பையாவுக்கு 99 வோட்டுகளும், காமராஜுக்கு 155 வோட்டுகளும் கிடைத்தன.
அச்சமயம் ராஜாஜி டில்லியில் மந்திரியாக இருந்தார். காமராஜ் டில்லிக்குப் போகும்போதெல்லாம் ராஜாஜியைச் சந்தித்துப் பேசிவிட்டு வருவது வழக்கம். ஒரு சமயம் அவ்வாறு பேசிக் கொண்டிருந்தபோது, “இந்த முறை சி.பி.சுப்பையா தான் தமிழ்நாடு காங்கிரஸ் பிரஸிடெண்டாக வரட்டுமே” என்று காமராஜிடம் தம் அபிப்பிராயத்தைத் தெரிவித்தார் ராஜாஜி.
“பேஷாக வரட்டுமே எனக்கு ஆட்சேபம் இல்லை” என்று சொல்லிவிட்டு வந்தார் காமராஜ்.
ஆனால் காமராஜை அவருடைய நண்பர்கள் விடவில்லை. காமராஜே தான் தலைவராக வர வேண்டும் என்றும், தேர்தலில் போட்டியிட வேண்டுமென்றும் கட்டாயப்படுத்தினார்கள். நண் பர்கள் விருப்பத்துக்கு மாறாக நடந்து கொள்ள முடியாத ஒரு நிர்ப்பந்த நிலை காமராஜுக்கு ஏற்பட்டதால், சுப்பையாவுடன் போட்டியிட வேண்டிய தர்ம சங்கடம் அவருக்கு ஏற்பட்டது.
கடைசியாக 1952-இல் பொது தேர்தல் நடந்தபோது அந்தத் தேர்தலில் காங்கிரஸுக்கு மெஜாரிட்டி கிடைக்காததால் காமராஜ் தம்முடைய தலைமை பதவியை ராஜிநாமா செய்ய நேரிட்டது. ஆனால் அதே ஆண்டு இறுதியில் தலைவர் தேர்தல் நடந்தபோது காமராஜே மீண்டும் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அந்த இடைக்காலத்தில் சில மாதங்களுக்கு மட்டுமே டாக்டர் சுப்பராயன் காங்கிரஸ் தலைவராக இருந்தார். சுப்ப ராயன் காங்கிரஸ் தலைவரானதற்கும் காமராஜேதான் வேலை செய்தார்.
“என்னுடைய தலைமையில் தமிழ்நாடு காங்கிரஸ் இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்தச் சமயம் பொதுத் தேர்தலில் காங்கிரஸுக்கு மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றால் அதற்கு முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ள வேண்டியது நான் தான். ஆகவே நான் ராஜிநாமா செய்து விட்டு வேறொருவரைத் தலைவராக்குவதுதான் முறை” என்று கூறி, டாக்டர் சுப்பராயனைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கச் செய்தார்.
இதற்கு இன்னொரு காரணமும் உண்டு; பொதுத் தேர்தல் முடிந்ததும் காங்கிரஸ் கட்சி ராஜாஜியின் தலைமையில் மந்திரிசபை அமைக்க முடிவு செய்திருந்ததால், அவருடன் இணங்கி வேலை செய்யக்கூடிய ஒருவரையே காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று காமராஜ் விரும்பினார். அதனாலேயே சுப்பராயன் தலைவரானதும், அவருக்கு உதவியாகக் காங்கிரஸ் வேலைகளைத் தாமே கவனித்துக் கொள்ளவும் செய்தார்.
அது மட்டுமல்ல, அப்போதிருந்த நெருக்கடியான நிலையில் ராஜாஜியைத் தவிர வேறு யாராலும் நல்ல முறையில் ஆட்சி செலுத்த முடியாது என்பதை நன்கு அறிந்தார் காமராஜ். ‘ராஜாஜி முதலமைச்சராக வர வேண்டும்’ என்பதில் காமராஜுக்கு எவ்வளவு அக்கறை இருந்ததோ, அந்த அளவு ராஜாஜிக்கு உற்ற ஓர் காங்கிரஸ் தலைவராக இருக்க வேண்டும் என்பதிலும் இருந்தது.
இதற்குப் பிறகுதான் அடியோடு முறிந்து போயிருந்த காமராஜ் – ராஜாஜி உறவு கொஞ்சங் கொஞ்சமாகச் சீரடைந்து வலுப்பெறத் தொடங்கியது. ராஜாஜி முதலமைச்சரான பிறகு காமராஜைப் பாராட்டி ஒரு முறை பேசினார்: “காங்கிரஸ் அலுவல்களைக் காமராஜே கவனித்துக் கொள்கிற வரை எனக்கு அதைப்பற்றிய கவலை இல்லை. அதைப் போலவே நான் முத லமைச்சராக இருக்கிறவரை இந்த ராஜ்யத்தின் நிர்வாகத்தைப் பற்றிய கவலையும் காமராஜுக்கு இருக்காது.
இதே மாதிரியான ஒரு நிலைதான் புருஷோத்தமதாஸ் தாண்டன் அகில இந்தியக் காங்கிரஸ் தலைமைக்குப் போட்டி யிட்டபோதும் ஏற்பட்டது. அப்போதும் நேருஜி பிரதமராக இருக்கும்போது, அவருடன் ஒத்துப் போகிற ஒருவர்தான் காங்கிரஸ் தலைவராக இருக்க வேண்டும் என்று காமராஜ் விரும்பினார். ஏனெனில், தாண்டன் நேருஜியின் கொள்கைகளை ஆதரிக்காதவர். அதனால் அவருடைய தலைமை ஆபத்தில் முடியும் என்பதை உணர்ந்த காமராஜ், பட்டாபி சீதாராமய் யாவின் நிலைமைக்காகப் பாடுபட்டார். காமராஜ் எடுத்துக் கொண்ட பெரு முயற்சியின் காரணமாகவே பட்டாபி அப்போது வெற்றி பெற்றார்.
ஆனாலும் 1950-ஆம் ஆண்டு நாஸிக்கில் மீண்டும் தலைவர் தேர்தல் நடந்தபோது தாண்டன் வெற்றி பெற்று விட்டார். அவருக்கும் நேருஜிக்கும் ஒத்து வரவில்லை. அவர் அமைத்த காரியக் கமிட்டி நேருஜிக்குத் திருப்திகரமாக இல்லை. அதை மாற்றி அமைக்க வேண்டும் என்று நேருஜி கேட்டுக் கொண்டும் தாண்டன் அதற்குச் செவி சாய்க்கவில்லை. இதனால் அகில இந்தியக் காங்கிரஸ்
காங்கிரஸ் கமிட்டியிலிருந்து நேருஜி விலகிக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலை ஏற்பட்டது.
1951 செப்டம்பரில் அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டி யின் கூட்டம் நடைபெறுவதற்கு முன்னாலேயே நேருஜி காங் கிரஸ் கமிட்டியிலிருந்து விலகிக் கொண்டார். நேருஜி இல்லாத கமிட்டி நாட்டுக்கு நல்வழி காட்ட முடியாது என்றும், நேரு வின் தலைமை அவசியம் என்றும் காமராஜ் கருதினார். அதனால் நேருஜிக்கு ஆதரவாக வேலை செய்யத் தொடங்கினார். அதன் பயனாக அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டியில் நேருவுக்கு ஆதரவு அதிகமாகப் பெருகியுள்ளதை அறிந்த தாண்டன் தம் முடைய பிரசிடெண்ட் பதவியை ராஜிநாமா செய்து விட்டு, “காரியக் கமிட்டியை மாற்றி அமைக்க வேண்டும் என் று நேருஜி கூறுகிறார். இதற்கு நேரு கூறும் காரணத்தை நான் ஒப்புக் கொள்ள முடியாது” என்றார்.
இதனால் நேருஜிக்கும், தாண்டனுக்கும் ஏற்பட இருந்த தகராறுகளெல்லாம் அடிபட்டுப் போயின. தேர்தல் நடைபெறப் போகும் நேரத்தில், காங்கிரஸ் தலைவருக்கும் பிரதமருக்கும் இடையே தகராறுகள் வளர்ந்து கொண்டிருந்தால் அதன் விளைவு என்னவாகும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. காமராஜ் இதனை முற்றும் உணர்ந்திருந்ததால்தான் நேருவுக்கு ஆதரவு தேடுவதற்காகத் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா ஆகிய இடங்களில் முனைந்து வேலை செய்தார். அவர் அன்று செய்த வேலை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்பதோடு, நம் நாட்டுக்குக் காமராஜ் செய்த தொண்டுகளிலேயே மிகச் சிறந்ததுமாகும்.
அத்தியாயம் – 11
மரவக்காடு என்பது தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒரு சின்னஞ்சிறு கிராமம். அங்கிருந்து தம்பிக் கோட்டை என்னும் ஊருக்கு ஐந்தாறு மைல் தூரம் இருக்கலாம்.
இருபத்துமூன்று ஆண்டுகளுக்கு முன்னால் காமராஜ் அந்தப் பகுதியில் தேர்தல் பிரசாரம் செய்து கொண்டே ஊர் ஊராகச் சூறாவளிச் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருந்தார்.
மரவக்காட்டில் கூட்டம் தொடங்கியபோது மணி எட்டுக்கு மேல் ஆகிவிட்டது. அந்த ஊர்க் கூட்டத்தில் பேசி முடித்துவிட்டு, அப்புறம் தம்பிக் கோட்டைக் கூட்டத்துக்குச் செல்ல வேண்டும். தம்பிக் கோட்டைக்குச் செல்லும் பாதையில் காமராஜைத் தீர்த்துக் கட்டிவிட வேண்டும் என்று சிலர் திட்டம் போட்டிருந்தார்கள்.
இந்த நிகழ்ச்சி பற்றிக் காமராஜ் முன்னொரு முறை என்னிடம் உணர்ச்சி வசப்பட்டுக் கூறியது என் நினைவில் இருந்தது. “அந்த மரவக்காட்டு நிகழ்ச்சியைக் கொஞ்சம் விவரமாகச் சொல்ல முடியுமா?” என்று கேட்டதும் காமராஜ் சிரித்துக் கொண்டே, “ஆமாம், மரவக்காட்டிலே நான் பேசிக்கிட்டிருக்கேன். ஒரு பஸ் டிரைவர் மேடை மேலே ஏறி வந்து என் காதோடு ‘உங்களை வழியில் மடக்கி அடிக்கிறதுக்கு ஏற்பாடு பண்ணியிருக்காங்க. நீங்க ராத்திரி அந்தப் பக்கம் போகாதீங்க’ன்னாரு. ‘ஆகட்டும்.பார்க்கலாம்’ னு அவர்கிட்டே சொல்லி அனுப்பிச்சுட்டு. கூட்டத்திலிருந்த ஜனங்களைப் பார்த்து, “யாரோ தம்பிக்கோட்டைக்குப் போற வழியிலே என்னை மடக்கி அடிக்கப் போறாங்களாம். அடிக்கட்டுமே பார்க்கலாம்! இவங்களுக்குப் பயந்து கூட்டத்துக்குப் போகாமல் இருந்துட முடியுமா, என்ன? நான் காரிலே போகப் போறதில்லே, நடந்தேதான் போகப் போறேன். தம்பிக்கோட்டை வரைக்கும் நீங்களும் கூட்டமா என் கூடவே வாங்க, அவங்க யாருங்கிறதைப் பார்த்துடலாம்’னு பேசினேன். அவ்வளவு தான்; அவ்வளவு பேரும், ‘காமராஜுக்கு ஜே!’ன்னு சொல்லிக் கொண்டு கூட்டமா என் கூடவே நடந்து வர ஆரம்பிச்சுட்டாங்க. பாதி வழியிலே சாலைக்குக் குறுக்கே கட்டை போட்டுக் கட்டி வச்சிட்டுப் பக்கத்திலே பதுங்கி நின்னு கவனிச்சுக்கிட்டிருந்தாங்க. எங்களைக் கண்டதும் ஒரே ஓட்டமா ஓடிப் போயிட்டாங்க!” என்றார் காமராஜ்.
காமராஜ் அதிகம் படித்தவரல்ல; ஆங்கில மொழியிலும் அவரால் சரளமாகப் பேசவோ, எழுதவோ முடியாது. இந்தி மொழியும் சுமாராகத்தான் தெரியும். ஆனால் ‘ஒரு நாட்டை ஆளுவதற்கு மொழிப் புலமை முக்கியமல்ல’ என்பதை நிரூபித்துக் காட்டியவர் காமராஜ். 1954ஆம் ஆண்டில் காமராஜ் இந்த ராஜ்யத்தின் முதலமைச்சராக வந்தார். பிறகு ஒன்பது வருடங்கள் தொடர்ந்து முதலமைச்சராகவே இருந் தார். இந்த ஒன்பது ஆண்டுக் காலத்தில் சென்னை ராஜ்யம் மற்ற மாநிலங்கள் எல்லாவற்றையும் விட மிகச் சிறந்த முறையில் நிர்வாகம் செய்யப்பட்ட ராஜ்யம் என்ற புகழைப் பெற்றது. பொருளாதாரத் துறையிலும், சமூகத் துறையிலும் எல்லா மாநிலங்களையும் மிஞ்சி நின்றது. காமராஜின் ஆட்சிக் காலத்தில் ஏராளமான பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன. எல்லாக் குழந்தைகளுக்கும் கல்வி வசதி அளிக்கப்பட்டது. மக்களின் அறியாமை இருளை போக்கக் கல்விக் கூடங்களைத் திறந்ததைப் போலவே கிராமங்களைச் சூழ்ந்திருந்த இருளைப் போக்க மின்சார வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதும் காமராஜின் ஆட்சியில்தான்.
காமராஜ் பூகோளம் படிக்கவில்லைதான். ஆனாலும் இந்த மாநிலத்திலுள்ள ஒவ்வொரு கிராமத்துக்கும் அவர் பல முறை சென்றிருக்கிறார். இந்த மாநிலத்திலுள்ள ஏரிகள், குளங்கள், அணைக்கட்டுகள், சாலைகள் எல்லாம் அவருக்குத் தெரியும். அவர் கால் வைக்காத கிராமமோ, தொழிற்சாலையோ நம் ராஜ்யத்தில் வெகு அபூர்வமாகத்தான் இருக்கும்.
காமராஜ் முதலமைச்சராகப் பதவி ஏற்பதற்கு முன் இரண்டாண்டுக் காலம் ராஜாஜி இந்த ராஜ்யத்தின் நிர்வாகத்தை ஏற்று ஒப்புயர்வற்ற முறையில் ஆட்சி நடத்தினார். ராஜாஜியின் ஆட்சி தொடர்ந்து இருக்க வேண்டுமென்று காமராஜ் அப்போது விரும்பினார். அச்சமயம் ராஜாஜி இந்த மாநிலத்திலுள்ள குழந்தைகள் எல்லோரும் படிப்பதற்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் முறையில் ஆரம்பக் கல்வித் திட்டம் என்றொரு திட்டத்தைக் கொண்டு வந்தார். அந்தத் திட்டத்தைக் காங்கிரசில் உள்ளவர்கள் ‘குலக்கல்வித் திட்டம்’ என்று குறை கூறி எதிர்த்தார்கள். ராஜாஜி அவர்கள் எதிர்ப்பைப் பொருட்படுத்தவில்லை. தம்முடைய மந்திரி சபையில் கல்வி மந்திரியாக இருந்தவரிடம் இத்திட்டம் பற்றிக் கலந்து ஆலோசிக்கவுமில்லை, சட்டசபைக் காங்கிரஸ் கட்சி யிடமும் கலக்கவில்லை. இதையெல்லாம் எடுத்துச் சொல்லி ராஜாஜி மீது எதிர்ப்பாளர்கள் குற்றம் சாட்டினார்கள்.
“சங்கரும் ராமானுஜரும் தங்கள் கொள்கைகளை வெளியிடு முன் மற்றவர்களிடம் கலந்து கொண்டா செய்தார்கள்?’ என்று ராஜாஜி அவர்களைத் திருப்பிக் கேட்டார். எதிர்ப்பைக் கண்டு எப்போதுமே அஞ்சாத ராஜாஜி இந்த முறையும் தான் சொன்னதையே மீண்டும் மீண்டும் வலியுறுத்திச் சொன்னார். இதனால் எதிர்ப்பு மேலும் பலமாயிற்று. அதைத் தொடர்ந்து ராஜாஜியின் பிடிவாதமும் அதிகமாயிற்று.
சட்டசபைக் காங்கிரஸ் கட்சிக் கூட்டத்தில் அந்தத் திட்டம் விவாதத்துக்கு வந்தபோதெல்லாம் அதை வோட்டுக்கு விடாமலே ஒத்தி வைத்துக் கொண்டிருந்தவர் காமராஜ்தான்.
ராஜாஜியின் ஆரம்பக் கல்வித் திட்டம் காமராஜுக்குப் பிடித்திருந்ததோ இல்லையோ, ராஜாஜியின் ஆட்சி அவருக்கு ரொம்பப் பிடித்திருந்தது. அந்த நெருக்கடியான நேரத்தில் ராஜாஜியின் சேவையை அவர் பெரிதும் விரும்பினார். அதனாலேயே அந்தத் திட்டம் விவாதத்துக்கு வந்தபோதெல்லாம் அதை வோட்டுக்கு விடாமலே தள்ளிப் போட்டுக் கொண்டிருந்தார்.
அப்புறம் கொஞ்ச நாட்களுக்கெல்லாம் ஆந்திர மாகாணம் பிரிந்துவிட்டதால் சென்னை சட்டசபைக் காங்கிரஸ் கட்சிக்குப் புதுத் தலைவர் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று ஒரு கிளர்ச்சி தோன்றியது. ‘தலைவர் தேர்தல் நடந்தால் ராஜாஜியை வேண்டாம் என்று எண்ணுபவர்கள் அப்போது வேறு தலைவரைத் தேர்ந் தெடுத்துக் கொள்ளட்டுமே’ என்பது தான் காமராஜின் எண்ணம்.
இந்தச் சமயம் ராஜாஜி, காமராஜ் இருவரையும் டில்லிக்கு அழைத்துப் பேசினார் நேருஜி. ராஜாஜியே தொடர்ந்து முதலமைச்சராக இருக்க வேண்டும் என்று நேருஜி அறிக்கை வெளியிட்டார். நேருஜி கூறிவிட்டதால் இனி எதிர்ப்பு இருக்காதுஎன்றே பலர் எதிர்பார்த்தார்கள். ஆனால் அப்படி நடக்கவில்லை. ராஜாஜிக்கு எதிராகவும் ஆதரவாகவும் இரண்டு.. கோஷ்டியார் வேலை செய்து கையெழுத்து வாங்கினார்கள். “இதெல்லாம் எதற்கு? நானே விலகிக் கொள்கிறேன். கல்வித் திட்டத்தின் மீது வோட்டெடுக்க வேண்டிய அவசியமில்லை” என்று ராஜாஜி கூறினார்.
அடுத்த சில நாட்களுக்குள் தமக்கு உடல்நிலை சரியில்லை என்றும்,. ஆகையால் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகிக் கொள்ளப் போவதாகவும் ராஜாஜி அறிக்கை வெளியிட்டார்.
1954ஆம் வருடம் மார்ச்சு மாதம் 25ஆம் தேதி ராஜாஜி சட்ட சபைக்கு வந்து தாம் விலகப் போகும் செய்தியை அறிவித்தார்.
பிறகு நடந்த கட்சித் தலைவர் தேர்தலில் காமராஜும், சி. சுப்பிரமணியமும் போட்டியிட்டார்கள். காமராஜுக்கு 93 வோட்டுக்களும் சுப்பிரமணியத்துக்கு 41 வோட்டுக்களும் கிடைத்தன.
காமராஜ் அமைத்த எட்டுப்பேர் மந்திரி சபையில் சி. சுப் பிரமணியத்தையும் சேர்த்துக் கொண்டது காமராஜின் பெருந் தன்மையைக் காட்டியது. சி. சுப்பிரமணியமும் காமராஜுடன் சேர்ந்து சிறந்த முறையில் பணியாற்றியது அவருடைய உயர்ந்த குணத்துக்கு எடுத்துக் காட்டாக விளங்கியது.
அத்தியாயம் – 12
ராஜாஜி 1954 -இல் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகப் போவதாக அறிவித்த போது, ‘அவருக்கு அடுத்த படியாக அந்தப் பதவியைத் திறம்பட வகிக்கும் தகுதியும், ஆற்றலும் உள்ள தலைவர் யார்?’ என்ற கேள்வி தமிழ் நாட் டில் எழுந்தது. சி.சுப்பிரமணியம், டாக்டர் சுப்பராயன், ஷெட்டி இவர்கள் பெயர் அடிபட்டன.
காமராஜ் அப்போதுதான் தம்முடைய மலேயா சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு தமிழ் நாட்டுக்குத் திரும்பி யிருந்தார்.
அவருடைய எண்ணமெல்லாம் கட்சி வேலையிலேயே ருந்து வந்ததால், நல்ல முறையில் மக்களுக்குச் சேவை செய்யக்கூடிய ஒரு மந்திரி சபையை அமைத்து விட்டு, அந்த மந்திரி சபைக்குப் பக்கபலமாகத் தாம் வெளியிலிருந்த படியே வேலை செய்யலாம் என்றுதான் நினைத்தார். அடுத்த மந்திரி சபை அமைப்புப் பற்றி ராஜாஜியைக் கலந்து ஆலோசித்தார்.
“இன்னும் இரண்டு மூன்று மாதங்கள்வரை இப்போதுள்ள மந்திரி சபையே தொடர்ந்து நடக்கட்டும். அடுத்தாற் போல் பட்ஜெட் கூட்டம் வருகிறது. அது முடிந்தபின் கட்சித் தலைவர் தேர்தலை நடத்தலாம்” என்று கூறினார் ராஜாஜி.
”ரொம்ப சரி ; அதுவரை பக்தவத்சலம், சுப்பிரமணியம், ஷெட்டி- இந்த மூவரில் ஒருவரே முதலமைச்சரா யிருக்கட்டும்” என்றார் காமராஜ்.
கட்சிக் கூட்டம் நடந்த போது சி. சுப்பிரமணியத்தின் பெயரை ராஜாஜி பிரேரேபித்தார். ஆனால் பட்ஜெட் கூட்டம் வரை இது இடைக்கால ஏற்பாடுதான் என்பதை அவர் சொல்லவில்லை.
காமராஜ் எழுந்து “இந்த ஏற்பாட்டை இரண்டு மாதங்களுக்குத்தான் ஒப்புக்கொள்ள முடியும்.அப்புறம் தலைவர் தேர்தலை நடத்தி ஆக வேண்டும்” என்றார்.
ராஜாஜி கட்சியைச் சேர்ந்தவர்கள் இதை ஆட்சேபித் தார்கள். இரு கட்சிகளுக்கிடையே எந்தச் சமரசமும் ஏற்படவில்லை. இதனால் தேர்தலை உடனே நடத்தி விடுவதென்று காமராஜ் முடிவு செய்தார்.
சி. சுப்பிரமணியந்தான் முதலமைச்சராக வருவார் என்று பலர் எதிர்பார்த்தார்கள். இதற்குக் காரணம் ராஜாஜி மந்திரி சபையில் அவருக்கு அடுத்தபடியாகச் சுறுசுறுப்போடு இயங்கியவர். சி.சுப்பிரமணியந்தான். அத்துடன் ராஜாஜியின் அன்பும், ஆதரவும் இவருக்கு இருந்தன. அந்த மந்திரி சபையில் ‘பாபுல ‘ராக இருந்தவரும் சி.எஸ்.தான். எனவே ‘அவருக்குத்தான் அடுத்த மாலை’ என்று எல்லோரும் எதிர்பார்த்தார்கள்.
இதற்கிடையில் காமராஜின் நண்பர்கள் அவரையே தேர்தலுக்கு நிற்க வேண்டுமென்று கட்டாயப்படுத்தினார்கள். சி.எஸ்.ஸின் தலைமையை விரும்பாதவர்கள் ஷெட்டியின் பெயரைச் சொன்னார்கள். சிலர் சுப்பராயனை நிறுத்தலாம் என்றார்கள். கடைசியாக எந்தச் சமரசமும் ஏற்படாததால் காமராஜும், சி.எஸ்ஸுமே போட்டியிட்டனர்.
போட்டியில் காமராஜுக்கே அதிக வோட்டுகள் கிடைத்து வெற்றி அடைந்த போதிலும் தாமே முதல் அமைச்சராக வேண்டும் என்ற ஆசை அவருக்கு ஏற்படவில்லை. அவர் நினைத்திருந்தால் அந்தப் பதவியை இதற்கு முன்பே அடைந்திருக்கலாமே!
கட்சித் தலைவராக மட்டும் இருந்து கொண்டு முதலமைச்சராக வேறொருவரை நியமித்து ஆட்சியை நடத்திக் கொள்ளலாம் என்றுதான் முதலில் காமராஜ் எண்ணினார். டில்லிக்குப் போய் தம்முடைய கருத்தை மேலிடத்திலும் சொல்லிப் பார்த்தார். ஆனால் கட்சித் தலைவரேதான் முதலமைச்சராக இருக்க வேண்டும் என்றும், அதற்குச் சம்மதம் இல்லை என்றால் முதலமைச்சராக வரக்கூடிய வேறொருவரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்று மேலிடத்தார் உறுதியாகச் சொல்லி விட்டார்கள்.
சென்னைக்குத் திரும்பி வந்த காமராஜ் தம்முடைய நண்பர்களைக் கலந்து ஆலோசித்தார்.
“மறுபடியும் தலைவர் தேர்தல் நடத்துவதை நாங்கள் விரும்பவில்லை. தாங்களே முதலமைச்சராயிருப்பதுதான் சரி” என்று அவருடைய நண்பர்கள் கூறி விட்டார்கள்.
“அப்படியானால் ஒரு நிபந்தனை” என்றார் காமராஜ்.
“என்ன அது?” என்று கேட்டார்கள் நண்பர்கள்.
“நான் அமைக்கப் போகும் மந்திரி சபையில் என் இஷ் டப்படிதான் மந்திரிகளைச் சேர்த்துக் கொள்வேன். ‘அவரைப் போடு, இவரைப் போடு’ என்று யாரும் சொல்லக் கூடாது. சம்மதமா?” என்று காமராஜ் கேட்டார்.
“தங்கள் இஷ்டப்படியே செய்யுங்கள். தாங்களே முதலமைச்சராக வருவதுதான் முக்கியம்” என்றார்கள் நண்பர்கள். காமராஜ் மந்திரி சபையில் ராஜாஜி மந்திரி சபையைச் சேர்ந்தவர்கள் யாருக்குமே இடமிருக்காது என்று எல்லோரும் அப்போது எதிர்பார்த்தார்கள்
காமராஜ் முதலமைச்சராக வந்ததும் தமது மந்திரி சபையில் எட்டுப் பேர்தான் இருப்பார்கள் என்று அறிவித்தார். அந்த எட்டுப் பேரில் ராஜாஜி மந்திரி சபையைச் சேர்ந்தவர்களும் இருப்பார்கள் என்றார்.
அதே மாதிரி ராஜாஜி எதிர்ப்புக் கோஷ்டியில் தீவிர மாக இருந்த ஒருவரையும் தம்முடைய மந்திரி சபையில் அவர் சேர்த்துக் கொண்டார்.
காங்கிரஸை எதிர்த்து வந்த திரு. எஸ்.ராமசாமி படையாச்சியையும் அவர் மந்திரியாக்கினார். இப்படி எல்லோரையும் திருப்திபடுத்தும் வகையில் மந்திரிசபை அமைத்தது அவருடைய திறமைக்கு ஓர் எடுத்துக்காட்டாக அமைந்தது.
காமராஜ் முதலமைச்சரானதும் சட்டசபை விவகாரங்களில் அதிகமாக ஈடுபடாமல், அசெம்பெளியில் சி.சுப்பிரமணியம் அவர்களையும், மேல் சபையில் திரு.பக்தவத்சலம் அவர்களையும் முக்கியப் பங்கெடுக்கச் செய்தார்.
காமராஜ் ஒன்பது ஆண்டுக் காலம் இந்த ராஜ்யத்தின் முதலமைச்சராக இருந்தார். ஆனால் சட்டசபையில் அவர் எழுந்து பேசியது ஐந்தாறு சந்தர்ப்பங்களுக்கு மேல் இராது. இதனால் அவருக்குச் சட்டசபை விவகாரங்களில் அநுபவமோ, ஆற்றலோ இல்லை என்று சொல்லிவிட முடியாது. எல்லாப் பிரச்னைகளிலும் உள்ள சிக்கல்களையும், அவற்றுக்கு மாற்று என்ன என்பதையும் அவர் தெரிந்து வைத்துக் கொண்டுதான் சபைக்கு வருவார். ஆனாலும் பதில் சொல்லும் பொறுப்பைத் தாமே ஏற்றுக் கொள்ளாமல் சட்ட ஞானமும், வாதிக்கும் திறமையும் பெற்ற வழக் கறிஞர்களான சி.சுப்பிரமணியத்தையும், பக்தவத்சலத்தை யும் பயன்படுத்திக் கொண்டு அவர்களையும் பிரகாசிக்கச் செய்தார்.
சர்க்கார் இயந்திரங்கள் சரிவர இயங்குவதிலும் சிவப்பு நாடா முறையை மாற்றிக் காரியங்கள் வேகமாக நடை பெறச் செய்வதிலும் காமராஜ் தனிப்பட்ட முறையில் அக்கறை எடுத்துக் கொண்டார். சர்க்கார் அதிகாரிகள் சட்டத்தை எடுத்துச் சொல்லிக் காரியங்கள் வேகமாக நடப்ப தற்கு முட்டுக்கட்டை போடும் போதெல்லாம், “மக்களுக்காகச் சட்டமே தவிரச் சட்டத்துக்காக மக்கள் இல்லை” என்பதை அவர்களுக்கு ஞாபகப்படுத்தி, சட்டத்தில் முரண்பாடு இருந்தால் அதை மாற்றுவதற்கு முற்பட்டார்.
ஒரு சமயம் முதலமைச்சர் காமராஜ் தமிழ் நாட்டில் சுற்றுப் பயணம் செய்து கொண்டிருந்த போது அப்பளம் தயாரிப்பவர்கள் சிலர் அவரிடம் கூட்டமாக வந்து, “அப்பளத்துக்கு மட்டும் ஆறு பெர்ஸண்ட் விற்பனை வரி போடுகிறீர்களே, மற்ற உணவுப் பண்டங்களுக்கெல்லாம் இரண்டு பெர்ஸெண்ட்தானே? இது என்ன நியாயம்” என்று கேட்டார்கள்.
“அப்படியா சங்கதி? நான் சென்னைக்குப் போனதும் இது பற்றி விசாரிக்கிறேன்” என்று அவர்களுக்குப் பதில் கூறி விட்டு வந்தார்.
சென்னைக்குத் திரும்பியதும் சம்பந்தப்பட்ட மந்திரியையும், அதிகாரிகளையும் கூப்பிட்டு விசாரித்தார்.
“ஆமாம், பாக்கெட் செய்யப்பட்ட உணவுப் பண்டங்களுக்கு ஆறு பெர்ஸெண்ட் விற்பனை வரி என்று சட்டம் இருக்கிறது” என்றார்கள் அதிகாரிகள்.
“பாக்கெட் செய்யப்பட்ட உணவுப் பண்டங்கள் என்று சட்டத்தில் குறிப்பிட்டுள்ளது வேறு வகை உணவுப் பண்டங்களுக்குத்தான். அப்பளம் அதில் சேராது” என்று விளக்கினார் காமராஜ்.
அப்புறந்தான் அதிகாரிகளுக்கு விஷயம் புரிந்தது.
– தொடரும்…
– சிவகாமியின் செல்வன், சாவியில் தொடராக வெளிவந்த காமராஜரின் அரசியல் வாழ்க்கை, நான்காம் பதிப்பு: ஜனவரி 1990, மோனா பப்பிளிகேஷன்ஸ், சென்னை