வீனஸில் இருந்து ஒரு வாடாமல்லி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: October 30, 2014
பார்வையிட்டோர்: 15,621 
 

செங்கோட்டை பஸ் ஸ்டாண்ட் அது. அதிக ஜன நெருக்கடி இல்லாத உச்சிப் பகல் வேளையில் ஏறத்தாழ இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக அங்கு இருக்கும் ஓட்டலுக்கு வெளியே தூணை சுற்றி கட்டப்படிருக்கும் திண்டில் உட்கார்ந்து கொண்டு, வந்து போகும் எல்லா பஸ்களையும் பார்த்துக்கொண்டிருக்கும் அவளை அவ்வப்போது நோட்டம் விட்டுக்கொண்டிருந்தார் ஓட்டல் முதலாளி பகீரதன் பிள்ளை.

“என்னா வெயில் அடிக்கி மழைக்கான சுவடே இல்ல” என்றவாறே நுழைந்த ரெகுலர் கஸ்டமரான மாடசாமியை கூட அவர் கவனிக்கவில்லை. அதை கவனித்த மாட சாமி “என்னா?” என்று அருகில் வர, “அந்த பிள்ள, இங்கனயே ரெண்டு மணி நேரமாயிட்டு இருக்கி” என்று அவளை கைக்காட்டினார்.

“ஆமாவோய் போறவாறவனெல்லாம் அந்த பிள்ளையவே பாத்துக்கிட்டு போறானுவ. பொம்பள பிள்ளையளுக்கு நிம்மதியா நடமாட முடியுதா சொல்லும்”

“யாரையும் நம்ப முடியல இப்படி பஸ் ஸ்டாண்டுகள்ல வந்து இருந்து வேவு பாத்து புள்ள புடிக்குற கூட்டம் கூட இருக்கு. வர வர காலம் ரொம்ப கெட்டு போய்ட்டு இருக்கு. ராசா காலத்துல எல்லாம் இப்படி இருந்தது கிடையாது.”

“ஆமா, அப்பல்லாம் கள்ளமாரு எல்லாம் ராத்திரில தான் வீடு ஏறுவானுவ இப்பலாம் பகல்லயே வீட்டை ஒடைக்குறானுவ. அப்படித் தான் போன வாரம் பார்டர் கடை ஸ்டாப்புக்கிட்ட ஒரு வீட்ல பகல்லயே வீட்டுக்குல்ல கள்ளமாரு ஏறிட்டானுவ‌. அம்மி கொத்துற மாதிரி வந்த ஒரு குடும்பம் வந்துருக்கு. வீட்டுல இருந்த ஆளுவ கொஞ்சம் அசந்த நேரம் கத்திய காட்டி மிரட்டி செயினு கம்மல் எல்லாத்தையும் சுருட்டிட்டு போய்ட்டானுவ”

“என்னவோய் பயம் காட்டுயீரு நான் வேற வீட்டுக்குப் போணும் கடைய சாத்திட்டு இருந்தா நேரமாயிரும். அந்த பிள்ள வேற ஒருமாதிரி அங்கயும் இங்கயும் பாத்துட்டு இருக்கு”

*

சித்ராவுக்கு அப்போதைக்கு அந்த ஊரை விட்டு போனால் போதும். கிராம‌மும் இல்லாமல் நகரமும் இல்லாமல் இருக்கும் குலசேகரம் ஊரை விட்டுப் போனால் போதும் அவளுக்கு. கடந்த இரண்டு நாட்களாக இதுக்காக‌த் தான் பட்டினிப் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறாள். படிப்பதற்கு நாகர்கோவில் அனுப்பியதையே ஏதோ பம்பாய்க்கு அனுப்பியதை போல புலம்பும் அம்மாவிடம் வேலைக்காக மதுரைக்கு போகிறேன், அதுவும் ஊர் ஊராக அலையும் மார்க்கெட்டிங் வேலை என்று சொன்னது தான் போராட்டத்திற்கான மூலகாரணம்.

“இவள காலேசுக்கு அனுப்பிட்டு மோந்தியானதுக்கு அப்புறம் வயித்துல தீய கட்டிட்டு இருந்தது போதும்” என்று மீண்டும் ஆரம்பித்தாள் அம்மா.

“எம்மா, ஒருத்தனுக்கு கெட்டி கொடுத்ததுக்கு பொறவும் இப்டித் தான் புலம்பிட்டு இருப்பியா? கெட்டி கொடுத்தாச்சுன்னு நெனச்சுக்கோ”

“ஏன்டி பேச மாட்ட நீ, கெட்டி கொடுத்தாலும் மனசு அடிச்சுகிட்டுத் தான் இருக்கும்”

சித்ராவின் அப்பா தெருவில் இருந்து சைக்கிளை தள்ளிய படி வருவதை பார்த்ததும் இருவரும் அமைதியானார்கள்.

“ஒங்க மவளுக்கு, வேலைக்கு போணுமாம் அதுவும் கெழக்க அங்க மதுரைக்கு போணுமாம் என்னன்னு கேளுங்க” சித்ராவின் அப்பா வீட்டில் நுழைய அம்மா ஆரம்பித்தாள்.

இருவரையும் எந்த சலனமும் இல்லாமல் ஒரு பார்வை பார்த்துவிட்டு அவருடைய ரூமிற்குள் நுழைந்தார். ராசப்பன். குலசேகரம் கடைவீதியில் ரப்பர் மண்டி வைத்திருக்கிறார். ராசப்பனுக்கு வயது ஐம்பது. ரப்பர் மரத்தில் பால் வெட்டும் தொழிலில் ஆரம்பித்து இப்போது ரப்பர் மண்டி என்ற நிலைக்கு வளர்ந்திருக்கிறார். ரப்பர் மரத்தில் இருந்து எடுக்கப்படும் பாலை சேகரித்து அதை காயவைத்து ஷீட்டுகளாக மாற்றிக் கொண்டுவருவார்கள் விவசாயிகள். அந்த ஷீட்டுகளை வாங்கி மொத்த வியாபாரிகளிடம் விற்பது ராசப்பனின் வேலை. ராசப்பனின் மனைவி சாந்தம். ஒரே பெண் சித்ரா. ராசப்பன் சிறு வயதில் இருந்தே கம்யூனிஸ்டு கட்சியில் உறுப்பினர். ரப்பர் வெட்டும் தொழிலாளிகளுக்கான தொழிற்சங்கத்தை குலசேகரம் பகுதியில் ஆரம்பித்ததில் ராசப்பனின் பங்கு முக்கியமானது. தொழிற்சங்கத்திற்கு என்று ஒரு நூலகம் அமைத்து தொழிலாளர்கள் தினசரி செய்திகளையும் பல புத்தகங்களையும் படிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்துவதுண்டு. தனது பெண்ணையும் மிகச் சுதந்திரமான பெண்ணாக வளர்க்க விரும்பி அவளும் அவர் எதிர்ப்பார்த்தை போலவே வளர்ந்தாள். சுயமாக முடிவு எடுக்க கூடிய தைரியமும் தெளிவும் சித்ராவிடம் இருப்பதை கண்டு தன் நண்பர்களிடம் பெருமையாக கூறுவார். சித்ரா ஊரை விட்டு வெளியே போய் தன்னந்தனியாக வேலை செய்ய வேண்டும் என்ற ஐடியாவை அவளுக்கு கொடுத்ததே ராசப்பன் தான்.

உடைமாற்றி விட்டு வெளியே வந்தார்.

“இந்த மனியனுக்கு குட்டிய பத்தி ஒரு அக்கறையும் இல்ல, நாந்தான் கெடந்து பொலம்பிட்டு கெட‌க்கேன், ஏதாச்சும் வாயத் தொறந்து சொல்லியாரா பாரு”, அம்மா நிறுத்துவதாக இல்லை.

“எம்மா நான் வேலைக்குப் போவேன், நீ என்ன வேணாலுஞ் செஞ்சுக்க, எனக்கு இங்க இருக்க புடிக்கல”

“அவளுக்க இஷ்டத்து விடேன் அவள ஏன் போட்டு இப்படி பாடா படுத்திய, எம்மா சித்ரா நீ உனக்கு எங்க போய் வேல பாக்கணுமோ அங்க போய் உனக்கு புடிச்ச வேலைய பாத்துக்க” என்று அப்பா சொன்னதும் சித்ரா ஓடிப்போய் அவரை கட்டிக்கொண்டாள். அம்மா முறுமுறுத்துக்கொண்டே வடக்குப் பக்கம் சென்று விட்டாள்.

*

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் காலையிலேயே அவ்வளவு கூட்டம். இன்று வைகையில் கள்ள‌ழகர் ஆற்றில் இறங்கும் வைபவம். பேருந்து நிலையத்தினுள் வரும் பேருந்துகள் அனைத்திலும் நூல் நுழைய முடியா கூட்டம். நாகர்கோவில் போகும் பேருந்துகள் நிறுத்தப்பட்டிருக்கும் தெற்கு பாகத்தை நோக்கி சித்ரா கொஞ்சம் பதட்டத்துடன் வேகமாக நடந்து கொண்டிருந்தாள். வலது தோளில் ஒரு பெரிய ட்ராவல் பேக். இடது கையில் அவளது இரண்டு வயது பெண் குழந்தை அநன்யா. அவளது சேலையின் தும்பை பிடித்தவாறே நான்கு வயது மகன் அபிநேஷ் அவளை தொடர்ந்து கொண்டிருந்தான். வேகமாக குறுக்கே புகுந்து கடக்க முயன்ற‌ஒரு நடுத்தர வயது ஆள் அவளது ட்ராவல் பேக்கை தட்டிவிட லேசா நிலைகுலைந்து சமாளிக்க முயன்று தோற்று, கையில் இருந்த குழந்தையுட‌ன் கிழே விழுந்தாள். குழந்தையின் தலை தரையில் மோதி அந்த பகுதியே கலகலத்துப் போகும் அளவிற்கு பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தாள். சட்டென்று சிறு கூட்டம் கூடிவிட்டது. அபிநேஷ் கூட்டத்தை பார்த்து மிரண்டு நிற்கிறான். சித்ராவிற்கு ஒன்றும் விளங்கவில்லை, படபடப்பு அதிகமாக்கிக்கொண்டிருந்தது. ஒருவாறு சமாளித்து எழுந்து குழந்தையை தூக்கிக்கொண்டு ட்ராவல் பேக்கை எடுக்க முயன்ற போது கூட்டத்தில் இருந்த ஒரு பெண் வந்து உதவினாள். அபிநேஷ்க்கு கண்கள் கலங்கியிருந்தது. ஆனால் அவன் அழவில்லை. எதுவும் நடக்காதது போல் அதே பதட்டத்துட‌ன் மீண்டும் நடக்க ஆரம்பித்தாள்.

பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் பேருந்துகளில் கூட்டம் இல்லை, மதியத்திற்கு பிறகு நல்ல கூட்டம் இருக்கும். பெரிய விழாக்கள் நடக்கும் ஊர்களில் இது ஒரு பெரிய பிரச்சனை. அந்நகரில் வசிக்கும் சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கை ஓரளவு பாதிக்கப்படும். முன்பெல்லாம் விழாக்காலங்களில் யாரும் பணிக்கோ அல்லது வெளியூர்களுக்கோ போவதில்லை, ஆனால் இப்போது அப்படி முடிவதில்லை. பெரும் பண்டிகை நாட்களில் கூட வேலை செய்யும் நிறுவனங்கள் பெருகிவிட்டன. அன்றாடம் உழைத்து வாழும் மிகச் சாதாரண மக்கள் கூட பண்டிகை நாட்களில் திருவிழா காலங்களில் விடுமுறை எடுக்க முடிவதில்லை.

புறப்படத்தயாராக இருந்த மார்த்தாண்டம் செல்லும் பேருந்தில் குழந்தைகளோடு ஏறி அமர்ந்தாள். காலையில் வந்த தொலைப்பேசிச் செய்தியின் அதிர்ச்சியில் இருந்து இன்னும் அவள் மீள‌வில்லை

“ம்மா, சாக்கி” என்று அநன்யா பக்கத்தில் இருந்த கடையை கை காட்டி நச்சரிக்க ஆரம்பித்தாள். குழந்தைகளுக்கு காலையில் இருந்து எதுவும் சாப்பிடக்கொடுக்காதது ஞாபகம் வந்தது.

“பஸ்ஸு எப்ப எடுப்பீய‌, பிள்ளையளுக்கு ஒரு பிஸ்கட் பாக்கெட்டு வாங்கிட்டு வந்துரட்டா” என்று பேருந்து ஓட்டுனரை பார்த்து கேட்க, கீழே நின்றிருந்த பேருந்து நடத்துனர், “நீங்க எறங்காண்டாம், பைசாவ கொடுங்க” என்று கையை நீட்டினார். தனது பர்சை திறந்து நூறு ரூபாய் தாள் ஒன்று எடுத்து நீட்டினாள், “ஒரு நாலு மில்க் பிக்கீஸ்” என்றாள், “ம்மா, ஓரியோ வேணும்மா” என்றான் அபிநேஷ் “ஒரியோ இங்க இருக்காது,பொறவு வாங்கித் தாரேன்” . பிஸ்கட்டோடு வந்த நடத்துனர் பேருந்தில் ஏற அது புறப்பட்டது.

*

“எவ்வளவு நேரம் தான் இங்கயே இருப்பது, செல்போன்ல‌சார்ஜும் தீர்ந்து விட்டது. முன்பின் தெரியாத ஊர். கையில் சுத்தமாக காசு இல்ல. என்ன செய்ய..” வந்து போகும் பேருந்துகளை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாலும் சித்ராவின் மனதினுள் இது தான் ஓடிக்கொண்டிருந்தது. கையில் கட்டியிருந்த கடிகாரத்தைப் பார்த்தாள் மணி ஒன்றரை. “இன்னும் எவ்வளவு நேரம் தான் இப்படியே இருப்பது. செல்போனில் சார்ஜ் இருந்தால் கூட ராஜேஷைக் கூப்பிட்டு இருக்கலாம் என்ற நினைவு வர ராஜேஷ் மீதான கோபம் சட்டென்று எகிறத் துவங்கியது. நல்ல வேள இப்ப‌இந்த நிலையில‌ராஜேஷிடம் பேசல”.

சுற்றும் முற்றும் பார்த்தாள் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆட்கள் நின்று கொண்டிருந்தார்கள். மெதுவாக எழுந்து பேருந்து நிலையத்தில் இருக்கும் கழிப்பறைக்கு சென்று விடலாம் என்று நினைத்தாள். ஏந்தான் பொம்பளைகளுக்கு மாசாமாசம் இந்த கொடுமையோ. மனதில் கறுவிக்கொண்டாள். நாள் தப்பிய மாதவிடாய் தான் சித்ராவை இப்போது பாடாய் படுத்துகிறது. மெடிக்கல் ரெப்பாக இருப்பதால் அலைச்சல் என்பது தவிர்க்க முடியாதது. ஆண்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் இந்த துறையில், சவாலாக ஏற்றுத்தான் பணிக்கு வந்தாள். பணிக்கு சேர்ந்த நான்கே வருடங்களில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி என்று மூன்று மாவட்டங்களின் விற்பனையை மேற்பார்வை செய்யும் நிலைக்கு வந்துவிட்டாள். பெரும்பாலும் தனிமைப் பயணம் தான். பயண அலைச்சல் உணவு என்று உடலளவில் பாதிப்புகளுக்கு குறைவில்லை. கடந்த இரண்டு நாட்களாக கடும் அலைச்சல். திருச்செந்தூர், தூத்துக்குடி, நாகர்கோவில் என்று போய்விட்டு தினமும் மதுரைக்கு வந்து கொண்டிருந்தாள். கடந்த வாரமே வந்திருக்க வேண்டிய மாதவிடாய் தள்ளிப் போனது. தேதியை காலண்டரில் குறித்து வைக்கும் பழக்கம் உண்டு, வெளியூர் பயண நாட்களாக இருந்தால் கூடுதலான மாற்றுத் துணி. கூடுதல் நேப்கின் எடுத்து வைக்க இந்த பழக்கம் சித்ராவிற்கு உதவும். இரண்டு நாள் அலைச்சலில் அதையும் மறந்துவிட்டாள்

கடந்த வாரத்தில் ஒரு நாள் காலண்டரை பார்த்த ராஜேஷ் “என்னடா இந்த மாசம் விசேசமா?” என்று காதருகில் வந்து மெல்ல கூற, “போடா போடா” என்று அவனை மனம் மகிழ்ந்து தள்ளி விட்டது இப்போது நினைவிற்கு வர எரிச்சலை ஏற்படுத்தியது.

காலையில் வேலைக்கு செல்லும் முன், “சித்ரா, போய்ட்டு ராத்திரி வந்துருவேல்ல, உன் பர்ஸ்ல இருந்து ரெண்டாயிரம் ரூபா எடுத்துக்குறேன்”

“ராஜேஷ், சும்மா இரு. வெளியூர் போகும் போது என் கிட்ட இருந்து இப்படி காசு புடுங்காதன்னு எத்தன தடவ சொல்றது, நான் வாங்குற சம்பளம் எல்லாத்தையும் எடுத்துக்குற. டிராவலுக்கு கிடைக்குற அலவன்சயும் இப்படி எடுக்காத”

“என்ன நீ ரொம்ப பேசுற, சென்னைல இருந்து இன்னைக்கு ராத்திரி ப்ரண்டு வரான், அவனுக்கு செலவு பண்ண நான் பிச்சையெடுக்கணுமா?

“நீ பிச்சை எல்லாம் எடுக்க வேண்டாம் சாமி, எல்லாத்தையும் கொண்டு போ, ப்ரெண்டோ எவனோ போய் கொண்டாடு. வாரத்துக்கு ஒரு நாளாச்சும் கோர்ட்டுக்கு போறியா ? எவ்ளோ நாளைக்குத் தான் நான் இப்படி உனக்கு உழைச்சு கொட்டுறது. ஒரு மாசமாச்சும் நான் சம்பாதிக்குற பணத்த முழுசா பாத்துரப்பனா சொல்லு. ப்ரென்ட்ஸ் பார்ட்டின்னு எவ்ளோ நாளைக்கு சுத்திட்டு இருக்க போற. எவ்ளோ ஆசை ஆசையா நான் இந்த வேலைக்கு வந்தேன். எவ்ளோ கஷ்டப்பட்டுட்டு இருக்கேன்னு உனக்கு நல்லாவே தெரியும், தெரிஞ்சும் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம இப்படி நடந்துக்குற. சம்பளத்த தான் புடுங்கிக்கிறன்னா இப்ப ட்ராவல் அலவன்சையும் எடுத்துக்குற. நான் வேலைக்கு எல்லாம் போகல, நீ போய் சம்பாதிச்சு கொண்டு வா. ”

ராஜேஷ் எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் சித்ராவின் பர்சை திறந்து பணத்தை எடுத்துக்கொண்டு வெளியே கிளம்பிவிட்டான்.

பதினொரு மணிக்கு செங்கோட்டையில் இருக்க வேண்டும். தென் தமிழகத்தில் உள்ள‌பிரபல மருத்துவர்களின் ஒன்று கூடல் அன்று நடைபெற உள்ளது. தனிப்பட்ட நிகழ்வு தான். ஆனால் அவளது நண்பரான மருத்துவர் ஒருவரின் அழைப்பில் பேரில் செல்கிறாள். அவளது நிறுவனத்தின் புதிய மருந்து வகைகளை அறிமுகப்படுத்த இந்த சந்திப்பு மிக முக்கியமானது. ராஜேஷின் செயல் ஒருவித ஒவ்வாமையை ஏற்படுத்த, பர்ஸை கூட திறந்துப்பார்க்காமல் பையை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டாள்.

ராஜேஷுடனான வாழ்க்கையை மதுரையில் துவங்கி சரியாக ஒரு வருடம் ஆறு மாதங்கள் மாதங்கள் ஆகிறது. சித்ராவும் ராஜேஷும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் தான். வழக்கம்போல வீட்டாரை எதிர்த்து கொண்டுச் செய்த பதிவு திருமணம். ஒரு முறை அலுவல் விசயமாக சென்னை சென்றிருந்த போது, பொது நண்பர் மூலமாகத் தான் ராஜேஷ் அறிமுகம். ஆரம்பத்தில் நல்லதொரு நட்பாக தொலைபேசி, இணையம், எப்போதாவது சந்திப்பு என்பதாய் வளர்ந்தது. ராஜேஷ் பேசும் விசயங்கள் குறிப்பாக பெண்ணியம், பெண் விடுதலை போன்றவைகளால் கவரப்பட்டு இவனுடன் வாழ்ந்தால் தான் சுதந்திரமாக இருக்காலம் என்ற எண்ணத்தில் தனது காதலை சொல்லி திருமணம் செய்து கொள்ளலாமா என்று சித்ரா எண்ணிக்கொண்டு அதை சொல்ல தயங்கித் தயங்கி இருந்த நேரத்தில், ஒரு நாள் ராஜெஷே அவளிடம் தனது காதலை சொன்னான். தானும் அவனிடம் சொல்ல நினைத்ததை அவளும் சொன்னாள். ராஜேஷ் அப்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் ஒருவரிடம் பயிற்சி வழக்கறிஞராக பணியாற்றிக் கொண்டிருந்தான். போதிய அல்லது நிரந்தர வருமானம் இல்லை. தனது சொந்த ஊரான கரூரை சேர்ந்த நண்பர்கள் இருவருடன் ஒரு வீட்டில் தங்கியிருந்தான். கிடைக்கும் பணம் வீட்டு வாடகைக்கும் உணவிற்கும் மட்டுமே சரியாக இருக்கும். சித்ராவும் தற்போது உடனடியாக சென்னைக்கு மாற்றலாக முடியாது என்பதால் திருமணத்தை சில காலம் தள்ளி வைக்கலாம் என்று முடிவு செய்தார்கள்.

சித்ரா தனது வீட்டில் தான் ராஜேஷை காதலிக்கும் விஷயத்தைச் சொன்னாள். அன்று அப்பா எதுவுமே பேசவில்லை. ஆனால் அம்மா பெரிய ஆட்டமே போட்டுவிட்டாள். வேலைக்குப் போக வேண்டாம் என்றாள். அன்று மதிய நேரத்தில் வந்த சித்ரா மாலையே கிளம்பிவிட்டாள். அப்போதும் அப்பா எதுவும் சொல்லாமல் இருந்தது அவளால் தாங்கிக் கொள்ளமுடியவில்லை. இரண்டொரு நாளில் அம்மா போன் செய்து சித்ராவிற்கு வேறு பையனை பார்க்க வேண்டும் என்று சொல்லி அவளுடைய புகைப்படம் அனுப்பித் தருமாறு கேட்க போனை துண்டித்துவிட்டாள். ராஜேஷுக்கு போன் செய்து தான் உடனடியாக வருவதாக சொல்லி அன்றிரவே சென்னைக்குச் சென்று விட்டாள். வீட்டில் நடந்த அனைத்தையும் சொல்ல, தற்போதைக்கு பதிவு திருமணம் செய்து கொள்ளலாம் என்று இருவரும் முடிவு செய்தார்கள். அடுத்த நாள் வடபழனி கோவிலில் ராஜேஷின் நண்பர்கள் முன்னிலையில் மாலை மாற்றி திருமண ரசீது பெற்றுக் கொண்டு அன்றே சைதாப்பேட்டை பதிவாளர் அலுவலகத்தில் திருமணத்தை பதிவும் செய்தார்கள். பதிவாளர் அலுவலகத்தில் ராஜேஷின் நண்பன் ஒருவன் இருந்ததால் எல்லாம் நல்லபடியாக முடிந்தது.

சித்ரா மதுரையிலும் ராஜேஷ் சென்னையிலுமாக நான்கைந்து மாதங்கள் சென்றது. சித்ரா வார இறுதி நாட்களில் சென்னைக்கு வந்து சென்று கொண்டிருந்தாள். அதற்கேற்றாற் போல அவளுக்கு அலுவலக வேலைகளும் அமைந்தது. வந்தால் ராஜேஷ் தங்கியிருக்கும் வீட்டில் தங்குவாள். அந்த நாட்களில் ராஜேஷின் நண்பர்கள் வேறு இடங்களில் தங்கிக் கொள்வார்கள். ஆனால் இது நீடிக்க வில்லை. ராஜேஷின் நண்பர்கள் தங்களால் இப்படி அடிக்கடி வெளியே போக முடியாது என்றும் தாங்கள் வேறு வீடுப் பார்த்துக்கொள்ள இருப்பதாகவும் எரிச்சலுடன் ஒரு நாள் திடீரென்று கூற‌. ராஜேஷ் சற்று அதிர்ந்தான். அவனால் தனியாக ஒரு வீட்டிற்கு வாடகை கொடுக்க முடியாது அதற்கான வருமானம் இல்லை. சித்ராவை அழைத்து விசயத்தை சொல்ல, அவள் மதுரைக்கு அழைத்தாள். மதுரை உயர்நீதி மன்றத்தில் பணியாற்றலாமே என்று யோசனையும் தந்தாள். ராஜேஷ்க்கு அந்த யோசனை பிடிக்கவில்லை. சென்னையை விட்டு போக அவனுக்கு மனம் இல்லை. ஆனாலு இப்போது வேறு வழியில்லை. அவன் பணியாற்றும் மூத்த வழக்கறிஞரின் நண்பரிடம் பணியாற்ற சிபாரிசு கடிதம் பெற்று கொண்டு மதுரைக்கு கிளம்பிவிட்டான். மூன்றே மாதங்களில் மதுரையில் அவன் பணியாற்றிய வழக்கறிஞர் ராஜேஷை வர வேண்டாமென்று சொல்லிவிட்டார். அவன் சரியான நேரத்திற்கு வருவதில்லை வழக்குகளின் கட்சிகாரர்களிடம் சரியாக பேசுவதில்லை என்று காரணங்களை அடுக்கினார். ராஜேஷும் வேண்டா வெறுப்பாகத் தான் மதுரையில் இருந்தான். ஆனால் அவன் நிறுத்தப்பட்டதற்கான காரணம் அவன் வேறு சாதி என்பதை பின்னர் அறிந்து கொண்டான். சில காலம் வீட்டில் முடங்கிக் கிடந்தவன் புதிய நண்பர்களை தேடிக்கொண்டான். சித்ராவிற்கு ராஜேஷ் தொடர்ந்து வேலைக்கு செல்லாமல் இருப்பது ஆரம்பத்தில் ஒன்றும் பெரிய விசயமாகவில்லை ஆனால் நாட்கள் செல்ல அவளுடைய சம்பளம் முழுவதும் அவனுடைய செலவுகளுக்கே போதுமானதாக இருந்தது. அவளின் வங்கி ஏடிஎம் அட்டையை அவனே எடுத்துக்கொண்டான். சிறு சிறு சண்டைகள் வர ஆரம்பித்தன. நட்பாக காதலாக இருக்கும் போது பேசிய இருந்த ராஜேஷிற்கும் இப்போது ராஜேஷிற்கும் நிறைய வித்தியாசங்களை உணர்ந்தாள் குறிப்பாக அவன் பேசுவதற்கும் அதன் படி நடப்பதற்கும் தொடர்பே இல்லாமல் இருந்தது.

“எம்மா புனலூருக்கு போற பஸ் எத்தன மணிக்கு” என்றவாறே ஒரு வயதான பாட்டி அருகில் வந்தமர சித்ரா தன்னிலைக்கு வந்தாள்.

“தெரியலயே பாட்டி, அங்க டைம் ஆபீஸ்ல கேட்டுபாருங்க” என்று ஒரு அறையை கைக் காட்டி சொன்னாள்.

“அங்க கேட்டுட்டு தான் வாறேன். இப்ப வரும்னு சொல்றானுவ, நேரத்த சொல்ல மாட்டேங்கானுவ, காலங்காத்தால திருச்செந்துர்ல இருந்து புறப்பட்டேன். காலைல சாப்டது. வயிறு பசிக்குது, ஓட்டல்ல போய் சாப்டலாம்னா பஸ்ஸு வந்துட்டா என்னச் செய்ய?” என்று அந்த வயதான பாட்டி பேசத் தொடங்கினாள். அவர் சாப்பாடு பற்றிச் சொன்னதும் தான் சித்ராவிற்கு தான் இன்னும் சாப்பிடாமல் இருப்பது நினைவிற்கு வந்தது.

காலையில் அவளும் சாப்பிடவில்லை. பேருந்து நிலையம் வந்த பின் தான் பர்சை திறந்து பார்த்தாள். இரண்டு நூறு ரூபாய் தாள்கள், மூன்று பத்து ரூபாய் தாள்கள் கொஞ்சம் சில்லறை இருந்தது. ராஜேஷ் இரண்டாயிரம் ரூபாயை எடுத்திருக்கிறான். பேருந்து செலவிற்கு கூட வைக்கவில்லை. எரிச்சல் கோபம் என்று கலந்து தலைவலி ஏற்படுவது போல் தோன்றியது. இதே ராஜேஷ் தான் மதுரைக்கு வந்த புதிதில் தினமும் வெளியே கிளம்பும் முன் பர்சில் போதிய பணம் உள்ளதா என்று சரிபார்ப்பான். குறைவாக இருந்தால் தன்னிடம் இருக்கும் பணத்தை எடுத்துத் தருவான். மாட்டுத் தாவணி வந்து செங்கோட்டை செல்லும் பேருந்துகள் நிற்கும் பகுதியில் அப்போது புறப்பட்டுக்கொண்டிருந்த பேருந்து ஒன்றில் ஏறினாள். இடப்பக்கமாக இருந்த இருவர் அமரும் இருக்கையில் அமர்ந்தவள், பர்சை எடுத்து டிக்கெட்டுக்கான பணத்தை எடுத்தாள். திருநெல்வேலியில் இருக்கும் அவளது நிறுவன ஊழியரை ஏற்கனவே செங்கோட்டைக்கு வரச்சொல்லிவிட்டாள் அவரிடம் இருந்து தேவைப்பட்டால் பணம் வாங்கிக்கொள்ளலாம் என்று

நினைத்துக்கொண்டாள்.

“சாப்பிட வாறியாம்மா, எனக்கு தனியா ஓட்டலுக்கு போணும் நீயும் வாறியா?” என்று பாட்டி அழைத்தாள். சித்ராவிற்கு அந்த இடத்தை விட்டு நகர மனமில்லை. உடையில் கறை பட்டிருக்குமோ என்ற எண்ணம் மேலும் மேலும் உறுத்திக்கொண்டே இருந்தது. வேறு உடையும் இல்லை.

“இல்ல பாட்டி நீங்க போய்ட்டு வாங்க” என்று மறுத்தாள். அந்த வயதான பெண்ணிடம் நேப்கின் வாங்க காசு கேட்கலாமா என்று நினைத்தாள். பெண் தான் என்றாலும் முன் பின் தெரியாதவரிடம் எப்படி கேட்பது, குழப்பமடைந்து கொண்டே இருந்தாள்.

“பரவால்ல வாம்மா என்ன உனக்க ஆச்சியா நெனச்சிக்க, நான் சாப்பாடு வாங்கித் தாறேன்” என்று பாட்டி மிகவும் வாஞ்சையாக கூற சித்ராவிற்கு ஏனோ அம்மாவின் ஞாபகம் விட்டது. மாதவிடாய் நாட்களில் அம்மா சத்துள்ள உணவுகளை தருவாள் குறிப்பாக புரதச் சத்தும் இரும்புச் சத்து இருக்கும் உணவுவகைகள். பச்சைப்பயிற்றை அவித்து தருவாள். பச்சை முட்டையை காலையிலேயே குடிக்கச் சொல்வாள். பேரீச்சம் பழம் வாங்கித் தருவாள். அம்மாவை விட்டு வந்த பிறகு அது எல்லாம் முடிந்து போயிற்று. சமயத்திற்கு சாப்பிடுவதே பெரிய விசயமாக இருக்கிறது. இந்த பாட்டி மீண்டும் அம்மாவை நினைவுபடுத்துகிறாள். பசி உயிர் போகிறது அவருடன் சென்று சாப்பிட ஆசை தான். ஆனால் சவுகரியமாக செல்ல முடியாது. பாட்டியிடம் காசு கேட்டு நேப்கின் வாங்க தயங்கினாள். திடீரென்று ஒரு யோசனை தோன்றயது

” கொஞ்சம் இருங்க பாட்டி, இதோ வாறேன்” என்று எழுந்த சித்ரா, தனது தோள் பையை பின் பக்கம் குறுக்காக மாட்டி மறைக்கும் படி விறு விறுவென கழிப்பறை நோக்கி நடந்தாள். உள்ளே சென்றதும் துர்நாற்றம் குடலைப் புரட்டியது. மூக்கைப் பொத்திக் கொண்டு சிறிது நேரம் நின்றவள். சட்டெனென தோளில் தொங்கிக் கொண்டிருந்த துப்பட்டாவை உருவினாள்.

“வாங்க பாட்டி சாப்பிட போலாம்” என்றவாறே வந்த போது சித்ராவின் முகத்தில் ஒரு தெளிவு இருந்தது. ஒரு மலர்ச்சி. இத்தனை நேரம் படந்திருந்த அந்த மென்சோகம் காணாமல் போயிருந்தததையும் தோளில் இருந்த துப்பட்டா காணாமல் போயிருந்ததையும் அந்த வயதான பாட்டி காணத் தவறவில்லை ஆனால் அவர் எதுவும் கேட்கவில்லை.

*

பேருந்து திருமங்கலம் பைபாஸில் நுழையும் போது அநன்யா தூங்கிவிட்டிருந்தாள். அபினேஷ் வேடிக்கைப்பார்த்துக்கொண்டிருந்தான். சித்ராவின் மனதில் கடந்த நான்கு வருடங்களாக இருந்த பாரம் சற்று விலகியது போல் இருந்தது. பேருந்திற்கு இணையாக தானும் அதனுடன் பறப்பது போல உணர்ந்தாள். எவ்வளவு சண்டைகள் எவ்வளவு வலிகள். காதலன் என்பதற்காக எவ்வளவு தான் பொறுமையாக இருப்பது. சுதந்திரமான ஒரு வாழ்விற்காக தான் அன்பான அப்பாவையும் அம்மாவையும் பிரிய நேரிட்டது. ஆனால் அந்த சுதந்திரம் என்பது நீண்ட காலம் நீடிக்கவில்லை.

நான்கு வருடங்களுக்குப் முன் செங்கோட்டை பேருந்து நிலையத்தில் அன்று தவித்த தவிப்பை அவளது மனதில் நீங்கா ரணமாக மாற்றியிருந்தது. அன்று கையில் காசில்லாமல் தவித்து பின்னர் மதுரைக்கு திரும்பி வருவதற்கு வயதான பாட்டியிடம் தன்னிடம் காசு இல்லை என்று கூறி அவரிடம் இருந்து பேருந்து கட்டணத்திற்கு மட்டும் பணம் வாங்கினாள். அன்று இரவு மிக தாமதமாக மதுரைப் பேருந்து நிலையத்தில் வந்து இறங்க, கோமதி நகர் செல்ல ஆட்டோவிற்கு காசில்லாமல் அன்று காலை வரை பேருந்து நிலையத்திலேயே காந்திருந்திருந்தால், அந்த கோவம் முழுவதும் வீட்டிற்கு சென்றவுடன் ராஜேஷிடம் கொட்டித் தீர்க்க அன்றிரவே ராஜேஷ் சென்னைக்கு கிளம்பிவிட்டான். இரண்டு மாதங்களாக தொடர்பில்லை. சித்ரா பலமுறை போன் செய்தும் ராஜேஷ் போனை எடுக்கவில்லை. ஒரு கட்டத்தில் சென்னைக்கே கிளம்பி விட்டாள். ராஜேஷின் நண்பர்களை தொடர்பு கொண்டு தான் சென்னைக்கு வருவதாகவும் ராஜேஷை பார்க்க வேண்டும் என்று கூறினாள். அவர்கள் அவளை இப்போது வர வேண்டாம் என்று கூறிப்பார்த்தார்கள் ஆனால் சித்ரா கேட்பதாக இல்லை. ஆனால் யாரும் அவன் எங்கிருக்கிறான் என்று சொல்லவில்லை. இரண்டு நாட்களில் ராஜேஷ் இருக்கும் இடத்தை கண்டும் பிடித்து விட்டாள்.

அன்று காலையிலேயே ராஜேஷ் இருக்கும் இடத்திற்கு சித்ரா புறப்பட்டு விட்டாள். அது ஒரு மூன்றடுக்கு கொண்ட அப்பார்ட்மென்ட். கீழே காவலாளி யாரும் இல்லை. நாய்கள் ஜாக்கிரதை என்ற பலகை மட்டும் தொங்கியது. ஆனால் நாய் எதுவும் இருப்பதற்கான அறிகுறி இல்லை. கேட்டை திறந்து கீழ் வீட்டின் அழைப்பு மணியை அழுத்த, ஒரு பெண் வந்து கதவை திறந்தாள்.

“இங்க அட்வகேட் பிரீத்தா வீடு எது?”

“செகன்ட் ப்ளோர், லெப்ட்ல முதல் வீடு”

லிப்ட் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. மாடிப்படிகளில் ஏறினாள். பிரீத்தா ராஜேஷின் கல்லூரித் தோழி. ஏற்கனவே சித்ராவிற்கும் அறிமுகமானவள். மதுரைக்கு ஒருமுறை வந்திருந்த போது அவர்களது வீட்டில் தான் தங்கினாள். ஆனால் சித்ராவுடன் அதிகமாக பேச மாட்டாள். அழைப்பு மணியை அழுத்த சத்தம் எதுவும் எழவில்லை. கதவை தட்டிப்பார்த்தாள். முதலில் சத்தம் எதுவும் வரவில்லை. மீண்டும் பலமாக தட்ட‌

“யாரது”

மீண்டும் கதவை தட்டும் சத்தம் கேட்டு, “யாரது” என்று கேட்டுக்கொண்டே கதவை திறந்த பிரீத்தா அதிர்ந்து நின்றாள்.

“யாருடி பிரீத்தா அது, நேரங்கெட்ட நேரத்துல” என்று ராஜேஷ் உள்ளேயே இருந்து வர, சித்ராவை பார்த்ததும் அவனும் அதிர்ந்து நின்றான். இருவரும் ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்டனர். சித்ராவால் அங்கிருந்த சூழ்நிலையை புரிந்து கொள்ள முடிந்தது.

“ராஜேஷ், உன்கிட்ட பேசி உன்ன கூட்டிட்டு போலாம்னு தான் வந்தேன். ஆனா இப்ப இந்த நொடில அந்த முடிவ மாத்திக்குறேன். இந்த ரெண்டு வருசத்துல நாம் எவ்வளவோ சண்ட போட்டுருக்கோம். ஆனா உன் மேல இருந்த காதல் குறைஞ்சது இல்ல. அன்னைக்கு நடுத்தெருவுல நின்னு எவ்வளவு கஷ்டப்பட்டேனு எனக்குத் தான் தெரியும். அதோட வலி கொஞ்சமாச்சும் நீ அனுபவிச்சுருக்கியா. அந்த கோவத்துல தான் அன்னைக்கு வந்து உன்கிட்ட சண்ட போட்டேன். நீ பேசாம வந்துட்ட. இன்னைக்கு காலைல வர உன் கிட்ட சண்ட போட்டது வலிச்சுது ஆனா இப்ப இல்லை. இனிமே நீ சந்தோசமா இரு” என்று படபடவென சொல்லிவிட்டு கிளம்பினாள். சட்டென்று திரும்பி பிரீத்தாவை பார்த்துப் புன்னகைத்தாள். வேறு எதுவும் பேசாமல் அங்கிருந்து வந்து விட்டாள். சாதாரணமாக சட்டென்று கலங்கும் சித்ரா மிக திடமாக இருக்க வேண்டும் என்று தன்னைத் தானே உறுதிப்படுத்திக் கொண்டாள். தனது அறைக்கு வந்து பொருட்களை எடுத்துக்கொண்டு மதுரைக்கு புறப்பட்டாள்.

அம்மாவிடமும் அப்பாவிடமும் பேச வேண்டும் என்பது போல் இருந்தது. ராஜேஷ் உடனான திருமண பதிவிற்குப் பிறகு ஊருக்குப் போகவே இல்லை. போனால் தன்னால் மீண்டும் வரமுடியுமா அல்லது அப்பா அம்மாவை நேர்கொள்ளும் சக்தி இருக்குமா என்று பல முறை நினைத்து கடந்த இரண்டு வருடங்களாக காலத்தை கடத்தி வந்தவளுக்கு இன்று அம்மாவை பார்க்க வேண்டும் என்பதாய் தோன்றியது. ஆனால் ராஜேஷை விட்டு விலகியபின் அவர்களை பார்க்கச் செல்வது என்பது அவர்களை காயப்படுத்தும் என்றும் நினைத்தாள். அதனால் அந்த முடிவை மாற்றினாள். மதுரைக்கு வந்தவள் வேலையில் கவனம் செலுத்தத் துவங்கினாள். ராஜேஷிடம் இருந்து சில மாதங்களுக்கு எந்த தகவலும் இல்லை. ஒரு நாள் ஒரு புதிய எண்ணில் இருந்து அழைப்பு வந்தது, ராஜேஷ் என்பதை அறிந்து துண்டித்து விட்டாள். ஆறு மாதங்களுக்குப் பிறகு ஊருக்கு போனாள். நடந்ததை எல்லாம் அம்மா அப்பாவிடம் சொல்ல, அம்மா அழுது தீர்த்தாள். இப்படி வாழ்க்கையை இழந்துவிட்டு வந்து நிற்கிறாளே என்று புலம்பினாள். அப்பா அம்மாவிடம் சண்டை பிடித்தார். தனது மகள் எடுத்திருப்பது சரியான முடிவு என்று உறுதியாக சொன்னார்.

அம்மா அப்பாவை தன்னுடன் வந்து இருக்குமாறு அழைத்தாள். அது முடியாது என்று அவர்கள் சொன்ன காரணம் அவளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. பக்கத்து வீட்டில் இருந்த நாகப்பனின் குடும்பம் ஒரு விபத்தில் சிக்க அக்குடும்பத்தில் ஒரு நான்கு மாத குழந்தையை தவிர அனைவரும் இறந்திருக்கிறார்கள். அந்த நான்கு மாதக் குழந்தை இப்போது மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறது. அந்த குழந்தையை ராசப்பனும் சாந்தமும் தத்தெடுக்க முடிவு செய்திருக்கிறார்கள். இதைக் கேட்டதும் அவளது வருத்தம் எல்லாம் பறந்து போனது. குழந்தையுடனே அவர்களை மதுரைக்கு அழைத்தாள். சித்ராவின் கோரிக்கையை அவர்களால் தட்ட முடியவில்லை. குழந்தைக்கு அபிநேஷ் என்று பெயரிட்டார்கள். அம்மா அவ்வப்போது சித்ராவை திருமணம் செய்ய சொல்வாள். முடியவே முடியாது என்று மறுத்துவிடுவாள். அப்பா அது குறித்து பேசுவதே இல்லை. இரண்டு வருடத்தில் ஒரு இல்லத்தில் இருந்து அநன்யாவையும் வீட்டிற்கு கூட்டி வந்தார்கள்.

ராசப்பன் மதுரைக்கு வந்த பின்னர் கடையை தன்னுடைய நண்பரிடம் ஒப்படைத்துவிட்டு வந்தார். மாதம் ஒரு முறையோ இரு முறையோ வந்து பார்த்துவிட்டுச் செல்வார். நேற்று காலையில் மதுரையில் இருந்து ராசப்பனும் சாந்தமும் புறப்பட்டார்கள். ஊருக்கு வந்தவர்களிடமிருந்து எந்த தகவலும் இல்லை.

விடியற்காலையில் ஒரு அழைப்பு,

“ஹலோ, நாங்க நாருவோல் கவர்மென்ட் ஆசுபத்திரில இருந்து பேசுயோம், இது ராசப்பனுக்க மகளா”

“ஆமா, என்ன விசயம்” சித்ரா பதட்டப்பட”

“ஒங்க அப்பாவும் அம்மாவும் இங்க அட்மிட் ஆயிருக்காவ, நேத்தைக்கு ஒரு பஸ் ஆக்ஸிடன்ட், இப்ப தான் உங்க அம்மைக்கு நெனவு வந்துச்சு”

“அப்பா ?”

சித்ராவிற்கு சட்டென்று எல்லாமே இடிந்து விழுவதைப் போல இருந்தது. மீண்டும் தான் யாருமற்று தனித்து விட்டப்பட்டதை போல உணர்ந்தாள். தூங்கிக் கொண்டிருந்த குழந்தைகளை எழுப்பி தயார் செய்தாள். சென்னையில் இருக்கும் மேலதிகாரிக்கு போன் செய்து விபரத்தை கூறி விடுப்பு என்று சொல்லிவிட்டு அவசரம் அவசரமாக கிளம்பிவிட்டாள்.

விருதுநகர் பழைய பேருந்து நிலையத்தில் பேருந்து நுழைந்து வெளியே வந்து கொண்டிருந்தது.

“அம்மா அங்கப் பாரு” என்று அபிநேஷ் சித்ராவை கூப்பிட்டு காண்பித்த இடத்தில், ஒரு போஸ்டரில் ராஜேஷ் சிரித்துக் கொண்டிருந்தான்.”பெண்ணுரிமைகளும் சட்டமும்” என்று தலைப்பிலான‌கருத்தரங்கத்தின் போஸ்டர் அது. சித்ராவின் மனதில் இருந்த துயரைத்தையும் தாண்டிய ஒரு நக்கல் சிரிப்பு அவள் முகத்தில்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *