கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: December 18, 2013
பார்வையிட்டோர்: 10,528 
 

ஏரிக்குள்ளதான் அந்த கோவில் இருக்குது… பெரியாண்டவர் கோவில்.. அந்த இடம் ஏரி நீர் பிடிப்பின் கடை பகுதின்றதால அந்தப் பக்கம் எப்பவுமே ஆள் நடமாட்டம் இருக்கிறதில்லை..ஐப்பசி, கார்த்தியில.ஏரி கலங்குசாயுங் காலங்கள்ல, அலை கோவிலு அடிய தொட்டுட்டுப் போவும்.. அங்க வெறிச்சோடி கிடக்கும் அமானுஷ்ய அமைதி, .பிரமாண்டமா தலைவிரிச்சி நிக்கும் வேப்பமரம், அதுக்குக் கீழ மண்ணுல சொருவி வெச்சிருக்கும்.வேல் கம்புங்க, ,திரிசூலங்க, எல்லாம் ஒருமாதிரி மனசில காபரா குடுக்குது. வேப்பமரத்துக்குக் கீழ இடுப்பு ஒசரத்துக்கு பெருசா புத்து வளந்து வருது. அதும்மேல மஞ்சளையும்,குங்குமத்தையும் கொட்டி வெச்சிருந்தாங்க. நாலு பக்கம் கல்தூணுங்க நட்டு, மேலே தகரத்தில் கூர கொட்டாயி. மொத்தமே பத்தடிக்கு பதினைஞ்சி அடிதான். .பின் பக்கம் மறப்புக்கு ஒரு தட்டி. அவ்ளோதான். இதான் கோவில்.. ரொம்ப சக்தியான தெய்வம்.உம்…சக்தி இல்லன்னா இந்த எடத்தில திடீர்னு வந்து புத்து வளருமா?. தோற்றத்தில இன்னா இருக்குது?. எல்லாம் நம்பிக்கையிலதான்ற மாதிரி உள்ளே ஒரு சாண் ஒசரத்தில,முழ உசரத்திலன்னு கல்லுங்க நட்டிருக்கு.. அதான் கன்னிமாருங்க.. வலப்புறம் இருப்பது முப்பிடாரியம்மன்,இடப்புறம் கருப்புசாமி, நடுவால பிரதானமாய், சராசரி மனுச ஒசரத்தில, மண்ணால செஞ்சி, வர்ணம் பூசி, ருத்ர காளியாய் அங்காளபரமேஸ்வரி உக்காந்துக்கிணு இருக்கா. கண்ணுங்கள உருட்டி,நாக்கைத் துருத்திக்கிட்டு, வாயின் இரு பக்கங்களிலும் கோரைப் பல்லுங்க நீட்டிக்கிட்டு, ஆறு கைகளோடு பயங்கரியாய் உக்காந்துக்கிணு இருக்கா.

வலப்புறம் சுடலையாண்டி சாமி. இது மட்டுமில்லாம குட்டி குட்டியாய் சுடுமண் சிலைங்க. அளவத்த சாமிங்க கைகாலூங்க சிதைஞ்சி, சிலது தலைகூட இல்லாம மூளிக் குவியலா குவிஞ்சி கெடக்குது.. செல்லி அம்மன், இசக்கிஅம்மன், பேச்சியம்மன் ,சங்கிலி பூத்தார், மொட்டைகோபுரத்தான், சுடலைவீரன்,மந்திரமூர்த்தி, குருக்களஞ்சி, வெட்டுடையார்,பனையாடியான், பாவாடைராயன், முத்தாளம்மன் ,…அ.ப்.ப்.பா..!.. கிராமத்து சாமிங்களைப்பத்தி யாராவது சென்ஸஸ் எடுத்து வெச்சா தேவல. கோவிலை ஒட்னாப்பல விரிஞ்சி கெடக்கிற மைதானத்தில பெரியாண்டவர் உருவத்தை, அம்பாள் படுத்திருக்கிற மாதிரி பிரம்மாண்டமாய் மண்ணில் செஞ்சி வெச்சிருக்கு… பெரியாண்டவர்னு கூப்ட்டாலும் அது அம்பாள்தான். படுத்த திருமேனி பெரியாண்டவர் அப்படீன்னு சொல்றது. .கொஞ்சம் தூரத்தில பெரியாண்டவர் கொளம், (குட்டை). இருக்கு.. கொளத்தையொட்டியிருந்த புளியந்தோப்பில ஜனங்க கூடியிருக்காங்க.. நஞ்சானுங் குஞ்சானுமாய் எப்படியும் ஒரு இருநூறைத் தாண்டும்.. இவங்க எல்லாரும் சூராண்டி வூட்டு வகையறா ஆளுங்க. இது இல்லாம ஊரு ஜனமும் வேற தெரண்டிருக்க ஒரே கூச்சலும், கும்மாளமுமாய் அந்த இடம் களைகட்டியிருந்துச்சி. ஒரு ஓரமா உக்காந்து பம்பை செட்டுகாரங்க, நாதஸ்வரம் தவிலு ஆளுங்க, சேகண்டி,சங்கு, பறையடிக்கிறவங்கன்னு,, அது ஒரு தனி கும்பலு கதை பேசிக்கிணு இருக்கு.. கொளக்கரையில நேர்த்திக் கடனுக்காக கொழந்தைகளுக்கும், சில பெரியவங்களுக்கும், பொம்பளைங்களுக்கும் மொட்டை போட்ற சடங்கு நடந்துக்கிட்டு இருக்கு…

.புளியமரத்தினடியில வேர்முடிச்சிகள்ல ஆடுங்களை கட்டி வெச்சிருந்தாங்க… பெரியாண்டவருக்கு நேர்ந்துவிட்ட பண்ணி மொழுமொழுன்னு கண்ணுங்க ரெண்டும் புதைய நிக்கிது.. தேங்கா புண்ணாக்கு, தவுடு, சோறு, கூழு, மல்லாக்கொட்டைன்னு தினசரி சத்துணவு போட்டதுல,,. எப்படியும் நூறு கிலோவுக்கு கொறையாது. பக்கத்தில் எட்டு கோழிங்க, அதில அஞ்சி சேவலு, மூணு பொட்டை.. அத்தினியும் பெரியாண்டவருக்கு காவு குடுக்கப்போற உசுருங்க. . . கிடாவெட்டு இங்கே நெறைய நடக்கும்.. சமயங்கள்ல இருபது ஆடுங்கள கூட ஒரே நேரத்தில் வெட்டி சாய்க்கிறதுண்டு. ஐயோ சாமி! கோரம்டா எப்பா. தொடர்ச்சியா ஆடுங்க அலற்ற சத்தம்,, ரத்தம் பீறிடும்.. இது நடந்து முடிஞ்சி ஒரு வாரத்துக்கு மேல கூட அங்கே கவிச்சை வீச்சம் அடிக்கும்,அலறல் சத்தங்களும் கூட லேசாய் கேட்டுக் கிட்டேயிருக்கும்னு சொல்றது.. ஆடுங்க போட்ற மே..மே..கூச்சலு வரவர கூடிக்கிட்டே இருந்துச்சி..பச்சைத் தழை சுமைகட்டு, அவுத்திக்கீரை, பச்சைப்புல்லுக் கட்டுங்க நிரம்பிக் கெடக்குது.. ஆடுகளின் மூத்திர நாத்தமும், புழுக்கைகளின் கெட்ட வீச்சமும், அங்க காத்துல கலந்திருந்துச்சி.. மனுசங்களைப் போலவே இந்த பொழப்பு சாசுவதம்னு சேவலுங்க பொட்டைகளை ஆள ஒண்ணோட ஒண்ணு மும்முரமாய் சண்டை போட்டுக்கிட்டு கெடக்குதுங்க.. ஒரு ஓரத்தில பொங்க பானைங்க, விறகுக் கட்டைங்க குவிஞ்சிக் கெடக்கு. பக்கத்தில, அரிசி,பருப்பு அயிட்டங்க வந்திறங்கியிருந்திச்சி. .

முக்கியஸ்தர்கள் ஆலமரத்தினடியில் உக்காந்து பேசிக்கிட்டிருக்காங்க.,. பெரியாண்டவருக்குப் படையல். ஏற்பாடாகிக்கிட்டிருக்கு.. அங்கங்கேஅடுப்பு மூட்டி, பொங்க பானை வெச்சி பொங்க ஆரம்பிச்சாச்சி… ஒரே பொகை .நிக்க முடியல கண்ணு எரியுது. பொம்பளைங்க சளசளவென்று பேசிக்கிட்டிருக்கும் பொறணிக் கதைங்கள்ல மாமியாருங்களும் ,நாத்தனாருங்களும் உதை வாங்குதுங்க.. சாமிக்கு பலி கொடுக்கிற அந்த முக்கிய விசயம் இருட்டினப்புறம் ராத்திரி ஏழு மணிக்கு மேலதான் நடக்கும். கோவில் பூசாரியின் மேல பெரியாண்டவர் வந்திறங்கறதுதான் இங்கே ஊர் வழக்கம்… அதுக்குன்னு பூசாரிங்க பரம்பரை வழிவழியாய் வருது. பூசாரி நெத்தி நிறைய விபூதியையும்,குங்குமத்தையும் அப்பிக்கிட்டு, மார்முழுக்க முசுமுசுன்னு மசுரு.தன்னை சாமியாடும் தோதுக்குக் கொண்டுவர கோபக்குறியுடன் வெறிச்சி உக்காந்துக்கிணு இருந்தாரு..காலையிலிருந்தே எதுவும் சாப்பிடாம விரதம் இருக்கிறதால , வயிறு ஒட்டியிருந்துச்சி.

.ஐந்து வருசத்துக்கு ஒரு தபா படையல் போட்டுடணும். எப்பவாவது தோது இல்லாம போயி, சில வருசங்க தள்ளிப் போறதும் உண்டுதான்.. மத்த சமயங்கள்ல பெரியாண்டவர் இந்த அநாமத்து காட்ல வானத்தையும், காத்தையும், இங்கே வந்து நெழலுக்கும், மறப்புக்கும்,ஒதுங்கும் மாடுமேய்க்கும்சிறுசுகளின் சங்கதிகளையும்தான் பார்த்துக்கிணு கெடக்கணும். சில வருசங்களா பேசி எடுப்பெடுத்து, ஏதாவது வில்லங்கமாயி நடக்காமல் தள்ளிப்போன இந்த விசேஷம் இன்னைக்கு கூடிவந்திருக்குன்னா, அந்த பெரியாண்டவர் இப்பத்தான் கண்ண தொறந்திருக்கார்னு தான அர்த்தம்?. இந்த வருசந்தான் எப்பவுமில்லாம ஊர்ல அமங்கலமான விசயங்கள் நிறைய நடந்துப் போச்சி. டெங்கு காச்ச வந்து நாலைஞ்சி கொழந்தைங்க செத்துப் போச்சி. ஓவரா தண்ணி அடிச்சிட்டு மப்புல டூவீலர்ல போய் ஆக்ஸிடெண்ட் ஆனதில ரெண்டு வாலிபமான பசங்க காலி. இந்த வருசம் மட்டும் ஊருக்குள்ள அஞ்சாறு பெருசுங்க மண்டைய போட்டுட்ச்சிங்க.

ஏரிக்கு இந்த வருசம் தண்ணி வரத்து இல்ல.. மிஞ்சி கெணத்துப் பாச்சல் வெள்ளாம பண்ணவங்களுக்கும் ராசி ஆவல.. பூச்சி எறங்கிடுச்சி. சிறுசும், பெருசுமா ஊர்ல அப்பப்ப சாதிச்சண்டைங்க வேற, சுத்தமா நிம்மதி பூட்ச்சி. அண்ணன் தம்பி,மாமன் மச்சான்னு மொறை வெச்சி தாயா புள்ளயா இருந்தவன்லாம் இப்ப குரோதமா பாக்கற நெலமையா ஆயிப்போச்சி. ஊர்ல சாதிக்கட்டு பலுத்துப் போச்சில்ல? ..அப்புறம் சண்டை வராம இருக்குமா?. யாரு பெரியவன்றதில மாறிமாறி அடிச்சிக்கிட்றது சகஜமாயிபோச்சுது.. ஏன் ஊர்ல இந்தமாரில்லாம் நடக்குதுன்னு யோசனை பண்ணிப்பண்ணி ஒருத்தருக்கும் காரணம் வெளங்கல.பெரிய பெர்தனம்தான் ஆராய்ஞ்சி தெய்வ குத்தம்னு கண்டுபிடிச்சாரு. அவரு நாலும் தெரிஞ்ச மனுசன். அனுபவ அறிவு

”டேய்! பெரியாண்டவனுக்கு படையல் போட்டு பத்து வருசமாச்சிடா. சாமி மன்னிக்குமா? தெய்வகுத்தம்டா. அதான் அங்காள பரமேஸ்வரி உயிர்பலி வாங்கறாடா. இந்த வருசம் படையல் போட்ருவம்டா அவளுக்கு கோவம் வந்தா நம்ம வம்சம் தாங்காதுடா.”

——–உசுருபயத்தில உசுர் கொடுக்க எல்லாரும் தலையாட்ட, அப்போதே விஷயம் களைகட்ட ஆரம்பிச்சிடுச்சி.. கொலதெய்வம் பச்சம்மா வாக்கு இல்லாம பொங்கலிட்றது சம்பிரதாயமில்ல.. உசுரு பலி இல்லாம நோம்பி முடிக்கிறதும் வழக்கமில்ல.

“மாமோவ்! பண்ணி சும்மா தளதளன்னு எப்படி பார்த்தாலும் நூத்திமுப்பது கிலோவுக்குக் கொறையாது மாமோவ்!.”—சொன்னவனுக்கு நாக்கில் நீர் சொட்டுது.. பெரிய பெர்தனம் கோபமாக சொன்னவனைப் பார்த்தார்.

“அட்ரா அவனை.பண்ணியாம் பண்ணி. டேய் பெங்களூரான் புள்ள! அது சாமிடா. சொம்மாவா?.பூக்கரகம் ஜோடிச்சி, ஊர்வலமாப் போயி, ஏரிக்கரை பச்சிம்மா கோயிலாண்ட வெச்சி, வென்னிச்சி, எங்கம்மா பச்சம்மாள வரவழிச்சி, உத்தரவு வாங்கிக்கிணு, நேர்ந்து வுட்ட உசுருடா அது. எப்ப பெரியாண்டவருக்கு நேர்ந்து வுட்டுட்டமோ, அப்பவே அத்த சாமியாத்தாண்டா பார்க்கணும்”—கன்னத்தில் போட்டுக் கொண்டார்.

“ஹும்! பண்ணிய பண்ணின்னு சொல்லாம சாமி ரேஞ்சுக்கு தூக்கறதும்,கன்னத்தில போட்டுக்கிறதும் நம்மாளுங்களுக்குத்தான் தகும்…”—–அங்கே நின்னிருந்த விடலைங்கள்ல சங்கர்னு ஒருத்தன் நக்கலடிச்சான். இவன் பி.காம். படிச்சிப்புட்டு வேலை கிடைக்காம சென்னையில ஏதோ ஒரு கொரியர் சர்வீஸ்ல வேலை செய்றவன். பெரியாண்டவருக்குப் படையல் போட்றதைப் பார்க்கணும்னு தொரப்பாக்கத்தில இருந்து வந்திருக்கான். இந்த ஊரு பொண்ணு அங்க இவன் சித்தப்பன் வூட்ல வாழுது. அந்த ஒறவை புடிச்சிக்கிணு வந்திருக்கான். “டாய்!…டாய்!…சாமியப் பத்தி லக்கம் பேசற கம்மனாட்டிலாம் இங்க நிக்காத.. தூரப் போயிடு பெரியாண்டவர் அறைஞ்சா தாளமாட்ட. அது சாமிக்காக தன் உசுரயே குடுக்குதே.அப்ப அதுவும் சாமிதானடா?..மடையா. அவனை வெளிய அனுப்புங்கடா…”—–இரண்டு பேர் அவனை தூரமாய் இழுத்துச் சென்று தள்ளினார்கள்.

“ இன்னாவோ அல்பமா நெனச்சிக்கினான்.இதுமாரி சாமிக்கு படையல் போட்றதுன்றது பெருமைக்கில்லய்யா. காலங்காலமா நம்ம வம்சத்தோட நம்பிக்கை அது. நம்புனாத்தான் தெய்வம்.”

இன்னிக்கு சாயந்திரம் நால்ரை—ஆறு ராகுகாலம். அது கழிஞ்சி ஆறரை மணிக்கு டண்…டண்…டண்…டண்…டண் டணக்கு, டண் ..டணக்கு.’——-பம்பை ஒலிக்க ஆரம்பிச்சாச்சி..பம்பைக்காரன் திட்டமா சரக்கு ஏத்திக்கிணதில அடி சுறுசுறுப்பாய் இருந்திச்சி. வெளிச்சத்துக்கு தீவட்டிங்க, பெட்ரோமாக்ஸ் லைட்டுங்க எல்லாம் ரெடியா வந்தாச்சி.. .பெரியாண்டவர் கொளத்திலிருந்து ஊர்வலம் கிளம்ப,. சூராண்டி வகையறாவின் ஆணு பொண்ணு அத்தனையும் குளிச்சிட்டு மஞ்சகலர் துணி கட்டிக்கிணு இருந்திச்சிங்க. ஆம்பளைங்க மட்டும் மேலே துணி இல்லாம மஞ்ச சோமனை மட்டும் கட்டிக்கிணு திறந்த மாரோட கும்பலாய் நின்னுக்கிட்டிருந்தாங்க. .அடுத்தாப்பல கொளத்தாண்ட இருந்து பண்ணியை பலிபீடத்துக்கு வழி கூட்டியனுப்பணும். சாமிக்குன்னு நேர்ந்து வுட்றதால அதுக்குன்னு பொதுவுல பணம் ஒதுக்கி குட்டியிலியே வாங்கி, அத்த ஒருத்தர் வூட்ல வளர வுட்டு வைப்பாங்க.. அப்படி அஞ்சி வருசமா தன் வூட்ல புள்ளைமாதிரி வளர்த்தவங்க கந்தன் வூட்டுக்காரங்கதான் அவங்கதான் கூட்டியனுப்பணும். அவங்க வூட்ல ஒருத்தருக்கும் மூஞ்சி தெளிவா இல்ல.. கந்தனோட அம்மா செல்லி கிழவி எழுந்து வந்தா.

“டேய் !பெரியவனே…..! .”—-அவ அப்படி கொரலு குடுத்தவுடனே, அது மொய்ங்…மொ..ய்..ங்….மொய்ங்…னு சத்தம் கொடுத்துக்கிணே எங்கிருந்தோ ஓடியாந்து அவளை உரசிக்கிணு நின்னுது. காலை முட்டிச்சி. அப்பவே அந்த வூட்டு பொண்டுகளுக்கு கண்ல தண்ணி வந்துட்ச்சி… பேருக்கு ஒரு கயித்தை மாட்டி ஊர் ஆளுங்க கிட்ட கைபுடிச்சி குடுத்தா. ” ஒரு மாச மண்ணா கொண்ணாந்து வுட்டாங்க. எங்கவூட்ல சாமி ஒரு கொயந்த மாரிதான் வளந்திச்சி..டேய் பெரியவனே! போ..டா…ப்…பா!. நல்லபடியா தொந்தரவு குடுக்காம சாமிகிட்ட போய் சேருடா..ப்..பா……!..”—–கிழவிக்கும் துக்கத்தில் பேச்சு வரல, கொரலு உதறுச்சி. சிறிது நேரம் முந்தானையால..மொவத்தப் பொத்திக்கிணா. கந்தன் கிட்டயே வரல..
இருட்னப்புறம் ஒரு லாரியில் நாப்பது ஐம்பது பேர் கையில ஜவுளிக் கடை விலாசம் போட்ட பைகளோட வந்து எறங்கினாங்க.. அவ்வளவும் சூராண்டி வகையறா ஆளுங்களோட கொண்டான் குடுத்தான் சம்பந்திங்க, மச்சானுங்க, ,முறைமாமனுங்க.. சீர்செய்யணும். பூசாரி தன் இடுப்பு சோமனுக்கு பெல்ட் கட்டி ஆட்றதுக்கு தயாராயிட்டாரு. பம்பை சத்தம் கணகணன்னு பேசுது. பம்பைக்கு முன்னால் பறை சத்தம்,பிளந்து கட்டிக்கிணு போவுது.பம்பைகாரங்க அங்காளம்மா பாட்டை எடுத்து வுட்டு அங்கியே நின்னு வென்னிக்க ஆரம்பிச்சாச்சி…ஒரு அரைமணி நேரமா பம்பை தட்னதுக்கப்புறந்தான் பூசாரிக்கு மிரளு வர்றதுக்கான அறிகுறி தெரிய ஆரம்பிச்சிது… மொதல்ல அப்பப்ப கொட்டாவி வுட்டுக்கிணே இருந்தவரு. அப்புறம் கண்ணைத் தொறக்காம உஸ்…உஸ்… உஸ்…ஸ்..ஸ்..ஸ்னு சவுண்டு குடுக்க ஆரம்பிச்சாரு. உடனே பம்பைக்காரங்க அங்காளம்மா பாட்டையும்,,அடியையும், வேகமான நடைக்கு மாத்திக்கினாங்க.. கூடவே சிலம்பு ஒலியும் சேர்ந்துக்கிச்சி டண்…டண்..டண்…டணுக்கு டக்காம், டண்..டண்.. அவ்வளவுதான்.பூசாரி மேல மெரளு வந்துடுச்சி. சாமியாட ஆரம்பிச்சிட்டாரு. ”எம்மா…! தாயே! பாவாடக்காரீ..!”—– எங்கியும் கூக்குரல். கொஞ்ச நேரம் சென்னவுட்டு, பெரிய பெர்தனம் பூசாரி கிட்ட நெருங்கி போய் நின்னாரு…

“வந்திருக்கிறது யாருன்னு தெரியலியே சாமி!. வந்திருக்கிறது எந்த பீடம்?. சொன்னாத்தானே தெரியும்.” “டேய்!…நானு பெரியவன்டா. வந்திருக்கேன். பெரியவன்டா.” “இந்த பூஜை உனக்கு ஏற்வையா சாமி.” “ சம்மதம்டா. நான் இருந்து நல்லபடி நடத்தி முடிச்சி வெக்கிறேண்டா. ஸ்..ஸ்..ஸ்,…உஸ்ஸ்”

இப்போது சிலபேர் பண்ணியைக் கெளப்பிக்கிட்டிருந்தாங்க. படுத்தத் திருமேனி பெரியாண்டவர் எதிரில் வெச்சித்தான் பலி குடுக்கணும்.. ஆனா அது பயங்கரமாய் ஊளையிட்டுக்கிணு கெளம்பாம திமிறிக்கிணு நிக்கிது. மூணு பேர் சேர்ந்து இழுத்தும் ஊஹும் ஒரு இஞ்ச் நவுட்ட முடியல. ஓடிப்போயி கந்தனை கூட்டியாந்தாங்க. கந்தன் வந்து அதை தட்டி,தடவிக் குடுத்து சாந்தப் படுத்தினான். பண்ணி அவன் காலை சுத்தி சுத்தி வந்து, அவனை நிமிர்ந்து பார்த்துட்டு, உரசிக்கிணு மொய்ங்… மொய்ங்…கொ.ர்.ர்.னு குரல் குடுத்திச்சி.. “டேய் பெரியவனே! எடக்கு பண்ணாம நல்லபடியா போடாப்பா. என்னய்யா?.போம்மா..போ.,”—-என்றான். சொல்லும்போதே அவனுக்கு குரல் நெகிழ்ந்து அடைச்சிக்கிச்சி. “புள்ள மாதிரி. வூட்ல யாரும் இவனை வுட்டுட்டு எதையும் துன்னமுடியாது. நம்ம வாய் அசைபோட்டா போச்சி, கிட்ட வந்து சுத்திசுத்தி வந்து ஒரே கூச்சல் போடுவான். துன்றத அவனுக்கும் குடுத்தாத்தான் வுடுவான். நரகல் வாடையே இவனுக்குத் தெரியாது தெரியுமா?. குட்டியில இருந்தே அண்ட விட்டதில்ல. அப்படி வூட்டு தீனி போட்டு வளத்தேன்..”—— சொல்லிட்டு கண்ல லேசா தண்ணி வுட்டான்.. இப்பவும் பண்ணி கந்தனை வுட்டு நகராம கூச்சல் போடுது.

”டண்..டணக்கு..டண்..டணக்கு..டண்…டண்”—- பூசாரி மேல் எறங்கி ஆட்ற பெரியாண்டவர் சாமி ஆடிக்கிணே பண்ணி கிட்ட நெருங்கி வந்துச்சி….

“டேய்! ஒதுங்கு,…ஒதுங்கு…எல்லாரும் தூர போங்கப்பா.. இப்ப யாரும் இந்த எடத்தில நிக்கக்கூடாது போங்க. எல்லாரும் அந்த நொணா மரத்த தாண்டி போய் நில்லுங்க. சாமி குத்தமாயிடும்ய்யா..தூரப் போங்கப்பா.”——. எல்லாரையும் தூரமாய் விரட்டிட்டாங்க.. சாமி ஜனங்க பக்கம் முதுவை காட்டிக்கிணு நிக்கிறதால அங்க என்ன நடக்குதுன்னு தெரியல. சாமி பண்ணிய வசப்படுத்துதுன்னாங்க. சாமி இப்ப பண்ணிமேல கையை வெச்சிருந்திச்சி. அதான் தெரியுது. நாலைஞ்சி தடவை உஸ்ஸ்.. உஸ்ஸ்..னு ஒலி குடுத்துச்சி., அவ்வளவுதான் சாமி .திரும்பிடுச்சி. என்னா ஆச்சர்யம்யா..நம்பவே முடியல .எப்படி இப்படில்லாம் நடக்குதுன்னு புரியல. பண்ணி மந்திரிச்சி வுட்ட ஆட்டுக்குட்டி மாரி சாதுவா பூசாரி பின்னாலயே போவுது. கொஞ்சம் வெறைச்சிக்கிணு போறாப்பல பட்டுச்சி.. பார்த்துக்குணு இருந்த ஜனங்களுக்கு உடம்பு சிலுத்துப்போவ,, கைங்க ரெண்டுத்தையும் மேலே தூக்கிக் கும்பிட்டுக்கிணு.

“ஐயா!சுடலையாண்டீ! எஞ்சாமீ! எம்மா! பரமேஸ்வரி தாயே!”— பெருங்கூச்சலா கோஷம் போட்டதுங்க..

ஊர்வலம் நவுந்திச்சி.. ஆடுங்களுக்கும் தான் சாவப்போறது தெரிஞ்சிடுச்சி போல அதுங்களும் முரண்டு பிடிக்க, ஆளுங்க அதுங்களை கஷ்டப்பட்டு தள்ளிக்கிணு போனாங்க.. இப்ப நாதஸ்வரம்,தவிலுகாரங்க ஊத,அடிக்க, ஆரம்பிச்சாங்க.. சங்கர் தன் கூட்டாளி கிட்ட கேட்டான். “எப்பிட்றா…எப்பிடி?, அம்மாங் கத்து கத்தின பண்ணி இப்ப நாய்க்குட்டி மாதிரி பூசாரி பின்னாலியே போவுதே?.” ”இன்னுமா புரியல?.அடத்தூ! எல்லாம் பெரியாண்டவர் மகிமைடா.வேறேன்ன?.இப்பவாவது அம்மாவோடசக்திய புரிஞ்சிக்க.” “உம்.ம்.நல்லா புரிஞ்சிக்கிணேன். .ஆனா நீ யோசிச்சிப் பார்றா. இந்த பண்ணியையும்,ஆடுங்களையும், கோழிங்களையும், இன்னும் கொஞ்ச நேரத்தில் சாமி பேர சொல்லி சாவடிக்கப் போறாங்கன்றது எம்மாம் குரூரம்?. நம்ம சாமி அம்மாம் குரூரமானதா? தன்னை கொன்னு போட்றதுக்குத்தான் கூட்டிப் போறாங்கன்னு தெரியாம பண்ணி பாவம் பூசாரி காலையே சுத்திச் சுத்தி வருது பாரு. இங்க பலி குடுக்கிற ஒவ்வொருத்தரும், இதுக்கு முன்ன பலி குடுத்தபோது அந்த கறியை பங்குபோட்டு வயிறு முட்ட தின்னு தீர்த்தோங்கிறதைத் தவிர நம்ம பொழப்புல அப்படியென்ன நல்லது நடுந்துபோச்சின்னு யோசிச்சிப் பார்த்தாலே இதில எந்த அர்த்தமும் இல்லேன்னு புரிஞ்சிடும்டா ஆனா.நாமதான் எப்பவும் யோசிக்கமாட்டோமே..சே! உள்ள நோவுதுடா..ஏன் இங்க வந்தோம்னு இருக்குடா..” —-அவன் முகத்தில் ஒரு பயங்கரத்தை எதிர் கொள்ளும் இறுக்கம் தெரிஞ்சிச்சி. “உஷ்ஷ்..! நாம சம்பந்தி வூட்டுக்காரங்க. நம்ம சொந்தக்காரங்களைப் பத்தி தெரியுமில்லே? படையலைப் பத்தி நொட்டை சொன்னீனா. யாரு எவருன்னு யோசிக்கமாட்டாங்க. புடிக்கலேன்னா தூரப்போயிடு.”

அப்போது சென்னையிலயிருந்து இந்த விசேஷத்தைப் பார்க்க வந்திருந்த ஜீன்ஸ் பேண்ட் போட்ட ஒரு காலேஜ் பையன் திடீர்னு சாமியாட ஆரம்பிச்சான்.

“இன்னாடா வில்லங்கமா போச்சீ?. நம்ம பங்காளிக்குள்ள ஒருத்தன் மேலதானடா நம்ம பச்சம்மா எறங்கணும். அப்பத்தாண்டா படையல் போடமுடியும். இதென்ன அசலான் மேல அம்மா எறங்கிட்டா?.”

ஜீன்ஸ் பையன் நாக்கைக் கடிச்சிக்கிணு, கண்களை உருட்டிக்கிணு, எம்பிஎம்பி குதிக்கிறான். யார்யாரோ போய் அருள்வாக்கு சொல்லுன்னு கேக்கறாங்க. ஊஹும்!. ஆடிக்கிட்டிருந்த பெரியாண்டவர் சாமி போய் அவனை தடுத்து நிறுத்தி,

“டேய்! நீ எந்தபீடம்? விலாவரி சொல்லு.”—-என்றது. அது பதில் சொல்லாம ஒரு நிமிஷம் தயங்கி, மாசாணிடா! ன்னு சொல்லிச்சி./ “டேய்! பச்சம்மா பீடத்தில உனக்கு இன்னா வேலை?. பீடந்தெரியாம சாமியாட்றீயா?.ஓட்றா ஓட்றா…சாட்டையை எடுத்து சுழற்றியது…”

“அடப்பாவிங்களே!. சாமிகளுக்குள்ளயும் சாதி இருக்குதுடா.”—– சங்கர் தன் நண்பனிடம் சொல்லிவிட்டு மெதுவா சிரிச்சான். “வாணான்டா! தெய்வ நிந்தனை ஆவாது. அங்காளம்மா உக்ரகக்காளி நேரம் பார்த்து அறைஞ்சிடுவா. பார்த்த இல்லே? அப்படி கத்தி கலாட்டா செஞ்ச பண்ணி, ஒரு மிருகந்தானே, அதுக்கு இன்னா தெரியும்?.பெரியாண்டவர் கூப்பிட்ட உடனே எப்படி சாதுவா பின்னாலியே போவுது பார்த்தியா?. தெய்வசக்தி.”

”அது ஒரு தந்திரம்டா. அத கண்டுபிடிக்க ஒரு நேக்கு வேணும். நானு.கண்டு பிடிச்சிட்டேன்டா.பார்த்துக்கோ இதான் அந்த தந்திரம்.”—ரகசியமாக கையை விரிச்சான். கையில் மல்லாக்கொட்டை பயறு.

“பூசாரி நம்மளையெல்லாம் விரட்டிட்டு இத்த குடுத்துத்தான் பண்ணியை வசியப்படுத்தினாரு.”. –
ஆச்சு, அதுக்கான நேரம் வந்துட்ச்சி., ராத்திரி எட்டாயிடுச்சி. இன்னும் சூராண்டி வகையறா பங்காளிங்கள்ல யார் மேலயும் பச்சம்மா எறங்கலியேன்ற குறை எல்லார்கிட்டயும் இருந்திச்சி.. பெரியாண்டவருக்கு தீவார்த்தனை காட்டிட்டு ஒவ்வொண்ணா பலி கொடுக்கணும். மொத பலி கோழிங்க, அடுத்தாப்பல ஆடுங்க,கடைசியா பண்ணி. பெரிய பெர்தனம் பெரியாண்டவ சாமியிடம் ( பூசாரி ) வந்தார். மொதகட்டமா இங்கே நிக்கக்கூடாதுன்னு சின்னவயசுப் பசங்களை புளியந் தோப்புக்கு ஆளு துணையோட தொரத்தி வுட்டுட்டாங்க. அப்பாடி பங்காளிங்கள்ல ஒரு கெழவன் மேல திடீர்னு அம்மா இறங்கி வந்து பிரச்சினையை தீர்த்து வெச்சிட்டா. நேரம் வேற போய்க்கிணே இருக்கு.. அவசரமா பச்சம்மா கிட்ட உத்தரவு வாங்கிக்கிட்டு, கற்பூரம் ஏத்திக்காட்டி, சாமிய வலிய மலையேற வெச்சிட்டாங்க.. இப்ப பெரியாண்டவன் கிட்ட வந்தாங்க..கூட்டம் கப்சிப் பொட்டு சத்தமில்லை. பம்பைகாரனும் அடிக்கிறதை கொஞ்ச நேரம் நிறுத்திட்டான்.. .பெண்களும், சற்று மனசு இளகியவங்களும் நடக்கப் போற பலிய நெனைச்சி படபடப்பா இருந்துச்சிங்க. சிலதுங்க மூஞ்ச பொத்திக்கிச்சிங்க. தீவட்டிகளின் வெளிச்சத்தில் அந்த இடமேஒரு அச்சத்தைக் குடுத்துச்சி.

.“உத்தரவு கொடுக்கணும் சாமீ. என்னப்பனே! உயிர்பலி குடுக்கறோம். ஏத்துக்கடா பெரியாண்டவா! நோய் நொடியில்லாம ஊரு நல்லாயிருக்கணும்.”—— கற்பூரத்தை ஏத்திக் காட்டி இறக்க,-பலிகொடுக்கும் வேலையை செய்யும் ஆளுங்களுக்கு ஒரு எழுச்சி கொடுக்க சுற்றியிருந்தவங்க குலவை சத்தம் எழுப்ப,அப்ப எல்லா வாத்தியங்களும்உச்சத்தில சத்தம் கொடுத்திச்சி. . உதவி பூசாரி தீவார்த்தனை காட்டும் போது, மஞ்சத் தன்னியை கோழிங்க தலைமேல தெளிச்சாங்க., தண்ணி பட்டதும் அதுங்க தலையை உதறுச்சிங்க.. அவ்ளோதான் சாமி உத்தரவு குடுத்தாச்சின்னு சொல்லிட்டு ,ஒவ்வொரு கோழியாய் பிடிச்சி, சூரிகத்தியால சர்ரக்..னு அதன் கழுத்தை அறுத்து, முண்டத்தை தரையில் வீசினாங்க. அதுங்க துள்ளித் துள்ளி விழுந்தன..அடுத்து ஆடுங்க.. இந்த வேலையை செய்ய. கட்டுமஸ்தாய் இரண்டுபேர், மேலத்தெரு திருவேங்கிடமும், ஸ்கூலு தெரு மாணிக்கமும் வீச்சரிவாளுடன் இறங்கினாங்க.. எட்டு ஆடுங்க.. அதுங்களைப் பார்க்க பாவமாய் இருந்துச்சி.. மிரண்டுபோய் சுத்திசுத்தி பார்த்துக்கிணு வாய் ஓயாம கத்திக்கிணே இருந்திச்சிங்க.. ஒவ்வொண்ணா இழுத்துக்கிணு வர, இழுக்கும் அந்த நொடியில அதுங்க கத்தறதை நிறுத்திட்ச்சிங்க. முரண்டு பிடிக்கல. ஒரு மாதிரி வெறைப்பு வந்துட்ச்சி. பயத்தில மூத்திரம் பேஞ்சி,புழுக்கைய தள்ளிச்சிங்க. ஒரே வீச்சுதான்,.கத்தி மேலிருந்து கீழே எறங்கும் போது தலைஎகிறிப் போய் தூரமாய் விழணும், விழுந்திச்சி. உடம்பு கீழேசாய்ஞ்சி, கொஞ்ச நேரம் விலுக் விலுக்னு உதைச்சிக்கிட்டிருந்துச்சி.. பச்சை ரத்தம் பீச்சியடிக்குது.. எங்கும் ரத்தப் பிரவாகம். இடையில ஒரு ஆட்டுக்கு வெட்டு சரியாக விழாம, ரெண்டு தபா வெட்ற மாதிரி ஆயிப்போச்சி. ஐயோ! கொடுமையே.அப்ப அந்த ஆடு குரலுடைஞ்சிப் போயி, கத்திய கதறல், துடிச்ச துடிப்பு, ஐயோ!…..ஐயோ!.. பல பொம்பளைங்க துரமாய் ஓடிப்பூட்ச்சிங்க…. கொஞ்ச நேரத்தில எல்லா ஆட்டு ரத்தமும் தரையில் தேக்கமா நின்னுச்சி.. ஆட்டு முண்டங்கள தூர இழுத்து விட்டுப்புட்டு, கடைசியா.இப்ப பண்ணி. இதான் முக்கியமான பலி. பெட்ரோமாக்ஸ் லைட்டுங்க கிட்டக்க வந்துட்ச்சி. ஊர் ஆளு தாண்ட்ராயன். வாலாயமா அந்தாளுதான் பண்ணி குத்துவாரு…
பண்ணியை வளர்த்த கந்தன் அதை கூட்டியாந்து பலிபீடத்தில ஒப்படைச்சிட்டு வேகமாக அந்த இடத்தை விட்டு பூட்டான். அதன் தலையில் மஞ்சத் தண்ணிய தெளிச்சி உத்திரவு வாங்கிட்டாங்க..பண்ணியும் இப்ப ஒரு உன்மத்த நிலைக்கு வந்துடிச்சி போல. விறைப்பா செயலத்து நிக்கிது.. பம்பைக்காரன் வந்து பம்பைக் குச்சியினால பக்கிளில் குத்தவேண்டிய இடத்தை அடையாளம் வெச்சிட்டு தூர போனான்.. பம்பைஒலி வேகம் பிடிக்க ஆரம்பிச்சது. இப்ப பெரியாண்டவர் ஆவேசமாய் ஆட, தாண்ட்ராயன் கையில் குத்தீட்டியைக் கொடுத்துட்டாங்க.. நாலுபேர் பண்ணியை கெட்டியாய் பிடிச்சிக்க ,நேராய் பக்கிள்பார்த்து வேகமா குத்தீட்டியை சொருவணும், ஓ…! ஐயோ!…சொருவிட்டாங்க. அப்பிடி சொருவுறப்ப பண்ணி துள்ளிவிழ, ஈட்டி துளைப்பது அரையுங்குறையுமாய்ப் போச்சி. ஐயய்யோ,..! சொத சொதன்னு ரத்தம் கொட்டஆரம்பிச்சிடுச்சி. சர்ர்…சர்ர்னு ஒரு பக்கம் பீச்சியடிக்குது.,பண்ணி பரிதாபமா உரக்க ஊளையிட்டுக் கொண்டு சுத்தி சுத்தி ஓட ஆரம்பிச்சது.. ஐயோ பாவம். ஓட நாடியில்ல, காலுங்க பின்னலாடுது,..

” ஐயய்யோ! எப்பவும் இப்படி நடக்கலியேம்மா. இது என்ன சோதனை?. அம்மா! தாயே! உனக்கு ஏற்வையில்லையா?.”—–பெரிய பெர்தனம் புலம்பிக் கொண்டிருந்தார்.

”புட்றா…புட்றா…வுடாத மடக்கு…மடக்கு அட்றா… மண்டை மேல போடு.அதுக்குத்தான் காலை கட்டிட்டு ஆரம்பிக்கணும்..”——-ஏழெட்டுப் பேர் கையில கவுத்தோடு அதை துரத்திக்கிணு ஓட்னாங்க. ஆனால் நூறு நூத்தியிருவது கிலோ எடையில சதை மூட்டை மாரி இருக்கிற அதை பிடிக்கிறதோ,, அடக்குறதோ அம்மாம் சுலுவா இல்லை.ராத்திரி நேரம் வேற, சுத்திலும் இருட்டு. வெளிப்பக்கம் இருட்ல ஓடிப்புட்டா அப்புறம் புடிக்க முடியாது. ஆனால் உங்களை வுட்டுப்புட்டு நான் எங்க போவேன்?ற மாரி, ஜனங்க கூட்டத்துக்குள்ளேயேதான் சுத்திசுத்தி ஓடிக்கிணு இருந்திச்சி. வழி பூரா ரத்தமா கொட்டுது. ஓடி ஓடி தூரத்தில தனியா இத்த கர்மத்தையெல்லாம் பாக்கக்கூடாதுன்னு முதுவக் காட்டிக்கிணு, தலையைக் கவுந்துக்கிணு, உக்காந்திருந்த கந்தனை மோப்பம் பிடிச்சிக்கிணு போய், கிட்ட நிக்கிறப்ப ரொம்ப .ரத்தம் பூட்டதால மேல்மூச்சு வாங்க,சோர்ந்து நின்னு, பலஹீனமாய்..ஊளையிட்டுச்சி. அவனை சுத்திசுத்தி வந்து பாதுகாப்பாய் கந்தன் காலுங்களுக்கு நடுவே பூந்துக் கொள்ள அவசரமா தலைய முட்டுது. மூக்கால நெட்டுது. மொய்ங்…மொய்ங்..னு ஒரே கூச்சல்..ரத்தம் கொட்டிக் கொண்டிருக்கிறது. அந்த கோராமைத் தாளாமல் கந்தன் அதன் கெதியப் பார்த்துப்புட்டு அந்தப் பக்கம் திரும்பிக் கொண்டு தேம்பித் தேம்பி அழுதான்… ஏழெட்டு பேர் ஓடிவந்து அதை இழுக்கும் போது நிக்க முடியாம தள்ளாட ஆரம்பிச்சது.. இழுத்தும்போயி இரண்டாம் முறையா ஈட்டியை சொருவறப்ப கூச்சல் போடாம இருக்க அதும் வாயில சோத்து உருண்டைங்கள போட்டு அமுக்கினாங்க..திணறிச்சி. இப்ப குரல் இன்னும் அடங்கிடுச்சி.. மறுபடியும் ஈட்டியை சொருவறதுக்குள்ள ஏறக்குறைய முக்காலும் செத்துப் போயிருந்துச்சி..

அப்புறம் சில நிமிசங்களிலேயே தலை தொங்கிப் போச்சி..பார்த்துக்கிட்டிருந்தவங்களுக்கு ஒருமாதிரி ஆயிடுச்சி. சிலர் மூஞ்சை பொத்திக்கிணாங்க. சங்கர் பைத்தியம் புடிச்சவனைப் போல வெறச்சிக்கிணு நின்னான். இத்தையெல்லாம் அவன் பார்த்ததில்ல. இயலாமையில் எழுந்த ஆத்திரத்தில கண்ல தண்ணி வந்திடுச்சி.. தனக்கு ஆபத்துன்னவுடனே தன்னை காப்பாத்துவான்னு அவ்வளவு கூட்டத்திலியும் தேடித்தேடிபோயி கந்தனின் காலுங்களுக்கு நடுவுல பூந்துக் கொள்ள ஓடிவந்த ஒரு கொழந்தை மாரி தான் அவனால அதை பார்க்க முடிஞ்சிது…

ஆச்சி எல்லாம் முடிஞ்சி போச்சி ஜனங்க கலைஞ்சி போவ ஆரம்பிச்சாச்சி.. சங்கர் நேரம் போறது தெரியாம அங்கியே உக்காந்துக்கிணு கெடந்தான். ஆடுங்க கதறினதும்,முண்டமாய் துள்ளிதுள்ளி விழுந்த கோழிங்களும்,ரத்தம் பீச்சியடிக்க, ஓடி. ஓடி சாய்ஞ்சிட்ட பண்ணியும், பலிபீடத்துக்கு அனுப்பறப்போ வளர்த்த பாசத்தில பண்ணிக்காக அப்படியழுத கந்தன் வூட்டு பொண்டுகளும், பெரியவனே! ன்னு கூப்பிட்டுப்புட்டு அழுத அந்தக் கெழவியும், கந்தன் தேம்பித் தேம்பிஅழுததும்,, திரும்பத் திரும்ப அவனுக்குள்ள அலையடிச்சிக்கிணு இருந்திச்சி. இன்னும் ஏழெட்டு நாளைக்கு சரியா தூங்க முடியாது. `கொன்னாப் பாவம் தின்னாப் போச்சி’ன்ற சொல்லுகூட குத்தமுள்ள மனச ஞாயப் படுத்திக்கிறதுக்காக சொன்ன சொல்லுபோல..

ரொம்ப நேரங்கழிச்சி அவன் எழுந்து நடக்க ஆரம்பிச்சப்போ, பெட்ரோமாஸ் விளக்கு வெளிச்சத்தில முக்கியஸ்தங்க முன்னால ஆளுங்க தலைக்கட்டுகளைக் கணக்கிட்டு கறிகளை பாகம் பங்கிட ஆரம்பிச்சிருந்தாங்க. எட்டு ஆடுங்களையும் தோலை உரிச்சி தொங்கவுட்டிருந்திச்சி. பக்கத்தில பண்ணிகறி ஏற்கனவே பங்கிட்டு கூறு கட்டி வெச்சிருந்திச்சி. ஒருபக்கம் கோழிய சுத்தப் படுத்திக்கிணு இருந்தாங்க. எனுக்கு உனுக்குன்னு .ஒரே கூச்சலாய் இருந்திச்சி. பம்பைகாரங்களும்,மத்த தொழிலாளிங்களும் பேசன தொகையை பின்னமில்லாம வாங்கணுமேன்னு கவலையா நின்னுக்கிணு இருந்தாங்க. ஆடு வெட்ன திருவேங்கிடமும், மாணிக்கமும் .வீச்சருவாளை பையில வெச்சி சுத்தி அக்குள்ல வெச்சிக்கிணு சங்கருக்கு முன்னால நடந்து போய்க்கிணு இருந்தாங்க அவங்களப் பாக்கவே இவனுக்கு பயமா இருந்திச்சி. ஐயோ!! எட்டு ஆடுங்க. வழியில அவங்கள பார்த்துப்புட்டு யாரோ

“என்னய்யா ரெண்டுபேரும் ஆடுங்கள வெட்டிப்புட்டு வெறுங்கையோட போறீங்க? கறியக் காணோம்.எங்கய்யா உங்க பங்கு?.”

“. நாங்க கறிய வூட்டுக்குக் எடுத்தும்போறதில்லய்யா. இங்கியே எதனா ஏழைபாழைங்களுக்குக் குடுத்துட்டு பூட்றது. ஒரு வாரம் பத்து நாளைக்ககு இந்த கர்மத்தையெல்லாம் தொட்றதில்ல..”
“விரதமா?..”

” அட ஒம்பாதுய்யா..”

– இது டிசம்பர் 2013-கணையாழி–இதழில் வெளிவந்திருக்கும் சிறுகதையாகும்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *