யுத்தங்கள் செய்வது…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: August 9, 2013
பார்வையிட்டோர்: 9,121 
 

நேட்டோ விமானங்கள் குண்டு வீசியபோது இரவு பதினொரு மணிக்கு மேலிருக்கும். நான் அப்போது இன்னும் தூங்கியிருக்கவில்லை. சட்டென எழுந்து அறைக்கு வெளியே பல்கணிக்கு ஓடிவந்தேன். அறை, கட்டடத்தின் ஆறாவது மாடியில் அமைந்திருந்ததால் வெளியே வெகுதூரம்வரை பார்க்கக்கூடியதாயிருக்கும். குண்டுச்சத்தம் கேட்டதும் ஓடிவந்து வெளியே பார்க்கும் மிரட்சி எதேச்சையாகவே நிகழ்ந்துவிடுகிறது. குண்டுத் தாக்குதல் மிக அண்மையான இடங்களில் நடந்திருக்குமோ.. சத்தமும் கட்டடத்தின் அதிர்வும் அந்தமாதிரி இருந்ததே என்ற பதற்ற உணர்வுதான் காரணம்.

நேட்டோ படையினரின் குண்டு வீச்சுக்களும்.. அவற்றைத் தொடர்ந்து லிபிய அரசப் படையினரின் வான் நோக்கிய விமான எதிர்ப்பு வேட்டுக்களின் சத்தங்களும் சில இரவுகளாகத் திரிப்போலி நகரின் இரவுகளைக் கலக்கிக் கொண்டிருந்தன.

என் அறைக் கதவு அவசர கதியிற் தட்டப்பட்டது.

அழைப்பொலியை விசைக்காமல் இப்படி நாலு வீடுகளை எழுப்புவதுபோலப் படபடப்புடன் கதவைத் தட்டுவது யாராக இருக்கும் என்று எனக்குத் தெரியும். கதவின் கொளுக்கியை விடுவித்துத் திறப்பதற்கு முற்படும்போதே, அதைத் தள்ளித் திறந்துகொண்டு உள்ளே நுளைந்தார்கள்.. பிரியசாந்தவும் சந்திரசேனவும். நான் பணியாற்றும் கம்பனியின் ஊழியர்களான இவர்களும் இதே கட்டடத்தின் இன்னொரு அறையிற் தங்கியிருந்தார்கள். விமானக் குண்டுவீச்சு தொடங்கிய நாளிலிருந்து குழம்பிப்போயிருந்தார்கள். கடந்த சில நாட்களாக, ‘இலங்கைக்குப் போகவேண்டும்.. அதற்கு ஒழுங்கு செய்யுங்கள்..’ என நச்சரித்துக்கொண்டிருந்தார்கள். யுத்தம் உக்கிரமடைந்து வான்வழி தடைவலயமாக்கப்பட்டிருக்கும் கட்டம் இது. லிபியாவிலிருந்து நினைத்தவுடன் இலங்கைக்குப் போவதென்பது இயலுமான காரியமல்ல என்பது இவர்களுக்கும் தெரிந்திருந்தது. எனினும் ஒவ்வொரு குண்டு வீச்சின்போதும் எனது அறைக்கே வந்துவிடுகிறார்கள்.

இவர்களை விட நான் மிகவும் குழம்பிப்போயிருந்தேன் என்றுதான் சொல்லவேண்டும். கிரீஸ் நாட்டைத் தலைமை அலுவலகமாகக் கொண்ட கம்பனியின் லிபிய நாட்டில் ஆரம்பிக்கப்பட்ட புறஜெக்ட்டிற்கு முகாமையாளராக இங்கு வந்திருந்தேன். இரண்டாயிரத்துப் பதினோராம் ஆண்டு பெப்ரவரி மாதம் லிபிய நாட்டின் கிழக்குப் பகுதியான பெங்காசி நகரில் கடாபி அரசுக்கு எதிராக ஆரம்பித்த புரட்சி, பின்னர் உத்வேகம் பெற்று ஒவ்வொரு நகரமாகப் பரந்துகொண்டிருந்தது. அதைத் தொடர்ந்த யுத்த நடவடிக்கைகளும், அதனால் பாதிக்கப்பட்ட கம்பனியின் தொழிற்தல அலுவல்கள் மற்றும் உள்நாட்டுக் கொடுக்கல் வாங்கல்கள்.. அவற்றைக் கையாள முடியாது இடைதடைப்பட்டு அல்லது துண்டிக்கப்பட்டுக்கொண்டிருந்த தொடர்பு வசதிகள், இந்த நிலைமையிலும் இவற்றையெல்லாம் தலைமை அலுவலகத்துடன் பரிமாறி பரிந்துரைகளைப் பெற்றுக்கொள்ளவேண்டிய கடமைகள்.. இப்படி இப்படி நிறையப் பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருந்தேன். இப்போது இவர்களை எப்படிச் சமாளிப்பது என்ற பிரச்சனை எனக்கு.

கம்பனியில் பணியாற்றிக்கொண்டிருந்த இலங்கையர்களை வான்வழி தடைவலயமாக்கப்படுவதற்கு முன் திரிப்போலியிலிருந்த இலங்கைத் தூதரகத்துடன் தொடர்பு கொண்டு அவர்கள் ஒழுங்கு செய்திருந்த விசேட விமானமூலம், மார்ச் மாத ஆரம்பத்தில் நாட்டுக்கு அனுப்பியிருந்தோம். அப்போது பயணித்த இருபது தொழிலாளர்களுடன் சேர்ந்து போகாமல் பிரியசாந்தவும் சந்திரசேனவும் தாங்களாகவே வேண்டி நின்றது எனக்காகத்தான். கம்பனியின் வேலைத்திட்டத்தை இடைநிறுத்துவதற்கு முன் சில ஒழுங்குகளைச் செய்யவேண்டியிருந்தமையால் எனக்கு உடன் வெளியேறமுடியாமலிருந்தது. அதற்கு இன்னும் சில நாட்களாகலாம். வான்வழி தடை செய்யப்பட்டாலும் பின்னர் வேறு மார்க்கமாக பாதுகாப்பாக அனுப்பிவைப்பதாக கம்பனி கூறியது. அப்போதுதான் இவர்கள், ‘உங்களைத் தனியே விட்டு போவது சரியல்ல.. உங்களுக்கு உதவியாக நிற்கிறோம்..’ என நின்றுகொண்டார்கள்.

“வாடிவென்ட, ரீவீயெகென் பலமு.. பொம்பெய வடுனே கொஹேட்டத கியலா (இருங்கள்.. குண்டு எங்கே விழுந்திருக்குமென்று ரீவீயில் பார்ப்போம்…)” – பதற்றப்பட்டுக்கொண்டு நின்ற இருவரையும் ஆறுதற் படுத்தும் நோக்கில் அமரவைத்தேன். அதிர்ச்சியில் ஏங்கிப்போனவர்களாக, பதிலேதும் பேசாமலிருந்தார்கள்.

சர்வதேசச் சனல்களில் குண்டு வீச்சு நிகழ்ந்த சில நிமிடங்களிலேயே துல்லியமாக விபரங்களைத் தெரிவித்துக்கொண்டிருந்தார்கள். அவர்களது ஊடகச் செய்தியாளர்கள் நாட்டின் சகல பகுதிகளிலும் நடக்கும் புரட்;சிப் போராட்டங்களையும் குண்டு வீச்சுத் தகவல்களையும் அவ்வப் பகுதிகளிலிருந்து அவ்வப்போதே தந்துகொண்டிருந்தார்கள். சற்று முன் இராணுவத்தினரின் ஆயுத ஸ்டோருக்குத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. அந்த விபரங்களை ரீவீ காட்டிக்கொண்டிருந்தது. லிபியாவின் விமான எதிர்ப்புத் தளங்கள், இராணுவத் தளங்கள், ஆயுதக் கிடங்குகள், அரச தரப்பினரின் கட்டடங்கள் மற்றும் கடாபியின் மாளிகைகள் என குண்டு வீச்சுத் தொடங்கிய நாளிலிருந்து தாக்கி அளிக்கப்பட்டன. எனினும் எல்லா யுத்தங்களையும்போல இங்கேயும் அப்பாவி மக்களும் குழந்தைகளும் கொல்லப்படும் தகவல்களும் வந்துகொண்டிருந்தன.

“பார்த்தீங்களா.. யுத்த நிலைமைகள் பற்றிய நேரடி ஒளிபரப்புப்போல என்ன நடக்குதென்று உடனுக்குடன் அறியக்கூடியதாயிருக்கு.. இலங்கையில் யுத்தம் நடந்தபோது செய்தியாளர்களை யுத்த பகுதிகளுக்கு அனுமதிக்கவில்லை.. அங்கு என்ன நடந்ததென்றே இன்னும் சரியாகத் தெரியாது…” – இவர்களது கவனத்தைத் திருப்புவதற்காக அப்படிக் கூறினாலும் எனக்கு அந்த வேளையிற் தோன்றிய உணர்வும் அதுதான். ஆனால் இருவருமே அதற்குக் காது கொடுக்கவில்லை. பயந்த நிலையிலிருந்து இன்னும் தெளியாமலிருந்தார்கள்.

ஏற்கனவே யுத்த பிரதேசங்களிலிருந்த அனுபவமற்றவர்களாதலால்.. இவர்களுக்கு ஏற்படும் பய உணர்வு இயல்பானதுதான். இலங்கையில் வட பிரதேசத்தைச் சேர்ந்தவன் நான். அங்கு யுத்தம் ஆரம்பித்த காலத்திலிருந்தே ஒவ்வொரு காலகட்டத்திலும் வெவ்வேறு விதமான குண்டு வீச்சுகளுக்குளெல்லாம் நேர்ந்த அவலங்களுக்குள் அகப்பட்ட அனுபவங்கள் எனக்கு உண்டு. இருண்ட இரவுகளில் கோர இரைச்சலுடன் வரும் விமானங்கள் குடிமனைகளின்மீது குண்டுகளைத் தள்ளிவிட்டுப் போகும். படை முகாம்களிலிருந்து ஏவப்படும் ஷெல்கள் எந்த இடமென்றில்லாமல் விழுந்து அழிவுகள் செய்யும்.

“சேர்.. கெதற லமயி பயவெலா.. என்ட கியலா அன்டனவா.. (வீட்டில் பிள்ளைகள் பயந்து.. வரச்சொல்லி அழுகிறார்கள்…)”

“பிரியசாந்த.. பயவென்ட எப்பா.. ஓயகொல்லன்ர மொக்குவத் வென்ன நே.. (பயப்படவேண்டாம்… உங்களுக்கு ஒன்றும் நடக்காது..)”

யுத்தமும் குண்டுவீச்சும் சஜமான விஷயம் என்பது போல, நான் பட்ட யுத்த அனுபவங்களைக் கூறத்தொடங்கினேன். அதைக் கேட்க இவர்களுக்கு எரிச்சல்கூடத் தோன்றலாம். எனினும் வேறு வழி இல்லை. இவர்களும் குழம்பிப்போயிருக்கிறார்கள். நானும் குழம்பிப்போயிருக்கிறேன். இந்த நடு இரவில் யுத்த சூழ்நிலையால் குழம்பிப்போனவர்கள் எல்லாம் சேர்ந்து வேறு எதைத்தான் பேசுவது?

அப்போது மலைகளே இடிந்து விழுவதுபோல இன்னொருமுறை தொடர் குண்டுவீச்சின் சத்தத்தில் கட்டடம் அதிர்ந்தது. வெளியே எல்லாப் பக்கங்களிலுமிருந்து வான்நோக்கி ஏவப்படும் விமான எதிர்ப்பு வேட்டுக்கள் செந்தணல்களாக விண் கூவிக்கொண்டு சென்றன. அது மேலும் பயத்தை அதிகரித்தது.

“தவம மெஹே இன்ன..எக்க மோட வடெக் சேர்.. கோம ஹறி லங்காவட்ட யன்ன ஓனே.. (இன்னும் இங்கே இருப்பது மோட்டுவேலை.. எப்படியும் இலங்கைக்குப் போகவேண்டும்…)” – பிரியசாந்தவின் குரல் நடுக்கத்துடன் அரைகுறையாக வெளிவந்தது. எப்போதும் சிரித்த முகம் கொண்ட சந்திரசேன விழி பிதுங்கிக்கொண்டு நின்றான். எனக்கு இவர்கள்மேல் ஏற்பட்ட இரக்கத்தைவிட, எப்படி இவர்களது நச்சரிப்பை நிறுத்தலாம் என்ற அலுப்பே மேலோங்கியது.

“மங் ஹெட்ட ஒஃபீசியட்ட கத்தாகறலா மொனவஹறி பிலிவெலக் கறனங்.. பயவென்ன எப்பா.. (நான் நாளைக்கு அலுவலகத்துடன் கதைத்து ஏதாவது ஒழுங்கு செய்கிறேன்.. பயப்படவேண்டாம்..)”

உண்மையில் அடுத்த நாள் தலைமை அலுவலகத்துடன் தொடர்பு கொள்ளமுடியுமா என்பது எனக்கு நிட்சயமில்லை. தொலைத்;தொடர்பு வசதிகள் எப்போதும் தடைப்பட்டு, எப்போதாவது இயங்கும் நிலையிலிருந்தன. நாள்முழுதும் முயற்சித்தாலும் ஒரு அதிர்ஷ்டமுள்ள தருணத்திற்தான்; தொடர்பு கிடைக்கும். அதிர்ஷ்டம் என்பது தொடர்பு கிடைக்கும் விஷயத்தில் மட்டும்தான். மற்றப்படி இந்த இடத்தை விட்டு இப்போதைக்கு அசையமுடியாதென்பது எனக்கு நன்றாகவே தெரியும். அந்த அளவிற்கு யுத்த நிலைமைகள் மோசமடைந்து, வான் மார்க்கம் கடல் மார்க்கம் எல்லாம் மூடப்பட்டிருந்தன. எனினும் இவர்களது ஆறுதலுக்காகவேனும் சும்மா கதை விட்டுக்கொண்டிருந்தேன்.

அறையில் அழைப்பிசை ஒலித்தது.

கதவைத் திறந்தபோது கமால் சயிட் றபியா உள்ளே வந்தான். இந்த வேளையில் அவன் வரவேண்டிய தேவையே இல்லை. அவனது டியூட்டி மாலை ஐந்து மணியுடன் முடிந்துவிடும். கமால் சயிட் றபியா, லிபிய நாட்டைச் சேர்ந்தவன். கம்பனியின் உள்நாட்டு ஏஜன்ட்டினால் நியமிக்கப்பட்டு, சாரதியாகக் கடமையாற்றினான்.

கமாலைக் கண்டது எனக்கு சற்றுத் தெம்பாயிருந்தது. பிரியசாந்தவினதும் சந்திரசேனவினதும் மனநிலையை ஆற்றுவதற்கு அவன் ஏதாவது ஆறுதல் வார்த்தைகள் சொல்லக்கூடியவன்.

“என்ன கமால் இந்த நேரத்தில் வந்திருக்கிறாய்..? ஏதாவது நியூஸ்..?”

“நௌ ரூ மச் பொம்பிங்.. லைக் ரு சீ யூ.., எனி ப்றொபிளம்..?” (அவன் ஆங்கிலத்திற் கூறிய விஷயத்தை இவ்வாறு விளங்கிக்கொள்ளலாம்@ “இப்போது குண்டுத் தாக்குதல் கடுமையாக நடப்பதால்.. உங்களைப் பார்க்க வந்தேன்.. ஏதாவது பிரச்சனையா..?”)

ஆங்கிலத்திற் பேசிப்பழகும் ஆர்வமும் அவன் என்னோடு நெருக்கமானதற்கு ஒரு காரணமாயிருந்தது. ஆரம்பத்தில் பொறுக்கியெடுத்த சில சொற்களை வைத்துக்கொண்டு தனது கைப் பாஷையையும் சேர்த்து சொல்லவேண்டிய சங்கதியை ஒப்பேற்றிவிடுவான். பின்னர் அவனது ஆங்கில ஞானம் கொஞ்சம் கொஞ்சமாக விரிவடைந்துவந்தது. சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் புதுப் புது வார்த்தைகளைக் கேட்டுத் தெரிந்துகொள்வான்.

…நான்கு வருடங்களுக்கு முன்பு லிபியாவுக்கு முதலில் வந்தபோது, விமான நிலையத்தில் எனக்காகக் காத்திருந்தவன் அவன்தான். அப்போது தொடங்கிய அறிமுகம் அது. உள்ளே குடிவரவு அதிகாரிகள் கருமபீடத்தில் தங்களுக்குள் ஒருவரோடு ஒருவர் அரட்டை அடித்துக்கொண்டும் சிகரட் ஊதிக்கொண்டும், நேரத்தiயும் பயணிகளையும் சுணக்கிக்கொண்டிருந்ததால் வரிசையிற் காத்திருந்து.. காத்திருந்து, எரிச்சலுணர்வுடன் வெளியே வந்தபோது முதற் சந்திப்பிலேயே எனது மனதைத் தொட்டவன்; கமால் சயிட் றபியா.

அட்டையொன்றில் எழுதப்பட்ட எனது பெயரை கையுயர்த்திப் பிடித்துக்கொண்டு நின்றவனிடம் எனது பயணப் பொதிகளையும் தள்ளிக்கொண்டு சென்றேன். நெடுநாட் பழகியவரைத் திரும்பக் காண்பது போன்ற மலர்ச்சியுடன் கை கொடுத்தான். எனது பொதிகளை வற்புறுத்திப் பெற்றுத் தானே சுமந்துகொண்டு, வாகனத்திற்கு அழைத்துச் சென்றான். பொதிகளை வாகனத்துள் வைத்துவிட்டு அதே வேகத்தில் சட்டெனக் கதவைத் திறந்து, ‘ப்ளீஸ்..’ என வாகனத்துள் அமருமாறு சைகை காட்டினான். வெளிநாட்டவர்கள் வரும்போது அனுசரிக்கும் முறைபற்றி அவனுக்குப் பயிற்றுவிக்கப்பட்டிருக்கலாம் என்றுதான் நினைத்தேன். ஆனால் போகப்போக, அவன் பழகிய விதத்திலிருந்து அவனது இயல்பான சுபாவம்தான் அது என்பது தெரியவந்தது.

அப்போது மிசுரட்டா நகரில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு வேலைத்திட்டத்திற்கு, எங்கள் கம்பனி சிமெந்து விநியோகிக்கும் தொழிற்தல வசதியை வழங்குவதற்கு ஒப்பந்தமாகியிருந்தது. அதற்குரிய இயந்திராதிகளைப் பொருத்துவதற்கும் தொழிலாளர்களைப் பயிற்றுவிப்பதற்குமாக வந்திருந்தேன். பின்னர் திரிப்போலியில் இன்னொரு புறஜெக்ட் ஆரம்பிக்கப்பட்டபோது அதையும் கவனிக்க வேண்டியிருந்தது. அங்கேயும் இங்கேயும் ஓடவேண்டிய நிலையில் கமால் எனக்குரிய முழு நேர சாரதியானான்.

சற்றுநேரம் ஏதும் பேசாமலிருந்த கமால், பின்னர் ஏதோ நினைத்துக்கொண்டவன்போல, “ஒவ்வொரு இரவும் கடுமையாகக் குண்டுவீச்சு நடக்கிறது.. இங்கேயுள்ள குழந்தைகளை அவர்கள் யோசிக்கவில்லையா..?” என்று கேட்டான். அப்பொழுதுதான் கவனித்தேன்.. அவனிடத்தில் வழக்கமாக் காணப்படும் உற்சாகம் இல்லை. குண்டுவீச்சில் அவனது பிள்ளைக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டிருக்குமோ?

“என்ன கமால்..? ஏதாவது பிரச்சனையா..?”

“என் மகன் சரியாகப் பயந்துபோயிருக்கிறான்.. பொம்ப் சத்தம் கேட்டதும்.. கட்டிலிற்குக் கீழே ஓடிப்போய் படுத்துவிடுகிறான்.. வெளியே வர மறுக்கிறான்..”

குண்டுவீச்சில் சிறுவர்கள் மனோரீதியாக எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள் என்பது எனக்குத் தெரியும். எனக்கு என் பிள்ளைகளின் நினைவு வந்தது. அப்போது எனது மகள் நாலு மாதக் குழந்தையாயிருந்தாள். வானத்தில் வட்டமிடும் விமானத்தின் அகோரமான இரைச்சலில் பிள்ளை மிரட்சியடைய, அவளைத் தூக்கி நெஞ்சுடன் அணைத்துக்கொண்டு ஒதுக்குப்புறமாக ஓடினேன். குண்டு வீச்சின் முழக்கத்தில் குழந்தை அதிர்ச்சியடைந்து வீரிட்டு அவலமாகக் கத்தினாள்;. என் கையணைப்பிலேயே மூத்திரமும் போனது. அப்படி அவலக்குரல் எழுப்புமளவிற்குப் பச்சைக் குழந்தைகளையே யுத்தம் அங்கு கலக்கி வைத்திருந்தது. எதிரிகளைக் கண்டதும் தங்கள் குட்டிகளுடன் பொந்துகளுக்குள் ஓடி ஒழிக்கும் பிராணிகளைப்போல, குண்டுவீச்சு விமானங்கள் இரைந்து வரும்போது பிள்ளை குட்டிகளுடன் பதுங்கு குழிகளுக்குள் ஓடி ஓடி ஒழிந்த காலங்கள் நினைவில் வந்தன…

தனது இரண்டு வயது மகன் பற்றிய கவலையில் கமால் உடைந்துபோயிருந்தான். அவனது மனநிலையை எனக்கு உணரக்கூடியதாயிருந்தது.

“கவலைப்படவேண்டாம் கமால்.. எல்லாம் சரியாகும்..” என்ற ஒரு வார்த்தையை மட்டும் கூறினேன்.

“சேர் நீங்கள் உங்கள் நாட்டுக்கு போய்விடுங்கள்.. இங்கு பெரிய பிரச்சனை வரக்கூடும்…” – கமால் தன் மனோதைரியத்தை இழந்துவிட்டான். ஏற்கனவே ஏனைய தொழிலாளர்களுடன் நான் பயணமாகாமல் நின்றபோது, சந்தோஷமடைந்தவன் கமால். இப்போது இங்கிருந்து தப்பிப் போய்விடுமாறு கூறுகிறான்.

“சரி.. நாங்கள் எப்படியாவது போய்விடலாம்.. நீ என்ன செய்வாய்..?” எனக் கமாலிடம் கேட்டேன்.

“துனீசியாவுக்குப் பல மக்கள் போகிறார்கள்.. நாங்களும் போக யோசிக்கிறோம்.. என் பிள்ளைக்காகத்தான் எல்லாக் கவலையும்…”

இளம் மனைவி, குழந்தை.. குடும்பம் என யுத்தத்திற்கு முன்னதான கமாலின் வாழ்வையும் அவனது கலகலப்பான சுபாவத்தையும் எண்ணிப் பார்த்தேன். அது அவன்மீது அனுதாபத்தை ஏற்படுத்தியது. அவனது குடும்ப வாழ்வும், இனி அங்கும் இங்குமென அலைச்சற்பட்டுப்போய்விடுமோ எனக் கவலையாயிருந்தது. அவனது வீட்டிலிருந்து கைபேசியில் அழைப்பு வந்ததும் கமால் விடைபெற்றுச் சென்றான். எனக்கு இவர்களது பிரச்சனை மீண்டும் தொடங்கியது.

“கமால் துனீசியாவுக்குப் போய்விட்டால் எங்கள் நிலைமை கஷ்டமாகிவிடுமே..” என்றான் பிரியசாந்த.

அது உண்மைதான். இங்கு எங்கள் கம்பனியின் தேவைகளைக் கவனிக்கும் ஏஜன்ட்டின் அதிகாரிகள் எவரையும் காணக் கிடைக்கவில்லை. கமால் மட்டுமே எங்கள் தேவைகளைக் கவனித்துக்கொண்டிருந்தான். அவனிடம் அந்தப் பொறுப்பைக் கொடுத்துவிட்டு அவர்கள் மாயமாகியிருக்கலாம்.

“கமாலிடம் கேட்டுப் பாருங்கள்.. எங்களைத் துனீசியாவுக்குக் கொண்டுபோய் விடமுடியுமா என்று..” – சந்திரசேன இப்படியொரு ஐடியாவைக் கூறினான். யுத்த நெருக்கடிகள் தொடங்கிய நாட்களில், கடும் சமர் நடந்துகொண்டிருந்த மிசுரட்டா நகரில் உள்ள தொழிற்தலத்தில் அகப்பட்டிருந்த எங்கள் தொழிலாளர்கள் சிலரை மீட்டுக் கொண்டுவந்தவன் கமால். அந்த நினைவிற்தான் சந்திரசேனவிற்கு அப்படியான யோசனை தோன்றியிருக்கும்.

இன்னும் திரிப்போலியில் சிக்கியிருந்த வெளி நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்களும், லிபிய நாட்டவரான பல குடும்பங்களுமாக போடரைக் கடந்து துனீசியாவிற்கு இடம் பெயர்ந்துகொண்டிருப்பதை ரீவீக்கள் காட்டும் செய்திகள் தெரிவித்தன. துனீசிய போடரில் நாட்கணக்காக இறுகிப்போயிருக்கும் வாகனங்களின் நெருக்கடிகளுள் மக்கள் அடைபட்டுக் கிடந்தார்கள். அந்தப் பக்கம் போனவர்கள் வீதி ஓரங்களிலும், மணல்வெளிகளில் தற்காலிகக் கூடாரங்களிலும், வெயிலிலும் புழுதிக் காற்றிலும் தவித்துக் கொண்டிருந்தார்கள். ‘அந்தமாதிரி நீங்களும் போய்க் கஷ்டப்படப் போகிறீர்களா’ என சந்திரசேனவிடம் கேட்டேன். ஆரம்பத்திலேயே அந்த யோசனையை ஆர்வமிழக்கச் செய்யும் நோக்கம்தான். அல்லது இவர்கள் அதை ஒரே பிடியாகப் பிடித்துக் கொண்டு என்னை நெருக்கக்கூடும்;.

“நீங்கள் இப்போது போய்த் தூங்குங்கள்.. காலையில் இதைப்பற்றிப் பேசலாம்..” என அவர்களை அனுப்பிவைத்தேன்.

படுக்கைக்குப் போனபோது, மீண்டும் விமானக் குண்டுவீச்சு நிகழக்கூடுமோ என மனப்பயம் ஏற்பட்டது. நேரம் கடந்துவிட்டாலும் தூக்கம் வர மறுத்தது. வீட்டு நினைவு வந்தது. பிள்ளைகள் மனம் கலங்கக்கூடுமென்பதால், இங்குள்ள எனது கஷ்டங்களை அவர்களுக்குச் சொல்வதில்லை. ஆனால் படுக்கைக்குப் போனதும் அவர்களது நினைவு வந்துவிடும். இங்கு யுத்த நிலைமைகள் எப்படியெல்லாம் மாறப்போகிறது.. எவ்வளவு காலம் இழுபடப்போகிறது… அதற்குள் வீட்டுக்குப் போய்ப் பிள்ளைகளைப் பார்க்கச் சாத்தியப்படுமா.. என்றெல்லாம் யோசனைகள். இந்த நினைவுகளுடன் உறங்கிப்போன நேரம் தெரியவில்லை…

துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் சடசட எனக் கேட்டன. அந்தப் பக்கமும் இந்தப் பக்கமுமாகத் தொடர் தொடரான வேட்டுக்கள் தீர்க்கப்படும் சத்த வித்தியாசத்தையும் உணரக்கூடியதாயிருந்தது. எல்லாம் கனவில் நடப்பதுபோல.. தூக்கத்துக்கும் விழிப்புக்கும் இடைப்பட்ட ஒரு குழப்பநிலை.. யாழ்ப்பாண நகரத்திற்குள் ஆமிக்காரர் மூவ் பண்ணி வருகிறார்கள்.. மக்கள் வீடுகளை விட்டு ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.. பாதைகளெல்லாம் சனநெருக்கம்.. என் மனைவியும்; பிள்ளைகளும் அதற்குள் சிக்கிப்போயிருக்கிறார்கள்.. அவர்களைக் காணமுடியாது தேடுகிறேன்.. சூட்டுச் சத்தங்கள்; கேட்டுக்கொண்டேயிருக்கிறது.. நெஞ்சு பதைக்கிறது.. கண்களைத் திறக்க முயற்சிக்கிறேன். முடியவில்லை. உடலை அசைத்து எழ முயற்சிக்கிறேன். முடியாமல் தூக்கம் அழுத்திப் பிடித்திருக்கிறது. ஒரு தருணத்தில் குண்டொன்று வெடிக்கும் பெரும் சத்தம் திடுக்குறச் செய்ய, சட்டென விடுபட்டு எழுந்துகொண்டேன்! கண்கள் விழித்துக் கொண்டது. உறக்க நிலையில் தொலைவிற் கேட்ட சத்தங்கள், காதடைப்பது போல மிக அண்மையாகக் கேட்டன. நான் எங்கே இருக்கிறேன் என்று அனுமானிக்க சற்று நேரம் பிடித்தது. பல்கணிப் பக்கம் வந்து வெளியே பார்த்தேன். சண்டை நிஜமாகவே நடந்துகொண்டிருக்கிறது. கீழே வீதியிலும் கட்டடங்களின் இடைவெளிகளிலும் துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன. எதிரெதிராக பதிலுக்குப் பதிலாக சூடு நடப்பதை, அந்த இருள் அகலாத அதிகாலைப் பொழுதில் நெருப்புத் தணல்களாகப் பறந்துகொண்டிருக்கும் சன்னங்கள் காட்டின. தூரத்தே வீதியில் வாகனமொன்று முளாசி எரிந்துகொண்டிருப்பதும் தெரிந்தது.

பல்கணிக் கதவை இழுத்து மூடிவிட்டு உள்ளே வந்தேன். படபடப்பு இன்னும் அடங்காமலிருந்தது. இந்த அமர்க்களத்தில் பிரியசாந்தவும் சந்திரசேனவும் ஓடிவரக்கூடும் என்றே பார்த்திருந்தேன். இன்னும் காணவில்லை. உறக்கத்தில் ஆழ்ந்துபோயிருப்பார்களோ..? அல்லது இந்த நேரத்தில் வந்து எனது உறக்கத்தைக் குழப்பக்கூடாது என நினைத்திருக்கலாம். இப்போது, நான் அங்கு போய்விடவோமா என்றுகூடத் தோன்றியது. யாராவது பக்கத்திலிருந்தால் ஆசுவாசமாயிருக்கும். கட்டிலில் அப்படியே அமர்ந்திருந்தேன். துப்பாக்கி வேட்டுக்கள் ஓயவில்லை. அரசபடையினருக்கும்; புரட்சிப்படைகளுக்குமிடையிலான மோதல் திரிப்போலி நகருக்குள்ளும் வந்துவிட்டதோ என்று பயமேற்பட்டது. ஆயுதபலம் கொண்டவர்கள் எதிராளர்களென சந்தேகிப்பவர்களையும் அறிமுகமற்றவர்களையும் சுட்டுத் தள்ளியதெல்லாம் ஞாபகம் வந்தது. அந்த நிலை இங்கும் வந்துவிடுமோ..?

நிலம் வெளித்து விடியும் வேளை துப்பாக்கி வேட்டுச் சத்தங்கள் ஓய்வு நிலைக்கு வந்தன. வெளியே எட்டிப் பார்த்தேன். எரிந்த வாகனத்திலிருந்து கரும் புகை மேலெழும்பிக்கொண்டிருந்தது. இன்னும் சரியாக சன நடமாட்டமோ வாகன ஓட்டங்களோ தொடங்கியிருக்கவில்லை. அப்போதுதான், ‘என்ன நடந்தது’ என்ற கேள்வியுடன் சந்திரசேனவும் பிரியசாந்தாவும் எனது அறைக்கு வந்தார்கள். இவர்களைப் பிடித்து உதைத்;தால் என்ன என்று எனக்குக் கோபம்கூட ஏற்பட்டது. அந்த அளவுக்குப் போர்த்து மூடிக்கொண்டு தூங்கியிருக்கிறார்கள்!

இந்த நேரத்தில் கமால் வந்தால் நல்லது என்று தோன்றியது.  அவனால் வரக்கூடியதாயிருக்குமோ என்று தெரியவில்லை. அதிகாலையில் என்ன நடந்திருக்கும் என அறிய ரிவீ சனல்களைத் திருகினேன். கமாலிடமிருந்து கோல் வந்தது, ‘சற்று சுணக்கமாக வருவேன்.. வெளியே எங்கேயும் போகவேண்டாம்..’ எனத் தகவல் தந்தான்.

மதியநேரம் கமால் வரும்வரை என் மனம் ஒரு நிலையிலில்லை. காலையில் நடந்த சம்பவம்பற்றிக் கேட்டேன், “என்ன பிரச்சனை கமால்.. அரச எதிர்ப்புக் கிளர்ச்சியா..?”

“சரியாகத் தெரியாது.. கிளர்ச்சி இங்கேயும் பரவி விடாமலிருக்க.. மக்களைப் பயப்படுத்தி அடக்கிவைக்கும் செயலாகவும் இருக்கலாம்..”

கம்பனியின் தலைமை அலுவலகத்துடன் தொடர்புகொண்டு, நிலைமைகள் கட்டுப்பாடற்று வருவதால் சீக்கிரம் வெளியேறவேண்டுமெனத் தெரிவித்தேன். திரிப்போலியிலிருந்து அண்மையிலுள்ள நாடான மால்ட்டாவிற்கு அடுத்த வாரம் பயணிகள் படகு சேவையொன்று செயற்பட இருப்பதாகவும், அதில் பயணப்படலாம் என்றும் கூறினார்கள். அதை நான் சற்று மாற்றி, ‘இன்னும் இரண்டொரு நாட்களில் படகுச் சேவை ஆரம்பிக்கிறது.. இங்கிருந்து போய்விடலாம்’ என இவர்களிடம் கூறினேன். ஆனால், படகு சேவை ஆரம்பிக்க உத்தேசித்துள்ள ஏஜன்ட்டைத் தொடர்பு கொண்டு கேட்டால், அதற்கு இரண்டு வாரமளவில் ஆகலாம் என்றும், அதுகூட இன்னும் ஊர்ஜிதமில்லை என்றும் தகவல் தந்தார்கள். அந்தத் தகவலை இவர்களிடமிருந்து மறைத்தேன்.

நாளாக ஆக, விமானக் குண்டுவீச்சுக்கள் இரவில் மட்டுமின்றி, பகல் வேளைகளிலும் நிகழ்த்தப்பட்டன. ‘கூலிப் படைகள்’ என சந்தேகத்தில் கைது செய்யப்படுவதும், கொல்லப்படுவதுமான காரியங்கள் திரிப்போலி நகருக்குள் மேலும் அதிகரித்தன. பின்புறமாகக் கைகள் கட்டப்பட்டு முகம் குப்புற விழுந்து இறந்து  கிடப்பவர்களை ரீவீ சனல்கள் காட்சிப்படுத்திக்கொண்டிருந்தன. பிரியசாந்தவின் கஷ்ட காலம், ஒருநாள் அவனும் இந்த அவலத்தில் மாட்டுப்பட நேர்ந்தது.. அன்று தொழிற்தலத்தில் சில அலுவல்களுக்காகச் சென்;றிருந்தோம். அப்போது பிரியசாந்தவுக்;கு அவனது வீட்டிலிருந்து கைபேசி அழைப்பு வந்திருந்தது. உள்ளே சிக்னல் சரியாக இல்லையென வெளியே சென்று பேசிக்கொண்டிருந்தான். ஜீப்பிலும் பிக்அப் வாகனங்களிலும் ரோந்து வந்தவர்கள்.. சட்டென அவனை வளைத்துக்கொண்டார்கள். வாகனத்திலிருந்து துப்பாக்கிகளுடன் குதித்தவர்களைக் கண்டதும், இவன் கைகளிரண்டையும் உயர்த்தினானாம். அவர்கள் அரபு பாஷையிற் கேட்டது ஒன்றும் இவனுக்குப் புரியவில்லை. ‘சிறீலங்கா.. சிறீலங்கா..’ என்றுமட்டும் நடுக்கத்துடன் கூறிக்கொண்டு நின்றிருக்கிறான். அவர்கள் வீ.எச்.எஃப் கருவியில் (தங்கள் அதிகாரியுடனாயிருக்கலாம்) பேசியபின், இவனை விட்டுப் போய்விட்டார்கள்.

இதன் பிறகு இவர்கள் இருவரும் அறையை விட்டு வெளிவரவே மறுத்துவிட்டார்கள். ‘இலங்கைக்குப் போகும்வரை சாப்பிடமாட்டோம்’ என அடம் பிடித்தார்கள். இன்னொரு வகையிற் சொல்வதானால், என்னை இன்னும் நெருக்குவதற்காக மேற்கொள்ளும் உண்ணாவிரதம் அது! விசித்திரம் என்னவென்றால் உண்ணாவிரதம் அனுஷ்டிப்பது ஒருவகையில் நல்ல விஷயம்தான்! எங்களுக்காக உணவு வகைகளைத் தேடிக் கொண்டுவருவதற்குக் கமால் பெரும் சிரமத்தை எதிர்கொண்டிருந்தான். அவனுடன் சேர்ந்து நானும் மார்க்கட்டுக்களெல்லாம் அலைந்து வந்திருக்கிறேன். அநேகமாக எல்லாம் வெறுமையாகவே கிடந்தன. சாப்பாட்டுச் சாமான்கள் விற்றுத் தீர்ந்தனவா அல்லது பதுக்கப்பட்டனவா என்பதும் தெரியாது. எனக்கென்றால், அலைச்சலும் இவர்களது கரைச்சலும் உச்சத்துக்கு ஏறி, அலுத்துப்போய்விட்டது. கமாலுக்கும் அது புரிந்திருந்தது.

“உங்களை துனீசியாவுக்குக் கொண்டுபோய் விடுகிறேன்.. அங்கிருந்து இலங்கைக்குப் போகலாம்.. கம்பனியுடன் பேசி முடிவெடுங்கள்..”

“கமால்..! இந்த நேரத்தில் உன் குடும்பத்தை எப்படிப் பாதுகாக்கலாம் என்பதைக் கவனி.. எங்களுடைய வழியை நாங்கள் பார்க்கிறோம்…”

“நானும் துனீசியா போய்விட்டால்.. உங்களுக்கு உதவ யாரும் இல்லை.. பிரியசாந்தவும் பயந்துபோயிருக்கிறான்..” – கமால் கூறுவதும் சரிதான்.

தரை மார்க்கமான பயணத்தின் பாதுகாப்பின்மையைக் கருதி, அந்த யோசனையைக் கம்பனி விரும்பவில்லை. எனினும் ரிஸ்க் எடுத்துப் பயணப்படவேண்டிய கட்டத்திலிருப்பதை விளக்கிக் கூறினேன். துனிசியாவில் போடருக்கு அண்மையிலுள்ள ஜேர்பா நகரிலிருந்து விமான ஒழுங்கு செய்யப்பட்டது. ஜேர்பா – துனீஸ் – டோகா – இலங்கை..!

காலை ஏழு மணிக்கு திரிப்போலியிலிருந்து புறப்பட்டோம். பாதையில் பல இடங்களில் படையினரின் சோதனைத் தடைகள். சில இடங்களில் பயணப்பொதிகளை இழுத்துக் கொட்டினார்கள். நாடு எதுவாயிருப்பினும்; படையினரின் மனோநிலை ஒரேமாதிரியானதுதான்போலும்! யுத்தப் பிரதேசத்திலிருந்து தப்பிப்பிழைத்துப் போகிறவர்களிடம் அப்படி எதைத்தான் பிடுங்கப்போகிறார்கள்? கைபேசிகள் பறிக்கப்பட்டன.

துனீசிய போடரில் விசா இன்றி நாட்டுக்குள் நுளையமுடியாது என அதிகாரிகளால் சொல்லப்பட்டது. விமான ரிக்கற் விபரங்கள் சமர்ப்பிக்கப்பட்டும், அதுபற்றிய உறுதித்தன்மைகள் கோரப்பட்டன. அங்கிருந்து கம்பனியுடன்; தொடர்பு கொள்வது.. ஈ-ரிக்கற் விபரங்களை உறுதி செய்வது போன்ற சமாச்சாரங்களை மேற்கொள்வதற்கு, அவர்களுக்குக் கணிசமான நேரம் தேவைப்பட்டது. அதன் பின்னரும் நேரம் கடத்தப்பட்டது.. அவர்களது கைகளுக்கு ஏதாவது கொடுக்கும்வரை..!

போடரிலிருந்து புறப்படும்போது இரண்டு மணி. மாலை ஐந்து மணிக்கு ஜேர்பாவிலிருந்து ஃபிளைட். இருநூறு கிலோமீட்டர்கள் போகவேண்டும். கமால் வாகனத்தை ஸ்ரார்ட் செய்ததுதான் தெரியும்.. மரண ஓட்டம் ஓடினான். கரணம் தப்பினால் மரணம்… அந்தமாதிரியான ஓட்டம்..! விமான நிலையத்தை அடைந்தபோதுதான் எனக்கு மூச்சு வந்தது.

நேரம் மட்டுமட்டாக இருந்தபடியால் கடைசியாக ஏதும் பேசிக்கொண்டிருக்க முடியவில்லை. ஒவ்வொருவராகக் கட்டித் தழுவி விடைபெற்றான் கமால். அவனைப் பிரியும்போது பிரியசாந்தவிற்குக் கண்ணீர் ததும்பி வழிந்தது. பிரிவாற்றாமையோ..? அல்லது இவ்வளவு தொல்லைகளுக்கும் பிறகு வீட்டுக்குப் போய்ச் சேரப்போகிறோம் என்ற ஆனந்தக் கண்ணீராகவும் இருக்கலாம்.

0

இலங்கை வந்ததும் ஓரிரு தடவைகள் கமாலுடன் தொடர்புகொள்ள முயற்சித்தேன். தொடர்பு கிடைக்கவில்லை. அவனும் தன் குடும்பத்துடன் துனீசியாவிற்குப் போய்ச் சேர்ந்திருக்கலாம். சில நாட்களில் வேறு அலுவல்கள்.. பிரச்சனைகளில் இயல்பாகவே கமாலை மறந்திருந்தேன்.

யுத்தம், கடாபியின் அரசாட்சியை முடிவுக்குக் கொண்டுவந்தது. மீண்டும் நவம்பர் மாதமளவில் லிபியாவுக்குப் போகவேண்டிய தேவை எனக்கு ஏற்பட்டது. திரும்பவும் வேலைகளைத் தொடங்குவதற்கான ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறு கம்பனி பணித்திருந்தது.

திரிப்போலி விமான நிலையத்தில் கமால் எனக்காகக் காத்திருப்பான் என்ற நினைவுடன் வந்து இறங்கினால்.. அவன் இல்லை. எனக்காகப் பார்த்து நின்றவர், ஏற்கனவே லிபிய ஏஜன்ட்டில் கடமையாற்றிய எனக்கு அறிமுகமானவர்தான். கமால் பற்றி விசாரித்தபோது அவரிடமிருந்து சோகமான தொனியில் கிடைத்த பதில் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

“கமால் யுத்தகாலத்தில் கொல்லப்பட்டுவிட்டான்”

– யாத்ரா இலக்கிய இதழில் பிரசுரமானது 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *