யாருக்காக அழுதாள்?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 12,781 
 

இருக்கையை விட்டு எழுந்த வண்ணம் வாயில் பென்சிலைக் கவ்விக் கொண்டு மேஜையில் கிடந்த தாள்களையும், நோட்டுப் புத்தகங்களையும் பையில் திணித்தேன். அவிழ்ந்திருந்த கூந்தலை வாரிக் கொண்டை போட்டு பென்சிலை அதில் செருகினேன். முதுகில் பையை சுமந்து கொண்டு, கைபேசியை ஜீன்ஸ் பேண்ட்டில் உள்ள ஒரு பக்க பையில் செருகிக் கொண்டேன். அடுத்த பக்கப் பையில் சில்லறைகள் வைத்திருக்கும் சிறிய பர்ஸும் வீட்டுச் சாவியும் இருக்கிறதா என நிச்சயப் படுத்திக் கொண்டேன். நாற்காலியின் சாயுமிடத்தில் தொங்கிய, பெரிய, மஞ்சள் கரடியின் பாதத்தில் “cal” எனப் படம் போட்ட நீல நிற ஹூடி அங்கியை மாட்டிகொண்டு வகுப்பறைக்கு வெளியே வந்தேன். வகுப்பு முடிந்து இரண்டு நிமிடத்திற்குள் வகுப்பும், நீண்ட தாழ்வாரமும் காலியாகி இருந்தது.

பல்கலைக்கழகத்தை விட்டு வெளியில் வந்ததும் நவம்பர் மாத முதல் வாரமாக இருந்தாலும் பளீரென அடித்த மதிய வெய்யிலும், நீலவானமும், இதமான வெப்பத்துடன் இருந்த சூழ்நிலையும், வரப்போகும் நீண்ட வார இறுதி விடுமுறை நாட்களும் மனதுக்கு ஏதோ ஒரு மகிழ்ச்சியைக் கொடுத்தது. பார்ட் (BART) இரயில் நிலையத்தை நோக்கி நடந்த பொழுது இப்பொழுதே வீட்டிற்கு போய் என்ன செய்வது என்ற எண்ணம் வந்தது. ரஹீம் ஏதோ ஒரு கருத்தரங்கு என்று சியாட்டில் சென்று இரண்டு நாளாகிவிட்டது. மீண்டும் திங்களன்றுதான் வீட்டுக்கு வருவார்.

இம்முறையும் அவர் உருவத்தையும் பெயரையும் பார்த்து, விமான நிலையத்தில் பயணிகளை சோதனை செய்பவர்கள் அவரைத் தனியே அழைத்து தட்டித் தடவி, உடமைகள் மற்றும் பெட்டிகளைக் கொட்டிப் பார்த்து அலைக் கழித்திருக்கிறார்கள். ஒருமுறை கூட விமான பயணத்தில் அவருக்கு இது நடக்கத் தவறியதில்லை. சியாட்டில் போய் சேர்ந்ததும் தொலை பேசியில் அழைத்து ஆற்றாமை தாங்காமல் என்னிடம் அதைப் பொரிந்து தள்ளிய பொழுது அமைதியாகக் கேட்டுக் கொண்டேன். மனக் குமைச்சலை வெளியிட்டால் ஆறுதலாவது கிடைக்கும் அல்லவா? மீண்டும் திரும்பி வரும்பொழுதும் நிச்சயம் இந்தக் கூத்து நடக்கும். இதனை ராண்டம் செர்ச் என்று வேறு சொல்லிக் கொள்வார்கள். ரஹீம் சொல்வது போல இந்த ராண்டம்னஸ் பரிசுச் சீட்டு வாங்கும்பொழுதும் இருந்தால் அவர்கள் இப்பொழுது மில்லியனர்களாக இருந்திருப்பார்கள். இந்த வெள்ளியன்று குலுக்கும் மெகாமில்லியன் பரிசுத் தொகை இருபத்தியைந்து மில்லியனாக உயர்ந்துள்ளது. ஆனால் அப்பொழுது மட்டும் இந்த ராண்டம்னஸ் வேலை செய்வதில்லையே அது ஏன்?

யோசித்தவாரே சாலையில் இருந்து படி இறங்கி சுரங்கப் பாதையில் இருக்கும் பார்ட் இரயில் நிலையத்தை அடைந்தேன், பயண அட்டையை கதவு போட்ட வேலியின் இயந்திரத்தில் நுழைத்து அனுமதி பெற்று உள்ளே நுழைந்தேன். ஆரஞ்சு வண்ண வழித்தடத்தில் தெற்கு நோக்கி செல்லும் வண்டி வர எவ்வளவு நேரம் இருக்கிறது என்று அறிவிப்பு பலகையில் மாறி மாறி மின் எழுத்துக்களில் வரும் அறிவிப்பை பார்த்துக்கொண்டே நடந்த பொழுது “ஹாய் மேடி” என்ற குரல் கேட்டுத் திரும்பினேன். என் வகுப்புத் தோழன் ஸ்டீவ். வாட்டசாட்டமான உருவமும் மொட்டைத் தலையும் உள்ள அவன் கருப்பு இன வழி வந்தவன். அவன் மிதிவண்டியைப் பிடித்தவண்ணம் நின்றிருந்தான். அந்த சைக்கிள் அவன் உருவத்துடன் ஒப்பிடும் பொழுது ஒரு பொம்மை போல இருந்தது. பளீர் என்ற வழக்காமான சிரிப்பு அவனிடம்.

மாதவி என்ற என் பெயரை பலருக்கு இங்கே சரியாக உச்சரிக்கத் தெரியவில்லை. பெரும்பாலும் ‘மதாவி’ என்று நெடிலைத் தூக்கி தேவையட்ற இடத்தில் போட்டு என் பெயரை ‘சதக்’ ‘சதக்’ செய்யும் கொடுமையைத் தாங்காமால் ‘மேடி’ என எல்லோரையும் அழைக்கச் சொல்வேன். ‘ஆர்னால்ட் ஷுவிஷனைகர்’ என்ற நீண்ட, கடுமையான அவர்களது மாநில ஆளுநர் பெயரை சரியாக உச்சரிக்கத் தெரிந்தவர்களுக்கு, எனது குட்டிப் பெயரை சரியாக உச்சரிப்பதில் ஏனிந்த சிரமமோ தெரியவில்லை. எம்மிற்கு அடுத்து டபுள் ஏ போட்டால் சரியாக உச்ச்சரிப்பார்களோ என்னமோ?

அந்தக் கருப்பழகனுடன் அவன் தோழி மஞ்சளழகியும் நின்று கொண்டிருந்தாள். எனக்கு இன்னமும் ஒருவரின் முகவெட்டைப் பார்த்து அவர்கள் ஃபிலிப்பைன்ஸ், சீனா, ஜப்பான், வியட்நாம், கொரியா போன்ற கிழக்காசிய நாடுகளில் எந்த நாட்டில் இருந்து வந்தவர்கள் என்று சொல்லத் தெரிவதில்லை. எல்லோருமே சீன நாட்டவர்கள்தான் எனக்கு. அந்த மஞ்சளழகியும் சீன நாட்டவள்தான் என்னைப் பொறுத்தவரை. அவளுடைய மூதாதையர்கள் அங்கே இருந்து குடி பெயர்ந்திருக்கலாம். இவள் பேசும் ஆங்கிலம் அமெரிக்கர்கள் ஆங்கிலம்தான். என்னைப் பார்த்துப் புன்னகைத்துவிட்டு தன் காதில் வந்து விழும் ஐ பாட் இசைக்கு தலையைத் தலையை ஆட்டியவாறு இருந்தாள். நான் வீட்டுக்குப் போகும் வழியில் வழக்கமாக இருவரும் ஓக்லாண்ட் நிலையத்தில் இறங்கிவிடுவார்கள்.

வந்த வண்டி நடைபாதையில் போடப்பட்ட கோடுகளுக்கு நேர் எதிரே கதவுகள் சரியாகப் பொருந்துவது போல நிறுத்தப்பட்டது. இறங்குபவர்களுக்கு வழி விட்ட பின்பு ஏறுபவர்கள் ஒழுங்காக வரிசையாக ஏறினார்கள். ஸ்டீவ் தன் தோழியுடனும் சைக்கிளுடனும் இறங்க வசதியாக கதவு பக்கமே உட்கார்ந்து கொண்டான். நான் போகும் ஹேவர்ட் நிலையத்திற்கு அரைமணிக்கும் மேல் பயணம். உள்ளே தள்ளி வசதியாக ஒரு இருக்கையைப் பிடித்து அமர்ந்து, எனது ஐ பேட் மின்பலகையை எடுத்து, விட்ட இடத்தில் இருந்து படித்துக் கொண்டிருக்கும் புத்தகத்தைத் தொடர்ந்தேன். ‘டிங் டிங்’ என்று கைபேசி ஒலி எழுப்பியது. அது குறுஞ்செய்தியின் அறிவிப்பு ஒலி. லீலா அனுப்பியிருந்தாள். “என் வீட்டிற்கு உடனே வர முடியுமா?”, “ஒகே” என்று பதில்அனுப்பிவிட்டு வெளியே பார்த்தேன். வண்டி ஆஷ்பி நிலையத்தை அடைந்திருந்தது. அடுத்து வரும் மெக்கார்த்தர் நிலையத்தில் இறங்கி வண்டி மாறினால் லீலாவின் வீட்டிற்குப் போகலாம். எழுந்து கதவருகில் வந்து தயாராக நின்று கொண்டேன். ஏன் இங்கேயே இறங்குகிறாய் என்ற கேள்வியை பேசாமல் புருவத்தை மட்டும் உயர்த்தி கண்களால் ஸ்டீவ் கேட்டான். தோழியைப் பார்க்கப் போகிறேன் என்று சொல்லிவிட்டு அடுத்த நிலையத்தில் இறங்கிக் கொண்டேன். வண்டி நகர்ந்த பொழுது புன்னகையுடன் “ஹாவ் எ நைஸ் வீக்கெண்ட்” என்று அவனும் மஞ்சளழகியும் கையசைக்கவே நானும் வாழ்த்திக் கையசைத்தேன்.

அறிவிப்புப் பலகை குறிப்பிட்டபடி வடக்கு நோக்கி செல்லும் மஞ்சள் வழித்தடத்தின் வண்டி வரும் நேரத்தையும், வால்நட்க்ரீக்கில் இருக்கும் லீலாவின் வீட்டிற்கு உள்ள பயண தூரத்தையும் கணக்கிட்டு, அரைமணி நேரத்தில் உன் வீட்டில் இருப்பேன் என்று அவளுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன். வண்டி வந்து ஏறி உட்கார்ந்ததும் லீலாவைப் பற்றிய சிந்தனை ஓடியது. இம்முறை லீலாவைப் பார்த்து மூன்று நான்கு மாதங்கள் ஆகியிருக்கலாம் எனத் தோன்றியது. அவள் தாய் மொழி தெலுங்கு, ஒரே நாட்டில் இருந்து வந்திருந்தாலும் ஆங்கிலத்தில் மட்டுமே ஒருவருக்கொருவர் உரையாடிக்கொள்ளும் நிலை. இருவரும் ஒன்றாகப் படித்துப் பட்டம் வாங்கினோம். அவள் திருமணம் குழந்தைகள் என்று குடும்ப வாழ்க்கைக்கு மாறிவிட்டாள், மேற்கொண்டு படிக்க சிறிது பணம் சேர்ப்பதற்காக நான் மூன்றாண்டுகள் வேலை செய்த பின்பு மீண்டும் முது நிலை பட்டம் வாங்க பல்கலைக் கழகத்தில் நுழைந்து, வாழ்க்கை இன்னமும் மாணவப் பருவத்திலேயே இருந்தது. லீலாவிற்கு இரண்டு மகன்கள், மூன்றாவதாக ஒரு பெண் வேண்டும் என்று முயற்சி செய்கிறாளாம்.

அவள் கணவனுக்கு நல்ல வேலை, நல்ல வருமானம். அவளுக்கும் வேலைக்குப் போக விருப்பம்தான், ஆனால் மற்றொரு கார் செலவு, வேலைக்கேற்ற உடை, குழந்தைளைக் காப்பகத்தில் விடும் செலவு என எல்லாமும் சேர்ந்து “தானிக்கு தீனி” என செலவழிந்து கடைசியில் ஒன்றும் மிஞ்சாது. எனவே பொருளாதார அடிப்படையில் கணக்கிட்டால் வீட்டிலிருப்பதே மேல் என முடிவு செய்திருந்தாள். பிள்ளைகள் வளர்ந்த பின்பு வேலைக்குப் போவாளாம். புஷ் ஆட்சி காலத்தில் மட மடவென வீழ்ந்த வீடுகளின் விலை சரிவினால், இப்பொழுது வீடு வாங்கி கையைச் சுட்டுக் கொள்வதைத் தவிர்க்க ஒரு அப்பார்ட்மெண்ட் தொடர் குடியிருப்பில் வசிக்கிறாள்.

இரயில் நிலையத்தில் இருந்து அவர்கள் வீடு பக்கம்தான். அழைப்பு மணியை அழுத்திய சிறிது நேரத்தில் கதவு திறந்தது. அழுது சிவந்த கண்களுடன் மூக்கை உறிஞ்சிக்கொண்டு நின்ற லீலாவைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்தேன். பேசும் பொழுது புரிவது போல குறுஞ்செய்தி வழியே செய்தி அனுப்புபவரின் உணர்ச்சிகள் அவ்வளவாகப் புரிவதில்லையே. “என்ன ஆச்சு லீலா?” என்றேன், என்னையும் அறியாமல் என் குரலில் பதட்டம் வந்துவிட்டது. “மேடி” என்று கூச்சலிட்ட வண்ணம் அவள் மகன்கள் ஓடி வந்து என் காலைக் கட்டிகொண்டார்கள். அவர்களிடம் என்னை ‘ஆண்ட்டி’ என்று அழைக்கக் கூடாது ‘மேடி’ என்றுதான் கூப்பிடவேண்டும் என்று சொல்லிவைத்திருக்கிறேன். இன்னொரு இந்திய ஆண்ட்டியாக என்னை அடையாளம் காட்டிக் கொள்ள எனக்கு விருப்பமில்லை.

லீலா சமையலறையை நோக்கி நடந்தாள், நானும் பின் தொடர்ந்தேன். அவள் மகன்கள் மீண்டும் தொலைக்காட்சி பார்க்க ஓடி விட்டார்கள். இப்பொழுதுதான் பார்த்தேன், அந்த சிறுவர்களின் வயதை ஒத்த இரு சிறுமிகளும் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தார்கள். இவள்தான் எங்கள் மேடி ‘ஆண்ட்டி’ என்று மூத்தவன் அந்த சிறுமிகளுக்கு என்னைப் பெருமையுடன் அறிமுகப் படுத்தினான். அதில் என்ன பெருமை என்பது எனக்கு விளங்கவில்லை. அந்த இரண்டு சிறுமிகளும் அழகான கொழுக் மொழுக் செல்லுலாயிட் பொம்மைகள். புன்னகை உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. மீண்டும் மழலைப் பட்டாளம் ‘டோரா’ தொலைக் காட்சியில் சொல்லிக்கொடுப்பதை ஆவலுடன் சேர்ந்து கூடவே சொல்லிக் கொண்டிருந்தார்கள். நான் சமையலறைக்குப் போனதும் லீலா எனக்கு விருந்தோம்பலாக கொடுத்த கோக் டப்பாவைத் தள்ளி வைத்துவிட்டு “என்ன ஆச்சு சொல்லு” என்றேன்.

உணவருந்தும் மேஜையின் நாற்காலியில் அமர்ந்த வண்ணம் “அந்த பெண்குழந்தைகளைப் பார்த்தாயா?” என்றாள்.

“உன் பக்கத்துக்கு வீட்டிற்கு டெக்ஸ்சாசில் இருந்து புதிதாக ஒரு இந்தியக் குடும்பம் வந்திருக்கிறது, அவள் பெயர் நிஷா என்று நீ தொலைபேசியில் சொன்ன ஞாபகம். அவர்களுக்கு இரண்டு பெண்கள் என்று நீ சொன்னதும் நினைவிருக்கிறது, அந்தக் குழந்தைகளா இவர்கள்?”

“ஆமாம், நீ யூகித்தது சரிதான்”

“அதற்கும் உன் அழுகைக்கும் என்ன தொடர்பு?”

“குழந்தைகளுடைய பெற்றோர்கள் நேற்று இரவு சாலை விபத்தில் இறந்து விட்டார்கள், குழந்தைகளுக்கு இன்னமும் அந்த விபரம் தெரியாது, சொன்னாலும் புரியாது” என்று அந்தக் குழந்தைகளைப் பார்த்தவாறே விம்மினாள்.

லீலா விரிவாக சொல்லத் தொடங்கினாள். சமீபத்தில் அங்கு குடி வந்த நிஷாவின் குடும்பம் மிகச் சிறிய மகிழ்ச்சியான குடும்பம். திருநெல்வேலி பக்கம் ஏதோ ஒரு சிறிய கிராமம் நிஷாவின் கணவனுக்கு, நிஷா மும்பையில் வளர்ந்தவள். வந்த சில நாட்களிலேயே குழந்தைகளும் நிஷாவும் லீலா குடும்பத்துடன் நன்கு பழகி விட்டார்கள். சில நாட்களுக்குப் பிறகு நிஷாவும் வேலைக்குப் போக நினைத்திருக்கிறாள். குழந்தைகளை இரவில் கணவனும், பகலில் அவளும் பார்த்துக்கொள்ள வசதியாக ஒரு இரவு நேர வேலை கிடைத்தது. இரவு எட்டு மணிக்கு கிளம்பினால் காலையில் ஆறு மணி போல வீடு திரும்பும் வகையில் ஒரு மருத்துவமனையில் வேலை.

நேற்று இரவு நிஷாவின் கணவன் லீலா வீட்டின் கதவைத் தட்டியிருக்கிறான். நிஷா வேலைக்கு கிளம்பும் முன்பு பார்த்த பொழுது அவள் காரின் சக்கரம் பழுதடைந்திருக்கிறது, காற்று இல்லை. எனவே தன் காரில் கொண்டு விட்டு வர நினைத்திருக்கிறான். அவன் குழந்தைகள் லீலாவின் குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்திருக்கிறார்கள். அவர்களைத் தொந்தரவு செய்ய விருப்பமில்லாமல், ஒரு அரை மணி நேரத்தில் திரும்பி வந்து அழைத்துக் கொள்வதாகக் கூறிவிட்டு மனைவியுடன் சென்றுவிட்டான். இரவு மணி பத்திற்கும் மேலாகி குழந்தைகளும் லீலாவின் வீட்டிலேயே தூங்கி விட்டார்கள். என்னவோ, எதுவோ சரியில்லை என லீலாவின் கணவன் நிஷாவின் கணவனை அவனது கைபேசியில் அழைத்திருக்கிறான். ஆனால் மறுமுனையில் பேசியதோ போலீஸ். குடிகாரன் ஒருவன் தாறுமாறாக வண்டி ஒட்டி இவர்கள் காரில் மோதி பெரிய விபத்து. வண்டி உருண்டு தீப்பிடித்துவிட, இறுகிப்போன காரின் கதவையும் உடனே திறந்து அவர்களை வெளியே இழுக்க முடியாமல் கால தாமதமாகிப்போன காரணத்தினால் அவர்களது உயிரைக் காப்பாற்ற முடியாமல் போய்விட்டது. போலீஸ் அந்த கைபேசியின் வழியே உறவினர் யாரையாவது தொடர்பு கொள்ள முயற்சித்துக் கொண்டிருந்திருக்கிறார்கள்.

நாங்கள் பேசிக்கொண்டிருந்த பொழுது இடையில் லீலாவிற்கு தொலைபேசி அழைப்பு வந்தது. அவளது மொழியில் பேசினாள். அவளது கணவன் போலிருக்கிறது. பேசி முடித்தவுடன் மீண்டும் அழுதாள், அவளைச் சுற்றி மூக்கை சிந்திய டிஷ்யூ காகிதம் குவிந்திருந்தது. கொஞ்ச நாள் பழக்கத்தில் அந்த நிஷா தம்பதியினரின் மறைவுக்கு எப்படி அழுகிறாள், என்ன ஒரு இளகிய மனம் இவளுக்கு என்று லீலா மீது இரக்கமாக இருந்தது. அவளாகவே மேலும் பேசட்டும் என மெளனமாக திரும்பி அந்த சிறுமிகளைப் பார்த்தேன்.

இப்பொழுது அவர்கள் சின்னத் திரையில் டோரா விடுத்த வேண்டுகோளின்படி “ஸ்வைப்பர் நோ ஸ்வைப்பிங்”, “ஸ்வைப்பர் நோ ஸ்வைப்பிங்”, “ஸ்வைப்பர் நோ ஸ்வைப்பிங்” என்று கூச்சலிட்டார்கள். அவர்கள் அதை அந்தக் கதையில் வரும் சூழ்ச்சிக்கார நரியிடம் சொல்வதாக எனக்குத் தோன்றவில்லை. தங்கள் பெற்றோரைக் கொண்டு சென்ற விதியிடம் சொல்வதாகத் தோன்றியது. பெரும்பாலும் தோல்வியடைந்து “ஒ மேன்” என சலித்துக் கொள்ளும் கார்ட்டூன் நரி இந்த முறை “யு ஆர் டூ லேட்” என்று கூறி “ஹெக் ஹெக் ஹே” என்று சிரித்து டோராவின் பொருளைத் திருடிக் கொண்டு ஓடியது. அது அந்த சிறுமிகளின் விண்ணப்பத்திற்கு நரியின் வழியாக விதி சொன்ன பதிலாகத் தோன்றியது. இந்த அழகுக் குழந்தைகளை வளர்க்க முடியாமல் போன, இதுவரைப் பார்த்திராத நிஷா தம்பதியரின் மீது எனக்கும் பரிதாபமாக இருந்தது. எதேச்சையாக திரும்பி என்னைப் பார்த்த சிறுமிகளில் ஒருத்தியிடம் இங்கே வா என சைகை செய்தேன். அவள் வந்து என் மடியில் உட்கார்து கொண்டாள்.

அவளைப் பார்த்தவாறே, “இவர்களை இவளது உறவினர்கள் வந்து பெற்றுக்கொள்ளும் வரை எங்களுடன் வைத்துக்கொள்ள போலீஸ் அனுமதி கொடுத்துள்ளார்கள்” என்றாள் லீலா.

“இதைத்தான் உன் கணவர் இப்பொழுது சொன்னாரா?”

ஆமாம் என்று தலையாட்டிய லீலா, “நிஷாவுக்கு உறவுகள் யாரும் இல்லை, அதனால் நிஷாவின் கணவனது தம்பியைத் தொடர்பு கொண்டு அவர் செய்தி சொன்னாராம். அந்த தம்பி இந்தியாவில் இருந்து உடனே புறப்பட்டு வந்து குழந்தைகளைத் தன்னுடன் அழைத்துச் செல்வதாகச் சொன்னாராம். அந்த சின்னக் கிராமத்தில் இவர்கள் எதிர்காலம் என்னவாகுமோ தெரியவில்லையே” என்றாள்.

“என்ன இருந்தாலும் அப்பா அம்மா பார்த்துப் பார்த்து இவர்களை வளர்ப்பது போலாகுமா?” என்று உடைந்த குரலில் சொன்ன லீலா, திடீரென அந்த சிறுமியிடம் கைநீட்டி “பாவி, பாவி, உங்களை எப்படி எல்லாம் வளர்க்க வேண்டும், படிக்க வைக்க வேண்டும் என்று கனவு கண்டாள் உன் அம்மா, இப்படி நட்டாற்றில் விட்டு விட்டுப் போனாளே அந்தப் பாவி,” என்று தலை தலையாய் அடித்துக் கொண்டு அழுதாள். அந்தக் குழந்தைக்கு எதுவும் புரியாமல் திரு திருவென விழித்து அழுது விடுவது போல முகம் மாறியது.

நான் உடனே சட்டென்று குழந்தையைத் தூக்கிக் கொண்டு டிவி முன் உட்காரவைத்து அதன் கவனத்தை திசை திருப்பிவிட்டு அங்கிருந்தே லீலாவைத் திரும்பிப் பார்த்தேன். இப்பொழுது அவள் இந்தக் குழந்தைகளுக்காக, இவர்களது எதிர்காலத்தை எண்ணி அழுவது புரிந்தது. இது போன்று அடுத்தவர்களின் குழந்தையின் எதிர்காலாத்தை எண்ணித் துடிக்க ஒரு பெண்ணால் அவள் தாயான பின்புதான் முடியுமோ என்று தோன்றியது. இந்த நிலையில் லீலாவின் உடனிருப்பதுதான் அவளுக்கு நல்லது, இன்றிரவு இங்கேயே தங்கி விடலாம் எனத் தீர்மானித்தேன்.

லீலாவின் இளைய மகன் சமயலறைக்கு ஓடி மேஜையடியில் உட்கார்ந்திருந்த அம்மாவின் முகத்தைப் பார்த்தான். பிறகு சமயலறையில் உள்ள மேடையைப் பார்த்தான், பிறகு மீண்டும் திரும்பி அம்மாவைப் பார்த்தான். அவனுக்கு என்னவோ வேண்டும் ஆனால் அழும் அம்மாவிடம் கேட்க தயக்கம் எனப் புலப்பட்டது. அவனிடம் சென்று தோளைத் தட்டி “ஹாய் ஹாண்ட்ஸம், என்ன வேண்டும் உனக்கு?” என்றேன்.

“மேடி, சாக்லேட் டோநட் கொடு”, என்று ஒரு பெட்டியைக் காட்டிக் கேட்டான். அதிலிருந்து ஒரு டோநட்டை அவனிடம் எடுத்துக் கொடுத்துவிட்டு, தொலைக்கட்சியில் மூழ்கிவிட்ட மற்ற குழந்தைகளுக்கும் ஆளுக்கு ஒன்று கொடுத்துவிட்டுத் திரும்பினேன். இளையவன் டோநட் சாப்பிட்ட வண்ணம் அம்மாவின் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனைத் தூக்கி மேஜையில் லீலாவின் அருகில் உட்கார வைத்தேன். இவனைப் பார்த்தாவது சமாதானம் அடைவாள் இல்லையா? சப்புக் கொட்டியவாறு டோநட் சாப்பிட்டுக் கொண்டு, அவளது கண்ணீரைத் துடைத்துவிட்டுத் தலையைத் தடவிக் கொடுத்த மகனை அமைதியாக சிறிது நேரம் பார்த்தாள் லீலா. பிறகு மீண்டும் பெரிதாக விசும்பி விசும்பி அழத் தொடங்கினாள்.

இப்பொழுது அந்த அழுகையில் ஒரு அச்சமும் கலந்து இருந்தது. நிஷாவின் குழந்தைகள் இடத்தில் இப்பொழுது தன் குழந்தைகளை வைத்துப் பார்ப்பாளோ? தானும் தன் கணவனும் திடீரென ஒருநாள் இதுபோலவே சாலை விபத்தில் இறந்துவிட்டால் தன் மகன்களின் கதி என்ன ஆகும்? அவர்கள் அனாதைகளானால் அவர்களது எதிர்காலம் என்ன ஆகும்? என்ற அவளது அச்சம் அவள் அழுகையின் ஊடே வெளிப்படுவதாகத் தோன்றியது, அவள் இப்பொழுது அழுவது அவளது மகன்களுக்காகவோ?

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *