கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: May 15, 2012
பார்வையிட்டோர்: 9,807 
 

காலையில் மனைவி கொடுத்து அனுப்பிய மதிய உணவினை வேண்டா வெறுப்பாக சாப்பிட்டு முடித்த போது வழமைபோல ஒரு சிகரட் பிடிக்க வேண்டும் என்ற ஆவல் தொற்றிக் கொண்டது. கடையில் சாப்பிடுவதால் ஏற்படக்கூடிய செலவினையும் ஆரோக்கியக் குறைவினையும் கருத்தில் கொண்டு மதியச்சாப்பாட்டினையும் காலையில் வீட்டிலிருந்தே கொண்டு செல்வது என்ற என் மனைவியின் தீர்மானம் அவளின் ஏனைய தீர்மானங்களைப் போலன்றி கிரமமாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. இந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துதில் அவள் தீவிரவாதியாகத் தொழிற்படுவதற்கு இன்னும் சில காரணங்கள் உண்டு. காலையிலேயே மதிய உணவையும் சமைப்பதானால் சமையல் வேலையில் பாதிக்கு மேல் என்னிடம் வேலை வாங்கலாம் என்பதும் மதியம் ஓய்வாகப் படம் பார்க்கலாம் என்பதும் பிரதானமானவை. இவற்றைத்தாண்டி அலுவலகத்தில் நானும் ஒரு பிரதான அதிகாரி நான் இல்லாவிட்டால் அலுவலகமே ஸ்தம்பித்துப்போகலாம் என்ற விதமாக நான் அளந்து வைத்திருக்கும் கற்பனைக்கதைகளும் இந்த அக்கறையில் பங்களித்திருக்கலாம்.

அலுவலக கட்டடத்தின் பின்புறமாக போய் ஒரு சிகரட் பிடித்து விட்டு திரும்ப வந்த போது என் அலுவலக அறையின் முன்பாக பொது மக்களுக்காக போடப்பட்டிருந்த வாங்கில் ஒரு பெண் காத்திருந்தாள். பார்வைக்கு பரிதாபமாகவும் கொஞ்சம் அழகாகவும் தெரிந்தாள்.

இருபத்தைந்து,இருபத்தாறு வயதிருக்கலாம். இளமையின் செழுமை மீது வறுமை நடந்து சென்ற தடங்கள் இல்லாவிட்டால் இன்னும் அழகாக இருந்திருப்பாள் என்று தோன்றியது. ‘ஏய் நீ ரொம்ப அழகாயிருக்கிறாய் பயமாய் இருக்கிறது’ என்று சொல்ல முடியாவிட்டாலும் ஏதோ ஒருகவர்ச்சி தெரிந்தது. நான் எனது கதிரையில் சென்று அமரும் வரை காத்திருந்தவள் உள்ளே வர அனுமதி கேட்கும் தோரணையில் எட்டிப்பார்த்தாள்.

‘வாரும் பிள்ளை!
என்ற சமிக்கை கிடைத்ததும் உள்ளே வந்தாள். நடையில் பவ்வியமும் பணிவும் தெரிந்தது.

‘என்ன தங்கைச்சி! சொல்லும்’
என்ற கேள்விக்குப்பதிலாக கையிலிருந்த நீளக்கடித உறையிலிருந்து ஒரு கடிதத்தை எடுத்து மடிப்புக்கலைத்து அதிகபட்ச பணிவோடு நீட்டினாள். அதிலும் ஒரு கவர்ச்சி தெரிந்தது.

என்னுடைய நண்பன் அடிக்கடி சொல்லும்

‘என்ரை மனிசியை விட மற்ற எல்லாப்பொம்பிளையளும் கவர்ச்சியாய் தெரியினம் மச்சான்’

என்ற வசனம் ஞாபகத்திற்கு வந்தது. உளவியல் படித்த எனது புத்தி அவனோடு பழகிப்பழகி நானும் அவன்போல சிந்திக்கிறேன் என்றது

‘என்ன விசயம் தங்கைச்சி, சொல்லும் ? இருந்து கதைச்சாலும் எனக்குக் கேட்கும் இருங்கோ’

என்று கதிரையைக்காட்டினேன். அமர்ந்து கொண்டாள். என் நகைச்சுவை உணர்வை அவள் கண்டுகொள்ளாதது மெதுவாக உறுத்தியது.

இன்னும் மௌனம் கலையவில்லை, அமைதியாக இருந்தாள்.
‘சொல்லுங்கோ தங்கைச்சி என்ன பிரச்சினை’

என் கையிலிருந்த கடிதத்தை அவள் பார்த்த பார்வை

‘எல்லாம் அந்தக்கடிதத்தில் எழுதியிருக்கிறது’ என்று சொல்லியது.

மேலோட்டமாக கடிதத்தை வாசித்தேன். 2006 இல் மீண்டும் தொடங்கிய யுத்தம் தன் நச்சுக்கரங்களால் அவள் வாழ்வையும் தொட்டுச்சென்ற செய்தியை அந்தக்கடிதம் சொன்னது. ஊரடங்குவேளை என்பதை அறியாமல் அழுத குழந்தைக்கு பால்மா தேடிச்சென்ற கணவனை இவள் இன்றுவரை தேடிக்கொண்டிருக்கிறாள் என்பது தெரிந்தது. ஆறு வயதிலும் மூன்று வயதிலும் இரு பெண் குழந்தைகளோடு வாழ்வு அல்லாடுவதை கடிதத்தின் வார்த்தைகள் கச்சிதமாக வர்ணித்தன. இப்போது என்பார்வை மாறியிருந்தது. கவர்ச்சி காணாமல் போயிருந்தது. இதுவரை குறிப்பிட்டு சொல்லக்கூடிய விதமாக தனக்கு எவ்வித உதவியும் வழங்கப்படவில்லை எனவும் இயன்ற உதவியினை வழங்கியுதவுமாறும் தயவான கோரிக்கையோடு கடிதம் முடிந்திருந்தது. வெள்ளைத்தாளின் ஒருபக்கத்தை ஏறத்தாள நிறைத்திருந்த கடிதத்தின் அடிப்பகுதியில் அதே பக்கத்தில்

‘மறுபக்கத்தில் விண்ணப்பதாரியினால் தெரிவிக்கப்பட்ட விடயங்கள் உண்மையானவை எனவும் விண்ணப்பதாரி வறுமைக்கோட்டிற்கு உட்பட்டவர் எனவும் உறுதிப்படுத்துகின்றேன்’

என கிராம அலுவலர் விதந்துரை செய்திருந்தார். கடிதத்தின் மறுபக்கத்தை புரட்டிப்பார்த்தேன். அந்தப்பெண்ணின் வாழ்வுபோல் அதுவும் வெறுமையாய் இருந்தது.

‘சரியம்மா! இப்ப என்ன உதவி எதிர்பாத்து வந்தனீர்’
என்ற என் கேள்விக்கு அவளிடம் ஏராளம் பதில்கள் இருந்தன.

சொந்தக்காணியில் ஒரு குடிசை வீடு இருக்கிறது. ஆனால் கூரை மழைவந்தால் ஒழுகும். திருத்துவதற்கு கிடுகு வாங்க வசதியில்லை. கடந்த வருடம் மழை அவள் வீட்டில் ஒழுகவில்லை, பெய்தது. மழை முடிந்தபின்னர் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று கூரை விரிப்பு என்ற பெயரில் சடலங்களை பொதி செய்யும் பிளாஸ்ரிக் – பொலித்தீன் உறைகளை வழங்கியது. இந்த ஆண்டு மழைக்கு அதுதான் அபயம். அடிப்படையான தேவைகளையேனும் நிறைவு செய்ய வருமான மார்க்கமில்லை. பிள்ளைகளைப் படிப்பிக்க ஆசை, ஆனால் வசதியில்லை. ……………… தேவைகள் பட்டியலின் நீளம் நான் எதிர்பார்த்ததை விட அதிகம்.

‘பாவம்’
என்று மனது அங்கலாய்த்தது. ஆனால் இந்தப்பெண்ணுக்கு உதவக்கூடிய விதமாக கைவசம் திட்டங்கள் எதுவுமில்லை.

‘அப்பிடியெண்டால் என்னமாதிரி சீவியம் போகுது? சொந்தக்காரர் ஆராவது உதவி செய்ய இருக்கினமா?’

என்ற கேள்வி மனதின் தொடக்கூடாத இடங்களை தொட்டிருக்க வேண்டும் போல் தெரிந்தது.

‘இல்லை சேர். அவர் இருக்கிற காலத்திலையே எங்களின்ரை இரண்டு பக்கத்தாரும் ஒற்றுமையில்லை. அவை பெரிய இடத்து ஆக்கள், நான் சாதி குறைவு எண்டு ஒதுக்கி விட்டிட்டினம். எங்கடை பக்கத்திலை மச்சானுக்கு கட்டிவைக்கிறது எண்டு இருந்தவை நான் இப்பிடிச்செய்து போட்டன் எண்டு என்னிலை சரியான கோபம், அவர் காணமல் போன பிறகு கூட ஒருத்தரும் வந்து பாக்கயில்லை’

1950களின் ஆலயப்பிரவேசங்கள், தேநீர்க்கடைப்பிரவேசங்கள் மட்டுமல்ல அதன்பின்வந்த காட்டாறுகள், பிரயளயங்களால் கூட, மேட்டுக்குடி வர்க்கச்சிந்தனையை தகர்க்க முடியவில்லை. பலவிஷச்செடிகளுக்கும் கைகண்ட களைநாசினி என விதந்துரைக்கப்பட்ட அரசியலுரிமையின் பேரிலான ஆயுதப்போராட்ட காலத்தில் கூட சாதியச்செடியின் விதை உறங்கியிருந்ததே தவிர அழிந்துவிடவில்லை. இவை இப்போது மீண்டும் முளைக்கிறது. என்ற எண்ணம் ஏதாவது உதவி செய்யவேண்டும் என்ற உந்துதலை அதிகப்படுத்தியது.

‘பிச்சைச்சம்பளம்’ என்று பெருமையாகப்பேசப்படும் பொதுசனமாதாந்த உதவிப்பணத்தை தவிர வேறு எதுவும் இந்த நிமிடம் கைவசமில்லை. மாதாந்த உதவிப்பணம் ஏற்கனவே வழங்கப்படுகிறது. இந்தக்கொடுப்பனவின் பெயரால் சுயமாக ஏதாவது தொழில் செய்ய பதினைந்தாயிரம் ரூபா கொடுக்கலாம். ஆனால் அதில் இரண்டு பிரச்சினையிருக்கிறது.

‘ஏழைகள் ஒரே தடவையில் பதினைந்தாயிரம் ரூபாவைப் பார்த்தால் அதிர்ச்சியால் பாதிக்கப்படலாம்’

என்ற நல்ல நோக்கத்தோடு திணைக்களம் இரண்டு கட்டங்களாகவே கொடுப்பனவை வழங்கும். இரண்டு கட்டங்களுக்குமிடையில் குறைந்தது ஒருமாத இடைவெளி நிச்சயம் இருக்கும். இரண்டாம் கட்ட பணம் கிடைக்கும் போது முதற்கட்டப்பணம் முடிந்து இரண்டாம் கட்டக்கொடுப்பனவை நம்பிப்பெற்ற கடன் இருக்கும். தொழில் இருக்காது. என்னுடைய மாதாந்த அறிக்கைகளில் சட்டத்திற்கு பிழையான ஆனால் மனச்சாட்சிக்கு சரியான பொய் நிச்சயம் இருக்கும்.
‘சரி இதையாவது கொடுத்துப்பார்க்கலாம்’

என்ற தீர்மானத்தை அடியொற்றி

‘தங்கைச்சி உமக்கு ஒரு பதினையாயிரம் ரூபா காசு தந்தால் ஏதாவது தொழில் செய்யலாமோ?

என்ன தொழில் செய்வீர்?’

என்ற கேள்விக்கு யோசித்த விதத்தில் உண்மையிருந்தது.

‘நான் என்ன தொழில் சேர் செய்யலாம். சின்னப்பிள்ளையளோடை, அதிலையும் ஒருபிள்ளை கால் ஏலாதவள்’

உண்மையான இயலாமை தெரிந்தது.

‘ஆடு, மாடு ஏதாவது வளக்க மாட்டீரா?

‘ஆடு இரண்டு நிக்குது சேர். அவர் இருக்கேக்கை மகளுக்கு விருப்பம் எண்டு சின்னக்குட்டியா வாங்கினது. காசு கஸ்ரம் வந்தும் விக்க மனமில்லை வைச்சிருக்கிறன்.’

இந்தப்பதிலில் எனக்குள் ஒரு வெளிச்சம் தெரிந்தது.

‘தங்கைச்சி நான் உமக்கு ஒரு பதினையாயிரம் ரூபா காசு ஆடு வளக்க எண்டு எடுத்துத்தாறன் .உம்மட்டை ஆடு நிக்குது தானே. நீர் அந்தக்காசை எடுத்து பிள்ளையளுக்கு சாப்பாடு உடுப்பு வாங்கிக்குடும், இஞ்சையிருந்து ஆரும் பாக்க வந்தால் உம்மட்டை நிக்கிற ஆட்டை இதுதான் வாங்கின ஆடு எண்டு சொல்லிக்காட்டும்’

என்ற என்னை நம்பிக்கையீனமாக பார்த்தாள்.

‘ஆர் சேர் பாக்க வருவினம்”
என்ற கேள்வியில் தவறு செய்யப் பயப்படுவது தெரிந்தது.

‘நான்தான் வருவன், வேறை ஆரும் வந்தாலும் உம்மட்டை நிக்கிற ஆட்டை இதுதான் வாங்கின ஆடு எண்டு சொல்லிக்காட்டும்’
முல்லாவின் சாயலிலான எனது இந்தப்பதிலைக்கேட்டு என்னைப்பார்த்த விதத்தில் கேலியா? பயமா? என்று இனங்காணமுடியாத தீட்சண்யம். சிலவேளை எனது புத்திசுவாதீனத்தின் மீது சந்தேகப்பட்டிருக்கலாம்.

உரியபடிவங்கள் பூர்த்தி செய்து கொடுப்பனவிற்கான விண்ணப்பம் அனுப்பிவைத்தபோது மனதில் ஏனோ தவறு செய்த உணர்வு வரவேயில்லை.

இது நிகழ்ந்த இரு வாரங்களில் வலது குறைந்தோருக்கான தேசிய செயலகம் ஜனாதிபதியின் சிந்தனைக்கு அமைவாக வலுவிழந்த குடும்ப அங்கத்தவர்கள் கொண்ட குடும்பங்களுக்கு மாதாந்தம் ரூபா மூவாயிரம் உதவு தொகை வழங்குவதற்காக தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் இருபத்தேழு பேரின் விபரங்களை அனுப்பியிருந்தது. இவர்களுக்கு வழங்கு வதற்காக தலா பதினையாயிரம் ரூபா நிதியும் கிடைத்தது. பயனாளிகள் பட்டியலில் சுகுமாரன் பத்மலீலா என்ற பெயரைப்பார்த்த போது கடவுளின் கருணைக்கு நன்றி செலுத்திக் கொண்டேன். இதற்கு மேல் எல்லா இடங்களிலும் பெண் என்றும் அவள் என்றும் சொல்லப்பட்ட பாத்திரம்; இந்த சுகுமாரன் பத்மலீலா தான்.

‘தாங்க் யூ’

அலுவலக வரவைப்பதிவு செய்யும் இயந்திரம் என் சுட்டுவிரலின் தழுவலுக்கு நன்றி சொல்லி ஓய்ந்த போது நேரம் காலை 9.48 . வழமையை விட இன்று அதிகம் தாமதமாகி விட்டது என்ற பதட்டம் . ஆனாலும் இயந்திரம் என்றாலும் எங்கள் உயரதிகாரிகளிடம் இல்லாத ஒரு நல்ல பண்பு இதனிடம் இருக்கிறது. எவ்வளவுதான் தாமதமாக வந்தாலும் ‘தாங்க் யூ’ சொல்லும் தாராளம். இயந்திரத்தை மெச்சிய நினைப்பில் இடி விழுந்தது போல

‘சேர் உங்களை எக்கவுண்டன்ட் தேடிக்கொண்டிருக்கிறார்’
என்ற செய்தி வந்தது

‘உங்கடை அந்த இருபத்தேழு செக்கும் எழுதியாச்சுது, எப். ஏ யிட்டை எடுத்துக்கொண்டு போங்கோ’

என்ற எக்கவுண்டனின் செய்தி அவரது அழைப்பு தாமதமாக வந்த விடயத்திற்கானதல்ல என்ற செய்தியையும் உள்ளடக்கமாகக் கொண்டிருந்தது.

காசோலைகள் எல்லாம் குறுக்குக்கோடிடப்பட்டு பெறுவோன் கணக்கு மட்டும் என்ற முத்திரையிடப்பட்டு கணக்கீட்டு ரீதியாக உயர்பாதுகாப்பினைக் கொண்டிருந்தன. காசோலைகள் பதிவேட்டில் கையொப்பமிட்டு பெற்றுக்கொண்டேன்.

காசோலைகளை பயனாளிகளை வரவழைத்து வழங்குவதா? அவர்களுடைய வங்கிக் கணக்கிற்கு அனுப்பி வைப்பதா? என நானும் எனது எழுதுனரும் விவாதித்ததில் தேநீர் இடைவேளை மறந்து போனது. இறுதியாக அலுவலகத்திற்கு வரவழைத்து வழங்குவது என்ற அவரின் தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதனால் கிராம அலுவலர்கள் மூலம் பயனாளிகளுக்கு தகவல் வழங்கும் கடமையையும் அவரே ஏற்கவேண்டியதாயிற்று. காசோலைகளை பத்திரப்படுத்தி விட்டு வழமைபோல் அலுவலகக்கட்டடத்தின் பின்புறம் சென்று திரும்பினேன்.

இன்றும் பத்மலீலா அலுவலக அறை வாசலில் காத்திருந்தாள்.

‘தங்கைச்சி உங்கடை காசு வந்திருக்கடா. செக் தாறன். பாங்க் எக்கவுண்டிலை போட்டு மாத்துங்கோ’

என்ற செய்தி தந்த மகிழ்ச்சி முகத்தில் தெரிந்தது. சொன்னதை செய்த மிடுக்கோடு நடந்து போய் காசோலையை எடுத்துக் கொடுத்தேன். பெற்றுக்கொண்டதற்கான பதிவேட்டில் கையொப்பமும் வாங்கி வழியனுப்பிவிட்டு வழமையான பணிகளோடு ஒரு மணிநேரம் கடந்திருக்க அன்றைய கடிதங்களில் எனக்குரிய கடிதங்கள் கிடைத்தன. ஒவ்வொன்றாக பாhத்துக்கொண்டிருந்தேன்.

வலது குறைந்தோருக்கான தேசிய செயலகம் அனுப்பியிருந்த கடிதம் ஒன்றும் இருந்தது. வலுவிழந்தோருக்காக வழங்கப்படும் கொடுப்பனவுகள், உதவிகள் அனைத்தும் கௌரவ அமைச்சர், பிரதியமைச்சர், உள்ளுர் அரசியல் தலைவர்கள் கலந்து கொள்ளும் நிகழ்வில் பகிர்ந்து வழங்கப்படும் எனவும், அதற்கான விழா ஒன்றினை ஒழுங்குபடுத்துமாறும் பணிக்கப்பட்டிருந்தது. நல்லவேளை வங்கிக்கணக்கிற்கு அனுப்புவது என்ற எனது தீர்மானம் செயற்படுத்தப்பட்டிருந்தால் விடயம் கை மிஞ்சிப்போயிருக்கும். இப்போது ஒரு காசோலைதானே. அதனையும் திரும்ப வாங்கலாம்.

ஃ ஃ ஃ

பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் கௌரவ அமைச்சர் தலைமையில் நடைபெற்றது. பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். நிகழ்வில் வலுவிழந்த குடும்ப அங்கத்தவர்கள் கொண்ட குடும்பங்களுக்கு மாதாந்தம் ரூபா மூவாயிரம் உதவு தொகை வழங்குவதற்காக தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் ஐந்து மாத கொடுப்பனவு ரூபா பதினையாயிரம் வழங்குவதற்காக அழைக்கப்பட்டிருந்தனர். எதேச்சையாக பார்த்த போது பயனாளிகள் ஒழுங்கு முறையாக அமர்ந்திருந்த முதல் வரிசையில் பத்மலீலா காத்திருந்தாள். ஏற்கனவே கொடுப்பனவு வழங்கப்பட்டிருந்ததை அறியாமல் கிராம அலுவலர் வரவழைத்திருக்கிறார். பட்டியலில் பெயர் இருந்ததால் ஒழுங்கமைப்பாளர்களும் அமர வைத்திருக்கிறார்கள்.

இப்போது கூட்டம் நடந்து கொண்டிருப்பதால் குறுக்கே புகுந்து விடயத்தை சொல்லவும் சந்தர்ப்பமில்லை . காசோலைகள் நீளக்கடித உறையில் இடப்பட்டு பயனாளிகளின் பெயர்கள் எழுதப்பட்டு என்னிடம் இருக்கின்றன. பத்மலீலா அழைக்கப்பட்டால் கொடுப்பதற்கு காசோலையில்லை. இந்த நினைப்பு ஒரு வழியைக் காட்டியது. வெறுமையான நீளக்கடித உறையில் ஒருகடதாசியை இட்டு பத்மலீலாவின் பெயரை எழுதி வைத்துக்கொள்வோம். தடுக்க முடியாத சூழ்நிலையில் பத்மலீலா அழைக்கப்பட்டால் அதனைக்கொடுத்து காரியத்தை ஒப்பேற்றலாம். பின்னர் விடயத்தை விபரிக்கலாம். எனது சமயோசிதத்திற்காக என்னை நானே பாராட்டிக்கொள்கிறேன்.

அமைச்சர் அவர்களாலும் பாராளுமன்ற உறுப்பினர்களாலும் பல வகையான உதவிகள், கொடுப்பனவுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டு சமகால பிரச்சினைகள் பற்றி கலந்துரையாடல் நடைபெற்றுக்கொண்டிருந்தது.

‘ஐயா எனக்குத்தந்த என்பலப்பிலை செக் இல்லை. வெறும் கடதாசிதான் வைச்சிருக்கினம்

மற்ற ஆக்கள் எல்லாருக்கும் செக் குடுத்திருக்குது எனக்குத்தான் வெறும் பேப்பர்’

பத்மலீலா வெறும் கடதாசியைக்காட்டி அமைச்சரிடம் முறையிட்டுக்கொண்டிந்தாள்.

அமைச்சர் பிரதேச செயலரைப்பார்க்க அவர் என்னைப்பார்த்த பார்வையில் இருந்த கேள்வியின் கனதி புரியாமல்…………………, நிறுத்தி வைக்க மறந்த எனது கைத்தொலைபேசி

‘இது மௌனமான நேரம் இள மனதில் என்னபாரம்’ என்று அலறுகிறது.

(யதார்த்தம் தழுவிய கற்பனை)

– அரச அலுவலர்களுக்கிடையில் அகில இலங்கை ரீதியாக நடாத்தப்பட்ட இலக்கிய ஆக்கத்திறன் போட்டி – 2011  இல் சிறப்புப் பரிசு பெற்ற சிறுகதை இது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *