கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: October 7, 2017
பார்வையிட்டோர்: 7,332 
 

எழுதியவர்: சுபோத் கோஷ்

சநாதன், அவனுடைய பெண் சுதா. அப்பனுக்கு ஏற்ற பெண், பெண்ணுக்குத் தகுந்த அப்பன்!

அவர்களுடைய குடும்பத்தில் துக்க நிகழ்ச்சிகள் நேரும். அப்போதெல்லாம் சநாதன் இடிந்துபோய் விம்மி விம்மி அழுவான். துன்பச் சுமையால் தலை நிமிர முடியாது பெண் ணுக்கு. அவள் முந்தானையால் கண்களை மூடிக்கொண்டு பொருமிப் பொருமி அழுவாள். அருகிலிருந்து பார்ப்பவர்கள் உணர்ச்சிவசப் படுவார்கள், கண்ணீர் விடுவார்கள், பெருமூச்சு விடுவார்கள்.

சநாதனுக்கு உலகத்தில் சுதாவைத்தவிர வேறு நாதியில்லை. அவளுக்குக் கல்யாணமானதும் அவளைப் புக்ககத்துக்கு அனுப்பும்போது சநாதனின் மனம் என்ன பாடுபடும்!

கல்யாணத்துக்கு மறுநாள் பிள்ளை வீட்டுக்காரர்களும் வேறு சிலரும் சுதாவைப் புக்ககத்துக்கு அழைத்துச் செல்லத் தயாராகிய போது சநாதன் விம்மி விம்மி அழுதான். சுதா பொருமிப் பொருமி அழுது தீர்த்தாள்.

ஆனால் ஒரு மாதம் கழிவதற்குள்ளேயே சுதாவின் கணவனுக்கும் மற்ற புக்ககத்தாருக்கும் நன்றாகத் தெரிந்துவிட்டது. அப்பாவுக்கேற்ற பெண்தான் சுதா என்று. சநாதன் சரியான மோசக்காரன், சுதா பலே மோசக்காரி. மனிதர்களை ஏமாற்றும் தந்திரத்தில் இருவருமே கை தேர்ந்தவர்கள். ஒருவருக்கொருவர் இளைத்தவர் அல்ல. அப்பனுக்கேற்ற பெண்!

“பெண்ணுக்கேற்ற அப்பன்!” என்றது போலீஸ். இந்த மாதிரி மூன்று தடவை நடந்து விட்டது. இது மூன்றாவது நிகழ்ச்சி. முதல் தடவை தாரகேஸ்வரிலும், இரண்டாவது தடவை பசீர்ஹாட்டிலும் இதே மாதிரி மோசடி நிகழ்ந்திருக்கிறது. இரண்டுமாத இடைவெளிக்குள் இரண்டு மோசடிகள். இது மூன்றாவது. மூன்றிலும் ஒரே அப்பனும் ஒரே பெண்ணும் சம்பந்தப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது. இதுதான் அவர்களுடைய தொழில்.

பாட்பாராவின் கடைத்தெருவுக்கருகில் ஒரு சந்தில் பூட்டப் பட்டிருந்த ஒரு சிறு அறையின் பூட்டை உடைத்துச் சோதனை செய்தது போலீஸ். ஆனால் அந்த அறைக்குள் ஒரு துரும்புகூட இல்லை. சநாதனும் சுதாவும் ஏதோ ஒரு மந்திரம் போட்டுக் காற்றோடு காற்றாக மறைந்துபோய்விட்டார்கள். அவர்கள் எப்போது ஓடிப்போனார்கள், எங்கு போனார்கள் என்று யாருக்கும் தெரியவில்லை. ஒரு மாதத்துக்கு முன்னால் அப்பனும் பெண்ணும் விம்மி விம்மியழுவதைப் பார்த்து உணர்ச்சி வசப் பட்டுத் தாங்களும் அழுதுவிட்ட அக்கம் பக்கத்தாருக்கு அதைப் பற்றி நினைத்தாலே வெட்கமாயிருந்தது. ‘இந்த உலகம் ஒரு அதிசயமான மிருகக் காட்சிசாலைதான், இதிலே என்னென்ன ஆச்சரியங்கள் நடக்குது! என்று வியந்தார்கள் அவர்கள்.

“மிருகக்காட்சி சாலையிலே இந்த மாதிரி அசிங்கமெல்லாம் நடக்காது, மனுஷங்களோட சமூகத்திலேதான் இப்படியெல்லாம் நடக்கும்” என்று சிலர் சொன்னார்கள்.

ஒருவர் சொன்னார், “நம்ம தெருவிலே நம்ம கண்ணுக்கு முன்னாலே இந்த மாதிரி ஒரு மோசடி நடந்துடுச்சுங்கறது வெட்ககரமான விசயம். ஒரு ஆம்பளையும் ஒரு பொண்ணும் எங்கேயிருந்தோ வந்து ஒரு சில நாளுக்குள்ளேயே நம்ம எல்லாரையும் முட்டாளாக்கிட்டு மாயமா மறைஞ்சு போயிட் டாங்களே! அவங்க மேலே யாருக்கும் சந்தேகம் வரலியே!”

ஆமாம், யாரும் அவர்கள் மீது சந்தேகப்படவில்லை. அப்பன், மகள் இருவருடைய இந்தப் பரிதாப அழுகைக்குப் பின்னால் ஒரு மோசடிச் சதி சிரித்துக் கொண்டிருக்கிறது என்பது அந்தத் தெருவாசிகளுக்கோ மாப்பிள்ளை வீட்டாருக்கோ தெரியவில்லை. எப்படித் தெரியும்? அந்த அழுகையை நினைத்தால் இப்போது கூட அது ஒரு பாசாங்கு என்று அவர்களால் எண்ணமுடிய வில்லை.

உண்மையில் அவர்கள் அப்பன் – மகள் தான் என்று போலீசுக்குத் தெரிய வந்தது. அவர்கள் ஒவ்வோரிடத்தில் ஒவ்வொரு புதிய பெயர் வைத்துக்கொண்டு சில நாட்கள் தங்குவார்கள். பிறகு பெண்ணுக்குக் கல்யாணமாகும். பெண் சில நாட்களுக்குப் பிறகு தகப்பனுடன் மாயமாய் மறைந்து விடுவாள்.

ஒரு மாதத்துக்குப்பின் ஒரு அந்தி வேளையில் மணமகனுக் குரிய குல்லாய் அணிந்துகொண்டு – ஓர் ஏழைத்தந்தையின் பெண்ணைக் கல்யாணம் செய்துகொண்டு போனவர் – தம் மனைவியைத் தேடிக்கொண்டு மாமனார் வீட்டுக்கு வருவார். தெருவாசிகள் வெட்கிப்போய், குற்ற உணர்வுடன் அவரைப் பார்த்துக்கொண்டு நிற்பார்கள். அந்தத் தெருவிலுள்ள சில இளைஞர்கள் முகத்தைத் திருப்பிக் கொண்டு சிரிப்பதுமுண்டு.

மனிதர் சற்று வயதானவர், நாற்பத்தைந்து வயதுக்குமேல் ஏறக்குறைய ஐம்பது வயது இருக்கும். நைஹாட்டியில் துணிக் கடை வைத்திருக்கிறார். மனைவியையிழந்தவர். குழந்தை குட்டி இல்லை. மறுமணம் செய்து கொள்ள விரும்பவில்லை அவர். ஆனால் சநாதனுடன் பழக்கமேற்பட்டு அவனுடைய வறுமை நிலையைப் பற்றிக் கேள்விப்பட்டபோது அவருக்கும் இந்த வயதில் குடும்ப வாழ்க்கையில் ஒரு துணைவியின் புன்சிரிப்பைப் பெறும் ஆவல் ஏற்பட்டு விட்டது. ஒருநாள் அவர் சநாதனின் அழைப்பையேற்று இந்த சந்தில் இந்த வீட்டுக்கு வந்து கொஞ்சம் பாயசமும் கொழுக்கட்டையும் சாப்பிட்டுவிட்டு ஒரு குமரிப் பெண்ணின் சுமையிலிருந்து சநாதனை விடுவிக்கத் தீர்மானித்து விட்டார். தன் சாதியைச் சேர்ந்த ஒர் அழகான, ஏழைப்பெண் இந்த மாதிரி, கல்யாணத்துக்கு வழியின்றி, இந்த இருட்டுச் சந்தில் முடங்கிக் கிடப்பதைப் பார்க்க அந்த மனிதருக்குப் பொறுக்க வில்லை. நைஹாட்டி கணேஷ் வஸ்திராலயாவின் முதலாளியான அவர் சநாதனுக்கு ரொக்கப் பணம் ஐநூறு ரூபாயும், கல்யாணத்தில் செய்யவேண்டிய தானப்பொருள்கள் வாங்கப் பணமும், பெண்ணுக்குப் பத்துப் பவுன் நகையும் கொடுத்து பெண்ணை கல்யாணம் செய்துகொடுக்க சநாதனைச் சம்மதிக்கச் செய்தார். கல்யாணத்துக்கு நாள் நிச்சயிக்கப்பட்டது. கல்யாணத் தன்று மணப்பெண்ணின் முக்காடு அணிந்த முகத்தைப் பார்த்துப் பூரித்துப் போனார் அவர். மறுநாள் காலையில் அவர் இதே வீட்டிலிருந்து விடைபெற்றுக்கொண்டு பெண்ணை அழைத்துப் போனார். பாவம், அவர்தான் போலீசுடன் வந்து அறைவாசலில் நிற்கிறார். கல்யாணத்துக்கு ஒரு வாரத்துக்குப்பின் சநாதன் பெண்ணைப் புக்ககத்திலிருந்து தன் வீட்டுக்கு அழைத்து வந்திருக் கிறான். அதற்குப் பிறகு அவர்கள் எவ்வளவு நாள் இருந்தார்கள் என்று ஒருவராலும் நிச்சயமாகச் சொல்ல முடியவில்லை.

நைஹாட்டிக்காரர் சநாதனுக்குக் கடிதம் எழுதியும் பதில் வராமல் போகவே ஒருநாள் தாமே சநாதனின் வீட்டுக்கு வந்திருக்கிறார். வீடு பூட்டிக் கிடக்கிறது!

போலீசுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்குமுன் இது மாதிரி இரண்டு தடவை நடந்து விட்டது. இது மூன்றாவது தடவை என்கிறது போலீஸ். அப்பன் பெண்ணின் உண்மைப் பெயர் போலீசுக்கும் தெரியாது.

தாரகேஸ்வரில் அவர்களிருவரும் பிராமண இனத்தவராக நடித்தார்கள். பசீர்ஹாட்டில் காயஸ்தர்களாகவும், பாட்பாராவில் வைத்திய சாதியினராகவும் நடித்திருக்கிறார்கள். தாரகேஸ்வரியில் அவர்களுடைய பெயர்கள் பிரசன்ன சக்ரவர்த்தி, சுநயனா. பசீர்ஹாட்டில் அவர்கள் சதானந்த கோஷ், மாதவி. இங்கே, பாட்பாராவில் அவர்கள் சநாதன் சென், சுதா என்ற பெயர் களோடு சிறிது காலம் வாழ்ந்து, அப்பனும் பெண்ணுமாக ஓர் அதிசய நாடகமாடிவிட்ட மாயமாய் மறைந்து போய்விட்டார்கள். கள்ளங் கபடற்ற மூன்று பேர்களை இவ்வாறு ஏமாற்றிவிட்டு அந்த மோசக்கார ஜோடி இப்போது எங்கு மறைந்து கொண்டிருக் கிறதோ!

அப்னுக்கேற்ற பெண், பெண்ணுக்குத் தகுந்த அப்பன்! இந்த மோசடியைப் பற்றி யோசித்துக்கொண்டே பாட்பாரா கிராமத்துச் சந்திலிருந்து திரும்பிப் போய்விட்டது போலீஸ். தெருவாசிகள் திகைத்துப்போய் நின்றார்கள். கணேஷ் வஸ்திராலயாவின் முதலாளி, சுதாவின் சாந்தமான, புன்சிரிப்பு தவழும் முகத்தை நினைத்துப் பார்த்து, “ஐயோ, இப்படியும் ஒரு மனுசன் இன்னொரு மனுசனை ஏமாத்துவானா!” என்று ஆச்சரியப்பட்டார்.

ஆனால் அதே சமயத்தில் பாட்பாராவாசிகளோ போலீசோ, கணேஷ் வஸ்திராலயா முதலாளியோ கற்பனையில்கூட நினைத்துப் பார்க்க முடியாத ஒரு நிகழ்ச்சி ராணா காட்டில் நிகழ்ந்து கொண்டிருந்தது. அங்கு ஒரு குடியிருப்புப் பகுதியில் ஒரு சிறிய வீட்டின் ஜன்னல் பக்கம் பார்த்துக் கொண்டிருந்த ஓர் இளைஞன் ஒரு மோசடி வலையில் விழத் தயாராகிக் கொண்டிருந்தான். அவன் பெயர் ரமேஷ். விஜய் பாபு என்பவரின் இளம் பெண் கரபியுடன் அவன் பேசிக் கொண்டிருந்தான்.

வீட்டுக்குள்ளிருக்கும் கரபி ஜன்னலருகில் நின்று கொண்டு மெல்லிய குரலில் வெளியே நிற்கும் ரமேஷைக் கேட்டாள், “நீங்க ஏன் இங்கே மறுபடி வரீங்க?”

உற்சாகம் பொங்கச் சிரித்தான் ரமேஷ். “ஒரு ஜோசியர் என் கையைப் பார்த்து என்ன சொல்லியிருக்கார் தெரியுமா..? எனக்கு வரப்போற மனைவியின் பெயர் ‘க’விலே தொடங்குமாம்!”

கரபி சிரித்துவிட்டுச் சொன்னாள், “ஆனா நீங்க இப்படி தினம் ஜன்னல் பக்கம் வந்து நின்னா நாலு பேர் நாலு சொல்லு வாங்க. எனக்குக் கெட்டபேர் வரும். வேறே ஒண்ணும் லாபமில்லே!”

“என்னால வராம இருக்க முடியலியே, கரபி! நீ என்னை முதமுதல்ல பார்த்த அன்னிக்கே எனக்குத் தெரிஞ்சு போச்சு, உன்கிட்டேதான் எனக்கு அமைதியும் சுகமும் கிடைக்கும்னு!”

“இதெல்லாம் உங்க மாதிரி பெரிய மனுசங்களோட கிறுக்குத்தனம். இப்போ இங்கே வரப் பிடிக்குது உங்களுக்கு. இன்னுங் கொஞ்சநாள் கழிச்சு இந்தப் பக்கத்து நினைவே வராது ஒங்களுக்கு. வரப்பிடிக்காது இங்கே வரவும் மாட்டீங்க. பின்னே ஏன் அனாவசியமா..”

“நான் பெரிய மனுசனும் இல்லே, பெரிய மனுசங்களோட கிறுக்குத்தனமும் எனக்கில்லே. ஒன்னைப் பார்க்காம இருக்க முடியல்லேன்னுதான் ஓடியோடி வரேன் ஒன்கிட்டே.”

“நீங்க பெரிய மனுசர் இல்லியா?”

“இல்லவேயில்லே!”

“நீங்க என்ன வேலை செய்யறீங்க?”

“நான் ஆர்ட்டிஸ்ட்.”

“அப்படீன்னா?”

“நீ கல்கத்தாவுக்குப் போயிருக்கியா?”

“உம், அங்கே கொஞ்சநாள் இருந்திருக்கேன்.”

“சினிமா பார்த்திருக்கியா?”

“ஒண்ணு ரெண்டு பார்த்திருக்கேன்.”

“சினிமா தியேட்டர் சுவரிலே பெரிய பெரிய படம் போட்டிருக்குமே பார்த்திருக்கியா?”

“பார்த்திருக்கேன்.”

“அந்த மாதிரிப் படம் வரையறது என் தொழில்.”

“அதுக்கு காசு கொடுக்கறாங்களா?”

“ஆமா. அதுதான் என் வருமானம். கடவுள் கிருபையால் என் சம்பாத்தியம் அப்படியொண்ணும் கொறைச்சலில்லே..”

“மாசம் அம்பது ரூவா கிடைக்குமா?”

“கிடைக்கும்.”

“சரியா எவ்வளவு கிடைக்கும்? சொல்லுங்க!”

“எவ்வளவு கிடைச்சா என்ன? ஒன்னை சந்தோஷமா வச்சுக்க முடியும் என்னாலே.”

கரபி முகத்தை ‘உம்’மென்று வைத்துக்கொண்டு சொன்னாள், “ஆமா,ஒரு பரம ஏழையோட பொண்ணை சந்தோசமா வச்சுக்க என்னவேணும் – வருசத்துக்கு ஒரு ஜோடி புடைவை, தினம் ஒருவேளைக்கு ரெண்டுபிடி சோறு. அவ்வளவுதானே!”

முகத்தைச் சுளித்தான் ரமேஷ். “ஏன் இப்படிச் சொல்றே? நான் வருசத்திலே ஒரு ஜோடி வேட்டிதான் வாங்கிக் கட்டிக்கறேனா? தினம் ஒரு வேளை ரெண்டு பிடி சோறுதான் சாப்பிடறேனா?”

“அப்படீன்னா ஒங்ககிட்டே பணமிருக்குன்னு சொல்லுங்க!” என்று சொல்லிச் சிரித்தாள் சுரபி.

“ஒன்னை அலங்காரம் பண்ணி வச்சுக்கும்படி, ஒனக்கு கஷ்டமில்லாமே ஒன்னை வச்சுக்கக்கூடிய அளவுக்கு என்கிட்டே காசு இருக்கு” என்று சொல்லிய ரமேஷ் பக்கத்திலிருந்த ஒரு பணக்கார மார்வாடியின் மாளிகையைச் சுற்றிக்காட்டி, “அந்த வீட்டுக்காரன் மாதிரி நான் பணக்காரனில்லே, நீயுமில்லே, அதனாலே..” என்றான்.

“கல்யாணச் செலவுக்குக் காசு எங்கேயிருந்து வரும்?”

ரமேஷ் சற்றுநேரம் பேசாமல் யோசித்துக் கொண்டிருந்தான். பிறகு “விஜய் பாபுகிட்டே கொஞ்சங்கூடப் பணம் இல்லையா?”

கரபியின் கண்களில் நீர் துளிர்த்தது. “இருந்தால் இப்படி..”

“எவ்வளவு பணம் தேவைப்படும்?”

“ஒரு கௌரவமான குடும்பத்துப் பெண்ணைக் கல்யாணம் செய்துவைக்கணும்னா ரொம்பக் குறைச்சலா செலவு செஞ்சாலும் ரெண்டாயிரம் ரூபாயாவது ஆகுமே!”

“ரெண்டாயிரமா?”

கரபியின் கண் மூலையில் சந்தேகமும் எரிச்சலும் தென்பட்டன, “என்ன யோசிக்கிறீங்க? இந்த ரெண்டாயிர ரூவா கூட ஒங்களாலே ஏற்பாடு செய்ய முடியாதா?”

“முடியும். ஆனா இவ்வளவு சீக்கிரமா ஏற்பாடு பண்ற துன்னா.. நூறு, இருநூறுன்னு பல எடத்திலே கடன் வாங்கறதைத் தவிர வேறே வழியில்லே” என்று வருத்தத்துடன் சொன்னான் ரமேஷ்.

“அப்படீன்னா அதையே செய்யுங்க.. கடன் வாங்கினாப் பின்னாலே திரும்பிக் கோடுத்துடலாம். நீங்க தாமதம் பண்ணினா..?” கரபியின் பேச்சு தடைபட்டது. அவளது கண்களில் நீர் பளபளத்தது.

“என்ன ஆச்சு?”

“நெசமாவே நீங்க என்னைக் காதலிக்கிறீங்களா?”

“ஆமா, கரபி”

“அப்போ சீக்கிரம் ஏற்பாடு பண்ணுங்க! இல்லேன்னா நான் தற்கொலை செஞ்சுக்க வேண்டியதுதான்!”

“ஏன் இப்படிச் சொல்றே?” ரமேஷ் திகைத்துப் போய்க் கேட்டான்.

“வைத்தியவாடியிலே ஒரு கிழவனக்கு என்னை ரெண்டாந் தாரமாகக் கொடுக்க ஏற்பாடு செய்யறார் என் அப்பா. அந்தக் கிழவன் கல்யாணச் செலவுக்காக அப்பாவுக்க மூவாயிர ரூவா தர்றதாச் சொல்லியிருக்கான்..”

ரமேஷ் தான் சாய்ந்திருந்த சைக்கிளின் கைப்பிடியைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். அவனுடைய முகத்திலும் கண்களிலும் ஒரு உறுதி வெளிப்பட்டது. அவன் கரபியைப் பார்த்துச் சொன்னான், “அந்தக் கல்யாணம் நடக்க விட மாட்டேன், கரபி! அந்தக் கிழவனோட பணத்தைத் தொட வேணாம்னு நீ ஒன் அப்பாகிட்டே சொல்லி வை! சைக்கிளின் மிதியை அழுத்தியவாறு அவன் உரக்கச் சொன்னான், “கரபி, எல்லாக் கல்யாணச் செலவும் என்னுது! நான் இன்னும் பத்து நாளிலே வந்து உன்னைக் கல்யாணம் பண்ணிக் கூட்டிக்கிட்டுப் போயிடறேன்!”

ராணாகாட் வீட்டில் கலியாணச் சடங்கு அடக்கமான முறையில் நடந்தேறியது. அந்தத் தெருவுக்கு வந்து வசித்த நாட்களிலேயே ஏழைத் தந்தையும் பெண்ணும் தங்கள் நடத்தை யால் தெருவாசிகளின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டு விட்டனர். விஜய் பாபு அவர்களுக்கு எளியமுறையில் ஒரு விருந்து வைக்க விரும்பினார். ஆனால் அந்த அனாவசியச் செலவு வேண்டாமென்று தெருவாசிகளே தடுத்து விட்டார்கள். “உங்கள் நிலையில் உள்ளவர்கள் இந்தச் செலவெல்லாம் செய்யக்கூடாது!” என்று சொல்லிவிட்டார்கள் அவர்கள்.

விஜய்பாபு ஆயிரத்தைநூறு ரூபாய் செலவில் பெண்ணுக்கு நகைகள் செய்து போட்டார். மிகவும் எளிய முறையில் கல்யாணத்தை நடத்தினார். அவர் தன் வாழ்நாள் சேமிப்பு முழு வதையும் இந்தக் கலியாணத்துக்காகச் செலவு செய்து விட்டதாகத் தெருக்காரர்கள் நம்பினார்கள். அவர் இவ்வளவு நகைகள் போட்டிருக்க வேண்டாம், காரணம் பிள்ளைவீட்டிலிருந்து எந்தவிதக் கோரிக்கையுமில்லை. இருந்தாலும் கரபி அவருடைய ஒரே பெண். அவளுக்கு நல்ல முறையில் கல்யாணம் செய்து பார்க்க வேண்டும் என்ற ஆசையிருக்காதா அவருக்கு! இதன் விளைவாக அவர் பக்கிரியாகி விட்டார், பாவம்! தன் பெண்மேல தான் எவ்வளவு பிரியம் அவருக்கு..!

கரபி ரமேஷ் கொடத்த பணத்தில் நகை வாங்கிப் போட்டுக் கொண்டு அவனுடைய மனைவியாகப் புக்ககம் சென்றாள். தாரகேஷ்வர், பசீர்ஹாட், பாட்பாரா ஆகிய இடங்களில் நிகழ்ந்தது போலவே இப்போதும் கரபி தந்தையிடமிருந்து விடைபெறும் போது ஓர் உருக்கமான காட்சி அரங்கேற்றப்பட்டது. விம்மி விம்மியழுதார் விஜய்பாபு, பொருமிப் பொருமியழுதாள் கரபி.

இவ்வாறு ராணாகாட்டின் ஒரு தெருவில் வசிப்பவர்களின் கண்களை நீரில் முழுக்காட்டிவிட்டு விடைபெற்ற கரபி அன்று மாலையில் கல்கத்தாவின் பாக் பஜார் பகுதியில் ஒரு குறுகிய சந்தில் ஒரு சிறு வீட்டுக்கு வந்து சேர்ந்தாள்.

அதற்கு இரண்டு நாட்களுக்குப்பின் அந்த வீட்டில் இரவு முழுதும் பிரகாசமாக விளக்கு எரிந்தது. முதலிரவையொட்டி விருந்து. விழாவில் ஆர்ப்பாட்டமில்லை, ஆனால் மகிழ்ச்சிக்கும் சத்தத்துக்கும் பஞ்சமில்லை. இந்த உலகத்தில் ரமேஷுக்கு வேண்டியவர்களாயிருந்த ஒரு சிலர் இந்த விழாவில் பங்கேற்றனர். ரமேஷின் சித்தி தன் மூன்று பெண்களுடன் வந்திருந்தாள். ஒரு சித்தப்பா தன் பத்துக் குழந்தைகளுடன் வந்தார். ரமேஷின் இரு நண்பர்களின் தாய்களும் ஒரு நண்பனின் மனைவியும் வந்தார்கள். பெண்ணைப் பார்த்து எல்லாரும் மகிழ்ந்தார்கள். ஓர் இரவும் அதையடுத்த பகலும் அந்த அறை விருந்தினர்களின் மகிழ்ச்சி யொலிகளால் கலகலப்பாயிருந்தது.

அவர்கள் எல்லாரும் புறப்பட்டுச் சென்றபோது மாலை வெயில் ஜன்னல் வழியே அறைக்குள் நுழைந்தது. புதுமணப் பெண் ஓர் ஆழ்ந்த பெருமூச்சு விட்டாள். முக்காட்டை விலக்கிக் கொண்டு மை தீட்டிய தன் பெரிய விழிகளைச் சுழற்றி அறையின் நாற்புறமும் பார்த்தாள். ரமேஷோ அவளுடைய முகத்தையே பார்த்துக் கொண்டு நின்றான்.

“கரபி, நான் ஒன் படம் வரையப் போறேன். ரெண்டு நாளிலே வரைஞ்சு முடிச்சிடுவேன்.. அப்போ ஒனக்குத் தெரியும் என்னாலே என்ன செய்ய முடியும்னு..” ரமேஷ் சொன்னான்.

“நீங்க என்ன சொல்றீங்க, புரியலியே!”

“ஒன் ரெண்டு கண்ணையும் அப்படியே தத்ரூபமாச் சித்திரத்தில் தீட்டிடுவேன்!”

தீட்டி வையுங்க, நான் திரும்பி வந்து பார்க்கறேன்.”

“எங்கே போகப் போறே?” ரமேஷ் வியப்புடன் கேட்டான்.

“அப்பாகிட்டே.”

“போகலாம் .. ஆனா இன்னிக்கி நாளைக்கிப் போகப் போறதில்லியே?”

“போக ஆசையில்லேதான்.. ஆனா அப்பா வந்து கூப்பிட்டா போகாம இருக்கமுடியாது.”

“ஒன் அப்பா வரப்போறதாச் சொல்லியிருக்காரா?”

“சொல்லலே.. ஆனா நாளைக் காலம்பரவே வந்தாலும் வந்துடுவார்” என்று சொல்லிவிட்டுச் சற்று நேரம் மௌனமா யிருந்தாள் கரபி. பிறகு திடீரென்று பொறுக்க முடியாத வேதனையால் துடிப்பவள்போல், “அப்பா ஞாபகம் வந்தால் ரொம்பக் கஷ்டமாயிருக்கு எனக்கு.. இன்னும் அழுதுக்கிட் டிருப்பார் அவர்!” என்றாள்.

ரமேஷ் அவளுக்கு ஆறுதல் கூறினான். ” அது இயற்கைதான். நீ அவரோட ஒரே பொண்ணு. அவரோட வருத்தம் எனக்குப் புரியுது. ஆனா .. சரி, ஒன் அப்பா வரட்டும். நானே அவருக்கு சமாதானம் சொல்றேன்.”

“என்ன சொல்லுவீங்க?”

“அவர் இன்னும் ஒரு மாசங்கழிச்சு ஒன்னைக் கூட்டிக்கிட்டுப் போகட்டும், இப்பவே வேணாம்னு..”

அப்பா சம்மதிக்க மாட்டார்.. நீங்களும் அவரோட ஆசையைத் தடுக்காதீங்க, அவருக்கு வேதனை கொடுக்காதீங்க!”

” ஆனா என்னோட கஷ்டம் அவருக்குப் புரியாதா?” ரமேஷ் வருத்தத்தோடு கேட்டான்.

“ஒங்களுக்கு என்ன கஷ்டம்?”

“நீ நாளைக்கு அவரோட போயிட்டா எனக்கு ரொம்பக் கஷ்டமாயிருக்குமே, கரபி!”

மை தீட்டிய தன் பெரிய கண்களால் ரமேஷை உற்றுப் பார்த்தாள் கரபி.

“அப்டி நீ போகத்தான் வேணும்னா நானும் ஒன்னோட வரேன். ரெண்டுநாள் அங்கேயிருந்துட்டு மறுபடி உன்னைக் கூட்டிக்கிட்டு வந்துடறேன்.”

“ஒங்களுக்கு சுயமரியாதை இல்லியா? மாமனார் அழைக்காமே நீங்க அவர் வீட்டுக்குப் போகலாமா?”

“ஒன் அப்பா என்னை அழைக்க மாட்டாரா? ஏன்?”

“ஏனோ, தெரியாது” தயங்கித் தயங்கிச் சொன்னாள் கரபி.

“நீயாவது ஒன் அப்பாகிட்டே சொல்லலாமே!”

“என்ன சொல்றது?”

“அவர் என்னைத் தன் வீட்டுக்கு அழைக்கும்படி..”

“சீ, நான் என்ன வெட்கம், மானம் இல்லாதவளா? நான் எப்படி அப்பாகிட்டே இந்த மாதிரி கேப்பேன்? இது அவமானம் இல்லியா?”

ரமேஷ் பேசாமலிருந்தான்.

“ஏன் இவ்வளவு கோபமா இருக்கீங்க? ஏதாவது சந்தேகமா இருக்கா?” கரபி கேட்டாள்.

“சந்தேகமா..? நான் ஏன் சந்தேகப்படணும்?”

“எனக்கு ஒங்ககிட்டே ஆசையில்லேன்னு சந்தேகம்..”

“அந்த மாதிரி சந்தேகம் வர்றதுக்கு முன்னாலே, நான் செத்துப் போயிடுவேன்!”

கரபியின் கண்கள் துடித்தன. ஏதோ ஓர் இனம்புரியாத பயம் அவளுடைய நெஞ்சைத் தாக்கியது. அவள் நடுங்கும் குரலில் மெதுவாகச் சொன்னாள், “நீங்க ஏன் சாகணும்? நானே செத்துப்போறேன். அதுக்கப்பறம் நீங்க இன்னொரு பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு வருவீங்க. என்னைப் பத்தி அவகிட்டே சொல்லிச் சிரிப்பீங்க.”

“வெளையாட்டுக்குக்கூட இந்தமாதிரி அச்சானியமாப் பேசாதே, கரபி!”

“அதிருஷ்டசாலியோட பெண்டாட்டி சாவாள்” என்று சொல்லிச் சிரித்தாள் கரபி.

“சீ, அசட்டுப் பேச்சு!” என்று சொல்லிக் கொண்டு ரமேஷ் அவளருகில் வந்து அவள் கையைப் பற்றிக் கொண்டான். “இந்த மாதிரிப் பொண்டாட்டி யாருக்கும் கிடைக்க மாட்டாள்!”

கரபி திடுக்கிட்டாள்.

“இந்த மாதிரி மனைவி செத்துப் போயிட்டா, அவளோட அதிருஷ்டங்கெட்ட புருசன் பிழைச்சிருந்து என்ன பிரயோசனம்!”

கரபி தன் கையை அவனிடமிருந்து விடுவித்துக்கொண்டு வேறுபக்கம் முகத்தைத் திருப்பிக் கொண்டாள். பிறகு எழுந்து போய்க் கட்டிலின் ஒரு மூலையில் உடம்பைக் குறுக்கிக்கொண்டு உட்கார்ந்தாள். அவளுக்கு ரமேஷின் முகத்தைப் பார்க்கவோ, ரமேஷுக்குத் தன் முகத்தைக் காட்டவோ விருப்பமில்லை என்று தோன்றியது.

இருட்டி விட்டது. கரபி திடீரென்று, “சாப்பிடப் போற தில்லையா, எனக்கும் சாப்பாடு போடப் போறதில்லையா?” என்று கேட்டாள்.

“ஏன் இப்படிக் கேக்கறே?”

“நீங்க என்னை சமைக்கவும் சொல்லலே, சாப்பாடும் வெளியிலிருந்து வரவழைக்கலியே!”

இதைக்கேட்டு ரமேஷுக்கு ஒரே மகிழ்ச்சி. “நீ சமைக்கறியா?” என்று கேட்டான்.

“ஆமா, இன்னிக்கு ஒரு ராத்திரிதானே! சமைச்சுப் போட்டுட்டுப் போறேனே!” கரபி சிரித்தாள்.

ரமேஷும் சிரித்துக்கொண்டு சொன்னான், “இந்த விஷயத்தைச் சொல்றதுக்குத்தான் இவ்வளவு நேரம் தவிச்சுக் கிட்டிருந்தேன்.”

“எந்த விஷயம்?”

“இவ்வளவு காலமாத்தான் ஓட்டல் சாப்பாடு சாப்பிட்டுக் கிட்டிருந்தேன், இப்போ நீ வந்தப்பறமும் ஓட்டல் சாப்பாடு சாப்பிடக் கொஞ்சங்கூடப் பிடிக்கலே எனக்கு.”

“என் கைச்சமையல் சாப்பிட அவ்வளவு ஆசையா ஒங்களுக்கு?”

“ஆமா.”

கரபி ஏதோ நினைவில் ஆழ்ந்தவள்பொல் வேறு பக்கம் பார்த்தவாறு திடீரென்று சொன்னாள், “நீங்க இந்த மாதிரி ஆசைப்படாம இருந்திருந்தா நல்லாயிருந்திருக்கும்.”

“அதெல்லாமில்லே. நான் வெகுகாலம் இந்தமாதிரி ஆசைப்பட்டுக்கிட்டுதான் இருப்பேன்.”

இதன்பின் சிறிது நேரத்தில் அந்த பாக் பஜார் சந்து வீட்டுக்குள்ளிருந்து கரிப்புகை வெளியே மிதந்து வந்தது. ஒரு புதிய மணப்பெண்ணின் புதுக் குடித்தனம் தொடங்கும் மகிழ்ச்சி, பாத்திரங்களும் கரண்டிகளும் எழுப்பும் ஒலியில் வெளிப்பட்டது. புதுக் குடித்தனக்காரி தன் புதுப்புடவையின் தலைப்பை இடுப்பில் செருக்கி கொண்டு, கையில் மஞ்சள் அப்பிக் கொண்டிருந்ததால் புறங்கையால் நெற்றியில் விழுந்திருந்த முடிக்கற்றைகளை விலக்கியவாறு சமையல் செய்தாள்.

சமையல் முடிந்ததும் கரபி ரமேஷ் சாப்பிட உட்காரப் பலகையை போட்டாள்.

ரமேஷ் பலகையின் மேல் உட்கார்ந்து கொண்டு கரபியின் முகத்தைப் பார்த்தான். அவளிடம் ஏதோ சொல்லத் துடித்தான் போலும்.

“சாப்பிட ஒக்காந்துகிட்டு ஏன் இவ்வளவு கடுமையா இருக்கீங்க?”

“ஒண்ணு சொல்லவா?”

“சொல்லுங்க.”

“தனியா சாப்பிடப் பிடிக்கலே.”

“அப்படீன்னா?”

“நீயும் வந்து ஒக்காரு! நாம ரெண்ணு பேரும் ஒரே தட்டிலே சாப்பிடலாம்.”

கரபி திடுக்கிட்டாள். ஒன்றும் சொல்லத் தெரியாமல் திகைத்துப் போய் நின்றாள்.

ரமேஷ் எழுந்து நின்றான்; சிரித்துக்கொண்டே அவளுடைய கையைப் பிடித்து அவளை வலுக்கட்டாயமாகத் தனக்கருகில் உட்கார்த்தி வைத்துக்கொண்டு சொன்னான், “இனிமேல் இந்த மாதிரி வாய்ப்பு கிடைக்கறது கஷ்டம். எனக்கு வேலைப்பளுவிலே நேரங்கிடைக்காது. ஒன்னோட ஒக்காந்துகிட்டு ஒரே தட்டிலே சாப்பிடற மகிழ்ச்சி வாழ்க்கையிலே இன்னும் எவ்வளவு தடவை கிடைக்குமோ, யார் கண்டாங்க?”

கரபியும் ரமேஷும் சேர்ந்து சாப்பிடத் தொடங்கினர். அவர்கள் சேர்ந்தாற்போல் ஒரு சுடு சோற்றுக் கட்டியை உதிர்த் தார்கள். வாழ்க்கையில் ஒரு புதிய விளையாட்டு விளையாடும் மனநிலை அவர்களுக்கு.

சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது கரபி அழுகை தொனிக்கும் குரலில் கேட்டாள், “ஒங்க வேலை ரொம்பக் கஷ்டமானதா?”

“ஆமா! வேலை யாருக்கும் தயவு தாட்சணியம் காட்டாது – நான் எவ்வளவோ நாள் காய்ச்சலோட வேலைக்குப் போயிருக்கேன்!”

“ஏன் இவ்வளவு கஷ்டப்பட்டு ஒழைக்கணும்?”

வயித்துக்காகத்தான்.”

“எவ்வளவு சம்பாதிப்பீங்க?”

“ஒர மாசம் அம்பது ரூவா கிடைக்கும், ஒரு மாசம் நூறு கிடைக்கும், இன்னொரு மாசம் ஒண்ணுமே கிடைக்காது.”

“இப்போ நான் வேறே வந்து சேர்ந்திருக்கேன், அதனால நீங்க இன்னும் ஒழைச்சுப் பைத்தியமாயிடுவீங்க!”

“இல்லவேயில்லே, இனிமேல நான் சந்தோஷமா ஒழைப்பேன், இன்னும் கடுமையா ஒழைப்பேன்.”

“நீங்க நிறையக் கடன் வேறே வாங்கியிருக்கீங்கீள!”

ரமேஷ் தன் கடன் சுமையை மிகவும் அற்பமாகக் கருதுபவன் போல் சிரித்தான். “ரெண்டு வருஷம் கொஞ்சம் கொஞ்சம் கூட வேலை செஞ்சு அதை அடைச்சுடுவேன். அதைப்பத்திக் கவலை யில்லே எனக்கு.”

சட்டென்று தலையைக் குனிந்துகொண்டாள் கரபி. குனிந்த தலையைக் கையால் தாங்கிக்கொண்டு சற்று நேரம் பேசாமலிருந்தாள்.

“என்ன ஆச்சு, ஏன் சாப்பிடாம இருக்கே?” ரமேஷ் கேட்டான்.

கரபியிடமிருந்து பதிலில்லை.

அவன் அவளுடைய அசைவற்ற கையைப் பார்த்தவாறு உட்கார்ந்திருந்தான். சற்று நேரத்துக்குப்பின் எதையோ பார்த்து விட்டுத் திடுக்கிட்டு, “இதைன்ன கரபி?” என்று வேதனைக் குரலில் கத்தினான்.

கரபியின கண்களிலிருந்து ஒரு துளி நீர் அவனது கையின் மேல விழுந்திருந்தது.

கரபி எழுந்து கை கழுவிக் கொண்டாள். இடுப்பில் செருகி யிருந்த புடவைத் தலைப்பைப் பிரித்துக் கண்களைத் துடைத்துக் கொண்டு சொன்னாள், “கேளுங்க!”

“என்ன?”

“ஒங்களுக்குப் பிழைச்சிருக்க ஆசையா?”

“இது என்ன கேள்வி?”

“நீங்க பிழைச்சிருக்கணும்னா இப்பவே போலீசைக் கூப்பிட்டு என்னைப் பிடிச்சுக் குடுத்திடுங்க!”

ரமேஷ் திடுக்கிட்டான். “ஒன் பேச்சுக்கு என்ன அர்த்தம்?”

“நான் ஒங்களை ஏமாத்த வந்திருக்கேன். நான் ஒங்க சாதியில்லே, நான் குமரியில்லே, என் பேரும் கரபி இல்லே.. நான்.. நான் ஒர மோசக்கார அப்பனோட மொசக்காரப் பொண்ணு. நான் ஒங்களோட குடித்தனம் நடத்த வரல்லே, ஓடிப்போறதுக்காக வந்திருக்கேன்!”

கரபியின் நடத்தையைப் பார்த்தால் அவள் ஒரு நாடகப் பாத்திரமாக மாறி வேடிக்கையாக நடித்துக் காட்டுவதாகத் தோன்றியது; விளையாட்டுக்காக ரமேஷைப் பயமுறுத்துகிறாள் என்று தோன்றியது.

வெகுகாலத்துக்கு முன் ரமேஷ் பார்த்த ஒரு நாடகத்தில் இப்படித்தான் ஒரு ராட்சசி ராஜகுமாரியாக உருமாறி வந்து ஒரு ராஜாவை மயக்கிக் கல்யாணம் செய்து கொள்கிறாள். பிறகு திடீரென்று இதே மாதிரிதான் சற்றும் கூச்சமில்லாமல் தன்னைப் பற்றிய உண்மையை வெளிப்படுத்தி அந்த ராஜாவைப் பயமுறுத்து கிறாள். ரமேஷுக்கு அந்த நாடகத்தின் பெயரோ அந்த அதிர்ஷ்டங்கெட்ட அரசனின் பெயரோ நினைவு வரவில்லை.

கரபியின் பேச்சு நடிப்புதான் என்றாலும் ரமேஷுக்குச் சற்று பயம் ஏற்பட்டது. தனக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப் படுவதுபோல் தோன்றியது அவனுக்கு. அவன் அவளது முகத்தை உற்றுப் பார்த்தான். இந்த முகம் உண்மையிலேலே ஒரு மோசக் காரியின் முகமாக இருக்க முடியுமா?

“நீங்க போலீசைக் கூப்பிட்டு என்னைப் பிடிச்சுக் குடுக்க மாட்டீங்கன்னு எனக்குத் தெரியும், நீங்க அசடு, திராணி யில்லாதவர்!” என்று சொல்லிவிட்டுக் கரபி தன் நகைகளை ஒவ்வொன்றாகக் கழற்றித் தரையில் வைக்கத் தொடங்கினாள். “இந்தாங்க, ஒங்க ஆயிரத்தைநூறு ரூவாயாவது தப்பிச்சுது..! இப்போ என்னைப் போகவிடுங்க!”

“எங்கே போகப்போற!”

கரபியிடமிருந்து பதிலில்லை.

“ஒன் பயங்கர அப்பன்கிடடயே திரும்பிப் போகப்போறியா?” கடுமையான குரலில் கேட்டான் ரமேஷ்.

இப்போதும் கரபியிடமிருந்து பதிலில்லை.

“என் கேள்விக்குப் பதில் சொல்லு, கரபி!”

“நீங்க என்னைப் போகவிட விரும்பலேன்னு சொல்றீங்களா?” கரபி அழுதுகொண்டே கேட்டாள்.

சற்றுநேரம் பேசாமல் யோசனையிலாழ்ந்திருந்தான் ரமேஷ். பிறகு கண்களில் நீர் மல்கக் கரபியின் கைகளைப் பிடித்துக் கொண்டு சொன்னான், “ஒன்னைப் போகவிட எனக்கு இஷ்ட மில்லே.”

“அப்படீன்னா நான் சொல்றதைக் கேளுங்க!”

“சொல்லு.”

“நாம ரெண்டு பேரும் இங்கேயிருந்து ஓடிப் போயிடுவோம்.”

“எங்கே?”

“நீங்க எங்கே கூட்டிக்கிட்டுப் போனாலும் சரி!”

ரமேஷ் அதற்குமேல் தாமதிக்கவில்லை. அன்றிரவே அந்தச் சிறிய வீடு காலியாகி விட்டது.

மோசக்காரன் ஏமாந்து போய்விட்டான் இந்தத் தடவை. மறுநாள் காலையில் ராணாகாட்டிலிருந்து அந்த பாக்பஜார் வீட்டுக்கு வந்த விஜய் பாபு வாசலில் பூட்டு தொங்குவதைக் கண்டான். கெட்டியான, ஈவிரக்கமற்ற பூட்டு. கதவிடுக்கு வழியே உள்ளே பார்த்தான். அறைக்குள் ஒன்றுமில்லை. ஒரு பயங்கர சூனியம்!

ஆனால் விஜய்பாபு திகைப்புடன் வெகுநேரம் நின்று கொண்டிருக்கவில்லை அங்கே. சிறிது நேரத்திற்குள் போலீஸ் வந்து அவனைப் பிடித்துக் கொண்டது.

உரக்க அழத் தொடங்கினான் விஜய் பாபு. “சீ, பொண்ணா யிருந்துக்கிட்டு அப்பாவையே ஏமாத்திட்டியே மோசக்காரி..!”

(கல்ப சங்கரஹ, 1/1970)

வங்கச் சிறுகதைகள்
தொகுப்பு : அருண்குமார் மகோபாத்யாய்
வங்கத்திலிருந்து தமிழாக்கம்: சு.கிருஷ்ணமூர்த்தி
நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா

நன்றி: http://www.projectmadurai.org/

சுபோத் கோஷ் (1910 – 1980)
அசாதாரணத் திறன் வாய்ந்த எழுத்தாளர். கதை, நாவல், கட்டுரை படைப்பதில் தேர்ந்தவர். பலதுறைகளிலும் ஈடுபாடு கொண்டவர். இவர்து வாழ்க்கையின் முதற்பகுதி சோட்டா நாக்பூர்ப் பகுதியில் கழிந்தது. இந்தப் பிரதேசமே இவருடைய பலபடைப்புகளின் பின்புலமாகும். இதற்குச் சிறந்த உதாரணம் இவருடைய நாவல் சகதியா. இவருடைய படைப்புகளில் பல்வகை அனுபவச் செறிவோடு கலைத் தேர்ச்சியும் அறிவுத் தேர்ச்சியும் இணைந்துள்ளன். பிறந்தது ஹஜாரபாகில். பழங்குடிகளின் வாழ்க்கையிலிருந்து ராணுவ வாழ்க்கை, மானிட இயலிலிருந்து மென்கலைகள் – எல்லாவற்றிலும் அனாய்சமாக உலவுகிறார். மனிதமனதின் புதைமணலின் இரகசியத்தைக் கண்டுபிடிப்பதில் தேர்ந்தவர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *