கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினகரன் வாரமஞ்சரி
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: December 12, 2022
பார்வையிட்டோர்: 4,624 
 

பள்ளிவாசலில் அஸர் தொழுகையை முடித்துக்கொண்ட கையுடன் சம்சுதீன் தனது நண்பரான உதுமானைச் சந்திப்பதற்காக அவரது வீடு நோக்கி நடந்தார். நீலமும், பச்சையுமான கோடுகளுடன் கூடிய சாரனொன்றை உடுத்து, முடிகள் நிறைந்த சதைப்பிடிப்புள்ள வெற்று மார்புடன் ஆடுகளைக் காலைக்குள் சாய்த்துக் கொண்டிருந்த உதுமான் இவரைக் கண்டதும் முகமலர்ந்தார்.

பள்ளிக்குத் தொழ வருவீங்க எனப் பார்த்தன். காணல்ல. அதான் ஊட்டுக்கு வந்த ‘ என்றார் சம்சுதீன்.

காலைக்குள் நான்கைந்தும், வெளியே ஐந்தாறுமாக ஆடுகள் நின்றன. வெளியே நின்றவற்றை உள்ளுக்குள் ஏற்றுவதில் அவர் சிரமப்பட்டார். ஒவ்வொன்றினதும் பிள்ளையைப் பிடித்து உள்ளே தள்ளினாலும் காலைக்குள் ஏறாமல் தலை திருப்பி அவை வாசல்புறத்தை நோக்கி ஓட முயன்றன

‘காலைக்குள் ஏற்ற நேரம் இருக்கே, இப்பவே ஏன் ஏத்துறீங்க? சம்சுதீன் கேட்டார்.

‘விலை பேச யாவாரி ஒருவன் வாறன்டிருக்கான். காலைக் குள்ள கிடந்தா தெரிவு செஞ்சி வித்துப்புடலாம்ல’ என்றார் உதுமான்.

‘ஒருசின்ன விசயமா உங்களுக்கிட்ட யோசனை கேக்க வந்த’

‘இதுகள அடைச்சிட்டு வந்துடுறன். உள்ள போயி இருங்க.’

சப்தமிட்டு மனைவியை அழைத்து சம்சுதீனுக்கு தேனீர் கொடுக்குமாறு உதுமான் கூறினார்.

சம்சுதீனுக்கு வயது ஐம்பதைத் தாண்டிவிட்டிருந்தது. வளர்ந்த ஆண் மக்கள் இருவரும், வயதுக்கு வந்த இரண்டு பெண்களும் இருந்தனர். கிராமத்தில் சிறிய அளவிலதான் பெட்டிக்கடையொன்றை நடத்துகின்றார். பக்கத்திலுள்ள பட்டினத்தில் சில்லறைச் சாமான் களைக் கொள்வனவு செய்வது பக்கீஸ் பெட்டியினுள் பொருட்களை வைத்துக் கரியர் பொருத்திய சைக்கிளில் ஏற்றி வியர்வை வடிய மிதித்துக் கடைக்குக் கொண்டு வருவது, கடைப் பலகைகளைத் திறந்து வியாபாரம் செய்வது ஆகிய சகல வேலைகளையும் இவர் தனியாளாகவே செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளானவர்.

தனது தகப்பன் வழியால் கிடைத்த இரண்டு துண்டுக் காணி களில் ஒன்றை அடிமாட்டு விலைக்கு விற்று, யார் யாரினதோ கால்கைகளைப் பிடித்து மூத்தவனைக் கட்டாருக்கு அனுப்பிவிட்டார்.

மற்றவன் சாட்டுக்கு ஏதோ படித்துவிட்டு ஊர் சுற்றுபவன். தெருப்பொறுக்கிகளுடன் சேர்ந்து பலான சினிமாப் படங்களை பீடிப்புகை நாற்றங்களுடன் கூடிய கொட்டகைகளில் பார்ப்பவன். நாலு பேர் சேர்ந்து விட்டால் நேரம் போவதே தெரியாமல் சீட்டு விளையாடுபவன். சில சந்தர்ப்பங்களில் வலியவே சண்டைக்குச் சென்று மூக்குடைபடுவான். தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் கடையைப் பார்த்துக் கொள்ளுமாறு இவனிடம் கூறிவிட்டு சம்சுதீன் அகன்றால் அவர் திரும்பும் வரை நடைபெறும் விற்பனையால்

ணத்தில் கூடிய பங்கைச் சுருட்டிக் கொள்பவன். தேர்தல் காலங்களில் இவனுடைய காட்டில் மழை பெய்யும். இவன் சார்ந்து நிற்கும் கட்சியின் அபேட்சகருக்கு வஞ்சனையின்றி இரவும், பகலுமாக உழைப்பான். சுவர் நோட்டீஸ் ஒட்டுவது, பனர் கட்டுவது, அபேட்சகருடன் சேர்ந்து வீட்டுக்கு வீடு வாக்குக் கேட்டுச் செல்வது, ஒலிபெருக்கியில் தொண்டை கிழிய பிரசாரம் செய்வது, எதிரணியினரை தேவைப்படும் போதெல்லாம் தாக்குவது, கள்ள வாக்களிப்பது….. என தற்போதைய ஜனநாயக விதிமுறைகளாக அபேட்சகர்களால் கைக்கொள்ளும் சட்ட மீறல்கள் சகலதிலும் மனவிருப்புடன் ஈடுபடுபவன்.

சென்ற தேர்தலில்கூட இவன் எதிரணியைச் சேர்ந்த யாருக்கோ கிரிஸ் கத்தியால் குத்துவதற்கு முயற்சித்ததான பொலிஸ் நிலைய முறைப்பாடொன்று தொடர்பாக ஒளித்துத் திரிந்தவனை பிடரியில் பிடித்து உள்ளே தள்ளியபோது, இவன் சார்ந்த கட்சியைச் சேர்ந்த யாரும் உதவ முன்வரவில்லை. நாய்ப்பாடு பட்டு சம்சுதீன் இவனைப் பிணையில் எடுத்தார்.

வயதுக்கு வந்த மூத்த மகள் சமூக சம்பிரதாயங்களுக்கேற்ப விரும்பியோ, விரும்பாமலோ வீட்டில் சிறைப்பட்டு பல வருடங்கள் கடந்துவிட்டிருந்தன. வாய்க்கும் கைக்குமென சம்சுதீனின் வருமானத் தில் உள்ள பழைய வீட்டைக் கொடுத்து அவளை வாழ வைக்க இயலாமல் இருந்தது. அவரிடம் எஞ்சியிருந்த மற்றத் துண்டுக் காணியையும் விற்று, மூத்த மகன் கட்டாரில் இருந்து ‘பெரிய தியிஜி பண்ணி’ அனுப்பும் பணத்தையும் சேர்த்து புதிய வீடொன்றைக் கட்டத் தொடங்கினார்.

பாதியளவில் முடிந்திருந்த கட்டுமான வேலையில் சடுதியான தொரு இடைநிறுத்தல் ஏற்பட்டது. வளவினுள் கிளை பரப்பி நின்ற பலாமரம் ஒன்றை வேர்களோடு பிடுங்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு சம்சுதீன் ஆளானார்.

அதை வெட்டாம் விட்டா, அதுட வேர் போடும் பகுதியெல்லாம் கட்டுமானத்தில் பின்னால் வெடிப்பு ஏற்படும். வெட்டுற மரத்தை அரிந்தா கூரை வேலைக்கோ கதவுகளுக்கோ பயன்படுத்தலாம்’ என்றான் மேசன்.

பலாமரத்தை வெட்டுவது தொடர்பாக அவருக்கு விருப்பமே இல்லை. இந்த மரத்தின் காய்ந்த இலைகள் தனது வீட்டின் முற்றத்திலும் கிணற்றினுள்ளும் வீழ்கின்றன என பக்கத்து வீட்டுக் காரர் தொடராகக் கூறுவதும் பொறுக்க முடியாதவிடத்து வாய்விட்டு ஏசுவதும் இவரைப் பொறுத்தவரை செவிடன் காதில் ஊதிய சங்கொலிகளாக இருந்தன. நாலு பேர் வற்புறுத்தி மரத்தைத் தறிப்பதற்கு இவரை இணங்க வைக்க முயன்றாலும், எப்போதுமே எதிர்மறையாகச் சிந்திக்கும் இவரது மனைவி உருட்டும் விழி களாலேயே இவரைத் தடுத்துவிடுவாள்.

இப்போது மரத்தை தறித் தே ஆகவேண்டும் என்ற கட்டாயத்துக்கு ஆளானார்.

‘சரி தறிச்சிப்புடுங்க.’ மனைவியுடன் கலந்து பின் முடிவைக் கூறினார்.

‘நினைச்ச மாதிரிக்கெல்லாம் மரம் தறிக்க ஏலா’

‘ஏன்? என் மரம். நான் தறிப்பேன்.’

‘அந்தக் காலம் மலையேறிப்போச்சு. சொந்த வளவுல நிக்கிற மரத்தைத் தறிக்கவும் உத்தரவு பெறணும். இல்லயெண்டா கம்பி எண்ண வேண்டி வரும்.’

‘அதென்னாடது! என் மரத்த நான் தறிக்க உத்தரவு! ஆருக்கிட்ட பெறணும்?’

மேசன் விளக்கப்படுத்தினார்.

இது தொடர்பாக ஆலோசனை பெறத்தான் உதுமானைத் தேடி சம்சுதீன் வந்திருந்தார்.

அழுக்கடைந்த பழைய துவாய்த்துண்டு ஒன்றால் முதுகைப் போர்த்தியவாறு, பின்னல் பிரிந்த கதிரை ஒன்றில் அமர்ந்த உதுமானிடம் தான் வந்த நோக்கத்தை சம்சுதீன் கூறினார்.

‘மேசன் சொன்னது மெய்தான், ஏ.ஜி.ஏக்கிட்ட உத்தரவு வாங்கித்தான் ஆகணும்.’

‘லேசா வாங்கிடலாமா?’ உதுமான் வாய்விட்டு கடகடவெனச் சிரித்தார்.

‘நம்ம நாட்டில் அதிகாரிகள் அவ்வளவு லேசா காரியங்கள் முடிச்சுக் கொடுக்கிறதைக் கேள்விப்பட்டிருக்கிறீங்களா? பிலாமரம் தறிக்க அனுமதி பெறணும்னா பல பேருக்கிட்ட போகணும். ஏஜிஏ, பரஸ்ட் ஆபிஸர், கிராம சேவையாளர் என பல பேருக்கிட்ட அலையணும்.’

உதுமான் கூறக்கூற சம்சுதீனின் கண்களில் நட்சத்திரங்கள் மின்னின.

‘நீங்க படிப்பறிவில்லாத ஆள். அவங்க கேக்குற கேள்வி களுக்கு நீங்க இடக்கு முடக்கா எதையாவது சொல்லிட்டா, உத்தரவு தராம விட்டுடுவாங்க. அப்புறம் கட்டுமான வேலையைத் தொடரக் கஸ்டம்.’

‘இப்ப என்னதான் செய்யலாம்கிறீங்க? சம்சுதீன் பேயறைபட்ட முகபாவத்துடன் மெதுவாகக் கேட்டார்.

‘ரெண்டு வழிகள் இருக்கு. ஒண்டு நம்ம பகுதி எம்.பியை உங்களுக்குத் தெரியும்தானே. அவரு இப்போ மந்திரியும் கூட. அவருக்கிட்டப் போய் விசயத்தைச் சொல்லி, நம்ம பகுதி ஏஜிஏக்கு ஒரு கடிதம் எடுத்தா, இல்லாட்டி போன் போட்டுச் சொன்னா விசயம் சீக்கிரமா முடிஞ்சிடும். மந்திரி சொன்னா ஏஜிஏ பம்பரமா ஆடுவாரு. உங்கள அவர்ர கந்தோருக்குக் கூப்பிட்டு உத்தரவு தருவாரு.’

மத்த வழி?’ உதுமான் பிகு பண்ணினார். ‘சொல்லுங்க மத்தவழி?

‘எனக்கிட்ட ஒரு ஆயிரம் ரூபாயைத் தாங்க. விசயத்தை முடிச்சித் தாரன்.’

சம்சுதீன் யோசித்தார்.

என் வளவில் நிக்கிற என்ட மரத்த வெட்ட இந்த மசிராண்டிக்கு எதுக்கு ஆயிரம் ரூபா கொடுக்கணும்? மந்திரி கிட்ட போவம். சீக்கிரமா விசயத்தை முடிச்சி எடுத்திடலாம்.

நான் எதுக்கும் என் பெஞ்சாதியோட கேட்டுட்டு உங்களுக்கிட்ட வந்து சொல்றன்.’ கூறிவிட்டு சம்சுதீன் இருக்கையில் இருந்து எழுந்தார்.

கனகசெந்தி கதா விருது பெற்ற சிறுகதைகள் – தொகுதி 01 பெட்டிக்கடைக்கான பலசரக்குகளை வாங்குவதற்காக பட்டணத்துக்குப் போக சம்சுதீன் சைக்கிளைத் தள்ளும் போது, இடுப்பில் கைகளைக் குத்தியவாறு மனைவி எதிரே நின்றாள்.

‘மந்திரியைப் பாக்க நாளைக்குத்தானே போகப் போறீங்க? கேட்டாள்.

சம்சுதீன் தலையசைப்பில் விடை இறுத்தார்.

‘டவுணுக்குப் போற நீங்க நல்ல ஒரு சோடி தோல் செருப்பு வாங்கிட்டு வாங்க.’

‘ஆருக்கு? உனக்கா?’

‘உங்களுக்குத்தான். இல்லாட்டி, கால்ல கிடக்கிற இந்த தேஞ்ச பாட்டாவோடேயா போகப் போறீங்க?’

அவள் கூறியது அவருக்கு சரியெனப்பட்டது. தோல் செருப்பு வாங்க வேண்டும் எனில் வீடு கட்டுவதற்காக உள்ள பணத்தில்தான் செலவழிக்க வேண்டுமென நொடிக்குள் மனம் எச்சரித்தது.

‘அதெல்லாம் வாங்க இப்ப காசி இல்ல..’ முணுமுணுத்தார்.

“ஒரு நன்மை தீமை, கலியாணம் காட்சி என வந்தா எல்லா இடத்துக்கும் கால்ல கிடக்கிற அதோடானே போறீங்க. நாலு பேருக்கு மத்தியில் நல்லா போகணும். யோசிக்காம வாங்கிட்டு வாங்க.’

“நானூறு ரூபா போயிடும்” புறுபுறுத்தார்.

“ஐநூறு எண்டாலும் பரவால்ல. ஒரு சீமெந்து பேக்கோட காசுதான். நாளைக்குப் போட்டுட்டுப் போக நல்ல சேட் இருக்கா?”

“ஒண்டு இருக்கு. டவுணுக்குப் போயிட்டு வந்து கழுவிப் போடணும்.”

“நான் கழுவுறன். எடுத்துத் தந்திட்டுப் போங்க.”

பட்டிணத்திலிருந்து வியர்வை வடிய திரும்பி வந்ததும் வராதது மாக முன்னூற்று தொண்ணூற்று ஒன்பது ரூபாவுக்கு வாங்கிய செருப்புச் சோடியை சம்சுதீன் மனைவியிடம் காட்டும்போது, வாசலில் கிடந்த கல் ஒன்றில் குந்தி பல் குத்தியவாறிருந்த தறுதலை மகன் அவரை நோக்கி வந்தான்.

“செருப்பு எனக்கா?” கேட்டான்.

“ஒன்டா உனக்குத்தான் போட்டுக்கொண்டு தெருச் சுத்துறதுக்கு” தகப்பன் வெடுக்கெனக் கூறியதும் மகனின் முகம் கறுத்தது.

“ஓ… ஓ… புது மாப்புள! இதெல்லாம் வேணுந்தான்” நக்கலடித்த வாறு மகன் நகர்ந்தான்.

சம்சுதீன் நேரகாலத்தோடு படுக்கையிலிருந்தும் எழுந்தார். அன்று புதன்கிழமை. அமைச்சரை அவரது கொழும்பு காரியாலயத் தில் அன்று சந்திக்கலாம் எனத் தெரிந்து வைத்திருந்தார்.

பெரிதாகக் கொட்டாவி விட்டவாறு புரண்டு படுத்த அவரது மனைவி “எழும்பிட்டீங்களா?” எனக் கேட்டாள்.

எழுந்து உட்கார்ந்தாள். சிலுப்பிக் கிடந்த அவளது அடர்ந்த முடிகள் சற்றுக் கோரமானதொரு தோற்றத்தை அவரில் வரைந்தன.

“அம்பது அறுபது கட்டை பஸ்ல போகணும்ல. நேரத்தோடு புறப்பட்டால்தான் உரிய நேரத்துக்கு முந்திப் போய்ச் சேரலாம்.”

சம்சுதீன் சுப்ஹு தொழுது காலைக்கடன்களை முடித்து முதல் நாள் கழுவி டோபி கடையில் கொடுத்து ஸ்திரிக்கை செய்து எடுத்த வெள்ளை நிற ஷேட் அணிந்து கடந்த நோன்புப் பெரு நாளின் போது யாரோ ஹதியாவாகக் கொடுத்து உடுத்து விட்டு மடித்து வைத்திருந்த சாரனை உடுத்து இடுப்பில் தோல் பட்டி தரித்து கால்களில் புதுச் செருப்புகளுடன் வீட்டிலிருந்தும் வெளியேற ஆயத்தமானார்.

“டவுணுக்குப் போய்த்தானே பஸ் எடுக்கணும்? எப்பிடிப் போப்பிறீங்க?”

“சைக்கிள்ல போகலாம். ஆனா, சேட்டும் சாரனும் வேத்துப் போகும்.”

“அதுல போகாதீங்க! ஒரு ஆட்டோவைப் புடிச்சுப் போங்க.”

“நூத்தி அம்பது கேப்பான்.”

“காசைப் பாத்தா, வேர்வை நாத்த உடுப்போடத்தான் மந்திரிக்கு முன்னால போக வேண்டிவரும்.”

“அதுவும் உண்மைதான். வேன்ல போகட்டா?”

“வேன்காரன் மாடுகள் அடைக்காப்ல அடைப்பான். மத்தவங்கட வேர்வை நாத்தம் உங்கட உடுப்பெல்லாம் நாறும். ஆட்டோ விலேயே போங்க.”

மனைவி கூறியவாறே முச்சக்கர வண்டி ஒன்றில் பட்டணத்துக்கு வந்து சேர்ந்தார்.

காலையிலேயே வெயில் இறைக்கத் தொடங்கிவிட்டிருந்தது. கசகசவென வெயர்த்தது. கமுக்கட்டினுள் பனித்த வெயர்வைத் துளிகள் கைகளிலும், மார்பிலும் உருண்டோடின.

இந்த வெயில்ல பஸ்ல போனா இன்னும் வேர்க்கும். ஏசி பஸ்லதான் போகணும். நினைத்தவாறு குளிரூட்டிய பஸ்ஸுக்காகக் காத்து நின்றார்.

அமைச்சரின் காரியாலயம் அமைந்துள்ள இடம் சம்சுதீனுக்கு சரிவரத் தெரிந்திருக்கவில்லை . கையிலிருந்த கடதாசியில் எழுதப்பட்ட விலாசத்தைப் பலரிடமும் காட்டினாலும், ஒவ்வொரு வரும் வெவ்வேறு திசைகளைச் சுட்டிக் காட்டினர். முச்சக்கர வண்டி ஒன்றில் ஏறியமர்ந்து உரிய விலாசத்துக்குப் போகுமாறு கூறினார். கணிசமானதொரு தொகையை பிரயாண முடிவில் சாரதியிடம் கையளிக்கும் போது மனம் வேதனையுற்றது.

அமைச்சரின் காரியாலய வளவினுள் உட்புகும் போதே கெடுபிடி கள் ஆரம்பமாயின. காக்கிச்சட்டை அணிந்து கறுத்த உதடுகளைக் கொண்டவனாக நின்ற ஒருவன் வாகனங்களை மறிப்பதற்கான துலாந்தின் அருகே வந்து இவரைத் தடுத்தான்.

“எங்க போறே?” புருவங்களை உயர்த்தியவாறு சகட்டு மேனிக்குக் கேட்டான்.

“மந்திரியைப் பார்க்க” “வரச்சொல்லி இருக்காரா?” சம்சுதீன் இல்லையெனத் தலையசைத்தார்.

“அவரை உனக்குத் தெரியுமா?”

“அவருதான் எங்கட எம்.பி”

அவன் அவரை ஒரு சந்தேக நபராகக் கருதி விசாரிப்பதுபோல் அவருக்குப் பட்டது. அவனுடைய கேள்விகளுக்கு சுடச்சுடப் பதிலிறுக்க விரும்பினாலும், எப்படியாவது காரியம் முடிய வேண்டும் என்ற எண்ணம் அவரைத் தடுத்தது. காலில் அணிந்திருந்த புதுச் செருப்பு வேறு கடிக்கத் தொடங்கியது. அவர் அமைதியாக நிற்க முயன்றார்.

“சரி சரி, அடையாள அட்டையைக் கொடுத்து கையொப்பம் போட்டுட்டுப் போ” அவன் கூறியவாறு இடாப்பில் ஒப்பமிட்டு அட்டை ஒன்றைப் பெற்றுக்கொண்டு காரியாலய வாசலை அடைந்தார். அமைச்சரின் அறையை விசாரித்து, புதுச் செருப்புக் கடியைச் சகித்தவாறு மின்தூக்கியால் செல்லலாம் என்பதைத் தெரியாதவராக மூன்று மாடிகள் இளைக்க இளைக்க ஏறினார்.

அப்போது பத்து மணி இருக்கலாம்.

அமைச்சரின் அறைக்கு முன்னால் விசாலமான மண்டபத்தினுள் போடப்பட்டிருந்த சோபாக்களிலும், கதிரைகளிலும் பலர் வீற்றிருந்தனர். சிலர் ஆளுக்காள் பேசிக்கொண்டனர். வேறு சிலர் முகங்களை வக்ரமாக வைத்துக்கொண்டு கண்ணாடி ஜன்னல்களின் ஊடாக தூரத்தே தெரிந்த கட்டிடங்களின் மீது பார்வையைச் செலுத்தினர்.

இரண்டொருவர் அடிக்கடி சிணுங்கிய கையடக்கத் தொலை பேசிகளை செவிமடல்களில் பொருத்தியவாறு தொண்டையின் ஊடாக ஒலியலைகளைக் காற்றுடன் கலக்கவிட்டனர். வெள்ளை நிற அரைக்கை ஷேர்ட், அதே நிறத்தில் கால்சட்டை அணிந்து கால்களில் சப்பாத்துக்களுடன் ஒட்ட வெட்டிய முடிகளுடனான சிலர் கைகளில் செல்லிடத் தொலைபேசிகளுடன் அங்குமிங்கமாக நடப்பதும், ஆளுக்காள் கதைப்பதும், தோள்களில் தட்டிச் சிரிப்பதுமாகப் பொழுது போக்கினர்.

வாளிப்பான தோள்கள் தெரிய , துருத்திய மார்பகங்களைக் கொண்ட, உதடுகளில் இரத்தச் சாயம் பூசிய ஒருத்தி, முழங்கால் களுக்கு மேல் படிந்து கிடந்த குட்டைப் பாவாடையை தளிர் விரல் களால் கீழே இழுத்து விட்டாள். அணிந்திருந்த கறுப்புக் கண்ணாடியைக் கழற்றி, உதடுகளால் ஊதி, கைக்குட்டையால் துடைத்து விட்டு மீண்டும் போட்டுக்கொண்டாள்.

நேரம் கரைந்து கொண்டிருந்தது.

மண்டபத்தில் அமர்வதற்காக ஆசனம் பெற முடியாதவர்கள் ஜன்னல் கட்டுக்களில் கைகளை ஊன்றியவாறு பெருமூச்சு விட்டவர் களாக நின்றனர். சிலர் ஒற்றைக் கால் கொக்குகளாக நேரத்துக்கு நேரம் கால் மாற்றினர்.

அடிக்கடி கொட்டாவிச் சப்தங்கள் கேட்டன. “மந்திரி வருவாங்க தானே?” தன்னருகில் வந்து நின்ற தலைமுடியை ஒட்ட வெட்டி யிருந்தவனிடம் சம்சுதீன் கேட்டார். அவனிடம் பலர் ஏற்கனவே இவ்வாறு கேட்டதை அவதானித்திருந்தார்.

“இப்ப வந்திடுவாங்களா?”

அவன் அவரை அசூசையைப் பார்ப்பதுபோல் பார்த்தான்.

“இதிப் பாரு பெரியவர், அமைச்சர் என்ன உன்னைப்போல சும்மா இருக்கிற பேர்வழியா? அவருக்கு ஆயிரம் வேலை. ஆயிரம் தொல்லை. வந்த நீ சும்மா இரி. அமைச்சர் வந்ததும் பாத்திட்டுப் போ .”

அவனிடம் ஏன்தான் வாயை விட்டேனோ என்றிருந்தது. அவருக்கு வயிற்றினுள் மெலிதாக எதுவோ கிள்ளியது. பசி மிருகம் அவருக்கு மட்டும் கேட்க உறுமியது. பக்கத்தில் நின்றிருந்த ஒருவன் வெளியே சென்று சிகரட் புகைத்துவிட்டு வந்தான். அவன் மூச்சு விடும் போதெல்லாம் புகை நாற்றம் இவரை, மூக்கை மூடத் தூண்டியது.

மண்டப சுவர்க் கடிகாரத்தின் சிறிய முள் ஒன்றைத் தொட முயற்சித்த தறுவாயில்……

ஒட்ட முடி வெட்டிய வெண் உடுப்பர்கள் பரபரப்பானார்கள். அமைச்சர் வரப்போகிறார் என குசுகுசுத்தார்கள். ஆசனங்களில் வீற்றிருந்த அனைவரும் ஆசுவாசப்பட்டவாறு நிமிர்ந்து உட்கார்ந்தனர்.

ஒரு சில நிமிடங்களில் செல்லிடத் தொலைபேசிகள் இரண்டால் இரு செவிகளையும் பொத்தியவாறு தலையைப் பக்கத்துக்குப் பக்கம் திருப்பி அதிலும் இதிலும் கதைத்தவாறு பலர் பின்னால் சூழ்ந்து வர உயர்ந்த தோற்றமும் பரந்த மார்பும் உப்பிய கன்னங்களும் கொண்ட அமைச்சர் வேகமாக நடந்து வந்தார். அனைவரும் எழுந்து நின்றனர். சிலர் பிற்பகல் வணக்கம் தெரிவித்தனர். அமைச்சர் ஏகமொத்தத்துக்கு அனைவரையும் பார்த்துச் சிரித்தார். கறுப்புக் கண்ணாடி அழகியின் சமீபமாக அவர் செல்லும் போது, வினாடி தரித்து இவராகவே அவளுக்கு வந்தனம் கூறி இவரின் முன்னால் நீண்ட அவளது கையைப் பற்றிக் குலுக்கிவிட்டு அறைக்குள் சென்றார்.

நேரம் மெதுவாக ஊர்ந்தது.

கழுத்துப் பட்டியணிந்த பின்தலையில் மட்டும் வெண்மயிர்கள் அடர்ந்த, உயரமான ஒருவர் கையில் தாங்கிய சில காகிதக் கோவைகளுடன் அமைச்சரின் அறையினுள் புகுந்தார்.

சுமார் அரைமணி நேரத்தில் வெளி வந்தார். யாரோ வந்து கறுப்புக் கண்ணாடி அழகியை மட்டும் உள்ளே வருமாறு கூறியதும், அவள் ஒய்யாரமாக எழுந்து, பின்பக்கங்களை அசைத்தவாறு நடந்தாள்.

நேரம் நத்தையாக நகர்ந்தது. அமைச்சரைச் சந்திப்பதற்காகக் காத்திருந்தவர்களில் பலர் பசிக் கொட்டாவிகளை விட்டனர். ஆசனங் களின் முனைகளில் இருந்தவாறு உள்ளே அழைக்க மாட்டார்களா எனப் பரபரத்தனர். கறுப்புக் கண்ணாடி அழகி வெளியே வந்தாள். அவள் சென்று சிறிது நேரத்தில் அமைச்சரின் அறைக்குள்ளிருந்து கறி வாசனை வெளியேற, வெளியே இருந்தவர்களின் வயிறுகள் சடுதியாக வலித்தன.

நேரம் பிற்பகல் மூன்றைத் தாண்டி ஓடியது. கழுத்துப் பட்டி யுடனான சில அதிகாரிகள் சடசடவென அமைச்சரின் அறைக்குள் நுழைந்தனர்.

சம்சுதீனுக்கு வயிறு நிறைய பசி. குடல் முறுகி வலித்தது. சிறுநீர்ப்பை நிரம்பி சங்கடப்படுத்தியது. வாந்தி வரப் போவது போன்றதோர் உணர்வு மெலிதாகத் தலை கிளப்பியது. நா வரண்டு கிடந்தது. சலகூடம் போய் வரவும் அவர் விரும்பவில்லை . அதற்கிடையில் தன் பெயரை அழைத்து விடலாம் என்ற ஆதங்கம் போகாமல் அவரைத் தடுத்தது. பற்களை நறநறத்து சகல உபாதைகளையும் சகித்தவாறு அமைச்சரின் அறைக் கதவையே பார்த்துக் கொண்டிருந்தார். அவரைப் போன்றே மற்றவர்களும் காத்திருந்தனர்.

நேரம் இப்போது நாலரையைத் தாண்டி குதித்தது.

அன்றைய நாள் வியாபாரம் இன்றி மூடிக் கிடக்கும் தனது பெட்டிக்கடையை சம்சுதீன் வினாடி நினைத்தார்.

அறைக்குள்ளிருந்து அதுவரை கேட்ட சப்தங்கள் சடுதியாக ஓய்ந்தன. இரண்டொரு நிமிடங்களில் கதவு திறக்க அமைச்சரின் திருமுகம் தெரிந்தது. அவர் வெளிச் செல்வதற்காக வந்து கொண்டிருந்தார். சரேலென சகலரும் எழுந்தனர். அமைச்சர் அத்தனை பேர் மீதும் தனது புன்னகையை எறிந்து விட்டு மின் தூக்கியை நோக்கி விரைந்தார்.

“ஸேர் கபினட் மீட்டிங்குக்குப் போறார். நாளைக்கும் ஆபீஸ் வருவாரு. எல்லாரும் போயிட்டு நாளைக்கு வாங்க.” யாரோ கூறியதை எரிச்சலுடனும், கோபத்துடனும் மற்றவர்கள் செவி மடுத்தனர்.

எழுந்து நின்ற சம்சுதீன் சலகூடத்தைத் தேடிக் கண்டுபிடித்து, வீங்கிய வயிற்றின் அடர்த்தியைக் குறைத்து, செருப்புக் கடியைச் சகித்தவாறு பாதைக்கு வந்தார். முச்சக்கர வண்டி ஒன்றை நிறுத்தி ஏறினார்.

“எங்க போகணும்?” சொன்னார்.

வாகன நெரிசலுடன் கூடிய பாதையில் வண்டியைச் செலுத்திய வாறு, சாரதி இவருடன் கதை கொடுத்தான்.

“சொந்த ஊரு எது?”

சொன்னார். “இப்ப அங்கதான் போகப் போறீங்களா?”

“ஆமா.”

“அப்ப எதுக்கு சென்றல் பஸ் நிலையத்துக்குப் போகப் போறீங்க? சமீபத்திலே ஒரு பஸ் நிலையம் இருக்கு. அங்கிருந்தே உங்க ஊருக்கு பஸ் எடுக்கலாமே, அங்க விடட்டா?”

அவனுடைய நேர்மையை மனதினுள் மெச்சியவாறே “ஆம்” என்றார்.

“எங்க போயிட்டு வாறீங்க?”

அவருடைய மனவேதனையை அவனிடம் கூறினால் சற்று ஆறுதலாக இருக்கலாம் என நினைத்து, தான் அமைச்சரைப் பார்க்க வந்த நோக்கத்தை விபரித்தார்.

சாரதி பெரிதாகச் சிரித்தான். “ஏன் சிரிக்கே ”

“கால்ல முள்ளுக் குத்தினா கிண்டி எடுக்க ஒரு முள்ளு போதுமே. உளியும் தட்டுக் கட்டையும் வேணுமா? பலாமரம் தறிக்க உத்தரவு பெறுவதற்கு ஏ.ஜி.ஏ கந்தோருக்குப் போனா போதுமே. உங்க ஊரிலேயே கிராம சேவை உத்தியோகத்தர் இருப்பாரே. அவரிட்டை போனா லேசா விசயத்தை முடிக்கிற வழியைச் சொல்லித் தந்திருப்பாரே. அத உட்டுட்டு இப்படி அலைஞ்சிருக் கிறீங்களே” கூறிவிட்டு சாரதி மீண்டும் சிரித்தான்.

“அமைச்சர் சொன்னா ஏஜிஏ பம்பரமா சுத்துவார் என்றாங்களே?”

“யார் சொல்லி யாரும் சுத்த மாட்டார். சட்டம் என்ன சொல்லுதோ அதைத்தான் பலரும் செய்வாங்க. மரம் வெட்ட வேண்டிய தேவை உண்மையானதென்றா நிச்சயமா அனுமதி தருவாங்க. நாளைக்கே போய் ஏஜிஏ ஐப் பாருங்க.”

சம்சுதீன் தனது அறியாமையால் ஏற்பட்ட இழப்புகளுக்காக தன்னையே நொந்தவாறு காலில் செருப்புக் கடியுடனும் வயிற்றுப் பசியுடனும் பஸ்ஸுக்காகக் காத்துக்கொண்டு நின்றார்.

– தினகரன் வாரமஞ்சரி, 2004 அக்டோபர் 03 – கனகசெந்தி கதாவிருது பெற்ற சிறுகதைகள், முதற் பதிப்பு: 21-07-2008, தொகுப்பாசிரியர்: செங்கை ஆழியான், மீரா பதிப்பகம், கொழும்பு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *