மீராவும் மொஹம்மது ஆரிஃபும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: November 6, 2014
பார்வையிட்டோர்: 10,071 
 

`கல்யாணமான ஒரு ஆண் இன்னொரு பெண்ணோட தொடர்பு வெச்சுக்கிறதைப் பத்தி நீங்க என்ன நினைக்கறீங்க?’

மின் அதிர்வு உடலெல்லாம் பாய்ந்தாற்போல், படுக்கையில் எழுந்து உட்கார்ந்தாள் மீரா. மூச்சை அடைத்தது. தலைமாட்டில் இருந்த கொசுவர்த்தியைச் சற்று தூரத்தில் வைத்தாள். ஆனாலும், இறுக்கம் தணியவில்லை.

இருள் அறவே பிரியாத காலைப்பொழுதில், பள்ளிக்கூடம் ஆரம்பிக்க முக்கால் மணி இருக்கையில், அவளிடம் கேட்கப்பட்ட கேள்வி அது. இப்போது, இந்த இரவு வேளையில் மீண்டும் முளைத்து, பாடாய் படுத்துகிறது!

 

“குட் மார்னிங், மீரா!”

வழக்கம்போல், காண்டீனில் தனியே அமர்ந்து பசியாறிக் கொண்டிருந்தாள் மீரா. தேங்காய்ப்பாலில் வேக வைத்த சாதத்துடன், தனித்தனியே பொரித்த நிலக்கடலை, உறைப்பான `ஸம்பல்’(sambal) என்ற சட்னியுடன் நஸி லெமாக் (nasi lemak). மலாய்க்காரர்களின் உணவு. சீனக் கடை முதலாளி ஆ சேக் (சீன மொழியில் மாமா) தயாரித்திருந்தார்.

எதிரில் வந்தமர்ந்த சக ஆசிரியர் மொஹம்மது ஆரிஃபைக் கண்டதும் புன்னகைத்தாள்.

“சீக்கிரமே வந்திருக்கீங்க?” என்று குசலம் விசாரித்தாள்.

தனக்குத்தான் வீட்டில் யாருமில்லை. வீட்டில் தானே கறிகாய் நறுக்கி, சமைத்து, சாப்பிட்டபின் பாத்திரம் கழுவும் வேலையாவது மிஞ்சுமே என்று வெளியில் சாப்பிடுகிறோம்.

குடும்பஸ்தராகிய இவருக்கு என்ன தலையெழுத்து, சீனிப்பாகாய் இனிக்கும் இந்தக் கோப்பியைக் குடித்துத் தொலைக்க வேண்டும் என்று! (ஆ சேக்கிடம் எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டார், `அதான் சீனிப்பால் போட்டு கலக்கறீங்களே! எதுக்கு ரெண்டு ஸ்பூன் சீனி வேற!’ என்றால். அவர் மனைவி மாக் சிக் (மாமி) மைமூனா கணவருக்குப் பரிவாள்: `கோப்பின்னா இனிப்பாத்தான் இருக்கணும்!’

(ஆ சேக் மலாய்க்காரியை மணந்து, மதம் மாறி, தன் பெயருடன் பின் அப்துல்லா — கடவுளின் மகன் — என்று இணைத்துக் கொண்டிருந்தார். அதனால், அவர் சமையல் `ஹாலால்’ என்ற உறுதி இருந்தது).

சற்று மௌனமாக இருந்து, எதையோ யோசித்த அந்த ஆசிரியர், “நேத்து ஒங்க கதையை தமிழ்நேசனில படிச்சேன். என்னென்னமோ எழுதறீங்களே! என்னைப்பத்தியும் எழுதறது!” பாதி உண்மையும், பாதி வேடிக்கையுமாகக் கேட்டவரை உற்சாகமாக நிமிர்ந்து பார்த்தாள் மீரா.

இருவருக்குமே தமிழ்தான் தாய்மொழி என்பதால், அவருடன் பேசுவதே உற்சாகமாக இருந்தது. “எழுதிட்டாப் போச்சு! இப்பவே ஒங்களை ஒரு பேட்டி எடுத்துடறேன்!”

எப்போதும் அமரிக்கையாக, வயதுக்கு மீறிய முதிர்ச்சியுடன் இருக்கும் இவளுக்குக் கண நேரத்தில் எப்படி குழந்தைபோல் இவ்வளவு உற்சாகமாக மாற முடிகிறது! வியப்புடன் அவளை நோக்கியவருக்கு, அந்த அகன்ற விழிகளினின்றும் தெறித்த தீவிரத்தைக் கண்டு பயம் பிடித்துக்கொண்டது.

“பேட்டியாவது! நீங்க ஒண்ணு! இப்ப போய், பரீட்சைப் பேப்பர் திருத்தியாகணும் நான்!” எழுந்திருப்பதுபோல் பாவனை காட்டினார்.

“அதெல்லாம் முடியாது. நீங்கதான் இந்தப் பேச்சை ஆரம்பிச்சீங்க! இப்ப விடமாட்டேன்!”

சூடான பானத்தை ஒருமுறை உறிஞ்சிக்கொண்டார். “பேட்டின்னா.. என்ன சொல்லச் சொல்றீங்க?”

“ஒங்களால மறக்க முடியாதது ஏதாவது!  குறிப்பா, ஒங்க மனைவிகிட்டகூட சொல்ல முடியாதது!” மேல்நாட்டுக் கதாசிரியர் ஒருவர் இந்த உத்தியால் பல கதைகள் கிடைக்கும் என்று கூறியிருந்ததை அவள் படித்திருந்தாள்.

அவளுடைய அசாதாரணமான கலகலப்பு அவரை மேன்மேலும் கலக்கத்திற்கு உள்ளாக்கியது. `இவளைத் தன் போக்கிற்கே விடக் கூடாது!’ என்று அவரது ஆண்மை முறுக்கேற்றியது. “என் அந்தரங்கத்தை எல்லாம் ஒங்ககிட்ட எதுக்கு சொல்லணும்?” வார்த்தைகளில் இருந்த கடுமை குரலில் இல்லை.

“என்ன ஸார், நீங்க! ஒங்களைப்பத்தி எழுதச் சொல்லி நீங்கதான் கேட்டீங்க. இந்த அஞ்சு வருஷத்திலே ஒங்க தனிப்பட்ட வாழ்க்கையைப்பத்தி நான் ஏதாவது கேட்டிருப்பேனா? அதோட..,” சற்று நிறுத்திவிட்டுத் தொடர்ந்தாள். “யாருக்குள்ளேயுமே ஒரு ரகசியம் இருக்கும். அதை எவர்கிட்டேயாவது சொல்ல மாட்டோமான்னு துடிச்சுக்கிட்டு இருப்போம். இது மனித சுபாவம்!”

முகம் வெளிறிப்போய், எதிரிலிருந்தவளின் கண்ணில் எதையோ தேடினார். மீராவும் ஒருவித உணர்ச்சியும் காட்டாது, இமைக்கவும் செய்யாது, அப்பார்வையை எதிர்கொண்டாள்.

சில நிமிடங்கள் இப்படியே கழிந்தன. இறுதியாக, “கல்யாணமான ஒரு ஆண் இன்னொரு பெண்ணோட தொடர்பு வெச்சுக்கிறதைப் பத்தி நீங்க என்ன நினைக்கறீங்க?” என்று கேட்டார்.

தன் காதில் விழுந்ததை நம்ப முடியாது, அவரை வெறித்தாள் மீரா.

கேள்வியைச் சற்று மாற்றிக் கேட்டார் மறுமுறை. “ஒங்களுக்குத் தெரிஞ்ச பெண் யாராவது.. இல்லே, நீங்களே இப்படி..?”

தன்னெதிரில் அமர்ந்துகொண்டு, சர்வ உரிமையாக, கேட்கக்கூடாத ஒரு கேள்வி கேட்பவர், அனைவரிடமும் பண்பு குறையாமல், மென்மையுடன் பழகுபவர், பெண்களைக் கேவலமாக எடைபோட்டு நடத்தும் பெரும்பாலான ஆண்களைப்போல் அல்லாதவர் என்ற காரணத்தால் மீரா தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டாள்.

அவள் முகத்தில் பதித்த நயனங்களை சிறிதும் விலக்கவில்லை மொஹம்மது ஆரிஃப். கண் சிமிட்டவும் மறந்தார்.

சிறியதாக அரிந்திருந்த வெங்காயத்தை எண்ணையில் பொறிக்கும் வாசனை மூக்கின்வழி வயிற்றிலும் கிளர்ச்சி செய்ததை உணரும் நிலையில் இல்லை அவ்விருவருமே.

அச்சமயம் தலைமை ஆசிரியர் துவான் ஹாஜி காண்டீனுக்குள் நுழைவதைப் பார்த்துவிட்ட ஆரிஃப், கண்ணால் மீராவிடம் சமிக்ஞை காட்டி, “அப்பப்பா! சகிக்கலே இந்த எண்ணைப் புகை!” என்று தொண்டையைச் செருமியபடி எழுந்தார்.

 

காலையில் நடந்த இந்த நாடகத்தை வேலை மும்முரத்தில் அவள் மறந்திருந்தாலும், இரவின் தனிமையில் காதில் விழுந்திருந்த ஒவ்வொரு கேள்வியும் மேலெழுந்து பயமுறுத்தின.

`கல்யாணமான ஒருத்தன்..?’

`ஒங்களுக்குத் தெரிஞ்ச பெண் யாராவது.. இல்லே, நீங்களே..?’

தன்னையும் அறியாது உரக்கக் கூவினாள். “பொறுக்கி!”

இனி தூங்குவது எங்கே!

உடல் அயர்ந்திருந்தாலும், உணர்வுகள் ஓய மறுத்தன. அவள் தற்செயலாகக் கவனித்து, சிலவற்றை உடனுக்குடன் மறந்திருந்தாலும், கண்டு, கேட்டு, அனுபவித்திருந்த எல்லாவற்றையுமே அச்சுப்போல் தன்னுள் பதித்து வைத்துக் கொண்டிருந்த ஆழ்மனம் விழித்தெழுந்தது.

மேசை விளக்கைப் பொருத்தினாள். தயாராக வைத்திருந்த காகிதத்தில் பேனா ஓடியது.

 

சிறு வயதிலிருந்து மீரா பார்த்துப் பழகியிருந்த ஆண்கள் — அப்பா, அண்ணா, அக்காளின் கணவர். எல்லாருமே ஆணாதிக்கத்தின் பிரதிநிதிகள்.

அப்பா — பெண்ணுக்கென தனியாக ஒரு மனம், அதில் உணர்வுகள் இருக்கலாம் என்பதையே மறுப்பவர். பிள்ளை பெறுவதைத் தவிர, வேறு எதற்குமே லாயக்கில்லாதவள் பெண் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர்.

ஆறு ஆண்பிள்ளைகளை மனைவியின் கருவாகக் கொடுத்து விட்டதாலேயே தான் தனது ஆண்மைத்தனத்தை நிலைநாட்டிக்கொண்டு விட்டதாகப் பெருமிதம் கொண்டவர். இதைத் தவிர வேறு எந்தப் பெருமையும் இல்லாதவர்.

அண்ணா– அப்பாவின் சின்ன அச்சு. மனைவி இன்னும் வராத நிலையில், உடன்பிறந்தவளை அடிமையாக நடக்க முயன்று, அவள் எதிர்ப்பைப் புரிந்துகொள்ள முடியாது, ஆத்திரம் அடைந்தவன்.

மாமா — நாற்பது வயதுக்குமேல் ஆகிவிட்ட அக்காவுக்குக் கவர்ச்சி போய்விட்டதாலோ, அல்லது வளர்ந்துவிட்ட பிள்ளைகள் வீட்டில் இருக்கையில், மூடிய கதவு வழங்கும் அந்தரங்கத்தில் தான் மனைவியுடன் ஒரே படுக்கையைப் பகிர்ந்து கொள்வது கேவலம் என்ற சமூகத்தின் எதிர்பார்ப்பின்படியோ, துறவியாக வாழ முயன்றவர்.

அம்முயற்சியில் தோல்வியுற்று, மனதையையும், உடலிச்சையையும் கட்டுப்படுத்த வழி தெரியாது, உடல் வளர்ந்திருந்தாலும், விவரம் புரியாத இளம்பெண்களைப் பேச்சாலும், பரிசுப் பொருட்களாலும் முதலில் கவர்ந்து, பின்னர் தன் காமத்திற்கு வடிகாலாக்க முயன்றவர். மீரா அவரிடமிருந்து தப்பித்து வந்தவள்.

ஆண்கள்மீதே தீராத வெறுப்பையும், அவநம்பிக்கையையும் மீரா வளர்த்துக்கொள்ள இவர்கள் மூவருமே காரணமானார்கள்.

ஆண்டாண்டு காலமாக, தன் உணவு, உடைக்குப் பிறரைத்தான் நம்ப வேண்டும் என்ற நிலையில் இருந்து வந்திருப்பதால்தானே பெண்கள் ஆணுக்கு அடிமையாகவே இருந்திருக்கிறார்கள்?

இந்த உண்மையை அலசி உணர்ந்ததும், அவளுக்குள் உறுதி பிறந்தது.`நான் எவர் கையையும் எதிர்பார்த்து வாழமாட்டேன். ஆணைப் படைத்த கடவுள்தானே என்னையும் படைத்தார்? அப்படியானால், நான் மட்டும் எப்படித் தாழ்ந்தவள் ஆவேன்?’

இவ்வாசகத்தை ஒரு காகிதத் துண்டில் எழுதி, தன் அறைக்  கதவில் ஒட்டி வைத்தாள். தினந்தோறும் அதையே பார்த்து வந்ததில், அப்பொருள் அவள் மனதில் பதிந்து, நிமிர்ந்த நடையும், நேர்ப்பார்வையும் கொண்டவளாக மாறினாள்.

 

ஆயிற்று. சுமார் இருபது ஆண்டுகளாக ஆண்களின் தொடர்பே அதிகமில்லாத ஒரு பாதுகாப்பான உத்தியோகம்.

அந்த கம்பத்திலிருந்த ஒரே இடைநிலைப் பள்ளியில் ஆண்களும், பெண்களும் சேர்ந்து படித்தார்கள். (கம்பம் என்ற வார்த்தை kampong  என்பதன் தமிழாக்கம். சட்டப்படி, மலாய்க்காரர்களன்றி வேறு இனத்தவர் அங்கு குடிபுகவோ, நிலம் வாங்கவோ இயலாது).

பள்ளி நிர்வாகிகள் அந்த இருபாலரின் அருகாமையும் அவர்களுக்குக் கேடு விளைவித்து விடுமே என்ற அச்சத்துடன், ஏதேதோ விதிமுறைகளை வகுத்தார்கள்.

விளையாட்டு நேரத்தில், மாணவிகள் தனி குழுவாகப் பிரிந்தனர். அவர்களுக்கென பிரத்தியேகமாக ஒரு ஆசிரியை. அவளுக்கு விளையாட்டுகளைப்பற்றி எதுவும் தெரியாது என்றாலும், அவளும் பெண்தான் என்ற தகுதியே முக்கியமாகக் கருதப்பட்டது.

வகுப்பிலும், ஆண்கள் முன் இருக்கைகளில் அமர்த்தப்பட்டார்கள். ஆசிரியர்களுக்குச் சொல்லப்பட்ட காரணம்: பெண்களின் உருண்டையான பின் பகுதி, அந்த இளம் வயதில் அவர்கள் மனதைச் சலனப்படுத்திவிடும்!

காரணத்தை அறியாத பையன்களோ, தாம் மிகவும் மேலான பிறவிகள் என்று கர்வம் எழ, பெண்களைத் துச்சமாக நடத்த ஆரம்பித்தார்கள்.

`கரும்பலகை தெரியவில்லை. உயரமான மாணவர்களின் தலை மறைக்கிறது!’ என்ற மாணவிகளின் முனகல் எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை. அவர்கள், கேவலம், பெண்கள்தாமே!

ஆனால், மீரா என்னவோ, பதின்ம வயதுப் பையன்களை குழந்தைகளாகத்தான் பார்த்தாள். அவர்களுடைய களங்கமில்லாத அன்பும், புதிதான எதிலும் அவர்கள் காட்டிய ஆர்வமும் அவளையும் தொற்றிக்கொண்டன.

நல்லவேளை, கண்டவர் மயங்கும் கட்டழகியாகக் கடவுள் தன்னைப் படைக்கவில்லையே என்ற அற்ப திருப்தி ஏற்படுமே முன்பெல்லாம்! அதுவும் முதல்நாளிலிருந்து குலைந்து போயிற்று.

தான் இன்னும் இளம்பெண் அல்லவே, தான் சந்தித்திருந்த பிற ஆண்களைவிட வித்தியாசமாக இருக்கிறாரே என்று சமவயதினரான ஆரிஃபுடன் நட்புரிமையுடன் பழகியதை அவர் இப்படி விகற்பமாக எடுத்துக்கொண்டு விட்டாரே!

நினைக்க, நினைக்க மனம் அடங்கவில்லை மீராவுக்கு.

ஒரு வேளை, `பெண் என்ற ஒரு உருவம் இருந்தாலே போதும், அழகு, வயது இதையெல்லாம் பற்றி என்ன கவலை!’ என்று நினைக்கும் ஆண்கள்தாம்  அதிகமோ?

 

தோன்றியவற்றை எல்லாம் எழுத்து வடிவில் கொண்டு வந்ததில், மனச் சுமை குறைந்து, சிறிது விடுதலை பிறந்தது.

`இரவு பூராவும் கண்விழித்து எழுதினால், நாளைக்கு வகுப்பில் குரலே எழும்பாது. தலை வேறு கனக்கும்!’ என்று அனுபவம் நினைவுறுத்த, பேனாவைக் கீழே பத்திரமாக வைத்தாள் மீரா.

தலைக்குமேல் நீட்டிய கைகளைக் கோர்த்துக்கொண்டு, சிரம பரிகாரம் செய்துகொண்டாள். கொட்டாவி வந்தது.

கண்ணயருமுன், `அது எப்படி என்னைப் பார்த்து அப்படி ஒரு கேள்வி கேட்டீர்கள்?’ என்று அந்த மனிதரை உலுக்கி எடுத்துவிட வேண்டும் என்று நிச்சயித்துக்கொண்டாள்.

 

மறுநாள் காலையும் சீக்கிரமாகவே வந்து சேர்ந்தார் மொஹம்மது ஆரிஃப்.

முன்பெல்லாம் மணியடிக்கும்போதுதான் அவரது மலேசிய, புரோட்டான் வீரா காரும் உள்ளே நுழையும் என்பது நினைவிலெழ, கசப்பாக இருந்தது மீராவுக்கு. தன்னைப் பார்த்துப் பேசவே வந்திருப்பாரோ?

“குட் மார்னிங், மீரா!” நேரே வந்து, அவளெதிரே அமர்ந்துகொண்டார்.

சிறிது நேர மௌனத்திற்குப் பிறகு, அதற்கு மேலும் பொறுக்க முடியாதவளாய் கேட்டாள்: “நேத்து கேட்டது.. மறைமுகமா ஏதோ செய்யலாம்னு என்னைத் தூண்டவா?”

`நம் இருவருக்கிடையே நடந்த விஷயம். அது நம்மைத் தவிர, வேறு எந்த நிலையிலும், எவருக்கும் தெரிந்துவிடக்கூடாது’ என்ற எச்சரிக்கை மிக, அவள் குரல் தாழ்ந்திருந்தது.

அவளை ஒரு முறை நிமிர்ந்து பார்த்துவிட்டு, தன் பார்வையை நிலத்தில் பதித்தார். முகம் சுருங்கியது. “இல்லே. நான் செய்த தப்பை ஒத்துக்கிடறதுக்கு!” பதிலும் ரகசியக் குரலில் வந்தது, தான் பேசுவது தன் காதுகளுக்கே எட்டிவிடுமோ என்ற பரிதவிப்புடன்.

மீரா அடைந்த அதிர்ச்சியில், அப்போது புரிந்த உண்மையில், அவளது பார்வை இன்னும் தீர்க்கமாகியது.

சே! கதைக்கு கரு கிடைக்குமே என்ற என் சிறுபிள்ளைத்தனமான ஆசையில், இந்த நல்ல மனிதரை எவ்வளவு கேவலப்படுத்திவிட்டேன்!’ மீரா பதைபதைத்துப் போனாள். கூடாது. தன்னைப்போல் எப்போதும் நிமிர்ந்த தலையும், நேர்ப்பார்வையும் கொண்டவர் இப்போது தலை கவிழ்ந்து இருக்கக் கூடாது.

“ஒங்ககிட்ட எது வேணுமானாலும் சொல்லலாம்னு தோணிச்சு. அதான் அப்படியெல்லாம் கேட்டேன் — ஒங்களை மொதல்ல பரீட்சை செய்யறதுக்கு!”

யாரோ தன் நெஞ்சில் உதைத்ததுபோல் உணர்ந்தாள் மீரா. `நான் போலி!’ உள்ளுக்குள் அழுதாள்.

`ஒருத்தர் எந்தக் காரியத்தைச் செய்தாலும், அதுக்கு ஒரு அடிப்படைக் காரணம் இருக்கும். அவங்களோட  நிலையில நம்மை வைச்சுப் பாத்தா, எதையுமே நம்மால ஏத்துக்க முடியும். யாரையுமே கெட்டவங்களா நினைக்கத் தோணாது!’என்று தான் அடிக்கடி பிறரிடம் சொல்லி வந்ததை எப்படி மறந்துபோனோம்!

தவறு செய்வது மனித இயல்பு. அத்தவற்றை ஒத்துக்கொள்ளும்போதே ஒருவருக்கு மன்னிப்பு கிட்டிவிடாதா? இத்தகைய உத்தமரை எவ்வளவு கேவலமாக எடை போட்டுவிட்டோம்!

அவர்களிருவரும் தத்தம் எண்ணச் சுழலில் சிக்குண்டு இருக்கையில், காண்டீனில் இருந்த அந்த சிறிய அறைக்குள் நுழைந்தார் தலைமை ஆசிரியர்.

அடுத்தடுத்த நாட்களில் அவர்கள் இருவரையும் ஒரே இடத்தில், அதுவும் அந்தரங்கமாக ஏதோ பேசியதால் ஏற்பட்ட நெருக்கத்துடன் அவர்கள் அமர்ந்திருப்பதை அவர் எதிர்பார்க்கவில்லை என்பதை அவர் கடுகடுப்பான முகமே காட்டியது.

“என்கூட கொஞ்சம் வர்றீங்களா?” என்று அடக்கிய குரலில், மலாய் மொழியில் பணித்தவர், தாம் வந்த காரணத்தை மறந்தவராக வெளியே நடந்தார்.

 

“இதுவரைக்கும் அவங்களைப்பத்தி ஒருத்தரும் ஒரு வார்த்தை கெட்டதாகப் பேசியதில்லை”. மீராவின் பெயரைக் குறிப்பிட விரும்பாதவராய் பேசினார் தலைமை ஆசிரியர். “நம்ப நடத்தையால மாணவர்களுக்கு ஒழுக்கத்தைப் போதிக்க வேண்டிய நாமே..!” அருவருப்புடன் தன் தலையை இரு பக்கமும் ஆட்டினார்.

வெளிறிய முகத்துடன்  மொஹம்மது ஆரிஃப் பள்ளி அலுவலகத்தை விட்டு வெளியே வந்தார்.

தனது மென்மையான சுபாவத்தைப் பலகீனமாக எடுத்துக்கொண்டு பழித்த மனைவியிடமிருந்து மனத்தளவில் விலகிப்போன  நிலையில், ஆத்திரத்தையும், சிறுமை உணர்ச்சியையும் அடக்க வழி தெரியாது, வேறு ஒருத்தியோடு சில காலம் தொடர்பு வைத்துக் கொண்டுவிட்டு, `இது தகாத செயல்!’ என்று மனச்சாட்சி இடித்துரைக்க, அந்த உறவைத் துண்டித்துக்கொண்டு இருக்கலாம்.

ஆனாலும், குற்ற உணர்வை ஏற்கவோ, மறக்கவோ முடியாது, மனோபலத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்துகொண்டே வந்த தருணத்தில்தானே மீரா, கடவுளே மனித உருவில் வந்தமாதிரி, அடிமட்டத்தில் கனன்று கொண்டிருந்த அந்த ரகசியத்தைக் கிளறினாள்?

அவளுக்கா அவப்பெயர்! அதுவும் தன்னால்?

 

ஒரு மாதம் சம்பளம் இல்லாத விடுப்பு எடுத்துக் கொண்டுவிட்டு, அதற்குப்பின், தன்னிடம்கூடச் சொல்லாமல், வேறு பள்ளிக்கு மாற்றிப் போக அந்த நல்லவர் முடிவெடுத்தது மீராவுக்கு ஏனோ ஏமாற்றமாக இருந்தது.

 

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *