மாலை பொழுதின் மயக்கத்திலே நான் ….

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: February 18, 2018
பார்வையிட்டோர்: 8,676 
 

அன்று மாலை , ஐந்து மணி இருக்கும். ஆவி பறக்க காஃபியை எனக்குப் பிடித்த கோப்பையில் நிரப்பிக் கொண்டு, பால்கனிக்கு வந்து சுவரில் சாய்ந்தபடி, எதிரிலிருக்கும் பார்க்கைப் பார்த்தேன். நானும் என் கணவரும் இந்தப் பலமாடிக் குடியிருப்பிலிருக்கும் ஃபிளாட்டுக்கு வந்ததிலிருந்து, கடந்த ஒரு மாதமாக இது தான் என் மாலைநேரப் பொழுதுபோக்கு.

அது பெரிய பார்க். சிறு பிள்ளைகள் விளையாடுவதற்கும், இளைஞர்கள் உடற்பயிற்சி செய்வதற்கும் உபகரணங்கள் இருந்தன. ஓடுவதற்கு வசதியாகத் தனியாக மண் பாதையும், பெரியவர்கள் நடைப்பயிற்சி செய்ய டைல்ஸ் போடப்பட்ட பாதையும், வாலிபால் விளையாட ஒரு பக்கம் ஒதுக்கப்பட்ட இடமும், மத்தியில் பூச்செடிகளும், ஆக பல வசதிகளுடன் அந்த பார்க் இருந்தது. பார்க்கைச் சுற்றி பார்டர் கட்டியதுபோல் மரங்கள் இருக்கும், ஒரு பகுதியைத் தவிர. அந்த இடத்தில் பார்க்கை ஒட்டியிருந்த ஒரு சிற்றுண்டி விடுதியில் சிலிண்டர் வெடித்த விபத்தில், அந்தப் பகுதியில் இருந்த மரங்கள் எல்லாம் தீக்கிரையாகிக் கருகிப் போனதாம். ஒரே ஒரு மரம் மட்டும் சற்றே கருகிப் பட்டுப்போன நிலையில் அப்படியே குட்டையாக நின்று கொண்டிருந்தது. அந்தப் பகுதிக்கு யாரும் போகாதவாறு சிறுகற்களைப் பரப்பி தடுத்திருந்தார்கள். அங்கு ஒரு உடைந்துபோன பெஞ்ச் இருந்தது . அங்கு யாரும் போவதில்லை .

மாலை வேளைகளில் பால்கனியில் இருந்தபடி பார்க்கை வேடிக்கைப் பார்ப்பது எனக்குப் பிடிக்கும். இந்த ஒரு மாதத்தில் பார்க்குக்கு மாலை வேளையில் வரும் எல்லோரையும் எனக்குத் தெரியும். யாரெல்லாம் எந்தெந்த நேரத்தில் யாருடன் வருவார்கள், என்ன செய்வார்கள், எந்த இடத்தில் உட்கார்ந்து பேசுவார்கள் என்பதெல்லாம் எனக்குத் தெரியும். அவர்கள் யாருக்கும் என்னைத் தெரியாது . சில பெண்கள் மட்டும் நான் பால்கனியில் நிற்பதைப் பார்த்து சிநேகமாய் கை அசைப்பார்கள். நானும் கை அசைப்பேன், அவ்வளவு தான். நான் அங்கு போனதில்லை.

வங்கியில் வேலை செய்யும் என் கணவருக்கு கோவையிலிருந்து சென்னைக்கு மாற்றலாகி இந்தப் பலமாடிக் குடியிருப்புக்கு வந்து இரண்டு மாதங்களாகிறது. நான் யாரிடமும் அவ்வளவாகப் பேசுவதில்லை . வெறும் புன்சிரிப்புப் பரிமாற்றத்துடன் நிறுத்திக் கொள்வேன். கோவையில் இருந்தபோதும் அப்படித்தான். கல்யாணமாகி ஏழு வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லை என்று உறவினர்களின் ஓயாத பேச்சுக்கள் என்னை பேசா மடந்தையாக ஆக்கிவிட்டது.

அன்று மாலை, பார்க்கில் சிறுபிள்ளைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களை அழைத்து வந்த பெரியவர்கள் சிலர் நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தனர். சிலர் அங்கு போடப்பட்டிருந்த பெஞ்சுகளில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். காதுகளில் பொருத்திய ஒலிபெருக்கியுடன் சில இளைஞர்களும், இளம்பெண்களும் ஓடிக் கொண்டிருந்தனர்.

வாலிபால் பகுதி இன்னும் காலியாக இருந்தது. சத்தம் போட்டபடி ஆடும் இளைஞர்கள் இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்து விடுவார்கள். அந்தப் பகுதிக்குப் பின்புறம் தான் அந்தப் பட்டுப்போனக் குட்டைமரம் தனியாக நின்றிருக்கும். அதனருகில் இருந்த சிதிலமடைந்த பெஞ்சில் வெள்ளைப் புடவை அணிந்த ஒரு வயதான பெண்மணி தனியாக அமர்ந்திருந்தார்.

கடந்த ஒரு வாரமாகத்தான் அவரை இந்த நேரத்தில் அந்த இடத்தில் உட்கார்ந்திருப்பதைப் பார்க்கிறேன். எப்போது பார்க்கிற்கு வருகிறார், எப்போது போகிறார் என்பதை நான் கவனிக்கவில்லை. எங்கள் பால்கனியிலிருந்து அவர் முகத்தைப் பார்க்க முடிவதில்லை. அவருடைய பின்புறம் மட்டுமே தெரியும். வயதானவர் என்பது அவர் தலைமுடி வெளீரென்று நரைத்திருப்பதிலிருந்து தெரிந்தது. அவர் எப்போதும் அமைதியாக எதையோ பார்த்தபடி உட்கார்ந்திருப்பார். சில சமயங்களில் தனக்குத் தானேயோ அல்லது அந்தப் பட்டுப்போன மரத்துடனோ பேசிக்கொண்டிருப்பார். அவர் பேசுவது காதில் விழாது , அவருடைய தலை மற்றும் கை அசைவுகள் மூலம் தான் தெரியும். யாரும் அவரை அணுகியோ அல்லது அவர் வேறு யாருடனும் பேசியோ பார்த்ததில்லை.

ஒதுக்குப் புறமாகத் தனியாக உட்கார்ந்து இவர் என்ன செய்கிறார் என்பது எனக்கு வியப்பாகவும் ஆவலைத் தூண்டுவதாகவும் இருக்கும். பார்க்குக்கு வரும் எல்லோரிடமிருந்தும் அவர் வேறுபட்டுத் தெரிந்தார். ஏதோ சோகம் அவரை வாட்டுகிறது என்பதைப் போல் உணர்ந்தேன். அவர் முகத்தைப் பார்க்க வேண்டும், ஏதாவது உதவி தேவையா என்று கேட்க வேண்டும் போல் தோன்றும் . ஆனால் அவர் மனநிலை பாதிக்கப்பட்டவரோ, நான் அருகில் போய் பேசினால் கோபப்படுவாரோ, அடிக்க வருவாரோ என்று தயக்கமும் பயமும் வந்ததால் தவிர்த்து விட்டேன். ஆனால் அவர் தினமும் எனக்கு விநோதமானக் காட்சிப்பொருளானார்.

இன்று மிகவும் அதிகமாகக் கைகளையும் தலையையும் ஆட்டிப் பேசிக் கொண்டிருந்தார். பெஞ்சிலிருந்து எழுந்து போய் அந்த மரத்தின் அருகில் சென்று நின்றார். அதை தடவிக் கொடுத்தார். பிறகு மீண்டும் வந்து பெஞ்சில் அமர்ந்து கைகளை நீட்டி மரத்துடன் பேசிக் கொண்டிருந்தார். அவர் மிகவும் கலங்கி இருப்பதாகத் தோன்றியது. பாவம் என்று மனதில் நினைத்துக்கொண்டு, காலியான காஃபிக் கோப்பையை சமயலறைக்குச் சென்று கழுவி வைத்து விட்டு, இரவு உணவு சமைக்கத் தேவையான பொருள்களை எடுத்து சமையல் மேடையில் வைத்தேன். திடீரென்று, சடசடவென்று மழை சத்தம். ‘அட, இதென்ன அத்திப் பூத்தாற் போல் இந்த அகால வேளையில் அடை மழை ’ என்று ஆச்சரியமாக இருந்தது.

மங்கும் வெய்யிலில் மழை தூறும்போது வானவில் தோன்றுமே என்று நினைத்து மீண்டும் பால்கனிக்கு வந்து எட்டிப் பார்த்தேன். பார்க்கிலிருந்து எல்லோரும் அவசர அவசரமாக வெளியேறிக் கொண்டிருந்தார்கள். சிறுபிள்ளைகள் கூச்சலிட்டுக் கொண்டே ஓடினார்கள். எதிர்பாராது வந்த மழை, ஆதலால், யாரிடமும் குடை இருக்கவில்லை. சிறிது நேரத்தில் பார்க் முழுதும் காலியானது. வானவில்லைத் தேடிய என் கண்களுக்கு, அந்த வயதான பெண்மணி மட்டும் மழையில் நனைந்தபடி அந்த மரத்தின் அருகிலிருந்த பெஞ்சிலேயே உட்கார்ந்திருப்பது தென்பட்டது. அவர் அசையாமல் உட்கார்ந்திருந்தார். முழுதும் நனைந்தும், இடத்தை விட்டு அசையவில்லை . எனக்குப் பாவமாக இருந்தது. யாராவது வந்து அவரை எழுப்பி ஒதுக்குப்புறமான இடத்திற்கு அழைத்துச் செல்ல மாட்டார்களா என்று தோன்றியது. யாரும் அவரை கவனிக்கவில்லையோ? மழை வலுத்தது. இரண்டு மூன்று நிமிடங்கள் ஆகி இருக்கும். யாரும் வரவில்லை . அவர் நனைந்தபடி அங்கேயே உட்கார்ந்திருந்தார். ஏனோ என் மனம் வலித்தது.

தயக்கத்தைத் துறந்து, ஒரு குடையை எடுத்துக் கொண்டு, வீட்டுக் கதவை சாத்திவிட்டு, படிகளிகளில் இறங்கி, தெருவைக் கடந்து, பார்க்குக்குள் ஓடினேன். வாலிபால் ஆடுகளத்தைக் கடந்து, அந்தப் பெண்மணி அமர்ந்திருந்த பெஞ்சை நெருங்கி, அவர் பின்னாலிருந்தபடி விரித்த குடையை அவருக்குப் பிடித்துக்கொண்டு, ‘மழையில் ஏன் நனையறீங்க?’ என்று கேட்டேன். தலையைத் திருப்பி என்னைப் பார்த்தார். முதன் முறையாக அவர் முகத்தைப் பார்த்தேன்!

பல வருடங்களுக்கு முன் இறந்துபோன என் அம்புஜம் பாட்டி போலவே இருந்தார். அச்சு அசலாக அதே முகம்! நீல பார்டர் போட்ட வெள்ளைப் புடவை மழையில் நனைந்திருந்தது. என் பாட்டியைப் பார்ப்பது போலவே இருந்தது. ‘நீ வருவேன்னு எனக்குத் தெரியும். உனக்காகத் தான் காத்திருந்தேன் , இப்படி வந்து உட்கார் ’ என்று என் கையைப் பிடித்து தன்னருகே இழுத்துப் பக்கத்தில் உட்கார வைத்தார் . பயமும் ஆச்சரியமும் கலந்து ஒன்றும் புரியாத நிலையில் அவர் பக்கத்தில் உட்கார்ந்தேன் . ‘இவ்ளோ நாளாச்சா மீரா! என்னை வந்து பார்க்க? தினமும் உங்கிட்டே தான் பேசிட்டிருக்கேன் ’ என்றார். என் பெயர் இவருக்கு எப்படித் தெரியும் என்று மலைத்துப் போனேன் . எனக்குப் பேச்சு எழவில்லை. அவர் என் கைகளைப் பிடித்தபடி பேசினார், ‘ஏன் வீட்டிலேயே அடைஞ்சி கெடக்கறே. தினமும் இங்கே வா. இதோ இந்த மரம் பட்டுப்போயிருக்கே. இதுக்கு தண்ணீர் ஊத்தணும்னு ஏன் உனக்குத் தோணலே? இனிமே தினமும் நீ தான் இதுக்கு தண்ணீர் ஊத்தணும். இனிமே உனக்கு ஒரு குறையும் இல்லாம நான் பாத்துக்கறேன். நான் தான் வந்துட்டேன் இல்லே’ என்றார் .

நான் பிடித்திருந்த குடை விலகியதால் நனைந்த என் தலையை வருடிக்கொடுத்தார். வேறு யாரையோ நான் என்று தவறுதலாகப் புரிந்துகொண்டு பேசுகிறார் என்று நினைத்தேன். ‘மழையில் நனையாதீங்க, அப்படி ஓரமாகப் போய் உட்காரலாம் ’ என்றேன். ‘நான் ஓரமா போயிருந்தா, நீ என்னை பார்க்க வந்திருப்பியா மீரா?’ என்றார். ‘என் பெயர் எப்படித் தெரியும், நீங்க யார்?’ என்று கேட்டுக்கொண்டே குடையைப் பிடித்தபடி எழுந்து நின்றேன். அவரும் எழுந்தார். ‘எனக்கு உன்னைப்பத்தி எல்லாம் தெரியும். என் கவலையை விடு. இனிமே நீ தான் கவனமா இருக்கணும். உடம்பைப் பார்த்துக்கோ. சொன்னதை மறந்திடாதே. இந்த மரத்துக்கு தினமும் தண்ணீர் ஊத்தணும்’. என்றார். ‘ரொம்ப நனைஞ்சி இருக்கீங்க, வீட்டுக்கு வாங்க, தலையைத் துவட்டிக்கிட்டு ஒரு காஃபி குடிச்சிட்டு போகலாம்’ என்றேன் . அவர், ‘வருவேன் , கண்டிப்பா வருவேன், இன்னொரு நாள்’ என்றவர், நகர்ந்து சென்று வாஞ்சையுடன் அந்த மரத்தை வருடிக் கொடுத்து, ‘அதுவரைக்கும் இது தான் நான்னு நெனச்சிக்கோ. மழை நின்னுடுத்து பார். பத்திரமா வீட்டுக்குப் போ’ என்று சொல்லிவிட்டு, என்னைப் பார்த்துக்கொண்டே ஒரு புன்சிரிப்புடன் பார்க்கிலிருந்து வெளியே சென்று விட்டார். என்ன நடந்ததென்று ஒன்றும் புரியாமல் அப்படியே நின்று கொண்டிருந்தேன்.

அன்று இரவு முழுவதும் அவர் நினைவாகவே இருந்தது. அவர் யார், என்ன நடந்தது, என்ன சொன்னார், அதற்கு என்ன அர்த்தம் என்றெல்லாம் யோசித்தபடி தூங்கிப் போனேன். மறுநாள் மாலை முன்னதாகவே பால்கனிக்கு வந்து, அவர் பார்க்குக்கு வருகிறாரா என்று பார்த்துக் கொண்டிருந்தேன். வழக்கம் போல் அங்கு வருகிறவர் எல்லோரும் வந்தனர். அந்தப் பெண்மணியை மட்டும் காணவில்லை. சற்று நேரம் கழித்து, ஒரு பெரிய பாட்டிலில் தண்ணீர் எடுத்துக் கொண்டு பார்க்குக்குச் சென்றேன். எல்லோரும் என்னை ஆச்சரியமாகப் பார்த்தார்கள். அந்தப் பெண்மணி சொன்னதுபோல் அந்த மரத்தின் வேர்பாகத்தில் தண்ணீர் ஊற்றினேன். மறுநாளும் அவருக்காகக் காத்திருந்தேன். அவர் வரவில்லை. நான் போய் மரத்திற்கு தண்ணீர் ஊற்றிவிட்டு வந்தேன். பத்து நாட்கள் இப்படியே போனது. அவரைக் காணவில்லை மரத்திற்கு தண்ணீர் ஊற்றுவதை நான் நிறுத்தவில்லை. ஒருநாள் தண்ணீர் ஊற்றும்போது கவனித்தேன். மரத்தின் அடிப்பாகத்தில் இளம்பச்சை நிறத்தில் ஒரு கிளைக் காம்பு துளிர் விட்டிருந்தது. என் மனசுக்குள் ஒரு குதூகலம். செல்லமாக அதனுடன் பேசினேன். பிறகு தினமும் அதனுடன் ‘உன்னை அந்தப் பாட்டி பார்த்தா எவ்ளோ சந்தோஷப் படுவாங்க’, என்று பேசிக்கொண்டே தண்ணீர் ஊற்றினேன்.

ஒரு மாதம் ஆகியிருக்கும். எனக்கு அன்று சோர்வாகவும், தலை சுற்றலாகவும் இருந்தது. எப்படியோ சமாளித்துக்கொண்டு மாலையில் மரத்திற்குத் தண்ணீர் ஊற்றிவிட்டு, கணவர் ஆபிசிலிருந்து வந்ததும் அவருடன் டாக்டரைப் பார்க்கச் சென்றேன். என்னிடம் விவரங்களைக் கேட்டுவிட்டு, என் கணவரை வெளியில் இருக்கச் சொல்லிவிட்டு, என்னைப் பரிசோதித்த பெண்டாக்டர், என் கணவரை அழைத்து, ‘கங்ராச்சுலேஷன்!, அவங்க கன்சிவ் ஆகி இருக்காங்க, இனிமே ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும், ரெகுலரா செக்கப்புக்கு வரணும்” என்றார். கணவர் என்னை அணைத்துக்கொண்டார். நான் சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போனேன். என் மனதில் அந்த வயதான பெண்மணியும், மரமும் என்னைப் பார்த்து புன்னகைப்பது போல் தோன்றியது. என் கண்கள் பனித்தன.

‘கண்டிப்பா வருவேன்’ என்று, அன்று அந்த மாலைப் பொழுதில் அந்த வயதானவர் சொன்னது, என் அம்புஜம் பாட்டியின் ஆசீர்வாதம் என்பது இப்போது புரிந்தது . தினமும் மாலையில் அந்த புதுத்துளிர் விடும் மரத்தினருகே பெஞ்சில் அமர்ந்து, அவருடைய வருகைக்காகக் காத்திருக்கிறேன். அவர் வருவார். இப்போதில்லை என்றால், இன்னும் எட்டு ஒன்பது மாதங்களில் என் அம்புஜம் பாட்டி நிச்சயம் என்னிடம் வருவார்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *