கதையாசிரியர்:
தின/வார இதழ்: தென்றல்
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: November 19, 2022
பார்வையிட்டோர்: 4,663 
 

(2012ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இந்தக்கதை, இன்றைய இளைய தலைமுறையினரின் தவறான அல்லது தாறுமாறான முந்துரிமைகளைப் (misplaced priorities) பற்றித் தெளிவாகப் பேசுகிறது.

ஒரு மூன்று வயதுக் குழந்தையின் மெல்லிய உணர்வுகளை, ஏக்கங்களைப் புரிந்துகொள்ள இயலாத இளம் தாய், அவற்றை முழுமையாகப் புரிந்துகொள்ளும் ஒரு தலை முறைக்கு முந்திய பாட்டியின் பக்கத்தில் வைத்துப் பேசப்படுவது (juxtaposed) கதையின் சிறப்பு. இரண்டு வெவ்வேறு காலத்தை, பண்பாட்டைச் சேர்ந்தவர்கள் அருகில் வைத்துப் பேசப்படுவது நல்ல இலக்கிய உத்தி.

இன்றைய பல இளம் பெற்றோர்கள், எவ்வாறு இயற் கைக்குப் புறம்பான, தொழிலால் முடக்கப்பட்ட வாழ்க்கையை மேற் கொள்கிறார்கள் என்பதை மழைக்கு வெளியே, கவிநயத்தோடு விவரிக்கிறது.

மழையைப் பார்த்து விட்டு, “அமுதாக்குட்டி பிரதிபலித்த உணர்வுப் புள்ளிகளைப் பொறுக்கினால், அழகான கோலம் போட்டுவிடலாம்”, என்னும் இடத்திலும், மழையில் நனைஞ்சு வெளையாடனும் என்னும் ஆசை” விழிகளில் ஊஞ்சல்கட்டி அது பேராசையாக உருமாறிய கணங்களில், வெளியே ஓடத் துடித்தது” என்பது போன்ற இடங்களிலும், ஆசிரியையின் நுட்பமான பார்வையும் கலையுணர்வும் வெளிப்படுகின்றன.

“வீட்டுக்கு வெளியே கொட்டிக்கிடக்கும், இயற்கையின் தரிசனங்களை எல்லாம் கண்டு இன்புற விருப்பமில்லாமல், ஆனந்திக்க விரும்பும் குழந்தைகளையும் முடக்கிப் போடும் பெற்றோர்களையும் எண்ணுகையில், வன்முறையாளர்களின் வடிவம் தோன்றி விஸ்வரூபம் எடுப்பதைப் பாட்டியால் தவிர்க்க முடியாமல் போனது,” என்று சொல்லும் வரிகள், முதுமையின் தீர்க்கதரிசனத்தைக் (foresight) காட்டுவதோடு, நல்ல குடும்பம் என்று அறியப்படும் குடும்பத்துக்குள்ளும், பலத்த கட்டுப்பாடு களால் வன்முறையாளர்கள் உருவாகலாம் என்று சமுதாயத்திற்குக் கோடிகாட்டுகின்றன.

இந்தக் கதையைப் படித்து முடித்ததும் மனதில் மின்னியது ஜெயகாந்தனின் யுகசந்தி! இதுவும் வேறுவிதமான ஒரு யுகசந்திதான்!

***

அமுதாக்குட்டி ரொம்ப சந்தோசமாய், நீள நீளமாக வரிகளை இழுத்து இழுத்துப் பாடிக்கொண்டிருந்தது. நாலு வரிகளுக்கு மேல் அந்தக் குட்டி மூளையில் ஞாபகம் வைத்துக்கொள்ள முடியாததைப் போல, திரும்பத் திரும்பபாடிய வார்த்தைகளையே போட்டுப் பாடுவது, கேட்பதற்கு வேடிக்கையாக இருந்தது.

“ரெயின் ரெயின் கோ எவே… கம் எகென் நாதர் டே” என்று அது படிக்கும் மழலைப்பள்ளியில் சொல்லிக் கொடுத்த வரிகளை அப்படியே, தப்பாமல் பாடிக்கொண்டிருந்தது.

காலம் காலமாய், நாமும் கேட்ட பாடல்தான். நம்ம வீட்டுப் பிள்ளைகளும், பாடிச் சலித் தபாடல்தான். ஆனால், இந்த மூணு வயது அமுதாக் குட்டி, முழுசாகப் பேச்சு இன்னும் வராத மழலையில், சின்னஞ்சிறு செப்பு வாயைத் திறந்து பாடும் போது, பூ மலர்ந்து மலர்ந்து மூடுவது மாதிரி மிக அழகாகத் தெரிந்தது.

பாடலுக்கு ஏத்த மாதிரி சின்ன விரல்களை நீட்டியும் மடக்கியும், வானத்தை நோக்கி பாவனை செய்வதும் மிகுந்த சிலிர்ப்பை உண்டு பண்ணியது…!

மழை அப்போதுதான் பெய்ய ஆரம்பித்ததில், வீடெங்கும் ஒரு குளிர்ச்சி தோன்றிய நிலையில் மனசுக்குள் அதன் இதம் படர்ந்திருந்தது. மழையை விரும்பாதவர்கள் யார் இருக்க முடியும்? அதுவும், வீட்டுக்குள் இருக்கும் போது மழை பெய்தால், அதன் சுகமே அலாதிதான்! ஜன்னல் கம்பிகளைப் பிடித்தபடி, மழையை ரசிப்பதற்கு ஈடாக வேறு எதைச் சொல்ல முடியும்?

மழை பெய்யும் போது… சடாரென விரியும் குளிர்மையும், கலங்கலான பொழுதும் மழையை அனுப்பிவிட்டுத் தன்னை மூடிக்கொள்ளும் வான மண்டலமும், ஹாவென நெஞ்சம் பொங்கித்தான் போகிறது!

இல்லாமலா, வைரமுத்து

‘மழைக்கு வெளியே நின்று மழையை ரசியுங்கள்….
மழை பெய்த களிமண் நிலமாய்
மனம் எப்போதும் நெகிழ்ந்திருக்கட்டும்’

என்று கவிதை பாடுவார்?

“ரெயின் – ரெயின்…” அமுதாக்குட்டி மீண்டும் ஆரம்பித்தது. போட்டிருந்த குட்டைக் கவுனின் விசிறி மடிப்புகளைப் பக்கவாட்டின் இருபுறமும் விரல்நுனிகளால் தூக்கிப் பிடித்துக் கொண்டு சுழன்று ஆடியது. மகிழ்ச்சியின் பிம்பமாக அது வெளிப்பட்டது.

வானத்திலிருந்து உதிரும் மழைத் துளிகளை, கரங்களில் தொட்டுவிடும் தவிப்பில், முன்வாசலுக்கும் பின்வாசலுக்குமாய் முயல் குட்டியாய் ஓடி ஓடி மழையை வேடிக்கை பார்த்தது.

மழையைப் பார்த்து விட்டு, அமுதா பிரதிபலித்த உணர்வுப் புள்ளிகளைப் பொறுக்கினால், அழகான ஒரு கோலம் போட்டுவிடலாம் போலிருக்கு என்று கணக்குப் போட்டுக்கொண்டிருந்த அவளின் பாட்டி, “அமுதா… ஓடாதே கண்ணு, விழுந்திடுவே” என்றுசொன்னாள். அதையெல்லாம் கேட்கும் நிலையில் அமுதாக்குட்டி இருப்பதாகத் தோன்றவில்லை.

“பாட்டி… இந்த மழை எங்கேயிருந்து வருது? யாரு இதை அனுப்பி வச்சாங்க?” ஓடும்போதே ஒரு கேள்வியைத் தூக்கிப் போட்டுவிட்டு, ஓடும் குழந்தையைப் பார்த்து அதிசயப்பட்டாள் பாட்டி.

இந்தக் காலத்தில், மூனு வயது குழந்தையெல்லாம் எப்படிக் கேள்வி கேக்குது… ? அதன் கேள்விக்குப் பதில் சொல்லப்போனால், அந்தச் சின்னஞ் சிறு மூளைக்குப் புரியுமா என்கிற தயக்கம் அவளுக்குள் இருந்தது.

ஆனால், அமுதாக்குட்டியை விட்டால் மழையைப்பற்றி ஆராய்ச்சிக் கட்டுரையே எழுதி முடித்திடும் போல அத்தனை ஆர்வமாயிருந்தது.

“பாட்டி… மழை எவ்ளோ நல்லாயிருக்கு… நான் அதிலே வெளையாட ணும்… நனைஞ்சுகுளிக்கணும்…” விழிகளில் ஆசை ஊஞ்சல் கட்டி இருந்தது. அது பேராசையாக உருமாறிய கணங்களில், வெளியே ஓடத் துடித்தது. வாசல் கதவை, இரு கைகளாலும் பிடித்து ஆட்டி விருப்பத்தைப் பிரகடனப் படுத்தியது.

தடுப்புச்சுவராய் அந்த இரும்புக் கதவு மட்டும் இல்லாவிட்டால், மான்போல துள்ளி இந்நேரம் மழையில் நின்று மகிழ்வோடு ஆடிக் கொண்டிருக்கும் போல…!

அமுதாவின் கண்களில் பொங்கியிருந்த பிரகாசத்தைப் பார்க்கையில், அந்த இரும்புக் கதவு குற்றவாளிகளைத் தடுத்து வைக்கும் சிறைக் கதவாய் தோன்றி வெறுப்பூட்டியது பாட்டிக்கு. அந்தப் பாட்டியும் – பேத்தியின் வயதைக் கடந்து வந்தவள் என்பதால், பிஞ்சு மனத்தின் உணர்வுகளை உணர்ந்திருந்தாள்.

“அம்மா… கதவைத்திற… மழையில வெளயாடணும்… அம்மா…” அமுதா, தனக்குப் பரிச்சையமாகியிருந்த மழலை மொழியில் கத்திக் கோபத்தை வெளிக் கொணர்ந்த வேளையில், இது வரை அறைக்குள்ளிருந்து, கணினியில் ஆழ்ந்திருந்த மலர்விழி அதைவிடக் கோபமாய் வெளியில் வந்தாள்.

“ஏன்டி… சும்மா இருக்க மாட்டியா நீ? மழைவந்தா உனக்கு இதே வேலையாய் போச்சு… மழையிலே வெளையாடப் போறாளாம்… மழையிலே நனைஞ்சு காய்ச்சல் வந்தா கஷ்டப்படப் போறது யாருடி? மருந்து வீடுன்னு நான் இல்ல அலையணும்…? எனக்கு இருக்கிற வேலை பத்தலேன்னு உனக்கு வேற பண்ணனுமாக்கும்… கழுதை…”

இதுக்குப்போய், ஏன் இவள் இப்படிக் கத்துகிறாள் என்று பாட்டி புருவம் உயர்த்திப் பார்க்கையில், அதற்குள் மலர்விழி மகளின் காதுமடலைப் பிடித்துத் திருகிவிட்டாள் போலும்.

“அய்யோ… அம்மா வலிக்குது…” செப்புக் கிண்ணமாய் செதுக்கப் பட்டிருந்த செவியைப் பற்றிக்கொண்டு அமுதாக் குட்டி கதறியது.

“ஏய்… மலர்…! சின்னப் புள்ளைக்கிட்ட போய் முரட்டுத்தனமா நடந்துகிட்டு…விடு அவளை…” பாட்டியின் பரிவு அமுதாக்குட்டியை வருடி. விட்ட தினுசில், லேசாய் விசும்பினாள். இத்தனைக்கும் மலர்விழி ஆசிரியர் பணியில்தான் இருந்தாள். ஆனால், தாய்மையைத் தொலைத்த ஆசிரியை போலும். காலமாற்றங்கள், மனிதர்களின் குணநலன்களையும் மாற்றிவிடுமா என்ன…? பாட்டி இயலாமையுடன் பெருமூச்சுவிட்டாள்.

துழாவிச் செல்ல ‘படக்’ கென கதவை மூடினாள்.

வீட்டுக்கு வெளியே கொட்டிக் கிடக்கும், இயற்கையின் தரிசனங்களை யெல்லாம் கண்டு இன்புற விரும்பாமல், ஆனந்திக்க விரும்பும் குழந்தை களையும், முடக்கிப் போடும் மலர்விழியைப் போன்ற பெற்றவர்களையும் எண்ணுகையில் வன்முறையாளர்களின் வடிவம் தோன்றி விஸ்வரூபம் எடுப் பதை, பாட்டியால் தவிர்க்க முடியாமல் போனது.

***

மனநிறைவோடு இறைவனைத் தரிசித்துவிட்டுக் கோயில் வாசலின் ஐந்து படிகளை விட்டு இறங்கிக் காருக்குள் வருவதற்குள் காத்திருந்தது மாதிரி மழை பிடித்துக்கொண்டது.

நல்ல வேளையாகத் தாழ்வாரம் போட்டிருந்தார்கள். தகரக்கூரையில் மழைத்துளிகள் ஆரவாரமாய் ஒசை எழுப்பின. சேலை முந்தானையை இழுத்துப் போர்த்திய வண்ணம் பாட்டி மலர்விழியைப் பார்த்தாள். அவள் கொட்டும் மழையை முறைத்தபடி நின்றிருந்தாள். அமுதாக்குட்டி அம்மாவின், கையைப் பிடித்தபடி, முகமெங்கும் பரவசமாய் நின்றிருந்தது. இந்தத் திடீர் மழை எதிர்பாராவண்ணம் கிடைத்த பரிசு போல அமுதாவை மகிழ்ச்சிப்படுத்தி, ரசிக்க வைத்திருந்தது.

அந்த உப்பிய கன்னங்களும், செவ்விதழ்களும் திராட்சையென மிதக்கும் விழிகளுமாய் இந்த மழையை என்னமாய் வியக்கிறது இந்தக்குட்டிப் பெண்…! பாட்டி இதழோரம் பூத்த சிறு முறுவலும் கண்களில் ததும்பிய மகிழ்வுமாய்ப் பேத்தியைத் தொட்டபோது, அமுதாக்குட்டி அண்ணாந்து பார்த்து சிரித்தது. அந்தச் சிரிப்புக்குள் இத்தனூன்டு துளியாய் மழையில் நனைந்து ஆடவேண்டும் என்கிற ஏக்கமும் ஒளிந்திருப்பது பாட்டிக்கும் தெரியும்தான். அவளுக்கும் இந்த வயசிலும் இப்படியெல்லாம் சின்ன ஆசைகள் ஒட்டடைகளாகத் தொங்கிக்கொண்டுதானே இருக்கிறது.

வீட்டுக்கு உள்ளே இருந்தாலும் சரி, வீட்டுக்கு வெளியே இருந்தாலும் சரி, மழைக்கு வெளியே இருந்துதான் மழையை ரசிக்கணுமுன்னு விதியிருக்குபோல. எண்ணங்களின் மீறலில், தன்னை மறந்து பாட்டி களுக்_கென சிரிக்கையில், மலர்விழி சட்டென திரும்பிப் பார்வையில் நெருப்பை வைத்தபடி சொன்னாள்.

“ஏம்மா… மழையிலே குதிச்சு வெளையாடணும்னு போல இருக்கா?” எகத்தாளமாய் கேட்டாலும், விட்டால் கிழவி பேத்தியையும் துணைக்குக் கூட்டிக்கொண்டு போய் ஜாலியாய் ஆடிவிட்டு வரும் என்கிற பயமும் அதில் இருந்தது.

பாட்டி, வாய்விட்டுச் சத்தமாய் சிரித்துவிட்டு, அமுதாவை அணைத்துக் கொண்டாள்.

சாலையில் தண்ணீரை வாரியடித்தபடி நனைந்து செல்லும் வாகனங்களையும், மழைச் சட்டை போட்டபடி மோட்டார் வண்டிகளில் போகும் வாகனமோட்டிகளையும், குடை பிடித்துக்கொண்டு அவசர அவசரமாய் நடந்து செல்லும் மனிதர்களையும் அமுதாக்குட்டி ஏக்கமாய்ப் பார்த்துக்கொண்டிருந்தது.

வானிலிருந்து கொட்டும் மழைநீர் பக்கத்திலிருந்த சாக்கடையில் விழுவதையும், சாக்கடை குப்பைகளை அடித்துக்கொண்டு ஓடுவதையும் கைதட்டி ரசிக்கிறது.

தாழ்வாரத்திலிருந்து கம்பியாய் வடியும் மழைநீரை உள்ளங்கையில் ஏந்தி அழகு பார்த்து, அப்படியே முகத்தில் தேய்த்து சிலிர்த்துப் போகிறது.

“ஏய்… ஏய்… சட்டையெல்லாம் நனையுது பாரு. பாவாடையைத் தூக்கிப் பிடி… ஜரிகை பார்டரிலே தண்ணிபட்டா கருத்துப்போயிடும்… கிட்டவாடி…” மலர்விழி, அமுதாவைக் கிட்டத்தில் இழுத்தபடி…

“சீ…இந்த மழைக்கு நேரங்காலமே தெரியாது. கோயிலுக்கு வந்துட்டு வீட்டுக்குப் போற நேரத்திலே இப்படிப் பேஞ்சு தொலையணுமா… சனியன்…” என்றாள்.

பாட்டிக்கு நெஞ்சம் நடுங்கிதான் போனது. மழையைப் போய் இப்படிச் சபிக்கிறாளே? கோயிலுக்கு எதற்கு வந்தாள்? தெய்வ தரிசனத்துக்குத்தானே? மழை வேறு, தெய்வம் வேறு என்று ஆகிவிடுமா?

“மலர்… மழையை ஏசாதம்மா. அது கடவுள் மாதிரி. ரொம்பப் புனித மானது.வானத்திலிருந்து இந்த தேவதை இறங்காவிட்டால், பூமி என்னவெல்லாம் ஆகும்ன்னு உனக்குத்தெரியாதா?”

பாட்டி ஆத்திரப்பட்டத்தை சட்டை செய்யாமல், மலர்விழி தோள்பட்டை யைக் குலுக்கியபடியே அலட்சியமாய்ச் சொன்னாள். “ஆமா… உங்களுக்கும் இவளுக்கும் மழை வந்தாலே போதுமே…பைத்தியமே பிடிச்சிடுமே…”

அந்தச் சிடுசிடுப்புக்காரியிடம் பேச விரும்பாமல் மேலே தெறித்து ஊசிமுனைகளாய், சிதறி ஈரப்படுத்தும் மழைத் தூறலை சேலை முந்தானை யால் துடைத்தாள் பாட்டி.

மழை நிற்பதாய்த் தெரியவில்லை. யாரைப்பற்றியும் கவலைப்படாமல், எந்தக் கட்டுக்கும் அடங்காமல், பூமியோடு கதை பேசி களித்துக் கொண்டிருந்தது. சிப்பிக்குள் முத்து போல மழைத்துளிகள் கொட்டிக் கொண்டிருக்க, குளத்தங்கரையில் குளிக்கும் பறவைகளாய், நீர்க் குமிழிகள் மிதந்துகொண்டிருந்தன.

சாக்கடையில் நிறைந்திருந்த குப்பைகூளங்களெல்லாம் எங்கே போய் ஒளிந்தன என்று அடையாளம் இன்றிச் சுத்தமாகி தண்ணீரால் நிரம்பி ஓடிக்கொண்டிருந்தது. தூசி படிந்து கிடந்த சாலையோர மரங்கள், மழை நீரில் குளித்துச் சுத்தமாகிகொண்டிருந்த காட்சி பளிச்சென தெரிந்தது.

“என்னடா இது… எவ்ளோ வேலை கெடக்கு… இந்தப் பாழாய்ப் போன மழை வந்து எல்லாத்தையும் கெடுத்துப்புடுச்சி…” பின்னால் யாரோ முணுமுணுத்தார்கள்.

அவர்கள் நின்றிருந்த தாழ்வாரம் முழுவதும் கூட்டம் நிரம்பியிருந்தது. அவர்களின் பெருமூச்சுகளும், உச்சுக்கொட்டல்களும், எரிச்சல்களும் பாட்டிக்கு வெறுப்பாக இருந்தன.

பலவிதமான வேலைகளை, மூட்டையாகக் கட்டி முதுகில் தொங்க விட்டுக்கொண்டு, வேலையோடு வேலையாக அப்படியே கடவுளை எட்டிப் பார்த்துவிட்டுப் போகலாம் என்று கோயிலுக்கு வந்தவர்கள் போலும் இவர்கள்.

பாட்டிக்குப் பெருமூச்சு வந்தது. மலர்விழியின் இறுகிய பிடிக்குள் திமிறிய வண்ணம் முகம் சிவந்து போயிருந்த அமுதாக்குட்டியைப் பரிதாபமாய்ப் பார்த்தாள். சிறையாகக் கிடந்த தாயின் விரல்கள் கொஞ்சம் விலகினாலும், திடுதிடுமென ஓடி மழையில் ஆடி அதை அணைக்கத் துடிக்கும் அவசரம் இருந்தது அமுதாக்குட்டியிடம்.

“சேச்சே…! இந்த மழை இப்படி உயிரை வாங்குமுன்னு தெரிஞ்சிருந்தா வீட்டிலேயே இருந்திருக்கலாம். வேலையாவது முடிஞ்சிருக்கும்” மலர்விழி பொருமினாள்.

தங்கள் கடமைகளைச் செய்ய முடியாமல், மழை தடுத்துவிட்டதே என்று சலித்துக்கொண்டிருப்பவர்களைப் பார்த்து சிரிப்பது மாதிரி, மழை ஆனந்தமாய்த் தனது கடமையைச் செய்துகொண்டிருந்தது.

(தென்றல், 4 மார்ச், 2012)

– 2012 ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதைகள், முதற்பதிப்பு: 2013, மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம், கோலாலம்பூர்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *