கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: June 18, 2015
பார்வையிட்டோர்: 13,627 
 

“இவொள நாழியா எவ கால்லடா விழுந்து கெடந்த, ஊருச்செருக்கியளோட சேக்கதான்டா சோறு போட போவுது”

கனகாத்தாள் இரைச்சலை பொருட்டாகவே மதியாமல் வீட்டினுள் நுழைந்தான் ராசு, அவனுக்கு மூன்று வயதிருக்கும்போது அவன் பெற்றோர்கள் ஒரு விபத்தில் இறக்கவே, பாட்டி கனகாத்தாள் வீட்டில்தான் வளர்ந்து வந்தான்.

“யாருச் சொன்னாவோ பொம்புள பின்னாடித் திரியிரும்னு, ஓன் சோலியப்பாரு, சோத்தப் போடு மொதல்ல, ச்சும்மா எப்பயும் கத்திக்கிட்டு”

சோத்துப்பானையும், குழம்புச்சட்டியும் அவன் அருகில் வந்தது, பனையோலை வேய்ந்த அந்த வீட்டினுள் படுத்து காலை நீட்டினால் திண்ணைதான், கதவு ஒரு பனை தட்டிதான், தட்டி கோழி கொடப்பு மேல் சாத்திவைக்கப் பட்டிருந்தது. கொடப்பின் மீது காலைத் தொங்கப்போட்டு வெற்றிலையின் மீது சுண்ணாம்பைத் தடவிக்கொண்டே அவனிடம் பேசலானாள். ராசு கருவாட்டுக்குழம்பை பேசனில் கொட்டி சோற்றைப் போட்டு பிசைந்தபோதே வாசம் அவனை மேலும் பசியேறச் செய்தது.

“ந்தா கத்துனா எனக்கெதும் கெடைக்குமுனுட்டு., ஒழுங்கா சோலியப் பாத்தா ஊருக்காரானுவ மாறி குடியாவலாம் இல்லயினா நான் செத்தப்பறம் நாறிப்போயி நாதியில்லாம கடப்ப, யேதோ நான் இருக்கமுட்டு களயிழுத்து இந்த ஆட்டுவோள மேச்சி ஒனக்கு கஞ்சிய ஊத்துறேன், ஏன் சேதிய கேள்றாம்பி,. ஒழுங்கா எதாச்சும் நமக்கு தக்கன காசப்பாக்குற சோலியப்….”

அவள் சொல்லி முடிப்பதற்குள் அவன் உறும ஆரம்பித்தான்,

“சொவனென்னு கெடக்குறியா எப்பப் பாத்தாலும் எழவு கூட்டியிட்டு”

கனகாத்தாள் வெற்றிலையை நதம்புவதில் மும்முரமானாள். ராசுவின் எதிர்காலத்தை நினைத்து புலம்புவதும் பிறகு சகஜ நிலைக்குத் திரும்புவதும் இவளுக்கு வாடிக்கையான ஒன்று.

ஊர் முக்கியஸ்தர்களில் தங்கபாண்டிக்கு சிறிது வசதி குறைவுதான் என்றாலும் மக்கள் மத்தியில் மரியாதைக்கு குறைவில்லாதவன். மரியாதையை சம்பாதித்தது எல்லாமே அவன் பேச்சை வைத்துதான், அவன் பேச ஆரம்பித்தால் அவ்வளவு சுவாரசியம் ததும்பும். ராசுவுக்கு குடிக்க மட்டுமல்ல மற்ற இத்தியாதிகளையும் கற்றுக்கொடுத்தது இவன்தான். வேலியில் சேலை காய்ந்தாலும் தங்கபாண்டி மிரடு முழுங்குவான். விசயமதி வீட்டுக்கு அடிக்கடி இவன் போவது வழக்கம், ராசுவும் கூடப்போவான், ஆனால் அவன் காவலுக்கு அல்லூருப் பக்கத்திலிருக்கும் போர் செட்டில் படுத்துக்கொள்வான்.

மனைவிக்கு அவனின் வப்பாட்டி சகவாசம் தெரிய வந்ததிலிருந்து இருவருக்கும் அவ்வளவாக பேச்சுவார்த்தையில்லை, ஏதும் பேசுவதென்றால் அவன் பத்து வயது மகன் வழியாகத்தான் எல்லாம். அவன் வீட்டுக்கு வருவதே மாடு கன்னுகளை தண்ணிக்காட்டி கட்டுவதற்குத்தான். மற்ற நேரங்களில் வயலிலும் உப்புச் சப்பில்லாத பஞ்சாயத்திலும் கழிப்பான்.

ராசுவை தங்கபாண்டி எப்பொழுதும் பக்கத்தில் வைத்திருப்பதற்கு உருத்து இருந்தது, கனகாம்பாள் மனைக்கட்டு வழியாகத்தான் தங்கபாண்டியின் வயலுக்கு செல்ல முடியும், வெகுநாட்களாக பாதை விட்டுத்தரும்படி கனகாம்பாளிடம் கொழுவிக்கொண்டு இருந்தான், ஆனால் கனகாம்பாள் அசைந்த பாடில்லை. ராசு மனது வைத்தால்தான் நிலத்தை வளைக்க முடியுமென முடிவுக்கு வந்தான். அந்த மொத்த இடமும் கிடைத்தால் வயக்காட்டின் மதிப்பு பன்மடங்கு உயரும் என்பது இவனது கணக்கு.

கனகாத்தாள் பலமுறை தங்கபாண்டியைப் பற்றி ராசுவிடம் கூறியபோதும் , அவன் கேட்ட பாடில்லை, நிலத்தை மட்டும் அவனிடம் விடக்கூடாது என்பதில் குறியாக இருந்தாள். நான் செத்துக்க்கெட்டுப் போனாலும் இந்த மனைக்கட்டை விற்கக்கூடாது என்பதை அடிக்கடி அவனிடம் சொல்லி வைத்தாள். இவர்களது ஏழ்மையை பயன்படுத்தி பலர் நல்ல விலைக்கு கேட்டுப் பார்த்தும் கிழவியடம் ஆகவில்லையென விட்டுவிட்டனர். ஆனால் தங்கபாண்டிக்கு அப்படியில்லை அந்த இடத்தை விட்டால் வேறு வழியில்லை.

“இதுயென்ன புள்ளல்லாத சொத்தா? யென் பேரப்பய இருக்குறப்போ கண்ட நாயுவொ வாய் வைக்கப் பாக்குது”

தங்கபாண்டி வயலுக்குச் செல்லுகையில் கனகாத்தாளின் சாடைப் பேச்சு காதில் விழுந்தது, விழட்டும் என்றுதான் அவளும் சத்தமாக பேசினாள்.

“இந்த கெழவி மண்டையப் போட்டானாக்க எப்புடியும் நிலத்த ராசுவ கொழுவி வாங்கியரலாம்” என மனதில் நினைத்துக்கொண்டு காதில் வாங்காதது போல் சைக்கிளை வேகமாக மிதிக்கலானான்.

தங்கபாண்டியின் போர் செட்டைச் சுற்றி தென்னை மரங்களும் ஒதிய மரங்களும் சூழ்ந்து அடைப்பாக காட்சியளிக்கும். தூரத்திலிருந்து பார்த்தால் மரங்கள் மட்டும்தான் தெரியும். ஒரு மதிய வேளையில் அடைப்புக்குள் ஒதிய மரத்தடியில் சணல் சாக்கை விரித்துப்போட்டு பட்டை சாராயமும், கூனிப்பாட்டியிடம் வாங்கிய மீன் பெரட்டலும் சகிதமாக ராசுவும் தங்கபாண்டியும் பினாத்திக்கொண்டிருந்தனர். உண்மையில் ராசு மட்டும் பினாத்திக்கொண்டிருந்தான்.

“எலேய் ராசு அந்த இடத்த எனக்கு கொடுக்கப்படாதடா நான்ன வெளியாளா?”

“இல்ல சித்தப்பு எங்க ஆத்தா சொல்லிகிட்ருக்கு, அது எங்க பரம்பர மனைன்னு அத எப்புடி குடுக்க முடியும் நீயே சொல்லு?”

“நானென்னடா முச்சுலுமா கேக்குறேன், வண்டி மாடு போவ பாததானே கேக்குறேன், கெழவி குடுத்தாலும் நீயி மறிப்ப போலயே ”

“யோவ் ஆமய்யா இருக்குறதே அது மட்டுந்தான் அத ஒனக்கு குடுத்துட்டு , நான் எங்கிட்டு போவேன்?”

ராசு சீறினான், சிறிது நேர அமைதிக்குப்பின்

“சரிடா ஒனக்கு இஷ்டமில்லாம எனக்கெதுக்கு விடு, ந்தா தண்ணிய புடிச்சிட்டு வா கலவைய போடுவோம், பாத்துப் போடா போர்க்குழியிருக்கு”

ராசு சாராய கலவைக்கு தண்ணீர் எடுக்க போர்க் குழாயை நோக்கி தள்ளாடி நகர்ந்தான், போர்க்கிணறு அதை ஒட்டித்தான் இருந்தது. தீடீரென யாரோ தள்ளுவதுபோல் இருந்தது சுதாரிப்பதற்குள் ராசுவின் தலை கிணற்றின் அடியில் போய் சொருகியது. தங்கபாண்டிக்கு கை நடுக்கம் நிற்கவில்லையென்றாலும் சமாளிக்கலாம் என்ற தைரியம் இருந்தது. நாம்தான் தள்ளினோம் என எவனுக்குத் தெரியப்போகிறது என நினைத்துக்கொண்டான்.

கனகாத்தாள் ராசுவின் ஈமச் சடங்கு முடிந்த பிறகும் தலைவிரிக்கோலமாகவே கிடந்தாள். அக்கம்பக்கத்தினர் பலர் ஆறுதல் கூறியும் அவள் பித்துப் பிடித்தவள் போல் திரும்ப திரும்ப தன் பேரப்பிள்ளையின் புராணம் பாடி ஒப்பாரி வைத்து அழுதுகொண்டே இருந்தாள்.

ராசு இறந்து இரண்டரை மாதங்கள் கழிந்தது, கிழவி சிறிது சிறிதாக சகஜ நிலைமைக்குத் திரும்பினாள், இப்பொழுது அவள் அதிகமாக யாரிடமும் பேசுவதில்லை. ஒரு நாள் விடியற்காலை நான்கு ஐந்து மணியிருக்கும் தங்கபாண்டியின் மனைவி அக்கம் பக்கத்தில் சத்தம் கேட்டு, என்ன ஏதென்று விசாரிக்க கனகாத்தாளின் வீடு எரிவதாகவும், கிழவியின் காட்டுக்கத்தல் கேட்டதாகவும் பதற்றத்துடன் கூறினார்கள்.

தங்கபாண்டியின் மனைவி தலைமுடியை அள்ளிக்கட்டிக்கொண்டு அவசரமாக துக்க வீட்டை நோக்கி தெருக் கூட்டத்தோடு நடக்க ஆரம்பித்தாள்.

தங்கபாண்டி அவன் வீட்டுக்குப் பின்புறம் வேலியோரமாக சென்று சுருட்டை எடுத்துப் பற்ற வைத்தான். பெருமூச்சோடு சுருட்டுப்புகையை ஊதிவிட்டு மேற்கு திசை நோக்கி கனகாத்தாள் வீட்டை கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

பனையோலை வீடு பொன்னிறமாக பட பட சத்தத்தோடு எரிந்து சாம்பல் தூளை ஊர் முழுக்க பறக்க விட்டுக்கொண்டிருந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *