மனிதர்களில் ஒரு மனிதன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: May 14, 2016
பார்வையிட்டோர்: 9,352 
 

மாநில அரசாங்கத்தின் வட்டார போக்கு வரத்து மீனம்பாக்கம் அலுவலகத்தில் அவனுக்கு இளநிலை எழுத்தர் வேலைக்கான ஆர்டர் வந்ததும் அவன் மிகவும் மகிழ்ந்து போனான். நிரந்தரமான வேலை. மேற் கொண்டு படித்து அலுவலகத் தேர்வுகள் எழுதினால் மேல்நிலை எழுத்தர், கண்காணிப்பாளர், மேலாளர் என்ற நிலைக்கு உயரலாம் என்கிற நியாயமான ஆசைகளைத் தன்னுள் வளர்த்துக்கொண்டான்.

அவன் வித்தியாசமானவன், இருபத்தியிரண்டு வயதுதான். விவேகானந்தர், காந்தி போன்றவர்களை நேரில் பார்த்திராவிடினும், அவர்களைப் பற்றி ஆர்வத்துடன் நிறையப் படித்து தெரிந்துகொண்டான். அவர்களைப்போல் நேர்மையான சிந்தனையும், உறுதியான மனமும், ஒழுக்கமும் தானும் பழகிக் கொள்ள வேண்டும் என்று தீவிர முயற்சி மேற்கொள்பவன்.

ஒரு நல்ல நாளில் பாட்டி அவனது நெற்றியில் திருமண் இட, அவளை விழுந்து நமஸ்கரித்து, பின்பு தன் தகப்பனாரை நமஸ்கரித்துவிட்டு, தன் தங்கைகள் வாழ்த்துக் கூற, மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் அந்த அலுவலகத்தில் சேர்ந்தான். தன் பத்து வயதிலேயே தாயை இழந்துவிட்டதால் அவனது தந்தைதான் அவனுக்கு தாயுமானவர்.

அலுவலகத்தில் சேர்ந்த முதல் நாள் வட்டார போக்கு வரத்து அதிகாரி, உதவி அதிகாரி, மேலாளர், கண்காணிப்பாளர் போன்ற அலுவலகப் பெரியவர்களை நேரில் பார்த்து வாழ்த்துக்கள் பெற்றுக் கொண்டான். அலுவலக சக ஊழியர்கள் அவனிடம் கல கலப்பாக பேசினார்கள்.

மேஜையின் மேலும் கீழுமாக இரைந்து கிடக்கும் கோப்புகளும், அவற்றினூடே செருகப் பட்டிருக்கும் சிவப்பு நிற ‘அவசர’க் கொடிகளும், அந்தக் கோப்புகளின் பழமையான வெளவால் வாசனையும், மாலை ஆறு மணிக்கு மேலும் அலுவலகத்திலேயே தங்கி மேஜைகளை இழுத்துப் போட்டுக் கொண்டு இரவு பத்தரை மணி வரை ரம்மி விளையாடும் ஊழியர்களும்… பார்க்கும்போது இவனுக்கு எல்லாமே புதுமையாக இருந்தன.

சீக்கிரமே அலுவலக வேலைகளைக் கற்றுக் கொண்டவன், சுறுசுறுப்பாக தன் அன்றைய வேலைகளை அன்றன்றக்கே முடித்துவிட்டு, பிற ஊழியர்களுக்கும் உதவிட தயாராய் நிற்கும் இவனது திறமையைக்கண்டு அனைவரும் வியந்தனர்.

ஆனால் அந்த அலுவலகத்தில் பொதுமக்களுக்கு எந்த வேலை நடக்க வேண்டுமென்றாலும் பணம் கொடுத்தால்தான் முடித்துக் கொடுக்கப்படும் என்கிற அவல நிலையை உணரத் தொடங்கியபோது இவன் மிகுந்த வருத்தமுற்றான். அது தவிர சம்பந்தமேயில்லாத ஏஜெண்டுகள் மிகவும் சுவாதீனமாக அலுவலகத்திற்குள் நுழைந்து பணம் கொடுத்து அதை விட அதிகமாக பொதுமக்களிடமிருந்து பணம் பெற்றுக் கொண்டு காரியத்தை முடித்துக் கொடுக்கிற அசிங்கங்களைப் பார்த்தபோது, புரையோடிப்போன இந்த கலாசாரத்தை தான் மட்டும் எப்படி எதிர்த்துப் போராடுவது என்று மலைத்துப்போனான்.

விளிம்பு நிலை மனிதர்களின் அறியாமையும், அரசாங்க அலுவலகத்திடம் இருக்கும் தேவையற்ற பயமும் வெளியே காத்திருக்கும் ஏஜெண்டுகளுக்கு இவர்களை ஏமாற்றி பணம் பண்ணுவதற்கு தோதாகிவிடுகிறது. ஏஜெண்டுகளையும் தாண்டி உள்ளே வந்தாலும் சக ஊழியர்களின் பொறுப்பற்ற அடாவடித்தனமான பதில்களும் அலட்சியமும், பணம் கறந்துவிடும் சாகசங்களும்…. இவனுக்கு தான் அரசாங்க உத்தியோகத்திற்கே வந்திருக்கக்கூடாதோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது.

அடுத்த கணம், ‘நேர்மைக்காகவும், உண்மைக்காகவும் நீ எதையும் துறக்கலாம். ஆனால் எதற்காகவும் நேர்மையையும், உண்மையையும் நீ துறக்கக் கூடாது’ என்கிற சுவாமி விவேகானந்தரின் பொன்மொழி இவன் ஞாபகத்திற்கு வந்தது. போராடிப் பார்த்துவிடுவது என்று தனக்குள் உறுதி பூண்டான்.

ஆறு மாதங்கள் கழிந்தன…

இவனது நேர்மையையும், திறமையையும் புரிந்துகொண்ட ஆர்.டி.ஓ இவனை ஓட்டுனர் உரிமம் வழங்கப்படும் செக்ஷனுக்கு மாற்றினார். பணம் எதுவும் வாங்கிக் கொள்ளாது உடனடியாக வேலை செய்யும் இவனை நோக்கி பொதுமக்கள் அலை மோதினர். தன்னிடம் வரும் ஏஜெண்டுகளிடம் நட்பு பாராட்டாது ஒரு குறிப்பிட்ட எல்லையிலேயே அவர்களை நிறுத்தி வைத்தான்.

அன்று காலை பதினோரு மணியிருக்கும். ஒரு ஏஜெண்ட், ஓட்டும் உரிமத்திற்கென கொத்தாக பழுப்பு நிறத்தில் பத்து கோப்புகளை இவன் டேபிளின் மேல் வைத்துவிட்டு
இவனைப் பார்த்து ஜாடையாகச் சிரித்துவிட்டு, இவனுடைய அனுமதியில்லாமலேயே இரண்டு ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை அவனது மேஜையின் முதல் டிராயரைத் திறந்து உள்ளே போட்டார். இவனுக்கு முணுக்கென்று கோபம் வந்தது. ரூபாய்களை உடனே எடுத்து அவரது கையில் திணித்து, “முதலில் இங்கிருந்து வெளியே போங்க” என்று கத்தினான். சக ஊழியர்களின் கவனம் இவன் மேல் திரும்பியது. அந்த ஏஜெண்ட் எதுவும் பேசாது தலையைக் குனிந்தபடி வெளியே சென்றுவிட்டார்.

அடுத்த மாதத்தில் ஒருநாள் ஆர்.டி.ஓ இவனைக் கூப்பிட்டு அனுப்பினார். இவன் அவரது அறைக்குள் பயந்துகொண்டே சென்றான்.

அவர் புன்னகையுடன் “உன் தந்தை ஹிந்தி பண்டிட்டாமே… நிறைய மாணவர்களுக்கு ஹிந்தி கற்றுத் தருகிறாராமே? என் டாட்டருக்கு ஹிந்தி கற்றுக் கொடுப்பாரா?” என்றார்.

“கண்டிப்பா சார்”

இவன் உடனே தன் அப்பாவிடம் கைப்பேசியில் தொடர்புகொண்டு பேசினான்.

“நாளைக்கே உங்க டாட்டரை அனுப்பி வைக்கலாம் சார்.”

அடுத்த வாரமே அவர் மகள் ஹிந்தி வகுப்பில் சேர்ந்து கொண்டாள்.

இவன் வேலைக்கு சேர்ந்து ஒரு வருடம் சென்றது. தினமும் திருவான்மியூரிலிரு¢ந்து மீனம்பாக்கத்திற்கு பேருந்தில் அலுவலகம் சென்று வருவது சிரமமாக இருந்ததால், தன் சேமிப்பிலிருந்தும், வங்கியில் கடன் வாங்கியும் புதிதாக ஒரு ஸ்கூட்டர்
வாங்கினான்.

அடுத்த நாள் அலுவலகத்திற்கு விடுப்பு எடுத்துக்கொண்டு திருவான்மியூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு தன் புதிய ஸ்கூட்டா¢ல் சென்றான். ஏற்கனவே தன்னிடம் வைத்திருந்த தற்காலிக ஓட்டுனர் உரிமத்தை நிரந்தரமான உரிமத்திற்கு மாற்றுவதற்காக பணம் கட்டி சலான் வாங்கி தேவையான படிமங்களை பூர்த்திசெய்து ஆர்.டி.ஓ இன்ஸ்பெக்டா¢டம் சமர்ப்பித்தான். அவர் இவனை வெகு நேரம் காக்க வைத்து, கடைசியாக புது ஸ்கூட்டா¢ன் பின்புறம் ஏறிக்கொண்டு 8 போடச் செய்து இவனுக்கு சோதனை ஓட்டம் செய்தார். இவன் அவா¢ன் கட்டளைக்கு பணிந்து நன்றாக ஓட்டினான். பின் அவர் தன் இடத்துக்கு வந்து அமர்ந்து இவனுடைய படிமங்களை டிக் செய்து கையெழுத்திட்டார். பின்பு இவனைப் பார்த்து சிரித்தார்.

“ஐநூறு ரூபாய் எடு தம்பி”

“எதுக்கு சார்? அதுதான் பணம் கட்டி சலான் வாங்கியாச்சே…”

“புரிஞ்சிக்குங்க தம்பி, புரியலைன்னா நன்றாக ஓட்டக் கத்துகிட்டு அப்புறமா வாங்க..” இவனது படிமங்களை தன் மேஜையின் இழுப்பறைக்குள் திணித்துவிட்டு எழுந்து சென்று விட்டார்.

இவன் முகம் சுருங்கிப் போய் தன் வீட்டை அடைந்தான்.

“ஏண்டா நீயும் ஆர்.டி.ஓலதான் வேல செய்யறேன்னு இன்ஸ்பெக்டா¢டம் சொன்னா என்ன…கொறஞ்சா போயிடுவ?” அப்பா இரைந்தார்.

“நான் எதுக்குப்பா அதெல்லாம் சொல்லி அவருக்கு அழுத்தம் கொடுக்கணும்? நான் ஒரு சராசா¢ மனிதன். சோதனை ஓட்டத்தில் பாஸ் செய்ததாக டிக் செய்துவிட்டு, ஐநூறு ரூபாய் பணம் கொடுக்காத ஒரே காரணத்தால என்னை திருப்பியனுப்பிவிட்டார்.”

ஹிந்தி டியூஷனுக்கு வந்திருந்த மாணவிகள் இவனை வேடிக்கை பார்த்தனர்.

அடுத்த நாள்….

இவனை ஆர்.டி.ஓ கூப்பிட்டதாக பியூன் வந்து சொன்னான். இவன் உடனே எழுந்து சென்றான்.

“பணத்துக்காக உனக்கு ஓட்டுனர் உரிமம் தராம இன்ஸ்பெக்டர் நிறுத்தி வச்சுட்டாராமே?”

ஓ காட், இவர் மகள் நேற்று டியூஷனில் இருந்திருக்கிறாள்….

“ஆமா சார், நான் டெஸ்ட் நல்லாதான் பண்ணேன்.. .”

உடனே தன் கைப்பேசியில் திருவான்மியூர் ஆர்.டி.ஓவை தொடர்புகொண்டு நடந்தவைகளை விவா¢த்தார்.

தன் அலுவலக ஜீப்பில் இவனை அவா¢டம் அனுப்பிவைத்தார்.

நிலைமை இவனது கை மீறி போய்விட்டதை உணர்ந்தான்.

இவன் அங்கு சென்றபோது ஆர்.டி.ஓவின் முன்னால் இவனுக்கு உரிமம் மறுத்த அந்த இன்ஸ்பெக்டர் குற்ற உணர்வுடன் நின்று கொண்டிருந்தார்.

ஆர்.டி.ஓ ஓட்டுனர் உரிமத்தை இவனிடம் வழங்கி, “ஒரு விதத்துல நீங்க ஆர்.டி.ஓல வேல செய்யறேன்னு சொல்லாதது நல்லதுதான், அதுனாலதான இவரு யோக்யதை நமக்கு தெரிஞ்சுது” என்றார்.

இன்ஸ்பெக்டர் தலை குனிந்தார்.

“நேத்து நடந்த சம்பவத்த ஒரு கம்ப்ளெயிண்டா எழுதி குடுங்க… இவங்களுக்கெல்லாம் ஒரு பாடம் கத்துக்கொடுத்தாதான் சா¢ப்படும்.”

“வேண்டாம் சார்… நாம ஒரே குடும்பம். எங்க ஆர்.டி.ஓ சாருக்கு இந்த விஷயம் தெரிஞ்சு உங்களுக்கு •போன் பண்ணிட்டாரு. இத நான் பெரிசு பண்ண விரும்பல. என்ன மன்னிச்சிடுங்க. உரிமத்திற்கு ரொம்ப நன்றி சார்…” கிளம்பினான்.

அன்று இரவு எட்டுமணி. வீட்டின் வாசலில் எவரோ அழைப்பது போலிருக்க வெளியே சென்று பார்த்தான்.

அந்த இன்ஸ்பெக்டர் நின்றிருந்தார். உள்ளே அழைத்து அமர வைத்தான்.

“சார் என்ன மன்னிச்சிடுங்க… நீங்க கம்ப்ளெயிண்ட் கொடுத்திருந்தா என்ன சஸ்பெண்ட் பண்ணியிருப்பாங்க… சத்தியமா இனிமே நான் யாருகிட்டயும் பணம் வாங்க மாட்டேன். அரசாங்கம் எனக்கு குடுக்கற சம்பளத்துல நான் நேர்மையா உழைப்பேன்.” கண்கள் கலங்கியிருந்தன.

“நீங்க என்னைவிட வயசுல பெரியவர்… ஆசைதான் நம்முடைய எல்லா துன்பங்களுக்கும் காரணம்..”

எழுந்து சென்று ஒரு புத்தகத்தை எடுத்து வந்து அவா¢டம் கொடுத்து, “இதைப் படித்துப் பாருங்க” என்றான்.

‘விவேகானந்தரின் பொன்மொழிகள்.’

அவருக்கு ஏதாவது சாப்பிட எடுத்துவர உள்ளே சென்றான்.

புத்தகத்தை அவர் புரட்டிப்பார்த்தார்.

“உனது மனதை உயர்ந்த லட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும், இரவிலும் உன் முன் நிறுத்து. அதிலிருந்து நற்செயல்கள் விளையும்.” என்கிற வாசகங்கள் பச்சை நிறத்தில் அடிக்கோடப் பட்டிருந்தது.

– ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் – மார்ச் 2016 இதழில் பிரசுரமான பரிசு பெற்ற கதை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *