கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: January 30, 2014
பார்வையிட்டோர்: 13,562 
 

அலுவலகத்திலிருந்து வரும்போது பொழுதுபட்டிருந்தது. புவனா ஜன்னலடியில் நின்று பார்த்துக்கொண்டிருந்தாள். ஃபிளாட்டின் இரண்டாவது மாடியில் வீடு. அங்கிருந்து வீதியைப் பார்ப்பதற்கு வசதியாகவே ஜன்னல் அமைந்திருந்தது. வீடுகளை டிசைன் பண்ணுகிறவர்கள் பரந்த அறிவு படைத்தவர்கள் என்பதற்கு இதுவே நல்ல சான்று.

நான் படியேறி வாசலுக்கு வர, புவனா கதவைத் திறந்தாள். புவனா என் மனைவிதான். புவனேஸ்வரி என்பது இயற்பெயர். ஆனால் அவளுக்குப் பெயர் இட்ட பெற்றோர் முதற்கொண்டு எல்லோருமே புவனேஸ் என்றுதான் அழைப்பார்களாம். மற்றவர்கள் செய்யும் தவறையே நானும் செய்ய விரும்பாது (திருமணமானபோது) புவனா எனச் சுருக்கினேன். மன்னிக்கவேண்டும்… இது என் மனைவியைப் பற்றிய கதையல்ல என்பதை முதலில் உறுதி செய்கிறேன். எனக்கே போரடிக்கிற விஷயத்தை உங்களுக்கு சொல்லிக்கொண்டிருக்குமளவுக்கு நான் மோசமான ஆளல்ல.

‘கனகசுந்தரம் வந்தவர்..”

கனகசுந்தரம் எனக்கு அப்படியொன்றும் முக்கியமானவரல்ல. எனினும் வந்ததும் வராததுமாகச் சொல்வதால் ஏதோ முக்கியத்துவம் இருக்கக்கூடும்.

‘கனகசுந்தரம் பார்த்துக்கொண்டிருந்திட்டு இப்பதான் போறார்!” அவர் காத்துக்கொண்டிருந்ததற்கு அல்லது காக்க வைக்கப்பட்டதற்கு என் சுணக்கம்தான் காரணம் என புவனா குறைப்படுகிறாளோ எனத் தோன்றியது.

‘இருங்கோ…. வந்திடுவார் என்று சொன்னனான்…. நாளைக்கு வாறன் என்று சொல்லியிட்டுப் போட்டார்”

‘ஏனாம்?”

‘கை மாற்றாய்…. காசு பத்தாயிரம் கேட்டவர்!”

எனக்குத் ‘திக்” என ஒரு அடி அடித்தது. அதிர்ச்சியை வெளிக்காட்டாது எழுந்து அறையுட் சென்று உடையை மாற்றினேன். புவனா துவாயை எடுத்துத் தர பாத்றூமுக்குள் நுழைந்தேன்.

கிடைக்கும் சம்பளத்தில் அன்றாடப் பாடுகளைப் பார்ப்பதே பெரும்பாடு. மாதாந்தச் சம்பளத்தை எதிர்பார்த்து வாழ்க்கை நடத்தும் என் போன்ற அரச ஊழியனுக்கு வேறு கதி இல்லை. துண்டு விழும் தொகை இல்லாமலே சம்பளத்தை எடுத்துச் சரிக்கட்டக்கூடிய நிலை என்றாவது வருமா என்றெல்லாம் எண்ணுவதுண்டு. இந்நிலையில் இப்படி ஏதாவது பணத்தேவை ஏற்பட்டால் முழுசாட்டம் தொடங்கிவிடும். கஷ்ட நஷ்டப்பட்ட நேரங்களில் ஒருவருக்கொருவர் உதவி கேட்பதும் உதவி செய்வதும் சாதாரண விஷயம்தான். ஆனால் இல்லாதபோது என்ன செய்வது.

கனகசுந்தரம் நீண்டகாலமாகவே கொழும்பில் உத்தியோகம் பார்ப்பவர். குடும்பம் யாழ்ப்பாணத்திலிருந்தது. யுத்த நிலைமைகளாலும் போக்குவரத்துக் கஷ்டங்களாலும் இரண்டு வருடங்களுக்கு மேலாக ஊருக்கே போகாமலிருந்தார். காணும்போதெல்லாம் சொல்லி வருத்தப்படுவார். போகமுடியாமைக்கு மேலதிகாரிகள் மீது பழியைப் போடுவார். லீவு தரமாட்டார்களாம் எனக் குறை கூறுவார். போக்குவரத்துக்கே எவ்வளவு செலவு பிடிக்கும்… அதை அனுப்பிவிட்டால் வீட்டுச்செலவுகளுக்கு உதவும் எனச் சமாதானமும் சொல்லிக்கொள்வார். கொழும்புக்கே குடும்பத்தை கூட்டிவந்து விடலாமென்றால் முடியாமலிருக்கிறது என நடைமுறைக் கஷ்டங்களைக் குறிப்பிடுவார். பொருளாதார காரணங்களால் அவருக்கு லீவில் போய்வர முடியவில்லை. குடும்பத்தை கொழும்புக்குக் கொண்டுவந்து சேர்க்கவும் தயங்கிக்கொண்டிருந்தார். கடைசியாக யாழ்ப்பாணம் இன்னும் மோசமாக, குடும்பம் கொழும்புக்கு வந்து சேர்ந்துவிட்டது என்பதை அண்மையில் அறிந்தோம். அதையொட்டித்தான் அவருக்குப் பண நெருக்கடி ஏற்பட்டிருக்கக்கூடும்.

கனகசுந்தரம் ஒருபோதும் பணத்தேவைக்காக இப்படி வீடு தேடி வந்தவரல்ல. புவனாவின் வழியல் உறவுக்காரரானாலும் அது வெகுதூரத்தில்! அவ்வளவு நெருக்கமான கொண்டாட்டம் இல்லை. ஒருவித கௌரவப் பிரச்சினை கருதி அவர் கடன்படுவது போன்ற தேவைகளை எங்களிடத்தில் தவிர்த்திருக்கலாம். இப்போது வேறு ஒரு வழியுமின்றியே வந்திருப்பார். இந்நிலையில் அவருக்கு எப்படியாவது உதவி செய்யவேண்டுமெனத் தோன்றியது. சம்பள நாட்களிலெனில் கையிலிருப்பதை மாறிக் கொடுக்கலாம். தேவையெனின் றோலடிக்கலாம். இப்போது எங்கு போவது?

இரண்டொரு நண்பர்களைச் சென்று பார்த்துக் கேட்டு வரலாம் என்று தோன்றியது. யார் யாரைப் பிடிக்கலாம் எனக் கணக்குப் போட்டவாறு கிளம்பினேன்.

முதலில் தேடிப் போனது விக்னேடம். உத்தியோகத்துடன் சைட் பிஸினசும் செய்கிறவன். கையில் காசு பிழங்கக்கூடிய ஆள். ஆனால், அவன் வீட்டில் இல்லை. மனைவியுடன் ஏதோ பார்ட்டிக்குப் போயிருக்கிறானாம். வர லேட் ஆகுமென பிள்ளைகளிடமிருந்து பதில் கிடைத்தது.

பின்னர் பரமசிவத்திடம் சென்றேன்.

‘வாங்கோ… வாங்கோ என்ன இந்த நேரம்…?”

‘சும்மாதான்!…. பாத்திட்டு போகலாமெண்டு….!” என எதையாவது சொல்லிச் சிரித்தேன். அந்த ஹாஸ்யத்தில் அல்லது எனது சிரிப்புக்கு மதிப்பளிக்கு முகமாக அவர்களும் சிரித்தார்கள். அது ஹாஸ்யம் அல்லாமல் வேறு என்ன? நேரம் கெட்ட நேரத்தில் வருகிறார். (கழுத்தறுக்க!) பிறகு சும்மாவாம் சும்மா…

பரமசிவத்தின் மனைவி அவசர அவசரமாக குசினிக்குள் நுழைந்தார்.

‘வேண்டாம்…. டீ போடவேண்டாம்…!” எனக் குசினிக்குள் குரல் கொடுத்தேன். எனினும் அலைச்சல்பட்டு வந்ததில் ஒரு தேநீர் அருந்தினால் நன்றாயிருக்கும் போலிருந்தது உண்மை.

பரமசிவம் மிகுந்த பொறுமைசாலி. வந்ததுமே எப்படிக் கேட்பது என்று புரியாமல் சுற்றி வளைத்து தேவையில்லாத விஷயங்களையெல்லாம் பேசிக்கொண்டிருக்கிறேன். அவரும் சுவாரஸ்யமாக (அல்லது அப்படி பாவனை செய்து) கேட்டுக்கொண்டிருக்கிறார். மேலும் அவரது பொறுமையைச் சோதிப்பது அழகல்ல என எண்ணிக்கொண்டு வந்த காரணத்தைச் சொன்னேன்.

அதைக் கேட்ட அவர் கவலையடைந்தார். அவரிடம் பணம் இல்லை.

‘அப்ப நான் வாறன்!….” என எழுந்தேன்.

‘என்ன டீயும் குடிக்காமல் போறீங்கள்…?”

‘இல்ல… வேண்டாம்…. இனிப் போய்த்தான் சாப்பிட வேணும்!”

நான் வெளிக்கிட, ‘இஞ்சை போட்டிட்டன் குடிச்சிட்டுப் போங்கோ!” என அவரது மனைவியின் குரல் குசினியிலிருந்து கேட்டது. தேநீரை குடித்து விட்டுப் போகலாமே எனத் திருப்பவும் அமர்ந்தேன்.

மிஸிஸ் பரமசிவம் சொன்னது சரி…! தேநீருடன் கோப்பையைப் போட்ட சத்தம் கேட்டது. அவசரப்பட்டிருக்கக்கூடும். பரமசிவம் எழுந்து குசினிக்குள் ஓடினார். தேநீர் சூடு மனைவியின் கையையோ காலையோ பதம் பார்த்துவிட்டதாம். (நல்லவேளை எனது வாய் பதம் பார்க்கப்படாமல் தப்பித்துக் கொண்டது.) அனுதாங்களைத் தெரிவித்துக்கொண்டு வெளியேறினேன்.

வீட்டுக்கு வந்து சாப்பாட்டு மேஜையில் அமர்ந்தபோது எனது மனம் ஒருநிலையில் இல்லாதிருந்தது. இனி யார் யாரைப் பார்க்கலாம்..? அவர்களை எப்படி வளைத்துப் பிடிக்கலாம்..? எந்த நேரத்தில் சந்திக்க வசதியாயிருக்கும்….? நாளைக்கு ஒஃபீசுக்கு லீவ் போடலாமா..?

சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது விசித்திரா இன்னொரு அடி போட்டாள். விசித்திரா எனது இரண்டாவது மகள். (பயப்பட வேண்டாம். இந்தப் பெயரைப் பற்றிய ஆராய்ச்சிக் குறிப்புக்கள் இங்கு இடம்பெறாது.)

‘அப்பா!…. எனக்கு நாளைக்கு ஐந்நூறு ரூபா வேணும்…. டியூஷன் ஃபீஸ் கொடுக்க..!”

நான் மௌனமாயிருந்தேன். மௌனம் சம்மதத்துக்கு அறிகுறியா இல்லையா என அவளுக்குப் புரியவில்லை. (ஏன், எனக்கே புரியவில்லையே!)

‘என்னப்பா… நான் கேட்கிறன்…. நீங்கள் பேசாமலிருக்கிறீங்கள்?”

‘பேசாமல் சாப்பிடு..! அப்பாவைக் கரைச்சல் படுத்தாதை!” புவனா மகளை அதட்டினாள்.

‘சரி அம்மா..!” இது விசித்திரா அல்ல. இதுபோன்ற பக்குவமான பதிலெல்லாம் அவளிடத்தில் எதிர்பார்க்கக்கூடாது என்பது இந்த வீட்டில் எழுதப்படாத விதி. சரி அம்மா பணம் தரலாம் என்பதுபோல அர்த்தப்பட என்னால் விசித்திராவுக்கு சொல்லப்பட்ட பதில் அது.

காலை.

விடியாமலிருக்கலாம். ஆனாலும் விடிந்துவிடுகிறது. யாருக்கு என்ன பிரச்சினை இருந்தாலென்ன அவர்கள் என்னபாடு பட்டாலென்ன என்ற கருணை இல்லாமல் விடிந்துவிடுகிறது. இரவு உறக்கம் கெட்டால் அதிகாலையில் இன்னும் படுக்கையில் கிடக்கவேண்டும் போலிருக்கும். ஆனால் மனைவி குசினி அலுவல்களில் ஈடுபடத் தொடங்கிவிட்ட சத்தங்கள் ஏற்கனவே அலாரம் அடிக்கத் தொடங்கியிருக்கும். பாத்றூமில் பிள்ளைகள் தண்ணீரைச் செலவு செய்கிற சத்தங்கள் எழுப்பிவிடும்.

அலுவலகத்துக்குப் புறப்பட ஆயத்தமான போது புவனா கேட்டாள். ‘கனகர் வந்தால் என்ன சொல்லுறது?” அதே கேள்வியைத்தான் விடிந்ததிலிருந்து எனக்குள்ளும் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

‘கைவசம் காசு இல்ல… ஆரிட்டையாவது மாறி ரெண்டொரு நாளைக்குள்ள… தரலாமெண்டு சொல்லுங்கோ…!”

அலுவலகத்திலிருந்து சிலரிடம் ரெலிபோனில் விசாரித்தேன். சரிவரவில்லை. மாலையில் ஓவர்டைம் வேலையைத் தியாகம் செய்துவட்டு சுந்தரேசனையும் சண்முகநாதனையும் சென்று பார்த்தேன். யாரிடமும் கிடைக்கவில்லை.

வீட்டுக்கு சோர்வுடன் வந்தேன்.

‘கனகர் வந்தவரோ?”

‘வந்தவர்…. அவரைப் பார்க்க பாவமாயிருக்கு என்ன அவசரமோ…..!”

புவனா கவலைப்பட்டாள். எனக்கும் கவலையாகவே இருந்தது.

இரண்டு நாட்கள் அலைச்சல்பட்டும் பணம் கிடைக்கவில்லை. மூன்றாம் நாள் வேலைக்குப் புறப்பட்டபோது புவனா சொன்னாள்.

‘பிள்ளையின்ரை செயினை அடகு வைச்சிட்டுத் தேவையான காசை எடுத்துக் குடுத்தால் என்ன….?”

கேட்க நன்றாய்த்தானிருந்தது.. தலையிலிருந்து ஒரு பாரம் இறங்குவது போல. ஆனால் எப்படி..? அடகு வைத்துப் பணம் எடுத்தால் திருப்பும்போது வட்டியும் சேர்த்துக் கட்டவேண்டுமே?

‘அதுக்கு என்ன செய்யிறது…? கனகருக்கு நிலைமையைச் சொல்லுவம்…. அவருக்கு விளங்கும்.” புவனா சமாதானப்படுத்தினாள்.

‘சரி” என்றேன்.

புவனா அறைக்குள் போனாள். அங்குதான் பிள்ளைகள் இருவரும் இருந்தார்கள்.

இக்கட்டான நேரங்களில் இதுபோன்ற ‘பெறுமதி”யான ஆலோசனைகள் கூறி கணவன்மாரைக் காத்தருளும் மனைவிமாரை நினைத்து நான் புளகாங்கிதமடைந்துகொண்டு நின்றேன்.

அறைக்குள் சத்தம் கேட்டது. சத்தம் என்றால் விசித்திராவிடமிருந்துதான் என்பதை ஊகித்துக்கொள்க.

‘என்னம்மா இது..? கொஞ்ச நாள் கழுத்திலை போட்டிருக்கிறது. கொஞ்சநாள் இல்லாமல் போறது…. ஃபிரண்ட்ஸ் எல்லாரும் கேட்கினம்… இது என்ன சொந்தமா… இரவலா என்று..! நான் தரமாட்டன் போங்கோ..!”

நான் போக ஆயத்தமானேன். கதவைத் திறந்து எதற்கும் முன்னெச்சரிக்கையாக ஒரு காலை வெளியே வைத்தேன். எனினும் ஒரு கண்ணால் அறைக்குள்ளும் நோட்டமிட்டேன்.

மூத்தமகள் நிலா எனக்காகப் பரிந்துரைப்பது கேட்டது.

‘குடுங்கோ விசி…. அப்பா பாவம்தானே!”

அந்த வார்த்தை ஓரளவுக்கு நம்பிக்கையளித்தது.

‘என்ன…. எனக்குத் தெரியாதா? இது அப்பாவுக்கில்லை. ஆருக்கோ குடுக்கிறதுக்கு ஓடித்திரியிறார்!”

புவனா விசித்திராவுடன் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபடத் தொடங்கினாள். ‘ஆருக்கோ இல்லையம்மா…. கனகசுந்தரம் அங்கிளுக்கு… அவரும் பாவம்தானே?”

‘எங்களுக்கே வழியைக் காணவில்லை…. மற்றவையளுக்காக ஏன் கவலைப்படுகிறீங்கள்?”

உள்ளே போன மனைவி உருப்படியாகத் திரும்பி வரவேண்டும் என்ற கவலை என்னைத் தொட்டது. ஆனால் ஆச்சரியப்படும்படியாக விசித்திராவின் சத்தம் தணிந்துவந்தது. பிள்ளை மனம் இளகிவிட்டாள். புவனா அறையிலிருந்து வெற்றிப் புன்னகையுடன் வெளிப்பட்டாள்.

‘நகை நட்டென்று இருந்தால் இப்பிடியொரு அவசரத்துக்கு உதவுறதுக்குத்தானே…. அதுகளுக்கு விளங்காது, கொண்டு போங்கோ!” என கையில் நகையை வைத்தாள். நிலைமையைச் சமாளித்த மனைவியின் கைங்கரியத்தை எண்ணி நன்றி பெருகியது. அன்றைய நாளின் இனிய ஆரம்பத்தை எண்ணியவாறு நடை போட்டேன்.

கனகசுந்தரத்துடன் அலுவலகத்துக்கு ரெலிபோனில் தொடர்பு கொண்டு ஈவினிங் வந்தால் பணம் ரெடியாயிருக்கும் எனக் கூறினேன்.

மாலையில் ஒரு பிஸ்கட் பக்கட்டுடன் வீட்டுக்கு வந்தார். ‘பிள்ளையள் உள்ள இடம்… நெடுக வெறுங்கையோடை வரக்கூடாது…!” விசித்திராவைப் பார்த்து, ‘இந்தாம்மா!” என நீட்டினார்.

நான் பயந்தேன். இது யார் எவர் என்று பாராது பாயக்கூடிய சாமான். ஏற்கனவே தனது செயின் அவருக்காக அடகு வைக்கப்பட்ட கோபத்திலிருக்கிறது. அதை அவரிடம் காட்டிவிடுமோ என அஞ்சினேன்.

ஆனால் விசித்திரா அடக்க ஒடுக்கமாக வந்து பிஸ்கட்டை அவரிடம் பெற்றுக்கொண்டு ‘தாங்யூ அங்கிள்” என்றாள். வெளியே மழை பெய்யத் தொடங்கியது.

புவனா கனகசுந்தரத்திடம் பணத்தைக் கொடுத்தாள். கொடுக்கும்போது, பணம் வட்டிக்கு எடுக்கப்பட்டதென்ற வி~யத்தை சற்றுத் தயக்கத்துடனே தெரியப்படுத்தினாள்.

‘என்னால்…. உங்களுக்கு வீண் சிரமம்…!” எனக் கனகசுந்தரம் கவலைப்பட்டார். ‘தாங்ஸ்” சொல்லிப் புறப்பட்டார்.

பிறகு வெகுநாட்களாகக் கனகசுந்தரத்தைக் காணக்கிடைக்கவில்லை. அவர்கள் வீட்டுக்கு விசிட் பண்ணவேண்டுமென புவனா சொல்லிக்கொண்டிருந்தாள். புதிதாக குடிவந்திருக்கிறார்கள். போனால் சந்தோ~ப்படுவார்களாம். ஆனால் பொழுது விடிந்தால் இருளுவது தெரியாமல் ஏதாவது ஒரு அலுவல் இருந்துகொண்டிருக்கும். ஞாயிறுகளில் என்றால் புவனா இன்னும் சில வேலைகளைத் தலையில் தூக்கி வைத்துக்கொண்டிருப்பாள். அதனால் அவ்வெண்ணம் கைகூடாமலிருந்தது.

‘நீங்களென்றாலும் ஓஃபீசால வரயிக்கை அப்படியே…. போயிட்டு வரலாம்தானே….?” எனப் புவனா அபிப்பிராயம் தெரிவித்தாள். அதற்கிணங்க ஒருநாள் ஒஃபீசிலிருந்து நேராக கனகசுந்தரம் வீட்டைத் தேடிச் சென்றேன்.

ஃபிளாட்டின் நாலாவது தட்டில் வீடு. படியில் மூச்சு வாங்க ஏறி கோலிங் பெல் ஸ்விச்சை அழுத்தினேன். பின்னர் கதவிலுள்ள கண் துளையூடு (உள்ளேயிருந்து வெளியே நிற்பவரைப் பார்க்கக்கூடியதாகத்) தோன்றிக்கொண்டு நின்றேன். எனது முகத்திலும் புன்னகையைத் தோற்றுவித்து, வந்திருப்பது பேயோ பிசாசோ என்ற பயம் உள்ளே இருப்பவர்களுக்கு ஏற்படாமல் சாந்த சொரூபியாக நின்றேன். கதவு திறப்பது பற்றிய முடிவை எடுப்பதற்கு அவர்களுக்கு இது உதவும் என நம்பினேன். ஆனால் அந்தப் பரீட்சையும் பயனளிக்காததால்…. இனிப் போகலாம் என நினைக்க, கதவு திறக்கப்பட்டது…..

கதவுக்கும் வாசலுக்குமிடையில் கனகசுந்தரத்தி;ன் மனைவி பூங்கோதை!

இப்படியொரு மனைவியை வைத்துக்கொண்டு எப்படி இந்த மனுசன் வருடக்கணக்காக லீவில் போகாமலிருந்தார் என்றொரு பிரமிப்பு ஒரு கணம் என் மனதில் பட்டு மறையத்தான் செய்தது.

‘அவர் வீட்டில …. இல்லை…!”

கதவு முழுவதாகத் திறக்கப்படாமல் கைகளால் பிடிக்கப்பட்டிருந்ததால்… ‘வரச் சுணங்குமோ? எத்தினை மணிக்கு வருவார்” போன்ற கேள்விகளைக் கேட்டு மினக்கெட்டவாறு மனசுக்குள் ‘பூங்கதவே தாள் திறவாய்…” என்ற பாட்டைப் பாராயாணம் செய்தேன்.

அதுவும் பலனளிக்கவில்லை.

‘அப்ப…. நான் வந்தனான் என்று அவருக்குச் சொல்லுங்கோ..” என்றவாறு திரும்பினேன். கதவு திறக்கப்படாமலிருந்த காரணம் புரியாமலிருந்தது. யோசித்தேன்…. ஒருவேளை என்னை இன்னார் எனத் தெரியவில்லையோ..? ஒரு பொறி தட்டியது. வீட்டுக்கு இன்னும் கதிரை தளபாடங்கள் வாங்கிப் போடப்படாமலிருக்கலாம். திருமதியார் அதைக் காட்டிக்கொள்ள விரும்பில்லை.

அப்போது நண்பன் மோகனசந்திரனின் நினைப்பு வந்தது. அவனிடம் சோஃபா செற் ஒன்று விற்பனைக்குள்ளது. அவன் புதிய மொடலுக்கு மாறுவதால் பழையதை மலிவான விலைக்கு விற்கத் தயாராயிருந்தான். யாருக்காவது விற்றுத் தரும்படியும் சொல்லியிருந்தான். அது பற்றிக் கனகசுந்தரத்துக்குச் சிபாரிசு செய்யலாமெனத் தோன்றியது. அடுத்த நாள் திரும்பவும் அவர் வீட்டுக்குப் போனேன். அதன் பின்னரும் இருமுறை போனேன். ஒவ்வொரு முறையும் வாசலில் நின்றே திருமதியுடன் பேசிவிட்டு வரவேண்டியிருந்தது. ‘பூங்கதவே..” என்ற பாடலிலும் நம்பிக்கையிழந்துவிட்டிருந்தேன். ‘நான் வந்தனான் என்று சொல்லுங்கோ.. பிறகு வாறன்” எனச் சில வார்த்தைகளைச் சொல்லிவிட்டுத் திரும்பிவிடுவேன். வேறு என்னத்தைச் சொல்ல?

விற்பனைக்குள்ள அந்தச் சோஃபா பற்றிச் சொன்னாலென்ன? போகக் கிளம்பியவன் நின்று ‘நீங்கள் வீட்டுக்கு சோஃபா வாங்கியிட்டீங்களா?” எனக் கேட்டேன்.

‘ஏன்?”

‘ஒரு பிரன்டிட்டை விற்க இருக்கு…. நல்ல மலிவாய் எடுக்கலாம்.”

‘தேவையில்லை!” கதவு அடித்துப் பூட்டப்பட்டது. முகத்தைத் தடவிக்கொண்டு நடையைக் கட்டினேன்.

அடுத்தமுறை கனகசுந்தரம் வீட்டுக்குப் போகமுன்னர் மோகனசந்திரனைத் தேடிச்சென்று சந்தித்தேன். சோஃபா செட்டை ஒரு நல்ல விலைக்குத் தீர்மானித்தேன். பணத்தை உடனடியாகக் கொடுக்கத் தேவையில்லாத ஒரு ஒழுங்கையும் செய்துகொண்டேன். தவணைமுறையிலும் செலுத்தலாம். இந்தச் செய்தியுடன் மீண்டும் கனகசுந்தரம் வீட்டுக்குப் போனேன்.

நல்ல காலம், கனகசுந்தரம் அன்றைக்கு நின்றார். கதவைத் திறந்து அவர் வரவேற்க.. எங்கே அமரப்போகிறேனோ என்ற தயக்கத்துடன் உள்ளே நுழைந்தேன். அட, அங்கே ஏற்கனவே ஒரு சோபா செட் போடப்பட்டிருந்தது.

‘எப்ப வாங்கினனீங்;க…?” எனக் கேட்டவாறே அதில் அமர்ந்தேன். முன்னரே வாங்கப்பட்டது எனப் பதில் வந்தது.

வீட்டு வாடகை இவ்வளவு.. பிள்ளைகளுக்கு ஸ்கூல் அட்மிசனுக்கு இவ்வளவு கொடுத்தது, வீட்டுக்கு அட்வான்ஸ் இவ்வளவு கொடுத்தது போன்ற விடயங்களையே கனகசுந்தரம் சொல்லிச் சொல்லி மாய்ந்துகொண்டிருந்தார். விடை பெற்றபோது வழியனுப்ப வாசல்வரை வந்தார்.

‘நீங்கள் தேடித் தேடி வந்தனீங்கள் என்று மிஸிஸ் சொன்னவ…. குறை நினைக்க வேண்டாம். உங்கட காசை கெதிபண்ணித் தந்திடுவன்..” எனக் கூறிவிட்டு முகத்தைக் குனிந்து கொண்டு நின்றார்.

எனக்குக் கவலை ஏற்பட்டது. நான் வீட்டுக்கு வந்து வந்து போனது கடன் காசுக்காகத்தான் என நினைத்திருக்கிறார்கள். இது அவர்களுடைய தவறா அல்லது என்னுடைய தவறா என்றும் புரியவில்லை. இனி இங்கு வந்து அவர்களைக் குழப்பக்கூடாது என எண்ணிக்கொண்டேன். வசதிப்பட்டபோது அவர்கள் பணத்தைத் தந்த பின்னர் வரலாம்.

ஒரு மாதம் கழிந்திருக்கும். ஒரு நாள் எதிர்பாராத விதமாகக் கனகசுந்தரம் பணத்தைக் கொண்டுவந்து தந்தார். எங்களுக்கப் பணம் தருவதற்காக வேறு யாரிடமாவது கடன்பட்டிருப்பாரோ எனக் கவலையாயிருந்தது.

‘இது இப்ப என்ன அவசரமெண்டு கொண்டு வந்தனீங்கள்?”

‘வட்டிக் காசும் வீணாய் ஏறிக்கொண்டிருக்கு அதையும் யோசிக்கத்தானே வேணும்?” என்றார்.

‘அதுவும் சரிதான்”

இதன் பின்னர் நாலைந்து மாதங்கள் கடந்திருக்கும். மீண்டும் கனகசுந்தரத்துக்குப் பண நெருக்கடி. அவருக்குப் பண நெருக்கடியென்றால் எனக்குக் காய்ச்சல் பிடிக்குமளவுக்கு ஏற்கனவே பட்ட அலைச்சல் மனதில் பதிந்திருந்தது.

‘அவசரமாய் பத்தாயிரம் ரூபாய் தேவையாயிருக்கு…. ஆரிட்டையாவது மாறித்தர ஏலுமே?”

‘பாப்பம்” என்றேன். அவர் போய்விட்டார். எங்கே பார்ப்பது என்று புரியாமல் தலை சுற்றத் தொடங்கியது.

வாரோட்டத்தைத் தொடங்கினேன். அவரைப் பிடித்து இவரைப் பிடித்து என இரண்டு மூன்று நாட்களாக அலைந்தும் ஓரிடமும் பணம் கிடைக்கவில்லை. நகையை அடகு வைத்துப் பணம் எடுக்கும் எண்ணத்தை இரு காரணங்களுக்காக விரும்பாமலிருந்தேன். ஒன்று செயினைக் கேட்கப் போக, அதனால் என்ன குழப்பங்கள் நடக்குமோ என விசித்திரா பற்றிய பயம் மனதிலிருந்தது. இரண்டாவது, கனகசுந்தரம் பணத்தைத் திருப்பியபோது வட்டி கட்டுவதைப் பற்றி கவலைப்பட்டதை நினைத்துக் கொண்டேன். வட்டியின்றி யாரிடமாவது றோலடித்துக் கொடுத்தால் அவருக்கு உதவியாயிருக்கும்.

விக்னே~; சில நாட்களாகப் பிடிபடாமல் இருந்தான். அவனைத் தேடிப் போனேன்.

கேட்டபோது அவன் வழக்கத்துக்கு மாறாக ‘ஏன் உங்களுக்கு காசு? இப்ப என்ன அவசரத் தேவை?” எனக் கேள்வி மேல் கேள்வி கேட்டான்.

‘எனக்கொரு தேவை. அதையேன் உனக்கு? இருந்தால் தா!” என மழுப்பலாகப் பதில் சொல்லிக்கொண்டிருந்தேன்.

‘சொல்லுங்கோ நான் ஒருத்தருக்கும் சொல்லமாட்டன்!” விக்னே~; வற்புறுத்திக்கொண்டிருந்தான். சொல்லாவிட்டால் தரமாட்டான் போலிருந்தது. சொன்னால் தரக்கூடும் போலவும் அவன் பேச்சுத் தோன்றியது. சொன்னேன்.

அவன் சிரித்தான்.

‘கனகர் ஆட்கள் போன கிழமை எங்கட வீட்டுக்கு வந்தவை. அவர் என்னட்iயும் காசு கேட்டவர். இருந்தால் குடுக்கலாம். இல்லை என்று சொன்னன். அதுக்குப் பிறகுதான் உங்களிட்டை வந்திருப்பார்…” இனி இங்கு நின்று பயனில்லை என்று தெரிந்து விக்னே~pடமிருந்து புறப்பட ஆயத்தமாக, ‘ஒரு வி~யம்!” என்றான். நின்றேன். சிரித்துக் கொண்டே கேட்டான்.

‘என்ன எங்களிட்டைக் காசு மாறி… வட்டிக்குக் குடுத்து உழைக்கிறீங்களோ?”

எனக்கு சுருக்கெனத் தைத்தது. விக்னே~; மேற்கொண்டு சொன்னான். ‘கனகசுந்தரம் ஆட்கள் உங்களைப் பற்றி குறை சொல்லுகினம்.”

எனக்குள் கேள்வி ‘என்ன?”

‘அவசரத்துக்குக் காசு கைமாற்றாய்க் கேட்டால்…. இல்லை என்றிட்டு…. பிறகு வட்டிக்கு எடுத்தது என்று சொல்லி குடுக்கிறீங்களாம்….”

அதிர்ச்சியாயிருந்தது.

‘விக்னே~; இதை நீ நம்புறியா?”

‘நம்புறதும் நம்பாததும் ஒரு பக்கம் இருக்கட்டும். நீங்கள் ஏன் தேவையில்லாத வேலைக்குப் போறீங்கள்….? இருந்தால் குடுங்கோ. இல்லையென்றால் இல்லையென்று சொல்லியிட்டுப் போங்கோவன்!”

நான் உடைந்து போனேன்.

வீட்டுக்குப் வர, புவனா கேட்டாள்.

‘காசு கிடைச்சுதா? கனகர் வந்து இவ்வளவு நேரமும் பார்த்துக் கொண்டிருந்திட்டுப் போறார்.”

‘இல்லை”

அதிகம் பேச முடியவில்லை.

‘அதுக்கேன் கவலைப்படுறீங்கள்?…. வட்டிக்கெண்டாலும் எடுத்துத் தரச்சொன்னவர்தானே….? பிள்ளையின்ரை செயினை வைத்து எடுத்துக் குடுப்பம்!”

ஒருவித சீற்றம் உச்சிக்கு ஏறியது.

‘அந்த வேலையெல்லாம் வேண்டாம். எங்களிட்டை  இருந்தால் குடுக்கலாம்! இல்லையென்றால் இல்லைத்தான்!”

புவனா நடுங்கிப்போனாள். பேச்சற்றவளாய் நின்றாள். அவளைப் பார்க்கப் பரிதாபமாய் இருந்தது. ஏதோ ஒரு வகையில் உறவினர்கள் என்ற காரணத்தாலோ என்னவோ புவனா அவர்கள் மேல் கொண்டிருக்கும் வஞ்சகமற்ற அன்பை நினைத்துப் பார்த்தேன். சற்று நேரம் கண்களை மூடி நிதானித்தேன். விக்னே~; சொன்ன கதையை மனதிலிருந்து அழித்தேன்.

‘சரி புவனா நகையை வைச்சுக் காசெடுத்துக் குடுப்பம். ஆனால் காசு வட்டிக்கு எடுத்ததென்று அவையளுக்கு சொல்ல வேண்டாம். திருப்பயிக்கை…. நாங்கள் வட்டியை போட்டுக் கட்டுவம்.”

புவனா ஒரு கேள்விக்குறியாக என்னைப் பார்த்தாள்.

அவளுக்குப் புரியவில்லை. புரியாமலே இருக்கட்டும் என எண்ணிக்கொண்டேன்.

– மல்லிகை 1998 – காற்றோடு போதல் (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு 2002, எம்.டி குணசேன அன் கம்பனி, கொழும்பு

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *