கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: October 4, 2014
பார்வையிட்டோர்: 11,925 
 

எங்கூருக்குள்ளாற வந்து ஜமீன் வூடு எங்கன்னு கேட்டாக்க கை சூப்புர பச்சப் புள்ளக் கூடோ வாயிலே இருக்குற கைய எடுத்துபுட்டு சொல்லிபுடும் .

எங்கய்யா அம்புட்டு பிரபலம்.

நாங்க இங்க சொந்தமா மச்சு வூடு கட்டின மொதக் குடும்பம்

வூடு கட்டும் போதே பக்கத்துல இருக்குற அரசமரத்த வெட்டச் சொல்லி நம்ம மேஸ்திரி சொல்லி இருக்காரு.

ஆனா எங்கையா ‘இல்ல இது புள்ளையாரு மரம். இந்த வூட்டுக்கு வர வேளை அந்த சாமி கண்ண தொறந்து என் பொஞ்சாதிக்கு வவுத்துல ஒரு புழு பூச்சி உண்டாக வழி வருதானு பாக்கோணும் . அந்த மரத்த வெட்ட வேணாம்.’

அந்த வூட்டுக்கு வந்து 6 மாசத்துலே நான் உண்டாகி புழு பூச்சி மாதிரி இல்லாம நல்ல கிழங்கு கணக்காத் தான் ஆம்புள புள்ளைய பெத்துப் போட்டேன்.

அதுலேந்துதான் எங்களுக்கு அந்த மரமே சாமி ஆச்சு.

நாளு கிழமன்னா வூட்டு சாமிக்கு முன்னாடி அரச மரத்துக்குத் தேன் முதல் படையல்.

எங்க வூட்டு அடுப்படிக் கதவ தொறந்தா அரச மரத்துக் காத்து பிச்சிக்கிட்டு போகும். நாங்க அல்லாரும் பொழுது சாயுற நேரம் அந்த பக்கம் தான் உக்காந்து பேசிக்கிட்டு இருப்போம். பறவைங்க பறந்து வந்து குச்சுக்குள்ள போகறத பாத்தாதேன் என் புள்ள சோறு தின்னும்.

ஒரு நாளு காலீல கொல்லப்பக்க கதவத் தொறந்து நிக்கிறேன்.. அரச மரத்து அடில ஒரு பெரிய கல்லு. அந்த கல்லு பக்கத்துல ஒரு துணி மூட்டை.

‘என்னாங்கோ இந்தார வாங்க .வந்து இத பாருங்க.’ சத்தம் போட்டு கூப்டுகிட்டே வெளியே போய் நிக்கிறேன்.

எங்கையா வெருசா ஓடி வந்தாரு. ‘என்ன ராசாத்தி?? என் இப்டி கூச்சல் போடுதே?? பதபதப்பா இருக்கு’

‘இங்க பாருங்க இந்த அதிசயத்த !! நேத்து இல்லாத ஒண்ணு இன்னிக்கி முளைச்சு நிக்குது.’

கொஞ்சம் பயந்துகிட்டேத்தேன் போய் பாத்தோம்.

ஒரு மொட்ட கல்லு. முன் பக்கம் கீழாப்புல கொஞ்சம் முழைச்சு இருந்துச்சு. ஒரு பக்கம் வளைவா ஒரு கோடு .

எனக்கு புரிஞ்சி போச்சி .

‘என்னங்க நல்லாப் பாருங்க…அது கல்லு இல்ல .நீங்க கும்பிடறீங்களே அந்த புள்ளையாரு சாமி. நமக்கு குளந்த குடுத்தவரு இப்போ இருக்க இடம் வேணும்னு நம்மள கேக்குறாரு.உங்களுக்கு புரீலையா ?? இல்லனா எப்படி இங்கே வந்துச்சு?? நம்ம கண்ணுல படணும்ன்ட்டுத் தான் . ” எனக்கு ரொம்ப சந்தோசம். சாமியே எங்க வூடு தேடி வந்துச்சே .

அப்போத் தான் பக்கதுல இருந்த மூட்டைய பாத்தேன் . அது அசைஞ்சிச்சு .

எங்கய்யா துணியை விலக்கிப் பாத்தாரு.

உள்ளார ஒரு பண்டாரம் . மொட்டை தல . நெத்தில பட்டையாக் கோடு போட்டு சந்தனம் வெச்சு ,ருட்ராஷம் மாலை எல்லாம் போட்டுக்கிட்டு .

‘யாருங்க நீங்க??’ எங்கய்யா பயந்துப் போய் கேட்டாரு.

‘ நான் கொல்லிமலை கிட்ட இருந்தேன். ராத்திரி கனவுல சாமி வந்து என் பக்தன் ஒருத்தன் இருக்கான். அவனிட்ட என்ன ஒப்படைக்க வேண்டியது உன் பொறுப்புன்னு சொல்லி சுயம்புவாக் கல்லா மாறிக் காட்சி குடுத்தாரு. ரெண்டு நாளா கல்லா இருக்கிற சாமியை தல மேல தூக்கிட்டு நடந்து வந்தேன் . அவரே வழி சொல்லி இங்க கொண்டு விட்டாரு. இந்த அரச மரம் அடிலத் தான் அவர் தங்கணும்னு அவரோட கட்டளை.’

எனக்குக் கெறங்கிப் போச்சு. அப்பிடியே அந்த சாமிக் கால்ல விழுந்து கன்னத்துல போட்டுக்கிட்டேன்.

எங்கய்யா ரோசைனையா பாத்துக்கிட்டே நின்னாரு. அவரு வேட்டிய புடிச்சி இளுத்தேன் . ‘விளுந்து கும்பிடுங்க நம்மள தேடி அந்த சாமியே வந்திருக்கு’.

‘பண்டாரசாமி எங்க ரெண்டு பேத்தையும் சிரிச்சுகிட்டே ஆசீர்வாதம் பண்ணினாரு.

‘ அம்மா எனக்கு இங்க இந்த பிள்ளையாரை வெச்சு பூஜை பண்ண வசதி வேணும். இங்க பக்கத்துல வீடு எதாவது கிடைக்குமா. இங்கேயே பக்கத்துல ஒரு குடிசை போட்டுக் கிட்டு நான் இருப்பேன். அது வரைக்கும் ‘

எங்கய்யா குறுக்கேப் பேசி, ‘ இருங்க சாமி இதெல்லாம் நாம தானா முடிவுப் பண்ண முடியாது. ஊர் சனங்கக் கிட்ட கலந்துப் பேசித் தான் முடிவு எடுக்கணும். இந்த இடம் என்னுது. மரத்துக்குக் கீழ நீங்க புள்ளையாரை வைங்க. கொஞ்சம் ரோசனைப் பண்ணி சொல்றேன்’

பண்டாரசாமி மொகம் வாடிப் போச்சு.

‘ உங்களுக்கு என் மேல நம்பிக்கை இல்லைன்னு நெனைக்கிறேன். ஹம் !!!’
கொஞ்ச நேரம் கண்மூடி யோசிச்சாரு.

‘ சரி. உங்களுக்குக் குடுத்து வெக்கலைன்னு நினைச்சுக்கிறேன் . பக்கத்து ஊர்ல ஒரு பக்தர் இருக்கார்னு என் காதுல சாமி சொல்லறாரு அங்கே வேணாப் போய்ப் பார்கிறேன்.’

எளுந்து சாமிக் கல்லையும் தூக்கிட்டு கிளம்பிட்டாரு.

எனக்கு பக்குன்னு ஆய் போச்சு. இருந்திருந்து ஒத்த புள்ள இருக்குது. இவரு பாட்டுக்கு பொசுக்னு கிளம்பி போயிட்டாறுன்னா சாமிக் குத்தம் வந்திரும்.

‘ சாமி கொஞ்சம் நில்லுங்க. ‘ சொல்லி புட்டு எங்கையாவை இளுத்துக் கிட்டு தள்ளிப் போனேன்.

‘ஏங்க உங்களுக்கு எதாச்சும் கிரஹம் புடிச்சு கிடக்கா?? நம்மளத் தேடி சாமி வந்திருக்கு. நமக்கு கொளந்த குடுத்த சாமி. இப்படித் தொரத்தறீங்க .ஊரு கிடக்குது நாம சொன்னா ஆறு இங்க மறுப்பு சொல்வாக?? நம்ம இடம் . அவருக்கு சரி சொல்லுங்க.”

பண்டாரசாமிக் கிட்ட போய் நா நிக்கிறேன்!! அவரு என்னைய பாத்து , ‘ அம்மா உன் புள்ள நல்ல இருக்கானான்னு சாமி கேக்குறாரு’ அப்டீன்னு சொன்னாரு.

அவ்ளோதான் நாங்க ரெண்டுபேரும் கீழ விளுந்து கும்பிட்டோம். எங்கையா அன்னிக்கே ஆளுங்கள கூப்டு ஒரு ஓலக் குடிசை போட ஏற்பாடுப் பண்ணிக் குடுத்தாரு.

எங்க வூட்ல அன்னிக்கி பெரிய விருந்து படச்சு ஊர் ஆளுங்கள எல்லாம் கூப்பிட்டு சாமியை காட்டினோம்..

எதோ ஒரு மூலைல இருந்து சாமி எங்க வூட்டை தேடி வந்தத பாத்து ஊரே மூக்கு மேல கையை வெச்சுது .

அன்னிக்கி தொடங்கி தினமும் சாமிக்கு எங்க வூட்லத் தான் சாப்பாடு. புள்ளையாரு தானா இங்க வந்தத கேட்ட பக்கத்து ஊரு சனங்க எல்லாம் எங்க ஊருக்கு வர தொடங்கி ஒரே தடபுடல் தான்.

புள்ளையாருக்கு ஒரு ஓலை வேஞ்சி பூஜை பண்ண தொடங்கியாச்சு. தெனமும் படையலுக்கு நான் தான் செஞ்சி குடுப்பேன். மாசத்துல விலகற மூணு நாளைக்கு ஒரு பாட்டி வந்து செஞ்சி வெச்சிட்டுப் போவாங்க.

ஒரு 6 மாசம் இப்படியே போச்சு. பண்டாரசாமி சொல்லாம எங்க வூட்ல ஒரு கல்லுக் கூட நவுத்த விட மாட்டேன்.எங்கையாவுக்கு இதுல கொஞ்சம் வருத்தம் தான். ஆனா சாமி குத்தம் வந்துடும்னு பயந்து அவரும் சும்மா இருந்தாரு.

ஒரு நாளு பண்டார சாமி எங்க வூட்டுக்கு வந்து, ‘ அம்மா இந்த புள்ளையாரு தலைக்கு மேல ஒரு கூரை கேக்கறாரு. ஊரு ஆளுங்கக் கிட்ட சொல்லிக் ஒரு சின்ன கோவில் கட்ட ஏற்பாடு பண்ணனும். இல்லேனா ஊருக்கே கெடுதி.’

எங்கையா ரொம்ப ரோசனைய சொன்னாரு என் கிட்ட,’ பாரு ராசாத்தி நாம வேணா இத நம்பலாம். அதுக்காக ஊர் ஆளுங்கள எல்லாம் போய் என்னால காசுக் கேக்க முடியாது .’

அடுத்த நாளு எங்கூரு பசங்க போன ஸ்கூல் வண்டி கேணில விளுந்து பசங்க எல்லாத்துக்கும் நல்ல காயம். நல்ல வேலை உசிருக்கு ஆபத்து இல்லாம போச்சு..

நானே ஊர் ஆளுங்கக் கிட்ட சாமி சொன்ன விஷயத்த சொன்னேன் . அவ்ளோதான் அத்தினிப் பேறும் நான் தரேன் நீ தரேன்னு போட்டி போட்டுக் கிட்டு குடுக்க வந்தாங்க.

எங்கையா மட்டும் எதுவும் பேசல.

ஒரு 2 மாசத்ல ஆளுங்க வெச்சு கோவில் வேலை தொடங்கிட்டோம். பண்டாரசாமி குறி பலிச்சுதுன்னு கேள்விப்பட்டு நேரிய பேரு அவரப் பாக்க வந்தாங்க.

கொஞ்சம் கொஞ்சமா அவருக்கு பேரும் சேந்துப் போச்சு. வரவங்க எல்லாரும் காசும் பொருளும் கொட்டிக் குடுத்தாங்க. அவரு அவர் இருந்த குடிசைய மச்சு வீடா மாத்த ஆளு தேடினாரு.

எங்கையாவுக்கு கொஞ்சம் வருத்தம்.

‘ நம்ம இடம்.நம்மக் கிட்ட ஒரு வார்த்தைக் கேக்க வேணாம்?? நா மாட்டேனு சொல்ல போறது கெடையாது. ஆனாலும் ஒரு மருவாதி இல்லை ‘

அவரு சொல்றது நியாந்தேன் . இனிமே இது பத்தி பேச முடியாது. அவரு இப்போ ஊருக்கு சொந்தமா ஆயிட்டாரு. நாம எதுனாசொல்லப் போக பொல்லாப்பா போகும். ‘நமக்கு சாமி முக்கியம் அதுனால விடுங்க’
இப்படி சொல்லி சமாதானப் படுத்தினேன்.

இப்போ எல்லாம் எங்க வூட்டு படையல் இல்ல. பண்டாரசாமியே ஒரு சமையல்காரம்மாவை ஏற்பாடு செஞ்சுக்கிட்டாறு . கல்லு புள்ளையாரு நகையும் நட்டும் போட்டுக் கிட்டு தோரணையா இருந்தாரு.

நானும் எங்கையாவும் கும்பலோட போய் கும்ப்டுட்டு வருவோம்.

ஒரு நாளு என் சித்தி மவன் பட்டணத்துலே இருந்து வந்தான். அவன் போலீசுக் காரன். ரொம்ப நாளுக் கழிச்சு எங்க ஊருக்கு வந்தவன் முதல்ல என்ன கேட்டது, ‘ என் ராசாத்தி உங்க வூட்டுப் பக்கத்துல ஒரு சக்தியான சாமி இருக்காராமே. எனக்குப் பாக்கணும். எனக்கு வேலைல ப்ரமோஷன் தட்டி போய்க் கிட்டே இருக்குது. அது கிடச்சசாத் தான் நானும் நாலு காசு பாக்க முடியும். என்னைய கூட்டிகிட்டு போறீயா??’

நானும் சந்தோசமா போனேன். வாசல்ல ஒரு கெளவி பூ வித்துகிட்டு இருந்துச்சு. ‘பண்டாரசாமி இருக்காறா ?? எனக்கு பாக்கோணும் ‘ சொன்ன என்ன ஏற இறங்க பாத்த கெளவி ,’ இங்கேயே நில்லுங்க நான் உள்ளாரப் போய் கேட்டுகிட்டு அனுப்புறேன்’. சொல்லிபுட்டு போச்சு.

‘ஏன் அக்கா இது உங்க இடம் தானே. எப்படியும் இன்னிக்கி தேதிக்கு ஒரு 30 லட்சம் போகுமே.. இத எப்படி மாமா கோவிலுக்கு குடுத்தாரு.? ‘ அவன் கேக்கையில எனக்கே கொஞ்சம் வெக்கமா தான் இருந்துச்சு. ‘ சாமி எங்களத் தேடி வந்துச்சு சம்முகம் . எப்புடி வேணாம்னு சொல்ல முடியும்?? என்னிக்கி இருந்தாலும் இது எங்க இடம் தான்.கோவிலும் எங்குளுது தான்.’

கெளவி வந்து , ‘ ராசாத்தி. சாமி பூஜைல இருக்காரு. ஒரு அரை மணி கழிச்சு வருவியாம் சொல்ல சொன்னாரு’.

ரொம்ப அவமானமாப் போச்சு எனக்கு. என்ன நெனப்பான் சம்முகம் என்னையப் பத்தி. எதுவும் காட்டிக்க முடியல.சரின்னு சொல்லிட்டு வீட்டுக்கு வந்துட்டோம்.

சம்முகம் என்னைய பண்டாரசாமி பத்தி துருவித் துருவிக் கேட்டுக் கிட்டே இருந்தான்.

ஒரு மணி நேரம் கழிச்சு பண்டரசாமியைப் பாக்க உள்ளாரப் போனோம்.
என்னைய வெளிய நிக்க சொன்னாரு சாமி.

ரெண்டு பெரும் ஒரு அரமணி நேரம் பேசிக்கிட்டு இருந்தாங்க. வெளிய வரும் பொது சம்முகம் சிரிச்சுக் கிட்டே வந்தான்.

‘ சாமி நல்லக் குறி சொல்லி இருக்கு. இனிமே எனக்கு கஷ்டம் கிடையாது’. நாளைக்கே ஊருக்கு கிளம்பறேன்.

என்ன விஷயம் பேசினாங்கன்னு அவனும் சொல்லல சாமியும் சொல்லல.

ஒரு வாரம் போச்சு.

பொளுது விடியும் போதே பின் பக்கம் ஒரே சத்தம். பாத்தா ஒரே போலீசு கும்பல். எங்கையா நடுல்ல நின்னுகிட்டு இருந்தாரு. ரெண்டு பேரு சாமிக் கைல வேலங்குப் போட்டு இளுத்துக்கிட்டு போனாங்க.

‘என்னங்க என்ன ஆச்சு??’ பதச்சுப் போய்க் கேட்டேன்.

‘ கொல்லிமலை கள்ளன்டி அந்த சாமி. அந்த கல்லு பக்கத்து ஊரு மைல் கல்லு. அதுமேல இருந்த எழுத்த எல்லாம் இவேன் செதுக்கி எடுத்ததுலத் தான் புள்ளையாரு வந்துட்டாரு.இங்க வந்து அவன் பாட்டுக்கு கல்ல வெச்சு நம்ம வூட்டு கதவ உடைச்சு திருட வந்திருக்கான் . வந்த இடத்துல துணியால மூடிக்கிட்டு கெடந்தவன் தூங்கி போய்ட்டான்..நீ காலைல அவன பாத்தி சாமி சாமின்னு கொண்டாட அவன் அத புடிச்சுக்கிட்டு இங்க டேராப் போட்டுட்டான். நம்ம இடத்துல அவன் வீடு கட்ட ஆரம்பிச்ச போது தான் எனக்கு கொஞ்சம் உஷார் ஆச்சு . அதுக்குத் தான் சம்முகத்த வரச் சொல்லி போன் போட்டேன். சம்முகம் உள்ளாரப் போய் உன் வண்டவாளம் எல்லாம் எனக்கு தெரியும் மருவாதியா ஒத்துக்கோ. நான் உன்னைய புடிச்சு குடுக்க மாட்டேன். எனக்கு நீ சுருட்டர்துல பங்கு மட்டும் குடுன்னு பேசி வச்சுட்டு போய்ட்டான். இந்த முட்டாப்பய அதா நம்பி இங்கேயே உக்காந்து கிடந்தான். அதுக்குள்ள சம்முகம் ஊருக்கு போய் ஆப்பீசருங்கக் கிட்ட சொல்லி ஆள் படையோட வந்து புடிக்க வந்துட்டான்.’

பெருமையா பேசிக்கிட்டே இருந்தாரு எங்கையா .

‘ஏங்க என் கிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம்ல ??’ வருத்தமா போச்சு எனக்கு.

‘ எதுக்குத் தாயி!! நீ சாமிக் குத்தம்னு சொல்லி இருக்கிற வீட்டையும் அவனுக்குக் குடுக்க சொல்லுவ .’

‘ அப்போ இந்த சாமிக்கல்ல என்ன செய்யறது. ‘ விசனப்பட்டு கேட்ட என்னைப் பாத்து சிரிச்சாரு.

‘எந்த மைல்ல இருந்தாரோ அங்கேயே கொண்டு விட வேண்டியது தான்.

– டிசம்பர் 2013

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *