கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: September 11, 2020
பார்வையிட்டோர்: 12,822 
 

அடர்த்தியான பனிக்காற்று நாசித் துவாரங்களில் நுழைந்து நெஞ்சுக் கூட்டை நிரப்பிக் குளிர வைத்தது. தலையோடு சேர்த்துக் காதுகள் இரண்டையும் மப்ளரால் மூடிக் கழுத்தில் கட்டியிருந்தாலும் உடல் உள்ளுக்குள் நடுங்கிக் கொண்டிருந்தது.

இந்த மப்ளர், பல வண்ண நூல்களால் அன்புடனும் பாசத்துடனும் பின்னப்பட்டது. வண்ணக் கலவைகள் ஒழுங்கில்லாமல் பரவியிருந்தாலும் அதன் மீது எனக்குத் தனிப்பட்ட காதலே உண்டு. முக்கால் பாகத் தலையை மூடியிருக்கும் மப்ளர் ஒரு அஃறிணைப் பொருளாகக் கண்களுக்குப் புலப்பட்டாலும், அதன் உள்ளீடுகளில் உயிரோட்டமான உணர்வுகளே ஊடுருவி இருந்தன. மனைவியின் மென்மையான கை விரல்கள் தலை முடியைப் பாசத்துடன் கோதி விடுவது போலவே தோன்றும். அவள் அருகிலில்லாத நேரத்தில் கூட அரூபமான உருவத்தோடு ஆழ்மனப் பிணைப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் அற்புதமான இணைப்புப் பாலம்.

அருகில் ஆளரவம் கேட்டுப் திரும்பிப் பார்க்காமலேயே அவள் தான் வருகிறாள் என்பதை நுண்ணுணர்வு மூலம் உணர்ந்து கொண்டேன். அவளுக்கே உரிய பெண் மணத்துடன் என்னை உரசிக் கொண்டு நடந்து வருகிறாள் என்பதை காற்றின் வீச்சும், இளஞ்சூடான உடல் வெப்பமும் உணர்த்தியது.

‘நீயும் வந்துட்டியா…? நான் தான் உன்னை வர வேண்டாம்னு சொன்னேன்ல?’ என்று நேர் பார்வையுடன் பாதையில் கவனம் வைத்து நடந்து கொண்டே கேட்டேன். அதன் பிறகு இன்னொரு கேள்வியைக் கேட்க வேண்டும் போல் இருந்தது. தோன்றிய வேகத்தில் சட்டென்று மறந்து போனது. அது எதைப் பற்றியதாக இருக்கும் என்று மிகத் தீவிரமாக யோசித்துப் பார்த்தும் நினைவுக்கு வரவில்லை. ஆனால், எனக்கும் அவளுக்குமான இடைவெளி அதிகரித்திருப்பது போன்ற தோற்றத்தை உணர்ந்து கொண்டே இருந்தேன். நான் அதைப் பற்றி அதிகம் சிந்திப்பதற்கு முன் அவள் பேச ஆரம்பித்தாள்.

‘உங்களை தனியா அனுப்பிட்டு என்னால தூங்க முடியல!’ அவள் குரலில் உண்மையான கரிசனம் இழைந்தோடியது. அந்தக் கரிசனம், நான் இதற்கு முன் எதைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தேன் என்பதை மறக்கடித்து விட்டது.

இரவு படுக்கும் போது என் மேல் கையை போட்டுக் கொண்டு தூங்குவதில் அவளுக்கு ஏதோ ஒரு வகையான பாதுகாப்பு உணர்வு உண்டாகிறது. நிம்மதியான சலனமில்லாத உறக்கம் தழுவுகிறது என்று பலமுறை கூறியிருக்கிறாள்.

‘சளிப்பிடிச்சு நெஞ்செல்லாம் வலிக்குதுன்னு சொன்ன… மூச்சு விடும் போது கர்கர்னு சத்தம் வருது. டாக்டர் உன்னை பனியில போக வேண்டாம்னு சொன்னாருல்ல…!’

அவள் அதற்கு பதிலேதும் சொல்லாமல் அமைதியாக நடந்தாள். ஆனால் அந்த அமைதியே கேள்விக்கான விடையை அற்புதமாக உணர வைத்தது. உங்களை விட என்னோட ஒடம்பு ஒண்ணும் ஒசத்தியில்ல!

சில நிமிடங்கள் ஒன்றும் பேசாமல் நடந்தோம். காலைச் சூரியன் இப்போது தான் பனியை விலக்கிக் கொண்டு மெதுவாக செந்நிற முகம் காட்டினான். சுற்றிலும் மரங்கள் வரிசையாக நடப்பட்டு ஓங்கி உயர்ந்து வளர்ந்திருந்ததால், அதனடியில் பனிகாற்று சூரிய ஒளியிடம் சிக்காமல் ஒளிந்து கொண்டிருந்தது. மெல்லிய வெண்படலத்தினுள், அங்கொன்றும் இங்கொன்றுமாக சிலர் நடைபயின்று கொண்டிருந்தார்கள்.

வாக்மேனில் பாடலை ரசித்துத் தலையாட்டிக் கொண்டே வேகமாக ஒருவன் எங்களைக் கடந்து சென்றான். காதுத் துளைகளில் பனிக்குப் பதில் இசை புகுந்து கொண்டிருந்தது. அவன் உணர்வது வெப்பத்தையா குளிரையா என்பது இசையைப் பொறுத்தது. அவன் எங்களை வேற்றுக் கிரகத்து மனிதர்களைப் போல் திரும்பிப் திரும்பிப் பார்த்துக் கொண்டே நடையின் வேகத்தை அதிகரித்தான்.

’குளிருது’ என்று கூறிக் கொண்டே மிக நெருக்கமாக வந்து என் கை விரல்களுடன் தன் கை விரல்களை கோர்த்துக் கொண்டாள்.

‘உன்னோட கை ஜில்லுன்னு இருக்கு. பனியில வராதேன்னா கேட்டாத்தானே!’

‘ஆனா… உங்க கை சூடா இருக்கு!’

ஜில்லென்ற கையால் எழுந்த எரிச்சல் அவள் பதிலால் காணாமல் போனது. இதமான சூடு என் கை விரல்கள் மூலம் அவளுக்குக் கிடைக்கிறதே!

எங்களுக்கு முன்னே அம்மாவும் மகளும் அடிக்கடி எங்களைத் திரும்பிப் பார்த்துக் கொண்டே நடந்து சென்று கொண்டிருந்தார்கள். இவர்களும் எங்களை ஏன் அடிக்கடி திரும்பிப் பார்த்துச் செல்கிறார்கள்? எங்கேயோ பார்த்த முகமாக இருக்கிறதே என்று நினைத்திருப்பார்களோ?!

இருவரும் சுடிதார் அணிந்திருந்ததால் வேறுபடுத்திப் பார்க்கச் சில நொடிகளானது. தளர்ந்த உடம்புடன் சற்று குண்டாக இருந்தவள் தான் அம்மா என்று வேறுபடுத்தியது. இருவருக்குள்ளும் ஒரு விதமான அன்யோன்யம் மிதந்து கொண்டிருந்தது. நெருக்கமான தோழிகளைப் போல் மிக இயல்பாகப் பேசிச் சிரித்துக் கொண்டு நடந்தார்கள். அந்த அம்மாவுக்கு ஆண் பிள்ளைகள் பிறந்திருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் தன் மகளின் அண்மை அந்தத் தாய்க்குள் பாதுகாப்புணர்வையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியதை அவள் உடல்மொழியின் மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது. அம்மா நாற்பது வயதைத் தாண்டியிருந்தாள். மகள் காலேஜ் படிக்கிறாள் என்றே கணிக்கத் தோன்றியது. பதினெட்டு வயது இருக்கலாம்.

மனைவி ஏதாவது சொல்வாள் என்று எதிர்பார்த்தேன். இவர்களைப் போன்ற ஜோடிகளைப் பார்க்கும் போது அவள் எப்போதும் ஒரு கருத்தைப் பெருமூச்சுடன் கூறுவாள். இன்று அது வெளிப்படவில்லை. ஒருவேளை அடிக்கடி அந்தக் கருத்தைக் கூறிச் சலிப்படைந்து விட்டாளா அல்லது இத்தனை வயதுக்குப் பிறகு அதைப் பற்றி நினைத்து என்ன ஆகப் போகிறது என்று நினைத்து விட்டாளா… தெரியவில்லை!

எப்போதும் என் பார்வையையும் நடவடிக்கையையும் கவனித்து என் மனதில் ஓடுவதைப் புரிந்து கொண்டு கேலி தொனிக்கும் குரலில் தன் கருத்தைக் கூறுபவள், இன்று ஏனோ எதுவும் பேசாமல் அமைதியாக நடந்தாள்.

’ஹீம்… நமக்கொரு மக பொறந்திருந்தா இவளை மாதிரி தானே இருந்திருப்பா…?’ என்று என் குரலில் அவளுடைய கருத்தை வெளிப்படுத்தினேன்.

‘தப்பா சொல்றீங்க. நமக்குக் கல்யாணமான மறு வருசமே பொண்ணு பொறந்திருந்தா, இந்நேரம் அவளுக்கு இந்த வயசுல பொண்ணு இருந்திருக்கும்!’ என்றாள் வேகமாக. அவள் கூறியதில் இருந்த உண்மையை ஒப்புக் கொண்டதற்கு அடையாளமாக தலையசைத்தேன்.

’பொம்பளப் புள்ளைங்க மேல ஏன் அவ்வளவு ஆசையா இருக்க?’ கேள்வியை கேட்டுக் கொண்டே அவள் கருத்தைக் கேட்கக் காதுகளைத் தீட்டிக் கொண்டேன். ஆனால் அவள் எந்த வித உணர்ச்சியையும் வெளிப்படுத்தவில்லை. அவளுடைய வழக்கமான பதிலை எதிர்பார்த்து, மீண்டும் ‘ஆம்பளைப் புள்ளைங்கள மட்டும் ஏன் உனக்கு பிடிக்க மாட்டேங்குது?’ என்றேன். இந்தக் கேள்வியை இது வரை ஆயிரம் முறையாவது அவளிடம் கேட்டிருப்பேன். அதற்கு எப்போதும் ஒரே மாதிரியான பதிலைக் கோபத்துடனும், எரிச்சலுடனும், வெளிப்படுத்துவாள். ஆனால் இன்று ஏனோ மவுனமாக எந்த வித உணர்ச்சியையும் பரவ விடாமல் நடந்து கொண்டிருந்தாள். மீண்டும் அவளைச் சீண்டுவதற்காகவே, ‘இல்ல… குழந்தை பொறக்கணும்னு வைத்தியம் பார்க்கறப்பெல்லாம் பொண்ணு பொறக்கணும்னு தானே வேண்டிக்குவ…’ என்று மீண்டும் கேட்டேன். அதற்கு எதிர் வினை உடனே நிகழ்ந்தது.

‘உங்களுக்குக் காரணம் தெரியாதாக்கும்!’ என்று செல்லமாகக் கோபித்துக் கொண்டாள். சில நொடிகள் ஏதோ சிந்தனைக்குட்பட்டது போல் மவுனமாக நடந்தவள், ‘ஆம்பளப் பசங்களெல்லாம் கல்யாணமானவுடனே பெத்தவங்கள தவிக்க விட்டுட்டு பொண்டாட்டி பேச்சை கேட்டுட்டுத் தனியா போயிடுவாங்க. பொம்பளப் புள்ளங்க அப்படியில்ல… புருஷன் வீட்டுக்குப் போனாலும் பெத்தவங்கள மறக்க மாட்டாங்க. இத நான் எத்தனை தடவ சொல்லியிருப்பேன். வேணும்னே கேக்குறீங்க. பழைய நினைப்புங்களை தூண்டி விடற மாதிரி இருக்கு இது!’ என்றாள்.

‘ஆனா இந்தப் பாடத்தை நமக்குச் சொல்லிக் கொடுத்தது நமக்குப் பொறந்த மகனில்லையே… என் தம்பி தானே!’ நான் விடாமல் அவளை வம்பிழுத்தேன்.

‘மகனா இருந்தா என்ன… உங்க தொம்பியா இருந்தா என்ன? எல்லாப் பசங்களும் ஒரே குட்டையில ஊறுன மட்டைங்க தானே!’ என்றாள். தம்பியைத் தான் எரிச்சலுடன் தொம்பியாக மாற்றிப் பேசினாள். திருமணத்துக்குப் பிறகு மனைவியின் பேச்சைக் கேட்டுத் தனிக்குடித்தனம் சென்ற தம்பி ஏற்படுத்திச் சென்ற காயம் இன்னும் புரையோடிய புண்ணாக ஆறாமல் வலித்துக் கொண்டிருந்த மனதைத் தான் அவள் பேச்சு வெளிப்படுத்தியது.

மனைவியின் சிந்தனையை, யோசனையை நடுநிலையோடு இருந்து சீர் தூக்கிப் பார்த்து முடிவெடுத்து செயல்படுத்துவதில் அவன் வல்லமை பெறவில்லை என்று தோன்றுகிறது. ஏனென்றால் என் திருமணத்துக்குப் பிறகு தம்பியைத் தவிக்க விட்டு நான் தனிக்குடித்தனம் செல்லவில்லை. அதற்குக் காரணம் பிளவு ஏற்படுத்துவதற்கான பேச்சு வார்த்தைகளை என் மனைவி அப்போது வெளிப்படுத்தவில்லை. சொல்லப் போனால் அவன் நிரந்தரமில்லாத வேலையில் இருந்த போது அவனுக்குப் பக்கபலமாக இருந்து சரியான வழியை காண்பித்து மேலே ஏற்றி விடுவதற்கு அவளும் துணையாக இருந்தாள்.

சில சமயங்களில் ஆழ்ந்து சிந்திக்கும் போது தம்பியின் இடத்தில் நான் இருந்திருந்தால் எப்படி நடந்திருப்பேன் என்று மாற்றுச் சிந்தனை ஏற்படும். ஒருவேளை என் மனைவி அந்தச் சமயத்தில் தனிக்குடித்தனம் சென்று விடலாம் என்றும் உங்கள் தம்பிக்கு ஒரு உதவியும் செய்ய வேண்டாம் என்றும் தடுத்து நிறுத்தி முரண்டு பிடித்திருந்தால் நான் அந்தத் தருணத்தில் எப்படி நடந்து கொண்டிருப்பேன் என்று இப்போது யோசித்துப் பார்க்கும் போது ஒரு முடிவுக்கும் வர இயலவில்லை. நானும் என் தம்பியை போல் முடிவெடுத்திருப்பேனோ என்ற சந்தேகம் இப்போதும் இருக்கிறது. ஒரு விஷயத்தில் நான் தெளிவாக இருந்தேன். இத்தனைக்கும் காரணம்… பணம் தான்! வசதி வாய்ப்பில் என்றைக்கு ஏற்றத்தாழ்வு ஏற்பட்டதோ அன்றிலிருந்தே பிளவுக்கான அச்சாரம் போடப்பட்டு விட்டது. அது தம்பியின் திருமணத்துக்குப் பிறகு அவன் மனைவியின் மூலம் பெரிதாக்கப்பட்டது.

ஆனால், சில மாதங்களாகத் தம்பியின் நடவடிக்கை சற்று புதிராகவே காணப்படுகிறது. எங்களுடன் நெருக்கமாகப் பழகுகிறான். அடிக்கடி போனில் பேசுகிறான். முக்கியமான வேலை இல்லாவிட்டாலும் கூடச் சென்னையிலிருந்து அடிக்கடி எங்களைச் சந்திக்கக் குடும்பத்தோடு வருகிறான். அவன் மகன்களை எங்களுடன் சுதந்திரமாகப் பழக விடுகிறான். முக்கியமாக அவன் மனைவி…! மூத்தவன் பிறந்த போது அவனைத் ஆசையோடு தூக்கிய கணத்திலேயே என் கையிலிருந்து பிடுங்கிக் கொண்டு சென்றவள்… என்னைத் தொடக் கூட அனுமதிக்க மறுத்தவள்… இன்று இத்தனை சுதந்திரம் கொடுத்து எங்களுடன் பழக விடுகிறாள் என்றால், அதற்குக் காரணம் எதுவாக இருக்கும்?

இந்தச் சிந்தனை என்னுள் ஓடிய கணத்திலேயே, ‘தம்பி முன்ன மாதிரியில்ல… இப்பத்தான் நம்மள புரிஞ்சுகிட்டு நெருங்கி வர்றான்’ என்று அவள் கருத்தை அறிவதற்கு முயன்றேன்.

‘நெனச்சுக்கிட்டு இருங்க… நெனப்புத் தான் பொழப்பக் கெடுக்குமாம். வாரிசில்லாத சொத்துக்கு ஆசைப்பட்டுத் தாங்க நம்மள நெருங்கி வர்றான்!’ அவள் குரலில் கோபமும் அழுகையும் கலந்திருந்தன.

அவள் கூறுவதிலும் உண்மை இருக்கத் தான் செய்கிறது. ஆரம்பத்திலிருந்தே அவள் இதைப் பற்றித் தான் அதிகமாகப் பேசியிருக்கிறாள். அப்போதெல்லாம் நான் அதைப் பற்றி அதிகம் கவனத்தில் கொள்ளவில்லை. கவலையும் படவில்லை. ஆனால் சமீப காலமாகத் தான் அவள் கூறுவதில் உள்ள உண்மை விஸ்வரூபம் எடுத்து என் முன் நின்று நையாண்டி செய்கிறது. எனக்குள்ளே பல கேள்விகளை நிரப்புகிறது. என் தம்பியை விடுங்கள்… எட்ட நின்று வேடிக்கைப் பார்த்த சொந்தங்கள் அனைத்தும் இன்று கிட்ட நெருங்கி வந்து ஒட்டி உறவாடுவது என் சொத்துக்காகத் தானா?

இத்தனை வருடங்கள் யாருக்காக உழைத்தேன்? யாருக்காக பணம் சம்பாதித்தேன்? யாருக்காக நகர் மத்தியில் இரண்டாயிரம் சதுர அடியில் மனை வாங்கினேன்? அதில் ஆயிரம் சதுர அடியில் வீடு கட்டினேன்? எனக்குள்ளே எழுந்த கேள்விகளுக்கு பதில் கிடைக்காமல் யாருமற்ற பாலைவனத்தில் அலைவது போல் உணர்கிறேன். என் பின்னே என்னைத் தொடர்ந்து வருபவர்களெல்லாம் எனக்காக வரவில்லை. என் பாசத்துக்காகவும் நேசத்துக்காகவும் வரவில்லை. என் ஆன்மாவுக்கான மதிப்பையும் மரியாதையையும் கொடுப்பதற்காகப் பின் தொடரவில்லை. என் ஆளுகைக்கு உட்பட்டிருக்கும் சொத்தின் மதிப்பு… அது தான் … அதே தான்! ஒரு கோடி மதிப்புள்ள வீட்டின் உரிமையாளன் என்ற பிம்பம் தான் எனக்கான மதிப்பை அதிகரித்து என்னைத் தேடி வரச் செய்கிறது. இத்தனை எண்ணங்களும் எனக்குள் ஒரே நேரத்தில் உருப்பெற்று கரை உடைத்த வெள்ளமாய் பிரவாகமெடுத்து அவளிடம் ஒரு கேள்வியை முன் வைத்தது.

‘எனக்கொரு யோசனை ரொம்ப லேட்டா வருது. நாள்கணக்கு மாதக்கணக்கெல்லாம் கிடையாது. ஆண்டுக்கணக்கான லேட்டு! காலம் கடந்த ஞானம்னு கூடச் சொல்லலாம்’ என்று கூறிச் சில நொடிகள் நிறுத்தினேன்.

‘என்ன?’ என்று எந்த வித உணர்ச்சியையும் வெளிப்படுத்தாமல் கேட்டாள்.

‘நாம கஷ்டப்பட்டு உழைச்சுச் சாம்பாதிச்சுக் கடன உடன வாங்கி வீட்டைக் கட்டினதுக்குப் பதிலா அந்தப் பணத்தை உலகத்தைச் சுத்திப் பார்க்கறதுக்குச் செலவு செஞ்சுருக்கலாமோன்னு இப்ப நான் யோசிச்சுப் பாக்குறேன். இந்தப் பூமியில வாழ்ந்ததுக்கு அடையாளமா சமூகத்துக்கு ஏதாவது நல்லது செஞ்சுருக்கலாமோன்னு கூடத் தோணுது’

‘ஏன் அப்படிச் சொல்றீங்க?’

‘இல்ல… நமக்குப் பிறகு அந்த வீட்டை ஆளறதுக்கு நம்ம வாரிசுன்னு யாரிருக்கா? எவனோ ஒருத்தன் அனுபவிக்கறதுக்கு நாம ஏன் கஷ்டப்பட்டு இந்த வீட்டை கட்டியிருக்கணும்னு…’

‘ஏன்… உங்க தம்பி தானே அந்தச் சொத்தை அனுபவிக்கப் போறாரு?’

‘ஆமா… பெரிய தம்பி! நாம கஷ்டப்பட்டப்ப அவன் நமக்கு உதவி செஞ்சானா? நம்மள நெனைச்சுக் கூடப் பார்க்கல. எட்டிக் கூடப் பார்க்கல! சொந்தபந்தங்கள விடு… அவங்க, கையில நாலு பணமிருந்தா பசை மாதிரி ஒட்டிக்குவாங்க. இல்லாட்டி மரியாதை கூடக் கொடுக்க மாட்டாங்க. ஆனா அவன் என் கூடப் பொறந்த பொறப்பு. ஒரே ரத்தம். அவனும் நம்மள உதாசினப்படுத்துனது தான் என்னை ரொம்ப புண்ணாக்கிடுச்சு!’ என்று சொல்லும் போதே எனக்கு கண்களில் நீர் நிறைந்து கன்னங்களில் வழியத் தயாராய் நின்றன. அவள் அதைப் பார்த்து விடக் கூடாது என்பதற்காக கண்களில் தூசி விழுந்தது போல் துடைத்துக் கொண்டேன். எப்படியிருந்தாலும் நடுங்கும் குரல் என்னைக் காட்டிக் கொடுத்திருக்கும். ஆனாலும் அவள் எதுவும் பேசாமல் அமைதியாகவே இருந்தாள். எப்போதும் இது போன்ற சமயங்களில் உன்னிப்பாக என்னுடைய நடவடிக்கையை கவனித்து ஆறுதல் கூறுபவள் இன்று ஏன் இப்படி நடந்து கொள்கிறாள்? அவளைப் புரிந்து கொள்ள முடியவில்லை.

‘ரொம்ப ஆழமா யோசிச்சுப் பார்த்தா நாம சரியான நேரத்துல சரியான முடிவெடுக்கலையோன்னு தோணுது. அவ்வளவு செலவு செஞ்சும் குழந்தை பொறக்கலைன்னு தெரிஞ்சதுமே ஏதாவது ஒரு ஆசிரமத்துல குழந்தையை தத்தெடுத்துருக்கலாம். நீ தான் ஒத்து வர மாட்டேன்னுட்ட! அப்படி செஞ்சுருந்தா இன்னைக்கு யாரையும் நம்ப வேண்டியதில்லை. நமக்குன்னு ஒரு புள்ள… நம்ம சுக துக்கங்கள்ல பங்கெடுத்துக்கிற ஒரு வாரிசு… எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் அதை எதிர்த்து நின்னு சமாளிக்கக் கூடிய ஆற்றலைக் கொடுக்குற ஒரு ஜீவன்… அன்னைக்கு நாம தத்தெடுத்துருந்தா இன்னைக்கு வளர்ந்து பெருசாகி நமக்குத் தோழனா, இல்ல தோழியா ஆகியிருப்பா! யாரை நம்பறது, யாரை நம்பக் கூடாதுன்னு இன்னைக்குக் குழம்பிக்கிட்டு இருக்க வேண்டியதில்லை!’

அவள் பதில் எதுவும் பேசாமல் இருப்பது எனக்குள் பல கற்பனைகளை உருவாக்கியது. அவள் ஆழ்மனதைச் சிதைத்து விட்டேனோ என்ற எண்ணம் ஏற்பட்டது. கடந்த காலத்தை நினைவுபடுத்திக் கஷ்டப்படுத்தி விட்டதால் தான் எதையும் பேச முடியாமல் மவுனமாக வருகிறாளா? இப்போது தவியாய் தவித்துக் கொண்டிருப்பதற்குக் காரணம் நீ தான் என்று குற்றவாளி ஆக்கியதால் அவள் மனம் வேதனைப்பட்டு மவுனமாக அழுகிறாளா? பொது இடம் என்பதால் குரலை வெளிப்படுத்தவில்லையா?

அழட்டும்… என்னை இரண்டு நாட்களாக தவிக்க விட்டுச் சென்றவள் தானே இவள்! கல்யாணமான புதிதில் அடிக்கடி தாய் வீடு சென்று விடுவாள். அதன் பிறகு -எங்களுக்குள் அன்யோன்யம் மிகுந்த பிறகு- அது குறைந்து விட்டது. கடந்த இருபது வருடங்களாக நாங்கள் பிரிந்ததேயில்லை. உற்றார் உறவினர் நண்பர்கள் எல்லாம் கேலி கூடச் செய்திருக்கிறார்கள். நாங்கள் இணை பிரியாமல் இருந்ததற்குக் காரணம் அவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. தனிமையான சந்தர்ப்பத்தில் தான் சில கவலைகள் விஸ்வரூபம் எடுக்கிறது. நீளமான கத்தியை இதயத்தில் பாய்ச்சுவது போன்ற வேதனையைக் கொடுக்கிறது. சம கவலை சூழ்ந்த இருமனங்கள் அருகருகே இருக்கும் போது, வார்த்தைகளில் கூட வெளிப்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை, உணர்வுகள் மூலம் எண்ணப்பரிமாற்றம் செய்து கொண்டாலே வேதனைகள் பாதியாகக் குறைகின்றது.

நான் ஆரம்பத்தில் கேட்க நினைத்த கேள்வி இப்போது சட்டென்று நினைவுக்கு வந்தது. மறப்பதற்கு முன் கேட்டு விட வேண்டும் என்று அவசரமாக, ‘ரெண்டு நாளா எங்கே போயிருந்த? முதல்லயே உன் கிட்ட கேட்கணும்னு நெனைச்சேன்’ என்றேன். அவள் பதில் சொல்லவில்லை. ’நம்ம வீட்டுக்கு எல்லா சொந்தக்காரங்களும் வந்திருந்தாங்க தெரியுமா? எனக்கு ஒரு பக்கம் சந்தோஷமா இருந்தாலும் இன்னொரு பக்கம் வெறுப்பாவும் இருந்துச்சு. எதுக்கு இத்தனை பேரு ஒண்ணா உட்கார்ந்து அழுதுகிட்டு இருக்காங்கன்னு! அந்தக் கூட்டத்துல உன்னை மட்டும் காணோம். நானும் தேடித் தேடிப் பார்த்தேன். அப்படி எங்க தான் போயிருந்த? என் கிட்டக் கூடச் சொல்லாம? அப்படியென்ன வேலை உனக்கு?’ அவளைத் தேட விட்டதில் எனக்குக் கோபம் அதிகரித்திருந்தது. இவ்வளவு தூரம் கேட்ட பிறகும் அவள் இன்னும் பதில் சொல்லவில்லை.

‘உன் கிட்ட நெறைய பேசணும்னு நெனைச்சேன் தெரியுமா… மனசுக்குள்ள ஏதோ ஒரு இரும்புக் குண்டை திணுச்சு வச்ச மாதிரி கனமா இருந்துச்சு. இந்த மாதிரி சமயங்கள்ல நாம ரெண்டு பேரும் மனசு விட்டுப் பேசுவமே… அதுக்காகத் தான் உன்னை தேடுனேன். இன்னும் அந்தப் பாரம் குறைஞ்ச மாதிரி தெரியலை. முதல்லயே உன்கிட்ட சொல்லணும்னு நெனைச்சேன். நீ மனசு கஷ்டப்படுவேன்னு தான் பேசாம இருந்துட்டேன். இப்ப அந்த பாரம் இன்னும் கொஞ்சம் அதிகமான மாதிரி தெரியுது. நடுநெஞ்சு கனமா அழுத்தி வலி எடுக்குது. வீட்டுல அத்தனை பேரு கூடியிருந்தாலும் அவங்க கிட்ட இதப் பத்திச் சொல்ல முடியல. சொல்லப் போனா அவங்கள பார்க்க பார்க்க நெஞ்சு ரொம்ப கனமாகி வலிக்கிற மாதிரி இருக்குது. நீ மட்டும் பக்கத்துல இருந்திருந்தா… உன் கிட்ட மனசு விட்டுப் பேசியிருந்தேன்னா இவ்வளவு தூரம் நான் கஷ்டப்பட வேண்டியதில்ல. எங்க போயிருந்த?’ என்று நெஞ்சு வலியைத் தாங்கிக் கொண்டு கேட்ட போதும் அவளிடமிருந்து பதில் வரவில்லை. எப்படி இவள் அழுத்தக்காரியாக மாறிப் போனாள். காலம் போன கடைசியில் ஏன் இப்படி வதைக்கிறாள். எப்போதும் நெஞ்சு வலி என்று சொன்னால் துடித்துப் போய் மார்பை தடவிக் கொடுப்பாள். தலையை மடியில் வைத்து ஆசுவாசப்படுத்துவாள். மனதை வேறு பக்கம் திருப்புவதற்கு இனிமையான கடந்த காலச் சம்பவங்களை நினைவு படுத்துவாள். சற்று அமைதி திரும்பியவுடன் சுடு நீர் காய வைத்துக் கொடுப்பாள். ஆனால் இன்று அவள் எந்த வித பதற்றமும் இல்லாமல் மிக அமைதியாக என் கூடவே நடந்து கொண்டிருக்கிறாள் என்றால் என்ன காரணமாக இருக்கும்? நெஞ்சு வலியை விட இந்த எண்ணம் தான் என்னை அதிகம் இம்சைப்படுத்தியது. வேகமாகத் திரும்பிப் பக்கவாட்டில் பார்த்தேன்.

காற்றினூடே விரவியிருந்த பனியும், மினுமினுக்கும் நுண்தூசிகளைச் சுமந்து கொண்டிருந்த சூரிய ஒளியும் தான் கண்களுக்குத் தெரிந்தன. எங்கே அவள்? இவ்வளவு நேரம் என்னுடன் கூடவே நடந்து கொண்டிருந்தவள் எப்படிக் காணாமல் போனாள். இதயத் துடிப்பு வேகமாக அடிக்க சுற்றிலும் பார்த்தேன். எங்கேயும் காணோம். நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தவர்கள் என் நடவடிக்கையைக் கண்டு விலகிச் சென்றார்கள்.

வேண்டுமென்றே என்னிடம் கண்ணாமூச்சி ஆடுகிறாளா? கண்ணாமூச்சி ஆடுவதற்கு நாங்கள் என்ன சிறு குழந்தைகளா? எப்போது என்னை விட்டு விலகிச் சென்றாள்? பக்கத்தில் தான் எங்காவது சென்றிருப்பாள். தெரிந்தவர்கள் யாரையாவது பார்த்திருப்பாள். அவர்களுடன் பேசிக் கொண்டிருப்பாள். வட்டவடிவமான அந்த பூங்கா முழுவதும் கண்களை ஓடவிட்டேன். காணவில்லையே! அவள் என்ன கலர் சேலை அணிந்திருந்தாள்? அதைக் கூடப் பார்க்கவில்லை. அவளைப் பார்க்காமலேயே இவ்வளவு நேரம் நடந்து வந்தது என்னுடைய தவறு தான்.

அவளைக் காணாத துக்கம் எனக்குள் வெறுமையை தோற்றுவித்தது. தனிமையானத் தீவுக்குள் திக்குத் தெரியாமல் தடுமாறுவது போல் உணர்ந்தேன். இத்தனை பேர் நடந்து கொண்டிருக்கும் சாலையில் நான் மட்டும் அனாதையாக, என் உடல் படும் பாட்டை வெளியே சொல்ல முடியாமல் தனித்து நிற்பது போல் இருந்தது. என் நேசத்துக்குரியவள், என் மனதைப் புரிந்து கொண்டவள், என்னுடனே நடந்து கொண்டிருந்தவள் திடீரென்று காணாமல் போனது நெஞ்சுக்குள் கவலைப் பந்தை நிரப்பி வைத்தது. என் வாழ்க்கையை விட்டே போய் விட்டது போன்ற பிரமையை தோற்றுவித்தது. உலகமே நிலையில்லாமல் சுழலுவது போல் இருந்தது. உடல் சமநிலையிழந்து தடுமாறினேன். கொலுக் கொம்பைத் தவற விட்ட கொடியைப் போல் காற்றில் அலைந்தேன்.

கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது. நெஞ்சு வலி கடினமானதாக மாறி அதைப் பொறுக்க முடியாமல் இந்த இடத்தை விட்டு, இந்தச் சூழ்நிலையை விட்டு விலகிச் சென்றால் போதும் என்ற நினைப்பு மனம் முழுவதும் நிரம்பியது. என்னிடமிருந்து என்னை யாரோ பிரித்தெடுக்கிறார்கள். வேரோடு பிடுங்கி எறிகிறார்கள். இத்தனை நாளும் எனக்குள் சேர்த்து வைத்திருந்த பாரங்கள் எல்லாம் கனமற்ற இலவம் பஞ்சாக லேசாகிப் போனது. அதைத் தொடர்ந்து கருப்பு மையை கரைத்து ஊற்றியது போன்ற இருட்டுக்குள் நுழைந்து சென்று கொண்டிருந்தேன். தூரத்தில் சிறு புள்ளியாக நட்சத்திரம் போன்ற ஒளி மினுக்கு என்னை அருகே அழைத்தது. அது, மனைவியின் உணர்வைப் பிரதிபலிப்பதைப் போல் பிரகாசித்துக் கொண்டிருந்தது. வெளிமனம், அவளாக இருக்காது என்று சந்தேகப்பட்டாலும் உள் மனம், அவள் தான் அங்கே இருக்கிறாள் என்று முற்றிலுமாக நம்பியது! நான் எங்கெங்கோ தேடிக் கொண்டிருந்தவள் இங்கே தான் இருக்கிறாள். அவளருகில் சென்று அந்த ஒளியுடன் ஒருசேரக் கலந்து விட்டால் என் கவலைகள், உடல் நோவுகள் எல்லாம் முற்றிலும் இல்லாததாக உருமாறி அதைப் பற்றிய உணர்வு கூட ஏற்படாமல் ஏதுமற்ற வெளியாக மாறிவிடுவேன்! அவளை நோக்கி, அந்த நட்சத்திர மினுக்கை நோக்கி இருள் சூழ்ந்த காற்றில்லாத வெளியில் நீந்திக் கடக்கின்றேன்.

– கணையாழி மாத இதழ், நவம்பர் 2016

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *