கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: November 10, 2022
பார்வையிட்டோர்: 4,919 
 

(2017ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

‘எண்ணெய் சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு, பட்டை வெடித்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்’, மீண்டும் ஒருமுறை சமையல் குறிப்பை மனதில் பதிவேற்றிக் கொண்டேன். ‘இன்னைக்கு மட்டும் இந்தக் குழம்பு ருசியா வரலேன்னா … அப்புறம் கமலாவோட வாரிசுன்னு சொல்றதுல அர்த்தமில்லை..’ சூடான எண்ணைக்குள் சிலிர்த்து விரியும் பட்டையைப்போல மனம் அம்மாவின்

நினைவுகளினால் விரிந்தது. சமையலறைதான் அம்மாவின் கலைக்கூடம். தேர்ந்த ஓவியரின் கைகளுக்குள் விளையாடும் தூரிகையைப்போல் தான் அம்மா சமையலறையில் கத்தியையும் கரண்டியையும் கையாளுவார். ஓவியத்தின் வண்ணக் கலவையைப்போல் மசாலா தூள்களும், தாளிப்புப் பொருட்களும் ரசனைக்கும் சுவைக்கும் ஏற்றவாறு அவரிடம் வசப்படும். அவரின் சமையலை இரசித்து, ருசித்துச் சாப்பிடாதவர்களே இல்லை எனலாம். உறவினர் வீட்டு விசேஷங்களில் அம்மாவின் பங்களிப்பாக ஏதாவது சமைத்து எடுத்துச் செல்வார். ‘இறால் சம்பால்’, ஆயாம் மேரா, மைசூர் மட்டன், ஆட்டுக் குடல் குழம்பு என வகைவகையாகச் சமைத்து அனைவரையும் அசத்துவார். விசேஷத்திற்கு வருவதைவிட அவரின் சமையலைச் சுவைப்பதற்கென்றே தவறாமல் வருபவர்களும் இருக்கிறார்கள்.

நூலைப் போல சேலை, தாயைப் போல பிள்ளை என்னும் கூற்றைப் பொய்ப்பிப்பதற்காகவே நான் அவதரித்தேன் போலும், ஒருமுறை நான் செய்த மீன் குழம்பைப் பார்த்து “இது என்ன, வெங்காயக் குழம்பில் மீன் மிதக்குது, புதுச் சமையல் குறிப்பா?” என்று என் கணவர் கேட்ட கேள்வி தொண்டைக்குள் துருத்திக் கொண்டிருக்கும் மீன் முள்ளைப்போல இதயத்தை நெருடியது. ஏமாற்றத்தை மிகுந்த சிரமத்துடன் அன்று விழுங்கிக்கொண்டேன். பின்னர் ஒருநாள் செட்டிநாட்டுக் கோழிக் குழம்பு தயாரிப்பதை ‘யூடியூபில்’ பார்த்து, அதில் குறிப்பிட்டது போல முயற்சி செய்தேன். வேர்க்க விறுவிறுக்கத் தயாரித்த ஒரு பானைக் குழம்பை மறுநாள் குப்பைத் தோம்பில் கொட்டும்போது மனம் கனத்தது. சோமாலியாவில் வாழும் குழந்தைகளின் நிழல் கண்திரைக்குள் நிழலாடியது, நிஜம் சுட்டது.

“ஏன் அம்மா, ஆத்தா உயிரோடு இருக்கும்போதே நீங்களும் ருசியாச் சமைக்கக் கத்திருக்கலாமே? “பரிதாபத்தோடு கேட்டாள் நிம்மிகுட்டி. நியாயமான கேள்விதான், ஆனால் நான் என்ன செய்வது? அம்மாவுக்கு அடுப்படியில் உதவி செய்யலாம் என்று போனால் தீய்ந்த பாலைப் போன்றுதான் சமையலறையிலிருந்து கருகி வருவேன்.

“இறைச்சிக் குழம்புன்னா வெங்காயத்தை வட்ட வடிவமாக வெட்டணும், காய்கறிகளுக்குன்னா நீளமாக வெட்டணும், அதேபோல் மற்ற காய்கறிகளும் சமையலுக்கு ஏற்பச் சின்னதாகவோ பெரிதாகவோ நறுக்கணும்” என்று அம்மா எல்லாவற்றிக்கும் அளவுகோல் வைத்திருப்பார். அநாவசிய வாக்குவாதத்தைத் தவிர்ப்பதற்காகவே அம்மா சமைக்கும்போது என் மூச்சுக் காற்றுகூடச் சமையலறைப் பக்கம் போகாமல் பார்த்துக்கொண்டேன்.

திருமணத்திற்குப் பிறகாவது சமைக்கலாம் என்றால் அங்கேயும் முட்டுக்கட்டை. குழந்தை பிறந்தால் பாரத்துக்கொள்ள வசதியாக இருக்குமே என்று அம்மாவின் புளோக்கிற்குப் பக்கத்தில் வீடு வாங்கியது பெரிய தவறு. நான் சும்மாதானே இருக்கிறேன் என்று அம்மா தினமும் சமைத்துத் தர, அதுவே நாளடைவில் நிரந்தரமாகிப் போனது. வேலைக்குப் போய்வந்து சமைக்க ஏன் சிரமப்பட வேண்டும் என்று நானும் மேம்போக்காக இருந்துவிட்டேன். அம்மா இறந்தபிறகுதான் என் தவறை உணர்ந்தேன். அம்மாவின் சமையலால் ருசிகண்ட என் கணவரும், நிம்மிக்குட்டியும், அம்மாவின் மறைவுக்குப் பிறகு நான் எதைச் சமைத்தாலும் அதில் குறை கண்டுபிடிக்கும் நிபுணர்களாகப் பிரகாசித்தார்கள்.

இரண்டு மாத இடைவெளிக்குப்பின் மீண்டும் சமையலறையைக் கைப்பற்றியிருக்கிறேன். அதற்குக் காரணம் கணவர் புதிதாக வாங்கி வந்த புதுவகை மினி அரைக்கும் இயந்திரம்தான். மசாலைப் பொருட்களையும் தானியங் களையும் மூன்று மடங்கு வேகத்துடனும், நைசாகவும் அரைக்க வல்லது என்று அதன் பெருமையைக் கூறி எங்கள் திருமண நினைவு நாளன்று பரிசளித்திருந்தார்.

அப்படியானால், நாமே நமக்குத் தேவையான அளவில் அவ்வப்போது மசாலாக்களைத் தயாரித்துக் கொள்ளலாம், இனி திடீர் மசாலாக்களுக்கு விடுதலை என்று உற்சாகமடைந்தேன். இந்தமுறை எப்படியும் பாஸாகிவிட வேண்டும் என்ற நம்பிக்கையில் கடும் முயற்சி எடுத்திருக் கிறேன், பார்ப்போம்!

அரைத்த இஞ்சிப் பூண்டு விழுது வதங்கும் வாசனை மூக்கைத் துளைக்கவும், சமையல் குறிப்பில் குறிப்பிட்டுள்ளது போல், நறுக்கிய தக்காளியையும் கழுவி, சுத்தம் செய்து வைத்திருக்கும் கோழித்துண்டுகளையும் சிறிதுநேரம் எண்ணையில் வதங்கவிட்டு, நானே என் கைப்பட அரைத்து வைத்திருக்கும் மசாலாவை அதன் மேல் கொட்டி, தேவையான அளவு தண்ணீர் விட்டு வேக வைத்தேன். இருபது நிமிடங்களுக்குப் பிறகு கொதிக்கும் கோழிக் குழம்பின் மணம் நம்பிக்கையளிக்க, அடுப்பை அணைத்து, பொடியாக நறுக்கிய கொத்துமல்லியைக் குழம்பின் மேல் தூவி மீண்டும் ஒரு முறை குழம்பின் மனதை நுகர்ந்தேன். முழுத் திருப்தியோடு நீராவி வெளியேறும்படி பானையைப் பாதியாக மூடி நிமிர்க்கையில் மணி பன்னிரெண்டு.

நிம்மிக்குட்டி வருவதற்குள் வேலைகளை முடித்துவிட வேண்டும். இன்று அவளுக்குப் புறப்பாட வகுப்பு இருக்கிறது. மதிய உணவுக்குப் பிறகு மீண்டும் பள்ளிக்குச் சென்றுவிடுவாள். மேஜையில் இருந்த பொருட்களை அப்புறப்படுத்தி, சுத்தம் செய்து, சமையலுக்குப் பயன்படுத்திய தட்டுகளைக் கழுவி முடிக்கவும் நிம்மிக்குட்டி ‘மம்மி’ என்று கதவைத் தட்டவும் சரியாக இருந்தது.

“என்ன மம்மி… டம்மின்னு? அம்மான்னா வாய் கசக்குதா?”

“வீட்டுக்கு வந்ததும் வராததுமா ஆரம்பிச்சிட்டிங்களா?”, முணுமுணுத்துக் கொண்டே அறைக்குள் சென்று படீர் என்று கதவை அறைந்து சாத்தினாள்.

“ஏய்! என் மேல இருக்கும் கோபத்த ஏன் கதவிடம் காட்டுறே?” கோபமாய் நானும் கத்திவிட்டுச் சமையலறைக்குள் என் வேலைகளைத் தொடர்ந்தேன். என் பங்குக்கு நானும் எவர்சில்வர் தட்டைப் படீர் என்று மேஜை மேல் வைத்தேன். கோபம் ஆறியவுடன் நிம்மிக்குட்டி அறையிலிருந்து வெளியில் வந்தாள். பள்ளிச் சீருடையில் வதங்கிய கீரையாய் வந்தவளைப் பார்த்ததும் மனம் கரைந்தது. மேலும் எதையும் கூறி அவளுடைய கோபத்தைக் கிளறாமல் தட்டில் சோற்றைப் போட்டு பானைக்குள் இருந்த கோழிக் குழம்பைக் கிளறினேன்.

அவளுக்குக் கோழியின் மென்மையான சதைப்பாகங்கள் பிடிக்கும், குறிப்பாக கோழியின் கழுத்துப் பாகம். அதை மென்மையாய்ப் பிய்த்து, வாயில் போட்டு, அதன் எலும்புகளைக் கடைவாய்ப்பல்லில் கடித்து, அதிலிருந்து வரும் சாறை உள்ளே தள்ளி, நொறுங்கிய எலும்புகளைத் துப்புவது, என்னைப் போலவே நிம்மிக்குட்டிக்கும் கைவந்த கலை.

மௌனமாகச் சாப்பிட்டாள், உணவு உண்ணும்போது பேசக்கூடாது என்பது எனது தந்தையின் வழியாக வந்த பழக்கவழக்கங்களில் ஒன்று. திருமணத்திற்குப் பிறகும் அதையே புகுந்தவீட்டிலும் பின்பற்றினேன்.

“உங்கப்பா எனக்குச் செஞ்ச ஒரே நல்ல காரியம் இப்படி ஒரு ரூல்ஸ உனக்குக் கத்துக்கொடுத்ததுதான், பாவம் மனுஷன், உங்கம்மாகிட்ட என்ன பாடுபட்டாரோ?”, திருமணமானமான புதிதில் மாமனாரைப் புகழ்வதுபோல் மறைமுகமாக என்னைச் சீண்டுவார். இவ்வுலகத்திலிருந்து அப்பா மறைந்திருந்தாலும் அவர் விட்டுச் சென்ற விழுமியங்களையும், கலாச்சாரங்களையும் நான் போற்றுவது போல என் மகளும் பேரப்பிள்ளைகளும் பின்பற்றுவார்களா? நம்பிக்கையோடு நிம்மிக்குட்டியை ஏறிட்டேன். சோப்பு நுரையைக் கைகளில் அழுந்தத் தேய்த்து, ஓடும் தண்ணீரில் கழுவிக்கொண்டிருந்தாள்.

“ம்ம், சாப்பாடு சுமார்தான், பெரிசா சொல்ல ஒண்ணுமில்லை …”, பெரிய கிழவி மாதிரி அங்கலாய்த்துக் கொண்டு மீண்டும் பள்ளிக்குக் கிளம்பிப் போனாள். ஒரே குழப்பமாக இருந்தது. சற்றுமுன் அவளைக் கண்டித்ததற்காக வேண்டுமென்றே எனக்கு வெறுப்பேற்றுகிறாளா, அல்லது உண்மையிலேயே இன்றைக்கும் சமையல் அவ்வளவுதானா? எவ்வளவுதான் சிரத்தையெடுத்துச் சமைத்தாலும் அம்மாவின் கைப்பக்குவம் வரவில்லையே? அம்மா அப்படி என்னதான் சொக்குப்பொடி போட்டு இவர்களை மயக்கி வைத்திருக்கிறாள்? ஆதங்கத்தோடு பொத்தென்று விழுந்த என்னைச் சோபா ஆதரவாய் அரவணைத்துக்கொண்டது. உருண்டோடி வரும் அம்மாவின் நினைவுகளோடு இமைகள் விழியை அணைத்துக் கொண்டன.

அன்று ….

“அஞ்சலை, என்னம்மா பண்ணுறே?” அம்மாவின் குரல் அடுப்பங்கரையிலிருந்து ஒலித்தது.

“செத்த பின்னால போயிப் பாரு, அரிசியைக் கழுவிக் காயப்போட்டிருக்கிறேன், குருவி வந்துடப் போவுது” படித்துக்கொண்டிருந்த புத்தகத்தையும், தரையைத் தழுவிய பாவாடையையும் தூக்கிக்கொண்டு பின்கட்டுக்கு ஓடினேன்.

சிட்டுக்குருவிகள் மெல்லிய கீச்சிடுகளோடு ஒவ்வொரு அரிசியாகக் கொத்திச் சாப்பிடுவதைப் பார்க்கப் பரவசமாக இருக்கும். அங்கே வந்த காரணத்தை மறந்து அவை சாப்பிடும் அழகை ரசிப்பேன். அந்த நேரத்தில் யாரேனும் வருவதைப்போல் இருந்தால் மட்டும் “ஷு… ஷூ..” என்று விரட்டுவது போல் பாசாங்குச் செய்வேன். சிட்டுக்குருவிகள் பாவம் இல்லையா?

அப்போது எனக்கு வயது எட்டு. சிங்கப்பூர் – மலேசிய வரலாற்றுச் சுவடுகளைத் தன்னுள் சுமந்து கொண்டிருந்த தஞ்சோங் பகார் ரயில் நிலையத்தின் அருகே கம்போங் பாரு என்னும் குடியிருப்பில் எனது பேதைப் பருவத்தின் வசந்தகாலங்கள் ஊஞ்சலாடின. ஈரம் படர்ந்த மரக்கிளைகளில் நீர் முத்துகள் சொட்ட, கவிதையாக உலா வந்த நாட்கள். எனது தந்தை கெப்பல் துறைமுகத்தில் மண்டோராகப் பணிபுரிந்ததால் அவருக்குக் குறைந்த வாடகையில் தங்குவதற்கு ஒரு குவார்ட்டஸ் வீடு கொடுக்கப்பட்டிருந்தது. ஆறு வீடுகள் வரிசையாக ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொண்டிருக்கும் குடியிருப்புகள். சிறிது தள்ளி அதுபோலவே மேலும் ஆறு வீடுகள் வரிசையாக இருக்கும். அதேபோல் எதிர்புறமும் வரிசையாகக்குடியிருப்புகள். இரண்டுக்கும் நடுவே வகிடெடுத்தது போல் நீண்டு போகும் மண்பாதை.

நான்குசக்கர வண்டிகளின் சக்கரங்களைப் பார்த்திராத அந்த மண்பாதையில் பௌர்ணமி இரவுகளில் அக்கம்பக்கத்து அம்மாக்கள் ஒன்றுகூடிப் பேசிச் சிரித்து அவரவர் வீட்டுப் பிள்ளைகளுக்கு நிலாச் சோறு ஊட்டுவார்கள். அந்த நாட்களில் மட்டும் அம்மா, குழம்பு, சாதம், காய்கறி என எல்லாவற்றையும் ஒன்றாகப் பிசைந்து உருண்டை செய்து எனக்கு ஊட்டிவிடுவார். நிலவுக்குள்ளே கண்ணாமூச்சி விளையாடும் பாட்டியைத் தேடிக்கொண்டே அம்மாவின் கதம்பச் சோற்று உருண்டையை அசைபோடுவேன். அடுத்த உருண்டையை வாங்கும்போது வானில் சிதறிக் கிடக்கும் நட்சத்திரக் குவியலை எண்ணிக்கொண்டிருப்பேன். பத்துக்கு மேல் எண்ணியதில்லை.

“போனவாரம் கமலாக்காவோட கருவாட்டுக்கறி வாசம் இந்த வட்டாரத்தையே மணக்க வச்சுட்டுல. வீட்டில வெட்டியா இருக்கற நேரத்துக்கு அந்த அக்காகிட்ட ருசியாச் சமைக்கக் காத்துக்கிடலாம்லன்னு என் ஊட்டுக்காரர் பிழிஞ்சி எடுத்துட்டார்” தான் அடிவாங்கியதைப் பக்கத்து வீட்டு சுதா மாமி நாசுக்காய்ச் சொல்வார்.

“தண்ணிப்போட்ட நாக்குக்கு ருசி கேட்குது, அஞ்சல அப்பாக்கிட்ட சொல்லி அந்த மனுஷனைக் கொஞ்சம் கண்டிச்சு வைக்கச் சொல்லுங்கக்கா” கூடவே புகார் மனுவும் கொடுப்பார். எப்போதுமே, அம்மாவின் சமையல் குறிப்போடுதான் அன்றைய இரவும் விடைபெறும்.

மாதத்தில் கடைசி வார இறுதி வந்துவிட்டால் அம்மா சமையலுக்குத் தேவையான மல்லி, சீரகம், மிளகு போன்ற தானியங்களைப் புடைத்து, கழுவி, காயவைத்து, வாணலியில் மொறுமொறுவென்று வறுத்தெடுத்து தஞ்சோங் பகார் சந்தைக்குப் போகும் வழியில் உள்ள மாவு மில்லில் அரைத்து வரச் சொல்லுவார்.

அப்பாவோடு நானும் சென்று வருவேன். அப்பாவின் சைக்கிளில் செல்வது குஷியாக இருக்கும். அப்பா ஓட்ட, முன்பக்க பாரில் அமர்ந்துகொள்வேன். சைக்கிள் ஹாண்டில் பாரைப் பிடித்துக்கொண்டு நானே சைக்கிளை ஓட்டுவதைப் போல கற்பனை செய்துகொள்வேன். பத்தே நிமிடத்தில் மில் வந்துவிடும்.

“வாங்க மாண்டோர்…” தடதடவென ஓடும் அரைக்கும் இயந்திரத்தின் இரைச்சலைவிட சாமிக்கண்ணுத் தாத்தாவின் வரவேற்பு பிரதானமாக இருக்கும். மஞ்சள் தோய்ந்த வெள்ளை பனியனில் தீமிதிக்கச் செல்லும் பக்தனைப்போல் காட்சியளிப்பார்.

“நல்லா நைசா அரைங்கண்ணே, போன தடவை அரிசி சரியா அரைப்படலைன்னு வீட்டுகாரம்மா சத்தம் போட்டாங்க” அம்மாவின் பேரைச் சொல்லிப் பயமுறுத்திய இருப்தியில் அப்பா தமிழ் நேசன் நாளிதழுக்குள் மூழ்கிவிடுவார். அப்பாவுக்குப் பக்கத்தில் ஒண்டிக்கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பேன்,

மாவு மில்லில் மூன்று இராட்சத இயந்திரங்கள் பெரும் சத்தத்துடன் ஓடிக்கொண்டிருக்கும். ஒன்று மிளகாய், சீயக்காய் மாதிரிப் பொருட்களை அரைப்பது, இன்னொன்று அரிசி அரைப்பது, மூன்றாவது தானியங்கள் அரைப்பது.

சாமிக்கண்ணுத் தாத்தா அம்மா கட்டிக்கொடுத்த பொட்டலங்களை நிதானமாக அவிழ்த்துத் தனித்தனியாகப் பிரித்து வைப்பார். அம்மா குறைந்தபட்சம் இரண்டு நாட்கள் வெயிலில் நொறுங்கக் காயவைத்த மிளகாய் வற்றலை இயந்திரத்தின் வாய் போல் இருக்கும் கூம்பு வடிவிலான குப்பியில் கொட்டுவார். தடகளத்தில் ஓடும் வீரர்களைப்போல் மிளகாய் வற்றல்கள் விரைந்து சென்று சுழலும் கத்தியோடு குத்தாட்டம் போடும். ஆட்டத்தின் முடிவில் உருக்குலைந்து துகள்களாகக் குழாய் போல் இருக்கும் பகுதியின் வழியே வெளியேறி கீழே இருக்கும் டின்களில் தஞ்சம் புகும். சாமிக்கண்ணுத் தாத்தா குழாய் போல் இருக்கும் பகுதியைத் தட்டி மீண்டும் அரைகுறையாக அரைபட்டிருக்கும் மிளகாய்த் தூளை கூம்புக்குள் கொட்டுவார். இவ்வாறு இரண்டு அல்லது மூன்று முறைகள் இயந்திரத்தில் கொட்டி நைசாக அரைத்து எடுப்பார். பின்னர் பழுப்பு நிறத் தாள் பைக்குள் கொட்டி மூலையில் வைத்திடுவார். அரைபட்ட தூள் சூடாக இருக்கும்.! அது சிறிது ஆறியவுடன் பிளாஸ்டிக் பையில் வைத்துக்கொடுப்பார். எப்போதுமே மிளகாய் அரைக்கும்போது அதன் நெடியினால் எனக்குக் கண் எரிச்சல் ஏற்படும். நெடி மூக்கில் ஏறி இருமலையும் கிளப்பும். அதற்குமேல் அங்கே உட்கார முடியாமல் அப்பா என்னைப் பக்கத்திலிருக்கும் ஈரச்! சந்தைக்கு அழைத்துச் செல்வார். அன்று சமையலுக்குத் தேவையான இறைச்சி அல்லது கோழி, சிறிது காய்கறிகளும் வாங்கிக்கொண்டு, அவருக்கும் சாமிக்கண்ணுத் தாத்தாவுக்கும் சூடான கருங்காப்பி இரண்டு பால்டின்களில் வாங்கிக் கொள்வார். நாங்கள் திரும்பி வரும்போது அனைத்தும் அரைபட்டு ஒரு மூலையில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்.

“ஹ்ம்ம், நல்லா நைசாத்தான் அரைச்சிருக்கார், நான் சொன்னதை அவர்கிட்ட சொன்னீங்களா?” வழக்கம்போல வீட்டுக்கு வந்ததும் முதலில் அம்மா அரைத்த பொருட்களைச் சோதனையிடுவார்.

“அஞ்சலை, பழைய நியூஸ் பேப்பர் எல்லாம் எடுத்துட்டு வா, அரைச்சது இன்னும் சூடா இருக்கு, இதோட கொட்டி வச்சா மசாலா நமத்துப் போயிடும்” பின்கட்டை நோக்கிச் செல்லும் அம்மாவின் பின்னாலேயே பழைய நாளிதழ்களோடு ஓடுவேன்.

சில வருடங்களில் நாங்கள் குவார்ட்டஸ் குடியிருப்பில் இருந்து அடுக்குமாடிக் கட்டிடத்திற்குக் குடிபெயர்ந்தோம். நவீனச் சிங்கப்பூர் உருவாகுவதற்கு வழிவிட்டு மறைந்துபோன கம்போங், குவார்ட்டஸ் குடியிருப் புகளின் வரிசையில் மாவு மில்லும் சேர்ந்துகொண்டது. வேறு வழியில்லாமல் அம்மா ஈரச் சந்தைகளில் கடைக்காரர்கள் அரைத்து வைத்திருக்கும் மசாலாக் கலவைகளைச் சமையலுக்கு பயன்படுத்த வேண்டியதாயிற்று. அம்மாவுக்கு நெருக்கமான ஒருவர் இவ்வளவு திறமைகளையும் கொண்ட அம்மாவே ஒரு கடையை எடுத்து நடத்தலாமே என்று தூண்டில் போட்டார். அம்மாவுக்குக்கூட உள்ளுக்குள்ளே வியாபாரம் செய்யும் ஆசை துளிர்விட்டது உண்மைதான்.

“ஏங்க, இப்போ விக்கிற மசாலாவுல கலப்படம் செய்யிறாங்கன்னு சொல்றாங்க. மஞ்சள்கூடப் பழசு, பூச்சி பிடிச்சதுன்னு கலந்துதான் அரைச்சு விக்கிறாங்களாம். சோம்பு, சீரகமெல்லாம் கழுவி, காயவெச்சு அரைக்க நேரம் இல்லாம எல்லாத்தையும் அப்படியே போட்டு அரைக்கிறாங்களாம். போதாதுன்னு திடீர் கோழிக்கறி மசாலா, மீன்கறி மசாலான்னு புதுசுபுதுசா என்னென்னமோ கொண்டுவராங்க. மசாலா கெட்டுப்போகாம இருக்க அதுக்குள்ளே கண்டதையும் சேக்கிறாங்கபோல, அதனாலதான் அடிக்கடி வயித்து வலி வருதுன்னு பக்கத்துவீட்டு ஹலீமா அக்காகூடச் சொன்னாங்க.” இரவு உணவோடு அம்மாவின் விருப்பங்களும் பரிமாறப் பட்டன.

வீட்டுப்பெண்கள் வெளியே போய் வேலை செய்வதை விரும்பாத கணவனிடம் அம்மாவின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன என்பதில் வியப்பில்லையே. வழக்கமாகக் கை கழுவும் பேசினில் அல்லாமல் அன்று அப்பா உண்ட பாத்திரத்திலேயே கை கழுவியதற்குப் பிறகு அம்மா கனவில் கூட அப்படி ஒரு நினைப்பு வராமல் பார்த்துக் கொண்டார்.

பல வருடங்களுக்குப் பிறகு சாமிக்கண்ணுத் தாத்தாவை ஒரு முறை தேக்காவில் உள்ள பலசரக்குக் கடையில் பார்த்தேன். மும்முரமாகத் திடீர் மசாலாத் தூள் பொட்டலங்களை அடுக்கிக்கொண்டிருந்தார். முதுமையின் தளர்ச்சி அப்பட்டமாகத் தெரிந்தது. ஒருகாலத்தில் மாவு மில்லுக்குச் சொந்தக்காரர், இப்போது யாரோ ஒருவருடைய கடையில் எடுபிடியாக வேலை செய்வதைப் பார்க்கக் கடினமாக இருந்தது. கால ஓட்டத்திற்குத் தகுந்தாற்போல் நம்மைத் தயார்படுத்திக் கொள்ளவில்லை என்றால் அரைபடும் மிளகாயைப்போல் நம் வாழ்க்கையும் உருமாறிப்போகும் என்பதை அவர் மூலம் தெரிந்து கொண்டேன். அருகில் சென்று பேசலாம் என்று நினைத்தேன், பிறகு ஒன்றும் தோன்றாதவளாய்த் திரும்பி வந்துவிட்டேன். அதன்பிறகு பலமுறை அந்தக் கடைக்குச் சென்றிருந்தாலும் சாமிக்கண்ணுத் தாத்தாவைப் பார்க்க இயலவில்லை.

இன்று ….

“அஞ்சலை, உடம்பு சரியில்லையா? வேணும்னா ரூம்ல போய்ப் படேன்” பறவையின் சிறகிலிருந்து உதிர்ந்த இறகைப்போல் என்னையுமறியாமல் உறங்கிப்போனதை கணவர் வந்தபிறகுதான் உணர்ந்தேன். சோம்பல் முறித்து எழுந்தேன். கதிரவன் கசிந்து இரவுக்குள்ளே கலந்துவிட்டருந்தான்.

என் வரவுக்காகக் காத்திருந்தன சில இரவுக் கடமைகள் பிறை நிலவின் துணையோடு வேலைகளை முடித்து அறைக்குள் வருவதற்குள் நிம்மிக்குட்டி உறங்கிப் போயிருந்தாள். கணவர் மடித்த துணிகளை அலமாரியில் அடுக்கிக்கொண்டிருந்தார்.

“அஞ்சுக்குட்டி, இன்னைக்குக் கோழிக்குழம்பு சூப்பர்! உங்கம்மா வைக்கற மாதிரியே டேஸ்ட்டா இருந்துச்சு”, காதல் பெருக்கெடுக்கும் தருணங்களில் என்னை “அஞ்சுக்குட்டி” என்று செல்லமாய் கூப்பிடுவது அவரது வழக்கம்.

“நிஜமாவா சொல்றீங்க?” மதியம் நிம்மிக்குட்டி கூறியது நினைவுக்கு வரவே, நம்பிக்கையில்லாமல் அவரை உற்று நோக்கினேன்.

“நிச்சயமா! உங்கம்மா கையால சாப்பிட்ட திருப்தி இருந்தது..” குறை சொன்னால் எங்கே நான் மீண்டும் சமையலறை வெளிநடப்புச் செய்துவிடுவேன் என்ற அச்சத்தில் சொன்னாரா, அல்லது உண்மையைச் சொன்னாரா என்றெல்லாம் ஆராய முடியவில்லை. எப்படி முடியும்? தன்னம்பிக்கைச் சுவை கூட்டி, தாய்மையின் பரிவோடு என்னை அணைத்த கரங்களுக்குள் பனிக்கூழாய்க் கரைந்து கொண்டிருந்தேன்!

அன்று இரவு தூக்கத்தில் அம்மா கோழிக்குழம்பு பிசைந்து நிலாச்சோறு ஊட்டுவதுபோல் கனவு வந்தது.

– நீர்த் திவலைகள் (சிறுகதைகள்), டிசம்பர் 2017, ஆர்யா கிரியேஷன், சிங்கப்பூர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *