கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: September 23, 2012
பார்வையிட்டோர்: 9,917 
 

முடி வெட்டிக்கொள்ள நாற்பது நாள் இடைவெளி என்பது எனக்கு அதிகபட்சம்தான். வெளிநாட்டில் ஒருமுறை முடி வெட்டிக்கொள்கிற செலவு, இங்கே ஒரு வருடத்துக்கு முடி வெட்டிக்கொள்வதற்கு இணையானது என்பதால், சென்ற முறை எனது வெளிநாட்டுப் பயணத்தில் முடி வெட்டிக்கொள்வதைத் தவிர்த்தேன். சென்னைக்கு வந்து சேர்ந்த பின், அத்தியாவசிய வேலைகளின் பட்டியலில் தலைமுடி வெட்டிக்கொள்-வதைத் தலையாயதாக வைத்து, முப்பது ரூபாய் கொடுத்து தலைச்சுமையைக் குறைத்துக்கொண்டேன். ஆசுவாசம் பிறந்தது.

இந்த முறை வெளிநாட்டுப் பயணம் பத்து நாள் இடைவெளியில் நிச்சயிக்கப்பட்டு, துரித கதி என்பதால் விசா, டிக்கெட், கருத்தரங்குக்கான கட்டுரைத் தயாரிப்பு போன்ற அத்தியாவசியப் பட்டியலில் தலைமுடியைக் குறைத்துக்கொள்வது இடம் பெறவில்லை. செலவை மனதிலிருந்து தள்ளி வைத்தேன். வெளிநாட்டில் முடி வெட்டிக் கொள்வது சுவாரஸ்யமான அனுபவம் ஆகலாம்.

‘இண்டியன் சம்மரை’ ஞாபகப்படுத்தும் வெயில் நேரத்தில், முடியைக் குறைத்துக்கொள்கிற தீவிரத்துடன் அறையை விட்டு வெளியே வந்தேன். சலூனைத் தேடிக் கிளம்பினேன். வெளிநாட்டில் வெளியில் தனியாகக் கிளம்பிச் செல்வதென்பது காரணமில்லாத சற்றே பயம் தரும் விஷயமாகவே இருந்தது.

வணிக வளாகங்கள் பலவற்றில் கறுப்புக் கண்ணாடிகளால் சூழப்பட்ட சலூன்களைப் பார்த்திருக்கிறேன். அவற்றுக்கு ஸ்டுடியோ என்று பெயரிடப்பட்டு இருப்பது விநோதமாகத்தான் இருந்தது.

எங்கு செல்வது என்ற யோசிப்பில், ‘ரோசா லக்ஸம்பர்க்’ முனை ஞாபகம் வந்தது. தெருவோரக் கடைகள், இந்திய விடுதியன்றுக்கு எதிராக ‘பொக்கே’ விற்கும் முகச் சுருக்கக் கிழவி, எப்போதாவது சாயந்திரத்தில் கிடார் வாசித்துக்கொண்டு இருப்பவன் (பிச்சையெடுக்கும் பாவனையா?!) ஆகியோர் நினைவில் வந்தார்கள். எனக்கு மிகவும் பிடித்தமான பெண்ணின் பெயரைச் சம்பந்தப்படுத்திக்கொள்ளக்கூட அந்த முனை பயன்படும்.

ரோசா லக்ஸம்பர்க் சிலை எங்காவது இருக்கிறதா என்று நண்பர் கருணாகர மூர்த்தியிடம் கேட்க வேண்டும். லெனின் சிலையைச் சுருட்டி வாரி எறியும் போது, ரோசாவையும் கிள்ளிப்போட்டு வேடிக்கை பார்த்திருப்பார்களோ! பெர்லின் பல்கலைக்கழகத்துக்கு எதிரான நினைவுத் தூண் சதுக்கத்தில் பலர் புகைப்படம் எடுத்துக்கொண்டு இருந்தார்கள். நாஜிக்களின் கொடுமையைக் கண்டிக்கிற நினைவுத் தூணாக அது இருந்தது. சென்ற முறை வந்தபோதே அதன் முன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டுவிட்டேன். அதனால் இம்முறை ஒரு நிமிட மௌன அஞ்சலி போதும் என்று பட்டது.

அந்த வணிக வளாகத்தின் மினுமினுப்பு, பளபளப்பற்ற என் உடையை ஒரு நிமிடம் கழிவிரக்கத்தோடு பார்த்துக் கொள்ளச் செய்தது. கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்ததும், என் கற்பனையிலான பெண் முகம் மலர்ந்து ஹலோ சொன்னாள். கூச்சத்துடன் இடதுவாக்கில் பார்க்க ஆரம்பித்தேன்.

உள் அறையில் தென்பட்ட மூன்று சுழல் நாற்காலிகளில் ஆட்கள் இருந்தனர். நாற்காலிகளுடன் மூன்று பெண்கள் பணியில் இருந்தனர். வெளியில் போடப்பட்டு இருந்த ஐந்து நாற்காலிகளில் இருவர் இருந்தனர். நான் மூன்றாவது நபராக அமர்ந்தேன். கார்டி யன், டைம் பத்திரிகைகள் விரிந்துகிடந்தன. ஓரத்தில் ஈழ முரசு இருந்தது. சட்டென அதை எடுத்தால், என்னை அடையாளப்படுத்திவிடும் என்பதால், சுதாரித்தேன். இந்தப் பகுதியில் கணிசமான அளவில் இலங்கைத் தமிழர்கள் இருக்கிறார்கள் என்று கருணாகர மூர்த்தி சொல்லியிருக்கிறார். என்னை ஒட்டி இருந்தவன் தலையணை அளவு ஆங்கில நாவல் ஒன்றில் மூழ்கி–யிருந்-தான். இடதுபுறம் இருந்தவன் நாற்காலியில் சரிந்து, கண்களை மூடி இருந்தான். கறுப்பனாக நான் தனித்திருந்தேன். வெள்ளைத் தோல் பெண்களிடம் தலைமுடி வெட்டிக்கொள்-தைக் கிளர்ச்சியானதாக மனதில் கொண்டேன்.

சுழல் நாற்காலியில் இருந்த ஒருவனுக்கு ஷாம்பு குளியல் நடந்தது. டிரையரைப் போட்டு உலர்த்தினாள் அவன் அருகே இருந்த பணிப்பெண். அவனின் தலையை முகர்ந்து, கண்களை விரித்து, ஏதோவொரு ஜெர்மன் வார்த்தையை உதிர்த்தாள். வேறு நாற்காலியில் அவனை மாறி உட்காரச் சொல்லிவிட்டு, கத்திரிக்கோலை எடுத்துக்கொண்டாள்.

அவளின் தலைமுடி பொன்னிறமாக இருந்தது. வர்ணமிட்டு மாற்றியிருப்பாள். மற்ற இரண்டு பெண்களின் முடி, சரியாக எண்ணெய் தேய்த்து பராமரிக்கப்படாதது போல ஏகதேசம் வெளிறி இருந்தது. தலைக்கு அடிக்கடி வர்ணம் மாற்றிக்கொள்வார்களோ! புருஷனை மாற்றுகிறபோதெல்லாம் தலைமுடி வர்ணத்தை மாற்றும் ஒரு பெண் பற்றி கருணாகரமூர்த்தி சொல்லியிருக்கிறார். சுவாரஸ்யம் கருதி ஏதாவதொரு வர்ணத்தைத் தலையில் பூசிக்கொள்ளலாமா! ஊருக்குப் போனால் மிரண்டுவிடுவார்கள். கருணாகர மூர்த்தி தரும் விகிதாசாரத் தகவலை அவர்களிடம் சொன்னால், அரண்டுவிடுவார்கள்.

அடுத்த அழைப்பு எனக்கு. ஷாம்பு குளியல் நடத்தி, என் தலையையும் அந்த வெள்ளைத் தோல் பெண் முகர்ந்து பார்ப்பாளா? கறுப்புத் தோல்காரனின் வியர்வை நாற்றத்தைச் சகித்துக்கொள்வாளா? அரையடி தள்ளி நின்றபடிதான் முடிவெட்ட ஆரம்பிப்பாள் என்கிற கற்பனையே திகிலாக இருந்தது. சட்டென எழுந்து போய்விடலாமா என்றிருந்தது.

மூவரில் எந்தப் பெண்ணின் நாற்காலியில் உட்காரும் வாய்ப்பு வரும்? பருத்த உதட்டுக்காரிதான் ஏகதேசம் முடித்திருந்தாள். அவளின் பருத்த உதடு ஆப்பிரிக்கர்களை ஞாபகப்படுத்தியது. இன்னும் சற்றே கறுத்திருந்தால், அவள் இந்தியப் பெண்ணைப் போலவே இருப்பாள். மற்ற இருவரும் சுண்ணாம்பில் சற்றே மஞ்சள் கலந்த வெளிறிய நிறத்தில் இருந்தார்கள். கழுத்திலிருந்து மார்பு வரையிலான இடைவெளி அபரிமிதமாக இருந்தது. மார்பின் பிளவுகள் மெல்லிய கோடாக இருந்தன.

பருத்த உதட்டுக்காரியின் நாற்காலியில் போய் உட்கார்ந்தால், வகை வகையாய் கேள்விகள் கேட்கக்-கூடும். ‘இலங்கைக்காரன்தானே?’ என்பாள். ‘இல்லை. இந்தியன்’ என்று மறுக்க வேண்டியிருக்கும்.

கட்டண விகிதம் என்னவாக இருக்கும் என்பதைப் பற்றிய குறிப்பைத் தேடிப் பார்த்தேன். ஒரு ஆங்கில வார்த்தைகூடத் தென்படவில்லை. கழிப்பறைகளில் வித்தியசம் தெரிய ஆண், பெண் படங்கள் இல்லாமல், ஜெர்மனியில் மட்டும் எழுதப்பட்டு இருந்த விபரீதத்தால், பெண்கள் கழிப்பறை ஒன்றில், நான் பத்து நிமிடம் கழித்துவிட்டு வந்ததைக் கருணாகரமூர்த்தி பலமுறை ஞாபகப்படுத்தி, வாய்விட்டுச் சிரித்திருந்தார். சரி, கட்டணம் எதுவாகவும் இருந்துவிட்டுப் போகட்டும்… தலைமுடி வெட்டுகிற கூலி, நிச்சயம் தலையின் விலையாக இருக்காது என்று திடப்படுத்திக் கொண்டேன்.

இரண்டாம் நாற்காலியில் இருந்தவனுக்குப் பாதி முடிக் குறைப்பு வேலை முடிந்திருந்தது. சட்டென அவன் தலையை உயர்த்தி, அவளை முத்தமிடும் தோரணையில் உதட்டைக் குவித்தான். முடி வெட்டுகிற பெண் கன்னத்தைச் சாய்த்து, அவன் முத்தத்தை ஏற்றுக்கொண்டாள். அவன் மீண்டும் ஒருமுறை சட்டென எம்பி, அவளை முத்தமிட முயன்றான். அவள் கத்திரிக்கோலை நிதானமாக டேஷ்போர்டில் வைத்துவிட்டு, அவனின் முகத்தை இரு கைகளிலும் ஏந்தி, அழுத்தமாக முத்தமிட்டாள்.

இப்படியரு முத்தம் எனக்குக் கிடைக்குமா? அப்படியே கிடைத்தாலும், அது நிச்சயம் இந்த வகையான அழுத்தமான முத்தமாக இருக்குமா? கறுப்புத் தோல்காரன் என்பதை முகச்சுளிப்பிலேயே காட்டிவிடுவாள். சென்ற முறை வந்தபோது, டிபார்ட்மென்ட் ஸ்டோர் ஒன்றில் ஒருவன் மீது என் கைகள் பட்டுவிட்ட தற்காக, ‘கறுப்பன்கள் இன்னும் கறுப்பன்கள்தான்’ என்று ஒருவன் நிறுத்தி, நிதானித்து ஆங்கிலத்தில் சொல்லிக் காண்பித்தான். ‘வெள்ளையர்களுக்கு மட்டும் என்ற பிரத்யேகத் தொனியில் இருக்கும் உணவு விடுதிக்குள் தப்பித் தவறிக் கூட நுழைந்து விடாதே! அவமானப்பட்டுத் திரும்ப வேண்டியிருக்கும்’ என்று கருணாகரமூர்த்தி சொல்லியிருந்தார். நாலு நாட்கள் முன்பு மெட்ரோவில் கிடார் வாசித்துப் பிச்சை எடுத்துக்கொண்டு இருந்த வெள்ளைத் தோல் பெண்ணொருத்தி, நான் நீட்டிய யூரோ நாணயத் தைப் பெற்றுக்கொள்ள மறுத்து, அடுத்தவனிடம் சென்றாள்.

மெள்ள ஒரு பரபரப்பு என்னைத்தொற்றிக்கொள்ள, சுற்றிலும் பார்த்தேன். அடுத்த நாற்காலி காலியானதும், வெள்ளைத் தோல் பெண் என்னைக் கூப்பிடுவாள். இந்தப் பரபரப்பில் அவள் முன் போய் நிற்பதென்பது, அவள் பார்வையில் சாம்பலாக்கிவிடும்.

மெதுவாக எழுந்து வாசல் பக்கம் பார்த்தேன். அறையின் குளுமை உடம்பைச் சட்டென ஜில்லிட வைத்துவிட்டது போலிருந்தது. கறுத்த உதட்டு வெள்ளைத் தோல் பெண், மொஸைக் தரையில் பரவியிருந்த வெட்டப்பட்ட மயிர்க் கற்றையை ஒதுக்கிக்கொண்டு இருந்தாள். இன்னொருத்தி மெல்லிய குரலில் கிசுகிசுத்தபடி, காதோரத்துக் கேசங்களை வெட்டிச் சரிசெய்துகொண்டு இருந்தாள். அவன் அடுத்த முத்தத்துக்காக உதடுகளைக் குவித்துக் காத்திருந்தான். எனக்கு முத்தம் வேண்டாம்; அலட்சியமில்லாத பார்வையாவது கிடைக்குமா?

மெள்ள நகர்ந்து வாசல் கதவுப் பக்கம் வந்துவிட்டேன். ‘ஹலோ’ என்று முதுகில் குரல் கேட்டது. ‘‘ப்ளீஸ் வெயிட்! நெக்ஸ்ட் டேர்ன் யுவர்ஸ்!”

கதவுக் கண்ணாடியில் என் முகம் இருட்டாகியிருந்தது. ‘கறுப்பனுக்கு முடி வெட்டிவிடுவதில் உங்களுக்கு ஆட்சேபணை இல்லையா என்று கேட்காமல் வந்து உட்கார்ந்துவிட்டேன். ஸாரி! நாய் விற்ற காசு குரைக்குமா?’ என்று, எனது ஆங்கிலத்தை அவள் புரிந்து பதில் சொல்கிற விதமாக இல்லாமல், ஒரு மாதிரி ஒப்பித்துவிட்டு, வெளியே வந்தேன். ஜெர்மனியில் என் மீது ஏதாவது வசவை உதிர்த்திருப்பாள்.

வாகனங்களின் மிதமான இரைச்சல் ஆறுதலாக இருந்தது. சென்னையில், மிகக் குறைந்த செலவில் தலைமுடியைக் குறைத்துக் கொள்கிற சுகானுபவம் கற்பனையில்கூட வந்தது.

– 31st அக்டோபர் 2007

Print Friendly, PDF & Email

1 thought on “நிறம்

  1. வெளி நாட்டில் கருப்பு வெள்ளை பிரச்சனை…சில வருடங்களுக்கு முன் ஹைதுராபாத்தின் சார்மினார் பகுதியில் ஒரு கடையில் நல்ல சிறுகதை என் நினைவரையை தட்டிய சிறுகதை.டீ கடைக்கு போய் பல நிமிடங்கள் உட்கார்ந்து இருந்தேன்..யாரும் வந்து கேட்கவில்லை.பக்கத்து மேஜைக்கு ஒரு இஸ்லாமிய குடும்பம் வந்து உட்கார்ந்தது..அவர்களிடம் ஆர்டர் எடுக்கப்பட்டு அத்தனை பேருக்கும் சப்ளை முடிந்தும் என்னிடம் ஆர்டர் எடுக்க யாரும் வரவில்லை…
    கிட்டத்தட்ட அரை மணி நேரம் காத்திருந்த பின்தான் அந்த கடையின் பெயர் எனக்கு உரைத்து….அஜ்மீர் டீ பேலஸ் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *