நாவலுக்கான 23 குறிப்புகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: January 13, 2014
பார்வையிட்டோர்: 12,460 
 

1. ஒரு ஊர் எனில் அதற்கு பல எல்லைகள் இருப்பது வாஸ்தவமான விஷயம் தான். இதில் ஆச்சர்யப்பட எதுவும் இல்லை. எனக்கோ நான் தற்காலிகமாக வசிக்கும் ஊரில் இரண்டு எல்லைகள் மட்டுமே தெரியும். தற்காலிகமாக நான் வசிப்பது கோயமுத்தூரில். ஒரு எல்லை பாலக்காடு வழியில் இருக்கும் கோயமுத்தூரின் எல்லை. முதலில் இதனைப் பார்ப்போம். அந்த எல்லையில் தான் தமிழகத்தின் மதிப்பிற்குரிய பல்கலைகழகம் ஒன்று இருக்கிறது. அதற்கான நிறுத்தத்திலேயே இறங்கிச் செல்லக்கூடிய பொறியியல் கல்லூரியும் ஒன்று இருக்கிறது. அந்தக் கல்லூரியில் சமீபத்தில் ஒரு பிரச்சினையும் அரங்கேறியது. அஃதாவது சில மாதங்களுக்கு முன் விஜய் என்னும் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவன் சாப்பிட மெஸ்ஸிற்க்கு சென்றிருக்கிறான். அப்போது முதலாமாண்டு மாணவன் ஒருவன் இவனை அடிப்பது போல பாவ்லா காட்டியிருக்கிறான். முதலாமாண்டு மாணவன் இவ்வளவு துடுக்குடன் இருந்தால் சீனியர் என்பதற்கு பங்கம் வந்துவிடுகிறதே என்னும் தார்மீகமான கோபத்தில் பலார் என ஒன்றினைக் கன்னத்தில் விட்டுவிட்டான். அதனை மனதில் சிலர் வைத்துக் கொண்டனர். தீவிரமாக அவனைக் கண்காணித்து வந்தனர். பாதிக்கப்பட்டவனின் நண்பர்கள் தான் இவ்வனைத்தினையும் செய்தது. ஒரு நாள் அவன் அறையில் யாரும் இல்லாத போது , அஃதாவது அவனைத் தவிர யாரும் இல்லாத போது நுழைந்து கத்தியால் கீறி ஓடிவிட்டனர். இரத்தம் வழிந்திருக்கிறது. உடனே ஒட்டு மொத்த சீனியர்கள் தங்கும் விடுதிக்கும் செய்தி பரவி நாங்கள் அனைவரும் குழுமிவிட்டோம். விஷயம் யாதெனில் பிரச்சினை என்ன என யாருக்கும் தெரியாது! யார் அடித்தது என்பதும் யாருக்கும் தெரியாது! குழு மட்டும் கூடியாயிற்று. சிலர் அந்த முதலாமாண்டு மாணவனை வெளியே அழைக்குமாறு கூச்சலிட்டுகொண்டிருந்தனர். வார்டன்கள் நால்வரும் இந்தக் கூட்டத்தினைக் கண்டு எங்கு அந்த மாணவனை வெளியே அழைத்தால் அவனை அடித்தே கொன்று விடுவார்களோ என்னும் பயத்தில் வெளியே பத்து நிமிடத்தில் கொண்டு வருகிறோம் என சமாதானம் செய்து கொண்டிருந்தனர். யாருக்கும் இங்கே கோபம் அடங்கவில்லை. கூச்சலினை நால்வர் ஆரம்பித்தனர் எனில் கொஞ்சம் கொஞ்சமாகப் பரவியது. நாலு எட்டு பதினாறு ஒரு பக்கக் குழு பின் மற்ற திசைகளிலிருந்து சத்தம் என டெசிபெல் இன்ஃபெர்னோவினை உருவாக்கியது. சத்தத்தினாலேயே வார்டன்களுக்குப் பயம் அதிகமானது. எங்கு கதவினை உடைத்துவிடுவார்களோ என்று. உடனே வாயிலோனே வாயிலோனே என விளித்து, ஒல்லி தேகத்தில் விருமாண்டி மீசையும் கண் சிகிச்சை செய்தவர்கள் அணியும் கண்ணாடியினை அணிந்திருந்தவரும் மேலே வந்து முதலாமாண்டு மாணவர்கள் தங்கும் விடுதியின் பிரதான கதவினை அடைத்துப் பூட்டினர். கதவினைத் திறக்க அடுத்த கட்ட கோஷங்கள் ஆரம்பித்தது. இதற்கிடையே மேலே முதலாமாண்டு மாணவர்கள் கட்டிடத்திற்குள்ளேயே கூட்டம் போட ஆரம்பித்தனர். மேலே எப்படி கல் சென்றது என்று தெரியவில்லை. கண்ணாடிகளின் வழியாகக் கீழே குழுமி இருந்த சீனியர்களின் மீது கற்களை எறிய ஆரம்பித்தனர். கோபத்தில் இவர்கள் எறிய ஆரம்பித்தவுடன் கண்ணாடிகள் உடைய ஆரம்பித்தது. மேலேயிருந்து கற்கள் வர வர இவர்களின் கோபம் அதிகமாகிக் கூட்டத்தின் பலம் இன்னமும் அதிகரிக்கத் தொடங்கியது. அனைவரும் வார்டன்களை முந்தியடித்துக் கொண்டுக் கதவினைத் திறக்க முயன்றனர். இடையில் ஒரு குரல் – போலீஸ கூப்பிட தான் இவங்க பத்து நிமிஷம் பத்து நிமிஷம்னு சொல்றாங்க கதவத் திறடா __________ என கேட்க அனைவரையும் தள்ளிக் கொண்டு கூட்டம் கதவினை உடைத்தது. தடுக்க ஆளில்லை. உள்ளே சென்றவுடன் கண்ணில் பட்ட அனைத்து கண்ணாடிகளும் கைகளால் உடைக்கப்பட்டது. கண்களில் பட்ட அனைத்து முதலாமாண்டு மாணவர்களும் அடிக்கப்பட்டார்கள். யாரென்றே தெரியாமல் சிலரின் கைகள் வதைகளைச் செய்து கொண்டிருந்தது. அவர்களின் கதறல்கள் காதுகளின் வழியே கேட்கப்பட்டாலும் கைகள் கண்மண் தெரியாமல் அடித்தது. தரையினைக் கண்ணாடித் துண்டுகளும் இரத்தமும் கோலம் போட்டுக் கொண்டிருந்தது.

2. இது நடக்கும் அதே நேரத்தில் தான் எனக்கானத் தனிப்பட்டப் பிரச்சினையும் நடந்து கொண்டிருந்தது. அது என்ன எனில் அதனைச் சற்று விரிவாக சொல்ல வேண்டும். நான் ஒன்றரை ஆண்டுகளாக எழுதி வருகிறேன் என ஊருக்கு சொல்லிக் கொண்டிருப்பதால் முட்டாள் வாசகனான உனக்கும் அதனையே சொல்கிறேன். இந்த ஒன்றரை ஆண்டுகளில் எனது கட்டுரைகளுக்கு மட்டுமே வெளி கிடைத்திருக்கிறது. முதலில் கூகிள் கொடுத்தது பின் நானே எடுத்துக் கொண்டேன். ஆனால் என் புனைவுகள் ? கற்பனைகளுக்கு அனைத்து வித ஊடகங்களும் தடையே விதித்தது. நான் எதையும் பிசகாக சொல்லவில்லை. இருந்தாலும் காரணத்தினை அறிய ஆசைப்படுகிறேன். சொல்வதற்குத் தான் ஆளில்லை. சிலரின் பதில் உனது கதைகளை கட்டுரைகளுக்கான வெளியிலேயே வெளியிடலாமே என. இது என்ன கிறுக்குத்தனமான வார்த்தை. எனக்கான வெளி இணையதளத்தின் மூலம் நான் எடுத்துக் கொண்டு அதனை நானே சென்று பார்த்துக் கொண்டிருக்கிறேன். என்னைத் தவிர அதனை பார்ப்பதற்குக் கூட யாருமில்லை. அதில் என் கதைகளை வெளியிட்டால் ? எழுத்தாளனும் நானே வாசகனும் நானே என்னும் விதத்தில் தான் இருக்க வேண்டும்!!!

3. முற்பிறவிப் பிறபிறவி என்பதை ஒருமனதாக ஏற்றுக் கொண்டு சிறு வாதத்தினை முன்வைக்க விரும்புகிறேன். ஆங்கிலத்தில் நான் சொல்லப்போகும் விஷயம் எப்போதோ படமாக வந்துவிட்டது. நம் வாழ்க்கை முற்பிறவியில் ஆரம்பித்துப் பிற்பிறவியில் நீட்சியினைக் கொள்கிறது. சற்று மாற்றிப் பிற்பிறவியில் ஆரம்பித்தால் ? இப்போது பிறப்பாக இருக்கும் இடம் அங்கே இறப்பாகத் தானே இருக்கும் ? இது ஏன் அறிவியலின் தொடக்கமாக இருக்கக் கூடாது ? என் ஆராய்ச்சியில் ஒத்துழைப்பவர்கள் அல்லது ஒத்துழைக்க ஆசைப்படுபவர்கள் இப்போதே அருகிலிருக்கும் மருத்துவமனைக்கு சென்று பிறந்த குழந்தையினை மடியினில் எடுத்து வைத்துக் கொண்டு, அதன் மூக்கினை ஆட்டி ஆட்டி இன்னிக்கி தான்டா செல்லம் நீ செத்திருக்க என சொல்லுங்கள் பார்ப்போம்!!!!

4. கோயமுத்தூரின் ஒருக்கோடிப் பிரச்சினை இது என்றால் சரியாக அதற்கு எதிர்க்கோடியில் நடப்பது இன்னமும் வித்தியாசமானது. எந்த ஒரு கல்லூரியும் விடுதியில் தங்கிப் படிப்பவர்கள் வீட்டிலிருந்து வந்து படிப்பவர்களை விடுதிக்குக் கூட்டி வருவது சாப்பாடு வாங்கித் தருவது போன்ற செயல்களைத் தடை செய்கிறது. இங்கே சரவணன் என்னும் பையன் அதைச் செய்துவிட்டான். அது வார்டனுக்கு தெரிந்தும் விட்டது. கண்டபடி அம்மா அப்பா தாத்தா பாட்டி பாட்டன் முப்பாட்டன் என்று அனைவரையும் இழுத்துத் திட்டியிருக்கிறார். விஷயம் கல்லூரிக்கும் தெரியபட்டுவிட்டதால் அவனுக்கு ஒரு வாரகாலம் சஸ்பென்ஷன். அவனுக்கு அப்போது தான் பிரச்சினையே ஆரம்பிக்கிறது. அப்பா கிடையாது. அம்மாவோ பயங்கர ஸ்டிரிக்ட்! எப்படி அம்மாவிடம் சொல்லாமல் ஒரு வார காலம் ஓட்டுவது என்று தெரியாமல் குழப்பத்தில் சிறுமுயற்சியாகத் தொங்கிவிட்டான். இதனை முழுதாக அறிந்த நண்பன் அனைவரிடமும் சொல்ல கல்லூரி அல்லோலப் பட்டுவிட்டது. மாணவர்கள் கல்லூரி வளாகத்தினுள் நுழைந்துக் கண்ணாடிகள் அனைத்தினையும் அடித்து நொறுக்கிவிட்டனர். போலீஸ் வந்தது. உடனே ஒருவன் கண்ணாடியினால் கையினை அறுத்துக் கொண்டு நேரே மீடியாவிடம் போலீஸ் தான் அடித்தது என சொல்லிவிட்டான். போலீஸ் ஒதுங்கிக் கொண்டனர்.

5. பாலக்காடு கோடியில் பிரச்சினை நடந்த அந்த வார ஞாயிற்றுக் கிழமை வேறு ஒரு பிரச்சினையும் நடந்தது. அந்த இரவு போலீஸ் அனைவரும் வந்து சமாதானம் செய்து சென்றுவிட்டனர். இருந்தும் ஞாயிற்றுக்கிழமை அன்று அந்தக் கல்லூரியின் தலைவர் முதல்வர் அடியாட்களுடன் சீனியர் விடுதிக்குள் நுழைந்து கண்ணில் படும் அனைவரையும் அடித்து நொறுக்கி தர தரவென இழுத்துச் சென்று, அருகிலிருந்த கேம்பஸில் வைத்து ஒன்றரை மணி நேரம் அடித்து, மட்டுமில்லாமல் விடுதியிலிருந்து வெளியே அனுப்பி இருக்கின்றனர்.

6. திங்கள் செவ்வாய் புதன் போலவே என் பிறந்தநாளும் கழிந்தது. காலையில் ஐந்து நிமிடம் நடந்த மிட்டாய் வாணிபம்! ஏழரை மணிநேரக் கல்லூரியில் என்னுடன் என் அத்யந்த நண்பர்கள் பேசிய நேரம் ஐந்து நிமிடம்! என் ஆன்மாவின் பசியினை போக்குவதற்கு ஒரு பிம்பமும் தயாராக இல்லை. தனிமையின் புணர்ச்சியில் சிரிக்கும் பற்களுக்கு பின்னே கதறி அழுதுகொண்டிருக்கிறேன். அதன் வலியினை என்னால் தாங்க முடியவில்லை. அன்றே இறந்திருக்கக்கூடாதோ எனதரும ஆன்மாவே. இப்போது ஏதேதோ வன்முறைகளைப் போட்டுப் புசித்துக் கொண்டிருக்கிறாய். நினைவுகளும் உன்னை கொஞ்சம் கொஞ்சமாக அழுக வைக்கிறது.

7. என்றோ ஒருமுறைப் பார்த்தப் பதிப்பகத்தாரிடம் என் நாவலினை பதிப்பிக்க வாய்ப்பினைக் கேட்டேன். மேலும் இந்தப் பதிப்பகத்தாரர்களுக்காக தான் எழுபது பக்கங்களுக்குள் அடங்குவது போல ஒரு நாவலினையும் எழுதினேன். ஆனால் அவர் சொன்ன பதில் உன் நாவலால் என் பதிப்பகத்திற்கு ஜாதி ரீதியானப் பிரச்சினைகள் எழலாம். அதனால் என்னை மன்னித்துவிட்டுங்கள் என்பதே. எதய்யா ஜாதி ரீதியானப் பிரச்சினை ? உன்னைச் சுற்றி ஜாதி மத பேத ரீதியானப் பிரச்சினை நடக்கிறது என வைத்துக் கொள்வோம். அதிலிருந்து தப்பிக்க நினைக்கிறாய். அப்படியெனில் அந்த திடலிலிருந்து போவது மட்டுமே தப்பித்தல் என்பதாகுமா ? அந்த விஷயங்களை உன் நினைவுகள் அசைபோடாதா ? உனக்கான அதிகார வெளியில் நீ உனக்காக எதிர்ப்பதன் மூலம் மட்டுமே ஒரு வதையிலிருந்து வெளிவர முடியும். அதைத் தான் நான் நாவலாக எழுதியிருக்கிறேன் இதில் எங்கிருக்கிறது ஜாதிப்பிரச்சினை. மேலும் என் ஜாதியினைத் தான் நான் எழுதியிருக்கிறேன். அவர்களின் மொழியில் அவதூறாக. அதற்கு என்னை ஜாதிப்பிரஷ்டம் செய்தாலும் சிரம் தாழ்த்துகிறேன்.

8. அடுத்த நாள் விடுதி மாணவர்களுக்கு ஒரு கூட்டம் நடந்தது. அங்கு முதல்வர் பேசியது – if you touch my assets I know how to make you into pieces.

9. பிற்பிறவியும் இலக்கியமும் ஒன்று என யாருக்காவது தெரியுமா ? இந்தப் பிறவியில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். நான் எழுத்தாளனாக நீ வாசகனாக. அடுத்தப் பிறவியில் நான் என்னவாக இருப்பேன் என எனக்கும் தெரியாது உனக்கும் தெரியாது. ஆனால் பிறவி மட்டும் உண்டு. நான் இருப்பேன். அதே போல் தான் இலக்கியத்தில் நான் என்பது இருக்கிறது அந்த நான் யாரைக் குறிக்கிறது என்பது தான் யாருக்கும் தெரியாத விஷயம். உண்மையில் இந்த பிரதியினை நான் தான் எழுதியிருக்க வேண்டுமா ?

10. எனக்கு அப்போது கிடைத்த நண்பர் தான் ஈஸ்வரன். அவரிடம் தினம் வேண்டிக் கொண்டிருந்தேன். எனக்கு ஒரு பதிப்பகத்தார் வேண்டும் எனக்கு ஒரு பதிப்பகத்தார் வேண்டும் என. அவரும் இரண்டு மூன்று பதிப்பகத்தாரினை எனக்குக் காட்டினார். அவர்களில் சிலர் வேறு வேலையில் இருந்தனர். சிலர் பணக்காரப் பதிப்பகமாக இருந்தனர், சிலர் என்னை அழைக்கவேயில்லை. தினம் நான் ஈஸ்வரனிடம் மட்டும் பிரார்த்தனைகளை தொடர்ந்து கொண்டிருந்தேன்.

11. தூக்கில் தொங்கியதற்கு யார் காரணமாக இருப்பார்கள் ? வார்டனைப் பொறுத்தவரை வீட்டிலிலிருந்து வந்து படிக்கும் மாணவர், யாரை இவன் விடுதிக்கு அழைத்து வந்தானோ அவன். மாணவர்களை பொறுத்தவரை அசிங்கமாகத் திட்டிய வார்டன். என்னைப் பொறுத்தவரை அவனுடைய அம்மா. ஆனால் அவனைப் பொறுத்தவரை ? யாரிடம் கேட்பது என்று தெரியவில்லை.

12. என் தோழி ஒருத்தி. அவள் மூன்று ஆண்டுகளாக காதல் கோதாவில் இருப்பவள். அவளுடைய காதலன் என்ன செய்தான் எனத் தெரியவில்லை அவர்கள் இருவருக்கும் பிரிவு ஏற்பட்டுவிட்டது. அதனை என்னிடம் சொல்லிப் புலம்பிக் கொண்டிருக்கும் போது நான் என் நாவல் வெளிவராததன் சோகத்தில் திளைத்திருந்தேன். அவளும் வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தாள். எனக்கோ ஒன்றுமே கேட்கவில்லை. அதனை அவள் உணர்ந்த போது என்னிடம் சண்டை போட ஆரம்பித்தாள். அதில் அவள் பிரதானமாக வைத்தக் குற்றச் சாட்டு நீ உன் உணர்ச்சிகளை கதையில் எழுதுகிறாய் நிஜ வாழ்வில் ஜடமாக இருக்கிறாய். உண்மையில் உன் கதைகள் அனைத்தும் an emotional shit.

13. அதிகாரத்தினை உடைத்தல் என்பது எந்த ஜென்மத்திலும் நிகழ்த்த முடியாத அற்புதம். பாருங்கள் அதிகாரம் உடைத்தல் எனும் போதே யாரோ பெயர் தெரியாத அன்பரின் கதறல் என் காதுகளில் கேட்டுக் கொண்டிருக்கிறது.

14. ஏதோ பித்த நிலையில் இருக்கிறேன். அடுத்த வாரம் எனக்குப் பிறந்த நாள். என் வீட்டில் உனக்கு என்ன வேண்டும் கேள் வாங்கித் தருகிறேன் என்கின்றனர். என் நினைவுகள் நாவலினைத் தாண்டி எங்கும் செல்ல மறுக்கிறது. எதுவும் வேண்டாம் என நிராகரித்து வந்து கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு பதிப்பகத்தின் பின்னாலும் எழுத்தாளானோ கவிஞனோ இருக்கிறார்கள். அவர்களிடம் சென்று ஏன் ஆரம்பித்தீர்கள் எனக் கேட்டால் எனக்குப் பதிப்பிட இடம் கிடைக்கவில்லை அதே கவலை இளைய சமுதாயத்திற்கு வரக்கூடாது என்பதால் எனச் சொல்கிறார்கள். என்னைப் பார்த்தால் எப்படி இருக்கிறது என்று மட்டும் கேட்கத் தோன்றுகிறது. அவர்கள் அனைவரும் எனதரும தேனடைகள்! தேவில் ஆரம்பிக்கும் வேறு வார்த்தை எழுதத் தோன்றியது – சென்சார் கட்!

15. இன்று இரண்டு முறை அழைத்துவிட்டேன் என் அழைப்பினை, என் வேண்டுதலைத் துண்டித்துவிட்டார் ஈஸ்வரன். கற்பூரம் கூட நான் வழிபடும் போது பல முறை அணைந்துவிட்டது.

16. உங்களை நான் அவமரியாதைச் செய்கிறேன் என நீங்கள் என்னைப் பார்த்து சொல்லலாம். ஏனெனில் எண்பத்தி எட்டு வயது இலக்கிய உபாசகன் இக்கதையினை வாசித்துக் கொண்டிருக்கலாம். நானோ வாசகனை அவன் இவன் நீ என விளித்திருக்கிறேன். என்ன செய்ய எனக்கு அதிகாரம் செய்ய ஆசையாக இருக்கிறது. என்னைப் பார்த்தோ ஒருவரும் பயப்பட மறுக்கிறார்கள். அதே என் பிரதி எனில் நான் வைப்பது தான் சட்டம். நீ வாசி கிழி கக்கூசில் உபயோகம் செய் பைத்தியக்காரனின் எழுத்து எனத் துவேஷம் செய் சித்த சுவாதீனமற்ற நிலையில் சொல்லப்பட்ட கதைகளையெல்லாம் கோர்த்த ஒரு வாந்தி செய்தித்துணுக்குகளின் புனைவாக்கப்பட்டக் கதை திருட்டு. . .என்ன வேண்டுமென்றாலும் செய்துக் கொள் இங்கு நானே ராஜா நானே மந்திரி நீ வாசகன் வாசகன் வாசகன் வாசகன் வாசகன் வாசகன் வாசகன் வாசகன் வாசகன் வாசகன் வாசகன் வாசகன் வாசகன் வாசகன் வாசகன் வாசகன் வாசகன் வாசகன் வாசகன் வாசகன்

17. நண்பனின் இரகசிய டைரியினைப் புரட்டிய போது அதில் அவன் எழுதியிருந்த விஷயம் – திருடப்பட்ட என் நாவலின் குறிப்புகள் இந்நேரம் பல சிறுகதைகளாக எழுதப்பட்டுக் கொண்டிருக்கலாம். அவனுக்கான என் ஒரே வேண்டுகோள் அதிகார மையத்தினை எப்படியாவது உடைத்துவிடு. வாசகனைச் சிறையில் தள்ளாதே!

18. பிறந்த நாளின் முந்தைய இரவு தூங்குவதற்கு முன் எப்போதும் போல் இசையினைக் கேட்டுத் தூங்கலாம் என்று கேட்டுக் கொண்டிருந்தேன். குழலூதிடும் பொழுது ஆடிடும் குழைகள் போலவே மனது வேதனை மிகவொடு என்னும் வரிகளைக் கேட்கும் போது என் கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது. குறுந்தகவல்களோ பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்லிக் கொண்டிருந்தது. யாரிடம் போய் என் வேதனைகளை சொல்ல ? ஏன் எனக்கு இன்னமும் ஒரு உயிர் தேவையாக இருக்கிறது ? எனக்கிருக்கும் ஒரு உயிரினை வைத்து மட்டும் வாழ எனக்கு ஏன் கற்றுத் தரவில்லை ?

19. என் அப்பாவின் மீதும் எனக்கு அதீத கோபம் இருக்கிறது. ஏன் அவர் அதிகம் சம்பாதிக்கவில்லை ? இங்கு தன் மகனின் இலக்கியம் உடுத்த உடையின்றி பலரின் கண்களால் கற்பழிக்கப்பட்டு வருகிறது. உடைக்கு பணம் கேட்கின்றனர். அதனை கொடுக்கக் கூட இயலாத போது அப்பா என்ன ஒரு மனிதனாகக் கூட அவன் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டான். ஒன்றே ஒன்று சொல்லிக் கொள்கிறேன் பிரதி மட்டுமே இவ்வுலக வாழ்வின் நிதர்சனமான ஒன்று. பிறந்தாலும் இறந்தாலும் பிறப்பு முதல் இறப்பு வரையிலும் தபால் போஸ்டர் மின்னஞ்சல் என அனைத்திலும் மனிதனின் வாழ்க்கைப் பிரதியாகிறது. உயிருள்ள பொருள் பிரதியாகிறதெனில் பிரதிக்கும் உயிருண்டுதானே ? இதனை நீ ஒப்புக் கொண்டால் நீயும் சில பிரதிகளை கண்களால் இதுவரை கற்பழித்திருக்கிறாய் என்பது தான் அர்த்தம்.

20. எனக்கு வந்தக் குறுந்தகவல்களில் ஒன்று ஏதோ ஒரு பாட்டினைச் சொல்லி இது என்ன ராகம் எனக் கேட்டது.

21. வாசகா இந்நாவலினை எப்படி வாசிக்கப் போகிறாய் ? தலைப்பிலிருந்து ஆரம்பிக்கப்போகிறாயா ? கதையிலிருந்து ஆரம்பிக்கப்போகிறாயா ? இக்குறிப்புகளினை நாவலாக்கப் போகிறாயா ? குறிப்புகளே கதை என கொள்ளப்போகிறாயா ? இவனின் பிறந்த நாளினை அடுத்தவர்கள் கொண்டாடவில்லை எனும் சோகத்தில் இவனின் நினைவுகள் சென்ற பைத்தியக்கார நிலையினை அப்படியே பிரதியாக்கியிருக்கிறான் எனக் கதையினை அர்த்தம் கொள்ளப்போகிறாயா ? அல்லது எந்த பத்தியில் இருக்கும் நான் யாருக்கானது என ஆய்வு செய்யப்போகிறாயா ? இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் கிடைக்குமா என்பது சந்தேகத்திற்குரியது. ஆனால் ஒரே ஒரு விண்ணப்பம் இந்த எழுத்துகளை பிரதியிலிருந்து நிச்சயம் விடுவிக்க முடியாது. முடிந்தால் முயன்று பார்.

22. பாவம் என் தோழிக்கு இலக்கியத்தில் shitற்கு இருக்கும் அருமை பெருமையினைப் பற்றித் தெரியவில்லை. Shit எனில் பீ. பாருங்கள் முகம் சுழிக்கிறீர்கள். அதே நான் மலம் என எழுதியிருந்தால் அதனைப் பொருளாக பாவித்திருப்பீர்கள். இது தான் இலக்கியத்தின் பலம். பீ அசிங்கமாகிறது மலம் புனிதமாகிறது. நான் எழுதுவதை நீங்கள் இலக்கியம் என நினைத்தால் என்னைப் பொருத்தவரை அது ஒரு divine shit. தோழிக்கு இதனை அடுத்த முறை நேரில் பார்க்கும் போது சொல்லலாம் என்றிருக்கிறேன்.

23. அந்தப் பாடலை கேட்பதற்கு முன் நண்பனொருவனிடம் புலம்பிக் கொண்டிருந்தேன். அவன் ஆறுதலாக சொன்ன வார்த்தைகள் தோல்வி என்ன உனக்கு புதிதா ? இது கூடத் தோல்வியில் முடியலாம். வலியினை அனுபவித்துக் கொண்டே தான் நான் எழுதுகிறேன். உங்களால் அதனை உணர முடிகிறதா என்று தான் தெரியவில்லை.

24. கடைசி குறிப்பு – இதில் ஏதோ ஒரு பத்தி மட்டுமே நான் எழுதியது.

– 2013 சாரு நிவேதிதா விமர்சகர் வட்ட சிறுகதை போட்டியில் வெற்றி கொண்ட சிறுகதை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *