தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 13,214 
 

என் கையில் இருந்த அந்த காகிதத்தையே உற்றுப் பார்த்தேன். என் கண்கள் காண்பது பொய்யில்லையே; இது கனவில்லையே…
அந்த காகிதம் போலவே, என் உள்ளமும் படபடத்தது. நிமிர்ந்து என் கணவரை பார்த்தேன். கண்களில் கண்ணீர் பெருகி, என் பார்வையை மறைத்தது. மனம் பின்னோக்கிச் சென்றது.
தனியார் பள்ளியில், பதினோறு ஆண்டுகள் ஆங்கில ஆசிரியையாகப் பணிபுரிந்த நான், அரசு வேலை கிடைத்ததால், வல்லூர் என்ற கிராமத்திற்குச் சென்றேன்.
மதுரை மாநகரை பார்த்துப் பழகிய எனக்கு, இந்த வல்லூர் கிராமத்தைப் பார்த்ததுமே, “சப்’பென்று ஆகிவிட்டது.
முதலில் இந்த கிராமம், எங்கிருக்கிறது என்று கண்டுபிடிக்கவே, நானும், என் கணவரும் படாதபாடுபட்டு விட்டோம். எத்தனை அலைச்சல்?
நல்லாசிரியைவல்லூர் கிராமம், ஈரோடு மாவட்டத்தில் உள்ள சிறுகிராமம். கிட்டதட்ட 150 வீடுகள் இருக்கும். எல்லாமே ஓட்டு வீடுகள் தான். சீலிங் போட்டால் குடும்பத்திற்கு ஆகாது என்று ஒரு நம்பிக்கை. எனவே, கிராமத் தலைவரின் வீடும், ஓட்டு வீடுதான். அந்த வீட்டின் ஒரு பகுதியை, நான் தங்குவதற்காக ஒதுக்கிக் கொடுத்தனர்.
நான் ஒருத்தி தான், அந்த ஊரிலேயே தங்கி, வேலை பார்க்க வந்தவள். மற்ற ஆசிரியர்கள் அனைவரும், வேறு ஊர்களில் இருந்து வருபவர்கள். தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் வேலை பார்த்ததால், கால நேரத்தைச் சரியாகப் பின்பற்றி, காலை 9:20 மணிக்கெல்லாம் பள்ளியில் இருந்தேன்.
முதல் நாள், நான் கண்ட காட்சியே எனக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. நான் வரும் முன், பிள்ளைகள் வந்திருந்தனர். அந்த பள்ளி மைதானத்தையும், வகுப்பறையையும் அவர்களே சுத்தம் செய்து கொண்டிருந்தனர்.
ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வகுப்புப் பிள்ளைகள் என்ற முறையில், பள்ளியை சுத்தம் செய்கின்றனர். ஒரு தளத்திற்கு, இரண்டு பேர் வீதம், சுத்தம் செய்யும் துப்புறவு பணியாளர்களைக் கொண்ட, நான் வேலை பார்த்த பழைய பள்ளி, என் கண்முன் வந்து போனது.
அலுவலகம் என எழுதப்பட்டிருந்த அந்த அறை, பூட்டியிருந்தது. சற்று நேரம், வெளியே போடப்பட்டிருந்த பெஞ்சில் அமர்ந்து, மாணவர்கள் சுத்தம் செய்வதை வேடிக்கை பார்த்தேன். பத்து மணிக்கு மேல் தான், அந்தப் பள்ளியில் வேலைபார்ப்பவர்கள் ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர்.
அந்தப் பள்ளியின், “இன்சார்ஜ்’ என அழைக்கப்பட்டவர் வந்து, என் அரசாங்க ஆர்டர்களைச் சரிபார்த்தார்.
பின், “டீச்சர்… உங்களுக்கு ஆறாவது, ஏழாவது, எட்டாவது, ஒம்பதாவது, பத்தாவது கிளாசுக்கு இங்கிலீஷ் பாடம் கொடுத்திருக் கேன்…’ என்று, என் டைம் டேபிளை நீட்டினார்.
என்னை அழைத்துச் சென்று, மற்ற ஆசிரியர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்; பார்மாலிட்டிக்காக அவர்களும் புன்னகையோடு வாழ்த்துக் கூறினர்.
பின், என்னை ஒரு வகுப்பிற்கு அழைத்துச் சென்றார்.
அவரை பார்த்ததும், மாணவர்கள் அனைவரும் மரியாதை நிமித்தமாக எழுந்து நின்றனர்.
“”பசங்களா… இவங்க புதுசா வந்திருக்கிற இங்கிலீஷ் டீச்சர். இனி இவங்கதான், உங்களுக்கு இங்கிலீஷ் சொல்லித் தருவாங்க…” என்று அறிமுகப்படுத்த, “வணக்கம் டீச்சர்…’ என்று அனைவரும் கோரசாக பாடினர்.
“”குட்மார்னிங் மேம்…” என்று கேட்டுப் பழகிய எனக்கு, இவர்களது வணக்கம் வித்தியாசமாக இருந்தது.
“”சரிங்க டீச்சர்… நீங்க பாடம் நடத்த ஆரம்பிங்க…” என்று சொல்லி விட்டு நகர்ந்தார் அவர்.
பின், நான் மாணவர்களைப் பார்த்து புன்னகைத்தேன்.
“”ஐயாம் லதா… யுவர் இங்கிலீஷ் டீச்சர்… ஐயாம் வெரி ஹேப்பி டூ சீ யூ… நவ் யூ இன்ட்ரடியூஸ் யுவர்செல்ப்…” என்று நான் கூற, ஒருவர் முகத்திலும் ஈயாடவில்லை. எல்லாரும் என்னை ஏதோ, வேற்று கிரகவாசியைப் பார்ப்பது போல் பார்த்தனர்.
எனக்கு சற்று நேரம் ஒன்றும் புரியவில்லை. “ஏன் இப்படி விழிக்கின்றனர்?’ என்று யோசித்தேன். ஒரு தைரியசாலி பையன் எழுந்து, “”டீச்சர் நீங்க தஸ்சு, புஸ்சுன்னு பேசறது ஒண்ணுமே புரியலீங்க டீச்சர்…. தமிழ்ல சொல்லுங்க டீச்சர்…” என்ற பின், எனக்கு உறைத்தது; தமிழில் கூறினேன். அனைவரும் எழுந்து, தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு அமர்ந்தனர்.
மெல்ல அவர்களிடம் இலக்கணத்தைப் பற்றிக் கேட்டேன்.
“”பிரசன்ட் டென்சை… பாஸ்ட்டென்சாக மாற்றத் தெரியுமா?”
“”ஈசி டீச்சர்… பிரசன்டென்ஸ் கூட, ஒரு ஈடி சேர்த்தா, பாஸ்ட்டென்சா மாறிடும்…”
நான் அதிர்ந்து போனேன்.
“”யார் இப்படிச் சொன்னது?”
“”முன்னாடி இருந்த டீச்சர்”
நான் அடுத்த கேள்வியைக் கேட்டேன்.
“”சப்ஜெக்ட், வெர்ப், ஆப்ஜெக்ட் பற்றித் தெரியுமா?”
என்னென்ன தெரிந்து வைத்திருக்கின்றனர் என்பதற்காக கேட்கப்பட்ட கேள்வி அது.
“”அட… எஸ், வீ,ஓ தானே டீச்சர்… முதல்ல வர்றது எஸ், அடுத்து வர்ற வார்த்தை வீ, அடுத்தது ஓ…” என, ஒரு மாணவன் சொல்ல, தலையில் அடித்துக் கொள்ளலாம் போல் இருந்தது.
இப்படி எல்லாம் கூட பாடம் நடத்துவார்களா? இப்படிக் கற்றுக் கொடுத்தால், இவர்களுக்கு ஆங்கிலத்தைப் பற்றிய அறிவு எப்படி வளரும்?
முழுக்க முழுக்க ஆங்கிலத்திலேயே பேச வேண்டும் என்ற கட்டாயத்தில் இயங்கிய, தனியார் பள்ளியில் வேலை பார்த்த எனக்கு, இங்கே ஆங்கிலப் பாடத்தைக் கூட தமிழில் நடத்த வேண்டிய நிலைமை.
ஏகப்பட்ட தடுமாற்றம் எனக்குள்ளே.
அந்த மாணவர்கள் தேசியகீதம் பாடும்போது, கேட்க சகிக்காது. “நிறுத்துங்கள்’ என்று கத்த வேண்டும் போல் இருக்கும். ஒரே வாரத்தில் எனக்கு எல்லாமே வெறுத்து விட்டது.
என் கணவர் பாலு, தனியார் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியர். போனிலேயே என் ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தேன்.
அந்த வார இறுதியிலேயே அவர் வல்லூர் வந்துவிட்டார். முகம் மலர வரவேற்றேன்.
வந்தவர் என்னைப் பார்த்து, மளமளவென இந்தியில் பேச ஆரம்பித்தார்.
என் கணவருக்கு இந்தி, மலையாளம், தெலுங்கு என, பல மொழிகள் தெரியும்.
“”ஹலோ… ஹலோ… என்ன இந்தியிலேயே பேசறீங்க. எனக்கு இந்தி தெரியாதுங்கிறது, இந்த ஒரு வாரப் பிரிவிலேயே மறந்து போச்சா… இன்னும் கொஞ்ச நாள் ஆனா, என்னையே மறந்துடுவீங்க போலிருக்கு…”
“”அட… உனக்கு இந்தி கூடத் தெரியாதா…பெருசா டீச்சரா வேலை பார்க்கற?” என்று அவர் கேட்கவும், எனக்குப் கோபம் வந்து விட்டது.
“”இந்திங்கறது ஒரு மொழி. அவ்வளவு தான். அது தெரியாததால், நான் எந்தவிதத்திலும் தாழ்ந்தவளில்லை. ஒரு சிறந்த ஆங்கில ஆசிரியராய் இருக்க எல்லாத் தகுதியும் எனக்கிருக்கு,” என, “சுள்’ ளென்று படபடத்தேன்.
“”உன்னைப் போலத்தானே இந்த கிராமத்து மாணவர்களும்… ஆங்கிலம் தெரியாததால், அவர்களும் தாழ்ந்து விடவில்லை. அவர்களிடமும் தனித் திறமைகள் ஒளிந்திருக்கும். சரியான வழிகாட்டுதல் இல்லாததால், இவர்கள் இப்படி இருக்கின்றனர்.
“”நீதான் நாகரிகமான நகர்ப்புறப் பள்ளியில், வசதியாய் வேலை பார்த்துவிட்டு, இப்போது இந்த சூழ்நிலைக்கேற்ப, உன்னை மாற்றிக் கொள்ள முடியாமல், தடுமாறுகிறாய்…” என்றவர் சற்றுநேரம் அமைதியாக இருந்தார்.
எனக்குப் புரிய ஆரம்பித்தது. நான் யோசனையாய் இருக்க, அவரே தொடர்ந்தார்…
“”இதோ பாரம்மா… உன்னால் நிச்சயம், இந்த மாணவர்களை மாற்ற முடியும். முதலில் மாணவர்களை புரிந்துகொள். இலக்கணத்தை எளிமைப்படுத்து. அவர்களுக்குப் புரியும்படி சொல்லிக்கொடு. அவர்களின் பழக்கவழக்கத்தை மாற்ற முயற்சி செய். இந்த ஆசிரியர் பணியை, நீ எவ்வளவு விருப்பத்தோடு தேர்வு செய்தாய் என்பது எனக்குத் தெரியும்.
“”எனவே, நீ முயற்சி செய்தால், நிச்சயம் முடியும். உன் பழைய பள்ளியில், பத்தாம் வகுப்பில் முழுத்தேர்ச்சியும், அதிக அளவு சென்டமும் காட்டியிருக்கிறாய்… ஆனால், அதுவல்ல உண்மையான சாதனை. இதோ கல்வி நிலையில் பின்தங்கியிருக்கும், இவர்களை முன்னேற்றி காட்டு; அதுதான் உண்மையான சாதனை…” அவர் சொல்வது, சரி என்றே பட்டது எனக்கு. “ஆமாம்…’ என்பது போல தலையசைத்தேன்.
“”சாதனையென்பது, புகழில் இல்லை; பொருளில் இல்லை; பெயரில் இல்லை. நம்மால் முடிந்தவரை, மற்றோர் முகத்தில் வற்றாத மகிழ்ச்சியையும், குன்றாத வளர்ச்சியையும் பொருத்திப் பார்க்கும் கருணைதான், காலம் கடந்தும், வாழும், வளமான சாதனை, நிறைவான போதனை என்று, “ஏழாவது அறிவு’ புத்தகத்தில், இறையன்பு குறிப்பிட்டிருப்பார். நீயும் இந்தக் குழந்தைகளிடத்தில் கருணை செய்…”
என் கணவர் பேசப்பேச, என்னுள்ளே ஒரு வேகம் உருவானது.
“இதை ஏன் சவாலாக ஏற்று செய்யக்கூடாது?’ என்று மனம் சிந்தித்தது…
முடிவெடுத்தேன்.
முதல் வேலையாய் மாணவர்களுக்கு தேசிய கீதம் பாடக் கற்றுக் கொடுத்தேன். இரண்டே நாட்களில், அழகிய ராகத்தோடு பாடிக் காட்டினர்.
ஒழுக்கத்தை, காலம் தவறாமையை, மரியாதையை கற்பித்தேன். உடனே பின்பற்றினர். என்னுள் நம்பிக்கை ஒளி பிறந்தது. முயற்சிகள் ஆரம்பமானது. இலக்கணத்தை எளிமைப்படுத்தினேன். அவர்களின் தரத்திற்கேற்ப, புரியும்படி, பாடம் நடத்தினேன். நானே ஆச்சரியப்படும் வகையில், கல்வியில் முன்னேற்றம் நிகழ்ந்தது.
நாட்கள் செல்லச் செல்ல, என்னை காணும் மாணவர்களின் விழிகளில், அன்பு கலந்த மரியாதை கூடுவது புரிந்தது.
ஊர் பெரியவர்களிடம் நன்கொடை வசூலித்தும், என் சேமிப்புப் பணத்தைப் போட்டும், நல்ல புத்தகங்களை வாங்கி வந்து, ஒரு சிறு லைப்ரரி ஆரம்பித்தேன். புத்தகம் படிக்கும் ஆர்வத்தை தூண்டினேன்.
என் கணவர் சொன்னதற்காக ஆரம்பித்த எனக்கு, நாட்கள் செல்லச் செல்ல என்னையும் அறியாமல், அதில் ஒரு ஈடுபாடு ஏற்பட்டது. குழந்தைகளின் ஒழுக்கத்திலும், படிப்பிலும் வளர்ச்சியைக் கண்ட பெற்றோர், உள்ளம் உருகி என்னைப் பாராட்டியபோது, ஊக்க போனஸ் கொடுத்தது போல் இருந்தது.
அதிலும் ஒரு தாய், “டீச்சரம்மா… எம்புள்ள, தொர கணக்கா இங்கிலீசு பேசறானுங்க… என்ன மாயந்தாயி செஞ்ச… பசங்க எங்கிட்டப் பொட்டிப் பாம்பா அடங்கிப் புடரானுங்க… மருவாதியா நடந்துக்கிறாங்க…’ என்றபோது, பெருமையாய் தான் இருந்தது.
“எல்லாம் அன்புதான்…’ என்று புன்னகைத்துவிட்டு நகர்ந்தேன்.
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக, பள்ளி நேரம் முடிந்த பின், கணிதத்திற்கும், ஆங்கிலத்திற்கும் தனியாக சிறப்பு வகுப்புகள் நடத்தினேன். க்ரூப் ஸ்டடி ஆரம்பித்து, நானே உடனிருந்து கண்காணித்தேன். சந்தேகங்களை தெளிய வைத்தேன்.
அந்த கிராமத்திலேயே தங்கியிருந்ததால், நேரம் காலம் பார்க்காமல், மாணவர்களைப் படிக்க வைக்க முடிந்தது. மாணவர்களின் ஆர்வமும் என்னை ஊக்கப்படுத்தியது.
இன்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள். எனக்கு அதிகாலை நான்கு மணிக்கே விழிப்பு வந்து விட்டது. நான் தனியார் பள்ளியில் வேலை பார்த்தபோது, தேர்வு முடிவுகள் வெளியாகும் நாட்களில், பரபரப்பாக இருப்பேன். ஆனால், இன்றைய பரபரப்பு, ஏதோ நானே தேர்வு எழுதி, முடிவுக்காகக் காத்திருப்பது போன்ற, பிரமையை ஏற்படுத்தியது.
முடிவுகள் வெளியானது. எம்பள்ளி, 100 சதவீதம் தேர்ச்சி பெற்றிருந்தது. இது நான் எதிர்ப்பார்த்தது தான். ஆனால், நான் எதிர்ப்பார்க்காத ஒன்றும் நடந்தது.
ஆண்டு விடுமுறை என்பதால், நான் மதுரையில் இருந்தேன்.
தேர்வு முடிவுகளை நெட்டில் ஆராய்ந்துவிட்டு, என் கணவர், அந்த செய்தியைக் கூற, மலைத்துப் போனேன்.
என் மாணவி புவனா, மாநிலத்திலேயே முதலாவதாகத் தேர்ச்சி பெற்றிருந்தாள்.
புவனா போனில் என்னிடம் பேசினாள்.
“”மேம்… புவனா பேசறேன்…” சந்தோஷத்தில் அவளுக்கு வார்த்தை தடுமாறுவது புரிந்தது.
“”வாழ்த்துகள் புவனா… இப்பத்தான் எனக்கு நியூஸ் கிடைச்சது. ரொம்ப பெருமையா இருக்கும்மா உன்னை நினைத்தால்…” என்றேன்.
“”மேம்… ஸ்கூல் பர்ஸ்ட் வருவேன்னு நினைச்சேன் மேம்… ஆனா, ஸ்டேட் பர்ஸ்ட். நான் எதிர்ப்பார்க்கவே இல்லை… எல்லாம் உங்களால் தான். எனக்கு உங்களைப் பார்க்கணும் போல இருக்கு மேம்…” அவள் குரல் குழைந்து நெகிழ்ந்தது.
“”எனக்கும் தாம்மா… நாளைக்கு நான் அங்க வர்றேன்…”
“”வேண்டாம் மேம். தெய்வம் பக்தர்களைத் தேடி வரக்கூடாது. பக்தர்கள் தான் தெய்வத்தைத் தேடி வரணும்,” என்றவள், சொன்னது போலவே வந்தாள். அவளுடன் பத்திரிகை, மீடியா ஆட்களும் வந்திருந்தனர்.
“”மேடம் இப்படி ஒரு ஸ்கூல் இருக்கறது கூட நிறைய பேருக்குத் தெரியாது. ஆனா, அப்படிப்பட்ட பள்ளியில் படித்த மாணவி புவனா, மாநிலத்திலேயே முதலாவதாக வந்திருக்கிறார். அவரிடம், “இது எப்படி சாத்தியம்?’ என்று கேட்டதற்கு, ஒரே வார்த்தையில்,”லதா மேம்’ என்றார்…
“”ஏனோதானோ என்று இயங்கிக் கொண்டிருந்த பள்ளியை, உலகமே திரும்பிப் பார்க்கும்படி செய்து விட்டீர்களே… எப்படி முடிந்தது உங்களால்?” என்று பத்திரிகைக்காரர்கள் கேள்வி எழுப்ப, நானும் ஒரே வரியில், “”என் கணவர் என்று…” பதில் சொன்னேன்.
இதோ அத்தனை உழைப்பிற்கும் பலன். கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகி, என் பார்வையை மறைத்தது. நிமிர்ந்து என் கணவரைப் பார்த்தேன். என் கையிலிருந்த அந்த காகிதம் படபடத்தது.
என் கைகளை இறுகப்பற்றிக் குலுக்கியவர், “”உண்மையான உழைப்பிற்கு, நிச்சயம் பலன் உண்டு என்பதை, நிரூபித்து விட்டாய். அரசாங்கமே உன் உழைப்பைப் பாராட்டி, இந்த வருட, “நல்லாசிரியர்’ விருது கொடுத்திருக்கிறது. எத்தனை பெரிய கவுரவம் உனக்கு,” என்று பாராட்ட, பேச வார்த்தைகள் எழாமல், கண்ணீர் வழிய, நான், தலையை மட்டும் ஆட்டினேன்.

– கே.சசிரேகா (நவம்பர் 2012)

வயது: 35
கல்வித்தகுதி: பி.ஏ.,
பணி: ஓவியப் பயிற்சி ஆசிரியர்
தன்னுடைய இருபதாவது வயது முதல் சிறுகதைகள் எழுதி வருகிறார். இவரது பல சிறுகதைகள், பல்வேறு இதழ்களில் வெளியாகியுள்ளன. டி.வி.ஆர்., நினைவு சிறுகதை போட்டியில், ஆறுதல் பரிசு பெற்றது இதுவே முதல் முறை. இச்சிறுகதை போட்டியில் முதல் பரிசு பெறுவதே தன் லட்சியம் என்கிறார்.

Print Friendly, PDF & Email

1 thought on “நல்லாசிரியை

  1. சரியான ஆசிரியர்கள் இருக்கும் சமுதாயம்., நல்ல நிலையை அடையும்., வாழ்க வளமுடன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *