கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: January 3, 2023
பார்வையிட்டோர்: 5,598 
 

1

‘பூர்வ ஜென்மம் பற்றிய செய்திகளை விஞ்ஞானம் அப்பட்டமாக மறுக்கிறது. ஆனால், சிலருக்கு ஏற்படும் அனுபவங்களைப் பார்க்கும்போது, விஞ்ஞானம் என்ன பெரிய விஞ்ஞானம் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

கல்லூரி சுற்றுலாவில் கலந்துகொண்ட ஒரு பெண், சுற்றுலா செல்லும் வழியில் ஒரு கிராமத்துக்குள் இருக்கும் ஏரி, கிணறு, கோயில் இவைகளைப் பற்றித் துல்லியமாக தகவல் தந்தாள். அந்தக் கிராமத்துக்குள் அப்பொழுதுதான் அவள் நுழையப் போகிறாள்.

முன்னதாக அருகில் இருந்து பார்த்தது போல அவள் தந்த தகவல்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தின. அது எப்படி சாத்தியம் என்று கேட்டபோது கிடைத்த விடையில்தான் பூர்வ ஜென்மம் என்கிற மர்மமான விஷயம் ஒளிந்திருந்தது!’

***

அது ஒரு அழகிய படகு கார்! ஆப்பிள் நிறத்தில் காற்றைக் கிழித்தபடி பயணித்துக்கொண்டிருந்தது. காரின் ‘டிரைவிங் சீட்’டில் சந்திரசேகர் என்கிற பிரபல தொழிலதிபர். அவருக்கு இடப் பக்கத்தில் உயிர் நண்பரான ராம்நாத்.

இருவருமே ஐம்பது வயதைத் தாண்டப் போகிறார்கள். அதற்கு அடையாளமாக காதோரமாக கிருதாவில் மட்டும் நரை. செல்வந்தர்கள் என்பதால் விரல்களில் விதம் விதமான மோதிரங்கள்.

சந்திரசேகர் கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட தொழில் புரிபவர். ஆனாலும் ஆன்மிகத்திலும், நம் நாட்டு பண்பாடு கலாச்சாரத்திலும் அசைக்க முடியாத நம்பிக்கைகளை உடையவர். அதனாலேயே அவர் நெற்றியில் எப்போதும் ஒரு விபூதிப்பட்டையும், கழுத்தில் ஒற்றை ருத்திராட்சம் கட்டிய மாலையும் இருக்கும்.

காரின் ‘டேஸ்போர்டில்’ ஒரு மினி சிவலிங்கம். அதன் முன் ஒரு சீரியல் பல்பு நிரந்தரமாக எரிந்தபடி! அடிக்கடி அந்தச் சிவலிங்கத்தைப் பார்த்து கன்னத்தைத் தொட்டுக்கொண்டேதான் கார் ஓட்டினார் சந்திரசேகர்.

அவரின் அந்தச் செய்கை ராம்நாத்துக்குச் சிரிப்பைத்தான் வரவழைத்தது. அதற்காக பெரிதாக இல்லாமல், அமட்டலாக சிரித்துக்கொண்டார். அப்படியே சந்திரசேகரைப் பார்த்து, “சந்திரா… கொஞ்சம் கூட மாறாம அப்படியே இருக்கியேடா…?” என்று ஒரு விமர்சனமும் செய்தார்.

“நீ என்ன சொல்றே… மாறிகிட்டே இருக்கணுங்கறியா?”

சந்திரசேகரும் லாவகமாக கார் ஓட்டியபடி புன்னகை மாறாமல் எதிர்கேள்வி கேட்டார்.

“நான் உன் பக்தியைச் சொன்னேன், சின்ன வயசுல பள்ளிக்கூடம் போகும்போது வழியில் மொட்டைப் பிள்ளையார் கோயிலைப் பார்த்தா கன்னத்துல போட்டுக்குவே. இப்ப காருக்குள்ள ஒரு லிங்கத்தை வெச்சு அதைப் பார்த்து கன்னத்தில் போட்டுக்கறே.. மொத்தத்துல எப்ப பார் கன்னத்துவ போட்டுக்கறே. அதுல நீ மாறவேயில்லை. அதைத்தான் சொன்னேன்” என்றார்.

“பக்திதாண்டா என்னோட சக்தி. இது தெரியாதா உனக்கு?”

“பக்தியை ஒரு சக்தியா நினைக்கிற அளவுக்கு நீ வந்துட்டியா?”

“முட்டாள்… உடம்புக்கு உணவால் சக்தின்னா, மனசுக்கு நினைவாலதான் சக்தி வருது. அந்த நினைவு பக்தி நினைப்பா இருந்துட்டா பக்தியே சக்தியாயிடுதுடா. இது தெரியாதா உனக்கு?”

“ஆமா… நீ எதுக்கு சும்ப்யூட்டர் தொழில் பண்றே.. பேசாம உபன்யாசம் பண்ணப் போயிடேன்”

“அப்படியும் ஒரு யோசனை இருக்குடா. அறுபது வயசு வரைதான் இந்தத் தொழில் சம்பாத்தியம் எல்லாம்.. அப்புறம் எல்லாத்தையும் தூக்கி தூரப் போட்டுட்டு முழு வீச்சா ஆன்மீகத்துல இறங்கிடப்போறேன்”

சந்திரசேகா குரலில் பளிச்சென்று ஒரு தீர்மானம். ராம்நாத் இதற்கும் சிரித்துக்கொண்டார்.

கார் நெல்லை மாவட்ட விளிம்பில் உள்ள அம்பாசமுத்திரம் கடந்து பாபநாசம் அருவிச்சாலையில் சிட்டாகப் பறந்தபடி, இருந்தது.

“சரி… இப்ப நாம் எங்க போய்கிட்டு இருக்கோம். எதுக்கு என்னை அவசரமா கிளம்பி வரச்சொன்னே…?”

“பார்த்தா தெரியலை… நாம இப்ப காரையார் போய் அப்படியே அங்கே இருந்து படகுல பாணதீர்த்தம் அருவிப் பக்கம் போகப் போறோம்”.

“இப்ப எதுக்குடா அங்கே?”

“எல்லாம் காரணமாத்தான்! பாணதீர்த்தம் அருவிகிட்ட ஒரு சாமியார் இருக்கார். நாடி பார்த்து பலன் சொல்றதுல பெரிய கில்லாடி அவர்.”

“அப்ப ஜோசியம் பார்க்கத்தான் இந்தப் பயணமா?”

“ஆமாம்… ஒரு புதுத் தொழில் பண்ணுற வாய்ப்பு. ஆனா, அதுல இறங்க பயமா இருக்கு. ஏன்னா, அதைப் பண்ணின யாரும் நல்லா இல்லை”.

“தப்பா பண்ணிருக்கான், அடி மேல் அடி வாங்கி இருப்பான்”.

“அதுதான் இல்லை.. அந்தத் தொழில் எவ்லாரும் செய்ய முடியாது. திருடறதுக்குக்கூட ஒரு திறமை வேணும், அதான் இன்றைய உலகம்.”

“சரி… தொழில் பண்ணனும்னா அது சம்பந்தமான திறமைசாலிகளைக் கலந்து பேசு. நீ என்னடான்னா நாடி ஜோசியம் அது இதுன்னு பார்த்துகிட்டு…”

“நான் புதுத் தொழில் பண்ணுவேனா.. மாட்டேனான்னு நாடி ஜோசியத்துவ தகவல் இருக்குமே?”

“ஜோசியத்துல தகவலா?”

“ஆமாண்டா… முனிவர்களோட நாடி ஜோசியம்னா என்னன்னு நினைச்சே?”

“டேய்… உனக்கு மறைகிரை கழண்டு போச்சா?”

“ராம்நாத்… பேசாம கூட வா! நடக்கறதை கவனி. அப்ப தெரியும் உனக்கு.”

“ஏண்டா, உனக்கு ஜோசியம் பார்க்க ஆசை இருந்தா, நீ மட்டும் போக வேண்டியதுதானே. இதுல எல்லாம் நம்பிக்கை இல்லாத நான் எதுக்குடா?”

“நீ சும்மா என்கூட பேச்சு துணைக்கு.. நாம போகப் போறது ஒரு பயங்கரமான காட்டுக்குள்ள. எனக்குத் தனியா போக தைரியமில்லைன்னு வெச்சுக்கையேன்.”

“அதுக்கு உன் கார் டிரைவர், வேலைக்காரன்னு எவ்வளவோ பேர் இருக்க, என்னை எதுக்குடா இழுத்துகிட்டு வந்தே?”

“என்னமோ தெரியலை… உன்கூட நிறைய பேசணும். ஒரு ரெண்டு நாளாவது ‘பிசினஸ் டென்ஷன்’ இல்லாம் ஜாலியா, அந்த நாட்கள்ல நாம திரிஞ்சது போல திரியணும்னுல்லாம் தோணிச்சு. அதான் உன்னை இழுத்துக்கிட்டு வந்தேன்.”

சந்திரசேகர் குரலில் நட்பு வழிந்தது. அது ராம்நாத்தைக் சுட்டிப் போட்டுவிட்டது. இவருக்கும் அந்த மலைப் பகுதியில் காரில் பயணிப்பது இன்பமான அனுபவமான இருந்தது.

வெளியே பார்த்தால், பொதிகை மலையின ஒரு பகுதி அது. சிங்கவால் குரங்குகளின் நடமாட்டம் தெரிந்தது. ஜிவ்வென்று காற்று முகத்தில் வந்து அறைந்தது. அப்படியே ஒரு பிரமாண் நீர் வெளியாக காரையார் மலை நீர்த் தேக்கமும், அதன் ஒரு கூரைப் பக்கத்தில் ஏராளமான படகுகளும் கண்ணில்பட்டன.

சந்திரசேகர் காரை மரத்தடியில் நிறுத்தி அதை ‘ரிமோட் லாக்’ செய்தார். பளபளப்பான கோட்சூட்டில் இருவரையும் பார்ப்பவர்கள் நிச்சயம் இப்படியொரு கம்பீரமா என்று பெருமூச்சு விடுவார்கள். இருவரிடமும் அப்படி மிடுக்கு, சற்று காத்திருந்து ஒரு படகில் ஏறினர். அது பின்புறமாய் நீரைக் கடைந்தபடி சீறத் தொடங்கியது.

படகுக்குள்…

“ஏண்டா… இந்த நாடி ஜோசியரை நீ எப்படிக் கண்டுபிடிச்சே?”

“அது ஒரு கதை ராம்நாதா, என் ‘பிசினஸ் பிரெண்ட்’ ராஜாமணிதான் இவர் பத்தி சொன்னவர். முதல்ல நான் ஒண்ணும் பெரிசா எடுத்துக்கலை. அப்புறம் பார்த்தா மனுஷன் என்ன சொல்றாரோ அப்படியேதான் நடந்தது… நடக்க நடக்க நம்பிக்கை வந்துச்சுன்னு வைய்யேன்,”

“எது நடக்குமோ அதைச் சொல்லி உன்னைக் கவுத்துட்டான்னு நினைக்கிறேன்,”

ராம்நாத் கிண்டலாகச் சொன்ன பதிலால் சந்திரசேகர் முகத்தில் சற்று அளவான கோபம்.

“ராமநாத்… நீ நினைக்கிற மாதிரி லாட்ஜில் அறை போட்டு இல்லாததையும், பொல்லாததையும் சொல்ற ஜோசியர் இல்ல அவர் நிஜமாலுமே பெரிய கால ஞானிடா.”

“ஞானியோ, கீனியோ… உன்னால எனக்கு ஒருநாள் வீண். இருந்தாலும் இந்த காரையார் அணையும், இந்தத் தண்ணியும் ஒரு புது உற்சாகத்தை எனக்குத் தருது.”

ராம்நாத் அப்படிச் சொன்னபோது, அவருக்கு சில அடி தூரத்தில் – தண்ணீர் பரப்புக்கு மேல் ஒரு முதலை வந்து வாயை லேசாகத் திறந்து காட்டி விட்டுத் திரும்பவும் தண்ணீரின் அடிப்பகுதி நோக்கி சரியத் தொடங்கியது.

ராம்நாத் அக்காட்சியால் கிட்டத்தட்ட உறைந்துவிட்டார்!

2

அந்தப் பெண் கூறிய தகவல்களைக் கண்டு ஆச்சரியப்பட்டவர்கள்- அவளுக்கும், அந்த ஊருக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருக்க வேண்டும் என்றுதான் யூகித்தார்கள். அதற்கு ஏற்ப அவளின் முகஜாடையில் வயதான பெண்மணி ஒருத்தி அங்கே இருந்ததுதான் ஆச்சரியம்.

அந்தப் பெண்ணும்கூட தன்னையும் அறியாமல், மூதாட்டியைத் தேடிச் சென்றது அதைவிட ஆச்சரியமாகும்!

***

ஹோவென்று அருவி பாயும் சப்தம். படகு பாணதீர்த்தக் கரையில் ஒதுங்கி நின்றது. ராம்நாத்தும், சந்திரசேகரும் இறங்கிக்கொண்டனர். “சார் நான் சாயந்தரமா வந்து காத்திருக்கட்டுமா?” என்று படகுக்காரர் கேட்க, சந்திரசேகரும் ஆமோதித்தார்.

“டேய்… என்னடா நாம திரும்பறதுக்கு சாயந்தரம் ஆயிடுமா?” ராம்நாத் சற்று அதிர்ந்தார்.

“ஆமாம் ராம்நாத்… நாம் இங்கே இருந்து காட்டுக்குள்ள ரொம்ப தூரம் நடத்து போக வேண்டியது இருக்கு, அடுத்து நாம பார்க்சு வந்துருக்கறது ஒரு சாமியாரை….அவர் நிஷ்டையில இருந்தா, காத்திருந்துதான் நாடி பார்க்க முடியும். எவ்வளவு நேரமாகும்னு திட்டவட்டமா சொல்ல முடியாது.”

சந்திரசேகர் நடந்தபடியே பேசப் பேச, ராம்நாத்துக்கு எரிச்சலாகக்கூட வந்தது.

“என்னடா நீ.. எவ்வளவு வேலைகளைப் போட்டுட்டு நான் வந்திருக்கேன் தெரியுமா?”

‘பிளீஸ் ராம்நாத் எனக்காக சகிச்சிக்கோ. நான் உன்கிட்டதான் மனசுவிட்டுப் பேச முடியும்.”

“சரி அப்படி நீ மனசுவிட்டுப் பேசற அளவுக்கு உனக்கு என்னடா பிரச்சினை?”

“என்னத்தடா சொல்ல… வெளிய யாராவது கேட்டா சொல்லிடாதே. என் மனைவிக்குக்கூட தெரியாது. எனக்கு அடிக்கடி வயித்து வலி வரும். டாக்டர்கிட்ட போய் காட்டினேன். ‘ஸ்கேன்’ பண்ணச் சொன்னார். சரின்னு பண்ணினேன். பார்த்தா வயித்துல கட்டி,”

“அதனால என்ன… ஆபரேஷன் பண்ணி எடுத்துட வேண்டியதுதானே?”

“அங்கதான் சிக்கலே… எனக்கு சர்க்கரை வியாதியும் இருக்கறதால் நிறைய தயக்கம்.”

“இன்னிக்கு இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை சந்திரா… நம்ம மருத்துவ உலகம் பயங்கரமா வளர்ந்துடுச்சு. கவலைப்படாதே. வயித்துவலி குணமாயிடும். ஆமா… அதுக்கும், நாடிஜோசியத்துக்கும் ஏதாவது சம்மந்தம் இருக்கா?”

“பொதுவாக நாடிங்கறது நம்ம வாழ்க்கையில் நடக்கற நல்லது கெட்டது எல்லாத்தையும் புட்டுபுட்டு வச்சிடும். நிச்சயமா நாடிஜோசியத்துல என் வயித்து வலி என்னாகும். அப்புறம் என் ஆயுள்காலம் எவ்வளவுன்னு எல்லாமே தெரிய வந்துரும்னுதான் நான் நினைக்கிறேன்.”

“என்னடா… டாக்டரைப் பார்த்து ஆபரேஷன் பண்ண வேண்டிய நீ, இப்படி காட்டுக்குன்ன யாரோ ஒரு சாமியாரைப் போய் பார்த்து ஆலோசனை கேட்கப் போறியே… இதை எந்த அளவுக்கு முற்போக்கா எடுத்துக்கறதுன்னு எனக்குத் தெரியலை..”

அந்த அருவிக்கரை பக்கம் அடர்ந்த காட்டுக்குள் ராம்நாத்தும், சந்திரசேகரும் ஒரு ஒற்றையடிப் பாதை வழியாக கவனமாகப் பார்த்து நடந்தபடியே இருந்தனர். அருவி பாயும் சப்தமும் மெல்ல தேய்ந்து அவர்கள் பாணதீர்த்த காட்டுக்குள் உள்ளடங்கிவிட்டதைச் சொல்லாமல் சொல்லிற்று.

வழியில் சில இடங்களில் புலிகள் நடமாடிய சான்றாக அதன் காலடித் தடங்கள் தெரிந்தது சற்று கிலி மூட்டியது. அப்போது சந்திரசேகர் தன் கோட் பாக்கெட்டுக்குன் இருந்து துப்பாக்கியை எடுத்து பிடித்துக்கொண்டார்.

“சரிதான்… ஒருவித முன்னேற்பாட்டோடதான் வந்திருக்கேன்னு சொல்,”

“ஆமாம்… இந்தக் காடு ஒண்ணும் லேசானது இல்ல.”

“ஆமா, இங்க எப்படி அந்தச் சாமியாராவ வாழ முடியுது ?”

“அவர் வல நகரம்தான் நரகம், காடு அவருக்கு ஒரு தேன் கூடு.பாரேன்… எவ்வளவு அமைதி! இங்கே இருக்கற காத்துலே அபரிமிதமான ஆக்சிஜன். கார்பன் புகை, பெட்ரோல் வாடை, தாசு துப்புன்னு மனசையும், உடம்பையும் கெடுக்கற விஷயங்கள் கிடையாது. எவ்வளவு ஜில்லுன்னு இருக்கு பாரு”.

“உண்மைதான். மலைகள்வதான் இப்ப ஏதோ கொஞ்சம் தூய்மை இருக்கு. ஆனா இங்கே உன்னையும், என்னையும் மாதிரி ஆட்கள் வர ஆரம்பிச்சிட்டோமே. இனி இந்த மலைக்காடு உருப்பட்ட மாதிரிதான்.”

ராம்நாத் கிண்டலாகச் சலித்துக்கொண்டார்.

அதேவேளை அந்தச் சாமியாரின் குடிசை, ஒரு பச்சை சரிவில் பளிச்சென்று கண்ணில்பட்டது.

சாமியார் இடுப்பில் ஒரு துண்டுதான் கட்டி இருந்தார்.

கீரைக்கட்டு போல எதையோ அவர் தீட்டியபடி இருக்க, சில கஸ்தூரிமான்கள் தலை சரித்து அதை உண்டபடி இருந்தன.

காணக்கிடைக்காத காட்சி!

“வணக்கம் சாமி..”

சந்திரசேகர் குரல் கொடுக்கவும் திரும்பிப் பார்த்தார்.

“நல்லா இருக்கிங்களா சாமி?”

“எனக்கென்ன அப்பனே குறை… ஆமா, இவர் யார்”

“இவனா… இவன் பேர் ராம்நாத் என் உயிர் நண்பன்.”

“நல்லது… வாங்க உள்ளே போலாம்.”

அவர் அவர்கள் இருவரையும் குடிசைக்குள் அழைத்துச் சென்றார் சாமியார். உள்ளே ஒரே மூலிகை வாசம், குடிசை கூரையில் தேன் குடுவைகளும், சட்டி-குடுவைகளும், ஈட்டி- பானைகளும் தொங்கிக்கொண்டிருந்தன. மர அலமாரிகளில் நிறைய பனை ஓலை ஏட்டுக் கட்டுகளும் கண்ணில்பட்டன.

குடிசை நடுவில் ஒரு கோரைப்பாய் விரிக்கப்பட்டிருந்தது. அதில் தேவதாரு மரத்தின் இரு பலகைகள் போடப்பட்டிருந்தன

“உக்காருங்க…” சாமியார் கையைக் காட்டி பலகையில் உட்காரச் சொன்னார்.

பேண்ட்- கோட்டுடன் அமர சிரமமாக இருந்தாலும் சமானித்து இருவருமே அமர்ந்தனர். அவர்கன் எதிரில் சாமியாரும் உட்கார்ந்தார்.

அவரது முகத்தில் ஒரு இனம் புரியாத கருணை. தாடியில் கொக்குச் சிறகு போல வெண்மை. உதட்டுச் சேர்க்கையில் சதா ஒட்டியிருக்கும் கனிவான சிரிப்பு.

“சாமி… நான் எதுக்கு வந்துருக்கேன்னா…”

சந்திரசேகர் ஆரம்பிக்கும் முன்- சாமியார் கையை உயர்த்தி- தனக்குத் தெரியும் என்கிற மாதிரி பாவனை செய்தார்.

“ராஜாமணி எல்லா விஷயமும் சொன்னார். வயித்துல ஏதோ கட்டியாமே?”

“ஆமாம் சாமி… அதை ஆபரேஷன் பண்ணி எடுக்கணுமனு டாக்டர் சொல்லிட்டார். சர்க்கரை நோய் வேற ஆபரேஷன் பண்ணினா வெற்றி கிடைக்குமான்னு தெரியணும். ஏன்னா, என் குடும்பத்துல ஆபரேஷன்னு நடந்த யாருமே அதன் பிறகு ஆரோக்கியமா வாழ்ந்ததில்லை. கொஞ்ச நாள்லயே இறந்து போயிடறாங்க.”

மூச்சுவிடாமல் பேசினார் சந்திரசேகர்.

“கவலைய விடுங்க. எப்ப இங்கே வர உங்களுக்கு விதி இருக்கோ, அப்ப நீங்க நல்லா இருந்தே தீரணும். எங்கே… உங்க இடக்கை பெருவிரலைக் காட்டுங்க பார்ப்போம்.”

சந்திரசேகரும் காட்டினார்.

அதைப் பார்த்துவிட்டு- சாமியார் எழுந்து சென்றார். ராமநாத்துக்கு எல்லாமே வேடிக்கையாக இருந்தது. “சந்திரசேகர்… இப்ப இந்தச் சாமியார் உனக்கு ஜோசியம் சொல்லப் போறாராடா?”

“ஆமாண்டா… அவர் கொண்டு வரப்போற நாடியில் என்னைப் திண தகவல் எல்லாம் இருக்கும்.”

“எல்லாம்னா…?”

“வருவார்… நாடி படிக்கும்போது உனக்கே தெரியும் பாரு”

ராம்நாத்திடம் சந்திரசேகர் சொல்லி முடிக்கவும்… சாமியார் வரவும் சரியாக இருந்தது.

அவர் முகத்தில் ஏமாற்றம்.

“சாமி”

“மன்னிச்சிடு மகனே… என்னன்னு தெரியலை. உனக்கான நாடி என்கிட்ட இல்லை.”

“அப்படியா?”

“ஆமாம்ப்பா… சில நேரங்கள்ல இப்படி ஆகறது உண்டு.”

“யாருக்கு நாடி இருக்கோ அவங்கதான் என்னைப் பார்க்க வருவாங்கன்னு நீங்க சொல்வீங்களே… உங்க கருத்துப்படி இப்ப உங்களைப் பார்க்க நான் வந்துருக்கேன். எப்படி நாடி இல்லாம போகும்?”

“அங்கதான் நானும் யோசிச்சேன். பிறகுதான்தெரிஞ்சது… நீ உனக்குன்னு வரலைங்கற உண்மை.”

“அப்படின்னா?”

சாமியார் பார்வை, அடுத்த தொடி-

ராம்நாத் பக்கம் திரும்பியது.

“சாமி.”

“உன் நண்பருக்கு இங்க நாடி இருக்கணும். அவரும் இன்னிக்கு என்கிட்ட நாடி பார்க்கணும்னு விதி இருக்கணும். இல்லேன்னா இப்படியெல்லாம் நடக்காது.”

“என்ன சாமி சொல்றீங்க… சும்மா கூட வந்த இவனுக்கு நாடி பார்க்கத்தான் நான் வந்திருக்கேனா?”

சந்திரசேகரிடம் ஒருவித பரபரப்பு.

“அப்படித்தான் என் மனசுக்குப்படுது மகனே…”

சாமியாரின் பதிலைக் கேட்டு ராம்நாத் கொஞ்சம் ஒண்டலாகச் சிரித்தார்.

“ராம்நாத்.”

“தெரியும்டா சந்திரசேகர்…. இந்தச் சாமியாருங்களே இப்படித்தான். அதுலேயும் இவர் ஜோசியர் வேற… கேக்கணுமா?”

*நீ என்னடா சொல்றே?”

“என்னத்த சொல்ல? இதுக்குத்தான் நான் இந்த மாதிரி விஷயங்கள்ல ஈடுபடறேதே இல்லை. சும்மா இருந்த என்னைப் போய் இப்படி மாட்டி விட்டுட்டியே சந்திரசேகர். பாரு… நீ எனக்கு ஜோசியம் பார்க்க வந்திருக்கியாம். எனக்கோ ஜோசியம்னாலே பிடிக்காது. அது ஒரு அண்டப்புளுகு, ஆகாசப் புளுகுன்னு நினைக்கற சாதி. நான் எப்படி இவர்கிட்ட போய் ஜோசியம் பார்ப்பேன்?”

ராம்நாத் அந்தச் சாமியார் காதில் விழட்டும் என்கிற மாதிரிதான் பேசினார்.

அதைக் கேட்டும் அவரது முகத்தில் சிரிப்பு.

“சாமி… தப்பா எடுத்துக்காதீங்க. ராம்நாத் இதையெல்லாம். பெருசா எடுத்துக்காத ஒரு தொழில் மையத்தோட தலைவன். எப்பவும் தொழில், எல்லாமே கடுமையான உழைப்புதான் இவனுக்கான வேதம். இவனுக்கு இதுல எல்லாம் நம்பிக்கை இல்லை சாமி.”

“தெரியும்ப்பா…”

சாமியார் சொன்ன அந்த ஒரு வார்த்தை பதில், ராம்நாத்தை நிமிர வைத்தது. கண் இரண்டையும் ஒரு விநாடி மூடித் திறந்தார்.

“வர்ற வழியில முதலையைப் பார்த்தீங்களோ?” என்றும் சாமியார் கேட்க, ராம்நாத்திடம் அடுத்தக் கட்ட திகைப்பு.

“சாமி.”

“மகனே.. என்னை ஒரு காரணமும் இல்லாம யாரும் சந்திக்க முடியாது. எப்ப உனக்கு ஏடு இல்லையோ, அப்ப இவருக்கு இங்கே ஏடு இருக்கணும். அதுல என் மூலமா இவருக்கு ஒரு சேதியும் இருக்கணும். இல்லேன்னா நம்பிக்கை இல்லாத நிலையிலும் இவரை இங்கு கூட்டிட்டு வர வேண்டிய அவசியமே இல்லை”.

சாமியாரின் பேச்சிலே ஒரு அழுத்தம்,

“ராம்நாத்… சாமி சொன்னா அதுல அதிக அர்த்தம் இருக்கும்டா, உனக்குத்தான் நாடி பாரேன்.”

சந்திரசேகர், ராம்நாத்தைத் தூண்டிவிட்டார்.

“எனக்குத்தான் இதுல நம்பிக்கை இல்லேன்னு சொன்னேன்ல.”

“முதல்ல ஜோசியம் பாரு. சாமி உனக்கான நாடியைப் படிச்ச பிறகு நம்பறதும், நம்பாததும் உன் விருப்பம்”.

சந்திரசேகர் அப்படிச் சொல்லவும்தான் ராம்நாத்தின் இடது கை, மெல்ல சாமியார் முன் நீண்டது.

சாமியும் ராம்நாத்தின் பெருவிரல் ரேகையைக் கூர்மையாகப் பார்த்துக்கொண்டு விலகிச் சென்றார். சிறிது நேரம் கழித்துத் திரும்பி வந்த அவர், கைகளில் ஒரு ஏட்டுக் கட்டு.

ஆனால், முகத்தில் சதா ஒட்டி இருக்கும் அந்த சிரிப்பு இல்லை. மாறாக, ஒரு இனம் புரியாத வருத்தம் தெரிந்தது!

3

அந்த வயதான பெண்மணியைப் பார்த்தவுடன் இந்தப் பெண் ‘அக்கம்மா…’ என்றுதான கூப்பிட்டாள். அப்பெண்மணியின் செல்லப் பெயர் அது. அவளுடைய தாய்- தந்தையும், மகளும் மட்டுமே அவளை அப்படி கூப்பிடுவார்கள்.

இன்று அக்கம்மா என்று இந்த இளம் பெண் அழைக்கவும், அந்த வயதான பெண்மணி திக்குமுக்காடிவிட்டாள். கிட்டத்தட்ட இவளின் வயதில்தான், முதாட்டியின் மகளும் விபத்தில் இறந்திருந்தாள்.

இப்போது அதே தோற்றம்- குரலுடன் ‘அக்கம்மா”என்றபடி ஒரு பெண் வந்து நின்றால், அதை என்னவென்று சொல்வது?

***

சாமியார் முகத்தில் தெரிந்த சலனம், சந்திரசேகரைக் கேள்வி கேட்க வைத்தது.

“சாமி… என்ன சாமி? ஏன் உங்க முகம் ஒரு மாதிரி இருக்கு? இவருக்கும் ஏடு கிடைக்கலியா?”

“இல்லப்பா… ஏடு கிடைச்சிடிச்சு. ஆனா, இப்படியொரு ஏடு ஏன் கிடைக்கணும்னு நினைச்சேன். அதான் மனசு சோர்ந்து போச்சு ”

“என்ன சாமி சொல்றீங்க”

“நான் இன்னும் எதையும் சொல்லவே இல்லையே…”

“சொல்றதுக்கு முந்தியே நீங்க இவ்வளவு வருத்தப்பட்டா, விஷயம் விபரீதமாக இருக்கணும்னு தோணுது.”

“உண்மைதான்… இவர் இங்கே வந்திருக்கறது இவர் உயிரோட பயணத்தைத் தெரிஞ்சிருக்கறதுக்காக மட்டுமல்ல, மறைமுகமா எனக்கு ஒரு பதில் கிடைக்கவுமதாள்.”

“கொஞ்சம் புரியும்படி சொல்லுங்க சாமி…”

“சொல்றேன். இந்த உலகத்தோட ஒரு பெரிய கேள்வி எது தெரியுமா?”

“எவ்வனவோ கேள்விகள் இருக்கு. அதுவ எதைன்னு சொல்றது சாமி”

“ஒரு கேள்விதான் மகனே, எப்பவும் பெரிய கேள்வியா தொடர்ந்துகிட்டே இருக்கு.”

“நீங்களே சொல்லுங்க சாமி… அந்தக் கேள்விக்கும், என் நண்பன் ராமநாதனோட நாடிக்கும் என்ன சாமி சம்மந்தம்?”

“நிறையவே இருக்கு. முதல்ல அந்தக் கேள்வி என்னன்னு தெரிஞ்சுக்கோ. பூமிக்குக் கீழ புதைஞ்சு கிடக்கற தங்கம், வைரத்தைக் கண்டறிஞ்சு – மிதக்கற நட்சத்திரங்களையும், கிரகங்களையும்கூட கண்டறிஞ்சு அங்கேயே போயிட்டு வர முடிஞ்சும், அவனால் தெள்ளத் தெளிவா அறுதியிட்டு உறுதியா சொல்ல முடியாத ஒரு விஷயம் உண்டுன்னா அது..”

சாமியார் ஒரு இடைவெளிவிட்டார். அவர் பார்வை ராம்நாத் மேல் திரும்பியது.

ராம்தாத் முகத்திலோ சாமியார் பேச்சை துளியும் காது கொடுத்துக் கேட்க விருப்பம் இல்லாதபடி ஒருவித எரிச்சல்.

“சாமி நீங்க சொல்லுங்க… என்ன சாமி அது?”

“சொல்றேன்… சொல்லித்தானே ஆகணும். எப்ப ஏடு கிடைச்சிடிச்சோ அப்ப கடமையை நிறைவேத்தணுங்கறதுதான் அதுக்கு பொருள்…”

“சொல்லுங்க.”

“அப்பா… உலகின் முதல் பெரிய கேள்வி, கடவுள் உண்டா… இல்லையாங்கறதுதான். அடுத்தக் கேள்வி – இறந்த பிறகு இந்த உயிர் என்ன ஆகுதுங்கறது. இந்த இரண்டு கேள்விகளுக்குமே விடை, நம்பிக்கைங்கற ஒரு விஷயத்துல மட்டும்தான் இருக்கு…”

“ஒரு நாற்காலி இருக்குன்னா, அதைச் செய்த ஒருவன் இருந்தே தீரணும். ஒரு வீடு இருந்தா, அதைக் கட்டின ஒருவனும் இருக்கணும். அது மாதிரி இவ்வளவு பெரிய பூமி இருக்குன்னா, இதைப் படைச்ச ஒருத்தனும் இருந்துதானே ஆகணும்?”

“அதுல என்ன சந்தேகம் சாமி. ”

“நீ என்ன சந்தேகம்னு கேக்கறே… ஆனா, கடவுளை ஒரு அழகான கற்பனைன்னு சொல்ற நாத்திகவாதிகளும் இருக்கத்தானே செய்யறாங்க?”

சாமியாரின் பதில் ராம்நாத்தைக் கிள்ளியது.

“ஐய்யா… எதுக்கு சம்மந்தம் இல்லாதபடி ஏதேதோ பேசறீங்க. என் ஏடு என்ன சொல்லுது… அதைச் சொல்லுங்க. அதைவிட்டுட்டு…”

சற்று எரிந்து விழுந்தார் ராம்நாத்.

“சொல்றேன்ப்பா… உன் ஏடு உலகின் இரண்டாவது பெரிய கேள்வியான – இறந்த பிறகு ஒரு உயிர் என்ன ஆகுதுங்கற கேள்விக்குப் பதிலா இருக்கு…”

புரியற மாதிரி சொல்லுங்க.

“மகனே… உன் மனதைத் திடப்படுத்திக்கோ. உனக்கு இந்த உலக வாழ்க்கை இன்னும் நூற்றியெட்டு நாள்தான். இன்றையில் இருந்து நூத்தி எட்டாவது நாள் நீ உயிர் இழப்பே…”

“சாமி…. என்ன இது? இப்படி குண்டைத் தூக்கிப் போடறீங்க”

சந்திரசேகர் குறுக்கிட்டுப் படபடத்தார்.

“நான் எங்கப்பா சொன்னேன். இது பிருகு முனிவர் எழுதியது?”

“டேய் சந்திரசேகர், கிளம்புடா! இவர் சாமி. பூதம்னு பீடிகை போடும்போதே நினைச்சேன்… இப்படி ஏதாவது சொல்வாருன்னு. அப்பத்தானே நான் பயந்து போய்- ‘சாமி, நான் எப்படியாவது உயிர் வாழ்ந்தாகணும். அதுக்கு என்ன பரிகாரம் பண்ணலாம்?’னு கேப்பேன். இவரும் அதைக் கொடு. இதைக் கொடுன்னு இஷ்டத்துக்கு கேக்கலாம்.”

ராம்நாத் சீறிய படி எழுந்து நின்றார்.

சந்திரசேகருக்கே இந்தக் கோபம் ஒருவித அச்சத்தைத் தந்தது.

ஆனால், சாமியாரிடம் எந்தச் சலனமும் இல்லை. நெற்றின விரல்களால் தேய்த்துக்கொண்டார்.

சந்திரசேகர் திகைப்பாக சாமியாரைக் கூர்ந்து பார்த்தார். ராம்நாத்தோ எழுந்து அந்தக் குடிசையைவிட்டு வெளியேறியேவிட்டார்.

சந்திரசேகா மட்டும் சாமியாரை ஒருவித குழப்பத்தோடு பார்த்தார்.

“ஏம்ப்பா… நீயும் போகலையா?”

“சாமி… என்ன சாமி, நான் உங்களை முழுசா நம்பறவன் சாமி..”

“சந்தோஷம். நீ வந்த வேலை முடிஞ்சிடிச்சு, உன் நண்பனுக்குத் தெரிய வேண்டியது தெரிஞ்சாச்சு. நீ புறப்படலாம்.”

“உண்மைதான்… ஆனா, இப்படியொரு விஷயத்தைத் தெரிஞ்சுக்கவா நாங்க இங்கே வந்தோம்?”

“இல்ல… இதுக்குப் பின்னால் இன்னும் சில விஷயங்கள் இருக்கு.”

“என்ன சாமி அது?”

“மன்னிக்கவும் மகனே… இதை நான் உன் நண்பன்கிட்டதான் சொல்ல முடியும்”.

“அவன்தான் எழுந்து போயிட்டானே?”

“திரும்ப வருவான்ப்பா”.

“நிஜமாவா?”

“சத்தியமா”.

“சாமி… அவன் திரும்ப வர்றதைவிட, எனக்கு முக்கியமான விஷயம் ஒண்ணு இருக்கு.”

“தெரியும்… இந்தச் சாவுல இருந்து தப்பிக்க வழி இல்லையான்னுதானே கேக்கப் போறே?”

“ஆமாம் சாமி… அவனுக்குப் பின்னால் பெரிய குடும்பம். இருக்கு- நூத்துக்கணக்கான தொழிலாளர்கள் இருக்காங்க.”

“அதுக்கு நான் என்ன பண்ண முடியும்? நாள் கணக்கு முடிஞ்சிட்டா கிளம்பிகிட்டே இருக்க வேண்டியதுதான்,”

“நீங்க அபபடி சொல்லக்கூடாது சாமி…மார்க்கண்டேயனைக் கூட விதி முடிஞ்சிடிச்சின்னு எமன் துரத்தினான். ஆனா, சிவன் வந்து தடுத்து காப்பாத்தலையா?”

“மார்க்கண்டேயன் விதியில் ஈசன் வந்து காப்பாத்துவாருன்னு இருந்ததுப்பா”

“அப்ப என் நண்பன் உயிர் பிழைக்க வழியே இல்லையா?”

“எனக்குத் தெரிஞ்சு வாய்ப்பே கிடையாது. உயிரோட பயணங்கறது என்னங்கறதுக்கு ஒரு விடை சொல்லப் போறான் உன் நண்பன்….”

“சாமி… உங்கக் கால்ல கூட விழறேன் தயவுசெய்து ஒரு நல்ல வழிகாட்டுங்க.”

“எனக்குத் தெரிஞ்சு ஒரே ஒரு வழிதான் இருக்கு”

“என்ன சாமி. எண்ன?”

சந்திரசேகர் பாய்ந்தார்.

“நான் சொன்னபடி உன் நண்பன் நூற்றி எட்டு நாட்கள்ல இறக்கப் போறது உறுதின்னா, இந்த நொடியில் இருந்தே அது தொடர்பான விஷயங்கள் நடக்கும்”.

“அப்படின்னா,”

*நீயும், உன் நண்பனும் திரும்பிப் போகும்போது, உங்க எதிரே ஒரு குருட்டுப் பிச்சைக்காரன் வருவான். அது மட்டுமில்ல… ஒரு கர்ப்பவதியையும் நீங்க ரெண்டு பேரும் பார்ப்பீங்க, அப்படியே ஒரு விலைமகள் உன் நண்பனைத் தேடி வந்து கட்டிப் பிடிப்பா…”

“சாமி..ஈ”

“நான் சொல்லலை. நாடியில் பாட்டு சொல்லுது.”

“…”

“கேளப்பா… அதையும் சொல்றேன்.

மைந்தனிவன் ஆயுளதும்
சதமோடெட்டாம். சத்தி இது…
சாட்சியுரைப்பேன்.
சேதி இதை அறிந்தே செல்லும்
மைந்தன் முன்னே
அந்தகன் கை யாசகம் கேட்கும்,
கர்ப்பிணியும் கடந்தே செல்வாள்!
உச்சமாய் எச்சில் மகள் எனும்
எழில் பரத்தை கட்டி அணைவாள்!”

சாமியார் பாட்டாகவே பாடிக் காட்ட – மவுனமாக அதை கேட்டபடியே சாமியாருக்கு வணக்கம் கூறிவிட்டுக் கிளம்ப வெளியே வந்தார் சந்திரசேகர்.

குடிசைக்கு வெளியே அந்த மலைவெளியில் அங்கங்கே பலா மரங்கள். அடிப் பாகத்தில் எல்லாம் கொத்துக் கொத்தாய் காய்த்துக் கிடக்கும் சில பலாக்கள், பழுத்து பிளந்திருந்தன. உள்ளிருந்து பலாச்சுளைகள் அணில்களால் பிய்த்துட போடப்பட்டிருந்தன.

அதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார் ராம்நாத். சந்திரசேகர் வரவும் ஒரு இளக்காரச் சிரிப்பு சிரித்தார்.

“ராம்நாத்… எதுக்கு இப்ப சிரிக்கறே?”

“சிரிக்காம… அந்தச் சாமியார் உன்கிட்ட இன்னும் என்னவெல்லாம் புளுகினார்?”

“அவர் அப்படிப்பட்டவர் இல்ல ராம்நாத்”

“சரி… உன்கிட்ட வேற என்ன சொன்னார்?”

“நீ திரும்பி வந்து அவரைப் பார்ப்பேன்னார்.”

“சரி, கிளம்பு.”

“கிளம்புவோம். கிளம்பத்தானே வேணும். ஆனா…”

“ஆனா… ஆவன்னாவை எல்லாம் இப்ப விடு. அவர் உன்கிட்ட என்ன வேணா சொல்லி இருக்கட்டும். இது எதுவும் எனக்கு தெரியத் தேவையில்லை. ஒண்ணு மட்டும் உறுதிடா. என் உடம்பு கல் மாதிரி இருக்கு. போன வாரம்கூட டாக்டர்கிட்ட காமிச்சதுல ரத்த அழுத்தம், சர்க்கரைன்னு எல்லாமே ‘நார்மல்’. நான் இன்னும் நூறு வருஷம் நல்லா இருப்பேன். சரி, புறப்படுவோமா?”

ராம்நாத் நம்பிக்கையோடு பேச –

அவரைப் பார்த்து பெருமூச்சு விட்டபடியே பின் தொடரத் தொடங்கினார் சந்திரசேகா!

4

‘அக்கம்மா’ என்று மகள் அழைக்கிற மாதிரியே அழைத்தபடி வந்து நின்ற அந்தப் பெண்ணைப் பார்த்து, வயதான அம்மணிக்குத் தன் மகளைப் பார்க்கிற மாதிரிதான் இருந்தது. கண்களில் கண்ணீர் தளும்பிவிட்டது.

தொடர்ந்து அந்த இளம்பெண், இவளைக் கட்டி அணைத்து மகிழ்ந்தாள். அப்போது இவளது உடலில் மெல்லிய வியர்வை வாடை! அதை நுகர்ந்த அந்த இளம்பெண், ‘அக்கம்மா… இன்னும் உனக்கு வியர்க்குது. சரியா பவுடர் போட்டுக்கறதில்லையா நீ?’ என்று கேட்டபோது, திடுக்கிட்டுப் போனாள் வயதான பெண்.

ஆம்… இறந்துவிட்ட அவளது மகள் இதே கேள்வியைத்தான் எப்போதும் கேட்பாள்!

***

பாண தீர்த்தக் காட்டின் அருவிக்கரைப் பகுதிக்கு சந்திரசேகரும், ராம்நாத்தும் வந்து சேர்ந்தனர்.

சந்திரசேகர் எதுவும் பேசாமல் இறுகின முகத்துடன்தான் இருந்தார். அவருக்குள் சாமியார் சொன்ன சாட்சிகள் குறித்த பயம்!

அப்படியெல்லாம் நடந்துவிட்டால், ராம்நாத்தின் வாழ்க்கையும் இவர் சொன்னது போல நூற்றியெட்டு நாளில் முடிந்துபோகும் என்றுதான் நம்பினார்.

நல்லவேளை…

படகுக்காரன் திரும்பி வந்து காத்திருந்தான். இருவரையும் பார்த்தவன் சிரித்தான்.

இருவரும் படகில் ஏறிக்கொள்ள – படகு சிறத் தொடங்கியது. சந்திரசேகர் மட்டும் இன்னும் இறுக்கமாக இருந்தார், ராம்நாத் சூழ்நிலையை ரசித்தார். பரந்த நீர்வெளி மேல் திரும்பவும் முதலை தெரிகிறதா என்று பார்ப்பதில் குறியாக இருந்தார்.

சாமியார் சொன்னது ராம்நாத்தைக் கொஞ்சம் கூட பாதித்திருக்கவில்லை. அதற்குக் காரணமும் இருந்தது. இவர் தனது வாழ்நாளில் சுயமாக பாடுபட்டு முன்னுக்கு வந்தவர். எதனாலோ கடவுள் பற்றியோ, ஆன்மிகம் பற்றியோ அவர் எண்ணியே பார்த்ததில்லை. எண்ணிப் பார்க்க நேரமில்லை, தோன்றவில்லை என்றும்கூட கூறலாம்.

கடவுளைப் பற்றி நினைக்காததால், கோயிலுக்கும் போய் வராததால் அவர் ஒன்றும் தாழ்ந்துவிடவில்லை. அப்பரது தொழில் முயற்சிகளும் தோற்றுவிடவில்லை. இதெல்லாம்கூட அவர் சாமியார் போன்ற மனிதர்கள் மேல் ஒரு மதிப்பும், மரியாதையும் தோன்ற வழி இல்லாமல் செய்துவிட்டது.

பொதுவாக திடீர் கோடீஸ்வரன் வயிற்றில் பிறக்கும் பிள்ளைகளுக்கு சாமானிய மற்றும் ஏழை ஜனங்களின் மன உணர்ச்சிகள் சுலபமாக விளங்காது. அவர்களுக்கு எல்லாமே உட்கார்ந்த இடத்தில் கிடைத்துவிடும்.

ஒரு குச்சி மிட்டாய்க்குக்கூட பாமர குழந்தை அழுது அடம்பிடித்தாக வேண்டும். உடம்பில் ஓடும் ரத்தம் எல்லோருக்குமே சிவப்பு நிறம் என்பதே கூட பகட்டுகளுக்குத் தெரிய வாய்ப்பு குறைவு. சாதாரணங்களுக்கோ உடம்பில் பூகும் வியர்வையிலேயே ரத்தமும் சேர்ந்து கிடக்கும்.

உலகில் துன்பங்கள் எதிலும் தொடர்பே இல்லாமல் வளரும் பகட்டுகளுக்குத் துன்பம் என்பதே ஒரு ஆச்சரியமான விஷயம்தான்.

பெரும்பாலும் துன்பத்தின் ரேகை படியாதவர்கள் கடவுளை நினைப்பதே இல்லை. அப்படி ஒருவர் இருக்கிறார் என்பதுகூடத் தெரியாமல் அவர்கள் வாழ்ந்தபடி இருப்பார்கள், அவர்களின் எதிரில் கடவுளே தோன்றினாலும், இந்தப் பூமியில் வாழும் கோடானு கோடி பேர்களில் ஒருவராகத்தான் அந்தக் கடவுளைப் பார்ப்பார்கள்.

கிட்டத்தட்ட இதே நிலையில்தான் ராம்நாத்தும் இருந்தார். எனவே, சாமியார் சொன்ன நாடி ஜோதிடமோ, அதன் தாக்கமோ துளியும் அவரிடம் இல்லை. சாமியார் ஏதோ உளறியதாகவும், தான் அதனால் பாதிப்படையாத மனபலம் உடைய ஒருவராகவும்தான் தன்னைப் பற்றி நிணைத்துக்கொண்டிருந்தார்.

ஆனால், சந்திரசேகர் நேர் எதிராக பீதியில் இருந்தார். அவருக்குத்தான் தெரியும் நாடி ஜோதிடத்தின் சக்தி. அதிலும் அந்தச் சாமியார் மூன்று காலங்களையும் ஊடுருவ வல்லவர். அவர் சொல்லி நடக்காத விஷயமில்லை. எனவே, மனதில் ஒரு வித பக்.. பக்.. உணர்ச்சி.

படகு நீர்வெளியில் கிழித்தபடி பயணித்துக்கொண்டிருந்தது. ராம்நாத் பார்க்க ஆசைப்பட்ட முதலை ஒன்று நீர்ப்பரப்புக்கு மேல் தன் செதில் செதிலான முகத்தைக் காட்டியபடி வந்துவிட்டுப் போயிற்று. எப்பொழுதும் ‘திரில்’லான விஷயங்களை நேரில் பார்ப்பது என்பது ரசமான அனுபவம்.

‘சார்.. சார்.. முதலை…” என்று படகுக்காரனும் கத்தினான்.

ராம்நாத்தும் பார்த்துவிட்டு வாயைப் பிளந்தார். சந்திரசேகருக்கோ அந்த முதலை ராம்நாத்தை விழுங்குவதற்காகவே வருவது போல் இருந்தது.

படகுக்காரனும் அதன் அருகே படகைச் செலுத்தினான். “யோவ்… அதுகிட்ட ஏன்யா போறே?” என்று பலமாக சுத்திவிட்டார் சந்திரசேகர்.

“ஒண்ணும் பண்ணாது சார். நாங்கதான் தினம் தினம் பாக்கறோமே!” என்றான் படகுக்காரன்.

ராம்நாத்துக்குப் குபீர் என்று சிரிப்பு வந்துவிட் “சந்திரா… என்னடா அந்த முதலை என்னை விழுங்கிடும்னு நினைச்சியா?” என்று கேட்டார்.

“ராம்நாத்,..”

“உன்னைப் பார்த்தாலே தெரியுதுடா.. சம்மந்தப்பட்ட நானே அந்தச் சாமியார் சொன்னதுக்காக கவலைப்படலை. நீ ஏண்டா அந்தப் பொய்யை மனசுல சுமக்கறே?”

“சாரிடா ராம்நாத்… நான் அதைப் பொய்யா நினைக்கல…”

“அடப்பாவி… நான்தான் ஒரு வியாதியும் இல்லாம நல்லாருக்கேன்னு சொன்னேன்ல?”

“உயிர் பிரியறதுக்கும், வியாதிக்கும் சம்மந்தம் இல்லைடா. வியாதிங்கறது உடம்போடு கர்மம். உயிருங்கறது எப்படி வேணா பிரியலாம்.”

“என்ன… ஏதாவது விபத்து ஏற்படும்னு நினைக்கிறியா?”

“ஆமாம்… நீ ஜாக்கிரதையா இருக்கணும்.”

“அடப்பாவி… உயிர் போயே தீரும்னு அவர் சொல்லிட்டார். நீ அதை நம்பறே… அப்புறம் எதுக்கு ஜாக்கிரதையா இருன்னு சொல்றே?”

“நீ கேக்கறதும் சரிதான்… போற உயிர் எப்படின்னாலும் போய்த்தான் தீரும். யாரால இந்த மண்ணுல நெடுங்காலம் வாழ முடிஞ்சது? இந்த உடம்பு எப்பவும் ஒரு எல்லைக்கு உட்பட்டதுதானே?”

“என்னடா நீ.. இதையும் சொல்றே, அதையும் சொல்றே?”

“மனசு கேக்கலையே… எல்லாரும்தான் ஒருநாள் சாகப் போறோம். அதுக்காக இப்பவேவா பாடை கட்டி வெச்சுக்கறோம்?”

“நீ என்ன சொல்ல வர்றே…?”

“எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை. உண்மையில நான் துணைக்குக் கூட்டிட்டு வந்ததுக்காக வருத்தப்படறேன். அதேநேரம்.அதுதான் விதின்னு இருக்கும்போது மாற்றிட யாரால் முடியும்?”

இருவர் பேசுவதையும் படகுக்காரன் கவனமாகக் கேட்டபடியே “என்ன சார் இவர் சீக்கிரம் செத்துடுவாருன்னு சொன்னாரா மலைக்காட்டு சாமி?” என்று எதிர்கேள்வியும் கேட்டான்.

சந்திரசேகர் மவுனமாக அதை ஆமோதித்தார்.

“ஐயோ சார். அவர் சாதாரணமாக இப்படிச் சொல்ல மாட்டாரே. சாகக் கிடக்கறவங்களக்கூட பொழைக்க வைக்கறவர் ஆச்சே…”

“என்னய்யா கதை விடுறே. சாவறவனைப் பிழைக்க வைக்கவும் யாராலேயும் முடியாது. சாகப் போறவனைத் தடுக்கவும் யாராலேயும் முடியாது..இந்தச் சாமியார் ஆளுக்குத் தகுந்த மாதிரி நடந்துக்கறார் போல இருக்குது” என்று அவனை எதிர் கருத்தில் சந்தித்தார் ராம்நாத

“சார், அப்படி மட்டும் சொல்லிடாதீங்க, சாமியார் சாதாரண ஆள் இல்லை. அவர் வேற, சாமி வேற இல்ல. எனக்குத் தெரிஞ்சு.. செத்து பூமிக்குள்ள புதைச்சுட்ட ஒரு பொணத்தைத் தோண்டி துணி மூட்டையாக கட்டி எடுத்துகிட்டு வந்தாங்க. இதே இந்த படகுல நான்தான் ஏத்திக்கிட்டு வந்தேன். வரும்போது அதோ உங்க காலடியில் கிடந்த பொணம், திரும்பும்போது உயிரோட உங்களை மாதிரி உட்கார்ந்து பேசிகிட்டு வந்துச்சுன்னா நம்புவீங்களா?”

அவன் பதில் சந்திரசேகர் பிடரியில் உதைத்து உசுப்பியது.

“அப்படி செத்தவனைப் பொழைக்க வெச்ச இந்தச் சாமியார், என் நண்பன் மட்டும் செத்துடுவான், அதை,யாராலேயும் தடுக்க முடியாதுங்கறாரே..?”

“அப்படி அவர் சொல்லி இருந்தாருன்னா, ஏதாவது காரணம் இருக்கும்.”

“என்ன காரணம் இருக்க முடியும்? சாகற தேதி முன்னாடியே தெரிஞ்சா ஒருத்தன் தெரிஞ்ச நிமிஷமே மனசால் செத்துப் போயிடுவான். அதனாலதான் டாக்டர்கூட இந்த மாதிரி விஷயத்துல ஒருத்தர் சீக்கிரம் செத்துடுவார்னு தெரிஞ்சாலும் நம்பிக்கையாதான் பேசுவாங்க.”

“அதெல்லாம் சரிங்க சார்… ஆனா, நம்ம சாமி இப்படிச் சொல்லி இருக்கார்னா, அதுக்குப் பின்னால நிச்சயமா ஒரு காரணம் இருந்தே தீரும்..” – படகுக்காரன் சொன்னது சந்திரசேகரையும் குடைந்தது.

“தெரியும்ப்பா… நானும் கேட்டேன். ஆனா, அந்தக் காரணத்தை அவர் என்கிட்ட சொல்ல முடியாதுன்னு சொல்லிட்டார்.”

“அப்ப சம்மந்தப்பட்ட அவரே கேட்கலாமில்லையா?”

“இவன்தான் அவர் சொன்னதை நம்பலியே.”

“அப்ப அதுக்கும் ஒரு காரணம் இருக்கும்.”

இருவர் பேச்சையும் ராம்நாத் ரசிக்க மட்டுமே செய்தார்.

“டேய் சந்திரா… இந்த உலகத்துல யாராலேயும் அனுமானிக் முடியாத விஷயங்கள் மூணுடா. அது, மழை எப்ப வரும்? மக எப்ப பொறக்கும்? உயிர் எப்ப பிரியுங்கறதுதான் ? மழை எப்ப வரும், மகவு அதாவது குழந்தை எப்ப பிறக்குங்கறது மகேசனுக்கே தெரியாதுங்கறதுதான் நான் கேட்டிருக்கற பழமொழி. மகேசனுக்கே தெரியாதது இந்தச் சாமியாருக்குத் தெரியும்னா என்னை அதை நம்பச் சொல்றியா நீ?” என்று சந்திரசேகரிடமும் திருப்பி கேட்டார்.

அதற்கு மேல் படகுக்காரன்கூட எதுவும் பேசவில்லை.

ஆனால், ராம்நாத் பேசியதில் இருந்து அவர் இப்படி நம்பிக்கை இல்லாமல் இருப்பதை நல்லது என்று அவன் எண்ணினான். குறைந்தபட்சம் உயிர் பிரியும் தருணம் வரையில் அவன் நம்பிக்கையோடும், மகிழ்ச்சியோடும் இருப்பது நல்லதுதானே!

படகுத்துறையும் வந்துவிட்டது. இறங்கிக்கொண்டு காரை ‘பார்க்’ செய்திருக்கும் இடம் நோக்கி நடக்க ஆரம்பித்தனர்..

அருமையான இடம்..சூப்பரான சூழ்நிலை. ஆனா, ஒரு பொய்யான சாமியார். அவரோட பித்தலாட்டமான அனுபவம்” – என்று நடந்தபடியே பேசினார் ராம்நாத்.

சந்திரசேகர் எதுவும் சொல்லாமல் மவுனமாகவே நடந்தார். காரை நெருங்கியபோது, அதன் மேல் நிறைய சிங்கவால் குரங்குகள்.

இருவரையும் பார்த்த குரங்குகள் குதித்து ஓடின.

‘ரிமோட் ஓப்பன்’ செய்தவர்- காரில் ஏறி அமர்ந்தார். காரை ‘ஸ்டார்ட்’ செய்தார். அந்த நொடி எதிரில் ஒரு குருட்டு பிச்சைக்காரன். குச்சி ஒன்றை ஊன்றிக்கொண்டு தட்டுத்தடுமாறி நடந்தபடி… கச்சிதமாக காரை நெருங்கியவன், கார் எஞ்ஜில் சப்தத்தை வைத்து காருக்குள் ஆள் இருப்பதை யூகித்தவனாக கழிவிரக்கமான குரலில், “ஐய்யா… தர்ம மகாராசா… கண் இல்லாத குருடன்யா, ஏதாச்சும் பிச்சை போடுங்கய்யா…” என்றான்.

சாமியார் சொன்னபடியே முதல் சாட்சியாக அந்தக் கை முன்னால் நீண்டுவிட்டது என்றால் ராம்நாத்துக்கு மரணம் நிச்சயம். அதில் மாற்றமே இல்லை.

ஊர்ஜிதத்தோடு காரைக் கிளப்பி சிறிது தூரம் சென்று மலைப்பாதையில் காரை விரையச் செய்தார் சந்திரசேகர். அப்படியே திரும்பி ராம்நாத்தையும் ஒரு பார்வை….

ராம்நாத் அந்த மலைக்காற்றை ஆழமாக சுவாசித்தபடி அமர்ந்திருந்தார்.

துளிகூட மனதில் மரணச் சந்தேகமே இல்லை.

கார் திருநெல்வேலியைத் தொட்டுவிட்டது. ரெயில்வே ‘லெவல் கிராசிங்’ ஒன்று குறுக்கிட்டது. அந்த நேரத்தில் மும்பை- நாகர்கோயில் எக்ஸ்பிரஸ்தான் கடந்து செல்லும், எப்படியும் பத்து நிமிடமாவது காத்திருக்க நேரும் என்பது சந்திரசேகரின் அனுபவம்.

சாலையோரமாக இளநீர்க் கடை! பயணக் களைப்பும், மன அழுத்தமும் இளநீர்க் கடையை ஒரு அமுத விருந்தாகக் காட்டின.

ராமநாத்தைப் பார்த்தார்.

“என்னடா. இளநீர் குடிக்கனுமா?”

“ரொம்ப தளர்சசையா இருக்குடா. இளநீர் இயற்கை டானிக்”

“அதுக்கென்ன. குடிச்சுட்டாபோச்சு” என்றபடியே ராம்நாத் கதவைத் திறக்க, சந்திரசேகரும் காரில் இருந்து இறங்கினார்.

இரண்டு இளநீர் வெட்டச் சொன்னபோதுதான் இனநீர்க்கடை பெண்னைக் கவனித்தார். எட்டு மாத கர்ப்ப வயிறு அவளுக்கு.

அதன்பின் அவள் வெட்டி நீட்டிய இளநீர் சந்திரசேகருக்கு இனிக்கவில்லை.

அடுத்த சம்பவமும் உடனேயே நடக்கத் தொடங்கியது. ராம்நாத் இளநீர் குடித்த ஜோரில் சிறுநீர் கழிப்பதற்காக ஒரு மறைவான இடத்தைத் தேடிச் சென்றார்.

போன வேகத்தில் ஓடி வந்தவர் முகத்தில் முத்து முத்தாக வியர்வை.

“என்ன ராம்நாத்…?”

“என்னத்தடா சொல்ல… சிறுநீர் கழிக்கப் போனா, அங்கே மரத்து பின்னால் ஒரு விபச்சாரி. நான் அவளைத் தேடி வந்ததா நினைச்சுகிட்டு பாய்ஞ்சு வந்து கட்டிப் பிடிக்கறா… கையை உதறிகிட்டு ஓடி வந்தேன்.”

ராம்நாத் முடிக்க-சந்திரசேகருக்கு இதயம் அறுந்து வயிற்றுக்குள் விழுந்த மாதிரி இருந்தது. பேச்சே வரவில்லை.

“டேய் சந்திரா…”

“…”

“என்னடா… என்ன ஆச்சு? இன்னும் அந்தச் சாமியார் நினைப்பா?”

ராம்நாத் கேலியாகக் கேட்டாலும், சந்திரசேகர் விழிகளில் கண்ணீர் திரண்டுவிட்டது.

“அடப் பாவி… அழுதியா? ஏண்டா… இப்ப என்ன நடந்துச்சுன்னு அழுறே?”

“ராம்நாத், என்னை எதுவும் கேக்காதேடா… ஒண்ணு மட்டும் சொல்லிக்கிறேன்டா. இனி நீ ஒவ்வொரு நொடியையும் அனுபவிச்சு வாழுடா.”

“இப்பவும் அப்படித்தான் வாழ்ந்துகிட்டிருக்கேன். ஆமா. எதை வெச்சு திடீர்னு இப்படி ஒரு ஆலோசனை?”

“என்னை இனி எதுவும் கேக்காதே…”

“புரிஞ்சு போச்சு. நூற்றியெட்டு நாள்தான்னு அந்தச் சாமியார் சொல்லிட்டார். நீயும் அதை நம்பிட்டே. அதனால் இருக்கற கொஞ்ச நாளை அனுபவிச்சுக் கழிக்கச் சொல்றே. அப்படித்தானே”

சந்திரசேகர் அந்த உண்மையின் முன் மவுனிப்பதே சிறந்தது என்று கருதினார் !

5

‘அந்த வயதான பெண்மணி, இந்த இளம் பெண்ணைத் தனது இறந்துவிட்ட மகளின் மறுபிறப்பாகத்தான் பார்த்தாள். “நீ…. நீ…நீ… என் மகளேதான். ஆமா… உன் பேர் என்ன?” என்று அந்தத் தாய் கேட்க, “என்னை இவங்கெல்லாம் ஜானான்னு கூப்பிடுறாங்க. ஆனா, எனக்குள்ள நான் சீதாவாத்தான் நினைக்கறேன். யாராவது என் பேர் என்னன்னு கேட்டா, என் மனசு சீதான்னுதான் முதல்ல சொல்லுது. அது ஏன்று தெரியலை” என்று அந்த இளம் பெண்ணும் கூறிட, “அம்மாடி நீ சரியான இடத்துக்குத்தான் வந்து சேர்ந்திருக்கே. என் மக போதான் சீதா… நீ அதே சீதாதான்… அதே சீதாதான்…” என்ற அந்தத் தாயும் கட்டிக்கொள்ள- சுற்றி நின்று பார்த்தவர்கள், ‘இதெல்லாம் சாத்தியமே இல்லை. இது அவ்வளவும் திட்டமிட்டு போடப்படும் ஒரு நாடகம்’ என்றுதான் நினைத்தனர்.

***

மணி இரவு பதினொன்று!

மெயின் ஹாலில் கிடந்த சோபாவில் கொட்டக் கொட்ட முழித்தபடி உட்கார்ந்திருந்தாள் சகுந்தலா. ராம்நாத்தின் ஆசை மனைவி. நாற்பத்தைந்து வயதாகிறது. ஆனால், முப்பதுதான் மதிப்பிடலாம். அப்படியொரு கட்டுக் குலையாத உடம்பு. முகத்திலும் பொலிவு. பட்டாணி அளவுக்கு குங்கும நிற ‘ஸ்டிக்கர்’ பொட்டும், அதற்கு மேல் விபூதிக்கீற்றும் சகுந்தலாவின் ஸ்பெஷல்.

உலகில் சில முகங்கள் அபூர்வமானவை. ஒரே பார்வையில் ‘பச்சக்’ என்று மனசோடு ஒட்டிக்கொள்ளும். சகுந்தலாவும் அந்த ரகம் காலையில் குளித்து முடித்து பனிச்சென்று அவள் தயாரானால், இரவிலும் அதே பளிச் அவளிடம் நீடிப்பது ஆராய்ச்சிக்குரிய விஷயமதான்.

ஹாலில் கணவருக்காகத்தான் காத்துக்கொண்டிருந்தாள். இந்த நவீன யுகத்திலும் ராம்நாத்திடம் ஒரு பழக்கம். இவர் செல்போனைப் பயன்படுத்துவதில்லை. அதனால் அவரைத் தொடர்புகொள்ள முடியாத ஒருவித அவஸ்தை அவளைப் பிசைந்தபடியே இருந்தது.

இடையில் அவர்களின் ஒரே பிள்ளையான சேகர்கூட அம்மாவின் காத்திருப்பைப் பார்த்துக் கடிந்துகொண்டான்.

“மம்மி… போய்ப் படுங்க. அப்பா வரும்போது கதவைத் திறந்து வீட்டுக்கலாம்.”

“இல்லடா… அவர் எப்பவும் இப்படி தாமதமா வந்ததில்லை. ஒரு போன் பண்ணிகூட எதுவும் சொல்லலை. அதான் என்னவோ ஏதோன்னு ஒரே கவலையா இருக்கு,”

“அப்பா என்ன சின்ன குழந்தையா? எல்லாம் வருவார்.. போய்ப் படுங்க மம்மி.”

அவன் தூண்டினாலும், அவளால் அதை ஒப்புக்கொள்ள முடியவில்லை. கலக்கமான கண்களுடன் வாசல் பக்கம்தான் பார்த்தாள்.

“சரி… நான் படுக்கறேன். அப்பா வரட்டும், என் கச்சேரியைக் காலையில வெச்சுக்கறேன்”- என்றபடியே படுக்கையறை நோக்கிச் செல்லத் தொடங்கினான் சேகர்.

அவன் கதவைத் தொடும் நேரம்- காரின் ‘ஹாரன்’ சப்தம், மெயின் ‘கேட்’ திறக்கப்படும் ஓசை என்று கலவையாகக் காதில் விழுந்தது.

சந்திரசேகர் தன் காரை உள்ளே செலுத்தி, போர்ட்டிகோவில் நிறுத்தினார்.

ராம்நாத் இறங்கினார்.

“ஒரு போன்கூட பண்ணலையேன்னு சகுந்தலா பிலுபிலுன்னு பிடிக்கப் போறா பாரு” என்று சிரித்தபடியே உள்ளே நுழைந்தார் ராம்நாத். பின் தொடர்ந்தார் சந்திரசேகர்.

ராம்நாத் சொன்ன மாதிரியே எதிரில் சகுந்தலா. “ஏங்க… இப்படியா பொறுப்பில்லாம இருப்பீங்க. ஒரு போன் கூடவா உங்களால் பண்ண முடியல?” என்று காரமாக ஆரம்பித்துவிட்டாள்.

சகுந்தலாவைப் பார்த்து சந்திரசேகருக்குக் கொஞ்சம் போல நெஞ்சை அடைத்தது.

“அடடே…அண்ணனா? நீங்களும் வந்திருக்கீங்களா? வாங்கண்ணே…” என்று சகுந்தலா, சந்திரசேகருக்கும் ஒரு முகமன் கொடுத்தாள்.

சந்திரசேகர் பதிலுக்குச் சிரிக்கமாட்டாமல் சிரித்தார்.

சகுந்தலாவின் மங்கள தோற்றம் அவரை என்னவோ செய்தது.

“டேய்… நீயே சொல்லுடா. எங்கே போனோம்… என்ன நடந்தது… ஏன் போன் பண்ண முடியலைங்கற எல்லா கேள்விக்கும் பதிலை நீயே சொல்லு. குறிப்பா அந்த நூற்றியெட்டு நாள் சமாச்சாரத்தை மறந்துடாதே.”

சோபாவில் அமர்ந்துகொண்டு ஷூவைக் கழட்டியபடியே ராம்நாத் சொல்லவும், சகுந்தலாவையும் ஆர்வம் தொற்றிக்கொண்டது.

“என்னண்ணே… என்ன சொல்றார் இவர்?” என்று சந்திரசேகரிடம் ஊன்றினான்.

“அட, நீ வேறம்மா.. நான் ஒரு வேலையா பாபநாசம் பாணதீர்த்தம் வரை போக வேண்டியது இருந்தது. கூட வாடான்னு கூட்டிட்டுப் போனேன். திரும்பி வரும்போது கொஞ்சம் தாமதமாயிடிச்சு. இவ்வளவு நேரம் ஆகும்னு தெரியாது…சாரிம்மா”.

“அட என்னண்னே… சாரியெல்லாம் சொல்லிகிட்டு? ஆமா, பாணதீர்த்தத்துக்கு எதுக்குண்ணே போனீங்க. அங்கே குளிக்கறதுக்காகத்தானே போவாங்க?”

“ஏன் ஜோசியம் பார்க்க போகக் கூடாதா?”

சாக்ஸை உதறியபடியே ராம்நாத் ஒரு கேலிச் சிரிப்புடன் சொன்னார்.

“ராம்நாத்… கொஞ்சம் வாயை வெச்சுகிட்டு சும்மா இருடா.”

“அட நீ ஒண்ணுடா, நான் எப்படி இந்த ஜாதகம், ஜோசியத்தை எல்லாம் கண்டுக்கிறதில்லையோ, அதே மாதிரிதான் சகுந்தலாவும். சும்மா சொல்லு… அந்தச் சாமியார் அளந்துவிட்டதை எல்லாம் சும்மா சொல்லுடா.”

“ராம்நாத் பிளீஸ்டா. அவர் எதுவும் சொல்லலை. நீயும் எதுவும் கேக்கலை, போதுமா! அம்மாடி… முதல்ல இவனுக்கு சாப்பாடு போடு. உனக்கு அப்புறமா நான் போன் பண்ணுறேன்”.

“அண்ணே என்னண்ணே…. ஏதோ சொல்ல வந்து, அதை வேண்டாம்னு தவிர்க்கிற மாதிரி தெரியுது. இப்படி பாதியில ஒரு விஷயத்தை விட்டுட்டுப் போனா எனக்குத் தூக்கமே வராதுண்ணே…”

“சரிம்மா… சுருக்கமா சொல்றேன். பாணதீர்த்த மலைக்காட்டுவ ஒரு சாமியார் இருக்கார். அவர் நாடி ஜோசியம் பார்க்கறதுல கில்லாடி என் தொழில் விஷயமா ஜோசியம் பார்க்கப் போனேன். இவனும் கூட வரட்டுமேன்னு கூட்டிட்டுப் போனேன். ஆனா எனக்கு அவராவ ஜோசியம் பார்க்க முடியலை, ஏன்னா…. என சம்மந்தப்பட்ட ஏடு கிடைக்கலை. ஒரு ஆச்சரியம் பார். உன் புருவனுக்கு ஏடு கிடைச்சது. அதுல அவன் நூத்தியெட்டு வருஷம் இந்த பூயியில் வாழ்வான்னு வந்தது?”

“அப்படியா?”

“டேய புளுகாதேடா. அவரைவிட நீ பெரிய புளுகனா இருக்கியே. சகுந்தலா… நானே சொல்றேன், கேட்டுக்க. எனக்கு இன்னும் நூற்றியெட்டு நாள்தான் ஆயுளாம்… அந்தச் சாமியார் சொல்லிட்டார். எப்படி இருக்கு?”

ராம்நாத் கேட்டுவிட்டுச் சிரித்தார்.

ஆனால், சகுந்தலா அப்படி சிரிக்கவில்லை. அதிர்ந்தாள்.

“அண்ணே…” என்று சந்திரசேகரைத்தான் பார்த்தாள்.

“இவன் உளறுறாம்மா… சும்மா உன்னை பயமுறுத்த பார்க்கறான்”.

“டேய்… சகுந்தலா எதுக்கும் பயப்படாதவடா. சும்மா தைரியமா சொல்லு”.

“போதுண்டா… விளையாடறதுக்கும் ஒரு அளவு இருக்கு. அம்மாடி, நான் வரேன். இவன் எது சொன்னாலும் நம்பாதே. அவ்வளவுதான் சொல்வேன். நான் இவனை ‘டிராப்’ பண்ண மட்டும் வரலை. இவன் உளறுவான்னும் உன்கிட்ட சொல்லிட்டுப் போகத்தான் வந்தேன். இது என்னடா விளையாட்டுன்னு கேட்டா, சும்மா ஒரு குட்டி திரில்லுங்கறான். சரிம்மா… நான் கிளம்பறேன்”.

சந்திரசேகர் படுவேகமாக எழுந்து கையை உதறிக்கொண்டார்.

“அண்ணே இருங்க… நீங்களும் சாப்பிட்டுட்டு போங்க.”

“அது சரி… அங்கே உன் அண்ணியும் உன்னை மாதிரி காத்துகிட்டு இருப்பா. போய் ‘கம்பெனி’ தரவேண்டாமா?” என்றபடியே புறப்பட்டும் போனார்.

சகுந்தலா ஒரு பெருமூச்சுடன் ராம்நாத் பக்கம் திரும்பினாள்

“என்ன டார்லிங்… ஒரே குழப்பமா இருக்கா?”

“பின்ன என்னங்க… மணியைப் பாருங்க. இது விளையாடற நேரமா?”

“நான் எங்கே விளையாடினேன்?”

“பின்ன..அண்ணன் என்னவோ சொல்லிட்டுப் போறாரே?”

“அவன் ஒரு கிறுக்கன், அப்படித்தான் சொல்வான். நீயே சொல்… ஒருத்தர் உயிர் பிரியப்போற நேரத்தை யாராலேயாவது துல்லியமா சொல்ல முடியுமா?”

“அப்படின்னா…”

“அதை ஏன் கேக்கறே… அந்த மலையில ஒரு சாமியார். அவர். ஆசையா ஜோசியம் பார்க்க வந்த அவனை விட்டுட்டு, நீ ஜோசியம் பார்க்க வந்தது உனக்காக இல்லை. உன் நண்பனுக்காக என்னைப் பார்த்து கையைக் காட்டுன்னா என்ன அர்த்தம்?”

“சரிங்க… அவர் உங்களுக்கு நூற்றியெட்டு நாள்தான் ஆயுள்னர் சொன்னார்?”

“பின்ன… அப்பதானே நான் பயப்படுவேன். உடனே அவரும் இந்தப் பரிகாரம், அந்தப் பரிகாரம்னு சொல்லி பணம் புடுங்க முடியும்?”

ராம்நாத் கேள்வியோடு ‘டைனிங் டேபிள்’ நோக்கி நடந்தார்.

ஆனால், சகுந்தலா முகத்தில் பீதி பரவிக்கொண்டிருந்தது.

“என்ன சகுந்தலா… நீ கூடவா இதையெல்லாம் நம்பறே… ஏன் மவுனமாயிட்டே?”

“இல்லிங்க… யாரோ ஒரு ஜோசியக்காரன் சொன்னான்னா, காசுக்காக வாய்ல வந்ததைச் சொல்றாங்கன்னு நினைக்கலாம். ஆனா, இது சாமியார்னு சொல்றீங்க.”

“ஆமாம்… சாமியார்தான். இந்தக் காலத்துச் சாமியாருங்கதானே எல்லா ‘பிராடு’ வேலையும் செய்யறாங்க!”

“அப்படி இல்லீங்க…”

“போதும் சகுந்தலா… நீ பேசறதைப் பார்த்தா நீயும் அதை நம்பற மாதிரி தெரியுதே”.

“அது…”

“பைத்தியம்..ஒருத்தரோட சாவை முன்னாலேயே சொல்ல முடியும்னா, இந்த உலகத்தை ஆட்டிப் படைக்கற எவ்வளவோ பேரோட ஆயுள் முடிவைத்தான் முதல்ல எல்லாரும் தெரிஞ்சிக்க பார்ப்பாங்க. நீ ரொம்ப முற்போக்கா எதையும் பார்க்கறவள்னுதால் நான் நினைச்சேன். ஆனா, என்னடான்னா… நீயும் பழப் பெட்டித்தனமா கவலைப்படறியே…”

“சரிங்க… இன்னும் என்னென்ன சொன்னார் அந்த சாமியார்”

“போச்சுடா.. உனக்கு இப்ப அங்கே நடந்த எல்லா விஷயமும் தெரியணுமாக்கும். அவர் எப்ப என் ஆயுள் நூற்றியெட்டு நாள்தான்னு சொன்னாரோ, அப்பவே நான் எழுந்து வெளியே போயிட்டேன். மற்ற விஷயங்களை சந்திரசேகர்தான் அந்த சாமியார்கிட்ட கேட்டுகிட்டிருந்தான்.”

“சரி…. நான் அவர்கிட்டயே கேட்டுக்கிறேன். எதுக்கும் நீங்க…”

சகுந்தலாவால் முடிக்கக்கூட முடியவில்லை… மளுக்கென்று கண்ணீர் திரண்டுவிட்டது.

ராம்நாத் அவளது பாசத்தை நினைத்து நெகிழ தொடங்கிவிட்டார்.

6

‘நடப்பது அவ்வளவும் நாடகம் என்று கருதி எவரை பற்றியும் அந்தத் தாயும், மகளும் கவலையே படவில்லை. அதே நேரம் அவர்கள் இருவரையும் பத்திரிக்கையாளர் ஒருவர் மட்டும் பரிசோதனைக்கு ஒப்புக்கொள்ள வைத்தார். அதன் நிமித்தம் அந்தத் தாயையும், மகளையும் உடல் பரிசோதனைக்கு அவர் ஆளாக்கினார். பரிசோதனை முடிவு வேறாகத்தான் வந்தது. ஆனால், இளம் பெண்ணை மனோவசிய உறக்கத்தில் ஆழ்த்தி, அவள் ஆழ்மனத்தில் இருப்பதைக் கூறச்சொல்வி கேட்டபோது- அந்த இளம் பெண்ணும் அக்கம்மாதான் தன் தாய் என்றும், மிக இளம் வயதிலேயே காமாலை நோய் கண்டு தன்னுடைய தாயைப் பிரிந்துவிட்டதாகவும் கூறினாள்.

ஆம்… அந்தத் தாயின் மகளும் காமாலை நோயால்தான் இறந்திருந்தாள்.

மருத்துவ உலகமே இந்தப் பதிலால் திகைத்துப் போயிற்று!

மறுநாள்!

குளித்து பூஜையை முடித்துக்கொண்டு பரபரவென்று சந்திரகேசரைச் சந்திக்கத் தயாராகிவிட்டாள் சகுந்தலா. யாருடனும் ஒரு வார்த்தைக்கூட பேசவில்லை. மகன் சேகரும் ஆச்சரியப்பட்டான்.

ராம்நாத் தூக்கம் கலைந்து எழுந்திருக்கக் கூட இல்லை.

“மம்மி… என்ன மம்மி, எங்க கிளம்பிட்டீங்க. அப்பா ராத்திரி எத்தனை மணிக்கு வந்தாரு?”

“வந்து சொல்றேன் சேகர். அப்பா கண் முழிச்சு நான் எங்கன்னு கேட்டா, கோயிலுக்குப் போயிருக்கேன்னு சொல்.”

“எந்தக் கோயிலுக்கு மம்மி,”

“எல்லாம் வந்து சொல்றேன்டா. உன் அப்பாவைக் கொஞ்சம் ஜாக்கிரதையா பார்த்துக்கோ”

“என்ன மம்மி… அப்பாவுக்கு என்ன? எதுக்கு ஜாக்கிரதையான்னுல்லாம் சொல்றே!”

“சொன்னா கேளு சேகர். நான் வந்துடுறேன்.”

சகுந்தலா போகிற போக்கில் நடந்துகொண்டே பேசி – பரபரவென்று காரில் ஏறினாள்.

சேகருக்கே அவளது செய்கை ஆச்சரியமாகத்தான் இருந்தது.

அந்தக் காலை வேளையில் பத்திரிகை படித்துக்கொண்டிருந்த சந்திரசேகரும் ஒரு புயல்காற்று போல சகுந்தலா நுழைவதைப் பார்த்து அரண்டுதான் போனார்.

“அடடே… சகுந்தலாவா? என்னம்மா இது காலங்காத்தால…உக்காரு…” என்று அவள் அமர சோபா இருக்கையைக் காட்டினார்.

அவளும் இருக்கை நுனியில் அமர்ந்தவாறே சந்திரசேகரை ஒருவித பதைப்போடு பார்த்தாள்.

அவள் பார்வையும், அதன் தவிப்பும் சந்திரசேகரையும் உறுத்தியது.

“அண்ணே…”

“தெரியும் சகுந்தலா… வந்து நிக்கற வேகமே நீ எதுக்கு வந்துருக்கேன்னு சொல்லிடிச்சு. ராம்நாத் ஒரு முந்திரிக்கொட்டை. எதை வெளிய சொல்லணும், எதைச் செல்லக்கூடாதுங்கற விவஸ்தையே அவன்கிட்ட இல்லை.”

அவரிடம் கோபம் பீறிட்டது.

“அண்ணே… நீங்க அவருக்கு ஜோசியம் பார்த்தது உண்மையா? அதுல அந்த நூற்றியெட்டு நாள் கணக்கெல்லாம் எந்த அளவுக்கு உண்மை?”

‘என்னம்மா நீ… உனக்கு ஜோசியத்துலல்லாம் நம்பிக்கை இல்லைன்னுல்ல உன் புருஷன் சொன்னான்.”

“அது யார் சொல்ற ஜோசியங்கறதுல இருக்குண்ணே. லாட்ஜில அறை போட்டு கண்டதையும் அடிச்சு விடறவங்க மேல எனக்கு நம்பிக்கை கிடையாது. ஆனா, ஒரு மலையில் இருக்கற சாமியார் அந்த மாதிரி இருக்க வாய்ப்பு கிடையாது. அதுலேயும் பாணதீர்த்த மலைசாமி பத்தி நான் கேள்விப்பட்டு இருக்கேண்ணே…”

“அப்படியா… உனக்கெப்படி அவரைத் தெரியும்?”

“என் சிநேகிதி மூலமா…அவளும் அவரைப் போய் பார்த்துட்டு வந்துருக்கா. அவர் சொன்ன மாதிரிதான் எல்லாமே நடந்துச்சாம். வார்த்தைக்கு வார்த்தை சொல்லுவா.”

“இப்ப உனக்கு நம்பிக்கை இருக்குன்னு சொல்.”

“இப்படியொரு விஷயத்தைக் கேட்டுட்டு எப்படிண்ணே மனசு சும்மா இருக்கும்?”

“அதுவும் சரிதான். எனக்கே அந்த விஷயத்தை எப்படிச் சொல்றதுன்னு தெரியலை. ‘நாம ஒண்ணு நினைச்சா, தெய்வம் ஒண்ணு நினைக்கும்’னு சொல்வாங்க. அது சரியா இருக்கு.”

“அண்ணே… அந்தச் சாமியார் என்னண்ணே சொன்னாரு. அதை முதல்ல சொல்லுங்க.”

“சொல்றேன்ம்மா, நீ என்ன சாப்பிடறே… அதைச் சொல் முதல்ல.”

“எதுவும் வேண்டாம், என்ன நடந்ததுன்னு முதல்ல தெரியணும். அப்புறம்தான் என் மனசு அடங்கும்”.

“இல்ல சகுந்தலா… நடந்ததை கேட்டா உன் மனசு அடங்காது. இருக்கிற கொதிப்புதான் அதிகமாகும்.”

“அப்படின்னா என்ன நடந்ததுன்னு சொல்ல மாட்டீங்களா?”

“இதோ பார்… நான் சொல்றதாலேயோ, இல்லை சொல்லாததாலேயோ எதுவும் மாறிடப் போறதில்லை. எனக்கு தெரிஞ்சு… நீ இப்ப இருந்தே மனசுல சுமக்கறதுக்கு பதிலா உன் காதுல விழுந்த எல்லாமே பொய்யின்னு நினைக்கறதுதான் உனக்கு நல்லது சகுந்தலா.”

“இப்படி நீங்க சொல்லச் சொல்ல எனக்கு அந்தச் சாமியார் சொன்னதைத் தெரிஞ்சுக்கற ஆர்வம்தாண்ணே அதிகமாகுது”.

“இதோ பார்… வீட்டுக்குப் போய் உன் புருஷனோடு சந்தோஷமாக வாழற வழியைப் பாரு. நானே இப்ப ஜாதகம், ஜோசியத்தை வெறுக்க ஆரம்பிச்சிட்டேன். அந்தச் சாமியாரை பார்க்கப் போனதுதான், நான் செஞ்ச பெரிய தப்பு. சரியான முட்டாள்தனம்னு சொல்வேன்.”

“அண்ணே, விஷயத்துக்கு வாங்க, பேச்சை மாத்தாதீங்க, என்ன நடந்ததுன்னு எனக்கு தெரியணும். ஒரு வகையில் நானும், அந்த சத்தியவான் சாவித்திரியும் ஒண்ணு, அவர் உயிருக்கு எதாவதுன்னா நான் அந்த எமன்கிட்டயே போராடத் தயாரா இருக்கேன்.”

சகுந்தலாவின் குரவில் ஒரு ஆவேசம் தெரியவும், சந்திரசேகருக்கும் வேறு வழி தெரியவில்லை.

“அம்மாடி… நடந்ததை அப்படியே சொல்றேன். முதல்ல நானும் நம்பலை. அதே நேரம் நம்பாம இருக்கவும் முடியலை. ‘திரும்பி வர்ற வழியில மூணு சம்பவங்கள் நடந்தா, மரணம் நிச்சயம். அதைத் தடுக்க யாராலேயும் முடியாது’ன்னு அவர் சொன்னாரு. அதே மாதிரிதான் நடந்தது.

அவர் பொய் சொன்னதாகவோ, இல்ல… வேணும்னு சொன்னதாவோ நான் நினைக்கல. இந்தத் தகவல் முன்கூட்டியே தெரியவந்ததன் பின்னால ஒரு சரியான காரணம் இருக்குன்னும் சொன்னாரு. அது என்னன்னு கேட்டதுக்கு, அவர் என்கிட்ட சொல்லலை, உன் புருஷனே திரும்ப வருவார்னும் சொன்னார்.”

“என் வீட்டுக்காரர் அவரைப் பார்க்கப் போவாரோ மாட்டாரோ… நான் போய் பார்க்கறேன். ஏன் அவர் ஆயுசு இவ்வளவு நாள்தான்னு சொன்னீங்கன்னும் கேக்கறேன்.”

சந்திரசேகர் மவுனமாக சகுந்தலாவை வெறித்தார்.

“அண்ணே, தான் சொல்றது சரிதானே? என்கூட நீங்க வாறீங்களா?”

“…”

“சொல்லுங்கண்ணே… ஏதாவது பரிகாரம் செய்யணும்னாலும் செய்துடறேன். ஐம்பது வயசு சாகற வயசாண்ணே. நீங்களே சொல்லுங்க.”

“சகுந்தலா… அநாவசியமா பதற்றப்படாதே. நான் உன்னைக் கூட்டிட்டு போறேன். உன் புருஷனைப் பத்தின ரகசியத்தை அவர் ஒருவேளை உன்கிட்ட சொன்னாலும் சொல்லலாம். ஆமா… நீ இப்படி என்னைப் பார்க்க வந்துருக்கற விஷயம் அவனுக்குத் தெரியுமா?”

“தெரியாது… அவர் நல்லா தூங்கிகிட்டு இருக்கார், சேகர்தான் எங்க போறேன்னு கேட்டான். கோயிலுக்குன்னு பொய் சொல்விட்டு வந்தேன்.”

*சரி… அந்தப் பொய்யை அப்படியே ‘மெய்ன்டைன் பண்ணு. சாமியார் சொன்னதை ராம்நாத் நம்பாம இருக்கறதும் ஒரு வகையில நல்லதுதான். நம்பினா உன்னை மாதிரியே பரிதவிச்சுப் போயிடுவான்.”

“ஆமாம்… அவர் அவராவே இருக்கட்டும். அதுதான் அவருக்கும் நல்லது. நீங்க என்கூட புறப்படறீங்களா ?”

“நீ வீட்டுக்கு போம்மா… நான் என் தொழில் விஷயமா சில முக்கிய வேலைகளை முடிக்க வேண்டியது இருக்கு. முடிச்சுட்டு போன் பண்ணுறேன். திருப்பதி வரை போகப் போறதா, போன உடனேயே சொல்லிடு. அதே மாதிரி நான் கூப்பிடும்போது கிளம்பி வா. அதுக்கு பிறகு நடக்கறதெல்லாம் அந்தக் கடவுள் விட்ட வழி,”

சந்திரசேகர் ஒரு பெருமூச்சுடன் சொல்லி முடித்தார். சகுந்தலாவும் அரை மனதாக அப்போதைக்குக் கிளம்பினாள்.

7

‘அன்றைக்கு மருத்துவ உலகம் சந்தித்த ஆச்சரியமான அதிர்ச்சி இன்றளவும் தொடர்ந்தபடி உள்ளது. லண்டனில் ஒரு டாக்டர் இருக்கிறார். அவர் பிரத்தியேகமாக உடம்பில் உயிர் என்பது எங்கே, எப்படி உள்ளது என்கிற ஆராய்ச்சியில மட்டுமே இறங்கினார். உயிர் பற்றிய உலகத்தவரின் பார்வைகளையும், கருத்துகளையும் ஒட்டுமொத்தமாகத் திரட்டினார். இதில் மதங்களின் மூட நம்பிக்கை சார்ந்த கருத்துகளும் அடங்கும். அனைத்தையும் பரிசீலித்தவர்- இறுதியாக உடம்பு வேறு, ஆன்மா வேறு என்கிற முடிவிற்கு வந்தார்.

ஆனமா என்பது உடம்பில் உடம்போடு சேர்ந்து வளர்வதாகக் கருதியவர், இறுதியாக மூளையில் உள்ள திசுக்களின் அதிகபட்ச பயன்பாட்டில்தான் ஆத்ம ரகசியம் இருப்பதாகவும் முடிவுக்கு வந்தார். மூளை எப்பொழுதும் எண்ணங்களால் ஆனது. எண்ணக் கூட்டத்தால் ஆனதுதான் நமது மனது. எனவே, மனதுதான் ஆத்மா… அது உடல் நலத்தோடு தொடர்புடையது என்கிற முடிவிற்கு வந்துபோது, நமது நாட்டில்- குறிப்பாக தமிழர்களில் அறிவாகிய சித்தத்தால் மட்டுமே வாழ்கின்றவர்களான சித்தர்கள் பற்றியும் தெரியவந்தது.’

படகுக்காரன் வியப்புடன் சந்திரசேகரையும், சகுந்தலாவையும் பார்த்தான்.

இவன் பார்வையின் பொருள் தெரிந்து சந்திரசேகரும் வாயைத் திறந்தார்.

“என்னய்யா பாக்கறே… சாமியாரைப் பார்க்கத்தான் வந்துருக்கோம்.”

“அவருக்கு நீங்க வர்றது தெரியுங்களா?”- அவன் திருப்பி கேட்டான்.

“தெரியாது… அவர் என்ன செல்போனா வெச்சுகிட்டிருக்காரு. தகவல் சொல்றதுக்கு…”

“அதுக்கில்லீங்க …நேத்து உங்களுக்குப் பிறகு பத்திரிகைக்காரங்கல்லாம் வந்து மேல குடிசையில சாமி இல்லைன்னு திரும்பிப் போயிட்டாங்க. அதான் கேட்டேன்.”

அவனது பதில் சந்திரசேகருக்குக் கொஞ்சம் சுருக்கென்று இருந்தது. சகுந்தலாவும் பளிச்சென்று ஏமாற்றத்தைப் பிரதிபலித்தாள்.

“யோசிச்சிக்குங்க. சாமி அப்பப்ப காட்டுக்குள்ள எங்கேயாவது போயிடுவாரு. அவரைத் தேடி கண்டுபிடிக்கறது ஒண்ணும் லேசுபட்ட விஷயமில்ல.”

படகுக்காரன் பயமுறுத்தினான்.

சகுந்தலாவுக்கு அழுகையே வந்துவிட்டது.

“யோவ்… எல்லாம் இருப்பாருப்பா. நீ படகை எடு.” என்றபடியே அதில் சந்திரசேகர் பாய்ந்து ஏறினார்.

சகுந்தலா ஏற சற்று சிரமப்பட்டாள்.

படகுக்காரனும் கயிறை இழுத்து, எஞ்ஜினை ‘ஸ்டார்ட்’ செய்தான்.

புகுபுகு என்று நீர் கொப்பளிக்க படகும் நீரைக் கிழிக்கத் தொடங்கியது. சாதாரண நாளில் வந்திருந்தால், அந்த நீர்வெளியையும், சுற்றிலுமுள்ள மலை அழகையும் வெகுவாக ரசிக்கலாம்.

சகுந்தலா வீசும் காற்றுக்கு ஈடுகொடுத்து, சேலையைத் தலைக்கு மேல் கொண்டு சென்று வளைத்துப் போர்த்திக்கொண்டாள்.

“என்னன்னு தெரியலை… ஒரு பக்கம் சாமியாருங்களை எல்லாம் சுட்டுக் கொல்லணுங்கறாங்க. அவங்களும் அப்படித்தான் நடந்துக்கறாங்க, இன்னொரு பக்கம் அவங்களைத் தேடி கூட்டம் கூட்டமாக மக்கள் வாறாங்க. அதுலேயும் இந்தச் சாமியாரைப் பார்க்க பம்பாய், கல்கத்தாவுல இருந்தெல்லாம் வர்றாங்க. எனக்கே ஒண்ணும் புரியமாட்டேங்குது.”

படகின் ஓட்டத்துக்கு நடுவில் படகுக்காரனிடம் அலுப்பு.

சந்திரசேகர் அதற்கு பதில் கூற பிரியம் இல்லாதவராக நீர்வெளியைப் பார்த்தார். பிரமாண்டமாக தெரிந்தது ! தப்பித்தவறி விழுந்தால் நீச்சல் தெரிந்தாலும்கூட பயனில்லை. முதலையும், ஆற்று மீன்களும் ஒருவழி செய்துவிடும்.

சகுந்தலா கண்ணீரைத் துடைத்துக்கொண்டே இருந்தாள். அவளால் துக்கத்தை அடக்க முடியவில்லை. ‘எப்பொழுதும் மரணம் மட்டும் திடீரென்று வருவதுதான் சரி’ என்று அந்த வேளையில் சந்திரசேகருக்கும் தோன்றியது.

அதே நேரம் ராம்நாத்தை மரணம் எப்படி நெருங்கும் என்கி கேள்வியும் எழுந்தது. ஆனால், அது எப்படி சாத்தியம் என்று எந்த வகையிலும் பூகிக்க முடியவில்லை.

படகுத்துறையும் தென்பட்டு, பிரமாண்டமான பாணதீர்த்த அருவியும் கண்ணில்பட்டது. காதுகளில் அதன் பேரிரைச்சல். தள்ளாடும் படகில் இருந்த சந்திரசேகரும், சகுந்தலாவும் இறங்கிக்கொண்டனர்.

படகுக்காரன், ‘காத்திருக்கவா?’ என்று கேட்காமல் கேட்டான். அவனை அங்கேயே இருக்கச் சொல்லிவிட்டு, இருவரும் மலைப்பாதைகளில் மெல்ல மேலே ஏறினர்.

“பாத்து வா சகுந்தலா…” என்று சந்திரசேகர் முன்னால் நடந்தார்.

“அண்ணே… அந்தச் சாமியார் இருப்பார்தானே?” என்று சகுந்தலாவும் ஈனசுரத்தில் கேட்டாள்.

“இருக்கணும். வா, பாப்போம்” என்று சந்திரசேகரும் நம்பிக்கையோடுதான் பேசினார்.

ஆனால், குடிசையை அடைந்தவர்களுக்கு ஏமாற்றம் காத்திருந்தது. உள்ளே அவர் இல்லை.

“சாமி… சாமி…” என்று குரல் கொடுத்த சந்திரசேகருக்கும் அலுப்பாக இருந்தது.

‘ச்சே…” என்று கையை உதறிக்கொண்டபோது, தலையில் ஒரு விறகுக்கட்டுடன் சாமியார் வருவது தெரிந்தது. அவரைப் பார்க்கவும்தான் இவருக்கு உயிர் வந்தது.

“சகுந்தலா, அதோ சாமி… விறகுக்கட்டோட வந்துகிட்டு இருக்காரு பாரு” என்று கையைக் காட்டினார்.

சாமியாரும் குடிசையை நெருங்கி, விறகு கட்டை கீழே இறக்கினார். சந்திரசேகர், சகுந்தலாவை ஒரு பரிதாபப் பார்வை பார்த்தார்.

“சாமி..”

“என்னப்பா… உன் நண்பனோட மனைவியா இவங்க?”

“ஆமா சாமி. சரியா சொல்லிட்டீங்களே?”

“இவங்க இங்க வரணும். என்னைப் பார்க்கணுங்கறதுதான் தலையெழுத்தாச்சே?”

“சாமி… என் நண்பனுக்கு ஆயுசு நூற்றியெட்டு நாள்தான்னு நான் ஒண்ணும் சொல்லலிங்க, அவனே வாயை வெச்சுகிட்டு சும்மா இல்லாம இவகிட்ட உளறிட்டாங்க. அதுக்குப் பிறகு இவளாவ அதை மனசுல சுமக்க முடியலை. உங்களைப் பார்த்தே தீரணும்னு ஒத்த கால்ல நின்னுச்சு. அதான் கூட்டிட்டு வந்தேன்”

“தெரியும்ப்பா… ஒரு இடத்துல ஒரு விதை விழுந்தா, அடுத்து அங்கே ஒரு செடி உருவாகும்கறதுதான் இயற்கையாச்சே அப்புறமா அது மரமாகும். அதுக்கு பிறகு அந்த மரம், மேசை- நாற்காலின்னு மாறும். இப்படி ஒரு விதைப்புள்ளியில் ஆரம்பிச்சு, அது அதுக்கு ஒரு பயணப் பாதை இருக்கே. அதை மாற்றவோ, தடுக்கவோ யாரால முடியும்?”

அவர் தத்துவம் பேசினார்.

ஆனால், சகுந்தலா சரேலென்னு அவர் முன் விழுந்தாள். கண்ணீரால் அவரது கால்களையும் நனைத்தாள்.

“எழுந்திரும்மா… அழாதே… அமுறதால எதுவும் மாறாது” என்றார் சாமியார்.

“நீங்க அப்படிச் சொல்லக்கூடாது. அவர் உயிர் போகும்னு சொன்ன உங்களால, அது ஏன் எதனாலன்னு சொல்ல முடியாதா?” என்று திருப்பி கேட்டாள்.

“பிறக்கும்போதே முடிவான விஷயம் அது. உனக்கு, எனக்கு, இவருக்குன்னு… பிறந்துட்ட அவ்வளவு பேருக்கும் இருக்கற ஒரு விஷயம்… பிறந்த தேதி இருக்கற அவ்வளவு பேருக்கும் இறக்கும் தேதியும் நிச்சயம்மா.”

*சாமி… நான் இப்ப இதையெல்லாம் கேட்டுத் தெரிஞ்சுக்கவோ, தத்துவங்களைப் புரிஞ்சுக்கவோ வரலை. என் கணவர் நீண்ட காலம் வாழணும். அதுக்கு வழி கேட்டு வந்திருக்கேன்.!”

“அவர் நீண்ட காலம் வாழப் போறது நிச்சயம்மா. ஆனா… ” சாமியார் அதற்கு மேல் பேசாமல் சந்திரசேகரைப் பார்த்தார்.

“சாமி நான் வேணும்னா போயிடட்டுமா?”

“ஆமாம் மகனே… இது தேவரகசியம். உனக்குத் தெரியத் தேவையில்லை.”

“இப்பவே நான் விலகிக்கிறேன். நீங்க நல்லதா என் தங்கச்சிக்கு நாலு வார்த்தை சொன்னா, அதுவே எனக்கு போதும்.”

சந்திரசேகர் விலகிக்கொண்டார்.

அருகில் இருந்த ஒரு சிறு பாறை மேல் போய் அமர்ந்தார் சாமியார். பக்கத்தில் மற்றொரு பாறை. அதைக்காட்டி அதன் மேல் சகுந்தலாவை அமரச் சொன்னார்.

அவளும் பயபக்தியோடு உடம்பில் ஒருவித நடுக்கத்துடன் அமர்ந்தாள்.

“அம்மாடி… உனக்கு நான் சில முக்கியமான விஷயங்களைச் செல்றேன். அவ்வளவும் அசாதாரண விஷயங்கள். நான் சொல்லப்போற விஷயங்களை நீயா தெரிஞ்சுக்கணும்னா… நீ அதுக்காக பல ஜென்மங்களும், பலவித வாழ்க்கை முறைகளையும் அடையணும்.

தயிரை எவ்வளவுக்கு எவ்வளவு கடையறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு நெய் கிடைக்கும். அப்படி நெய் போல கிடைச்ச விஷயங்களைத்தான் நான் உனக்குச் சொல்லப்போறேன். அதை நீ எவ்வளவு தூரம் விளங்கிப்பேங்கறது போகப் போகத்தான் தெரியும். ஒரு விஷயம் காதுல விழறதுகூட பெருசில்ல… அதைச் சரியா புரிஞ்சுக்கறது ரொம்ப முக்கியம்.

காதுல மட்டும் விழுந்தா சத்தம். கருத்துவ விழுந்தாதான் அது சித்தம். எதுக்கு இவ்வளவு பீடிகை போடுறேங்கதை நீ போகப் போக புரிஞ்சுப்பே. நான் சொல்லப் போற விஷயங்கனை ஒரு தடவைக்கு மேல சொல்லமாட்டேன். அதையும் நீ மனசுல வெச்சுக்கோ.

உலகத்துல எவ்வளவோ ஜீவராசிகள்! மண புழுவில் இருந்து மறுவன வரை.. இதுவ மனுஷன் மட்டும்தான் ஐந்து பூதங்களாலான உடம்பு. ஆறாவது அறிவுன்னு மேம்பட்டவன். இந்தக் கூடுதல் அறிவு ஏழாவதான சப்தத்தால் வெளிப்படுது. அதாவது, எண்ணக் கூட்டங்களால் ஆனதுதான் மனசு. இந்த மனசுதான் ஆத்மா. இது வாழற வீடுதான் உடம்பு.

உடம்பு அஞ்சு பூதங்களால் ஆனதுன்னு சொன்னேன். அஞ்சு பூதங்களால் ஆனதுதான் இதோ இந்த மரம்- செடி, அதோ அங்கே மேயற ஆடு- மாடு எல்லாமே. இதை நிலம்சுற ஒரு பூதம் மட்டும்தான் வளர்க்கும்! எப்பவும் அஞ்சும் சேர்ந்தா அது வளரும்… வளரும்னு சொல்றதை மாற்றம்னும் சொல்லலாம்.

ஆமாம்,உயிர் உள்ள அவ்வளவும் மாறும்… மாறிகிட்டே இருக்கும். ஒரு கட்டத்துல அந்த மாற்றம் அப்படியே முடிவுக்கு வந்து, அஞ்சு பூதங்கறது ஒண்ணா மாறப் பார்க்கும். அதாவது, உயிர் போன உடம்பு புதைக்கப்பட்டு மண்ணாக மாறப்பார்க்கும். இதுதான் சுழற்சி. இதைத் தடுக்கவோ, ஒடுக்கவோ யாராலேயும் முடியாது.

நான் சொன்ன விஷயங்கள்ல இருந்து உனக்கு ஒரு உண்மை புரிஞ்சிருக்கும். அதாவது, உடம்பு மாற்றங்களுக்கு உள்ளாகி இறுதியில் மண்ணாகும். ஆனா, ஆன்மாவுக்கு அழிவு கிடையாது. அது அப்படியே இருக்கும். அதுக்கு ஒரு உதாரணம் சொல்லணும்னா… மகாத்மா காந்தியோட பிரசங்க உரை இப்பவும் ‘கேசட்’டுல இருக்கு. அதை நாம கேக்க முடியுது. ஆனா, அவரோட உடம்பைப் பாதுகாப்பா வெச்சிருக்க முடியலை.

இந்த உலகத்துல சில உடம்புகளை மூலிகைகளால் பதப்படுத்தி வெச்சிருந்தாலும், உள்ளது உள்ளபடி இருக்காது. கருவாடாத்தான் இருக்க முடியும். அதுக்கும்கூட ஒரு முடிவும், அழிவும் உண்டு ஆனா, சப்தமோ காலம் கடந்தும்… யுகம் கடந்தும் வாழும், அதுக்கு அழிவே கிடையாது வடிவமும் கிடையாது.”

நிறுத்தாமல பேசிக்கொண்டே போனார் சாமியார். குந்தலாவுக்குக் கொஞ்சம் புரிந்தது.. கொஞ்சம் புரியவில்லை ‘இப்பொழுது எதற்கு உடம்பு. ஆன்மா என்கிற இந்த விளக்கமெல்லாம்?’ என்று தனக்குள் கேட்டுக்கொண்டாலும் அதை அவரிடம் வெளிக்காட்டவில்லை. அவர் தொடர்ந்தபடி. இருந்தார்.

“அழியாதது ஆத்மா. அழியக்கூடியது உடம்பு, இதை சித்தர்கள் இந்த உலகத்துல பல வகையில் நிரூபிச்சி இருக்காங்க கூடுவிட்டுக் கூடு பாய்ஞ்சு உடம்பை ஒரு கட்டைன்னு சொல்லாம் சொல்லி இருக்காங்க.”

சாமியாரின் விளக்கத்துக்கு நடுவில் பொறுமை இழந்து கை நீட்டி ‘போதும்’ என்பது போல பார்த்தவள், “சாமி… இந்தக் கருத்தெல்லாம் இப்ப எனக்கு எதுக்கு? என் புருஷன் நீண்ட நாள் வாழ நான் வழி கேட்கிறேன்…” என்றாள்.

சாமியார் சற்று பெருமூச்சுடன் அவளைப் பார்த்தார். “ஏதேதோ சொல்லலை தாயே… நான் சொல்றதுலதான் உன் கணவன் விஷயமும் ஒளிஞ்சிருக்கு. அவன் ஆத்மாவுக்கு இருக்கற ஆயுள்காலம் உடம்புக்கு இல்லை.”

“அப்படின்னா…?”

“இப்ப இருக்கிற உடம்புக்கு இன்னும் நூற்றியேழு நாள் பலம். அதன் பிறகு ஆத்மா இன்னொரு உடம்புக்குள்ள நுழையும். அங்கே அதுக்கு எண்பது வருஷம் ஆயுள்.”

“மறு ஜென்மமா?”

“ஆமாம், அதுவேதான்.”

“போன ஜென்மத்துல என்ன பாவம் பண்ணேனோ, இப்ப கஷ்டப்படுறேன்னு சொல்றோமே… அந்த மாதிரியா?”

“அது வழக்கத்துல சொல்லப்படற விஷயம். ஆனா, உன் கணவன் கஷ்டப்படப் போறவன் இல்லை. சுகப்படனும். அதுக்குத்தான் மறு ஜென்மம்”

“எல்லோருமே அவங்கவங்க பாவ புண்ணியத்துக்கு ஏற்ப ஜென்மம் எடுக்கறதாதானே நம்ம மதம் சொல்லுது.”

“ஆமா… ஆனா, உன் ஆத்மா அடுத்த பிறப்புல எப்படிப்பட்ட உயிரா பிறக்குங்கறது நீ செய்யப்போற பாவபுண்ணியங்களைப் பொறுத்தது. ஆனா, உன் கணவன் விஷயம் அப்படி இல்லை. அது முடிவு செய்யப்பட்டது”.

“அது ஏன்… அவர் விஷயம் மட்டும் அப்படி?”

“அதை விதின்னும் சொல்லலாம். உன் கணவன் போன் ஜன்மத்துவ செய்த வினைகளோட செயல்பாடுன்னும் சொல்லலாம்.”

“இது என்ன பதில் சாமி… ஒருத்தர் இந்த மண்ணுல பிறந்துட்டாலே அவர் எதையாவது செய்து வாழ்ந்துதானே தீரணும். அப்படிச் செய்யற விஷயமதானே விதியா அடுத்த ஜென்மத்துக்கான அடிப்படையா மாறுது”

“நிச்சயமா அப்படித்தான். ஆனா, இதுல சில விதிவிலக்கான விஷயங்களும் நடந்துடுதும்மா, அதை நான் உனக்குப் புரிய வைக்கறது ரொம்ப கஷ்டம். இருந்தாலும் முயற்சி செய்யறேன். ஒரு மனிதனால் ஒரே நேரத்துல ஒரு விஷயத்துலதான் ஈடுபட முடியும். ஒரு செயலைத்தான் செய்ய முடியும். அதற்கான விளைவும் ஒண்ணாகத்தான் இருக்கும். ஆனால், இதுல விதிவிலக்காகவும் சில விஷயங்கள் உண்டு.

பரசுராமர்னு ஒரு பாத்திரம்… தாயோட தலையை வெட்டச் சொல்லி அப்பாவே உத்தரவு போடறார். அந்தப் பிள்ளைக்கு எப்படி இருக்கும்னு நீயே யோசிச்சுப் பாரு”

“நீங்க எனக்கு நேராவே பதில் சொல்லுங்க சாமி.”

“நேராத்தான் சொல்லிகிட்டு இருக்கேன். ‘தந்தை சொல் மிக்க மந்திரமில்லை’ங்கறது பழமொழி. அதே நேரம் ‘தாயிற் சிறந்த கோயிலுமில்லை’ங்கறதும் பழமொழிதானே?”

“நிச்சயமா?”

“இங்கே பரசுராமன் நிலைய நினைச்சுப் பாரு… அப்பா பேச்சைக் கேட்டு தாயை வெட்டினா அதுவும் பாவம். கேட்காம போனா அப்பா சொல்லைத் தட்டிட்ட பாவம்னு- அவருக்கு அப்படியொரு சோதனை…

“நீங்க எனக்கு நேராவே விளக்குங்களேன்.”

“நேராதான் விளக்கிட்டு இருக்கேன். பரசுராமர் இருந்த இக்கட்டான தருணத்துல ஒரு முடிவுக்கு வந்து-அப்பா பேச்சைக் கேட்டு, அம்மா தலையை வெட்டிடறார். அதனால அப்பா சந்தோஷப்பட்டு, ‘நீதான் என்னோட உத்தமமான பிள்ளை’ என்றார். உடனே பரசுராமரும், ‘என்னால் கொல்லப்பட்ட என் தாய்க்கு உயிர் வரணும்’னு வரம் கேட்கறார்.”

சாமியார் சொல்லிவிட்டு சகுந்தலாவை உற்றுப் பார்த்தார். “இந்தக் கதைக்கும், என் கணவர் சாவுக்கும் என்ன சம்மந்தங்க…?” அவள் விசும்பலுடன் கேட்டாள்.

“என்னம்மா… உனக்குப் புரியலையா ?”

“புரியலியே…”

“போகற உயிர் போய்த்தான் தீரும். அதே மாதிரிதான் பரசுராமனோட தாயோட உயிரும் போனது. விதிவிலக்கா அதே உயிர் திரும்பவும் வந்தது. அதே நேரம் பரசுராமரும் அப்பா சொல்லையும் காப்பாத்தி, தாயோட உயிரையும் காப்பாத்தி ஒரு கல்லுல இரண்டு மாங்காய் அடிச்சாரு…”

“அப்படின்னா என் கணவர் உயிரும் போயிட்டுத் திரும்ப வருமா?”

சாமியார் மவுனமாக வெறித்தார்.

“சொல்லுங்க சாமி… எனக்கு என் கணவர் எந்த வகையிலயாவது உயிரோட இருந்தா போதும்.”

“இதோ பாரும்மா… இதை நீயே ஒத்துக்குவே. இப்போதைக்கு இந்தத் தகவல்கள் உனக்குப் போதுமானது. நீ புறப்படு”

சாமியார் கை காட்டினார்.

சகுந்தலாவுக்கு ஏனோ ஏமாற்றமாகத்தான் இருந்தது. இவர் சொன்ன கதை தன் கணவர் விஷயத்தில் எப்படிப் பொருந்தப் போகிறது என்பதையும் அவளால் புரிந்துகொள்ள முடியவில்லை. சோர்ந்த நிலையில் அங்கிருந்து கிளம்பி படகுத்துறைப் பக்கம் வந்தாள்.

அங்கே காத்துக்கொண்டிருந்தார் சந்திரசேகர்.

எதுவும் கேட்காமல், “போகலாமா?” என்றார்.

அவளும் நடந்தாள். படகுக்காரனும் காத்திருந்தான்.

இருவரும் ஏறிக்கொள்ளவும் படகு புறப்பட்டது.

அங்கு நீரைக் கிழிக்கும் சப்தத்தைத் தவிர வேறு சப்தமில்லை.

சற்று தொலைவில் முதலை ஒன்று மட்டும் முதுகைக்காட்டிவிட்டு நீருக்குள் புகுந்துகொண்டது.

சந்திரசேகர் மெல்ல, “சகுந்தலா” என்றார்.

அவளும் ஏறிட்டாள்.

“சாமி என்ன சொல்லி இருந்தாலும் சரி. நீ தைரியமா இரு. ராம்நாத் சஞ்சலம் இல்லாம அவன் போக்கு போய்கிட்டு இருக்கான். உன் வருத்தத்தை அவன் உணர்ந்தா, அதற்காக வருத்தப்படுவான். ஆகையால செயற்கையாகவாவது சந்தோஷமா இரு. ஏன்னா…”

அவர் ஏதோ கூற வந்து முடியாமல் அத்தோடு நிறுத்திக்கொண்டார்.

அவளது விழிகளில் கண்ணீர்த் திரை!

8

‘பூர்வ ஜென்மம் பற்றிய எண்ணங்களை அப்பட்டமான கற்பனையாக மட்டுமே விஞ்ஞானிகள் பார்க்கின்றனர். ஏனென்றால், ஒருவர் உடலமைப்பு என்பது பரம்பரை தொடர்ச்சியில் வரும் உயிரணுக்களில் அடங்கி உள்ளது. ஒருவரது மரணத்தில் முதலில் அழிவது உயிரணுதான். பின் அதைச் சுமந்து நிற்கும் உடல்.

உடம்பானது நெருப்போடு சாம்பலாகிவிட்ட நிலையில், திரும்பவும் அதே போல ஒரு உடலமைப்புக்கு வாய்ப்பே இல்லை. ஒருவேளை இறந்த உடம்பின் ஆத்மா திரும்ப அதே தாய்- தந்தை வயிற்றில் பிறந்தால் கூட, உடல் கூற்றில் மாற்றம் இருந்தே தீரும். எனவே, ஒரே உருவம் சாத்தியமில்லை.

சரி..ஆத்மா அதே ஆத்மாவாக இருப்பது சாத்தியமா என்றால், அதுவும் சாத்தியமில்லை. காரணம், உடம்பின் மூனை செல்களைப் பயன்படுத்தியே ஆத்மா தன்னைக் காட்டிக்கொள்கிறது. அந்த மூளை செல்கள் பிணமான நிலையில்- சாம்பலாக்கப்பட்டுவிட்ட நிலையில் ஆத்மாவாலும் தன் கடந்த காலப் பதிவுகளைப் பெற முடியாது. எனவே, எப்படிப் பார்த்தாலும் மறுபிறப்பு எனும் விஷயம் ஒரு மனிதக் கற்பனையே அன்றி நிஜமாக நிகழ சாத்தியமே இதே விஞ் இல்லை என்கிறது விஞ்ஞானம். உண்மைதான்… ஞானம் சில புதிரான விஷயங்கள் முன் அதை விளங்கிக்கொள்ள முடியாமல் மடங்கிப் போய்விடுவதுதான் ஆச்சரியம்!’

ஒரு மாதம் ஓடிவிட்டது! ராம்நாத் கிட்டத்தட்ட பாணதீர்த்த மலை சம்பவத்தை மறந்தேவிட்டார். பரபரப்பான வேலைப்பளு… ‘பிசி’யாக அதன் காரணமாய் வெளியூர் பயணம் என்று இருந்தார்.

அவருடைய மகன் சேகர், கல்லூரிப் படிப்பில் கவனமாக இருந்தான். ஆனால் பாவம் சகுந்தலா, அவள் வரையில் நாள்காட்டியில் கிழிபடும் ஒவ்வொரு நாளும் அவளது இதயத்தை ஒரு கிள்ளு கிள்ளியது.

ராம்நாத் எதிரில் தனது சோகத்தை அடக்கிக்கொண்டாள். தனியே போய்ப் போய் அழுதாள். நடுநடுவே சாமியார் சொன்னதெல்லாம் பொய்யாகிவிடும். எல்லாமே வெறும் கற்பனை என்றும், தவறுதலாகச் சொல்லப்பட்டவை என்றும் கூட எண்ணிக்கொண்டாள்.

ஒரு நாள்..

அலுவலகத்தில் மும்முரமாக வியாபார சம்மந்தமான கடிதங்களைப் பார்த்து பதில் தயார்பண்ணிக் கொண்டிருந்த ராம்நாத்தின் இதயபாகத்தில் எலி தன் பற்களால் கடிப்பது போல வலி… முகத்திலும் முத்து முத்தாக வியர்க்கத் தொடங்கிவிட்டது.

ஏ.சி. அறையில் உடம்புக்கு வியர்த்தால் அது இதயத்தில் ஏற்படப்போகும் திணறலுக்கான அறிகுறி, படித்தவரான ராம்நாத்துக்கும் தெரியாமல் இல்லை. மாரடைப்பின் அறிகுறியாக அவர் உணரத் தொடங்கும்போதே இதயம் கத்தியால் நறுக்கப்படுவது போல ஒரு வலி படுவேகமாக பரவி, அவரது முகத்தைக் கோணச் செய்தது. அப்படியே சுருண்டு விழுந்தார்.

சுதாரித்து எழுந்து தட்டுத்தடுமாறி நடந்து சென்று தொலைபேசியைத் தொட்டார். மூளை ‘செல்களை வலிந்து செயல்படுத்தி டாக்டரின் தொலைபேசி எண்ணை ஞாபகப்படுத்திக்கொண்டார்.

எண்களைத் தட்டினார். அதன்பின் சரியாக முப்பத்தி ஆறு நிமிடங்கள் அப்படியே தரையில் மரவட்டை போல கருண்டே கிடந்தார். டாக்டர் தேடி வந்து அவரைத் தொட்டபோதுகூட ராம்நாத்திடம் பிரக்ஞையே இல்லை.

டாக்டருக்கு அப்பொழுதே ராம்நாத்தின் நிலை புரிந்துவிட்டது.

படகுத்துறை!

நீர்வெளி மேல் காற்று கோடு போட்டு விளையாடிக்கொண்டிருந்தது. குட்டிக்குட்டியாக ஒரு சாண் உயர அவைகள் ஓடி வந்து ஓடிவந்து மடிந்து போயின, பாணதீர்த்த அருவியிலும் அசாத்திய நீர்ப் பெருக்கு, அணையின் நீர் மட்டம் கிடுகிடுவென ஏறிக்கொண்டிருந்தது.

அந்த நீர்க்கூட்டத்தைக் கிழித்துக்கொண்டு வந்தான் படகுக்காரன். கரையைத் தொட்டவன் எதிரில் ஒரு உருவம். அதைப் பார்த்தவன் ஆச்சரியத்தைக் கண்ணில் காட்டினான்.

“சார் நீங்களா?” என்று உதடு இரண்டும் முணுமுணுத்தன. அவன் அப்படிக் கேட்டது ராம்நாத்தைத்தான். முகத்தில் முப்பது நாள்தாடி. கண்ணைச் சுற்றிலும் கருவட்டம். அவர் உடையில் கூட அழுக்கு தெரிந்தது.

‘என்ன சார் கோலம் இது? போன தடவை உங்களைப் பாத்தப்போ சும்மா ஜம்முன்னு ராஜா மாதிரி இருந்த ஆனா நீங்க?”

அவர் மவுனமாகப் படகில் ஏறினார்.

“சார், எங்க சார் போகணும்… சாமியாரைப் பார்க்கவா?”

ராம்நாத்திடம் ஆமோதிப்பு பாவனை.

“சாமியார் கூட கேட்டார் சார். இப்பதான் அருவிக்கரை கிட்ட பார்த்தேன். நீங்க வருவீங்கன்னு சொன்னார்.”

ராம்நாத் முகம் அதைக்கேட்டு ஆச்சரியத்தை வெளிக்காட்டியது.

அப்படியே படகும் புறப்பட்டது. ராம்நாத் நீர்வெளியைப் பார்த்தபடியே அமர்ந்திருந்தார். அவரது மவுனம் படகுக்காரனை என்னவெல்லாமோ செய்தது.

இந்த முறை, படகை உரசிக் கொண்டு முதலை வந்துவிட்டுப் போனது.கிட்டத்தட்ட ராம்நாத் அமர்ந்திருக்கும் இடத்திற்கு அருகில் உரசிவிட்டுப் போன அது, அடுத்த முறை வாயைப் பிளந்து காட்டிவிட்டுப் போய்விட்டது.

ஆனால், ராம்நாத்திடம் மட்டும் எந்தத் திகைப்பும் இல்லை.

படகுக்காரன்தான் வெகுவாகப் பயந்தான்.

“சார்… நடுவுவ வந்து உட்காருங்க சார்….” என்றான்

ராம்நாத் துளிகூட கவலைப்படவில்லை. அவ்வளவு விரக்தி அவரிடம். படகு பயணித்தபடியே இருந்தது. இறுதியாக அது பாணதீர்த்தக் கரையை அடைந்தபோது, அங்கே ஒரு பாறை மேல் சாமியார்.

வெடவெடவென்று வீசும் காற்றில் அவரது தாடியும், தலைமுடியும் பல பக்கமாகப் பறந்துகொண்டிருந்தன கருவறை மேல் சாமி நிற்பது போலவே இருந்தது அவர் நின்ற கோலம்.

ராம்நாத்துக்கும் கூட அவர் கடவுளாகத்தான் தெரிந்தார். அவரைப் பார்த்தபடியே படகைவிட்டு இறங்கியவர், கும்பிட்டபடியே முன்னேறினார். இவர் நெருங்கவும் சாமியாரிடம் ஒரு புன்னகை.

அந்தப் புன்னகையின் பொருளை மொழி பெயர்ப்பதும் கடினம். அதில் ஏராளமான உட்பொருள்.

“சாமி..”

“வாப்பா.. நீ இன்னிக்கு வருவேன்னு எனக்குத் தெரியும்.”

“எப்படி சாமி?”

“இது என்ன கேள்வி. உன் பூர்வஜென்யம், இந்த ஜென்மம், நீ எடுக்கப்போற அடுத்த ஜென்மம் வரை எல்லாவற்றையும் கணக்குப் போட்டு தெரிஞ்சு வெச்சிருக்கறவன் நான். அப்படிப்பட்ட எனக்கு இன்னிக்கு நீ என்னைப் பார்க்க வருவேங்கறது கூடவா தெரியாது?”

“உண்மைதான் சாமி… எனக்குத்தான் உங்க மதிப்பு தெரியாம போயிடிச்சு, சாமியார்கள்னாலே ஏமாத்து போவழிகள்னு நான் நினைச்சதால, உங்களையும் சரியா புரிஞ்சுக்காம போயிட்டேன்”

“அதுல ஒண்ணும் தப்பு இல்லை. எப்ப எது நடக்கணுமோ, அப்பதான் அது நடக்கும். இது உலக நியதி, அதை மாத்தத்தான் யாராலேயும் முடியாதே?”

“மூணு கால நடப்பைச் சொல்ல முடிஞ்ச உங்களால எதையும் மாத்த முடியாதுன்னு சொல்றதுதான் வியப்பா இருக்கு!”

“அதுதாம்ப்பா உண்மை. இந்தப் பிரபஞ்சத்தைப் படைச்ச ஆதிசக்தியே கூட தன்னைத்தானே சில கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்திக்கிட்டவதான். ஒரு தொழிற்சாலை கட்டி அதுல வேலையாட்களைப் போட்டு உற்பத்தியைத் தொடங்கற ஒரு முதலாளி, அந்தத் தொழிற்சாலைக்குன்னு சில விதிமுறைகளையும் உருவாக்கி இருப்பார். அதுல ஒண்ணு காலம் தவறாம வேலைக்கு வர்றது. விதிமுறையை உருவாக்கின அவரும் காலம் தவறாம வேலைக்கு வந்தாத்தானே வேலைக்காரங்களுக்கும் அது ஒரு முன் உதாரணமா இருக்கும்?”

“வாஸ்தவம் சாமி… விதியை உருவாக்கற நபரே அதைப் பின்பற்றும்போதுதான் அந்த விதிக்கு மதிப்பும், மரியாதையும் அதிகரிக்குது. எனக்கு இப்ப எவ்வளவோ விஷயங்கள் புரிய ஆரம்பிச்சிடுச்சு. நான் நூற்றியெட்டு நாள்ல மரணிக்க போறேன்னு முன்னே நீங்க சொன்னப்ப- ஏதோ வாய்க்கு வந்ததைச் சொல்றதாதான் நினைச்சேன். இப்பதான் அது எவ்வளவு பெரிய உண்மைன்னு தெரியுது. திடீர்னு வந்த மாரடைப்பு, அதை வெச்சு டாக்டர் எனக்கு பண்ணின ஆலோசனை – இவை எல்லாமே எதுவும் நம்ம கைல இல்லைங்கறதை எனக்கு புரிய வெச்சிடுச்சு.”

மெல்ல நடந்தபடி ராம்நாத் பேசுவதை சாமியாரும் கேட்டுக்கொண்டே நடந்தார்.

“சாமி… ஒரு சந்தேகம். எனக்கு மட்டும் என் சாவு பத்தி ஏன் முன்னாலயே தெரியவந்தது?”

கேட்க வேண்டிய அந்த கேள்வியைக் கேட்கவும் செய்தார். சாமியாகும் பதில் சொல்லத் தொடங்கினார்.

“உன் நாடியில் வந்த தகவல்படி சொல்றேன்.நூற்றியெட்டாவது நாள் பிரியற உன் உயிர் அப்பவே ஒரு மூன்றாம் மாசக் கருவா இருக்கற பார்கவிங்கற பெண்ணோட கர்ப்பத்துல உள்ள பிண்ட உயிரா போய்ச் சேரும். அதன்பிறகு அந்தப் பெண்ணுக்கு மகனா நீ பிறப்பே. இந்த ஜென்மத்துல எந்த தேதியில்… எந்த நிமிடத்துல… எந்த நொடியில் நீ பிறந்தியோ அதே தேதி- அதே நொடிதான் உன் அடுத்த பிறப்போட கால நேரமும் ஆகும். அதுவே நீ மறு ஜென்மம் எடுத்திருக்கேங்கறதுக்குச் சாட்சியாகும்.

பாவம் பார்கவி… அவளோட கர்மம், அவளைக் காதலிச்சு கர்ப்பமாக்கியவன் இப்ப உயிரோட இல்லை. ஒரு விபத்துல இறந்துட்டான். அவனால பிண்டமும், உன்னால உயிரும் பார்கவிக்கு கிடைக்கணும்கறது ஒரு கணக்கு. இந்தப் பூமியில நாம எங்கே பிறக்கறோம், அப்புறம் யாருக்கு மகனா- மகளா பிறக்கிறோம். அதுக்கு பிறகு எந்த நாள்ல.. எந்த நட்சத்திரத்தின் பிடியில் பிறக்கிறோம்கற எல்லாமே ஒரு கணக்கு. அந்தக் கணக்குக்கு அடிப்படை நாம செய்யற பாவ புண்ணியங்கள். உன் கணக்குப்படி நீ பார்கவிக்கு மகனா பிறக்கணும். பிறக்கவும் போறே…”

ஒரு பெரிய உயிரின் போக்கைப் பற்றிக் கூறிய சாமியாரைத் திரும்பவும் ஒரு பிரமிப்புடன் பார்த்தார் ராமதாத்.

“என்னப்பா…பிண்டம், உயிர், கணக்கு அது இதுங்கறது உனக்கு குழப்பமா இருக்கா?”

“ஆமா சாமி… அது மட்டுமில்லை. இது எனக்கு மட்டும் ஏன் தெரியவரணும்?”

அந்தக் கேள்வி அவரையே சற்று சிந்திக்க வைத்தது.

“என்ன சாமி யோசிக்கிறீங்க… இந்த உலகத்துல தினசரி நூறு பேர் பிறக்கறாங்க, நூறு பேர் சாகறாங்க. அவங்களும் பாவ புண்ணியம் செய்யாம இல்லை, உங்க கணக்குப்படி அவங்களுக்கும் மறு ஜென்மம் இருக்கலாம். அதற்கு ஏற்ப எனக்கொரு பார்கவி மாதிரி, அவங்களுக்கு ஒரு பார்வதி, பத்மினின்னு தாய்மார்களும் இந்தப் பூமில இருக்கலாம். எல்லாருக்குமா அவங்க சாவு, அடுத்த ஜென்மம் பத்தி தெரியவருது?”

“நல்ல கேள்வி… இதுக்கு பதிலைக் காலம்தான் சொல்ல முடியும். நான் யூகமா ஒரு பதிலைக் கூற விரும்பலை.”

“என்ன சாமி… இப்படிச் சொன்னா எப்படி? ஒரு மனிதனுக்கு தன் மரண தேதி முன்னாலேயே தெரியவருவதால், அவன் எவ்வளவு சித்திரவதை படுவான்கறது உங்களுக்கு தெரியாதா?”

“தெரியும்ப்பா… ஒருவேளை நீ மரண அழுத்தத்தைக் கொஞ்ச நாளாவது அனுபவிக்கணுங்கறது உன் விதியோ என்னவோ?”

“அதுதான் சாமி காரணமாக இருக்க முடியும். அதே நேரம் முன்கூட்டியே தெரிய வந்ததுக்கான காரணத்தையும் நான் சாகறதுக்குள்ள கண்டுபிடிக்கறேன். உங்களைச் சந்திக்க வந்ததுல ஒரு பாதி குழப்பம் நீங்கிடிச்சு. மறுபாதி அப்படியே இருக்கு.”

“அதுவும் நிச்சயம் போகப் போசு நீங்கிடும்ப்பா”

“இருக்கிற கொஞ்ச நாட்கள்ல நாள் அதுக்கான காரணத்தைத் தேடறேன். அதுக்கு முந்தி பார்கவிங்கற அந்தத் தாயை நான் பார்க்க முடியுமா ?”

“தாராளமா… அந்தப் பார்கவி எங்கே இருக்கா. எப்படி இருக்காங்கற விபரங்கள் நாடியில ஒரு பாட்டாவே இருக்கு. அதைச் சொல்லவா?”

“சொல்லுங்க சாமி. குறிச்சுக்கறேன்!”

பாறை மேல் அமர்ந்து கொண்டே சாமியார் அந்தப் பாடலை மனப்பாடமாக ஒப்பிக்கத் தொடங்கினார்.

“மங்கையவள் தேசமது பரசுராமதேசம்
மாதவளின் அத்தனவன் மாதவனின் நாமம்
நங்கையவள் இல்லருகே நீர் விளங்கு கூடம்
நீர் விளக்கு கூடமதும் நெருமேன பழாவாகும்
நெருமேள புழாவதும் தலைநின்ற சேரியதின்
கிழக்கு திசையாகும்!”

சாமியார் பாடி முடித்து, பொருளும் சொல்லத் தொடங்கினார்.

மங்கையவள் தேசமதும் பரசுராம தேசம்மனா… கேரளம்னு பொருள். மாதவளின் அத்தன்னா அப்பா, அந்த அப்பா பேர் மாதவன். நங்கையவள் இல்லருகே நீர் விளக்கு கூடம்னா…. வீட்டுக்குப் பக்கத்துல குளம் இருக்குன்னு அர்த்தம். அதன் பேர் கூட நெருமேளப் புழாவானகுளம். தலைச்சேரிங்கற ஊர்ல கிழக்குத் திசையில் இருக்குங்கறார்.”

“ஓ… என்ன ஒரு ஞானம்? இது போதும் சாமி. தலைச்சேரி எனக்குப் பழக்கமான ஊர்தான். வியாபார விஷயமா பல தடவை போயிருக்கேன். அங்கே இந்த இடத்தைக் கண்டுபிடிக்கறது எனக்கு ஒண்ணும் பிரச்சினை இல்லை.”

“ஆமாம், உனக்கு இனி எதுவுமே பிரச்சினை இல்லை. நூத்தி எட்டாவது நாளோட இறுதி நிமிடம் வரை நீ இந்தப் பூமியில யிர் வாழ்வே. அதுவரை உன் மேல ரெயிலே ஏறினாலும், நீ எப்படியோ பிழைச்சிப்பே. அது மட்டுமல்ல… உனக்கு இந்த மரண ரகசியத்தைச் சொன்ன இந்தக் காலம் உன்னைத் தொடர்ந்து கையைப் பிடிச்சு ஒவ்வொரு இடமாக கூட்டிட்டுப் போகும். அப்படிப் போகும்போது உனக்கு எல்லா கேள்விகளுக்கும் விடையும் தானாக தெரியவரும்.’

சாமியார் கைகளை உயர்த்தி ஆசீர்வதித்தபடியே சொல்லி குமுடித்தார்.

“அப்ப நான் புறப்படுட்டுங்களா?”- ராம்நாத்தும் கேட்டுவிட்டு கைகளைக் கூப்பினார்.

சாமியார் முகத்தில் மாறாத அதே புன்னகை.

ராம்நாத்தும் திரும்ப நடந்தார்.

படகுக்காரன் காத்துக்கொண்டிருந்தான்.

ராம்நாத் முகத்தில் ஒரு புதிய தெம்பைப் பார்த்தான். படகைக் கிளப்பியபடியே கேட்டான்.

“சார்… சாமியாரைப் பார்த்த பிறகு உங்களுக்கு ஒரு தெளிவு வந்திடுச்சு போல தெரியுதுங்களே” என்றான்.

ராம்நாத் மறுக்காதபடி அவனைப் பார்த்தார்.

படகிடம் நல்ல சீற்றம். நீரைக் கிழித்தபடி படகு பறந்து கொண்டிருந்தது. பால் பொங்கி வழிவது போல நீரலை இருமருங்கும் பொங்கி வழிவிட்டது. திடீரென்று அதன் போக்கில் ஒரு தடுமாற்றம். சற்று திணறிய படகு பிறகு வேகமெடுத்தது.

சரியாக கரைக்கு நூறடி தூரத்தில் திரும்பவும் தேங்கிய படகு அப்படியே நின்றுவிட- ‘ப்ளக்… ப்ளக்’ என்று நீர்க்குமிழ் விடும் சப்தம். இவர்கள் காலடியில் அணைக்கட்டு நீர் படகுக்குள் புகுந்துகொண்டிருந்தது. படகிலும் விரிசல். எஞ்ஜினும் செயலிழந்துவிட்டிருந்தது.

படகுக்காரன் பதைப்போடு கத்த ஆரம்பித்தான். “சார்… படகு விரிசல் விட்டுடுச்சு. அஞ்சு நிமிஷத்துல தண்ணி முழுசும் உள்ளே பூத்து படகு மூழ்கிடும். நல்லவேளை, அதோ நூறடி தூரத்துல கரை உங்களுக்கு நீச்சல் தெரியுமா?” என்று கேட்க. “தெரியாதே” என்றார் ராம்நாத்.

“என்ன சார் இது சோதனை…?” என்று படகுக்காரன் தொடர்ந்து பரிதவிக்கும்போதே படகுக்குள் பாதி அளவுக்கு நீர் புகுந்துவிட்டது.

ராம்நாத் வரையில் அந்தச் சம்பவம் அவரது மரண சாட்சி போல தெரிந்தது. நிச்சயம் தனக்கு அங்கே ஒரு விபரீதமும் நடந்துவிடாது என்று நம்பியவர், பதற்றமில்லாமல் படகுக்காரனைப் பார்த்தார்.

அவனிடம் சட்டென்று ஒரு எண்ணம். “சார் இருங்க… நான் குதிச்சு கரைக்குப் போய் அங்கே இருக்கற படகோட வர்றேன். அதுவரை தைரியமாக படகுலயே இருங்க. அதோ அந்த பேரல் பிளாஸ்டிக். அது தண்ணியில மிதக்கும். அதைப் பிடிச்சுகிட்டா கூட போதும். நீங்க மூழகமாட்டீங்க”- என்று வழியும் கூறிவிட்டுப் படகில் இருந்து ஒரே தாவு தாவி நீர்வெளியில் பாய்ந்தான்.

அதேசமயம் பக்கவாட்டில் முதலையின் முதுகு தெரிந்தது. பகீர் என்றது, ராம்நாத்துக்கு.

அடுத்த சில நொடிகளில் நீந்த ஆரம்பித்துவிட்ட அவனை நோக்கி ஆவேசமாகப் பாய்ந்தது முதலை. அவனும் அதைப் பார்த்துவிட்டான். பதறிப்போனான்.

நீர்வெளி மேல் சுத்தக்கூட அவனுக்குத் திராணியில்லை. முதலையும் அவனை நோக்கி ஒரே பாய்ச்சல் பாய்ந்து, அவனது வயிற்றை தனது பிளந்த வாயின் நடுவே அடக்கியது. அப்படியே அவன் வீறிட்டு அலற, தண்ணீரின் அடி ஆழத்திற்கு அவனை இழுத்துச் செல்ல ஆரம்பித்தது.

சில நொடிகள்தான்!

நீர்வெளி மேலே இப்போது எந்தச் சலனமும் இல்லை. ஒரு உயிர் கோரமாய் பிரிந்ததற்கான தடயங்களும் தெரியவில்லை. ஒரே நிசப்தம். படகும் முற்றாக மூழ்கிவிட- அவன் சொன்னது போலவே அந்த பிளாஸ்டிக் பேரலைக் கட்டிக்கொண்டார்.

அது மட்டும் அவரையும் சுமந்துகொண்டு மிதந்தது. அவருக்கு உதவுவது போல ஒரு பலத்த காற்றும் வீசவும், அந்த பேரல் அப்படியே படகு போல கரையை நோக்கி நகர்ந்தது.

கரைவெளி மேல் கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்த சிலர், ராம்நாத்தைக் கையை நீட்டி இழுத்துப் போட்டனர். அவர்கள் எல்வோர் முகத்திலும் ஒருவித பீதி… பரிதாபம், ராம்நாத்திடம் மட்டும் ஒரு வெளிச்சம். மரணிப்பது தெரியாத மரணங்களுக்கு நடுவில் தனது மரணம் மட்டும் முன்கூட்டியே தெரியவந்துள்ளது என்றால், நிச்சயம் அதன்பின்னால் ஒரு காரணம் இருக்கிறது என்கிற வெளிச்சம்!

ஒருவித ஞான மனநிலையில் திரும்பி நீர்வெளியைப் பார்த்தார்.

பாவம்… அந்தப் படகுக்காரன் முதலைப் பசிக்காகவே தன் உடம்பை வளர்த்திருக்கிறான்!

9

‘பூர்வஜென்மம் பற்றி விஞ்ஞானபூர்வமாகச் சிந்திக்கும்போது, ‘லாஜிக்’காகக் கிடைக்கும் விடைகளில் பூர்வஜென்மம் ஒரு அசாத்தியம். அது கற்பனையில் மட்டுமே சாத்தியம் என்றாலும், சிலரது அனுபவங்கள் விஞ்ஞானிகளையே வாயடைக்கச் செய்வதாகவே உள்ளன.

எங்கோ பிறந்த ஒருவர்தான் பூர்வஜென்ம நினைவுகளால் உந்தப்பட்டு, தான் முன்பு வாழ்ந்த இடத்தைத் தேடிச் செல்வதும்… அங்கே அவர் முந்தைய ஜென்மத்தில் எழுதிய கடிதங்களில் உள்ள எழுத்தும், தற்போதைய அவரது கையெழுத்தும் அப்படியே ஒத்துப்போவதை வைத்தும், பூர்வ ஜென்மம் பற்றிய ஆய்வாளர்கள் குழம்பிப் போகிறார்கள்.

எது எப்படியோ… பூர்வஜென்மம் பற்றிய கேள்விகளும் இன்றைய விஞ்ஞான உலகில் கோடானு கோடி கேள்விகளாக, தெளிவான விடையற்ற நம்பிக்கை மட்டுமே சார்ந்த ஒன்றாவே உள்ளது’.

தலைச்சேரி!

கேரளாவின் கடலோர நகரங்களில் ஒன்று. அரபிக் கடலின் ஒரு பகுதி தலைச்சேரிக்குள்தான் அலைவீசிக் கிடக்கிறது. ‘காவிகட்’ என்னும் கள்னிக் கோட்டையை அடுத்து வரும் நகரமான தலைச்சேரியின் ரெயில் நிலையத்தில், மங்களூர் மெயிலில் வந்திறங்கிய ராம்நாத்துக்கு- புதிதாக ஒரு ரத்தம் தனக்குள் ஊறுவது போல உணர்வு-

ஸ்டேஷனைவிட்டு வெளியில் வந்தார்.

ஆட்டோக்காரர்கள் காத்துக் கிடந்தனர்.

தாடியும், மீசையுமாக ஒரு யோகி போலத் தெரியும் ராம்நாத்தை அவர்கள் வியப்பாகப் பார்த்தனர்.

கோட்டும், சூட்டுமாய் மிடுக்காகவே அவரைப் பார்த்துப் பழக்கப்பட்டவர்களுக்கு- அவருடைய கோவம் ஒரு ஆச்சரியம். எப்பொழுதும் ஒரு குறிப்பிட்ட நபரின் ஆட்டோவில் ஏறி, பஜாரில் உள்ள பிரபலமான லாட்ஜில்தான் அறை போட்டுத் தங்குவார்.

அந்த ஆட்டோக்காரனுக்கே ராம்நாத்தை அடையாளம் தெரியவில்லை. அவராகத் தேடிச் சென்று அவன் முன் நின்றார். கூர்ந்து பார்க்கவும் அவன் அடையாளம் கண்டுகொண்டு, “சாரே” என்றான்.

பின் அவனது கை, குட்கேஸை வாங்கி ஆட்டோவில் போட்டுக்கொண்டது. வழியில், “எந்தா சாரே… இது எந்தா கோலம்.. சபரிமலை சாமி ஆயியோ?” என்று கேட்ட கேள்விக்கு இவர் ஒரு சிரிப்பு மட்டும் சிரித்தார்.

சாதாரணமாக சகஜமாகப் பேசுவார். அவருக்கு கேரளத்தை மிக பிடிக்கும். இதமான தட்பவெப்பநிலை, பசுமையான சூழல், எளிமையான வேட்டி- சட்டை அணிந்த மக்கள், திரும்பின பக்கமெல்லாம் நேந்திரம் பழமும், பச்சைக் காய்கறிகளும் குவிந்து கிடக்கும் கடைகன் என்று அது ஒரு ரட்சிக்கப்பட்ட தேசமாகத்தான் அவருக்குத் தோன்றும்.

அப்போதெல்லாம் அந்த ஆட்டோக்காரனிடம், ‘பொறந்தா உங்க ஊர்ல பொறக்கணும்ய்யா… என்ன ஒரு அழகு?’ என்று சிலாகிப்பார். இன்னும் சில நாட்களில் அது உண்மையாகப் போவதை உணர்ந்தவருக்கு சற்று சிலிர்ப்பாகக்கூட இருந்தது.

அந்த நொடியில் தன் மனைவி சகுந்தலா, மகன் சேகர் என்று எல்லோரையுமே மறந்துவிட்டார். ஆட்டோ டிரைவரே அதிசபித்தான். லாட்ஜில் இறக்கி விட்டுவிட்டு பணத்தை வாங்கிக்கொண்டு மீதி சில்லறையைத் தரப் பார்த்தவனிடம், வேண்டாம் என்று கூறிவிட்டார். அவன் அதையும் ஒரு அடுத்த ஆச்சரியமாக எடுத்துக்கொண்டான். லாட்ஜில் ஏ.சி. அறையில் அடைந்துகொண்டவர், போனில் அந்த ஊரைச் சேர்ந்த தாமஸ் என்பவரை அழைத்தார்.

தாமஸ் அவரது தொழில் நிமித்தம் உதவுகின்ற அந்த ஊருக்கான அவரது ஏஜென்டு! தாமசும் அடுத்த அரை மணியில் வந்து சேர்ந்துவிட்டார்.

“எந்தா சாரே… எந்தா இது திடீர் விசிட்” என்று குடையை மடக்கி அக்குளில் வைத்தபடியே அமர்ந்தார்.

“தாமஸ்… ஒரு முக்கியமான விஷயம். ரொம்ப தனிப்பட்ட விஷயமும்கூட.”

“எந்தா சாரே… இதெந்தா கோலம்… ஏதாகிலும் பிரார்த்தனையோ?”

“அதெல்லாம் ஒண்ணுமில்ல. எனக்கு இப்ப இந்த தலைச்சேரில நெடுமேளபுழாகிட்ட இருக்கற மாதவன் என்கிறவரைப் பார்க்கணும்.”

“நெடுமேளபுழா… ஆங்… அவ்விட மாதவனோ….?”

“ஆமாம்… அவருக்குக்கூட பார்கவின்னு ஒரு பொண்ணு இருக்காளாமே…?”

“எனக்கு அறியில்லா. அவ்விட போய் சோதிச்சால் மதி. அதொண்ணும் பெரிய விஷயமல்ல. எங்கில் ஆ மாதவனை நோக்குன்ன காரணம்?”

“அதை பிறகு சொல்றேன். அவரை நான் பார்க்கணும். அவரோட தனியா மனம்விட்டுப் பேசணும்.”

“பிசினஸ் மேட்டரோ…?”

“ஆங்… அப்படித்தான் வெச்சுக்குங்களேன்”.

“செரி… நான் போய் ஆயானை நோக்கிப் பறைஞ்சிட்டு வரும். வரட்டே…?”

தாமஸ் அப்போதே கிளம்பிவிட்டார். ராம்நாத்துக்குப் பரபரவென்று இருந்தது. பாட்டில் வந்தபடியே மாதவன் என்பவர் அங்கே இருப்பாரா, அவரைச் சந்திக்க முடியுமா என்றெல்லாம் அவருக்குள் சந்தேகம் பூசிக்கொண்ட கேள்விகள்.

ஒரு அரை மணியில் தாமஸிடம் இருந்து போன் மட்டும் வந்தது.

“சாரே…”

“என்னய்யா?”

“நான் ஆ மாதவன் நாயரைக் கண்டு.”

“ஓ..அவர் இருக்காரா… அந்தப் பார்கவி…”

“ஆ பெண் குட்டியும் உண்டு. பட்சே நான் நோக்கிட்டில்லா”

“அப்படி ஒருத்தர் இருந்தா அதுவே போதும் எனக்கு…?”

இந்தப் பதிலோடு ராம்நாத் முத்து முத்தாய் பூத்த வியர்வையைத் துடைத்து விட்டுக்கொண்டார்.

“சாரே… ஆ மாதவன் நாயர் எனிக்கு கூட்டுக்காரன்… ஐமீன் பெஸ்ட் பிரெண்டும்கூட…”

“ரொம்ப சவுக்கியமா போச்சு…”

“தாங்கள் இவ்விட வந்தெங்கில் நான் பரஸ்பரம் அறிமுகம் செய்யும்.”

“இதோ இப்பவே ஆட்டோ பிடிச்சு வரேன்… ஆட்டோகாரன்கிட்ட அட்ரஸ் என்னன்னு சொல்லணும்?”

“நெடுமேளபுழான்னு பரைஞ்சால் மதி. புழாவுக்கு வலப்பக்கம் மாதவன் நாயர் வீடு. முகப்பில் நான் அவ்விட நிற்கும்.”

“குட்.. இப்பவே வந்துடறேன்.”

ராம்நாத் பரபரப்புடன் தயாரானார். மளமளவென்று குளித்து முடித்தார். நெற்றியில் விபூதி பூசிக்கொண்டார். வேட்டி- ஜிப்பா என்று மாறினார்.

ஒட்டலைவிட்டு வெளியே வந்தவர், ஆட்டோ பிடித்து ஏறி அமர்ந்து, “நெடுமேௗபுழா” என்றார். ஆட்டோவும் பறக்கத் தொடங்கியது.

தாமஸ் சொன்னபடியே- மாதவன் நாயர் வீட்டுக்கு வெளியே நின்று கொண்டிருந்தார். ராமநாத் வரவும் தயாரானார்.

ராம்நாத்தும் தனது அடுத்த ஜெனம் சூழலை ஒரு அதிசயக் காட்சி போல பார்க்கத் தொடங்கினார்.

நெடுமேளபுழா ஒரு ஆழமான ஆறு சிறிது தூரம் ஓடிச்சென்று அரபிக் கடலில் கலந்தபடி இருந்தது. இடையில் ரெயில்வே பாலம். அதன் மேல் கேரளா எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் நோக்கி ஓடிக்கொண்டிருந்தது. பெட்டி பெட்டியாக இரும்பு வீடுகள்.. விரைந்து செல்லும் விதம் தனி அழகாக இருந்தது.

“சாரே… வரணும்.” என்று தாமஸ், ராம்நாத்தைக் கையைப் பிடித்து இழுத்துச் சென்றார். அது ஒரு எளிய ஓட்டு வீடு. சுற்றிலும் சுமாரான இடம். அதில் வாட்டசாட்டமாய் பலா மரங்கள். அவைகளைப் பார்த்துக்கொண்டே நடந்தார்.

வீட்டு வாசல் முகப்பில் வயதான பெண்மணி. நெற்றியில் சந்தனப் பொட்டுடன் ராம்நாத்தை வியப்பாகப் பார்த்தாள். அவளுக்கு பின்னால் இடுப்பு வேட்டியும், திறந்த மேனியுமாய் மாதவன் நாயர், நொறுங்கியது போல ஒற்றை நாடி தேகம். குழி விழுந்து போய் பஞ்சடைந்த கண்கள். முகத்தில் ஒரு அசாத்திய சோகம். அவரைப் பார்க்கவும் ராம்நாத்துக்கே என்னவோ போல் இருந்தது.

“நமஸ்காரம்…”

ராம்நாத் அவரைப் பார்த்து வணங்கினார். அவரும் தடுமாற்றமுடன் வணங்கினார். அப்படியே, ‘எங்கே பார்கவி?’ என்று ராம்நாத் பார்வை துழாவியது.

அடுத்த ஜென்மத்துத் தாயை இந்த ஜென்மத்திலேயே பார்க்கும் பாக்கியம் இவ்வுவகத்தில் யாருக்குக் கிடைத்திருக்கிறது? ஆனால் அவன் கண்ணில் படவில்லை.

“யாரைத் தேடறீங்க ” மாதவன் நாயர்தான் கேட்டார். ராம்நாத் அதற்குப் பதில் சொல்லத் தெரியாதவர் போல விழித்தார்.

“நீங்க..”

“நான் ராம்நாத்… திருநெல்வேலியில் பெரிய பிசினஸ்மேன். வருஷத்துக்கு முப்பது கோடி ரூபாய் வியாபாரம்.”

“சந்தோஷம்… என்னைப் பார்க்க வந்த காரணம்?”

“சொல்றேன். நான் ஒரு முக்கியமான விஷயமா நாடி ஜோசியம் பார்த்தேன். அதுல பரிகார காண்டத்துல உங்க குடும்பம் பத்தின குறிப்பு வந்தது.”

“என் குடும்பம் பத்தியா?”

“ஆமாம்… உங்களுக்கு பார்கவின்னு ஒரு மகள்….?”

“உண்டு”

“அவங்க இப்ப கர்ப்பமா இருக்காங்களா?”

ராம்நாத் கேட்ட கேள்வி மாதவன் நாயர் முகத்தில் ஒரு இடியை இறக்கியது.

“அது…அது…அது எப்படி தாங்கள் அறியும்?”

அவர் கேட்கும் விதத்தைப் பார்த்தால், அது ஒரு ரகசியம் என்கிற மாதிரி ஒரு தொனி.

“உங்க மக கர்ப்பமா இருக்கற விஷயமும் அந்த நாடியில் இருந்தது”.

“ஓ…இது எந்தா சோதனை…?” மாதவன் நாயர் கண்களில் குளம் கட்டிக்கொள்ளத் தொடங்கியது.

தாமசுக்கே அது ஆச்சரியம்தான் கண்ணீரைச் சுண்டிவிட்ட படியே மாதவன் நாயர், தாமஸைச் சற்று வெளியேறச் சொன்னார். தாமசும் வெளியேறினார். பின் அவரிடம் கேட்டார்.

“சாரே… எண்ட மகளிண்ட கர்ப்பம் ஒரு பரமரகசியம். அதை தாங்கள் எங்கன அறியும்?”

“நான்தான் சொன்னேனே.. உங்களைப் பத்தின குறிப்பெல்லாம். நாடியில் வந்தது.”

“இல்ல… நான் நம்பமாட்டேன்.என் மகளிண்ட கர்ப்பத்துக்கு நீங்கதான் காரணம். ஏன்னா.. அவ கெட்டுப்போய் பிள்ளையோட இருக்கற விஷயம் அவளுக்கே தெரியாது!”

மாதவன் நாயர் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். அதைக் கேட்கவும் ராம்நாத்துக்கு பகீரென்றது. அதற்கேற்ப வெறித்த விழிகளுடன் பார்கவியும் அறை ஒன்றில் இருந்து வெளிப்பட்டாள்.

அவளிடம் பிரக்ஞை இல்லை. சுற்றி நடப்பதை அறியும் எந்தவித முகாந்தரமும் தெரியவில்லை. அவளைப் பார்த்த நொடிக்கு, இவருக்கு அடுத்த கட்ட அதிர்ச்சி. அப்படியே கண்கள் இமைக்க மறந்த நிலையில் அவளையே வெறித்தவர் முகம், குளித்தது போல் வியர்வையில் நனைய ஆரம்பித்தது. திரும்பவும் மார்புப் பக்கம் வலி எடுக்கத் தொடங்கியது.

அப்படியே சுருண்டு விழுந்தவர், அந்த நிலையிலும் பார்கவியைத்தான் வெறித்தார்.

மாதவன் நாயருக்கும் ராம்நாத்தின் சங்கடமாகிவிட்டது.

“எந்தா சாரே…?” என்று பதறிப்போனார். சப்தம் கேட்டு ஓடி வந்த தாமஸ், கண நேரத்தில் புரிந்துகொண்டார்.

“ஓ… இது ஹார்ட் அட்டாக்கிண்ட லட்சணங்கள்” என்றவர், அப்படியே ராம்நாத்தை அள்ளி தோளில் போட்டுக்கொண்டு வாசற்புரம் விரைந்தார். நல்லவேளை… ஆட்டோக்காரன் ஒருவன் எதிரில் வந்தான்.

அவனாகவே அருகில் வந்து தாமசையும், ராம்நாத்தையும் ஏற்றிக்கொள்ள- மாதவன் நாயரிடம் மட்டும் ஒரு தாள முடியா தவிப்பு.

அவரிடம் அந்தச் சந்தனப் பொட்டுக் கிழவி நெருங்கி வந்தாள்.

“எந்தா இது…ஆரானு ஆ ஆளு…. எந்தா சம்பவிச்சு? நீ எந்தா பேடிக்கின்னது?” என்று மலையாளத்தில் அவள் குமுறத் தொடங்கிவிட்டாள்.

“அம்மே.. அந்த ஆள்தான் நம்ம பார்கவியைக் கெடுத்தவன், பார்கவியோட எதிர்காலத்தை உத்தேசிச்சு செத்துப் போயிட்ட நம்ம கொச்சுண்ணியைப் பார்கவிண்ட புருஷன்னு நான் சொன்னது ஒரு பக்கம், ஆனா, அவ கர்ப்பமா இருக்கறது உனக்கும், எனக்கும் தவிர அவளுக்கே கூட தெரியாது. இப்படிப்பட்ட நிலையில இந்த ஆள் வந்து அவ கர்ப்பமா இருக்காளான்னு கேட்டா என்னா அர்த்தம்?”

“அப்படின்னா.”

“இவன்தான் நம்ம பார்கவியைக் கெடுத்துருக்கணும். இல்லாட்டி இவ நிலை இவனுக்கு எப்படித் தெரிய முடியும்? எப்ப கெடுக்கப்பட்டாளோ அப்ப இருந்தே அவ சுய நினைவோட இல்லை. ஆகையால அவளைப் பத்தி தெரிஞ்சுகிட்டு மேற்கொண்டு எதையோ எதிர்பார்த்து வந்திருக்கான். நான் உண்மையைச் சொல்லவும், மாரடைப்பு வந்த மாதிரி நடிச்சு வெளியேறிட்டான். அவனை நான் சும்மா விட மாட்டேன்.”

மாதவன் நாயர் மனம் குமுறினார்.

“அந்த ஆளைப் பார்த்தா வயசான மனுஷனா தெரியுது. முகத்தைப் பார்த்தா தப்பா எதுவும் தெரியலியே மாதவா…”

*நீ சும்மா இரு… இவங்கள்லாம் பார்க்கத்தான் அப்படி இருப்பாங்க. நான் நினைக்கறேன்.. பார்கவி உயிரோட இருக்காளா, இல்லை செத்துட்டாளான்னு தெரிஞ்சுக்க வந்துருப்பான்னு… ”

“அப்படி வந்திருந்தா கர்ப்பம் பத்தி ஏன் சொல்லணும்?”

பாட்டி கூட மடக்கிப் பிடித்தாள்.

“நீ என்னம்மா சொல்றே?”

“அவன் நாடி ஜோசியம் பத்தி சொன்னதை நீ கேட்டியா?”

“ஆ…அதெல்லாம் சும்மா. ஒரு தமிழ்நாட்டுக்காரன் நாடியில மலையாளியான நம்மைப் பத்தி எப்படிச் சொல்ல முடியும்?”

“போடா பைத்தியகாரா.. மலையாளி- தமிழன் எனகிறதெல்லாம் இப்ப இருக்கற காலத்துல நாம பிரிச்சு வெச்சுக்கிட்டது. நாடிங்கறது முனிவர்கள் பல நூறு வருஷங்கள் முந்தி எழுதினது… அதுல எல்லாம் ஒரே கணக்குத்தான்…”

“நீ என்னம்மா சொல்றே?”

“நீ அவசரப்பட்டுட்டே போ… போய் அந்த ஆளைப் பாரு நெஞ்சுவலி வந்த மாதிரி அவர் ஒண்ணும் நடிக்கலை. நடிக்கறவங்களுக்கு வியர்க்காது. போ… போய் அவர் யார், என்ன ஏதுன்னு விசாரி. அவர் எதுக்கு வந்தாருன்னு தெரிஞ்சுக்கோ..”

மாதவன் நாயரின் அம்மா, அவருக்கு ஒரு நேரான வழியைக் காட்டினாள்.

நாயரும் துண்டை விரித்து மார்பை முடிக்கொண்டு புறப்பட்டார்.

10

‘மறு ஜென்மம் பற்றி நமது புராணங்களில் நிறையவே குறிப்புகள் காணக் கிடைக்கின்றன. மறு ஜென்மத்தை நமது புராணங்கள் அறுதியிட்டு உறுதியாகவும் கூறுகின்றன. ராமாயணத்தில் லட்சுமணன் அந்த ஆதிசேஷனின் மறு அவதாரம். பின் அவனே பிரகலாதன், அதற்கு பின் பிரகலாதனின் ஆன்மாதான் ராகவேந்திர சுவாமிகளாக அவதரித்தது என்பார்கள்.

அதேபோல சீனிவாச கல்யாணத்தில் வரும் சீனிவாசனின் தாய் முந்தைய ஜென்மத்தில் நாராயணனைத் துதித்து வரம் பெற்றவன். அதனால் மறு ஜென்மத்தில் அவளது மகனாக. சீனிவாசனாக பெருமாள் பிறக்கிறார். அது மட்டுமல்ல கருவில் ஒரு குழந்தை வளரத் தொடங்கும்போதே புறத்தில் நடக்கும் வங்கள் அதைப் பாதிக்கின்றன, அதன் மனதில் பதிகின்றன ன்பது பிரகலாதன் கருவில் இருந்தபோது நாரதர் அவருக்குப் புறத்தில் இருந்தே கூறிய கதைகள் ஒரு உதாரணம்.

இருவில் இருந்த குழந்தையான பிரகலாதன், நாரதரால்தான் அரிபக்தி பெற்றாள். பின் அவனை தந்தை இரண்யகசிபுவால் கூட மாற்ற முடியவில்லை,

நமது புராணங்கள் உயிரின் யாத்திரையை ஜென்மங்களாகப் பதிவுசெய்து மறுஜென்மத்தை வலியுறுத்துகின்றன. ஆனால் அதே உடலமைப்பு, குரலமைப்பு போன்றவைகளை அவை வலியுறுத்தவில்லை’.

ஆஸ்பத்திரிக்கு வந்து பார்த்த மாதவன் நாயருக்கு அப்போதுதான் தான் செய்த தவறு புரிந்தது. ராம்நாத் அவசரப் பிரிவில் படுத்திருந்தார். உள்ளே செல்ல டாக்டர்கள் அனுமதிக்கவில்லை. வெளியேயே நின்றார். சற்று தள்ளி பரபரப்பாகக் காணப்பட்ட தாமஸ், அவரைப் பார்க்கவும் நெருங்கி வந்தார்.

“மாதவா… எந்தா இது? அவர் என்ன கேட்டார். நீ என்ன சொன்னே?”

“தாமஸ்… அது வந்து…”

“பறையு… ராம்நாத் ஒரு தங்கமான மனுஷன். அவருக்கு மாரடைப்பு வர்ற அளவுக்கு ஏதோ நடந்திருக்கு.”

“சத்தியமா இவருக்கு இப்படி ஆகும்னு எனக்குத் தெரியாது. இவர் பேசின பேச்சு, இவரை நான் சந்தேகப்பட வெச்சிடிச்சு”.

“அப்படி என்ன பேசிட்டார்… என்கிட்ட தொழில் விஷயம்னுதான் பறைஞ்சார்.”

“இது தொழில் விஷயமில்லை. வாழ்க்கை விஷயம் தாமஸ்.”

‘அதுதான் எந்தா?”

“இல்ல… இது என் மகளோட வாழ்க்கைப் பிரச்சினை, என் மகள் காலேஜ் விளையாட்டு போட்டிக்காக திருநெல்வேலிக்கு போயிட்டு வந்ததுல இருந்தே அவளுக்கு புத்தி சரியில்லை. இதுல ஒரு நாள் வாந்தி எடுத்து மயங்கி விழுந்தா. என் அம்மாவே நாடி பார்த்துட்டு அவ கர்ப்பம் தரிச்சிருக்கான்னு சொன்னப்போ, எனக்கு இடி இறங்கின மாதிரி இருந்தது. யார் இப்படி செய்ததுன்னு கேட்டா, அவ சொல்ற நிலையில் இல்லை. ஒருமாதிரி ஆயிட்டா என் மகன் பார்களி.

நான் வேறு வழி தெரியாம ஒரு நம்பூதிரியை கூட்டி வந்து பிரசன்னம் பார்த்தேன். ‘இதெல்லாம் ஒரு தோஷம்.. ஆனா. கூடிய சீக்கிரம் எல்லாமே சரியாயிடும் இவனைக் கெடுத்தவன் தேடி வருவான்’னு பிரசன்னத்துவ வந்தது. அதேபோல இந்த ஆள் வரவும், நான் இவர்தான்னு நினைச்சிட்டேன்,”

மாதவன் நாயர் விரிவாகச் சொல்லி முடித்தார்.

தாமஸ் முகத்திலும் தாராளமான அதிர்ச்சிகள்,

“மாதவா… கொஞ்சம் பொறுமையா இரு. ராம்நாத் கண் திறக்கட்டும். அவர் மனசுல ஏதோ ஒரு இனம் புரியாத குழப்பம். நானும் அவர் வீட்டுக்குத் தகவல் தரப் போனேன். ஆனா, அவர் வக்கீலை மட்டும் வரச் சொல்லி இருக்கார்.”

“வக்கீலையா… எதுக்கு?”

“தெரியாது… நீ பொறுமையா இரு. ஒண்ணு மட்டும் உறுதி உன் மகளுக்கு நிச்சயம் ஒரு நல்ல வழி பிறக்கும். எனக்கு ராம்நாத்தை தெரியும். இவர் ரொம்ப நல்ல மனுஷர்.”

தாமஸ் எவ்வளவு தூரம் சமாதானப்படுத்த முடியுமோ அந்த அளவுக்கு சமாதானப்படுத்திவிட-மாதவன் நாயரிடமும் துளி ஆசுவாசம்.

மறுநாள்!

அலறி அடித்துக்கொண்டு வந்தனர் ராம்நாத்தின் மனைவி சகுந்தலாவும், மகன் சேகரும். வக்கீல் தகவல் கொடுத்திருந்தார்.

சகுந்தலா கிட்டத்தட்ட துரும்பாகி இருந்தாள். முந்தியால் வாயை முடியபடிதான் அறைக்குள் நுழைந்தாள்.

ஒரு சிறு சப்தம்கூட ராம்நாத்தைப் பாதிக்கும் என்று டாக்டர்கள் எச்சரித்து இருந்ததால் வாயை மூடியபடியே அழுதான் சேகரும் அப்பாவை சோகமாகப் பார்த்தான். அவரை வெகு கம்பீரமாக மட்டுமே பார்த்துப் பழகியவன்…

சிறிது நேரம் நின்று கவனித்தான். ராம்நாத நெற்றியில் நெல்வாலி கோமதியம்மன் குங்குமப் பிரசாதத்தைத் தடவிவிட்டாள் சகுந்தலா. அவள் கைகள் நடுங்கிற்று. பக்கமாக காலண்டர் கண்ணில் பட்டது. அதைப் பார்க்கவும் அவனது கண்க அகண்டன. சேக்கும் கவனித்தான்,

பின் இருவருமாக வெளியே வந்தனர்.

வக்கீல் காத்துக்கொண்டிருந்தார். கூடவே தாமஸ்.

சகுந்தலாவையும், சேகரையும் அழைத்துக்கொண்டு ஆஸ்பத்திரி வரவேற்பு அறையில் போய் அமர்ந்தார் வக்கீல். மெல்லப் பேச ஆரம்பித்தார்.

“அம்மா… சார் என்னை வரச் சொல்லி இருந்தார். நான்தான் மனசு கேக்காம உங்களுக்குத் தகவல் கொடுத்தேன்.”

“சந்தோஷம். உங்களை அப்பா எதுக்கு வரச் சொன்னார்?”

“வக்கீலை ஒரு சொத்துள்ளவர் எதுக்கு வரச் சொல்லுவார்?”

“உயில் எழுதவா?”

“ஆமாம்…உங்க அவ்வளவு சொத்தையுமே நான் இப்ப அவர் சொன்னபடி மாத்தி உயில் எழுதிட்டேன்.”

“அப்படி எழுதணுமா என்ன…? அவருக்கு ஏதாவது ஆனா, சொத்தெல்லாம் தானாக அவர் மகனான எனக்கு வந்து சேரும்”.

“ஆமாம்… ஆனா, இது அவர் சுயமாக சம்பாதிச்ச சொத்து. அவர் யாருக்கு வேணா எழுதி வைக்கலாம்.”

“நீங்க சொல்றதைப் பார்த்தா..?”

“ஆமா… அவர் இந்தத் தலைச்சேரியில் உள்ள ஒரு மலையான குடும்பத்துக்கு தன் அவ்வளவு சொத்தையும் எழுதி வெச்சுட்டார்”

“கடவுளே… அப்ப எங்க கதி”

“பேங்க்ல உள்ள பணம் தொண்ணூறு லட்சமும் உங்க அம்மாவைச் சேரும். உங்களுக்கு அவர் ஒரு நயாபைசா கூட எழுதி வைக்கல…”

*வக்கில் சார் என்ன இது கொடுமை!”

“நானும் கேட்டேன் அதுக்கு உங்க அப்பா சிரிச்சார். என் பையனை நான் அவன் பையனா இருந்து பார்த்துப்பேன்று சொன்னார். எனக்கு ஒண்ணும் புரியலை…”

“என்ன இது உளறல்?”

“அவர் சொன்னதைச் சொல்லிட்டேன் உங்க அப்பா கண் திறக்கட்டும். நீங்காே கேளுங்க”

அவர் அப்படிச் சொன்னதோடு எழுந்துகொண்டார். சகுந்தலா மட்டும் மவுனமாக அழுதபடியே இருந்தாள்.

“அம்மா கேட்டியா… அப்பாக்கு என்னம்மா வந்தது? நல்லாதானேம்மா இருந்தார். ஏன்ம்மா கொஞ்ச நாளாவே இப்படியெல்லாம் நடந்துக்கறாரு.”

அம்மாவைப் பிடித்து உலுக்கத் தொடங்கினான் சேகர், தாமஸ் வரையில் அங்கு நடக்கும் ஒவ்வொரு விஷயமுமே விதோதமாக – ஒரு அதிசய சம்பவமாகத்தான் இருந்தது.

சகுந்தலா எதுவும் கூறாமல் மவுனமாக அழுதான்.

சேகருக்கு எரிச்சலாக வந்தது. நேராக வக்கீலிடம் சென்றான்.

“சார்…. அப்பா எதுக்காக இப்படி சம்மந்தம் இல்லாத ஒரு குடும்பம் பேர்ல சொத்தை எழுதி இருக்காரு. உங்களுக்குக் காரணம் தெரியுமா ?- கேட்டான்.

“சம்மந்தம் இருக்குன்னு சொன்னார் மிஸ்டர் சேகர்.”

“என்ன சம்மந்தம்… இவங்க யாரோ. நாங்க யாரோ? ஆனாலும் இது பைத்தியக்காரத்தனம்”.

“ஐ ஆம் சாரி சேகர்… ஒரு வக்கீலா நான் என் கடமையைச் செய்யறேன். நிச்சயமா உங்க அப்பா உங்ககூட பேசுவார். அவரே உங்களுக்கு எல்லா விஷயங்களையும் சொல்லலாம்.”

“சரி… இப்ப இந்த உயிலுக்கு என்ன அவசியம்?”

“இதுக்குப் பதில் உங்க அம்மாவுக்கே தெரியுமே…”

“அம்மா… என்னம்மா இதெல்லாம்? இவர் சொல்றாரு?”

“வக்கீல் சார்… நீங்க போங்க, நான் சொல்லிக்கிறேன்”.

“அம்மா… என்ன விஷயம்”

“இதோ பாருடா… எனக்கு ஒரு விஷயம்தான் தெரியும். உன். அப்பா இன்னும்..”

ஏனோ சகுந்தலாவால் அதற்கு மேல் வார்த்தைகளை வெளிப்படுத்த முடியவில்லை.

“என்னம்மா… சொல்லுங்க.”

“எப்படிடா அதை நான் என் வாயால சொல்வேன்?”

“உனக்குத் தெரியும்னா நீ சொல்லித்தான் ஆகணும். எனக்கு இங்கே நடக்கற எல்லாமே பெரிய புதிரா இருக்கு”

“உனக்குப் புதிர். எனக்கு அதுக்கும் மேல…”

“போதும்மா… தயவு செய்து விஷயத்துக்கு வா,”

“உன் அப்பாவோட ஆயுள் இன்னும் பதிமூன்று நான்தான்.”

“இது என்ன பேத்தல். யார் சொன்னது?”

“யார் சொல்லி இருந்தா என்ன? அவர் உன்னையும், என்னையும்விட்டு போய்கிட்டே இருக்கார்.”

“இதோ பாரும்மா… இன்னிக்கு மாரடைப்புங்கறது சர்வ சாதாரணமான ஒரு விஷயம். முப்பது வயசுல ‘பைபாஸ் சர்ஜரி’ நடக்குது. காரணம், உணவு கலாசாரம். உங்க காலம் பழைய சாத காலம். ஆனா, எங்க காலம் பீஸா- பர்கர் காலம், மாரடைப்பு வந்துட்டதாலேயே ஒருத்தர் இறந்துட மாட்டாரு”.

“எனக்கும் தெரியும்… மாரடைப்பு வர்றவங்களுக்கு மரணம் வருதோ, வரலையோ… மரணம் வந்தாகணும்னு இருக்கறவங்களுக்கு அதுதான் குறுக்கு வழி”.

“அதான் பைத்தியக்காரி மாதிரி நீயும் மாறிட்டியா? இப்படி ஒரு அபத்தத்தை உனக்குள்ள எத்தினது யார்?”

*அபத்தம் இல்ல சேகர் .. இதெல்லாம் நிதர்சனம்”

“மண்ணாங்கட்டி இப்பல்ல புரியுது… யாரோ அப்பாவை நல்லா மூளைச் சலவை பண்ணி இருக்காங்க. ‘நீங்க சீக்கிரம் செத்துப் போயிடுவீங்க. உங்க சொத்தை யாருக்காவது தர்மம் பண்ணிடுங்க. அப்பதான் உங்களுக்கு மோட்சம்’னு எந்த ஜோசியக்காரனாவது எதாவது சொன்னானா… அப்பா அதை நம்பி…”

‘உன் அப்பா அதையெல்லாம் நம்பறவரா என்ன?”

“நம்பாமதான் ஊர்விட்டு ஊர் வந்து இப்படி கிடக்கறாராக்கும்?”

“பொறுமையா இருடா…. அவர் கண் முழிக்கட்டும், உனக்கு எல்லா உண்மையும் தெரியும்”.

“என்னம்மா பெரிய உண்மை? பல கோடி ரூபா சொத்தை இப்படியா யாருன்னே தெரியாதவங்களுக்கு எழுதி வைப்பார்?”

சேகர் பலமாகக் கத்தி கூச்சல் போடும்போது மாதவன் நாயர் அங்கு நுழைந்திருந்தார். அவரது பரிதாப தோற்றம் சகுந்தலாவையே என்னவோ செய்தது.

அவர் நேராக போய் ராம்நாத்தைப் பார்த்துவிட்டு வருத்தமாய் வெளியே வந்தார். அவரிடம் வக்கீல போய் ஏதோ சொல்ல, அவர் மறுப்பாக எதையோ கூற, அங்கே நடப்பதைக் கவனித்த சேகர் – நேராக அவர் அருகே சென்று கேட்டான்.

“வக்கீல் சார்… யார் இவர்?”

“இவர்தான் மாதவன் நாயர். உங்க அப்பா யாருக்கு சொத்து எழுதி வெச்சிருக்காரோ, அந்தப் பொண்ணோட அப்பா.”

“இவர்தானா? தன் பொண்ணைக் காட்டி இவர்தான் அப்பாவை மயக்கியவரா?”

“மிஸ்டர் சேகர்… வார்த்தையை அளந்து பேசுங்க. உங்க அப்பா இப்ப சாதாரண மனுஷர் இல்ல. அவரைச் சுற்றி பல அதிசயமான விஷபங்கள் ஒரு காலப் பதிவா நடந்துகிட்டே இருக்கு.”

“இவரும் உயிலைக் கொடுத்தபோது வாங்கிக்கல. எதுக்கு இவர் சொத்து தரணும், எங்களுக்கு வேண்டாம்னுதான் சொல்றார்” வக்கீல் குறுக்கிட்டு கூறினார்.

“அதெல்லாம் சும்மா நடிப்பு சார். எங்கே என் எதிர்க்க சொல்லச் சொல்லுங்க…” – சேகர் கேட்ட நொடி, அது புரிந்தவர் போல உயிலைப் பிடுங்கிய மாதவன் நாயர்- அப்படியே சேகரின் கைகளில் திணித்தார்.

“மோனே… உழைச்ச காசே ஒட்டமாட்டேங்குது. இது எதுக்கு? எனக்கு இப்ப சொத்து வேண்டாம். என் மகளுக்குப் புருஷன்தான் வேணும். மானம் போய், சொத்து வந்து என்ன பிரயோஜனம்? முதல்ல உங்க அப்பாவை நான்கூட சந்தேகப்பட்டேன். ஆனா, இப்பதான் தெரியுது…அவர் பாவம், ஏதோ சொல்ல முடியாத அவஸ்தையில இருக்கார்னு”- என்ற மாதவன் நாயரை, சேகரும் என்ன பேசுவது என்று தெரியாமல் வெறித்தான்.

அதன்பிறகு அவர்களிடம் ஒரு அசாத்திய அமைதி.

மாதவன் நாயர் போய்விட்டார். ராம்நாத் உடல் நிலையில் ஒரு முன்னேற்றமும் இல்லை. நாட்கள்தான் கடந்தன.

ஒவ்வொரு நாளும் சகுந்தலா வரையில் சம்மட்டி அடியாய் கழிந்தது. சரியாக பதிமூன்றாவது நாள்…அதாவது சாமியார் சொன்ன கணக்குப்படி நூற்றியெட்டாவது நாள்…

சொல்வி வைத்த மாதிரி நண்பகல் பன்னிரண்டு மணிக்கு ராம்நாத் உயிர் பிரிந்துவிட்டது. சகுந்தலா ஒரு ஓரமாகப் போய் அமர்ந்துவிட்டாள். சேகரும் தன் பதிமூன்றாவதுநாள் தாடியுடன் அவருக்குக் காரியும் செய்யத் தயாரானான. தலைச்சேரியிலேயே மின்சார மயானத்தில் அவரைச் சுட்டு சாம்பலாக்கிவிட்டு, அரபிக் கடலில் போய் அதைக் கரைத்தான்.

வக்கீல் உடன் இருந்தார். எல்லா காரியமும் முடியவும், ஒரு டைரியை எடுத்து அவனிடம் தந்தார்.

“என்ன சார் இது?”

“உன் அப்பா இதை அவரது மரணத்துக்குப் பிறகு தரச் சொல்லி இருந்தார்”.

அவர் அதோடு ஒதுங்கிக்கொண்டார். சேகரும் ஒரு ஓரமாகப் போய் டைரியைப் பிரித்தான்.

டைரியின் உள்ளே பார்கவியின் புகைப்படம்! பார்த்த மாத்திரத்தில் ‘ஷாக்’ அடித்த மாதிரி இருந்தது. பார்கவி குளிக்கும்போது ஒளிந்திருந்து எடுத்திருக்க வேண்டும். என்பது புகைப்படத்தைப் பார்க்கும்போதே தெரிந்தது. அந்தப் படம் அவனது அறையில்தான் இருந்தது. அது எப்படி அப்பாவின் டைரியில்…?

கேள்வியோடு பக்கங்களைப் புரட்டினான்.

ஒரு இடத்தில், அவர் கடிதம் எழுதி இருந்தார். அவன் வாசிக்கத் தொடங்கினான்.

‘அன்புள்ள சேகர்!

நீ இதைப் படிக்கும்போது அப்பா உயிரோடு இருக்கமாட்டேன். உன்னால உருவான கருப்பிண்டம் ஒன்றுக்குள் புகுந்து என் அடுத்த ஜென்மத்துக்கு நான் தயாராகி இருப்பேன்.

எதிர்பாராத விதமாக ஒரு சாமியாரால் என் மரண தேதி தெரியவந்தது. ஏன் எனக்கு மட்டும் முன்னால் தெரியவந்தது என்ற கேள்விக்கு அவரே விடை சொன்னது போல, தலைச்சேரியில் பார்கவியைப் பார்த்தபோது கிடைத்தது.

அதற்கு முன் அவள் புகைப்படத்தை உன் அறையில் நான் ஒரு புத்தகத்தைத் தேடியபோது பார்த்தேன். அப்போதே அதிர்ந்தேன். பாவம் அந்த பெண்! விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்ள ஊர்விட்டு ஊர் வந்தவள். ஒரு இடத்தில் தங்கியிருந்த அவளை நீ நாசம் செய்துவிட்டாய். கேவலமாக இப்படி ஒரு புகைப்படம் வேறு…

என் வயிற்றில் பிறந்த உன் செயல் என்னைத் தலைகுனிய வைத்தது. இதெல்லாம் ஊழ்வினை. என்னுள் இருந்து வந்தவன் நீ… இப்போது நான் உன்னுள் இருந்து வரப்போகிறேன். ஆம், என் மறு ஜென்மம்- பார்கவி மகனாக பிறப்பதில்தான் உள்ளது. நான் நூறு ஆண்டுக்கு மேல் அனுபவித்து வாழும் வரம் பெற்றவன். ஆனால், ஐம்பது வயதுதான் உடம்புக்கு என்கிற ஒரு இக்கட்டு இருப்பதால், என் ஆத்மா அடுத்தக்கட்ட ஐம்பதை என் உயிர் அணுக்களில் இருந்தே உருவாக்கிக்கொள்ள உன் மூலம் ஒரு நாடகம் ஆடியுள்ளது. காலம் ஒருவரைக் கையில் எடுத்துக்கொண்டு ஆட்டி வைக்கும்போது யாரால் என்ன செய்ய முடியும்?

இதெல்லாம் ஒரு கற்பனை போலவும் தெரியும். அபார கணக்கு போலவும் தெரியும். ஒன்று மட்டும் உறுதி, வினை விதைத்தால் வினையைத்தான் அறுக்க முடியும்.

இந்தக் கடிதம் கண்டு உண்மை உணர்ந்து, பார்கவி காலில் போய் விழு! அவளை மணந்துகொள். இதையெல்லாம் நம்ப முடியவில்லை என்றால், வரும் எனது பிறந்த நாளன்னு நான் பிறந்த அதே நேரத்தில் பார்கவிக்கு வலி கண்டு- நான் மறுபடியும் பிறக்கப் போவதைப் பார்த்துவிட்டு அதன்பின் நல்ல முடிவுக்கு வா.

இப்படிக்கு,
அப்பா,
ராம்நாத்.

கடிதத்தைப் படித்தவனுக்குள் ஒரே திகைப்பு. பிரமிப்பு.

அப்படியே டைரியோடு புறப்பட்டான்.

மாதவன் நாயர் எதிரில் போய் நின்றவன், அவர் காலில்தான் முதலில் விழுந்தான். பிறகு கடிதத்தைக் காட்டி உண்மையை ஒப்புக்கொண்டவன், பார்கவியைப் பார்த்தான்.

அவளிடம் பிரக்ஞை இல்லாத அதே நிலை… போகும் போதே ஒரு தாலிக் கயிறுடன்தான் போயிருந்தான். அதை அப்படி. அவள் கழுத்தில் கட்டினான்.

சகுந்தலாவும் கண்ணீருடன் ஆசீர்வாதம் செய்தாள். அப்படி மாதவன் நாயர் முன் சென்று உயிலை நீட்டியவன், “என் அப்பா சொத்து இது. அவர் தனக்கு அடுத்த ஜென்மத்துலேயும் தனக்கே சேர செய்த ஒரு வழி இது. அது மட்டுமல்ல… என்னைக் கட்டிப்போட அவர் செய்த வழியும் இது. மறுக்காதீங்க” என்று அவர் கையில் திணித்தான்.

முதலில் மாதவன் நாயருக்கும் எல்லாமே கனவு போலத்தான் இருந்தது. ஆனால், கடிதத்தில் உள்ள தேதியில் பார்கவிக்கு ஆண் குழந்தை பிறக்கவும்- ஸ்தம்பித்து போய்விட்டார்.

பிரசவ வேதனையில் பார்கவிக்கு சித்த பிரமை தெளிந்தது. அடுத்தக்கட்ட ஆச்சரியம், பிறந்த குழந்தை அழுவதற்குப் பதில் சிரித்தது.

எல்லோரும் அதை அதிசயமாகப் பார்க்க, சகுந்தலா கண்ணீரோடு வாரி எடுத்து முத்தமிட்டாள்.

அந்த நொடியில் அதனிடமும் அழுகை.

அது, தன் மனைவியின் துக்கத்தில் தானும் பங்குகொள்கிறேன் என்பதைப் போலவும் இருந்தது.

வாழ்க்கைக்குள் எவ்வளவோ புதிர்கள்.

ராம்நாத்தின் வாழ்க்கைப் போக்கு அதில் எந்த ரகம்?

(சுபம்)

– ராணிமுத்து, ஜூலை 1, 2010

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *