சென்னை – சூளூர் பேட்டை மின் தொடர் வண்டி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: October 16, 2016
பார்வையிட்டோர்: 7,907 
 

சென்னையிலிருந்து அருகில் உள்ள ஊர்களுக்கு தினமும் மின்சார ரயிலில் சென்று பணிபுரியும் பல்லாயிரக்கணக்கான அலுவலர்களில் ஒருவர்தான் நம் கதாநாயகர் . தினமும் இப்படி சென்னை – சூளூர் பேட்டை மார்க்கத்தில் உள்ள ஒரு சிற்றூரின் அரசுப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார் அவர். ஆனால் அவரது தோரணையைப் பார்த்தால் யாருக்கும் அவர் ஒரு சாதாரண ஆசிரியர் போல காணப்பட மாட்டார். அவரது உடை, கையில் உள்ள பிரீஃப் கேஸ் இதெல்லாம் அவரை பார்ப்பவர்களுக்கு எதோ பெரிய அதிகாரி என்ற எண்ணத்தை எளிதில் ஏற்படுத்திவிடும்.

இப்படி சென்னையை மையமாகக் கொண்டு வெவ்வேறு இடங்களிலிருந்து வந்தாலும், பணியாற்றும் இடத்தைப்பொறுத்து இவர்கள் ஒரு குறிப்பிட்ட பெட்டியில் தான் தினசரி பயணம் செய்வது வழக்கம். அந்த 7.40 வண்டியில் இஞ்சினுக்கு அடுத்த மூன்றாவது பெட்டியில் நம் கதாநாயகருடன் பணியாற்றும் எல்லாரும் இருப்பார்கள். கதாநாயகருக்கு என்ன பெயர் என்று நீங்கள் கேட்கும் சப்தம் காதில் எனக்கும் கேட்கிறது. கதாநாயகர்களுக்கு எதற்குப் பெயர்? கதாநாயகர் என்றே இருந்து விட்டுப் போகட்டுமே. சரி நம் கதைக்கு அவர் பெயர் கொஞ்சம் கூட அவசியம் இல்லை என்பது கதை எழுதும் என்னுடைய தீர்மானமான முடிவு. ஆகவே கதாநாயகரின் பெயர் அறியாமல் படிக்க விரும்பாதவர்களுக்கு , இதுவரை பொறுமையாகப் படித்தமைக்கு நன்றி.

நமது கதாநாயகருக்கு கடவுள் நம்பிக்கை அதிகம். காலையில் அவர் சகுனம் பார்த்து புறப்படும் போது சகுனம் சரியில்லாவிட்டால் அடுத்த 10.30 மணி வண்டிதான். கடந்த 25 வருடங்களாக அவர் சகுனம் சரியாக இருந்து கிளம்பி பள்ளிக்குக் குறித்த நேரத்தில் சென்ற நாட்களை கணக்கிட்டால் ஒரு நூறு நூத்தம்பது நாட்கள் தேறும். தினமும் எதாவது ஒரு வேலையில்லாத காக்கை வலமிருந்து இடம் பறந்து விடும் அல்லது பூனை குறுக்கே பாய்ந்து அவரைக் கடமை ஆற்ற விடாமல் செய்து விடும். அரசு ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுத்த அந்த பூனைக்கோ அல்லது காக்கைகோ தண்டண வழங்க இடமுள்ளதா தெரியவில்லை.

அவர் அப்படி 12 மணிக்கு பள்ளிக்கு போனாலும், மாலையில் சரியாக 4 மணிக்கு ‘டாண்’ என்று வீட்டில் இருப்பார். புள்ளியிலிருந்து புறப்படும் போது சகுனம் எப்போதுமே சரியாக இருப்பது இதிலிருந்து சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணமாகிறது. அவர் பணியாற்றும் ஊரிலிருந்து ஒரு மணி நேர பயணத்தில் சென்ட்ரல் வந்து அப்புறம் ஒரு முக்கால் மணிநேர பேருந்துப் பயணம் செய்தால்தான் வீட்டிற்கு வர முடியும். இதில் ரயிலுக்கும், பேருந்திற்கும் காத்திருக்கும் நேரம் சேர்க்கப்படவில்லை. அப்படியானால் அவர் எவ்வளவு காலம் பள்ளியில் இருந்திருப்பார் என்பதை உங்கள் யூகத்திற்கு விட்டு விடுகிறேன்.

இதில் ஆச்சரியம் அவர் ஒரு முறை கூட எந்த அதிகாரிகளிடம் சிக்கியதில்லை. ஆசிரியர் சங்கத்திலும் எதாவது பொறுப்பு வகிப்பார். அதை வைத்துக் கொண்டு சில மேல் மட்ட அதிகாரிகளுடன் தொடர்பு வைத்துக் கொண்டு முடிந்தவரை பள்ளியில் வேலை செய்யாமல் இருக்க எதாவது மாற்றுப்பணி அப்படி இப்படி என்று காலத்தைக் கழித்து விடுவார். தலைமை ஆசிரியரை சமயத்தில் மிரட்டவும் சங்கப் பொறுப்புகள் உபயோகமாக இருந்தது. ஆக சுக ஜீவனம் என்பது அவரைப் பொறுத்தவரை நூற்றுக்கு நூறு சரியானது. அதிகம் கிம்பளம் கிடைக்கும் வேலை கிட்டாமல் போனதில் அவருக்கு மெகா வருத்தம் உண்டு.

அன்று காலை 7 மணிக்கு கிளம்பி விட்டார். சகுனத்தடை எதுவும் இல்லை. மின்சார ரயிலில் உட்கார இடம் கிடைக்காவிட்டால், அதற்கு காரணம் அவர் வரும் வழியில், அலுவலகம் செல்லும் மலையாளிப் பெண் கமலா தினம் தலை குளித்து வாசலில் காய வைத்து தலைவாரிக் கொள்வது தான் என்பார். “மனிசன் வேலைக்கு போகும் போது தினம் ஒரு நாள் போல தலையை விரிச்சிக்கிட்டு ஒரு பொம்பளை வாசலில் நிப்பா? கொஞ்சமாவது அறிவு வேண்டாம்” என்று பொருமுவார்.

இன்றைக்கு கமலா குடும்பத்துடன் குருவாயூர் போய் விட்டதால் அவருக்கு தலைவிரி கோல தரிசனம் இல்லாததில் படுமகிழ்ச்சி. காக்கைகளும், பூனைகளும் வந்து தொந்தரவு தரவில்லை. தினமலர் ராசி பலன், தொலைக்காட்சி ராசிபலன் எல்லாம் இந்த நாள் பொன்நாள் எடுத்ததெல்லாம் பொன்னாகும் என்று சொன்னதில் கூடுதல் குஷியுடன் பேருந்து நிறுத்தம் வந்தார். அங்கும் அதிருஷ்ட லட்சுமி காலியாக பேருந்தை அனுப்பி வைத்தாள். ஏழு ரூபாய் பயணச் சீட்டிற்கு நூறு ரூபாயை எடுத்து நீட்டிய போதும் கண்டக்டர் எரிச்சல் படாமல், எச்சில் தொட்டு எண்ணாமல் சில்லறை தந்து ஆச்சரியப் படுத்தினார்.

ஒரே ஒரு வருத்தம்தான் இன்று நேரத்தோடு பள்ளிக்கு போவதில். மற்றபடி குறை ஒன்றுமில்லை. அந்த சந்தோஷத்தை அசை போட்டபடி வந்தவருக்கு இன்று வழக்கமான இஞ்சினிலிருந்து மூன்றாவது பெட்டியில், கடைசியாக இருக்கும் நீண்ட பெஞ்சு இருக்கையில் நடுவில் இடம் கிடைத்தது. அதைத்தான் அவரும் விரும்புவார். காரணம் சன்னல் ஓரங்களில் எச்சில் துப்பியிருக்கஅல்லது மூக்கைச் சிந்தியிருக்க வாய்ப்புள்ளதால் அதை பொதுவாக கதாநாயகர் விரும்புவதில்லை. மற்ற நண்பர்கள் வழிபாதைக்கு மறுபுறமுள்ள இருக்கைகளில் இருந்தனர்.

நம்மாள் அருகில் யாரும் இல்லை. கதாநாயகர் கொஞ்சம் கருத்துச் சொல்லிவகை. யாராவது அரசியல் பற்றி பேச ஆரம்பித்தால் அவரால் தன்னைக் கட்டுப்படுத்திகொள்ள முடியாது. அவருக்கு இருபுறமும் அமர்ந்திருந்த ஆட்கள், தமிழ்நாட்டு அரசியலை தினத்தந்தி பேப்பர் வழியாக அலச ஆரம்பிக்கவும் நம்ம சார்வாளுக்கு தலை வெடித்துவிடும் போலிருந்தது. நைசாக முதலில் மையமாக சிரித்து அவர்களின் உரையாடலில் கலந்து கொள்ள தன் சம்மதத்தை வெளியிட்டார். அப்புறம் அவர்களுடன் ஜோதியில் கலந்த போது வண்டி தண்டையார் பேட்டை தாண்டியிருந்தது.

விம்கோ நகர் வரும்போது அரசியல் தாண்டி சொந்தக் கதை பற்றி பேச்சு திரும்பியது. கத்திவாக்கம் வரும் போது அவர்கள் அரசு பொது மருத்துவமனை அதில் காணப்படும் பிரச்சனைகள் பற்றி பேச ஆரம்பித்தனர். காசு இல்லாததால் அவர்கள் படும் பாட்டை சொல்லவும் அப்படியே நம்ம கதாநாயகர் அவர்களிடம் அவர்களின் பிரச்சனை பற்றி விசாரிக்க ஆரம்பித்தார்.

“சார் என் ஒயிஃப்க்கு உடம்பு சரியில்லாமல் இங்கே அந்த ராம்நாத் ஆஸ்பத்திரியில் சேர்த்திருந்தோம்”.

“இவரு என் மச்சான், அவர் என் தம்பி”

“கையில ஒரு லட்ச ரூபாய் வரை கொண்டு வந்திருந்தோம்”.

“ஆனால் அந்த டெஸ்ட் இந்த டெஸ்ட் என்று எல்லாம் கரைந்து போய் விட்டது.”

“இப்போ ஹோல் பாடி ஸ்கேனாமே, அது பண்ண அப்புறம் மருந்து வாங்க என்று 20 ஆயிரம் தேவை.” ஒரு 5000 ரூபாய் இப்போதைக்கு கிடைத்தால் கூட இண்ணிக்கு அவசரத்துக்கு சமாளித்து விடுவேன். அதற்குள் தம்பி ஊருக்கு போய் பணம் புரட்டி எடுத்து வந்திடுவான்” ஆனா இந்த பட்டணத்தில் யாரிடமும் நம்பிக்கையா நகையைக் கொடுக்க முடியலை.

“நகை என் ஒயிஃப் போட்டிருந்தது. 8 சவரன் ஆரம், கல்லு வச்சது,”

“அதை மார்வாடி கடையில் அவசரத்துக்கு வைக்கலாமின்னா, அங்க சேட்டு ரேசன் கார்ட் கொடுத்தால்தான் அடகு பிடிப்பாராம். சந்தேகப்படறாப்படி.”

“அதால நம்ம ஊரு சுளூர் பேட்டைக்கு போய் அடகு வைக்கலாம் ன்னு ஊருக்கு போய்க்கிட்டிருக்கோம்”.

“இங்க தெரிஞ்சவங்க யாராவது இருந்தாக்கூட கை மாத்து வாங்கி எப்படியாவது அட்ஜஸ்ட் பண்ணலாம்” “மத்தியானம் ஒரு மணிக்குள்ளாற பணம் கட்டணமாம்”, என்று பாதி கண்ணீரும், கவலையுமாக தேம்ப ஆரம்பித்தார்.

அப்போது பக்கத்தில் இருந்த அவர் மச்சான் தன் பையிலிருந்து அந்த ஆரத்தை எடுத்தபடி, “பாருங்க சார்” என்று காட்டவும், நம்ம கதாநாயகருக்கு கையில் வாங்கிப் பார்க்க ஆசைதான். இருந்தாலும் ஒரு ஒப்புக்கு

“ அதெல்லாம் வேண்டாம். அத்தனை பணம் எங்கிட்ட இல்லை” என்றார்.

அப்போது பக்கத்தில் இருந்த தம்பி, “அட, இன்னா சார் சொம்மா பாரு சார். என்னா தூக்கினா ஓடப்போற” என்றதும், கதாநாயகருக்கு காலை சகுனம் நல்லாயிருந்தது, உட்கார இடம் கிடைத்தது, தொலைக்காட்சியில் சொன்ன ஆரூடம் எல்லாம் மனதில் ஓட ஆரம்பித்தது. அதை வேண்டா வெறுப்போடு வாங்கிப் பார்ப்பது போல் பாவனையில் வாங்கிப் பார்த்தார். வாத்தியார் வேலை தவிர ரியல் எஸ்டேட், வட்டிக்கு நகை வாங்கறது, அண்டிமாண்டு பத்திரத்துக்கு கடன் 2 வட்டிக்கு விடுவது எல்லாம் கரை கண்டவர்.

மனசுக்குள் சின்ன கணக்குப் போட்டார். பொருள் தங்க நகைதான். வெயிட்டும் குறைந்து 60 கிராமாவது இருக்கும். சவரன் 20000 போனால் கூட 5 சவரன் அப்படின்னாலும் எப்படியும் ஒரு லகரம் தேறும். கையில் இருபதாயிரம் இல்லை. அதனால் என்ன, பள்ளிக்கு பக்கத்திலேயே உள்ள ஸ்டேட் பாங்கில் கணக்கில் எப்படியும் ஒரு அம்பதாயிரம் இருக்கும். பார்ட்டி மடிந்தால் 25000 அல்லது 30000 பணம் பாங்கில் எடுத்துக் கொடுத்து விடலாம். அவர்கள் நகையை மீட்க வந்தால் அப்போது பார்த்துக் கொள்ளலாம்.

இப்போது ஒரு பொய் விலாசம் கொடுத்து விடலாம் என்றவாறு என்ணங்கள் மனதில் ஓட,

“ கையில் அவ்வளவு பணம் இல்லையே, உங்களுக்கு உதவ ஆசைதான் ஆனா என்ன செய்ய”, என்றதும், மச்சான் நபர்

“பரவாயில்லை சார், உங்களைப் போல அடுத்தவன் கஸ்டத்த உணரவே இந்த மெட்ராசில ஆள் இல்லை. நீங்க எங்க கஸ்டத்த புரிஞ்சிக்கிட்டதுக்கு சந்தோசம் சார் என்றவாறு நகையை மீண்டும் பையில் வைத்துக் கொள்ளவும், நம்ம கதாநாயகருக்கு என்ன சொல்ல என்று புரியவில்லை.

“வேணுமின்னா என் கூட கும்மிடிப்பூண்டியில் இறங்குங்க. பக்கத்தில் பாங்கில் பணம் இருக்கான்னு பார்த்துவிட்டு இருந்தா எடுத்துத் தருகிறேன்”

“பாவம், பணம் கிடைக்க தாமதமானால் ஒரு உயிர் அனாவசியாமா போய்விடுமே என்பதுதான். மத்தபடி பணம் கிடைச்சதும் அட்ரஸ் தருகிறேன். இரண்டு நாளில் பணத்தைத் தந்துவிட்டு மறக்காம வாங்கிக்கிட்டுப் போயிடணும். எனக்கு எதுக்கு உங்க வீட்டு நகை? மனிதாபிமானம் தான் முக்கியம்” ஆமா, உங்களுக்கு எவ்வளவு வேண்டும்”.

“குறைஞ்சது 50000 ரூபாயாவது வேணும்”.

அத்தினி பணம் இருக்கா தெரியலை. பார்க்கலாம்”.

“ டேய், முருகா என்னடா சாரை தொந்தரவு பண்ணிக்கிட்டு” நாம கும்மிடிப்பூண்டியில் எறங்கி பாங்குக்கு போய் பணம் இல்லாட்டா டைம் வேஸ்டாயிடும்”.

“பரவாயில்லை சார், எங்க கஸ்டம் எங்களோட , நன்றி சார்” என்று சட்டென பேச்சை முடிக்கவும், கதாநாயகருக்கு பார்ட்டியை விட மனசில்லை. தனக்கு உரிமையுள்ள எதையோ இழந்த மாதிரி மனசில் ஒரு சோகம்.

“ ஒரு 20000 பாங்கில் கெடக்கும், எப்படியும் நாளைக்குள் பணத்தை புரட்டி மூட்டுகிறதானால் தருகிறேன்”

உடனே தம்பிக் காரன், “அண்ணே, சூளூர் பேட்டை போய்விட்டு பணம் புரட்டி மீண்டும் சென்னை வர மூணு மணி ஆகிடும். அண்ணி நெலமைய நினச்சுப் பாருங்க”

உடனே மச்சான்காரன், “ஆமா, மாமா. தம்பி சொல்லுறதும் சர்த்தான்”

என்று ஆமோதிக்க மனசே இல்லாமல் மாமன் காரன், சரி என்ற ஒற்றை வார்த்தையுடன் முடித்துக் கொண்டான்.

இதற்குள் ரயில் பொன்னேரிக்கு வந்து விட்டது. இடையில் அவரவர் மனதில் பல கணக்குகள். இதோ கும்மிடிப்பூண்டியும் வந்துவிட்டது.

இறங்கும் போது மற்ற ஆசிரியர்களும் இறங்க கதாநாயகரிடம்,

“என்னப்பா, எங்களைக் கண்டுக்கவே இல்லை, புது பிரண்ட்ஸ் கிடைச்சதும் நான்கெல்லாம் கண்ணுக்குத் தெரியவில்லைதானே” என்றதற்கு

“அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை, சொந்தக் காரங்க கிராமத்திலிருந்து வந்தாங்க. நீங்க போங்க, நாண் இவங்களை பஸ் ஏத்தி விட்டுட்டு வரேன். தலைவரிட்ட அரை மணி பெர்மிசன் சொல்லிடுங்க” என்றபடி

“ முருகா, நாம போகலாம்” என்றார்.

ஆசிரியர்களும் இவர் குணம் தெரிந்து, “சரி சார், நாங்க பர்மிசன் சொல்லிவிடுகிறோம் “ என்றவாறு விரைந்து நடையைக் கட்டினர்.

கதாநாயகர் பாங்கிற்குப் போய் பணம் 20000 ரூபாய் எடுத்து கொடுத்தார். பொருளை முருகன் எனப்பட்டவன் பையோடு கையில் கொடுத்து,
“சார் அட்ரஸ் தாங்க. முடிந்தால் சாயங்க்காலமே வந்து மீட்டுக்கிறோம்” அக்கா கண்ணு முழிச்சதும் ஆரத்தைத்தான் கேட்பாங்க” என்றான்.

“அட, நீயி சொம்மா இருக்க மாட்ட? சாருக்கு பள்ளிக்கு லேட் ஆகிடும். நாம பாங்கில் அட்ரஸ் கேட்டுக்கலாம்”

உடனே உஷாரான கதாநாயகர்,” ஆ, அதெல்லாம் வேண்டாம். இதோ தருகிறேன்”. என்றபடி பிரீஃப் கேசில் பொருளை பத்திரப்படுத்தி விட்டு
ஒரு காகிதத்தில் அவரது 10 வருடங்களுக்கு முன்பு குடியிருந்த வீட்டின் அட்ரஸை எழுதிக் கொடுத்து விட்டு அவசர அவசரமாக பள்ளியை நோக்கி நடக்க ஆரம்பித்தார். மனதில் அப்படி பழைய அட்ரசில் விசாரித்தாலும் யாருக்கும் சரியான விலாசம் தெரியாது. பள்ளிக்கு மோப்பம் பிடித்து வந்தாலும் ,” அடடா, எதோ ஞாபகத்தில பழைய அட்ரசை எழுதித்தந்திட்டேன்”. அப்படி எதாவது சொல்லிக்கலாம். கடவுளே, அவங்க மீட்டு எடுக்க தேடி வராம பொருள் எனக்கே சொந்தமானா உனக்கு தேங்காய் சூறை உடைகிறேன் என்று மனசுக்குள் வேண்டியபடி பின்னால் பார்க்காமல் படபடப்போடு பள்ளிக்கு வந்தவர், தலைமை ஆசிரியருக்கு ஒரு அசட்டு சிரிப்புடன் வணக்கம் வைத்துவிட்டு,

“ சார், சொந்தக்காரங்க கூட வந்தாங்க. பஸ் ஏற்றி விட்டு வந்தேன் சார்’. கையெழுத்துப் போட்டுக்கிறேன் சார்” என்று அவர் அனுமதிக்கும் முன்பே வருகைப் பதிவேட்டில் கையொப்பமிட்டு விட்டு, தன் அறைக்குச் சென்று கதவை சாத்திக்கொண்டு பிரிஃப் கேஸை திறந்து பையிலிருந்து பேப்பரில் சுற்றப்பட்டிருந்த பொருளைப் பிரித்துப் பார்த்தார். பித்தளையில் செய்யப்பட்டிருந்த நகை பல்லிளித்து சிரித்தது.

கடவுள் சூறைத் தேங்காய் வேண்டுதலுக்கு செவி சாய்த்து புன்முறுவல் பூத்துக் கொண்டார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *