கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: August 26, 2022
பார்வையிட்டோர்: 24,313 
 

பொலிஸார் வண்டியை நிறுத்திய போதே அங்கே ஏதோ நடக்கிறது என்பதைப் புரிந்து கொண்டு, வண்டிக் கண்ணாடியை இறக்கிவிட்டேன்.

‘மேடம், ‘பிறைட் பரேட்’ நடக்கிறது. இந்தப் பாதையாலே இப்போது போகமுடியாது, வேறுபாதையால் போங்க இல்லாவிட்டால் ஓரமாய் வண்டியை நிறுத்தீட்டுக் கொஞ்சநேரம் காத்திருங்க’ என்று சொல்லிவிட்டு ஆபீஸர் நகர்ந்தார்.

நான் வண்டியை ஓரமாய் நிறுத்தினேன். நிறைய வண்டிகள் ஓரமாய் நிறுத்தப்பட்டிருந்தன. வண்டியில் வந்தவர்கள் எல்லாம் இறங்கி ஊர்வலத்தைப் பார்ப்பதற்கு வீதியோரத்தில் நின்ற கூட்டத்தோடு கலந்து கொண்டனர்.

அருகே இருந்த மகள் மதுமிதாவைப் பார்த்தேன். செல்போனில் ஏதோ நோண்டிக் கொண்டிருந்தாள். அரைமணி நேரம் வண்டிக்குள் எப்படிக் காத்திருப்பது.

‘மது வார்றியா நாங்களும் பரேட் பார்ப்போம்.’ என்று அவளையும் அழைத்தேன்.

‘என்னம்மா அதில என்ன பார்க்கக்கிடக்கு’ அவளுக்கு வேடிக்கை பார்ப்பதைவிட செல்போனை நோண்டுவது தான் முக்கியம் என்பதுபோல முகத்தைச் சுளித்தாள்.

‘பரவாயில்லை, வண்டியில தனிய இருக்க வேண்டாம் வா என்னோட’ என்று அவளையும் இழுத்துக் கொண்டு சென்றேன்.

ஊர்வலம் நீண்டு கொண்டே இருந்தது. ‘இப்படியும் ஒரு ஊர்வலம் இங்கே நடக்கிறதா?’ அவர்களையும், அவர்கள் அணிந்திருந்த உடைகளையும் பார்க்க எனக்கு வியப்பாக இருந்தது.

‘பல வருடங்களாய் இது நடக்குது, முன்பு இதைக் ‘கே பரேட்’ என்று சொல்லுவாங்க, இப்பதான் இதை ‘பிறைட் பரேட்’ என்று சொல்லி நடத்திறதால, வெளிப்படையாய் எல்லோரும் கலந்து கொள்ளுறாங்க’ கூட்டத்தில் யாரோ சொன்னது காதில் விழுந்தது.

மதுவைத் திரும்பிப் பார்த்தேன், முகத்தில் எந்தப் பாவனையும் இல்லாமல் ஊர்வலத்தை ஆர்வமாய்ப் பார்த்துக் கொண்டு நின்றாள்.

‘எங்க பிரதம மந்திரியும் இந்த ஊர்வலத்தில் கலந்திருக்காரம்மா’ என்றாள் மது.

அவளிடம் மறைப்பதற்கு எதுவும் இல்லை, அவள் இங்கே கனடாவில் பிறந்ததால் அவளுக்கு எல்லாமே தெரிந்திருக்கிறது.

‘ஊரிலும் இப்படி இலைமறைகாயாகப் பலர் இருந்தார்கள். சமுதாயம் ஏற்றுக் கொள்ளாமல் ஒதுக்கி வைத்ததால், அவர்களைப் பற்றி வெளியே தெரிவதில்லை.’ என்றேன்.

வைத்தியர்கள், தாதிகள், பொலீஸ், இராணுவம், தீயணைப்போர், ஆசிரியர்கள், ஐரி பிரிவினர் என்று பல பதாதைகளுடன் ‘நாங்களும் மனிதப் பிறவிகள்தான்’ என்பதை உறுதி செய்வதுபோல, ஊர்வலம் அமைதியான முறையில் கடந்து சென்றது. அவர்களுக்கு ஆதரவாக நிறையப்பேர் வீதியோரம் நெடுகலும் நின்றார்கள்.

வித்தியாசமான ஒரு உலகுக்குள் தவறுதலாக நுழைந்து விட்டது போன்ற உணர்வு எனக்குள் ஏற்பட்டது. அந்த இடத்தை விட்டு நகர்ந்தால் போதும் என்ற ஒரு தற்பாதுகாப்பு உணர்வு எனக்குள் ஏற்படவே, மதுவையும் இழுத்துக் கொண்டு வண்டிக்கு விரைந்து வந்தேன். வண்டிக்குள் ஏறி உட்கார்ந்தபோது பாதுகாப்பான சூழலில் இருப்பதைப் போல உணர்ந்தேன்.

‘மகள் படத்திற்குப் போகிறதாய் சொல்லுறாள். ஆனால் சினேகிதி என்று சொல்லிவிட்டு சினேகிதனோட போகிறாளோ என்றுதான் பயமாயிருக்கு. வீட்டிற்கு வர இரவு பத்துமணிக்கு மேலாகிறது.’ என்று பக்கத்து வீட்டு சாரதா என்னிடம் தனது மகளைப்பற்றி முறையிட்டாள்.

‘பிள்ளைகளை வளர்க்கிற மாதிரி வளர்த்தால் அதுகள் சொல்வழி கேட்கும். இனி என்றாலும் கொஞ்சம் கட்டுப்பாட்டோட இருங்கோ, செல்லம் கொடுக்க வேண்டாம்’ என்று பக்கத்து வீட்டு சாரதாவிற்குப் புத்திமதி சொல்லி அனுப்பி வைத்தேன்.

பல்கலாச்சார நாடு என்பதால் இங்கே வந்து இறங்கியதும் தனது குடும்பத்தையும் அதற்கேற்ப மாற்றிக் கொள்ள நினைத்து அந்த நீரோட்டத்தில் சிக்கி, வெளியே வரமுடியாமல் தவிக்கும் சாரதாவிற்குத்தான் புத்திமதி சொல்லியிருந்தேன்.

இப்பொழுது சாரதாவின் மகள் வளர்ந்து பெரியவளாகி விட்டதால் அவளைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில்தான் சாரதா என்னிடம் முறையிட்டாள். பல்லினக் கலாச்சாரம் உள்ள இந்த நாட்டில், கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று சாரதா இதுவரை வாழ்ந்த வாழ்க்கையால்தான் அவளுக்கு இந்த நிலை ஏற்பட்டது என்பதைச் சாரதாவிற்குப் புரியவைத்தேன்.

‘தோளுக்கு மேல வளர்ந்தால் சினேகிதியாய் இரு’ என்று எல்லோரும் புத்திமதி சொல்வார்கள். இந்த நாட்டிற்கு மட்டுமல்ல, எனக்கும் அதெல்லாம் சரிவராது, நாங்கள் கடுமையாகப் பிள்ளைகளோடு இருந்தால்தான் அவைக்குப் பயமிருக்கும். ‘நில் என்றால் அந்த இடத்தில் மது நிற்பாள்.’ அப்படித்தான் என்னுடைய பிள்ளைகளை மிரட்டி வைத்திருக்கின்றேன்.

ஆனாலும் மனதுக்குள் ஒருவித பயம் எனக்குள் இருந்தது. இந்த நாட்டிலே பிள்ளைகளுக்குக் கை நீட்டக்கூடாது, பிள்ளைகளை ஏசக்கூடாது, அதைச் செய்யாதே இதைச் செய்யாதே என்று அவர்களைக் கட்டுப்படுத்த முடியாது.

வயது வந்த பெண் குழந்தைகளைத் தகப்பனாக இருந்தாலும் அணைத்து முத்தம் கொடுக்கக்கூடாது அப்படி ஏதாவது நடந்தால் தொலைபேசி இலக்கம் 911 அடித்து முறையிடும்படி பாடசாலையில் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். கொஞ்சம் கடுமையாகச் சில பெற்றோர் இருந்ததால் அப்படி 911ஐ அழைத்த பிள்ளைகளும் இருக்கின்றார்கள்.

இதை எல்லாம் தாண்டி ஏதாவது அசம்பாவிதம் நடந்து விடுமோ என்ற பயம் என்னை வாட்டிக் கொண்டே இருந்தது. காரணம் ஒருவித கவர்ச்சியும் அழகும் இருந்ததால், பையன்களின் பார்வை மதுவின் மீது திரும்பியிருப்பதையும் கொஞ்ச நாட்களாக என்னால் அவதானிக்க முடிந்தது.

அப்படி யாராவது பையன்களின் தொலைபேசி அழைப்பு அடிக்கடி வருகிறதா என்பதிலும் கவனமாக இருந்தேன். அவளை வேவு பார்ப்பதை நிறுத்தும்படி கணவர் சொன்னாலும் மனம் கேட்பதில்லை. ‘போன பிறவியில் நீ ஒரு வாச்டோக்காய்ப் பிறந்திருப்பாயோ தெரியாது’ என்று சில சமயங்களில் அவர் என்னைக் கிண்டல் செய்வதுண்டு.

செல்போன் தேவைதான், எங்கே நிற்கிறார்கள் என்ன செய்கிறார்கள் என்பதை இலகுவில் அறிந்து கொள்ள நல்லதொரு சாதனம். பிள்ளைகளுக்குத் தெரியாமலே ஒரு காவல்நாய் போல செல்போன் அவர்களோடு ஒட்டிக் கொள்ளும். ஆனால் பதுமவயதுப் பிள்ளைகளுக்கு அதை எங்கே எப்போது அவர்கள் பாவிக்கலாம் என்பதை பெற்றோர்களாகிய நாங்கள்தான் சொல்லிக் கட்டுப்படுத்த வேண்டும். அதனால்தான் இரவு மகள் படுக்கைக்குப் போகுமுன் என்னுடைய படுக்கை அறையில் அவளது செல்போனை வைத்து விட்டுச் செல்ல வேண்டும் என்ற கட்டுப்பாட்டை இன்றுவரை கவனமாகக் கடைப்பிடிக்கின்றேன்.

என்னுடைய கட்டுப்பாடுகள் மகளுக்குப் பிடிக்காவிட்டாலும் எந்த எதிர்ப்பும் இல்லாமல் முகத்தைச் சுழித்துக் கொண்டு மௌனமாக ஏற்றுக் கொள்ளப் பழகிக் கொண்டாள். அதேபோல அவளது கணணியும் எனது கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றது. அவளுடைய அறைக்குள் இருக்கும் கணணி பத்து மணிக்கெல்லாம் மூடப்பட்டுவிட வேண்டும் என்ற கட்டுப்பாடும், படுக்கைக்குப் போகும்வரை அவளது அறைக்கதவு திறந்தபடியே இருக்க வேண்டும் என்பதும் அவளுக்குத் தெரியும்.

பாடசாலை வேலைகள் ஏதாவது கணணியில் செய்யும்போது இடையிடையே கணணித் திரையில் என்ன தெரிகின்றது என்பதையும் நான் அவதானித்துக் கொள்வதுண்டு. தொலைக் காட்சியில் தேவையில்லாத சனல்களை எல்லாம் நிறுத்தி விட்டிருந்தேன். ஏதோ முடிந்த அளவு புறச்சூழல்கள் அவளைத் தவறான பாதையில் இட்டுச் செல்லாமல் இருப்பதில் கவனமாக இருந்தேன்.

எங்களுக்குள்ளேயே பூனைக்கு குட்டி காலைச் சுற்றுவதுபோல மது இவ்வளவு காலமும் எங்களுடன் வீட்டுக்குள் இருந்து பழகிவிட்டாள். பல்கலைக்கழக அனுமதி கிடைத்ததால் எங்களை விட்டுப் பிரிந்து செல்ல வேண்டிய நிலை.

குழந்தைத் தனம் மாறாத அவளது சிரித்த முகத்தையும், செய்கைகளையும் நினைத்துப் பார்த்தால் பிரிவு என்பது பெற்றோர்களாகிய எங்களுக்கும் கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கும்.

ஆனாலும் அவளது எதிர்காலம் முக்கியம் என்பதால் இதைத் தாங்கிக் கொள்ளத்தான் வேண்டும். நாளை மறுநாள் அவள் பல்கலைக் கழகம் செல்வதால், நாங்கள்தான் அவளைக் கொண்டு சென்று தங்குவதற்கான ஒழுங்குகள் எல்லாம் செய்து கொடுக்க வேண்டும்.

காலையில் எழுந்து சினேகிதிகளிடம் பயணம் பற்றிச் சொல்லி விடைபெற்று வருவதாகச் சொல்லிச் சென்றாள். முகம் வாடியிருந்தது, ஏன் பதட்டமாக இருக்கிறாள் என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை.

எங்களைப் பிரிந்து தொலைவில் உள்ள பல்கலைக் கழகத்திற்குப் போவதை நினைத்த பிரிவுத் துயரமாக இருக்கலாம் என நினைத்தேன். அவளது படுக்கை அறையில் செல்போன் விசிலடித்தது. ஒருவேளை செல்போனை எடுத்து இங்கே வைத்துவிட்டுப் போய்விட்டாளோ என்ற பதற்றத்தில் ஓடிப்போய்ப் பார்த்தேன்.

தலையணைக்குக் கீழிருந்து முணுங்கிய சத்தம் கேட்டு எடுத்துப் பார்த்தேன். புதிதாக இருந்தது, இது எங்கேயிருந்து வந்தது? மகளுடையது அல்ல என்பதைப் புரிந்து கொண்டேன். தொலைபேசி இலக்கத்தைப் பார்த்தேன், விதுராவிடம் இருந்து வந்த அழைப்புத்தான். அவள் வாங்கிக் கொடுத்திருப்பாளோ?

செல்போன் திரையில் தட்டிப் பார்த்தேன். நேற்று இரவு அவளிடம் இருந்து வந்த ரெக்ஸ் செய்தி ஒன்று கண்ணில் பட்டது.

‘ஸ்சுவீட்டி, நீ யூனிவசிட்டிக்குப் போவதாகச் சொன்னதில் இருந்து எனக்குத் தூக்கமே இல்லை. உன்னைப் பார்க்காமல் என்னால் இருக்க முடியாது என்பது உனக்குத் தெரியும்தானே. போவதற்குமுன் என்னைப் பார்த்து விட்டுத்தான் போகவேண்டும். நாளைக்கு வழமையாகச் சந்திக்கும் இடத்தில் உனக்காகக் காத்திருப்பேன். உன்னைச் சந்திக்காமல் போகவேமாட்டேன், புரிஞ்சுதா?’

இப்படியே இவளை விட்டால் நாளைக்கு இவன்தான் என்னுடைய ‘போய்பிரண்ட்’ என்று யாரையாவது வீட்டிற்கு அழைத்தும் வரலாம். பல இனமக்களும் உள்ள இந்த நாட்டில் அதுவே பயத்தைத் தந்தது. அதனால்தான் கூடியவரை விதுராவுடனான மகளின் தொடர்பைத் துண்டிக்க முயற்சி செய்தேன்.

இப்போது விதுரா அனுப்பிய அந்த ரெக்ஸ் செய்தியில் ஒரு வகை மிரட்டல் இருப்பது போலவும் உணர்ந்தேன். உண்மையில் அது விதுராவா அல்லது அவளின் பெயரில் யாராவது பையன்களா?

விதுரா கடைசியாக வந்தபோது. மறந்துபோய்த் தன்னுடைய செல்போனை விட்டுவிட்டுச் சென்று விட்டதாகச் சொன்னாள்.

மனதில் குடைந்து கொண்டிருந்ததை எதற்கும் மகளிடமே கேட்டுவிட வேண்டும் என்ற எண்ணத்தோடு அவளிடம் கேட்டேன்.

‘போய்பிரண்டா, எங்கட பெடியங்கள் யாரம்மா அப்படி அழகாய் இருக்கிறாங்க, அவங்களும் அவங்கட மூஞ்சியும், அப்படி ஒரு நினைப்பே எனக்கு இல்லையம்மா’ என்று முற்றாக மறுத்துவிட்டாள் மது.

இந்த வயது குழப்படி செய்யத் தூண்டுகின்ற வயதுதான். பல இனங்கள் ஒன்றாகப் படிக்கிற இடத்தில் எங்கேயாவது, யாருடனாவது தொடுத்து விடுவாளோ என்ற பயம்தான் எனக்கு இருந்தது.

தனக்கு ஒரு காதலனும் இல்லை என்று சொன்னது மனதுக்கு நிம்மதியாக இருந்தாலும் அப்படி ஏதாவது இருந்தால் உறவுகளின் கேள்விகளுக்குப் பதில் சொல்வதே பெரிய பிரச்சனையாகப் போய்விடும்.

மகளின் நல்ல சினேகிதி என்றுதான் விதுராவை இவளுடன் தொடக்கத்தில் பழக அனுமதித்தேன். இருவரும் சேர்ந்து பாடங்கள் படித்தார்கள், ஒருவருக்கொருவர் துணையாக இருந்தார்கள். ஆன்டி.. ஆன்டி.. என்று அடிக்கடி அழைத்து விதுராவும் என்னுடன் நன்றாகப் பழகினாள்.

ஆனால் இடையே மகளின் போக்கில் சில மாற்றங்களை அவதானித்ததால் விதுரா இவளைத் தவறான வழியில் இழுத்து விடுவாளோ என்ற பயம் இருந்தது. ஒருநாள் பிறந்தநாள் கொண்டாட்டம் என்று விதுராவுடன் போய்விட்டு இரவு வந்தாள். அவளிடம் இருந்து மதுவாடை வீசிய போதே சந்தேகப்பட்டேன்.

ரெட்வைன் கொஞ்சம் அருந்தியதாகச்சொன்னாள். சினேகிதர்கள் எல்லோரும் அருந்தும் போது எப்படித் தவிர்ப்பது என்றாள். ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சமாதானம் சொன்னாள். என்ன பேசுகிறாள் என்பதே தெரியாத நிலையில் இருக்கும் அவளுடன் பேச்சுக் கொடுப்பதில் அர்த்தமில்லை என்பதால் மேற்கொண்டு நான் பேசவில்லை. அவளது படுக்கை அறைக் கதவைச் சாத்திவிட்டு வெளியேறினேன்.

சினேகிதர்களைக் கொண்டு ஒருவரைக் கணக்கிடலாம் என்பதால், வகுப்புத் தோழியாக இருந்தாலும் பார்ட்டி, டான்ஸ் என்று அலையும் விதுராவிடம் இருந்து விலகி இருக்கும்படி மதுவைக் கண்டித்து வைத்தேன்.

படிப்பிலே கவனம் செலுத்துவதாகவும், பல்கலைக்கழக சூழல் பிடித்துக் கொண்டதாகவும் மது செல்போனில் சொல்லியிருந்தாள்.

அன்று அவளது பிறந்த தினம் அவளுக்கு சேப்பிறைஸ் அதிர்ச்சி ஒன்று கொடுக்கலாம் என்று பிறந்தநாள் கேக்கும் செய்து கொண்டு அவளைப் பார்க்கப் பல்கலைக் கழக விடுதிக்குச் சென்றேன்.

வீதியில் ஆங்காங்கே பனி படர்ந்திருந்ததால், கவனமாக வண்டியை ஓட்ட வேண்டியிருந்தது.

கீழே வண்டியை நிறுத்திவிட்டு அவளைச் செல்போனில் அழைத்து, வந்திருப்பதாகச் சொன்னேன். ஆவலோடு உடனே ஓடிவருவாள் என்று எதிர்பார்த்துக் காத்திருந்;தேன். சற்றுத் தாமதித்துத்தான் அவள் வந்தாள்.

என்னை அவள் எதிர்பார்த்திருக்கமாட்டாள். எதையோ மறைப்பதுபோல, தாமதத்திற்கு ஏதேதோ காரணம் சொன்னபோது, என் கண்காணிப்பில் இருந்து விலகிச் செல்கிறாளோ என்ற சந்தேகம் வலுத்தது.

அவளது அறைக்குச் சென்று, கேக் வெட்டிக் ஹப்பிபேர்த்டே பாடிச் சற்று நேரம் ஓய்வெடுத்து விட்டு, அவளிடம் சொல்லிக் கொண்டு புறப்பட்டேன்.

‘மது படித்து முடிக்க வேண்டும். என்பதுதான் பெற்றோராகிய எங்கள் கனவாக இருந்தது. இந்த நாட்டில் படிப்பறிவு இல்லாமல் எதுவும் செய்ய முடியாது. அவளது எதிர்காலம் நன்றாக அமைய வேண்டுமானால் அவள் படித்துப் பட்டதாரியாக வேண்டும்’ இதுதான் என்கள் எதிர்பார்ப்பாக இருந்தது.

நெடுஞ்சாலையில் வண்டி ஓட்டிக் கொண்டு திரும்பிப் போகும் போது மதுவின் கட்டிலில் கிடந்த அந்தப் பூப்போட்ட சிவப்புப் பாவாடை ஞாபகம் வந்தது. அதை அவள் சட்டென்று எடுத்து ஏதோ கள்ளம் செய்து விட்டது போலக் கூடைக்குள் போட்டதில் ஒரு அவசரம் தெரிந்தது.

அப்படி ஒரு பாவாடை மகளிடம் இருக்கவில்லையே, ஆனாலும் அந்தப் பாவாடை மிகவும் பார்த்துப் பழகியது போன்று மனதில் நிழலாடியது. திடீரென ஞாபகம் வந்தது,

‘ஓ மைகோட் அது விதுரா அணியும் பாவாடையல்லவா? அங்கே இருந்த காலணியும்..? அப்போ விதுரா அங்கே வந்திருந்தாளா?’

ஒரு கணம் என்ன செய்வதென்று தெரியாமல் அதிர்ச்சியில் குழம்பிப் போனேன்.

‘அப்படி என்றால், இவர்கள் இருவரும்..?’

நெடுஞ்சாலையில் வண்டி வேகமாகச் செல்வதையும் மறந்து ஏதோ சிந்தனையோடு என்னை அறியாமலே சட்டென்று பிறேக்கில் காலை வைத்தேன்,

பனி படர்ந்த வீதி என்பதால், வண்டி திமிறிக் கொண்டு ஒரு சுற்றுச் சுற்றி மறுபக்கம் இருந்த பள்ளத்தில் பாய்ந்தது. நெற்றிப்பொட்டில் பெரிதாக அடி பட்டிருக்கலாம், சுள்ளென்று வலித்தது. தொட்டுப்பார்த்த விரலில் இரத்தம் பிசுபிசுத்தது.

உணர்வு மங்குவது போலக் கண்கள் மெல்லமெல்ல இருட்டிக் கொண்டு வந்தது. கண்ணுக்குள் கனவுபோல ஏதேதோவெல்லாம் நிழலாடியது.

‘பிறைட் பரேட்’ ஊர்வலம் மெல்ல நகர்வது போலவும், அந்த ஆரவாரத்திற்கு நடுவே பதாதை ஒன்றைக் கையில் ஏந்திப் பிடித்தபடி கத்திக் குரல் கொடுத்தபடி முன்னால் செல்வது.. எட்டிப் பார்க்க முயற்சிக்கிறேன், எதுவும்; தெளிவாகத் தெரியவில்லை.. விதுரா போலவும், ஒருவேளை அவளுக்கு அருகே செல்வது அது.. அது.. ம..து..வாயிருக்குமோ?

(நன்றி: கணையாழி)

Print Friendly, PDF & Email

4 thoughts on “சிவப்புப் பாவாடை

  1. பெற்றோர்களின் மைக்ரோ மேனேஜ்மெண்ட்’டும் பிள்ளைகளின் விஞ்ஞான பூர்வமான ஏமாற்றுதல்களும் இன்று யுனிவர்ஸல் ஆகிவிட்டன என்பதையும், என்னதான் வெளிக் கதவுளைப் பூட்டிவைத்தாலும், இன்றைய விஞ்ஞான வளர்ச்சிகளைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திப் பெற்றோர்களை ஏமாற்றுவதன் மூலம் தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்ளும் புதிய தலைமுறையினர்களை, மிக அற்புதமாக வாசகர்களின் உள்ளத்தில் பதிய வைத்திருக்கிறார் எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்கள்.
    மதுவைப் போல மயங்குபவர் இருக்கும்போது விதுராவைப் போல மயக்குபவர்கள் இருக்கத்தானே செய்வார்கள்.
    எனது பார்வையில் ஒர நல்ல விழிப்புணர்வுச் சிறுகதை இது.
    எழுத்தாளருக்கு என் வணக்கங்கள்.
    ஜூனியர் தேஜ்

  2. பேசாப் பொருளை அழகாக எடுத்துத் சொல்லும் எழுத்தாளர் குரு அரவிந்தனுக்குப் பாராட்டுக்கள்.

  3. கண்ணை மூடிக்கொண்டு இருப்பதால் இல்லை என்று ஆகிவிடாது. எல்லா சமூகத்திலும் இது இருக்கிறது. தமிழ் சமூகத்தில் இது பெரியவர்களால் மறைக்கப்பட்டது. இலங்கையில் சென்ற வாரம் நீதிமன்றமே ஒரு இளம் பெண்ணுக்குச் சாதகமாகத் தீர்ப்பளித்திருக்கின்றது. உங்கள் கருத்துக்கு நன்றி.

  4. காலத்திற்கேற்ற , அருமையான நடையில், குருஅரவிந்தனின் இந்தக் கதை சமீபத்தில் என்னைக் கவர்ந்த சிறந்த சிறுகதை என்பதில் வேறு கருத்துகள் இல்லை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *