கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: May 22, 2017
பார்வையிட்டோர்: 10,295 
 

எழுதியவர்: சந்தோஷ்குமார் கோஷ்

அது என் முதுகுக்குப் பின்னால் குனிந்து கொண்டு நின்றது. அதன் மூச்சுக் காற்று என் காதுகளைத் தொட்டது. என் கை விரல்லள் செயலிழந்து விட்டன.

அது சொல்லியது – “ஏன் அனாவசியமாகப் பழைய காகிதக் குப்பையைக் கிளறித் தூசியைக் கிளப்பறே? சரசிஜ், ஒனக்கு அந்தக் கதை கிடைக்காது!”

அதன் வாய் என் காதருகில். இயற்கைக்கு மாறான, கரகரப்புக்குரல்- பிசாசின் குரல்போல. தொண்டைக் குழாயில்ஓட்டையிருந்தால் குரல் இப்படித்தான் ஒலிக்கும்.

“எனக்கு அந்தக் கதை வேணுமே!” நான் சொன்னேன்

“வேணுமா?” கேலியாகக் கேட்டது அது, “எதுக்கு?”

“ஒப்பிட்டுப் பார்க்கத்தான். அந்தக் கதை அசலா, அல்லது இப்போ ஒனக்குச் சொன்னேனே, பிஜு மாமியோட கதை, அது அசலான்னு – பார்ப்பேன்..”

“அந்தக் கதையில என்ன இருக்கு..?”

“எல்லாம் தெளிவா ஞாபகமில்ல.. மழை கொட்டற ராத்திரி, சோன்னு காத்தடிக்குது, எங்க வீட்டுத் திண்ணையிலே அந்தப் பிச்சைக்காரி குப்புறக் கவுந்துக்கிட்டுத் தன் குழந்தையைக் காத்து மழையிலேருந்து காப்பாத்தப் பார்த்தா. அப்படியும் குழந்தை குளிர்லே நடுங்குது, அதோட ஒடம்பு நீலம் பாரிச்சுப் போய்க்கிட்டிருக்கு. கடைசியிலே அவ இங்கேயும் அங்கேயும் திரும்பிப் பார்த்துட்டுத் தன் ஆடையை அவுத்து நாலா மடிச்சு அதிலே குழந்தையைச் சுத்தி வைக்கறா.. இந்தக் காட்சி நல்லா ஞாபகமிருக்கு எனக்கு..”

இதைக் கேட்டுப் பெரிதாகச் சிரித்தது அது. அதன் கறுப்பு நிறத் தொள தொள அங்கியின் மடிப்புகள் இரவின் இருட்டோடு சேர்ந்து கரைந்தன.

அதன் பார்வையை நேரில் சந்திக்கத் தேவையில்லை எனக்கு. எரிச்சலுடன் கேட்டேன், ” இந்த கதையில் சிரிக்கும் படி என்ன இருக்கு?”

“இது ஹாஸ்யம்தான்னு ஒனக்கும் தெரியும்.. இதை எழுதி எவ்வளவு காலமாச்சு?”

“எவ்வளவு வருசமாச்சுன்னு சொல்லத் தெரியாது எனக்கு. இதை எழுதின காலத்திலே காலணாவுக்குக் கடலை வாங்கினா அதை ஒரு மணி நேரம் கொறிச்சுத் தின்னுக்கிட்டிருக்கலாம். அரையணாவுக்கு டீ வாங்கிக்கிட்டு டீக்கடையிலே ரெண்டு மணி நேரம் ஒக்காந்திருக்கலாம். ரெண்டணா கொடுத்த டிக்கெட் வாங்கித் தரமதல்லாவிலேருந்து அலிப்பூர் வழியா பாலிகஞ்ஞ் போகலாம்.. அப்போ..”

அது கையை உயர்த்திச் சொல்லியது, “போதும், போதும்! மேலே சொல்ல வேண்டாம்! சரசிஜ், அந்தக் கதையை இனி மேல் பேசாதே!”

“அது ஏன் தேடினாக் கிடைக்காது?”

“ஏன்னா, அது இல்லே..”

அது கனைத்தது. ஒரு மாதிரியாக, பிறகு புன்சிரிப்புடன் சொல்லிற்று, “அது என்கிட்டே இருக்கு.. இதோ பாரு!” மடிப்புகள் அலையலையாக எழுந்து இரவின் இருளில் கரைந்தன. அது ஏதோ ஒன்றை வெளியே எடுத்து என் கண் முன்னே ஆட்டியது. மங்கலான வெளிச்சத்தில் அது என்ன என்று சரியாகத் தெரியவில்லை. அதைப் பார்த்தால் ஒரு வற்றிப்போன பூனைக்குட்டி போல் தோன்றியது. மங்கலான பிதுங்கி வந்திருக்கும் கண்கள், ஒளியிழந்த கண்மணிகள்.

அதைப் பிடிக்கப் போனவன் சட்டென்று கையை இழுத்துக் கொண்டேன்.

அந்த உருவம் சிரித்தது. “பார்த்தியா, நீயே அதை எடுத்துக்க விரும்பலே. அதைத் தொடவே பயப்படற நீ அதை எப்படிக் காப்பாத்துவே?” அது அந்த பொருளை மறுபடி தன் அங்கிக்குள் நுழைத்துக் கொண்டுவிட்டது. “அது என்கிட்டயே இருக்கட்டும்.”

நான் பயத்துடன், “நீ யாரு?” என்று கேட்டேன்.

அது பதில் சொல்லாமல் கொஞ்சங் கொஞ்சமாகப்பின் வாங்கியது. அதன் மேலங்கி அசைந்தது. ஆடியசைந்தவாறே அது பின்னால் போய்.. போய்.. இருளில் மறைந்து போய்விட்டது.

அப்போதுதான் நான் அது என்ன என்று புரிந்து கொண்டேன். அது காலம்..! அதாவது, எந்தக் காலத்திலேகாலணாவுக்குக் கடலை வாங்கினா இத்தியாதி, இத்தியாதி.. அந்தக் காலம் அது! அந்தக் காலத்திலே ‘வேலை காலி’, ‘வாடகைக்கு வீடு கிடைக்கும்’, ‘டியூஷன் ஆசிரியர் தேவை’ விளம்பரங்கள் காஸ் விளக்குக் கம்பங்களில் ஒட்டப்பட்டிருக்கும்.

காலம் அந்தக் காலத்து நிகழ்ச்சியை இந்தக் காலத்தின் வெளிச்சத்தில் காட்டியதால்தான் அந்த நிகழ்ச்சி ஒரு செத்தபூனைபோல் எனக்குத் தோன்றியிருக்கிறது. அதன் மேலங்கிக் குள்ளே தலையை நுழைத்துப் பார்க்க அது என்னை விட்டிருந்த தால், என்னுடைய அந்தக் காலத்துப் பார்வை, அந்த வயது, அந்தக்காலத்து மனம், வெளிச்சம், வாசனை, மோகம் எல்லாவற்றையும் திரும்பிக் கொடுத்திருந்தால் அந்த அழகான வெட்கத்தைத் துறந்த பிச்சைக்காரப் பெண் மறுபடி உயிரோடிருப்பதைக் கண்டிருப்பேன்.. மேலங்கிக்குள்ளே இருக்கும்வரை உயிர் துடிப்புடன் இருப்பதெல்லாம் அங்கிக்கு வெளியே வந்ததும் பிணமாகி விடுகின்றன..

***

அப்புறம் என்ன ஆச்சு, சரசிஜ்?

அப்புறம் பிஜு மாமி மிகவும் சாந்தமான குரலில் என்னை ‘வா’ என்று அழைத்தார். நான் டாக்சி சார்ஜைக் கொடுத்துவிட்டு இறங்கி வந்தேன். ஓரத்தில் சாக்கடை. ஒரு தாவுத் தாவி அதைத் தாண்டி வர வேண்டியிருந்தது. அப்படியும் என் ஷார்க்ஸ்கின் பாண்டில் கொஞ்சம் சேறு பட்டுவிட்டது.

டாக்சியின் அகலத்தை அளவெடுத்து அமைந்த மாதிரி இருந்தது அந்தச் சந்து. அதற்குள் நுழைந்ததும் அங்கே நான்முன்னமே வந்திருப்பதாகத் தோன்றியது. எப்படியும் அந்த நாற்றம் எனக்குப் பழக்கமானதுதான். பழைய காதலியின் வீட்டுக்குள் நுழையும் உணர்வு ஏற்பட்டது எனக்கு. நுழையக் கொஞ்சம் தயக்கம்.. ஆனால் பழகிய உணர்வு .. உடம்பு மடிப்புகள், சோம்பல் முறிக்கும்போது முடியின் மணம். முன்பு நடந்து கொண்ட மாதிரி இப்போது நடந்துகொள்ள முடியாது, சங்கடமாக இருக்கும். நேரில் போய் நிற்பேன், ஆனால் என் முகத்தை அவளுடைய முகத்துக்கு அருகில் கொண்டுபோகமாட்டேன்..

தடை என்ன இப்போது? என் வயதா, என் சட்டைப் பைக்குள் கத்தையாக மடித்து வைத்திருக்கும் கரன்சிநோட்டுகளா..? என் புதுச் செருப்பு கிரீச் கிரீச்சுனு சத்தம் போடாமலாவது இருந்திருக்கலாம்.

பிஜு மாமி ஒரு விளக்கு எடுத்துக்கொண்டு வந்தார் “விளக்கு என்னத்துக்கு? எனக்கு வர்றதிலே ஒண்ணும் சிரமமில்லே”ன்னு சொன்னேன். “பரிமல் எப்படியிருக்கான், மாமி?”

மாமியின் இறுகிய முகத்தைப் பார்த்ததுமே என் கேள்வியைக் கேட்டிருக்க வேண்டாம் என்று புரிந்தது.

மாமி விரலால் உள்பக்கம் சுட்டிக் காட்டினார்.

அறைக்குள் நுழைந்து அங்கிருந்த ஒரு ஸ்டூலின்மேல் உட்கார்ந்தேன்; என் வயிறு மடிப்பு அழுந்தியது. என் சட்டைப் பொத்தான்களை அவிழ்த்துவிட்டுக் கொள்ளலாமா என்று பார்த்தேன். நான் செருப்புடன் உள்ளெ நுழைந்தது சரிதானா என்று தெரிந்து கொள்வதற்காக அந்த அறையில் வேறு செருப்புகள் இருக்கின்றனவா என்று தேடினேன்.

“டீ கொண்டு வரவா?”

தன்னினைவுக்கு வந்தேன், பிஜு மாமிதான் கேட்கிறார்.

“கொண்டு வாங்க” என்று சொன்னேன்.

அறையின் ஒரு மூலையில் ஈக்கள் ஒரு கோப்பையில் ஒட்டிக் கொண்டிருந்த டீயை நக்கிக் கொண்டிருந்தன. இரண்டுகரப்புகள் கோப்பைக்குள் இருந்து தும்பிக்கைகளை நீட்டி வெளியே எட்டிப் பார்த்தன. பிஜு மாமி அந்தக் கோப்பையை எடுத்துக் கொண்டு வெளியே போனார்.

(“அப்புறம்? சரசிஜ், ஒண்ணையும் மறைக்காதே!”)

“இல்லை, ஒன்றையும் மறைக்கவில்லை.”

நீயார் என்று எனக்குத் தெரியாது. நீ ஒருவேளை என் மனச்சாட்சியாக இருக்கலாம். எல்லாவற்றையும் சொல்வதற்காகத் தான் உன்னைக் கூப்பிட்டிருக்கிறேன். அந்த டீயை என்னால் குடிக்க முடியவில்லை என்பதை உன்னிடம் ஒப்புக் கொள்கிறேன். என்ன நடந்தது தெரியுமா? நான் கோப்பையை வாங்கிக் கொள்ளக் கையை நீட்டியபோது அது கையிலிருந்து வழுகிக் கீழே விழுந்து விட்டது. என் வெள்ளை வெளேர் ஷார்ஸ்கின் உடையில் சில டீத்துளிகள் பட்டவிட்டன.

“அடடே!” என்று சங்கடத்தோடு சொல்லிவிட்டு ஒரு கந்தையை எடுத்து வர ஓடினார் பிஜு மாமி. “த்சொத்சோ”என்றேன் நான்.

நீ சிரிக்கறயா? நீ என்ன நினைக்கிறாய் என்று எனக்குத் தெரியும். நான் வேண்டுமென்றோ, என் உள்மன உந்துதலால் நானறியாமலேயோ கோப்பையைத் தவறவிட்டதாக நீ நினைக்கிறாய். சற்று முன்தான் அந்தக் கோப்பையில் கரப்பு நடமாடுவதைப் பார்த்திருந்தேன் நான். அதைத்தவிர இந்த அழுக்குத் தரை-ஊசிப்போன பொருள்களின் நாற்றம்–இந்தச் சூழ்நிலையில் எதுவும் என் தொண்டையில் இறங்காது.

பின்னர் இது குறித்து எனக்குப் பச்சாதாபம் ஏற்படாமலில்லை. நான் பண்பற்ற முறையில் நடந்து கொண்டு விட்டேன் அற்பன் மாதிரி. என் செய்கை பிஜு மாமிக்குப் புரிந்துவிட்டதோ இல்லையோ எனக்குத் தெரியாது. என்ன செய்வது.

நாமெல்லாருமே நம் சுபாவத்துக்கு அடிமைகள். எனக்கு அந்த நிலையில் வாந்தி வரும் போலிருந்தால் அதற்கு நானா பொறுப்பு? ஏப்பமோ தும்மலோ வராமல் தடுத்து கொள்ள முடியுமா நம்மால்?

“பத்துப் பன்னிரண்டு வருஷங்களுக்கு முன்னால் கூட நீ இதை விட மோசமான நிலையில் இருந்தாய் என்பதை மறந்து விட்டாயா? அப்போது இந்த மாதிரி சந்தில், இந்த மாதிரி அறையில் வெகு சாதாரணமாக வசித்திருக்கிறாயே!”

“ஆமாம். ஆனால் அது வேறு காலம், இது வேறு காலம். இதோ பார், நாம் ஒரு பழக்கத்திலிருந்து இன்னொரு பழக்கத்துக்கு மாறுகிறோம்–ஒரு பிறப்பிலிருந்து இன்னொரு பிறப்புக்கு மாறுவது போல. நான் ஒரு காலத்தில் அந்தப் பாழடைந்த கிணற்று வாழ்க்கையில் ஒன்றியிருந்தேன் என்பது உண்மைதான். அதுபோல் நான் அந்த வாழ்க்கையை விட்டு வெளியேறி விட்டேன் என்பதும் உண்மையே. உண்மையை ஒப்புக் கொள்வதில் குற்றமில்லை. ஒருவன் தன் பத்தாம் வயதில் அணிந்து கொண்ட சட்டை அவனுடைய இருபதாம் வயதில் அவனுக்குப் பொருந்தா விட்டால் அது அவன் குற்றமா? அது காலத்தின் குற்றம்..!”

பக்கத்து அறையிலிருந்து மூச்சிரைக்கும் அரவம் கேட்டது. நான் கேள்விக்குறியுடன் பிஜு மாமியைப் பார்த்தேன்.

“பரிமல்.. அவன் நெஞ்சிலே சளி சேர்ந்திருக்கு. அதனால மூச்சுவிடக் கஷ்டப்படறான். இப்ப தூங்கிக்கிட்டிருக்கான். இப்பக் கூட மூச்சுத் திணறுது..”

ஈரித்த தரை – நெடுங்காலத்துப் பாசி படர்ந்தாற்போல். தரை தெரு மட்டத்தை விடத் தாழ்வானது. ஆகையால் ஒருகாய்ந்த தண்ணீர்த் தொட்டி போலிருந்தது அது.

(“சரஜிஜ், மேலே பேசாதே! இதுக்கப்பறம் என்ன சொல்லுவேன்னு எனக்குத் தெரியும் உத்தரத்திலே கறையான்,கிழிஞ்ச தலையணை, கதவோரத்திலே ஒட்டடை.. இதெல்லாந் தானே? ஒன் வர்ணனை உண்மையாயிருக்கலாம், ஆனால் அதிலே உயிரிருக்காது. நீ விலகி வந்து விட்ட வாழ்க்கையை வர்ணிக்க முயலாதே!”)

விளக்கு அணைந்து விடும்போல் பக்பககென்று எரிந்தது. அதில் பார்வையைப் பதித்தவாறே மாமியைக் கேட்டேன்,”பரிமலுக்கு எவ்வளவு நாளா ஒடம்பு சரியில்லே?”

“இன்னியோடே இருபத்திரண்டு நாள்.”

“டாக்டர் என்ன சொல்றார்?”

“டாக்டர்கிட்டே போனாத்தானே! அந்த அதிருஷ்டங் கெட்டவகிட்டே ஒண்ணுமில்லே. வெறுங்கை, வெறுங் கழுத்து-அவளைக் கண்ணால பார்க்க முடியலே, சரசிஜ்! அவ கல்யாணத்திலே நாலஞ்சு பவுன் நகை போட்டிருந்தேன். எல்லாத்தையும் வித்துச் சாப்பிட்டாச்சு”.

“நீங்க எப்போ வந்தீங்க மாமி?”

“புதனோட புதன் எட்டு நாளாச்சு.. என் வயித்தில் பொறந்தவ இல்லியா! செய்தி கேட்டப்பறம் வராமே இருக்கமுடியல்லே. குக்கு என்னோட உசிருன்னு ஒனக்குத்தான் தெரியுமே!”

“தெரியும், மாமி.”

“கையிலே இருந்ததை எடுத்துக்கிட்டு ஓடி வந்தேன். அங்கே என்ன நிலைமைன்னு ஒனக்குத் தெரியுமே! இந்த வருஷம் குக்கு பெரிய பரீட்சை எழுதணும். பரீட்சைக்கு இன்னும் பணம் கட்டியாகலே.”

“புரியுது, மாமி.”

மாமி முந்தானையால் கண்களைத் துடைத்துக் கொள்ளும் போது அதிலிருந்த கிழிசல் என் கண்ணில் பட்டது.

“கொழந்தைகளோட சட்டை எல்லாம் கிழிஞ்சு போச்சு. ரெண்டு மாச வாடகை – அம்பத்திரண்டு வா – பாக்கி. ஒருவேளை சாதம், ஒரு வேளை சப்பாத்தி சாப்பிடறோம். அப்படியும் மாசத் தேவை பூராவையும் ரேஷன்லே வாங்க முடியலே. இருந்தாலும் விஷயத்தைக் கேட்டு உடனே வரவேண்டியதாப் போச்சு. பரிமலோட உசிரு மொதல்லே, மத்தெல்லாம் அப்பறம்.”

தன் முந்தானை முடிச்சை அவிழ்த்து அதிலிருந்து பல மடிப்புகளாக மடித்து வைக்கப்பட்டிருந்த ஒரு பழைய நோட்டைக் கையிலெடுத்துக் கொண்டு என்னை நெருங்கினார் மாமி. ஏனென்று புரிந்தது எனக்கு.. நான் சற்றுப் பின் வாங்கினேன். மாமி என் கையில் ரூபாய் நோட்டைத் திணிக்கப் போகிறார்- அதையேதான் செய்தார் அவர். அவருடைய கை நடுங்கியது; குரலுந்தான்.

“சரசிஜ், என் கையிலே வேறே ஒண்ணுமில்லே, இதிலே பரிமலுக்கு இஞ்செக்‌ஷன் வாங்க முடியுமா பாரு.. நான் திரும்பிப் போறதுக்காக டிக்கெட் பணத்தை கஷ்டப்பட்டுச் சேர்த்து வைச்சிருந்தேன்..”

நான் பணத்தை வாங்கிக் கொள்ளவில்லை. வாங்கிக்கொள்ள முடியவில்லை என்னால். இது ஒன்றும் பெரிய விஷயமில்லை. என்னுடைய அந்தக் கதை ஞாபகம் வந்தது எனக்கு –பிச்சைக்காரப் பெண் தன் துணியை அவிழ்த்துக் குழந்தைக்குப் போர்த்தி விட்டாள்..

(“குக்கு- அதாவது உஷாவை-அன்னிக்குப் பார்த்தியா, சரசிஜ்?”)

பார்த்தேன், அவள்தான் விளக்கை எடுத்துக் கொண்டு சந்து முனை வரை என் பின்னால் வந்தாள்.

சந்து முனைக்கு வந்ததும் நான் திரும்பிப் பார்த்தேன் விளக்கிலிருந்து வந்த வெளிச்சமும் புகையும் அவளது உடலைத் துண்டு துண்டாக்கிக் காட்டின. “என்ன இப்படி ஆயிட்டே, உஷா?” என்று கேட்டேன். அவள் சிரித்தாள், பிறகு முகத்தைத் திருப்பிக் கொண்டு, “நாந்தான் ஒடம்பு முடியாமே இருந்தேனே…! அதோடே இவரோட வியாதி வேறே… அநேகமாக எல்லா ராத்திரியும் தூங்காம முழிக்க வேண்டியிருக்கு…” என்று சொன்னாள்.

அவளுடைய தலையில் முக்காடு இல்லை. அவளுடைய முடி காற்றில் பறந்தது. விளக்குத் திரியின் வெளிச்சம் சீராகஇல்லாததால் ஒளியும் நிழலும் அவளுடைய உடலில், முகத்தில், கன்னத்தில், கண்களில் மாறி மாறிப் படர்ந்தன.

உஷா மறுபடி சிரித்தாள். “என்ன பார்க்கறே, என்னைப் பார்த்தா பிசாசு போல இருக்கா…? இந்தச் சில வருஷங்களிலே நான் ஒரேடியாப் பிசாசா ஆயிட்டேன். இல்லியா?”

“இல்லேயில்லே, நீ முன்னே மாதிரியேதான் இருக்கே” என்று நான் சொல்லியிருக்க வேண்டும், ஆனால் நான் மௌனமாயிருந்தேன்.

உஷா திடீரென்று மெல்லச் சிரித்தாள். “ஒனக்கு நல்ல களை வந்திருக்கு.”

“நீ இன்னும் குண்டாயிட்டே” என்பதைத்தான் அவள் சுற்றி வளைத்துச் சொல்கிறாளோ என்று புரியாமல் நான்கைக்குட்டையால் முகத்தைத் துடைத்துக் கொண்டேன். என் ஷார்க்ஸ்கின் பேண்டும் சட்டையும் எனக்கு உறுத்தின.

“எங்க சந்திலே ராத்திரி பூரா காத்துக்கிட்டு நின்னாலும் டாக்சி கிடைக்காது” என்றாள் அவள்.

அவளது பேச்சின் குறிப்பைப் புரிந்து கொண்ட நான் சங்கட உணர்வுடன் தெருவில் நடக்கத் தொடங்கினேன்.அப்போது ‘நான் மறுபடி வருவேன்’ அல்லது ‘மறுநாள் வருவேன்’ என்று முணுமுணுத்திருக்கலாம்… ***

அது சொல்லியது, “சாப்பாடு மூடி வச்சிருக்கு சரசிஜ்! நீ அதைத் தொட்டுக்கூடப் பார்க்கல்லியே!”

“எனக்கு வேணாம்! என்னை இந்த வராந்தவிலே உக்காந்து சிகரெட்டை முழுசாக் குடிக்க விடு!” நான் சொன்னேன்.

அது சிரித்து, பின்னாலிருந்து அசிங்கமான முறையில் என்னைக் கட்டிக் கொண்டது. அதன் இருட்டு நிறக் கை என்கழுத்தில்.

“என் குரல்வளையை அமுக்கிக் கொல்லப் போறியா?”

அதன் முகத்தை நான் பார்க்கவில்லை அப்போது. ஆனால் அது இருந்தது, என் கழுத்தைக் கட்டிக் கொண்டு இருந்தது. அது சொல்லியது, “கொன்னு என்ன பிரயோசனம்… கொஞ்சம் புகையாகி மேலே பறக்கும், கொஞ்சம் சாம்பலாகிக் கிடக்கும்… இந்த ரெண்டு மணி நேரத்தில் நீ எவ்வளவு சிகரெட் குடிச்சுட்டே! சாப்பாட்டைத் திற, வயித்துக்குக் கொஞ்சம் சாப்பிடு!”

“எனக்கு பசியில்லேன்னு சொன்னேன்னே!”

“ஏன் இல்லே?”

“ஏன்னு ஒனக்குத் தெரியும். என் மனசு சரியில்லே. இன்னிக்கு உஷாவைப் பார்த்துட்டு வந்திருக்கேன். அங்கே போய்ப் பார்த்தா அழுகை வருது… உஷாவோட புருஷன் பரிமல் படுத்த படுக்கையாகக் கிடக்கான். அவன் பொழைப்பாங்கற நம்பிக்கை இல்லை. உஷாகிட்டப் பணமில்லே. அவ கையிலே ஒரு வளையல்கூடஇல்லே…”

“தெரிஞ்சுகிட்டேன். அதனாலேதான் ஒன் மனசு சரியா இல்லையா, சரசிஜ்?”

அது பேசிய முறையே சரியாக இல்லை.

மிகவும் வேதனையுடன் நான் சொன்னேன், “உஷா எனக்கு எவ்வளவு வேண்டியவள்னு ஒனக்குத் தெரிஞ்சிருந்தாஇப்படியெல்லாம் பேசமாட்டே… என்னோட அவளுக்கு எப்படிப் பட்ட உறவு ஏற்பட்டிருக்க முடியும்! ஒரு சின்னப் பிசகு பண்ணிட்டு இப்ப அதுக்கான விலையைக் கொடுதுக்கிட்டிருக்கா.”

அது ஹாஹாவென்று சிரித்தது. அந்தச் சிரிப்பு உடைந்த கண்ணாடியின் எண்ணற்ற சில்லுகள் போல் என்னைக் குத்திக் கீறியது.

அது சிரிப்பதை நிறுத்திவிட்டுச் சொல்லியது, “நெஞ்சிலே கை வைத்துச் சொல்லு, சரசிஜ்! நிசமாவே ஒனக்கு வருத்தந்தானா? உஷா ஒன்னை உதறிட்டுப் பரிமலைக் கலியாணம் பண்ணிக்கிட்டா, அதனாலே அவளுக்கு சுகமில்லே, இன்னிக்கு அவ ஒரு இருட்டறையிலே உக்காந்துகிட்டுத் தவிக்கறா – இதையெல்லாம்பார்த்த ஒனக்குக் கொஞ்சங்கூட சந்தோஷம் ஏற்படல்லியா?”

நான் பதிலெதுவுதும் சொல்லவில்லை. சொல்லிப்போன பிரயோசனமில்லை. அது மகாமட்டமான பிராணி. நம்பிக்கை இல்லாதது. அதுக்கு உஷாவைப் புரியலே. நான் அதுகிட்டே பிஜு மாமியைப் பத்திச் சொன்னால் மட்டும் புரிஞ்சுக்குமா?

பிஜு மாமிக்குத் தன்னோட பெண்மேலே பாசம். அவர் தன்கிட்டேருந்த கடைசிப் பத்து ரூபாய் நோட்டைமுந்தானையிலேருந்து எடுத்துக் கொடுத்ததைக் கேட்டும் அது ஹாஹாவென்று சிரிக்கும்.

(“சரசிஜ், மறுநாள் காலையிலே நீ மறுபடி அங்கே போனியா?”)

ஆமாம் போனேன். அன்று டாக்சியைச் சந்துக்குள்ளே கொண்டு போகவில்லை. கையில் மருந்து, பையில் பழங்களுடன் வேஷ்டி நுனியைத் தூக்கிகொண்டு உஷா வீட்டு வாசலில் போய் நின்றேன். அப்போது நாற்புறமும் வீடுகளில் கரியடுப்பு மூட்டிக் கொண்டிருந்தார்கள்.

இன்றும் பிஜு மாமிதான் கதவைத் திறந்தார்.

“பரிமல் எப்படியிருக்கான், மாமி?”

“அதே மாதிரிதான்… வா.”

பகலில் அந்த அறைக்குள் நுழைய முடிந்த சொற்ப வெளிச்சதிலேயே அதன் உண்மை நிலை தெளிவாகத் தெரிந்தது -அதை நான் வர்ணிக்க விரும்பவில்லை. பழைய துண்டு, கிழிந்த லுங்கி, சுவரில் கறைகள், அழுக்குத் தலையணை, ஈ எல்லாமும் இருந்தன, அவை எப்போதும் இருக்கும். முதல் நாளிருந்த மோடாவைத் தேடிக் கண்டுபிடித்து அதன்மேல் உட்கார்ந்தேன். இன்று நான் வேஷ்டி அணிந்திருந்ததால் உட்காருவதில் அசௌகரியம் ஏற்படவில்லை.

மருந்தையும் பழப்பையையும் பிஜு மாமியிடம் கொடுத்தேன். அவருடைய முகம் மலர்ந்தது, அந்த மலர்ச்சியை மறைத்துக் கொள்ள அவர் முயற்சி செய்யவில்லை.

பக்கத்து அறையிலிருந்து மூச்சிரைக்கும் அரவம் கேட்டது. நான் அதை உற்றுக் கேட்பதைக் கவனித்து மாமி சொன்னார். “நேத்து ராத்திரி பூரா இப்படித்தான் மூச்சு விட முடியாம சிரமப்பட்டான். நானும் குக்குவும் முறை வச்சுக் கண் முழிச்சோம். பொண்ணைப் போய்த் தூங்கச் சொல்லிட்டு நான் உக்காந்திருக்கிற போதெல்லாம், “எப்படியாவது இந்த ராத்திரிப்போது ஆபத்தில்லாமே கழியும்படி செஞ்சுடு”ன்னு பகவானை வேண்டிக்கிட்டேயிருந்தேன். இந்த ரூமிலே குக்கு தலையிலே அடிச்சுக்கிட்டு அடிச்சுக்கிட்டு ரணமாக்கிக்கறா, அந்த ரூமிலே நோயாளியோட முனகல்- அந்த பயங்கரத்தை ஒனக்கு விளக்கிச் சொல்ல முடியாதுப்பா…” சிறிது நேரங்கழித்து மாமி மறுபடி தொடர்ந்தார், “நடு நடுவிலே குக்கு அந்த ரூமுக்கு வந்தா. அவ மூஞ்சியைப் பார்க்கசகிக்கலே. அவளோட கண் ரெண்டும் நெருப்பா எரியுது.. நேத்திக்குத்தான் பார்த்தியே! நெத்தியிலே எல்லாம் ஒரே ரத்தம். நான் பரிமலோட நெஞ்சைத் தடவிக் கொடுத்தேன், அவனுக்க ‘பெட்பான்’ வச்சேன். குக்குவை ரொம்ப நேரம் அவன்கிட்டே ஒக்காந்திருக்க விடலே. அவளோட ஒடம்பிலே எலும்பைத் தவிர வேறே ஒண்ணுமில்லே, தலையிலே எழுதினதை யார் மாத்த முடியும்? இருந்தாலும் என் கண்முன்னே இருக்கிற வரையிலேஅவளுக்காக என்னாலே முடிஞ்சதைச் செய்யறேன்.. என்ன இருந்தாலும் நான் அவளோட அம்மா, சரசிஜ்!”

என் உடம்பு சிலிர்த்தது. மாமியின் கண்களுக்கடியில் கருமை படர்ந்திருந்தது. சுண்ணாம்பு நீரில் ஊறியது போலிருந்தது அவருடைய தலைமுடி.

“ஒங்க ஒடம்புந்தான் நல்லாயில்லே, மாமி. நீங்க இந்த மாதிரி ராத்திரி கண்முழிச்சா நீங்களும் ஒடம்பு முடியாமபடுத்துடுவீங்க!”

மாமி சிரித்தார். வேதனை கலந்த சிரிப்பு, “என் விஷயத்தை விட்டுத் தள்ளு. நான் ஒரு கணக்கு இல்லே, சாவு என்னை இன்னிக்கு அழைக்கலாம், அல்லது நாளைக் அழைக்கலாம். அழைப்பு இன்னிக்கே வந்துட்டுப் போகட்டமே! அதக்கு முன்னாலே குக்குவை ஆபத்திலேருந்து காப்பாத்திட்டேன் என்கிற திருப்தி கிடைச்சாப் போதும் எனக்கு.”

(“சரசிஜ், அந்த ஒரு வாக்கியத்தைக் கேட்டு நீ பிஜு மாமியை ஒரு புது மனுஷியா உணர்ந்தியா?”)

“ஆமா, அந்த நிமிஷத்திலே பிஜு மாமி ஒரு ஏழையாத் தோணல்லே எனக்கு. விதியோட விளையாட்டாலே, வறுமைகாரணமா எவ்வளவோ இழந்துட்டார் பிஜு மாமி. ஆனா இவ்வளவு கஷ்டத்திலேயும் அவர் பாதுகாத்து வச்சிருந்தாரே, அதோட மதிப்பும் கொஞ்சமில்லே, ஒரு உசிரைக் காப்பாத்த எல்லாத் தியாகமும் செய்யறது. ஒரு மனுஷர் இன்னொரு மனுஷரை சார்ந்த நிக்கறது-ரெண்டு சீட்டு ஒண்ணு மேலே ஒண்ணு சாஞ்சுக்கிட்டு நிக்கற மாதிரி- நோயாளிக்குப் பணிவிடை செய்யச் சம்பளங் கொடுத்து நர்ஸ் வச்சுக்க மாட்டாங்க. இந்தமாதிரி வாழ்க்கை எனக்கு ஒரு காலத்திலே ரொம்பப் பரிச்சயமா யிருந்தது.. இப்போ மறுபடியும் அதை அடையாளங் கண்டுக் கிட்டேன்..”

“உஷா எங்கே மாமி?” என்று தணிந்த குரலில் கேட்டேன்.

“தூங்கறா. ராத்திரி பூரா இந்த ரூமுக்கும் அந்த ரூமுக்குமா அலைஞ்சுட்டு இப்பத்தான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாலே கண்ணசந்திருக்கா. நான் அதனால்தான் அவளை எழுப்பல்லே. தூங்கட்டும். வாழ்க்கையிலே தூக்கத்தையே இழந்துடற நிலை மைக்கு வந்துட்டாளே!”

வெளியில் – சந்து முனையில் – ஒரு நாய் ராகத்துடன் ஓலமிட்டுக்கொண்டிருந்தது. மாமி அந்தத் திசையில் விரலால்சுட்டிக் காட்டிவிட்டுக் கிசுகிசுத்தாள், “கேளு! தினம் இந்த மாதிரி ஓலமிடுது. காலையிலே, மத்தியானம், சாயங்காலம், நடுராத்திரியிலே கூட. ராத்திரி வீட்டு வாசல்லே ஏறி வருது. இந்த ஓலம் ரொம்ப அச்சானியம். பரிமல் இனிமேல் பிழைக்க மாட்டான் போலிருக்குப்பா..”

அந்த ஒரு வாக்கியம் என்னை அற்பனாக, நாதியற்றவனாகச் செய்து விட்டது. நான் சிரமப்பட்டு எழுந்திருந்து என் குரலில் உறுதியை வரவழைத்துக்கொண்டு சொன்னேன், “நிச்சயம் பிழைச்சுடுவான், மாமி! நாம அவனைக் காப்பாத்திடுவோம்!”

என் பேச்சின் பொருள் புரியாமல் மாமி என்னைக் கண் இமைக்காமல் பார்த்தார்.

“நிச்சயம்காப்பாத்திடுவோம், மாமி! நம்மால முடிஞ்சதை யெல்லாம் செய்வோம்!” ஒரு தடவை தொண்டையைக் கனைத்துக் கொண்டு தயக்கத்தைத் துடைத்தெறிந்துவிட்டுத் தொடர்ந்தேன். “ஒண்ணும் தப்பா நினைச்சுக்காதீங்க மாமி! என்கிட்டேயும் நிறையப் பணம் இல்லே. நான் இப்போ லக்னோவிலே இருக்கேன்னு ஒங்களுக்குத் தெரியும். இங்கே ஓட்டல்லே தங்கறதாலே ரொம்பச் செலவு. இருந்தாலும் மருந்து, பழம், சிகிச்சை இதுக்காகக் கொஞ்சம் பணம் கொடுத்துட்டுப்போக ஆசைப்படறேன்..”

என் சட்டைப் பையில் கையை விடப் போனேன். மாமி கையை உயர்த்தி என்னைத் தடுத்தார். அவர் உணர்ச்சிவசப்பட்டுவிட்டார் என்பத தெளிவாகத் தெரிந்தது. அவருடைய கண்களில் நீர் பளபளத்தது. அவர் கையை உயர்த்திச் சொன்னார், “கொஞ்சம் இருப்பா.. என்கிட்டே கொடுக்க வேணாம். குக்குவைக் கூட்டிக்கிட்டு வாரேன். நீ கொடக்கறதை அவ கையிலேயே கொடு. அப்போ அவ புரிஞ்சுக்குவா.. அவ தனியா இல்லே, அவளுக்கு உதவ ஒரு நண்பன் இருக்கான்னு..”

பிஜு மாமி உள்ளே வேகமாகப் போகத் தொடங்கியவர் திடீரென்று திரும்பி நின்றார். அவரது கண்களை உற்றுப் பார்த்தார். அந்தக் காட்சி இப்போதும் என் மனக் கண்ணில் தெளிவாகத் தெரிகிறது.

அவர் ஏதோ சொல்ல விரும்புகிறார். அவர் சொல்ல வந்தது உதடோரத்துக்கு வந்து காய்ந்துபோய் விடுகிறது.அவர் என்னருகில் வந்தார்; தணிந்த குரலில் கேட்டார், “சரசிஜ், எவ்வளவு?”

முதலில் என்னால் அவருடைய கேள்வியின் பொருளைப் புரிந்துகொள்ள முடியவில்லை. மாமி மறுபடியும் அதே குரலில் “எவ்வளவு?” என்று கேட்டதும் புரிந்துவிட்டது எனக்கு.. நாய் இன்னும் ஓலமிட்டுக் கொண்டிருந்தது.. மஸ்லின் ஜிப்பாய் பையிலிருந்து ஒரு நோட்டை எடுத்தேன் – நூறு ரூபாய் நோட்டு.

“மாமி, இப்போதைக்கு இந்தப் பணத்தை..”

நான் சொல்லி முடிக்கவில்லை.

“நூ..று.. ரூவாயா!” ஒரு வினாடியில் மாறிப் போய்விட்டார் மாமி. அவரது குரல்கூட மாறியிருந்தது.

“நூ..று.. ரூவா..!” கரகரத்த குரலில் மறுபடி பேசினார் மாமி. “அவ்வளவு பணத்தையும் அவகிட்டே கொடுத்துடப் போறியா..? அதுக்குப் பதிலா.. சில்லறையா மாத்தி எனக்கும் கொஞ்சம் கொடேன்..!”

நெருப்பிலிட்ட காகிதத் துண்டுபோல் என் கண் முன்னே கொஞ்சங் கொஞ்சமாகச் சுருங்கிப் போய்க் கொண்டிருந்தார் பிஜு மாமி. ‘நூ..று.. ரூபா’ இந்த ஒரு சொற்றொடர் ஆற்றுத் தண்ணீரைக் கிழித்துக் கொண்டு செல்லும் நீராவிப் படகுபோல் தனக்கொரு வழியை உண்டாக்கிக் கொண்டு விரைந்தது. ஒரு பக்கம் உஷா, அவளுடைய அசுத்தமான சிறு அறை, உயிருக்கு மன்றாடிக் கொண்டிருக்கும் கைம்மை; இன்னொரு புறம் பிஜு மாமியின் குடும்பம்–வாடகை பாக்கி, குழந்தைகளுக்கு ஃபிராக் சட்டை வாங்கப் பணம், பையனுக்குப் பரீட்சைக்காகக் கட்ட வேண்டிய பணம், ரேஷன் வாங்கப் பணம்.. உஷாவைப் பற்றிய கவலையில் இந்தக் குடும்பத்தைச் சிறிது நாட்கள் மறந்திருந்தார் பிஜு மாமி. இப்போது உஷாவின் குடும்பமும் மாமியின் குடும்பமும்வெவ்வேறாகி விட்டன.

(“அந்தப் பிச்சைக்காரப் பெண்ணோட கதையைத் தேடிக் கண்டு பிடிச்சிருந்தா நீ என்ன செஞ்சிருப்பே?”)

“கிழிச்செறிஞ்சிருப்பேன்.”

“உம்” என்று சொல்லிவிட்டு அது சற்று நேரம் மௌனமாக இருந்தது. கடைசியில் அது மெல்லச் சொல்லியது.. “சரசிஜ், நீ பிஜு மாமியை மட்டுந்தான் பார்த்தே, அந்த அறைப் பக்கம் திரும்பிப் பார்க்கலிலியே! மாமியோட நடத்தைக்கான ரகசியம் அந்த அறையிலேதான் இருக்கு. ஒரு கட்டில் போடத்தான் இடமிருக்கு அந்த அறையிலே, அப்படிப்பட்ட அறையிலே எவ்வளவு பெரிய மனசு இருக்க முடியும்..? சரசிஜ், இந்தக் கணக்குத் தெரியல்லேன்னா இந்த கதையை எழுத முயலாதே!”

(‘சாயாஹரின்’, 1961)

வங்கச் சிறுகதைகள்
தொகுப்பு : அருண்குமார் மகோபாத்யாய்
வங்கத்திலிருந்து தமிழாக்கம்: சு.கிருஷ்ணமூர்த்தி
நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா

நன்றி: http://www.projectmadurai.org/

சந்தோஷ் குமார் கோஷ் (1920 – 1985)
இவர் நரேந்திரனாத் மித் ரா, நாராயண் கங்கோபாத்தியாய் ஆகியோருடன் இலக்கிய உலகில் நுழைந்தார். பிறந்தது ஃப்ரீத்பூரில். வாலிபத்தின் பின்பகுதி முதல் கல்கத்தாவாசி. எப்போதும் நகர வாழ்க்கையையே சித்திரிக்கிறார். கிராம வாழ்க்கை பற்றி எழுதுவதில்லை. கதை, நாவல், நாடகம், கவிதை, கட்டுரை படைப்பதில் சிறந்தவர். தேர்ந்த மொழிச் சிற்பி. இவருடைய கதையில் வடிவத்துக்கு முக்கிய இடமுண்டு. கதை சொல்லும் முறை முக்கியமென்று கருதுகிறார். கூர்மையான, பண்பட்ட, சற்றுக் கேலி கலந்த மொழியில் இதயத்தின் மிக நுண்ணிய உணர்வுகளையும் வெளிப்படுத்தும் அசாதரணத் திறமை படைத்தவர். இவர் வாழ்க்கையை நேசிப்பவர். இந்த நேசத்தில் ஓரளவு வேதனையும் நம்பிக்கையின்மையும் கலந்துள்ளன. தாம் வாழும் காலம், கையாளும் கலை இவையிரண்டிலும் அக்கறை கொண்டவர். சிறிது காலம் டில்லியில் வசித்தார். கல்கத்தாவின் புகழ்பெற்ற பத்திரிகையொன்றில் பணிபுரிந்தார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *