சிங்கப்பூர்க் குழந்தைகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: August 8, 2022
பார்வையிட்டோர்: 8,895 
 

(1975ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நெஞ்சையள்ளும் வீணை இசையை வீடு முழுவதும் நிறைத்துக் கொண்டிருந்தது வானொலிப் பெட்டி.

ஊதுவத்தியின் நறுமணம் ‘கமகம’வென்று எங்கும் பரவியது.

வண்ண மலர் மாலை சூட்டிய கண்ணன் திருஉருவம் அகல் விளக்கின் பொன்நிறச் சுடரில் தகதகத்தது.

அந்த அழகுச் சுடர் பேருருப் பெற்றதுபோல் அருகே திருமகளாக நின்றிருந்தாள் சிவகாமி கூப்பிய கைகளுக்குள் தன் உயிரை யும் உள்ளத்தையும் வைத்துத் தெய்வத்துக்குக் காணிக்கையாக்குவது மாதிரி ஒரு பரவசத் தோற்றம் அவள் விழிகளிலிருந்து நீரருவி பெருக்கெடுத்தது அது ஆனந்தக் கண்ணீ !

“இன்றுபோல் இன்பமும் அமைதியும் உன் கருணையால் என்றைக்கும் எல்லார்க்கும் கிட்ட வேண்டும் கண்ணா” என்று விடுவித்த வேண்டுகோளின் உருக்கம் உதடுகளின் துடிப்பில் தெரிந்தது.

இன்று பொங்கும் இன்பம் தீபாவளி இன்பம் இன்று தவழும் அமைதி, துன்பங்களின் மொத்த உருவமான நரகாசுரன் அழிந்தொழிந்ததால் என்னும் நம்பிக்கையின் அடையாளமான நல்லமைதி

அந்த இன்பம் சிவகாமியின் மனத்தில் ஏனோ முழுமை யாகப் பொங்கவில்லை. அந்த அமைதி அவள் முகத்தில ஏனோ பூரணமாகத் தவழவில்லை. எங்கோ ஒரு குறை. ஏதோ ஒரு ஊனம், என்னவோ ஒரு சுமை அந்த முள் மட்டும் இன்று உறுத்தாமலிருந்தால்….?

கடைசி வீட்டில் குடியிருக்கும் திருமதி தியாம் சூன் என்னும் சீனமாது அவள் மனக்கண்ணில் தோன்றினாள். ஒரு பெரு மூச்சை நெட்டுயிர்த்தவாறே சமையலறைக்கு வநதாள் சிவகாமி.

புத்தாடை புனைந்த குழந்தைகளுக்கு. புது மாப்பிள்ளை போல் சரிகைக்கரை வேட்டி கட்டியிருந்த கணவன் சொக்க லிங்கத்திற்கும் தீபாவளிப் பலகாரங்களைப் பரிமாறினாள் சிவகாமி. அவர்கள் பசியாறி முடிந்ததும் அரளை உட்காரச் சொன்னான், சொக்கலிங்கம் “இண்ணிக்கி நான் தான் உனக்கு பரிமாறுவேன் நிறைய சாப்பிடணும்!” என்றான். சிரித்துக் கொண்டே உட்கார்ந்தாள் சிவகாமி .

முதலில் வாழையிலை போட்டான். “தலை கீழாய் போடுறீங்களே?” என்று சொல்லித் தானே அதைத் திருப்பிப் போட்டுக்கொண்டாள் அவள். உடனே, “அப்பாவுக்கு இலை கூடப் போடத் தெரியலே!” என்று கைக்கொட்டிச் சிரிததான் ஆறு வயது மகன் கணேசன்.

“போடா போக்கிரிப் பயலே!” என்று செல்லக் கோபம் காட்டி விட்டு இரண்டு இட்டிலிகளை எடுத்து இலையில் வைத்தான் சொக்கலிங்கம்.

ஒன்பது வயது மகன், வசந்தா அந்த இட்டிலிகளின் தலையில் தேங்காய்ச் சட்டினியைக் கொட்ட, மகன் கணேசன் சாம்பார் ஊற்றிக் குளிப்பாட்ட, சட்டினியையும் சாம்பாரையும் இலையில் தேக்கிக்கொள்ளச் சிவகாமி படாத பாடுபட….அங்கே குதூகலமான சிரிப்பொலி அலை மோதியது.

அந்த மகிழ்ச்சி அலைகளுக்கு நடுவிலும் கடைசி வீட்டு சீனக் குடும்பத்தின் ஞாபகம் உண்டானதால் சிவகாமியின் முகம் ஒரு கணம் வாடிக் கறுத்தது.

அதை அப்பொழுதே கவனித்தான் சொக்கலிங்கம்.

“எங்கேப்பா அம்மாவை காணோம்” என்று கவலை யோடு கேட்டான் மகன் கணேசன். “அம்மா அறைக்குள்ளே இருக்கிறாள்’டா” என்றான் தந்தை சொக்கலிங்கம்.

“அறைக்குள்ளே என்ன செய்யுறாங்க?”

“புடவை கட்டிக்கிட்டு இருக்கிறாள்”

“தீபாவளிப் புடவைதான் அப்பாவே கட்டிக் கட்டிருந்தாங்களே?”

“இது தீபாவளி புடவை இல்லேடா, பழைய புடவை!”

“தீபாவளியண்ணைக்கி பழைய புடவை கட்டிக்கூடாதே”

“பழசாயிருந்தாலும் இது….உங்கம்மாவுக்கு ரொம்பச் சிறப்பான புடவை‘டா!”

“என்ன சிறப்பு? இம்?”

அதை எப்படி விளக்கி சொல்வது என்று சொக்கலிங்கம் தடுமாறியபோது, சிவகாமி அறைத கதவைத் திறந்துககொணடு வெளியே வந்தாள்.

இளநீல வண்ணத்தில் தங்க நிற அன்னப்பறவைகள் நிரம்பிய காஞ்சிபுரம் பட்டுப்புடவையுடுத்தி செளந்தர்ய போல் வந்து நின்ற மனைவியைக் கண்களால் அள்ளி விழுங்கினான் கணவன். அது அவள் திருமண விழாவன்று உடுத்திய கூறைப் புடவை.

அலமாரியில் பத்திரமாக வைத்திருக்கும் அதை, தீபாவளி போன்ற திருநாட்களின்போது மட்டும் எடுத்துக் கொஞ்சநேரம் உடுத்திக்கொள்வது அவள் பழக்கம்.

“அம்மாவை இப்படிப் பார்க்காதீங்க’ப்பா கண்ணுபட்டு’டும்” என்று குறும்பாகக் கூறினாள் வசந்தா.

“இநதப் புடவையிலே உங்கம்மா எவ்வளவு அழகாயிருக்கிறாள்!” என்ற சொக்கலிங்கத்தின் நெஞ்சம் பூரிப்பால் விம்மித் தணிந்தது.

கணவனை ஓரக்கண்ணால் கவனித்த சிவகாமியின் உடம்பு முழுவதும் மின்சாரம் பாய்வதுபோல் உவகை உணர்வு பெருகியது.

அந்த உவகைப் பெருக்கின் ஊடே நொடிப்பொழுது அனல் வெப்பம் ‘குப் ‘பென்று பற்றியதும் தெரிந்தது. திருமதி தியாம் சூன் நினைவுதான் அது என்பது சொக்கலிங்கத்திற்கு உடனே புரிந்தது.

பூ வேலைப்பாடுள்ள பெரிய வெள்ளித் தாம்பாளம், அதிலே கண்கவரும் சின்னஞ்சிறு பளிங்குக் கிண்ணங்கள், அந்த பதினைந்து கிண்ணங்களிலும் பதினைந்து வகைப் பலகாரங்கள் அதிரசம், அச்சு முறுக்கு, நெய் உருண்டை ‘பால்கோவா, தேன் குழல்…

தொட்டால் கை மணக்கும், தொடுவதற்கு முன்பே வாய் ஊறும்.

முதல் தாம்பாளம் ‘மின் தூக்கி’ (லிட்டு)க்கு அடுத்துள்ள ‘சட்டைக்காரர்’ வீட்டுக்கு!

‘மீன் வளர்க்கிறவர்’ என்று அடையாளம் சொல்லப்படும் ‘சிங்களவர்’ வீட்டுக்கு அடுத்த தாம்பாளம்!

கொல்லைப்புறம் மாதுளஞ்செடி வைத்திருக்கும் ‘ஜாவாக் காரர்’ வீட்டுக்கு மூன்றாவது தாம்பாளம்!

இப்படியாக அக்கம் பக்கத்து வீடுகளுக்கெல்லாம் தித்திக்கும், தீபாவளிப் பலகாரங்களைக் குழந்தைகளிடம் கொடுத்து அனுப்பிக்கொண்டிருந்தாள் சிவகாமி.

“படிக்கட்டுக்குப் பக்கத்து வீட்டுப் ‘பாபாக்காரருக்கு’ நூறு வெள்ளி பணம் வேண்டுமாம் அம்மா!” என்று சொல்லிக் கொண்டே காலித் தாம்பாளத்தோடு வந்தான் கணேசன்.

“நூறு வெள்ளி கேட்கிறாரா? ஏன்‘டா ” சொக்கலிஙகத்துக்கு பொருள் விளங்காத திகைப்பு.

“நம்ம வீட்டுப் பொரிவிளங்காய் உருண்டையைக் கடிச்சாராம் கடைசியா இருந்த ரெண்டு பல்லும் அதோடு வந்துடுச்சாம். புதுசாப் பல் கட்டிக்கணுமாம். அதுக்காகத்தான் பணம் வேணுமாம்..”

மகன் சிரிக்காமல் பேசினான். அப்பா விழுந்நு விழுந்து சிரித்தார்! அம்மா குலுங்கி குலுங்கி சிரித்தாள்!

‘கலகல’ வென்ற அந்தச் சிரிப்பொலியிலும் கலக்கம் கலந்து வந்த்து. கொஞ்சும் சலங்கையில் ஒரு மணி உடைந்திருந்தால் எப்படி ஓசை எழுமோ, அப்படி.

தியாம் சூன் குடும்பத்தாரின் தொடர்பிலான அந்தக் கசப்பான நினைவு அவளை எவ்வளவு வேதனைக்குள்ளாக்குகிறது என்பதை தெளிவாக உணர்ந்தான் சொக்கலிங்கம்.

கவலை என்னும் கருமேகம் அவள் நிலவு முகத்தை மறைப்பதும் விலகுவதுமாகக் கண்ணாபூச்சி விளையாடும்போது அவனால் களிப்புற்றிருக்க முடியவில்லை.

அவள் மனககுறையை, அவள் மனம் தவிக்கும் தவிப்பை அகற்றி விடுவதென்று முடிவு செய்தான். அகற்றாமல்விட்டால் இந்த ஆண்டுத் தீபாவளி அவளுக்கு இன்பமற்ற தீபாவளியாக அல்லவா அமையும்?

உடனே, குழந்தைகள் வசந்தாவையும் கணேசனையும் அருகில் அழைத்தான். அவர்கள் கை நிறையச் சில்லரை காசுகளை அள்ளிக் கொடுத்து, ‘கீழே போய் உங்களுக்கு விருப்பமான பொருள்களை வாங்கிக்கிடுங்க. பசி எடுக்கற வரையிலும் விளையாடிட்டு வாங்க’ என்றான்.

‘ஓ‘ வென்று குழந்தைகள் துள்ளிக் குதித்து வெளியிலே ஓடினார்கள்.

‘வா‘ வென்று சிவகாமியின் கையைப் பற்றி உள்ளே இழுத்தான் சொக்கலிங்கம்.


சீவகாமியின் மனம் சங்கடத்துக்குக் காரணமான அந்தச் சம்பவம் சென்ற மாதம் நடந்தது.

தியாம் சூன் வீட்டுப் பையனும் கணேசனும் அன்று நடைபாதையில் குத்துச்சண்டை போட்டுக்கொண்டிதந்தார்கள். விளையாட்டுச் சண்டைதான். அதுவும முதல் நாள் தொலைக் காட்சியில் குத்துச்சண்டை பார்த்ததன் எதிர் விளைவு ஏப்போதும் அவ்விருவரும் சேர்ந்து விளையாடுவார்கள். அவர்கள் ஒரே பள்ளியில் ஒரே வகுப்பில் உள்ளவர்கள்.

‘கைச்சரசம் கண்ணைக் குத்தும்’ என்பது பழமொழி அல்லவா? விளையாட்டுச் சண்டை ஏனோ வினைச்சண்டை யாகிவிட்டது. கோபத்தோடு குத்துக்களை கொடுத்துக் கொண்டார்கள்.

கீழே கறிகாய் வாங்கச் சென்று, மின்தூக்கியில் வந்த சிவகாமியும் திருமதி தியாம் சூனும் அவர்களைப் பார்த்து பதறிப் போனார்கள். தியாம் சூன் மகனுக்கு வாயில் குருதி கசிந்திருந்தது. கணேசனின் உதடுகள் ‘பம்’ மென்று வீங்கிப் போயிருந்தன.

“பார்த்தாயா உன் பிள்ளை செய்திருக்கும் அநியாயத்தை” என்று ஆத்திரத்தோடு பாய்ந்தாள் திருமதி தியாம் சூன்.

“உங்க பிள்ளை செய்தது மட்டும் நியாயமா?” என்று பதிலுக்கு சீறினாள் சிவகாமி.

கொஞ்ச நேரத்துக்கு முன்பு கறிகாய்ச் சந்தை (மார்க்கெட்)யிலும், மின் தூக்கியிலும் அக்கா தங்கை போலக் கலகலப்பாகப் பேசிக்கொண்டு வந்த அவர்கள் இருவருமே பிள்ளைப் பாசத்தால் நிதானத்தை இழந்தார்கள். நெருப்பைப் போன்ற கோடிய வார்த்தைகளை ஒருவர் மீதொருவர் கொட்டிக்கொண்டார்கள். சிநேகம் முறிந்தது.

அன்றிலிருந்து அவர்களும் பேசிக்கொள்வதில்லை. அவர்கள் குழந்தைகளும் சேருவதில்லை.


‘வா’ வென்று சிவகாமியின் கையைப் பற்றி உள்ளே இழுத்து வந்த சொக்கலிங்கம், தியாம் சூன் வீட்டுக்குத் தீபாவளிப் பலகாரம் கொடுக்க முடியலேன்னுதானே இவ்வளவு வருத்தப்படறே? என்று கேட்டான்.

‘ஆமாங்க, எல்லா அண்டை வீடுகளுக்கும் கொடுத்துவிட்டு அவர்களுக்கு மட்டும் கொடுக்காமல் விடுகிறது என் மனசுக்கு என்னவே மாதிரி இருக்குங்க…’

‘எனக்கும்தான் சங்கடமாய் இருக்கு, இப்பவே அவங்க வீட்டுக்குக் கொண்டு போய்க்கொடு. அதையும் நீயே எடுத்துக் கிட்டுப் போ…’

சொல்லிக்கொண்டே திரும்பிச் சமைலறைக்கு வந்தான், தாம்பளத்தைத் துடைத்து அதில் பளிங்குக் கிண்ணங்களைப் பரப்பினான். அவற்றில் ‘மளமள‘ வென்று பலகாரங்களை வைத்தான். ‘அன்றைக்கு சண்டை போட்டதை மனசிலே ச்சுக்கிட்டு அவங்க இதை வாங்க மறுத்துடுவாங்களோ ‘ன்னு பயமாயிருக்குங்க…’

‘மறுத்துட்டா அதுக்கும் சேர்த்தும் கவலைப்படுவோம். வேறே என்ன செய்யறது? எங்கும் நிறைந்த கண்ணனைத் துதிச்சுக்கிட்டே போயிட்டு வா. இம்…’

தாம்பாளத்தைத் தூக்கிச் சிவகாமியின் கையில் வைத்தான் சொக்கலிங்கம்.


மெதுவாக நடந்து சென்று தியாம் சூன் வீட்டுக்கு முன்னால் நின்றாள் சிவகாமி. திறந்திருந்த சாரளத்தின் வழியே உள்ளே நோக்கினாள். மரத்தால் ஆன ஒரு கடல் நாகம் அவளை விழுங்குவதுபோல் முன் கூடத்தில் காட்சி யளித்தது. தயக்கத்தோடு கதவைத் தட்டினாள்.

சிரித்த முகத்தோடு வந்து கதவைத் திறந்தாள் திருமதி தியாம் சூன். ‘வா தங்கச்சி, உள்ளே வா…’ என்று சீன மொழியில் அன்பு கனிய வரவேற்றாள். சிவகாமிக்கு சீன மொழியும் புரியும்.

அவள் நீட்டிய தாம்பாளத்தை இரு கைகளாலும் ஏந்திப் பெற்றுக்கொண்டபோது இருவர் விரல்களும் ஒன்றோடொன்று இணைந்து தழுவிக் கொண்டன.

சிவகாமியின் உள்ளம் சிலிர்த்தது; மலர்ந்த்து; குளிர்ந்தது. உணர்ச்சி மிகுதியால் பேச முடியாமல் நின்றாள். விழிகளில் இரு கண்ணீர் முத்துக்கள் அரும்பி மின்னின.

இன்பத்துளிகள் அவை என்பதை அறியாத திருமதி தியாம் சூன் “பைத்தியக்காரப் பெண்ணே. அன்றைக்கு நாம் திட்டிக் கொண்டதை நீ இன்னுமா ஞாபகம் வைத்திருக்கிறாய்? நான் எப்போதே மறந்துவிட்டேனே! அடுக்கு மாடி வீடுகளிலே வாழ்கிறவர்கள் அந்த மாதிரிச் சின்னச் சச்சரவுகளையெல்லாம் பெரிசாகக் கருதக்கூடாது அம்மா, அழாதே…” என்று சிவகாமியின் கண்ணீரைத் துடைக்கக் கையெடுத்தாள்.

“அக்கா!” என்று அந்தக் கையைப் பற்றிக்கொண்டாள் சிவகாமி! தீபாவளி இன்பம் அவள் சிந்தை முழுவதும் நிரம்பி வழிந்தது.

பலகாரங்களை எடுத்து வைத்துக்கொண்டு பதிலுக்கு ஒரு கிண்ணத்தில் கற்கண்டுக் கட்டிகளை நிரப்பி சிவகாமியிடம் கொடுத்தாள்.

சுமை இறங்கி, குறை நீங்கி, தெளிந்த நெஞ்சினளாய்ப் பூத்த முகமும் புத்தொளி வீசும் கண்களுமாகத் திரும்பினாள் சிவகாமி. வாசற்படிவரை கூடவே வந்தாள் திருமதி தியாம சூன். வந்தவள், ஓர் அதிசயத்தைக் காட்டுவது போல் “அதோ பார் தங்கச்சி” என்று கீழே சுட்டிக் காட்டினாள்.

அங்கே தியான் சூன் வீட்டுக் குழந்தையளும் சிவகாமியின் செல்வங்களும் சேர்ந்து ஒரு பந்தை உதைத்து ஓடி விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

அவர்கள் தியாம் சூன் வீட்டுக் குழந்தைகளாகவோ, சிவகாமியின் குழந்தைகளாகவோ தோன்றவில்லை, சிங்கப்பூர்க் பார்வைக்கு! குழந்தைகளாகத், தோன்றினார்கள் சிவகாமியின் புதிய பார்வைக்கு!

சிவகாமிக்கு மட்டுமா? எல்லோருக்கும்தான்!

(1975-ம் ஆண்டு சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கம் நடத்திய சிறுகதை எழுதும் போட்டில் முதற் பரிசு பெற்றது.)

– சிங்கப்பூர்க் குழந்தைகள் (சிறுகதை தொகுப்பு), முதற் பதிப்பு:1989, சிங்கப்பூர் இந்தியக் களைஞர்கள் சங்கம், சிங்கப்பூர்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *