கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: March 28, 2014
பார்வையிட்டோர்: 14,039 
 

கழற்றாத கண்ணாடியுடன் முகவாய் நெஞ்சைத் தொட நாற்காலியில் உட்கார்ந்தபடியே தூங்கிக் கொண்டிருந்த அப்பாவைப் பார்ப்பதற்கு, ப்ளஸ் டூ படிக்கும் அவரது மகள் சவிதாவுக்குக் கஷ்டமாக இருந்தது. சொன்னால் கோபப்படுவார் அல்லது அறிவுரை சொல்லுவார். இரண்டுமே அவஸ்தை.

“”உக்காந்து தூங்கறதுக்கு படுத்து தூங்கலாமில்லையா?” என்ற அம்மாவின் குரலுக்கு விழித்தவர், தாடையின் தூக்க எச்சிலை துடைத்துக் கொண்டார். விடிகாலையில் வெளியூரிலிருந்து வந்தவுடனே அலுவலகம் சென்று வந்த அலுப்பில் கண்கள் சிவந்திருந்தன.

சால மிகுத்து“”போய் படுத்துக்கோங்கப்பா. இன்னும் ஒரு சேப்டர் முடிச்சுட்டு தூங்கறேன். அலாரம் வச்சிருக்கேன்” என்றவளை எச்சரிக்கையாகப் பார்த்து, “”பரவாயில்லை. தனியா படிச்சா தூக்கம் தள்ளிடும்” என்று ஒரு கப் காபியை எடுத்துக் கொண்டு அவளுக்கும் கொடுத்தார். “”இப்போ குடிச்சா அவ தூக்கம் போய்டும். அப்றம் காலைல கண்ணை சுத்தும்..போதும் உங்க அனுசரணை” என்று காபியைத் தடுத்தாள் அங்கு வந்த அம்மா.

அம்மா, முளை கட்டிய பயிறுகள் முதல், பசி தாங்கக்கூடிய சப்பாத்தி வகைகள் வரை செய்து வைப்பாள். அப்பா, வேகமாகப் படிப்பது, தொடர்புப்படுத்திப் படிப்பது, நிமோனிக்ஸ் முறைகள், ப்ளு பிரிண்ட் அணுகுமுறை போன்ற நெளிவுசுளிவுகளை சொல்லிக் கொண்டே இருப்பார். தாங்களறிந்த தன்னம்பிக்கை கதைகள் பல சொல்லி ஆற்றலைப் பெருக்கி, 90 பெறுபவள் 100 ஐத் தொட்டுவிட ஓயாது பாடுபட்டார்கள். பெற்றோர்கள் தாங்கள் தவறவிட்ட கனவுகளை அவளுக்குள் துருத்தி உப்ப வைத்து, வளர்ச்சிக்கும் வீக்கத்திற்கும் வித்தியாசம் தெரியாத ஒரு பந்தயக் குதிரையைத் தயார்படுத்திக் கொண்டிருந்தார்கள். கணிதம், உயிரியல் இரண்டையும் படித்தால் மருத்துவராகவும் பொறியாளராகவும் ஆக வாய்ப்புண்டு என்று இரட்டைச் சவாரிக்குப் பணிக்கப்பட, உயர்மதிப்பெண் பெறுவதாய் சவால்விட்டுப் படிக்கும் அக்குதிரைக்கும் அது மிகுந்த விருப்பம்.

சிறுவயதில் கோலம் போடும் நேர்த்தியைப் பார்த்தே, “”இவளை பயாலஜி படிக்க வைச்சா நல்லா படம் போடுவா” என்று எதிர்பார்ப்பை இளம் எலும்பிலேயே ஏற்றியவள் அம்மா. பெற்றோர்களைச் சொல்லிக் குற்றமில்லை. ஒரு மகளாக அவளுக்கு எவ்வளவு அனுபவம் இருக்கிறதோ, பெற்றோராக தங்களுக்கும் அவ்வளவே அனுபவம் உள்ளது என்பதை அறியாத அப்பாவிகள்.

“குழந்தைகள் நம் மூலமாக இவ்வுலகத்துக்கு வந்தவர்கள் நம்மிடமிருந்து அல்ல. நம்மோடு இருந்தாலும் நம்முடையவர்கள் அல்ல’ என்பதான ஜிப்ரான் வரிகளை சொல்லும் சித்தப்பாவை அப்பாவுக்கு அறவே பிடிக்காது. “”எதையாவது படிச்சுட்டு வந்து நமக்கு வேப்பிலை அடிப்பான். நாளைக்கு இவன் பிள்ளைய வளக்கறதை பாக்கத்தானே போறேன்” என்பார்.

“”உங்கப்பாவுக்கு அவர் பேசலாம். இதையே நான் சொல்லிட்டா மொறைப் பாரு” என்று ஊடலாய் சொல்லிக்கொண்டே போகும் அம்மாவை அப்படியே போய் கட்டிப்பிடித்துக்கொள்ள வேண்டும் போல இருக்கும் அவளுக்கு.

நிறையச் சம்பாதித்து பெற்றோர்களை சராசரி இக்கட்டுகளிலிருந்து விடுவித்து சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதே அவள் ஆசை. இதை நினைக்கும்போதே நெஞ்செல்லாம் ரத்தம் பாய்ந்து புது உற்சாகம் பிறக்க, சோர்வை அண்டவிடாமல் படிப்பாள். புத்தகத்தின் மேல் குப்புறப் படுத்துத் தூங்கிப் போனதும், படபடத்து விசுக்கென எழுந்து, “”ஐயோ இன்னும் இத்தனை பக்கம் முடிக்கவேண்டுமே” என்று அப்பா சூத்திரப்படி குளிர்ந்த நீரை முகத்தில் அறைந்து பிடறி ஈரத்துடன் உத்வேகமாய்ப் படித்த பொழுதுகளும் நிறைய உண்டு.

ஒன்பதாம் வகுப்பிலேயே பத்தாம் வகுப்பு ஆரம்பித்தாயிற்று. வகுப்பறை, சிறப்பு வகுப்பு, வீட்டில் மீள் வாசிப்பு என்று ஒரு நாள் பல மணித்துளிக் கட்டங்களாகப் பிரிந்து, கட்டம் கட்டமாக நகர்ந்தோ தாவியோ முன்னேறும் பகடைக் காயாக அவள் மாறி இருந்தாள். எதிர்காலச் சிறப்பை மனவிரிப்பில் காட்சிப்படுத்திய பெற்றோர், நண்பர்கள், ஆசிரியர்கள், உறவினர்கள் எனப் பலரின் மாயக்கரங்கள் அவளை நெம்பி நகர்த்திக் கொண்டேயிருந்தன.

ஒரு முறை சித்தப்பா, “”வயதுக்கேற்ற புரிதலை அனுசரித்தே பாடத்திட்டங்கள் இருக்க, அடுத்த வருட பாடத்தை முன்னதாகவே திணிப்பது அதிகார வன்முறை அல்லவா? பட்டுப்புழு அதன் இயல்பான காலஅளவில் வளரும்போதுதானே நல்ல பட்டு கிடைக்கும்?” என்றபோது, “”வில் யு ப்ளீஸ் ஷட் அப்” என்ற அப்பாவின் மெதுவான குரலின் இரும்பு விரலால் சுண்டப்பட்ட சித்தப்பா, அதன்பிறகு அபிப்ராயங்கள் சொல்வதை நிறுத்திக் கொண்டு விட்டார். பெற்றோர்களின் கனிவும் அக்கறையும் கூட ஒருவித இன்பச்சுமையாகவே அழுத்துவதை அறியாதவளாய் ஓடிக்கொண்டிருந்தாள்.

எத்தனை மணிகளில் எத்தனை பாடங்களை எவ்வளவு விரிவாக, ஆழமாக, வேகமாகப் படிக்கவேண்டும், எழுத வேண்டும், எவ்வளவு விழிக்க வேண்டும், எவ்வளவு தூங்க வேண்டும், எதைப் படிக்கவேண்டும், எதைத் தவிர்க்க வேண்டும் என்பன போன்ற அத்தனை விவரணைகளும் நிறுவப்பட்டு, ஒரு ராக்கெட் கிளம்புவதைப் போன்ற நுணுக்க விவரங்களுடன் அவள் தயார்படுத்தப்பட்டாள்.

எப்போது, எதனால், யாரால் என்று தெரியவில்லை. ஒரு நாள் மாலை. திடீரென தான் படித்த அனைத்தும் மறந்துவிட்டால் என்றொரு அசட்டு அச்சம் எங்கிருந்தோ வந்து கவ்விக்கொண்டு தகித்தது. விளைவை நினைத்துப் பார்க்கக்கூடிய தைரியமற்ற நிலையில், “”சவிதாவா அவள் சென்டம் வாங்குவாள். எத்தனை சென்டம்னுதான் பாக்கணும்” என்ற எதிர்பார்ப்புகளின் சுமை அமுக்க, அச்சத்தின் ஆக்டபஸ் கரங்கள் அவளை தீண்ட ஆரம்பித்தன. மீள்தேர்வில் மதிப்பெண்கள் குறைந்தபோது, கண்ணாடி டம்ளர் கோபுரத்தின் அடி டம்ளர் அசைந்ததைப் போல நலுங்கினாள்.

பெற்றோர்கள் அலுவலகத்திலிருந்து திரும்பியிருக்கவில்லை. கதவைத் திறந்து நேராக கழிப்பறை சென்றவள் அழுது தீர்த்தாள். தனியறையில் அமர்ந்து விடைத்தாளை எத்தனை முறை பார்த்தபோதும், தான் ஏன் அத்தகைய தவறுகள் செய்தோம் என்றுணர முடியவில்லை. தன் மண்டைக்குள் இருந்து அவற்றை எழுதியது யார்? என்றொரு கிலேசம் எழுந்தது. வல்லூறு ஒன்று வந்து நெஞ்சுக்குள் அமர்ந்து கொண்டு அழுத்துவது போன்று உணர்ந்தாள். மனதைப் பிசைந்தது. குப்புறப் படுத்தவள் விம்மல்களுடே தூங்கிவிட்டாள். சாப்பிட எழுப்பியபோது அவள் உடலில் அனல் உணர்ந்த அம்மா அதிர்ந்தாள்.

அவசரமாய் வந்த அப்பா டாக்டரிடம் போக அழைத்தபோது, “”வெறும் தலைவலிதான்” என்று வரமறுத்தாள். அங்கிருந்த விடைத் தாள்களை அப்பா கையில் எடுத்ததைக் கண்டவுடன் அவள் தலையில் கை வைத்துக் கொண்டாள். “”என்னாச்சுடி?” என்று அம்மா கையை ஆவேசமாகத் தட்டிவிட்டாள். அவள் பதில் பேசவில்லை. மதிப்பெண்களை ஆராய்ந்த அப்பா.. “”சரி இப்போ தலைல கை வச்சிகிட்டா எப்படி? கவனமா படிக்கணும். எதுக்கும் டாக்டரைப் பாக்கலாம் வா. ஸ்கூல் போகலேன்னா எல்லாம் போச்சு” என்றார். பேசிக்கொண்டிருக்கும்போதே, வயிற்றைப் புரட்டவே அவசரமாக எழுந்து ஓடி “குபுக்’ கென மஞ்சளாக வாந்தியெடுத்தாள். பதட்டமாக ஓடிய அம்மா அவள் தலையைப் பின்னிருந்து அழுத்திப் பிடிக்க, அவள் சோர்ந்து உட்கார்ந்துகொண்டாள். ஹாலில், விடைத்தாளை குழல்போல சுருட்டி உள்ளங்கையில் தட்டியபடி பதட்டத்தில் இருந்தார் அப்பா.

கண்கள் கலங்கி மூக்கு சிவக்க, “”சாரிப்பா” என்றாள் கரகரத்து. “”சரி விடு” என்று நாற்காலியில் உட்கார வைத்து, “”ஏதாவது வெளிய சாப்டியா?” என்று கேட்டார். “”இல்லை” என தலையசைத்தாள். “”பழைய ப்ரெட் ஏதாவது சாப்டியா?”

“”இல்லை” எனத் தலையசைத்தாள். அம்மா வெந்நீர் தந்து கொப்பளித்தபின் குடிக்கச் சொன்னாள்.

“”மத்தியானம் லேட்டா சாப்டியா வயித்துல கேஸ் சேந்திருக்கும்” என்றார். “”இல்லை” என்று தலையாட்டினாள். “”பின்ன என்ன எழவுக்கு வாந்தி?” என்று வெடித்தார். முழங்காலில் முகம் வைத்து முதுகு குலுங்கி விசும்பினாள். அம்மா தலையிட்டு, “”அவளை ஏன் அதட்டறீங்க?” என்று விவாதிக்கத் தொடங்க, விருட்டென அறைக்குள் விரைந்தவள் சித்தப்பா பயன்படுத்தும் துவாலையால் முகத்தை மூடிக்கொண்டு படுத்தாள்.

“ஏதாவது ஒரு மடி தன்னைத் தாங்கி தலையைக் கோதி எல்லாம் சரியாபோகும். எதுக்கும் பயப்படாத. இப்போ நிம்மதியா தூங்கு என்று சொல்லாதா?’ என்று ஏங்கியபடியே தூங்கிப்போனாள்.

மறுநாள் சரியாகிப்போனாள். ஓட்டப்பந்தயத்தில் இறங்கி, ஓடுவது தெரியாமல் ஓடினாள். அவ்வப்போது தலைவலி வயிற்றுவலி வருவதும், மாத்திரை விழுங்கி சமாளிப்பதுமாக வாரங்கள் சென்றன. அடுத்து வந்த வாராந்திர தேர்வுகளைப் பழிவெறியில் எழுதினாள். மிகுநம்பிக்கையுடன் இருந்தபோது, கணிதத்தாளை தந்த ஆசிரியை, “”94 என்றாலும் 100 மாதிரிதான். வெரி குட். உங்க அப்பாவை வரச்சொல்லு” என்ற வார்த்தை கேட்டு காற்றில் பறந்தாள்.

மறுநாள் அப்பாவை தனியாக அழைத்துச் சென்ற வகுப்பாசிரியர், “”உங்க பொண்ணுக்கு ஏதாவது ப்ராப்ளம் இருக்கா. வீட்ல ஏதாவது பிரச்னையா?” என்று கேட்டார். பாராட்டை எதிர்பார்த்து வந்தவர் மிகக்குழம்பியவராய், “”நிச்சயமா இல்லை. ஏன் 94 மோசமில்லையே” என்றார். அப்போது, அவளுடைய வேதியியல் விடைத்தாளை எடுத்து அவள் பாதி வேதியியலும் பாதி இயற்பியலுமாக விடை எழுதியிருப்பதைக் காட்டி, “”ஏன் இந்த அளவுக்கு குழம்பி இருக்கான்னு தெரியலை. அவள்தான் ஸ்கூல் டாப்பர் னு நாங்கெள்ளாம் நம்பிட்டு இருக்கோம்” என்றார்.

தீவிரம் அறியாமல், “”அப்போ அவள் டிஸ்ட்ரிக்ட் பஸ்டு கூட வரமாட்டாளா?” என்ற தந்தையின் அதீத மனத்தை எண்ணி ஆசிரியை அதிர்ந்தார். ஆனால் அடுத்த நொடியே தன் மகள் கட்புலனாகா சிக்கலில் இருக்கிறாள் என்ற உண்மை அறைய, தடுமாறி அருகிலிருந்த நாற்காலியில் உட்கார்ந்துவிட்டார்.

“”சரி அவகிட்ட நீங்க எதுவும் கேக்க வேணாம். நாங்க சமாளிச்சிக்கிறோம்” என்று பொங்கிய மனத்தில் நீர்வார்த்து அனுப்பினார் ஆசிரியை.

ஏதோ ஒரு திகிலும் ஏமாற்றமும் அவர் மேல் கவியத்தொடங்கியது. இரவு பகலாக படிப்பதும், எழுதுவதும், மனப்பாடம் செய்வதும், கைவிரலால் காற்றில் எழுதிப்பார்ப்பதுமாக இருந்த மகளைப் பார்த்தவருக்கு துக்கமும் பயமும் சுழற்றிக் கவ்வியது. ஆனால் அவள் எந்த மாற்றத்தையும் உணர்ந்தவளாகத் தெரிவில்லை. வழக்கம் போலவே பள்ளி சென்றாள். ஆனால் விடைகளை மாற்றி மாற்றி எழுதுவதும், எழுதியதையே இருமுறை எழுதுவதும், அடித்துத் திருத்துவதும், குழப்பிக் கொள்வதுமாய் பிரச்சனை தீவிரமானது. என்னவெனத் தெரியாமல், ஆனால் என்னவோ தனக்கு நேர்ந்து கொண்டிருக்கிறது எனும் திகிலை சொல்லத் தெரியாதவளாய் இருந்தாள். மனப்பிசகின் தீவிரம் தவிர்க்க ஆசிரியர்கள் அவளுக்கு வாரத் தேர்வுகளைத் தவிர்த்தனர். அவளுடைய வெளிறிய முகத்தில் சோர்வும், அர்த்தமற்ற வெறிப்பும் மெதுவாகத் தோன்ற ஆரம்பித்தன. மருத்துவரிடம் வர மறுத்தவள் பிறகு வயிற்று வலிக்கான பொதுப்பரிசோதனை என்பதால் ஏற்றுக்கொண்டாள்.

அவளை வெளியே அனுப்பிய பின் மருத்துவர், “”பெரிசா ஏதும் பிரச்சனை தெரியல்லை. எதுக்கும் ஒரு மனநல ஆலோசகரைப் பார்க்கலாமே” என்ற வார்த்தை முடிக்கும் முன்பே அம்மா குலுங்கிக் குலுங்கி அழ ஆரம்பித்தாள்.

“”நோ..நோ.. நீங்க இப்படி உணர்ச்சிவசப்பட்டா அது அவளை பாதிக்கும். தனக்கு என்னமோ ஆயிடுத்துன்னு பயந்துபோவா..நீங்க பக்குவமா அனுசரணையா நடந்துக்கணும்” என்றார். அப்பா பொய் தைரியத்தில் எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்தார்.

அவளைப் படி என்று சொல்லவோ படிக்கவேண்டாம் என்று சொல்லவோ முடியாமல் தத்தளித்தபோது வீட்டிற்கு வந்த சித்தப்பா, புறச்சூழலின் அழுத்தம், தானே சுமத்திக்கொண்ட மனச்சுமை எல்லாம் சேர்ந்து அவளை நசுக்கியிருக்கிறது என்பதை அறிந்தவராக ஆனால், எதையும் சுட்டாமல், யாரையும் காயப்படுத்தாமல், “”அவளை அப்படியோ விடுங்க. தன் இஷ்டப்படி படிக்கட்டும். தூங்கட்டும். எழுந்திருக்கட்டும். எந்த அட்வைசும் பண்ணாதிங்க. பரீட்சை, மார்க் பற்றி எதுவும் பேசாதீங்க” என்றார். அவளோடு சாதாரணமாக பேசினார்.

“”கொஞ்சம் ஷட்டில் காக் விளையாடலாமா?” என்று கேட்டபோது, “”ஐயோ. நோ சான்ஸ்” என்று கையிலிருந்த புத்தகத்தை உயர்த்திக் காட்டினாள். அதைக் கவனித்த அப்பாவின் மனம் வலியில் புரண்டது. தாயத்து கட்டினால் சரியாகும் என்று அம்மா மலையாள ஜோதிடரை நாடிப் போனாள்.

மாத்திரைகளாலா, நோயாலா, ஓய்ச்சலாலா, மறதியாலா என்று கணிக்கமுடியாமல் அவள் தன்னிஷ்டப்படி தூங்குவதும் படிப்பதுமாக, சோபையற்று சாரல் பட்ட நீர் வண்ண ஓவியமாய் கண் முன்னாலேயே கலையத் தொடங்கி இருந்தாள். இதனிடையே, பள்ளியில் நூற்றுக்கு நூறு தேர்ச்சி வேண்டும் என்பதால் அவளை தேர்வு எழுத அனுமதிக்கலாமா? வேண்டாமா? என்று ஆலோசிக்கபட்டதாக கேள்விப்பட்ட பெற்றோர்கள் பதறியடித்துக்கொண்டு வந்து நிர்வாகத்தைக் கெஞ்சினார்கள்.

வகுப்புகள் நிறைவடைந்து செய்முறைத் தேர்வுகளுக்கு அப்பாவுடன் சென்றாள். முந்தைய நாள் காய்ச்சல். என்றாலும் அவள் நன்றாகவே செய்திருப்பதாக ஆசிரியை சொன்னது தன்னைத் திருப்திப்படுத்தவோ எனத் தோன்றியது அப்பாவுக்கு. அந்த கருணை வலித்தது. பிறகு அவளைப்பற்றி பேசுவதையும் அவர்கள் லாகவமாக தவிர்க்க ஆரம்பித்தபோது, நிலைமை காற்றில் கலைந்த கோலம் போலிருந்தது அவருக்கு.

வீட்டில் தேர்வு அட்டவணையை மாட்டியிருந்தார்கள். அவளிடம் பதட்டமோ, பயமோ, தீவிரமோ எதுவுமற்று எப்போதும் புத்தகத்தை வைத்தபடி இருந்தாள். பேச்சு குறைந்துபோயிருந்தது. மதிப்பெண் பற்றிய ஆசை ஏதுமின்றி, அவள் தேர்வு எழுதினால் போதும் என எண்ணத் தொடங்கிவிட்டார்கள். மொழித்தேர்வுகள் எழுதினாள். இடைவெளிக்குப் பின் கணிதம் எழுதினாள். எப்படி எழுதினாள் என்று யாரும் கேட்கவில்லை. அவளும் சொல்லவில்லை. மறுநாள் வேதியியல் தேர்வு. இரவுச் சாப்பாட்டிற்குப் பிறகு புத்தகத்தை வைத்துக்கொண்டு தரையில் உட்கார்ந்தவள் மெதுவாகச் சாய்ந்தாள். அம்மா சந்தேகமாய்ச் சென்று பார்ப்பதற்குள் உடல் நடுங்கி கைகள் வெட்டியிழுக்க வாயில் நுரை தள்ளியபடி மயக்கமானாள். “”ஐயய்யோ” என்ற அம்மாவின் குரலைத் தொடர்ந்து கலவரமாய் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படாள். சித்தப்பாதான் அவளை அருகிலிருந்து கவனித்துக்கொண்டார்.

இரண்டு மணிநேரத்தில் தெளிவடைந்தாள். ஆனால் தான் ஏன் இங்கு இருக்கிறோம் என்று ஒரு வார்த்தை கூட கேட்காமல் வீடு திரும்பி மறுநாள் தேர்வுக்குச் சென்றாள். சாவி கொடுக்கப்பட்ட பொம்மையாக அவள் நடந்துகொண்டது அனைவரையும் கலங்கடித்தது. திடீரென்று அவள் யாரோ போல தோன்ற ஆரம்பித்தாள்.

எப்படியோ அனைத்து தேர்வுகளும் எழுதி முடித்தாள். எப்படி எழுதியிருக்கிறாள் என்று கேட்க அனைவருக்கும் பயம். கடைசித் தேர்வும் முடிந்து வெயிலில் வந்தவள், “”பசிக்குதும்மா” என்று தட்டை எடுத்துக்கொண்டு உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தாள். சாப்பிட்டு முடிக்கும் தருணத்தில் அங்கிருந்த சித்தப்பாவிடம் அவள் அப்பா, “”எல்லாந்தான் முடிஞ்சுபோச்சே. எப்டி எழுதியிருக்கானு நீதான் மெதுவா கேட்டுப்பாரேன்?” என்றார். மேசையிலிருந்த தமிழ் வினாத்தாளை எடுத்து அவள் காதில் படும்படியாக, “”பீலிபெய் எனத்தொடங்கும் குறளா? அது என்ன?” என்று சித்தப்பா தனக்குத் தானே கேட்டுக்கொண்டு புருவமத்தியை நீவியபடி யோசிக்க, அவள், “”சாகாடும் அச்சிறு அப்பண்டம் சாலமிகுத்துப் பெயின்” என்று நிரப்பிச் சொல்லியபடி கைகழுவப் போனாள்.

“”சரியா சொல்றாளா?” என்ற வாஞ்சையான அப்பாவிடம், “”ரொம்பச் சரியா சொல்றா” என்று அர்த்த அழுத்தமாய்ச் சொன்னார். பெற்றோர்கள் முகம் மலர்ந்தது. புரிந்ததாய்த் தெரியவில்லை. உடனே பொறியியல் கல்லூரி நுழைவுத்தேர்வுகள் பற்றிய யோசனை அவர்களுக்குள் முளைவிட்டது.

அவள் கை கழுவியவுடன் டி-ஷர்ட்டை அணிந்துகொண்டு, ஷட்டில் காக் மட்டையை எடுத்துக்கொண்டு பக்கத்து காலி மனைக்குப் போனாள். அவளை என்ன என்று கேட்கும் தைரியமற்றும், கேட்க தாங்கள் அருகதையுள்ளவர்களா? என்ற சந்தேகத்துடனும் அவர்கள் திகைத்து நின்றனர்.

– நவம்பர் 2013

தினமணி – நெய்வேலி புத்தகக் கண்காட்சி நடத்திய சிறுகதைப் போட்டிக்கு வந்த கதைகளில் பிரசுரிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட கதை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *