கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: October 25, 2017
பார்வையிட்டோர்: 8,141 
 

எழுதியவர்: சதிநாத் பாதுரி

அவளுடைய மார்பிலிருந்து அதைப் பலவந்தமாகப் பிடுங்கி எடுத்துக் கொண்டுபோக வேண்டியிருந்தது பர்சாதிக்கு. அதைக் கொண்டு போய் ஆற்றில் எறிய வேண்டுமே! இந்த மாதிரி இறந்து போனவற்றைப் புதைக்கக் கூடாது, தண்ணீரில் எறிந்துவிட வேண்டும்.

வீட்டுக்குள் இருக்கும்வரை பர்சாதி அழவில்லை. மன்சனியா பார்த்து விடுவாளோ என்ற பயத்தில், கண்ணோரத்தில் நீர் சேரும்போது முகத்தைத் திருப்பிக் கண்ணீரைத் தடைத்துக் கொண்டான். இவ்வளவு நேரத்தில் ஒரு தடவைகூட மன்சனியாவின் பக்கம் திரும்பிப் பார்க்கவில்லை. அவனுடைய கண்களைச் சந்தித்தால் அவளுக்க வெட்கமாயிருக்கும். இந்த மாதிரி சமயங்களில் யாரையும் நேருக்கு நேர் பார்க்க முடியுமா? ஏற்கெனவே சோகத்தாலும் வெட்கத்தாலும் செத்துக் கொண்டிருக் கிறாள் மன்சனியா. அவளுடைய துக்கச் சுமையை அதிக மாக்கலாமா..? பர்சாதி வீட்டுக்கு வெளியே வந்த பிறகு அழுதான்.

மன்சனியாவுக்குக் குழந்தை பிறக்காது என்றுதான் இதுவரை எல்லாரும் நினைத்திருந்தார்கள். எவ்வளவு மருந்து, மாயம், மந்திரம் தந்திரம், தாயத்து, பிரார்த்தனை செய்தாகிவிட்டது! சாகும் தருவாயில் வாயில் தண்ணீர் ஊற்ற ஒர பிள்ளை வேண்டும் என்ற ஆசை யாருக்குத்தானிருக்காது..? கடைசியில் கடவுள் கண் திறந்த பார்த்து விட்டார் என்று தெரிந்த பிறகு அவன் பொறுமையின்றி நாட்களை எண்ணிக் கொண்டிருந்தான். மன்சனியாவுக்காக என்ன செய்வது என்று தெரியவில்லை அவனுக்கு. கேள்விகளால் துளைத்தெடுத்தான் அவளை – என்ன சாப்பிடப் பிடிக்கும்? பிள்ளையா, பெண்ணா? குழந்தை யார் மாதிரி இருக்கும்? வயித்துக்குள்ளே அசையுதா? மண் திங்கணும் போல் இருக்கா? இன்னும் எவ்வளவோ சிந்தனைகள்.. சாமார் ஸியுடன் குசுகுசுப் பேச்சுக்கள், தெருவிலுள்ளவர்கள் அவன் செய்யும் ஆர்ப்பாட்டத்தைக் கண்டு கேலியாகப் பேசிக் கொண்டார்கள்.

…அதன் பிறகு புதனோடு புதன் பதினாலு நாள், வியாழன், வெள்ளி, சனி — இந்தப் பதினேழு நாட்கள் அவன் சுவர்க்கம் தன் கைக்கு வந்துவிட்ட மாதிரி மகிழ்ச்சியாயிருந்தான். பதினேழு நாட்களுக்குப்பின் கடவுள் தன் சொத்தை தன்னிடமே அழைத்துக் கொண்டுவிட்டார். மனிதனால் என்ன செய்யமுடியும்? எவ்வளவு பேரின் குழந்தைகள் எவ்வளவு விதமாகச் சாகின்றன…! வெல்லம் கொதிக்கிற அண்டாவிலே விழுந்து குழந்தை செத்ததாகக் கேள்விப் பட்டிருக்கிறான், கொதிக்கிற பாலுக்குள்ளே குழந்தை விழுந்து சாகறதைப் பார்த்திருக்கிறான்… ஆனால் இந்த மாதிரிச் சாவு..! ஐயோ, ஒரு சின்ன இரத்தப் பிண்டம்…! நீலம் பாரிச்சுப் போயிட்டது. மூச்சுவிடத் திணறி, மூச்சுவிட அது பண்ணின முயற்சியிலே அதன் இரு கண்களும் பெரிதாகி உடம்பைவிட்டு வெடித்து வந்துவிடும்போல… ஐயோ, என்ன பரிதாபம்!

சப்பிக் கொண்டிருந்திருக்கும்.. பயம் என்றால் என்ன என்று தெரிந்து கொள்வதற்குமுன், ஆபத்து என்ன என்று புரிந்து கொள்ளுமுன், தாயின் நெஞ்சு திடீரென்று கீழே சரிந்து வந்தது. கீழே இருட்டு, அந்த இருட்டில் கடைசி ஓலங்கூட வெளிப்பட இயலவில்லை…

வெகுநேரம் கழித்துத்தான் விஷயம் தெரிந்தது மன்சனியா வுக்கு. எவ்வளவு நேரமாகியிருந்ததோ யார் கண்டார்கள்…! அந்த இடத்தில் ஏன் இவ்வளவு குளிர்ச்சி? சில சமயம் அப்படி ஆகி விடுகிறது. தூக்கக் கலக்கத்தில் கம்பளியை நன்றாக மேலே இழுத்துப் போர்த்திக் கொண்டபோதுகூட அவளுக்கு இன்னொரு ஜீவனைப் பற்றிய ஞாபகம் வரவில்லை. அவள் இயற்கையாகவே தூக்கத்துக்கு அடிமை… இருந்தாலும் அந்த இடத்திலே ஏன் இவ்வளவு சில்லுன்னு இருக்கு..! காளி கோவில் மணி அடிக்கிறது, விடிவதற்கு அதிக நேரமில்லை. அவள் திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தாள்… துணி நனைந்தால்கூடக் கம்பளிக்குக் கீழே இவ்வளவு குளிர்ச்சியாயிருக்காதே..! இது ஏதோ ஒரு மாதிரியா.. அவளது நெஞ்சு நடுங்கியது. விளக்கை ஏற்ற நான்கு தீக்குச்சிகள் தேவைப்பட்டன. விளக்குத் திரியைத் தூண்டிவிட்டுப் படுக்கைப் பக்கம் பார்த்தவுடன் மனதிலிருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் அணைந்து போய்விட்டது. அவள் போட்ட கூச்சலில் பர்சாதி விழித்துக்கொண்டு எழுந்தான்.

உயிர் நீங்கிவிட்ட சடலத்திலே மறுபடி சூடு எப்படி வரும்! ஒன்றும் பலிக்கவில்லை, அந்தப் பதினேழு நாள் வயதான மாமிசப் பிண்டத்தை நெஞ்சோடு சேர்த்துப் பிசையப் பயப்பட வில்லை மன்சனியா. அவளது நெஞ்சு கண்ணீரிலேயே மிதந்தது.

மன்சனியாவின் கிறட்டு நாய் பர்சாதியோடு கொஞ்ச தூரம் போய்விட்டுத் திரும்பி வந்து அவளருகில் உட்கார்ந்தது. அவளது நாய் நல்ல கறுப்பு. அதனால் அதன் பெயர் காரியா. அது அவளுடைய நீர் ததும்பும் கண்களையும், விரிந்து கிடந்த தலைமுடியையும் பார்த்துக் கொண்டிருந்தது. அது வெகு காலமாக இந்தக் குடும்பத்துடன் இருப்பதால் குடும்பத்தில் ஒருவன் போல் அதற்கு எல்லாம் புரியும்.

“த்விராகமனு”க்குப் புக்ககம் வரும்போது காரியாவைப் பிறந்தகத்திலிருந்து கூட்டி வந்தாம் மன்சனியா. (திருமணத்துக்குப் பின் மணப்பெண் இரண்டாம் முறையாகப் பிறந்தகத்திலிருந்து புக்ககம் வரும் நிகழ்ச்சிக்கு “த்விராகமன்” என்று பெயர்). உண்மையில் அவள் கூட்டி வரவில்லை, அதுவாகவே வந்து விட்டது! அது என்ன இன்றைய நேற்றைய நிகழ்ச்சியா! அவளது நான்காம் வயதில் அவளுக்குக் கலியாணம். அதற்குப் பதினைந்து வருடங்களுக்குப் பிறகு த்விராகமன். பர்சாதி அதற்காகப் பணம் சேர்த்து வைத்துக் கொண்டு மாமனாருக்குப் பல தடவை செய்தியனுப்பி விட்டான். மாமனார் அவனை லட்சியம் செய்ய வில்லை, தாமதம் செய்து கொண்டே இருந்தார். ஊர்க்காரர்கள், பலவிதமாகப் பேசிக் கொண்டார்கள். அப்போது மன்சானியா அவளுடைய கிராமத்தில் தாசில்தார் வீட்டில் குழந்தைகளைக் கவனித்துக் கொள்ளும் ஆயாவாக வேலை பார்த்து வந்தாள்.

“அப்ன்காரன் பொண்ணு மூலம் சம்பாதிச்சுச் சாப்பிட்டுக் கிட்டிருக்கான். பொண்ணுக்கு வருமானம் அவளோட சம்பளம் மட்டும் இல்லே” என்றெல்லாம் ஜனங்கள் பேசிக்கொண்டார்கள். இதையெல்லாம் கேட்டு இரத்தம் கொதித்தது பர்சாதிக்கு. இளவயதின் சூடு, சேர்த்த வைத்திருந்த பணத்தின் சூடு, அவன் எண்ணெய் தடவப்பட்ட தடியை எடுத்துக்கொண்டு மாமனா ரிடம் போனான். அவனோடு அடிதடி, சண்டை போட்டுத் தன் உரிமையான பெண்சாதியைக் கூட்டிக்கொண்ட வந்தான். கிராமத்து எல்லையில் ஆமணக்கு வயலுக்கருகில் அவர்களுடைய மாட்டுவண்டி வந்து கொண்டிருந்தபோதுதான் கறுப்பு நாய் வண்டிக்குப் பின்னால் வந்து கொண்டிருப்பதை அவன் கவனித்தான்.

“இது யாரோட நாய்?” இதுதான் மன்சனியாவோடு பர்சாதியின் முதல் பேச்சு.

“என்னதுதான்,” பயந்துகொண்டே சொன்னாள் மன்சனியா.

“ஒன்னுதா?”

மன்சனியா பருமன்தான். ஆனால் அவளுக்குக் கணவனிடம் பயம். கறாரான ஆள் அவன். அவளுடைய அப்பனோடு சண்டை போட்டுவிட்டு அவளைக் கூட்டிப் போகிறான். ஆகையால் கொஞ்சம் தயங்கிவிட்டுக் கேட்கிறாள், “இதை வண்டியிலே ஏத்திக்கட்டுமா?”

“ஒன்னோட இருக்குமா?”

“இருக்கும்”

வண்டி போய்க்கொண்டிருக்கும்போதே அவள் குனிந்து நாயைத் தூக்கிக் கொள்ள முயற்சிப்பதைப் பார்த்துப் பர்சாதி, “என்ன செய்யறே நீ! நீ அவ்வளவு குனிய முடியுமா..இன்னும் கொஞ்சம் முன்பக்கமா நகர்ந்து உக்காந்துக்க!”

புடைவையைச் சரிப்படுத்திக்கொண்டு மன்சனியா நாயை வண்டிக்குள் ஏற்றிக்கொண்டாள். அதன்மூலம் தான் பருமனா யிருந்தாலும் வேலைக்கு லாயக்கில்லாதவளல்ல என்பதை அவனுக்குப் புலப்படுத்தினாள். யாராவது அவளுடைய பருமனைப் பற்றிக் கேலி செய்தால் அவள் குறுகிப்போய் புடைவைத் துணியால் உடம்பை மூடிக்கொள்ள முயற்சி செய்வாள். அவளுடைய இந்த வழக்கத்தை முதல்நாளே கவனித் திருந்தான் பர்சாதி.

“எவ்வளவு கனமான சுமையைத் தூக்கிக்கிட்டு நடக்க முடியும் ஒன்னாலே”

“ஒரு மணு சுமப்பேன் நிச்சயமா!” என்று சொல்லி மன்சனியா ஒரு மணு கனமான கூடையைத் தூக்கிக் கொண்டு நின்றாள். ஆனால் அவள் கஷ்டப்படுவது தெளிவாகத் தெரிந்தது. அதுமுதல் பர்சாதி ஜாக்கிரதையாகி விட்டான். “ஹர்தாச் சந்தை நம்ம கிராமத்திலேருந்து ஆறு மைல் தூரம். அங்கே நாம காய்கறி வாங்கிட்டுப் பட்டணத்துக்குக் கொண்டுபோய் விப்போம்” என்று அவன் மன்சானியாவிடம் சொன்னான்.

இதுதான் பர்சாதியுடன் மன்சானியாவின் முதல் உரை யாடல்…அவளுடைய நாயைப் பற்றி, அவளுடைய பருமனான உடம்பைப் பற்றிய உரையாடல். அவன் என்னதான் சந்தையைப் பற்றி, காய்கறிகளைப் பற்றிப் பேசினாலும் தன் பேச்சின் மூலம் எதைக் குறிப்பிடுகிறான் என்று மன்சானியாவுக்குப் புரிந்தது.

இதோடு விஷயம் முடியவில்லை. அவர்கள் வண்டியில் சற்றுதூரம் போனபிறகு தாசில்தாரின் சிப்பாய்கள் இருவரைச் சந்தித்தார்கள். அவர்கள் பர்சாதிக்காகக் காத்திருந்தார்கள். அவர் களுடைய எஜமான் பர்சாதியை உதைக்கும்படி அவர்களுக்கு உத்தரவிட்டிருக்கலாம். ஆனால் அவர்கள் அவனை அதிகம் துன்புறுத்தவில்லை. தங்கள் எஜமானைப் பற்றி கெடுதலாகப் பேசியதற்காக அவனைத் திட்டிவிட்டுக் கடைசியில் அவனைக் கேலி செய்தார்கள், “நீ ரெண்டு கறுப்பு நாய்களைக் கூட்டிக்கிட்டுப் போறே. எங்க கிராமமே இருட்டாயிடுச்சு.. ஆனாப் பாரு, அந்த தடிக்குட்டி ஒல்லி குட்டியைவிட நெறையாச் சாப்பிடுமாக்கும்!” இவ்வாறு சொல்லிவிட்ட இருவரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.

இதெல்லாம் நடந்தது பத்து வருடங்களுக்கு மன்னால். அதுமுதல் நாய் இங்கேயே இருக்கிறது. அதுமுதல் அந்தக் கிராமத்து ஜனங்களுக்கு மன்சனியாவின் நினைவு வரும் போதெல்லாம் கூடவே அந்த நாயின் நினைவும் வரும். மன்சனியா கிணற்றடிக்கோ, ஹர்தாச் சந்தைக்கோ, வேறொருவர் வீட்டுக்கோ எங்கே போனாலும் அவள் பின்னாலேயே நாயும் வந்துவிடும். சிறு பையன்கள் நோஞ்சல் காரியாவையும் கொழுத்த மன்சனியா வையும் சேர்த்துப் பேசிக் கேலி செய்வார்கள். சிறுவர்கள் ஏன்தான் இவ்வளவு ஈவிரக்கமற்றவர்களாக இருக்கிறார்களோ தெரியவில்லை.

மன்சனியா காயகறிக் கூடையைச் சுமந்து கொண்டு வியர்க்க விறுவிறுக்கத் தெருவில் வந்தால் சிறுவர்கள் கோலி விளையாடுவதை நிறுத்திக்கொண்ட ஒருவருக்கொருவர் கண்களால் ஜாடை செய்து கொள்வார்கள். ஒருவன் ராகம் போட்டு “மன்சனியா” என்று கத்துவான். இன்னொருவன் அதே ராகத்தில் “தத்தக்கா பித்தக்கா” என்பான். காரியா வாலை மடக்கிக் கொண்டுவிடும். மன்சனியா அருகில் வந்ததும் அந்த சிறுவர்களில் மிகவும் போக்கிரிகளான இருவர் அவளுக்கு இருபுறமும் நின்று கொள்வார்கள்; அவளுடைய நடையைக் கேலி செய்தவாறு நடந்து கொண்டே “தத்தக்கா பித்தக்கா.. தத்தக்கா பித்தக்கா..” என்று கத்துவார்கள்.

அவமானமாயிருக்கும் மன்சனியாவுக்கு. வாயடி அடிக்க அவளுக்கும் தெரியும். வேறு ஏதாவது காரணத்துக்காக அவர்கள் அவளைக் கேலி செய்தால் அவளும் பதிலடி கொடுக்காமலிருக்க மாட்டாள். அவள் கத்தித் திட்டத் தொடங்கினால் சிறுவர்கள் ஓட வேண்டியதுதான். ஆனால் அவர்கள் அவளுடைய பொதுக்கை உடம்பையல்லவா கேலி செய்கிறார்கள்! அவள் அசட்டுச் சிரிப்புணசிரிப்பாள். அவளது இரு கைகளும் கூடையைப் பிடித்துக் கொண்டிருப்பதால் மேல் துணியால் உடம்பை நன்றாகப் போர்த்திக் கொள்ளவும் வழியில்லை.

சிறுவர்களின் கேலிப்பேச்சிலிருந் விடுதலை பெற்ற பிறகு காரியா கொஞ்சதூரம் போய் வாலை நிமிர்த்திக் கொள்ளும். பிறக அவர்களிருக்கும் பக்கம் திரும்பி இரண்டு தடவை “வாள், வாள்!” என்று குரைக்கும். எண்ணி இரண்டே தடவைதான். பிறகு தனக்கு மிகவும் பரிச்சயமான மன்சனியாவின் வாசனையை மோப்பம் பிடித்தக் கொண்டு வழி நடக்கத் தொடங்கும்.

மன்சனியாவின் இந்தக் கூச்சம் கடந்த சில மாதங்களாகச் சிறிது குறைந்திருந்தது. புதிதாக ஏதோ ஒன்று நிகழப் போகும் தருவாயில் உலகமே புதிதாகத் தோன்றும், பெரும் சுமையும் லேசாகத் தெரியும்; பொருத்தமில்லாத பொருளும் பொருத்தமாக ஆகிவிடும், மனமும் உரம் பெறும். தன் உடம்பின் அழகின்மை யிலும் ஓர் அர்த்தத்தைக் கண்டாள் அவள்..

ஆனால் இதுவும் சிறிது காலத்துக்குத்தான்! அவளுடைய பதினேழு நாள் ராஜத்துவம் முடிந்து போய்விட்டது. அவள் தன் எந்த உடலுறுப்பைக் குறித்து வெகுகாலமாகக் கூச்சப்பட்டுக் கொண்டிருந்தாளோ, எந்தச் சுமை காரணமாக அவள் மற்றவர் களுக்கு மன்னால் கூனிக் குறுகிக் கொண்டிருந்தாளோ, அந்த உறுப்பே இவ்வளவு காலத்துக்குப் பிறகு அவளுக்குப் பெருங்கொடுமை இழைத்து விட்டது!

சத்துரு..! சத்துரு!

மன்சனியா காலகளைப் பரப்பிக் கொண்டு வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்திருக்கிறாள். கிழட்டு நாய் அவளுடைய காலை நக்கிக் கொண்டிருக்கிறது. அதன் கண்ணோரத்தில் இருப்பது நீர்த்துளியா பீளையா என்று தெரியவில்லை. மன்சனியா அறியாமலேயே அவளது கை காரியாவின் நெஞ்சை, முதுகைத் தடவத் தொடங்குகிறது. அவளுடைய விரல்ளின் இடைவெளி களில் சொரசொரப்பான முதுகு ரோமம். மார்பின் ரோமம் இதைவிட மிருது. துருத்திக் கொண்டிருக்கும் எலும்புகளில் கைபடுகிறது. அவள் நாயின் வற்றிக் கிடந்த மடியை விரல்களால் தடவிக்கொண்டே அதை நன்றாகக் கவனித்தாள். மடிக்காம்புகள் மச்சங்கள்போல் சின்னஞ் சிறிதாக இருக்கின்றன. நன்றாக உற்றுப் பார்க்காவிட்டால் கறுப்பு ரோமத்துக்குள் அவை இருப்பதே கண்ணுக்குத் தெரியாது. அதன் காதிலுள்ள உண்ணிகளை விடச் சிறியவை அவை. நாய் கிறடாகிவிட்டதால் கடந்த ஓராண்டாக அது குட்டிபோடுவது நின்று போய்விட்டது.

காரியா ஒரு தடவை மன்சனியாவின் முகத்தைப் பார்க்கிறது, இன்னொரு தடவை தலையைச் சாய்த்து அவளுடைய விரல்களைப் பார்க்கிறது. அவளைப் புரிந்து கொள்ள முயல்கிறது. அவளுடைய முகத் தோற்றத்தைப் பார்த்தால் அவள் தன்னைச் செல்லங் கொஞ்சுவதாகவும் தெரியவில்லை. அவள் மடிக்காம்புகளைத் தடவும்போது அதற்குக் குறுகுறுப்பு ஏற்படுகிறது.

துக்கம் ஏற்படுவது இருக்கட்டும்; இந்த மாதிரி வயிற்றுக் குழந்தை இறந்துபோவதில் உள்ள அவமானத்தை வார்த்தைகளால் விளக்க இயலாது. பொதுக் கிணற்றங்கரையில் எல்லாரும் அவளைப் பற்றித்தான் பேசுகிறார்கள். என்னென்னவோ பேசுகிறார்கள். வீட்டை விட்டு வெளியே வரத் துணிவு வரவில்லை அவளுக்கு. அப்படியாவது நிம்மதி உண்டா! தெருவாசிகள் அவளுக்கு ஆறுதல் சொல்ல வருகிறார்கள். ஆறுதலாவது மண்ணாவது.. எல்லாம் புரிகிறது அவளுக்கு. யாராவது அவளுடன் பேசவந்தால் அவள் போர்வையை நன்றாகப் போர்த்திக்கொண்டு பாயில் படுத்துக்கிடப்பாள். வந்தவள் என்ன வேண்டுமானாலும் சொல்லிக்கொண்டே போகட்டும், அவள் பதில் பேசமாட்டாள். பர்சாதி வீட்டிலிருந்தால் அவன் அக்கம் பக்கத்தார் மன்சனியாவைத் தொந்தரவு செய்யாமல் பார்த்துக் கொள்வான். மன்சனியாவைத் தேற்றவந்த ஒரு கிழவி அவளுடைய ஆழ்ந்து தூங்கும் வழக்கத்தைக் குறிப்பிட்ட போது பர்சாதி கிழவியை அதட்டி பேசாதிருக்கச் சொன்னான்.

காரியா எப்போதும் மன்சனியாவின் பாய்க்கருகில் உட்கார்ந்திருக்கும். பரிச்சயமானவர்கள் அங்கு வந்தால்கூட அது இரண்டுமுறை குரைத்துத் தன் எரிச்சலை வெளிப்படுத்தும்.

மன்சனியா பேசிய ஒரு பேச்சிலிருந்து அவளது மனநிலையை சரியாக ஊகித்தறிந்து கொண்டான் பர்சாதி. அவள் தரையைப் பார்த்தவாறு, மிகவும் தயக்கத்துடன், பொதுக்கிணற்றிலிருந்து தண்ணீர் கொண்டுவரும்படி அவனிடம் சொன்னாள்.

“குடி தண்ணியா?”

அவளிடமிருந்து பதிலில்லை.

குளிக்கத் தண்ணியா?” அவளுடைய கண்களில் நீர் வந்து விட்டது. எந்தப் பெண்ணாவது தன் கணவனைப் பொதுக்கிணற்றி லிருந்து குளிப்பதற்குத் தண்ணீர் கொண்டு வரச் சொல்வாளா? ஏற்கெனவே அவள் பருமன். குளிக்காமலிருக்க முடியாது அவளால். இப்போது உடம்பில் கெட்டுப்போன பாலின் நாற்றம் வேறு. அவளுக்கே அருவருப்பாயிருக்கிறது. அதனால்தான் அவள் வெட்கத்தைவிட்டு அவனைக் குளிப்பதற்குத் தண்ணீர் கொண்டு வரச் சொன்னாள். மற்ற பெண்கள் கூடியிருக்கும் கிணற்றடிக்குப் போய்த் தண்ணீர் எடுத்து வருவது இன்னும் வெட்கக்கேடு.

அவள் மண்பானையைப் பர்சாதியிடம் கொண்டுவந்து கொடுத்தாள். அவன் அதை எடுத்துக்கொண்டு தண்ணீரெடுக்கப் போனான். ஓர் ஆண்பிள்ளை பொதுக்கிணற்றிலிருந்து பானையில் தண்ணீர் எடுத்து வருவதைப் பார்த்துத் தெருவாசிகள் என்ன சொல்வார்களோ!

மன்சானியாவின் நினைவை எப்போதும் வேறு விஷயங்களில் ஈடுபடுத்தி வைக்க முயற்சி செய்யவேண்டும் என்பது பர்சாதிக்கு இயற்கையாகவே புரிந்திருந்தது. தோட்டம் நிறையக் காய்கறிச் செடிகள், மன்சனியா தன் கையால் விதைத்து வளர்த்தவை. அவற்றைக் கவனித்துக் கொண்டாலும் அவளுக்குச் சற்று ஆறுதலா யிருக்கும். ஆனால் அதை எங்கே செய்கிறாள்! இரவும் பகலும் வர்ந்தாவில் உட்கார்ந்துகொண்டு என்னதான் சிந்திப்பாளோ, யாருக்குத் தெரியும்! அவன் சந்தைக்குக் காய்கறிகள் கொண்டு போவதற்காக அதிகாலையில் எழுந்திருந்து அவரைப் பந்தலி லிருந்து காய்களைப் பறிப்பது வழக்கம். ஆனால் இந்த மூன்று நாட்களாக அவரைக்காய் பறிக்கக் கூட மறந்துவிட்டாள் அவள்.

நேரங்கிடைக்கும் போதெல்லாம் அவன் அவளுடன் பேசி அவளது கவனத்தைத் திருப்ப முநற்சி செய்தான். ஆனால் பேச்சைத் தொடங்கிச் சிறிது நேரத்திலேயே பேச விஷயம் இல்லாமற் போய்விடுகிறது அவனுக்கு. போய்விட்ட ஜீவனைப் பற்றிப் பேசத் தோன்றுகிறது. ஆனால் அதைப் பற்றிப் பேசக் கூடாதே! அவன் வேறு ஏதாவதைப் பற்றிப் பேச முற்பட்டாலும் அவனறியாமல் பேச்சு தடைப்படுகிறது.

காய்கறிகளின் விலைவாசியைப் பற்றிப் பேச்சைத் தொடங்குவதுதான் அவர்களுடைய நெடுங்கால வழக்கம், பர்சாதி அவரைக்காய் விலையைப் பற்றிப் பேசத் தொடங்குவான், “இப்போ அவரைக் காய்க்கு நல்ல விலை. ஆனா ஒரு மாசங் கழிச்சுக் காயெல்லாம் நாய்க்காது மாதிரி முத்திப் போயிடும். அப்பறம் யா வாங்குவாங்க அதை? சாத்புதியா அவரையிலே தான் நல்ல காசு. நல்லாக் காய்க்கும். ஒவ்வொரு கொத்திலேயும் ஏழு அவரைக்காய் இருக்கும். நம்ம தோட்டத்து அவரைக்கொடி தசராவுக்கு முன்னாலேயே காய்க்கத் தொடங்கிடுச்சு. நான் உனக்கு கக்ரியா ஹாட் தசராத் திருவிழாவிலேருந்து தயிர்வடை வாங்கிக்கிட்டு வந்தேனே ஞாபகமிருக்கா..?”

பேசிக்கொண்டே போனவன் சட்டென் மௌனமாகி விடுகிறான். இந்தப் பேச்சை எடுத்திருக்கக் கூடாது. அப்போது மன்சனியா பிள்ளைத் தாய்ச்சி. அவள் தயிர்வடை சாப்பிட ஆசைப்பட்டாள்.

“பருவமில்லாத காலத்திலே விளையற காய்கறியிலேதான் நிறைய லாபம். அவரைக்கொடி போன வருசத்துக் கொடிங் கறதாலதான் இந்த வருசம் இவ்வளவு சீக்கிரம் காய்க்க ஆரம்பிச் சுட்டது. போன வருசம் அதுலே காய்ப்பு நின்னதும் நீதான் அதைப் பிடுங்கியெறியணும்னு சொன்னே. என் பேச்சைக் கேட்டுத்தான் சித்திரை மாசத்திலேருந்து அதுக்குத் தண்ணி ஊத்த ஆரம்பிச்சே. நான் சொன்னேனா இல்லையா?”

பேசிக் கொண்டிருக்கும்போது மன்சனியாவின் முகம் என்னவோ மாதிரி ஆவதைக் கண்டு அவன் பேச்சை நிறுத்தினான்.

“சொரக் கொடியோட வீரியத்தைப் பார்திதியா? கூரை பூராப் படந்திருக்கு. தண்டு கட்டைவிரலை விடப் பருமனா யிருக்கு. நீ தினம் அதோட வேரிலே வடிச்ச கஞ்சிய ஊத்திறியே, அதனால்தான் அதுக்கு இந்த செழிப்பு. ஆனா தண்டு இவ்வளவு தடித்தடியா வளர்ந்தா நல்லாக் காய்க்குமா? தண்டை வெட்டி விக்கறதுதான் லாபம் பாரேன், பிஞ்சு வைக்குது, வெம்பிக் கீழே விழுந்துடுது..”

சீ, என்ன அசட்டுத்தனமாகப் ேபுசிவிட்டான் அவன்! அவளுடைய முகம் சட்டென்று இருண்டு போய்விட்டதே!

மேலும் பேசத் தோன்றவில்லை பர்சாதிக்கு. அவன் எழுந்து விட்டான். இவ்வளவு ஜாக்கிரதையாக எவ்வளவு நேரந்தான் பேசமுடியும்?

துணி தைக்க உட்கார்ந்தால் அவள் கவனம் சற்றுத் திரும்பலாம். ஆகையால் பர்சாதி காய்கறி விற்றுவிட்டுத் திரும்பும் போது அவளுக்காகச் கொஞ்சம் சட்டைத்துணி வாங்கி வந்தான்.

துணியைப் பார்த்துவிட்டு மன்சனியா, “இந்தத் துணி யெல்லாம் நனைச்சப்பறம் ரொம்பச் சுருங்கிப் போயிடுமே” என்றாள். “அவ்வளவு இறுக்கமா ஏன் சட்டை தச்சுக்கறே? கொஞ்சம் தொளதொளன்னு தச்சுக்கோயேன்.”

அவன் யோசித்துப் பேசவில்லை. இருந்தாலும் மன்சனியா பார்வையைக் கீழே தாழ்த்திக் கொண்டாள். அவளுடன் நிறையப் பேசிக்கொண்டிருக்க வேண்டும் என்று தீர்மானித்துக்கொண்டு வந்திருந்தான் அவன். ஆனால் இப்போது மனைவியின் கூச்சத்தைப் பார்த்து அவனது திட்டம் தேய்ந்து போய்விட்டது.

அவன் முயற்சி செய்வதில் குறை வைக்கவில்லை. மறு நாள் ஒரு நாய்க்குட்டியைக் கொண்டுவந்தான். ரொம்பச் சின்னக்குட்டி இப்போதுதான் கண் திறந்திருக்கிறது.

“இதை எதுக்குக் கொண்டு வந்திருக்கே?”

“காரியா கெழடாயிடுச்சு, எப்போ செத்துப் போகுமோ தெரியாது, இப்போலேருந்தே ஒரு புது நாய் வளக்கறது நல்லது.. வழியிலே குளிர்லே கெடந்து கத்திக்கிட்டிருந்தது, தூக்கிக்கிட்டு வந்தேன்.

அன்று மன்சனியா வேலை செய்ய வெளியே கிளம்பத் தயார் செய்து கொண்டிருந்தாள். எவ்வளவ நாள்தான் வீட்டுக்குள் அடைந்து கிடப்பது! அவர்களது நிலையில் உள்ளவர்கள் சும்மா வீட்டில் உட்கார்ந்திருந்தால் நடக்குமா? இதற்கிடையில் கணவன் ஒரு நாய்க்குட்டியை கொண்டு வந்து விட்டான்!

சங்கடந்தான்! இவ்வளவு நாள் ஒவ்வொரு வருஷமும் காரியா நிறையக் குட்டிகள் போட்டுக் கொண்டிருந்த காலத்தில் நாய்க்குட்டி வளர்க்கத் தோன்றவில்லை அவனுக்க. எவ்வளவோ குட்டிகளை நரி தின்றுவிட்டது, எவ்வளவோ குட்டிகளை அக்கம் பக்கத்துப் பையன்கள் எடுத்துக்கொண்டு போனார்கள். என்ன தான் சாப்பிட்டு மிஞ்சியதைக் கொடத்தாலும் நாய் வளர்ப்பதிலும் ஒரு செலவு இருக்கத்தானே செய்கிறது! சாப்பிட்டு மிஞ்சியதை மட்டும் கொடுத்தால் நாய்க்குட்டி நன்றாக வளருமா? அது எப்போது பார்த்தாலும் ஒரு வீட்டு எச்சில் இலையிலிருந்து இன்னொரு வீட்டு எச்சிலிலைக்கு ஓடிக் கொண்டேயிருக்கும்.

ஆனால் கணவனே கொண்டு வந்திருக்கும்போது இதை வைத்து வளர்க்கத்தான் வேண்டும்.

மன்சனியா கூடையைக் கீழே வைத்துவிட்டு நாய்க் குட்டியைக் கையில் வாங்கிக் கொண்டாள். அவளுக்கு வீட்டை விட்டு வெளியே போகக் கூச்சமாயிருந்தது. இப்போது நாய்க்குட்டி வந்ததில் அவளுக்கொரு லாபம். வீட்டுக்கு வெளியே போவதை இன்னும் ஒரு வேளை ஒத்திப்போட சாக்குக் கிடைத்தது அவளுக்கு.

ரொம்பச் சின்னக்குட்டி புஸ்புஸ் என்று சப்தம் செய்து கொண்டு மூக்கை நீட்டி மோப்பம் பிடிக்கிறது. அவளுடைய ஆடைக்குள் முகத்தைப் புதைத்துக் கொள்கிறது. செக்கச் சிவந்த நாக்கு நுனியால் அவளுடைய உள்ளங்கை, விரல்கள், கையை நக்கிப் பார்க்கிறது. அவளுடைய உடலின் மணம் அதற்குப் பிடித் திருக்கிறது. தாய்ப்பாலின் மணம் அதற்குப் பரிச்சயமானதுதான். அது இழந்துவிட்டிருந்த அந்த மணம் இப்போது அதற்கு மறுபடியும் கிடைத்துவிட்டது. இந்த மணத்தை மோப்பம் பிடித்துத்தான் தன்னால் பாலின் ஊற்றைக் கண்டுபிடிக்க முடியும் என்பத அதற்கு இயற்கையாகவே புரிந்திருந்தது.

“ஐயோ அப்பா! கொஞ்சநேரங்கூட சும்மா விட மாட்டேங்கறே..! சும்மா உக்காரு இங்க!” அவள் நாய்க்குட்டியை மடியிலிருந்து இறக்கித் தன் பக்கத்தில் உட்கார வைத்தாள்.

காரியாவின் தொண்டையிலிருந்து “கர்ர்ர்..” என்ற உறுமல் வெளிப்பட்டது. புதிய விருந்தாளியின் நடவடிக்கைகள் அதற்குப் பிடிக்கவில்லை. விஷயம் எவ்வளவு தூரம் போகிறது என்பதைக் கவனித்துக் கொண்டிருக்கிறது அது. அது ஒருமுறை நாய்க் குட்டியை நெருங்கி அதை முகர்ந்து பார்த்தது. முகர்ந்ததில் அதற்கு என்ன புரிந்ததோ! அது சோம்பல் முறித்தவாறு வராந்தா விலிருந்து கீழிறங்கி வாசலில் உட்கார்ந்துகொண்டு தூங்கி வழியத் தொடங்கியது. நாய்க்குட்டியிடம் அதற்குச் சிறிதும் அக்கறை ஏற்படவில்லை.

நாய்க்குட்டியின் மிருதுவான ரோமத்தை மன்சனியாவின் கைகள் அளைந்தன. அப்படி அளைவதில் பட்டைத் தடவுவது போன்ற சுகம் ஏற்பட்டது. அப்படி அளையும்போது அவளுடம்பில் ஒருவகைச் சிலிர்ப்பு ஏற்படுகிறது. அந்தச் சிலிர்ப்புக் கூட இதமாகத்தானிருக்கிறது. ஒரு மிருதுவான உடலின் கதகதப்பைத் தன் விரல் நுனிகளில் உணர்ந்து சற்றுத் தன்னை மறந்துவிடுகிறாள் அவள்.

தினம் அவளுடைய பாலைப் பீய்ச்சிப் பீய்ச்சி வெளியே கொட்ட வேண்டியிருந்தது. அவள் ஒரு தகர டப்பாவின் மூடியில் பாலைப் பீய்ச்சி வைத்து அதை நாய்க்குட்டிக்கு முன்னால் வைக்கிறாள். அது சர்சர் என்று உறிஞ்சி அதைக் குடிக்கிறது. அந்த சர்சர் ஒலிகூட இனிமையாக இருக்கிறது. அவள் கண்கொட்டாமல் நாய்க்குட்டியைப் பார்க்கிறாள்.

வாசலில் காரியாவின் அலட்சியம் மறைந்துவிட்டது. அது காதுகளை விறைத்துக்கொண்டு அந்த ஒலியைக் கேட்டு, வராந்தாவுக்கு ஓடிவந்து டப்பா மூடிக்கு அருகில் நின்றது.

“நீ ஏன் இங்கே வந்தே! போ வெளியே!” மன்சனியா அதட்டினாள்.

மறுபடி உறுமல் காரியாவிடமிருந்து.

“நீ சாப்பிடற சாமானா இது? சும்மா கோவிச்சுக்கிட்டா போல ஆச்சா? ஒரு சின்னக் கொழந்தையோட என்ன கோபதாபம்? வெக்கமாயில்லே? ஓடிப்போ!”

“கர்ர்ர்..” அதாவது இந்த ஏற்பாடு காரியாவுக்குப் பிடிக்க வில்லை. ஆனால் எசமானியின் உத்திரவையும் மீற முடியாதே..!

மன்சனியா வீட்டு வேலையை முடித்துக்கொண்டு, கூடையைத் தலையில் வைத்துக்கொண்டு வெளியே வந்தாள். வழக்கம்போல் காரியாவும் சோம்பல் முறித்துக்கொண்டு எழுந்து வந்து நின்றது.

“நீ எதுக்கு எழுந்திருந்தே? இன்னிக்கு நீ என்கூட வர வேண்டாம்! இங்கேயே இரு..! சொன்னாக் கேக்கறதில்லே! போ, போ, உள்ளே!”

அவள் காரியாவை உள்ளே தள்ளிவிட்டு படலை சாத்திக் கொண்டு போய்விட்டாள். பாவமாகக் குரைத்து ஊரைக் கூட்டியது காரியா.

அவள் எதற்காக வீட்டுக்கு வெளியே வரக் கூச்சப் பட்டாளோ அதுவே நடந்துவிட்டது. கேலி செய்ய விஷயம் கிடைத்துவிட்டால் சிறுவர்களுக்கு உண்மையில் தயை தாட்சணியம் இருப்பதில்லை. இன்றும் மன்சனியா வருவதைக் கண்டு அவர்களுடைய கோலி விளையாட்டு நின்று போய் விட்டது.. பொதுக்கைக் காய்கறிக்காரி இன்னிக்கு ஏன் தனியா வந்திருக்கா? அந்த நோஞ்சான் நாய் ஏன் வரல்லே..?

இன்று அவர்கள் அவளைக் கேலி செய்து பாட்டுப்பாடி அவளைப்போல் நடந்து காட்டவில்லை, அவர்கள் தங்களுக்குள் பூதனை ராட்சசியின் கதையைச் சொல்லிக் கொண்டார்கள்.. அவள் காதில் விழும்படி. அவள் எப்படியோ அவர்களிடமிருந்து தப்பியோடினாள்.

இதன்பின் அவள் காய்கறி விற்கச்சென்ற இடங்களி லெல்லாம் வீட்டுப் பெண்கள் அவள் வீட்டில் நடந்த விபத்து பற்றித் துருவித் துருவிக் கேட்டார்கள். போலீஸ் கூட அவளை சந்தேகிக்கவில்லை. இவர்கள் அவள்மேல் சந்தேகப்படுகிறார்கள் என்று தோன்றியது இவர்களுடைய கேள்விகளிலிருந்து. அவள் அதிருஷ்டம் அப்படி! இல்லாவிட்டால் குழந்தைகளைப் பெற்ற வர்கள் இப்படியெல்லாம் அவளைக் கேள்வி கேட்பார்களா..?

இன்னும் கொஞ்சநாட்கள் அவள் வீட்டுக்கு வீடு போய்க் காய்கறி விற்கவேண்டாம் என்று பர்சாதி அவளிடம் சொல்லி யிருந்தான். கடைத்தெருவில் உட்கார்ந்துகொண்டு காய்கறி விற்கச் சொன்னான். அவன் சொன்னது சரிதான். அவள்தான் அவனைப் புரிந்து கொள்ளவில்லை. வீட்டுக்கு வீடு போய் விற்பதென்றால் அவளுக்குச் சிரமம் என்பதற்காகத்தான் அவன் அப்படிச் சொல்கிறான் என்று அவள் நினைத்துவிட்டாள்..

இதன்பின் அவள் வீடு வீடாகப் போகாமல் கடைத்தைருவில் உட்கார்ந்து காய்கறி விற்கத் தொடங்கினாள்.

அவளும் பர்சாதியும் ஒன்றாகத் திரும்பினார்கள். அவர்கள் வீட்டுப் படலைத் திறந்தபோது காரியா வழக்கம்போல் வாலை ஆட்டிக்கொண்டு அவர்களை வரவேற்க வரவில்லை. வீட்டுக்குள் எந்த வித அரவமுமில்லை. என்ன விஷயம்? விளக்கேற்றிப் பார்த்தார்கள் — காரியா கால்களைப் பரத்திக்கொண்டு படுத்திருக்க, நாய்க்குட்டி அதன் உலர்ந்த மடிக் காம்புகளைச் சூப்பிக் கொண்டிருந்தது. நடுநடுவே ஒரு காம்பை விட்டு இன்னொரு காம்பை வாயால் கவ்விச் சப்பியது நாய்க்குட்டி. மன்சனியா அதனருகில் போய் அதைக் கையில் எடுத்துக் கொண்டதும் காரியா உடலைச் சிலிர்த்துக் கொண்டு எழுந்து நின்றது. “நீ சொன்னதுக்காக ரொம்ப நேரம் இதைப் பார்த்துக்கிட்டு இருந்தாச்சு, இப்போ ஒன் பொறுப்பை நீ ஏத்துக்க.. ஒரே பக்கமாப் படுத்துக்கிட்டு இருந்ததிலே உடம்பெல்லாம் மரத்துப் போச்சு!” என்று சொல்வதுபோல.. பிறகு காரியா மண்ணை முகர்ந்துகொண்டே வெளியே போய்விட்டது.

“இந்தக் குட்டிக்கு ஒரு பேர் வைக்கணும்.. இதைப் “பச்சா” (குழந்தை)ன்னு கூப்பிடலாமா?” மன்சனியா சொன்னாள்.

“பச்சா நல்ல பேருதான்.”

“பச்சா! ஏ பச்சா! திருதிருன்னு முழிக்கிறதைப் பாரு! வெரலை நக்காதே! முட்டாள்! அதையா சப்பறது! பசிக்குதா? ஆமா, பசிக்கத்தானே செய்யும்! ரொம்ப நேரமாச்சே! பால் கடிக்கற கொழந்தைகளுக்கு மணிக்கு மணி பசிக்கும்.. வா வா!”

“குட்டி ‘குயின் குயின்’னு கத்தறதே, பசிச்சா அப்படித்தான் நாய்க்குட்டி கத்தும்.”

“பசிக்கறபோது மட்டுமில்லே, வேறே சமயத்திலும் அப்படிக் கத்தும்..” குறும்பாகச் சிரித்தாள் மன்சனியா. அவள் அந்தக் குறும்புச் சிரிப்பு சிரிக்காவிட்டால் அவன் அவளது குறிப்பைப் புரிந்து கொண்டிருக்கமாட்டான்.

ஐந்து நாட்களுக்குப்பிறகு இன்றுதான் முதல் தடவையாகச் சிரிக்கிறாள் மன்சனியா.

“அதெல்லாம் ஒனக்குத்தான் தெரியும். சின்ன வயசிலேருந்தே நாய் வளர்த்தவளாச்சே!”

மறுநாள் முழுவதும் காரியா சோம்பலாகப் படுத்திருக்க, பச்சா அதனுடைய மடியைச் சப்பிக் கொண்டிருந்தது. மன்சனியா கூடையை எடுத்துக்கொண்டு வெளியே கிளம்பிய போது காரியா அவளோடு வரவில்லை. அவள் அதை இருக்கச் சொல்லவில்லை. அது தானாகவே தங்கி விட்டது.

அவள் கடைத்தெருவிலிருந்து திரும்பியபோது காரியா முன்பிருந்த நிலையிலேயே படுத்துக் கிடந்தது, நாய்க்குட்டி அதன் மடியைச் சப்பிக் கொண்டிருந்தது. ஆனால் இப்போது மடிக்காம்புகள் மச்சம் மாதிரி சிறிதாக இருக்கவில்லை, சற்றுப் பெருத்திருந்தன. மடியும் சிறிது உப்பியிருந்தது. அதில் சிறிது ஊதா நிறம் படிந்திருந்தது. ஏதாவது சிராய்ப்பு ஏற்பட்டிருக்கிறதோ? பச்சா சும்மா சப்புவதோடு நிற்பதில்லையே, பிறாண்டிக் கடித்து இம்சை செய்கிறதே..!

மன்சனியா காரியாவின் மடியைத் தொட்டுப் பார்த்தாள். இல்லை, சிராய்ப்பு இல்லை. மடியிலிருந்த ஊதா நரம்புகள் புடைத்துக் கொண்டிருந்தன. தோலில் ஒரு வழவழப்பு. மன்சனியா தன்னைச் சோதித்துப் பார்ப்பது காரியாவுக்குப் பிடிக்கவில்லை.. ‘ஆ’ன்னு பார்க்கறதுக்கு இதிலே என்ன இருக்கு? இதெல்லாம் முன்னால பார்த்ததே இல்லியா..?

மன்சனியா டப்பா மூடியைக் கையிலெடுத்துக் கொண்டு வராந்தாவிலிருந்து, “பச்சா, பச்சா! துத் துத்து.. வா இங்கே!” என்று அழைத்தாள்.

அவள் எதற்குக் கூப்பிடுகிறாள் என்பது பச்சாவுக்குத் தெரியும். அது எழுந்து அவளிடம் வந்தது. அவளுடைய மேல் துணியைப் பிறாண்டியது. அவள்மேல் ஏறப் பார்த்தது.

“இரு, இரு! பொறுக்கல்லியாக்கும்..! காரியாகிட்டே போ! புது அம்மாவைப் பிடிச்சிருக்கியே, போ, அவளப் போய்ச் சப்பு..! என்ன ஏன் மோந்து பாக்கறே.”

இது இனிமே என்ன பிரயோசனம்..! செத்துப் போய்விட்ட ஜீவனின் நினைவு வருகிறது அவளுக்கு. அதை மறக்க முடியுமா?

முற்றத்தில் படுத்திருக்கும் காரியா தலையை நிமிர்த்தி அவளைக் கவனிக்கிறது. இப்போது அதன் கண்ணில் பீளை இல்லை. அது மன்சனியாவின் பேச்சை, அங்க அசைவுகளைக் கவனமாகப் பார்க்கிறது. அவள் டப்பா மூடியைக் கையிலெடுத்துக் கொள்ளும்போது அதன் காதுகள் விறைத்துக் கொள்கின்றன. பச்சாவிடமிருந்து விடுதலை கிடைத்ததும் அது வெளியே போய் ஒரு சுற்று சுற்றிவிட்டு வந்திருக்கவேண்டும். அப்படிச் செய்யாமல் அது வாலைச் சுருட்டிக்கொண்டு பச்சா திரும்பி வருவதற்காகக் காத்திருக்கிறது..

பச்சா, டப்பா மூடியிலிருந்த பால் முழுவதையும் நக்கிய பிறகும் ஏன் இன்னும் ‘குயின், குயின்’ என்று கத்திக்கொண்டு நிற்கிறது? ஏன் அங்கே கிடக்கும் பிரிமணையை முகர்ந்து பார்க்கிறது?

“ஆச்சா இல்லியா?”

மன்சனியாவின் இந்தக் குரல் கொஞ்சல் அல்ல, இதில் ஆபத்து இருக்கிறதென்பது காரியாவுக்குத் தெரியும். காரியா வராந்தாவில் சட்டென்று ஏறிப் பச்சாவை வாயில் கவ்விக் கொண்டு கீழே வருகிறது.. வா, ஒன்னிடத்துக்கு வா! வந்து ஒன்னிஷ்டப்படி செய்..!

காரியா தன் பழைய இடத்துக்குப் பச்சாவைக் கொண்டு வந்து அதன் கழுத்தை இதமாக நக்கிக் கொடுக்கிறது. பிறகு கால் களைப் பரப்பிக் கொண்டு படுத்துக் கொள்கிறது.. இனி என்ன செய்யவேண்டுமென்று பச்சாவுக்கு யாரும் சொல்லிக்கொடுக்க வேண்டியதில்லை.

மன்சனியா மூங்கில் தூணில் சாய்ந்தவாறு ஆச்சரியத்துடன் இதைப் பார்க்கிறாள்.. கிழட்டுக் காரியாவுக்கு இன்னும் ஆசை தீரவில்லை போலும்..!

ஈ, பச்சாவைத் தொந்திரவு செய்கிறது. காரியா தன் உடலை அசைக்காமல் தலையை மாத்திரம் ஆட்டியாட்டி ஈயை விரட்டப் பார்க்கிறது.. உடலை அசைத்தால் மடியைச் சூப்பும் பச்சாவுக்கு இடைஞ்சல், தவிரக் காரியாவின் சொந்த சுகத்துக்கும் இடையூறு..

கிழட்டு நாயின் மடி உப்பியிருப்பதைப் பர்சாதி கவனித் திருப்பானோ? அதை அவனுக்குக் காட்ட அவளுக்கு ஆசைதான், இருந்தாலும் கூச்சம்.

பர்சாதியும் இதைக் கவனித்திருக்கிறான். ஆனால் இதைப்போய் மன்சனியாவிடம் எப்படிச் சொல்வது..?

அன்றிரவு மன்சனியாவுக்கு அடிக்கடி உறக்கம் கலைந்தது. இரவு முழுவதும் அக்கம் பக்கத்தில் நரி இருப்பதை மோப்பம் பிடித்துக் குரைத்துக் கொண்டிருந்தது காரியா. காலையில் எழுந்தபோது காரியாவையும் பச்சாவையும் முற்றத்தில் காண வில்லை. எங்கே போயிருக்கும்? சாத்புதியா அவரைப் பந்தலுக்குக் கீழே பெட்டி மாதிரி ஒரு மர வீடு உண்டு. ஒரு காலத்தில் மன்சனியா வாத்து வளர்த்தாள். அப்போது வாத்துகளுக்காக இந்த மர வீட்டைச் செய்திருந்தாள். இப்போது அந்த மர வீட்டுக்குள் பச்சாவைப் பக்கத்தில் போட்டுக்கொண்டு படுத் திருந்தது காரியா. பெட்டியின் ஒரு புறத்தில் வாத்து நுழைய ஒரு சிறிய ஓட்டை உண்டு. அதன் மற்ற பக்கங்கள் மூடியிருக்கும். சின்ன ஓட்டை. காரியா கூட சிரமப்பட்டுத்தான் அதற்குள் நுழையமுடியும்.

மன்சனியா அருகே சென்று குனிந்து பார்த்தாள். உள்ளே இருட்டாயிருந்ததால் ஒன்றும் சரியாகத் தெரியவில்லை.

‘கர்ர்ர்.. இஙகே என்ன வேலை ஒனக்கு?”

“போக்கிரி! சும்மா இரு, காரியா!” மன்சனியா அதட்டினாள்.

அவள் அவரைப் பந்தலிலிருந்து காய் பறித்துக் கொண் டிருந்தாள். அந்த அரவம் கேட்டுக் காரியா குலைக்கத் தொடங்கியது.

“அது ஏன் இப்படிக் குலைக்குது?” பர்சாதி கேட்டான்.

“நான் காய் பறிக்கறது அதுக்குப் பிடிக்கல்லே”

“அவரைப் பந்தல் அதோட ராஜ்யம் போலேருக்கு!”

“ஆமா, அதுதான்!”

“புதுக் கொழந்தை கெடைச்சிருக்காக்கும் அதுக்கு?”

“ஆமா, ஏழு ஜன்மத்துக் கொழந்தை!”

கணவன் மேலும் பேச்சைத் தொடர வாய்ப்பளிக்காமல் அவள் பானையை எடுத்துக் கொண்டு பொதுக் கிணற்றடிக்குப் போய்விட்டாள்.

பர்சாதிக்கும் நிம்மதி ஏற்பட்டது. அவர்களது உரையாடல் அவர்களறியாமலேயே ஒரு சங்கடமான விஷயத்தை நெருங்கி விட்டிருந்தது.

இன்று அவர்கள் காய்கறி வாங்க ஹர்தாச் சந்தைக்குப் போகவேண்டும். முன்னதாவே புறப்படவேண்டும். ஆகையால் பர்சாதி அடுப்பு மூட்ட உட்கார்ந்தான். அவன் சுள்ளிகளை ஒடிக்கும் அரவங்கேட்டுக் குரைத்தது காரியா.

“அடேயப்பா! ஒரு குச்சியைக் கூட ஒடிக்கக் கூடாதாம்!”

அப்படித்தான் நடந்துகொண்டது காரியா. காகம் பந்தலின் மேல் உட்கார்ந்தால் குரைத்தது. பர்சாதி கொல்லையில் நடமாடினால் குரைத்தது. வீட்டுக்கூரையின் மேல் பருந்து உட்கார்ந்தால் குரைத்தது. வாசலில் பூனையைக் கண்டால் குரைத்தது. எல்லாரையும் எதிரிகளாகக் கருதியது. எவராலும் ஆபத்து நேரலாம். பத்திரமாகக் குட்டியைப் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆபத்து ஏற்படும் போலிருந்தால் குரைத்து எதிரியைப் பயமுறுத்த வேண்டும். நாள் முழுதும் கண்ணையும், காதையும் திறந்து வைத்திருக்கவேண்டும். யாரையும் நம்பக்கூடாது, எதிரி தாக்க வருவதற்குள் எதிரியைத் தாக்க வேண்டும். எதிரிக்குச் சற்று அவகாசம் கொடுத்துவிட்டால் பிறகு தன்னால் சமாளிக்க முடியாது..

சாக்கடைக்கருகில் ஒரு கீரியைப் பார்த்து வாத்துக் கூட்டி லிருந்து வெளியே ஓடிவந்தது காரியா. அடுப்பருகில் இருந்தவாறே பர்சாதி அதை நன்றாகக் கவனித்தான்.. அதன் கண்கள் சிவந்திருந்தன. புதிதாகக் குட்டிபோட்ட நாயின் அறிகுறிகள் அதன் உடலில் .. பச்சாவும் அதைப் பின் தொடர்ந்து வாத்துக் கூண்டிலிருந்து வெளியே வந்தது. கீரி பயந்து போய் ஓடிவிட்டது. அதன்பிறகும் காரியாவின் குரைப்பும் ஆர்ப்பாட்டமும் நிற்க வில்லை.. அதன் மடி கனத்துக் கீழே தரையைத் தொடுமளவுக்குத் தொங்கியது. அது நடந்துபோகும் போதும் பச்சா அதன் மடியைச் சப்புவதை விடவில்லை..

இதென்ன..! நிசமாத்தான்..! இது எப்படி..?

நாயும் குட்டியும் மறுபடி வாத்துக் கூண்டுக்குள் நுழைந்துவிட்டன.. பர்சாதிக்கு ஒரே திகைப்பு.. மிருகங்களில் இந்த மாதிரி நடக்கும் என்று இதுவரை அவனுக்குத் தெரியாது. மன்சனியா இதைக் கவனித்தாளா? அவளுக்குச் சொல்லலாமா? அக்கம் பக்கத்தாரைக் கூப்பிட்டு இந்த வேடிக்கையை அவர் களுக்குக் காட்டவேண்டும் போலிருந்தது அவனுக்கு. ஆனால் அப்படிச் செய்ய வழியில்லை. அவனுக்குப் பேச வாயில்லை..

ஹர்தாச் சந்தைக்குப் போகும் வழியில் மன்சனியா நாய்களிரண்டையும் பற்றிப் பேசினாள். அவள் காரியாவைச் சாப்பாட்டுக்குக் கூப்பிட்டபோது அது வரவில்லையாம். குட்டி யையும் வரவிடவில்லையாம். குட்டிக்காகக் கவலைப்பட்டாள் அவள்.

“சாப்பிடாம இருக்க முடியுமா?” என்றான் பர்சாதி. இதை விடத் தெளிவாகப் பேசமுடியவில்லை அவனால். மன்சனியா புரிந்து கொண்டால்தானே!

அவர்கள் வீடு திரும்ப மாலையாகி விட்டது. சின்னக்குட்டி

இவ்வளவு நேரமாகப் பட்டினியாயிருக்கிறதே என்று மன்சனியா வுக்குக் கவலை. அவள் டப்பா மூடியை எடுத்துக் கொண்டு வாத்துக் கூண்டுப் பக்கம் போனாள்.. “பச்சா! பச்சா! வா, வா! குர் குர் குர்..”

“ஆமா, அது வரப் போகுதாக்கும்!” என்றான் பர்சாதி. குட்டி உண்மையிலேயே வரவில்லை.

காரியா கூண்டின் ஓட்டை வழியே தலையை நீட்டிக் குரைத்தது. கடிக்க வருவதுபோல் பல்லைக் காட்டியது.

“நீ ஏன் கூப்பிட்டுக்கிட்டே இருக்கே? சும்மா இரு!” பர்சாதி சொன்னான்.

மன்சனியா கையை நீட்டியதும் உறுமிக் கொண்டு வெளியே வந்தது காரியா. இது அவர்களுக்குப் பழக்கமான காரியா அல்ல, முற்றிலும் புதிய பிராணி. மன்சனியா விஷயத்தைச் சரியாகப் புரிந்து கொள்வதற்குள் அது மேல் விழுந்து அவளைப் பிறாண்டிக் கடித்துக் கிழிக்க முற்பட்டது. மன்சனியா சுரைக்கொடியின் மேலே போய் விழுந்தாள். அவளுடைய துணி நார் நாராகக் கிழிந்து போய்விட்டது. அவளுடைய கையிலிருந்து இரத்தம் பெருகியது. பர்சாதி கத்திக்கொண்டே தடியை எடுத்து வந்தான்.

ஆனால் மன்சனியாவின் கவனம் இவற்றிலெல்லாம் இல்லை. காரியா மறுபடியும் வாத்துக் கூண்டுக்குள் நுழையும் வரையில் அவளுடைய பார்வை அதன் மடியிலிருந்து விலகவில்லை. அதன் மடியில் பால் சுரந்திருக்கிறது..! அது அவள் மேல் பாய்ந்தபோது அதன் வெதுவெதுப்பான, ஈரமான மடியின் பாரம் அவளுடைய கைமேல் விழுந்தது- ஈர மடி! பால் கொட்டிக் கொண்டிருந்தது காரியாவின் மடியிலிருந்து..! அவளுடைய கையில் காரியாவின் மடிபட்ட இடத்தில் பாலின் ஈரம்..

தனக்கு மட்டும் விதிக்கப்பட்ட சாபக் கேட்டின் சுமை பாறாங்கல்லாக அழுத்தியது மன்சனியாவின் இதயத்தை..

(பத்ர லேகார் பாபா, 1959)

வங்கச் சிறுகதைகள்
தொகுப்பு : அருண்குமார் மகோபாத்யாய்
வங்கத்திலிருந்து தமிழாக்கம்: சு.கிருஷ்ணமூர்த்தி
நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா

நன்றி: http://www.projectmadurai.org/

சதிநாத் பாதுரி (1906-1965)

பீகாரின் பூர்ணியா மாவட்டத்தைச் சேர்ந்தவர். வெகுகாலம் அரசியலில் ஈடுபட்டிருந்தார். பீகார் காங்கிரஸ் வட்டாரத்தில் அறிமுகமானவர். ஆகஸ்ட் இயக்கத்தில் கலந்துகொண்டு சிறை சென்றார். இந்தச் சிறை வாழ்க்கையை கருவாகக் கொண்டு முதல் நாவல் ஜாகரி 1943 எழுதினார். இந்த நாவல் இவருக்குப் புகழ் கொணர்ந்தது. மேற்கு வங்க அரசின் ரவீந்திரர் நினைவுப் பரிசு தொடங்கப்பட்டபோது முதல் பரிசு இந்த நாவலுக்கே கிடைத்தது. சிறுகதை, நாவல், கட்டுரை எழுதுவதில் தேர்ந்தவர். இவருடைய சக்தி பிரமண் காஹானி ஓர் அசாதாரணப் படைப்பு. உள்ளத்தில் ஆழத்தில் அனாயசமாகப் பயணிக்கிறார். மனித உள்ளத்தின் மிகநுண்ணிய பிரச்சினைகளை ஈவிரக்கமின்றி ஆய்வதில் திறன்மிக்க சதிநாத் எழுத்தாளர்களின் எழுத்தாளர். இவருடைய டோடாயி சரித் மானஸ் (இரண்டு பாகங்கள்) இந்திய நாவல் வரலாற்றில் இணையற்றது. இவர் புகழ் பெற்ற இந்தி எழுத்தாளர் ஃபணிசுவர் நாத் ரேணுவின் இலக்கிய ஆசான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *