கோகிலா நைட்டிங்கேல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: January 21, 2020
பார்வையிட்டோர்: 17,234 
 

சமையலறையிலிருந்து பார்த்த போது பக்கத்து வீட்டுப் பம்பில் கோகிலா தண்ணீர் அடித்துக் கொண்டிருந்தது தெரிந்தது. சட்டென்று கமலத்துக்கு ஞாபகம் வந்தது. நேற்று மாலை கோகிலாவை யாரோ பெண் பார்க்க வந்திருந்தார்களே! ஏதாவது நற்செய்தி இருக்குமோ? விசாரித்துப் பார்க்கலாமே!

இரண்டு வீடுகளுக்குமிடையே ஒரு தாழ்வான சுவர். இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமாக நின்றுகொண்டால் ஒருவரையொருவர் நன்றாகப் பார்த்துக் கொள்ளலாம்.

கமலம் சுவரருகே வந்து நின்றுகொண்டாள்… அவளைக் கண்டதும் கோகிலா தண்ணீர் அடிப்பதை நிறுத்திவிட்டுத் தானும் சுவரருகே வந்தாள். ஒரு கண மௌனத்துக்குப் பிறகு ”எனக்குக் கோபம் கோபமாக வருது!” என்றாள்.

”ஏன்?” என்றாள் கமலம், மிருதுவாக.

”பின்னே என்ன, மாமி? நேற்று மறுபடியும் பெண் பார்க்கும் கேலிக் கூத்து நடந்தது. இந்தத் தடவை வந்தவர்கள் மூன்று பேர்தான். அப்பா, அம்மா, மகன்… நான் பட்டுப் புடவையும், நகைகளும், பின்னலும் பூவும் மையும் பொட்டுமாக அலங்காரம் பண்ணிண்டு வந்தேன்… எல்லோருக்கும் நமஸ்காரம் பண்ணினேன். அந்தக் காலத்தில் அடிமைகளை வாங்குவது போல ஏற இறங்கப் பார்த்தார்கள். வாயைத் திறக்கச் சொல்லிப் பல்லைப் பார்ப்பதற்குப் பதில் பாடச் சொன்னார்கள். நானும் பாடினேன். ரவா கேசரி, பஜ்ஜி இரண்டும் வழக்கம் போல் ஸ்வாஹா… மாமி, பெண் பாக்கும் படலம் நடக்கும் ஒவ்வொரு தடவையும் இந்த ரெண்டு ஜடமும் காணாமல் போகும் வேகத்தைப் பார்த்தால், ‘இவர்கள் பகாசுரன் பரம்பரையோ’னு தோணும். அத்தனை ஸ்வீட்…பின் காபி குடிக்கும் கட்டம்… வழக்கம் போல், ”டிபன் காபி ஏ.ஒன்.” என்கிற சர்டிஃபிகேட். அதற்கு அப்பா, ”எல்லாம் எங்க கோகிலா பண்ணதாக்கும்!” என்று வாய் கூசாமல் பொய்… பின், ”போய் டிஸ்கஸ் பண்ணி கடிதம் எழுதறோம்!” என்ற ரொடீன் வார்த்தைகள். கோபம் எப்படி வராமலிருக்கும், சொல்லுங்கள்!

”பையனுக்கு உன்னைப் பிடிச்சிருந்ததா?”

”தெரியாது!”

”உனக்குப் பையனை?”

”பிடிக்கலை… எனக்கு யாரையுமே பிடிக்கலை… இந்த மாதிரி ஒவ்வொரு தடவையும் அவமானப்படறது கட்டோடு பிடிக்கலை. உங்களுக்குத் தெரியுமா மாமி? நேற்று வந்த ‘பார்ட்டி’ என்னைப் பெண் பார்க்க வந்த பத்தாவது ‘பார்ட்டி’. நேற்று நான் பத்தாவது தடவையாக அதே பாட்டைப் பாடினேன். பத்தாவது தடவையாக அம்மா பஜ்ஜி, கேசரி பண்ணி அதை நான் பண்ணதாக அப்பா பொய் சொன்னார். எனக்குக் கோபம் கோபமாய் வருது மாமி… கூடவே துக்கம் துக்கமாக வருது…”

உறவு எதுவுமில்லை, வெறும் பக்கத்து வீட்டுக்காரிதான் என்றாலும் கமலத்துக்குக் கோகிலாவிடம் அன்பும் பரிவும் பெருமளவுக்கு இருந்தன. கமலத்துக்கு ஐம்பத்தைந்து வயது… ஒரே மகனும் அவன் மனைவியும் வேலைக்குப் போகிறவர்கள். அவர்கள் வீட்டுச் சமையலறையிலிருந்து பார்த்தால் பக்கத்து வீட்டுச் சமையலறை தெரியும்.

கோகிலாவும் தன் பெற்றோருக்கு ஒரே குழந்தைதான். வயது இப்போது பத்தொன்பதுதான் என்றால் நம்பத்தான் முடியவில்லை. அதற்குள் எவ்வளவு கோபம், அலுப்பு! ”அவள் இடத்தில் யார் இருந்தாலும் அவளத்தனை, இல்லாவிட்டால் அவளுக்கு மேலேயே, அலுத்துக்கொள்வார்கள்!” என்று நினைத்துக்கொள்வாள் கமலம்.

கோகிலா பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது அவள் ஜாதகத்தைப் பார்த்த ஒரு ஜோசியர் அவள் தந்தையிடம் கூறினாராம், ”உங்கள் பெண்ணுக்குப் பதினெட்டு வயதுக்குள் கல்யாணமாகிவிடும்!” என்று. ”பதினெட்டு வயசுக்குள் கல்யாணம் என்றால் மாப்பிள்ளை தானே வந்து நம் வீட்டுக் கதவைத் தட்டி, ”எங்கே என் வருங்கால மனைவி?”ன்னு கேட்பானா என்ன? நாம் இப்போதிலிருந்தே வரன் பார்த்தால்தான் நல்லது. ஜாதகம் ஒரு பக்கம் ”காரண்டி” தந்தாலும், நாமும் ஓடி ஆடி மாப்பிள்ளை தேடறதுதான் புத்திசாலித்தனம்” என்றாராம் கோகிலாவின் தந்தை. பலன் – பள்ளிப் படிப்போடு கோகிலாவின் கல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. பெண் பார்க்கும் படலம் தொடங்கிற்று, தொடர்ந்து வந்து போனவர்கள் எல்லாருமே ஒரே மாதிரி பதில் சொன்னார்கள். ”பெண் பளிச்சென்று இல்லை. பையனுக்கு விருப்பமில்லை!”

”பளிச்சென்று இல்லை” என்பதற்கு என்ன அர்த்தம்? கோகிலா பேரழகி என்னவோ இல்லைதான். மாநிறத்துக்குச் சற்றுக் குறைவான நிறம். கண்கள், மூக்கு, வாய் உடல்வாகு, எல்லாமே மிகமிகச் சாதாரணம். கோகிலாவே ஒரு நாள் கமலத்திடம் கேட்டாள். ”ஏன் மாமி, நான் பார்க்க நன்றாயில்லையா? கதையில் வருமே ‘அக்லி டக்லிங்’ அந்த ரகமா நான்?” இதற்கு என்ன பதில் சொல்ல முடியும்? கோகிலாவின் கண்களில் கருணை இருக்கிறதே! அவள் முறுவலில் இதம் இருக்கிறதே! நிறத்திலும் உருவத்திலும் கவர்ச்சி இல்லை என்றால் அழகே இல்லை என்று அர்த்தமா?

பதினெட்டு வயதுக்குள் கட்டாயம் மணமகளாவாள் என்று ஜோசியர் ‘காரண்டி’ கொடுத்தும், பத்தொன்பது வயதில் கோகிலா கன்னியாகத்தான் இருந்தாள். பள்ளிப் படிப்போடு கல்வி நின்று போனதுதான் கைமேல் பலன்.

கடைசியாகப் பெண் பார்க்க வந்தவர்களும் ”பையனுக்கு விருப்பமில்லை!” என்று எழுதினபோது அவள் தந்தை, ”கோகிலாவுக்காக ஒருவன் இனிமேலா பிறக்கப் போறான்? அவன் எங்கேயோ இருக்கத்தானே இருக்கான்?” என்று பதிலளிக்க முடியாத கேள்விகளாகக் கேட்டார். கோகிலாவுக்குக் கோபமும் அலுப்பும் மட்டுமல்லாமல் சிரிப்புக்கூட வந்தது.

அன்று காலை பத்தரை பணியிருக்கும். கோகிலா வழக்கம்போல் அழுக்குத் துணிகளும் வாளியுமாகக் குழாயடிக்கு வந்தபோது பக்கத்துவீட்டு வேலைக்காரி ஓடி வந்தாள். ”பெரியம்மா பாத்ரூமில் விழுந்துட்டாங்க. அழுதுகிட்டே உட்கார்ந்திருக்காங்க!”

”அம்மா! கமலம் மாமி விழுந்துட்டாளாம்! நான் போய்ப் பார்க்கிறேன்!” என்று கூவியவாறே பக்கத்து வீட்டுக்கு விரைந்தாள் கோகிலா. குளியலறை தரையில் கமலம் பரிதாபமாக உட்கார்ந்திருந்தாள். ”எழுந்திருக்க முடியலை, கோகிலா! வலது காலைக் கீழே வைக்க முடியலை!” என்றவள் பச்சைக் குழந்தையைப் போல் வாய்விட்டு அழுதாள்.

வேலைக்காரியின் உதவியோடு அவளைத் தூக்கி நிறுத்தி, இடது காலை மட்டும் ஊன்றச் சொல்லித் தாங்கிப் பிடித்து அழைத்து வந்து படுக்கையில் படுக்க வைத்தாள் கோகிலா. ஒரு வலி நிவாரிணி மாத்திரையைக் கொடுத்துவிட்டுத் தொலைபேசி மூலம் மாமியின் மகனுக்கும், பின் மருமகளுக்கும் விஷயத்தைச் சொன்னாள். அவர்கள் வரும்வரை கமலத்தின் அருகே அமர்ந்திருந்தாள்.

டாக்சியில் உட்கார்ந்து ஆஸ்பத்திரிக்குச் சென்ற கமலம் ஸ்ட்ரெச்சரில் படுத்தபடி ஆஸ்பத்திரி வேனில் திரும்பினாள். வலது காலைச் சுற்றி கனமான இரும்பு வளையம் பொருத்தப்பட்டிருந்தது. ”ஐந்து கிலோவாவது இருக்குமே! இதை எதற்கு மாமியின் காலோடு இணைத்திருக்கிறார்கள்? இதோடு எப்படி நடக்க முடியும்?” என்று கோகிலா யோசித்தபோது மாமியின் மகன் நிலைமையை விளக்கிச் சொன்னார்.

கமலத்தின் வலது கால் இடுப்போடு சேரும் இடத்தில் எலும்பில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது. நல்லவேளையாக முறிவு இல்லாமல் விரிசலோடு தப்பித்துவிட்டாள். அதனால் ஆபரேஷன் செய்ய வேண்டிய அவசியமில்லை. சில வாரங்களில் விரிசல் கூடிவிடும். அதுவரை காலை அசைக்கக் கூடாதாகையால் அசைக்க முடியாதபடி இரும்பு ஃப்ரேம் ஒன்றைக் காலைச் சுற்றிப் பொருத்தியிருக்கிறார்கள். இனி சில வாரங்கள் படுக்கையோடு படுக்கையாக இருக்கவேண்டும்.

கமலம் அழுதுகொண்டே இருந்தாள். ”என்ன பாவம் பண்ணினேனோ! இப்படி படுக்கையிலேயே சகலமும்…”

”பொறுத்துக்கோ அம்மா… உனக்குன்னு ஒரு நர்ஸ் ஏற்பாடு பண்ணறேன்… நாங்கள் ஆபீஸ் போறதுக்கு முன் வர மாதிரி, திரும்பி வரும்வரை இருக்கிற மாதிரி” என்றான் மகன்.

”நடக்கிற காரியமா இது? வீட்டையும் என்னையும் முன்பின் தெரியாதவள் தயவில் ஒப்படைச்சால் என்ன வேண்டுமானாலும் ஆகலாம்…”

”நான் ரெண்டு மாசம் லீவுக்கு அப்ளை பண்ணறேன். கவலைப்படாமல் இருங்கள், அம்மா!” என்றாள் மருமகள்.

”என்னால் எல்லாருக்கும் எத்தனை கஷ்டம்!” என்று கமலம் ஓயாமல் அழுதாள். கோகிலாவால் அந்தத் துயரத்தைத் தாங்க முடியவில்லை…

”நான் உங்களோடு இருக்கேன் மாமி… உங்கள் பிள்ளையும் மாட்டுப் பொண்ணும் கவலையில்லாமல் ஆபீஸ் போகட்டும். இருவருமே வீட்டிலில்லாத நேரங்களில் நான் உங்களோடு இருக்கேன். நான் பழகினவள் என்கிறதால் உங்களுக்குக் கூச்சமாக இருக்காது!”

”நிஜமாகத்தான் சொல்கிறாயா?” என்று கமலமும் அவள் குடும்பத்தினரும் ஆச்சரியப்பட, கோகிலாவின் பெற்றோர் திகைத்தார்கள். மகளைத் தனியே அழைத்துச் சொன்னாள் கோகிலாவின் தாய். ”நீ புத்தி சுவாதீனத்தோடுதான் பேசறியா? ஒரு கிழவிக்கு நர்ஸ் வேலை பார்க்கிறது சுலபம்னு நினைச்சியா?”

”இதில் என்ன கஷ்டம், அம்மா? நான்கூட இருந்தால் மாமி நிம்மதியாயிருப்பார்… கால் நன்றாகக் குணமாகும்.”

”மாமியின் சகல தேவைகளையும் கவனிக்கணும். அசிங்கம் பார்க்கக் கூடாது… அவருடைய முணுமுணுப்பையும் புலம்பல்களையும் சகிச்சுக்கணும்!”

”நான் முகம் சுளிக்காமலிருந்தால் மாமி ஏன் முணுமுணுக்கவோ புலம்பவோ போகிறார்?”

”நீ ஏன் முந்திரிக்கொட்டை மாதிரி, ‘நான் உதவறேன்’னு உளறிக் கொட்டினாய்?”

”ஏன்னா, மாமிக்கு இப்போது உதவி தேவை. அந்த உதவியை என்னால் தர முடியும்!”

”நீ ஒரு அரைப் பைத்தியம், கோகிலா!”

”அப்படியா?”

வாக்குக் கொடுத்தபடியே கமலத்தின் மகனும் மருமகளும் அலுவலகம் சென்ற பிறகு அவளைக் கவனித்துக்கொள்ள கோகிலா ஆஜரானாள். மாமியின் தேவைகளை உணர்ந்து அவற்றைப் பூர்த்தி செய்வதில் அவள் எந்தவித அருவருப்பையும் அடையவில்லை. துயரப்படும் ஒரு மனிதப் பிறவியின் துயர் களையும்போது, அந்த முகத்தில் நிம்மதியும் மலர்ச்சியும் தோன்றுகின்றனவே, இந்தக் காட்சிக்கு ஈடாக ஒரு காட்சி இருக்க முடியுமா? பொறுமைக்கும் சேவைக்கும் இதைவிட சிறந்த பரிசு கிடைக்க முடியுமா?

நாள் மேல் நாளாக நழுவிற்று… கமலம் இப்போதெல்லாம் அழுவதில்லை… கோகிலாவின் சேவையில் மென்மையும் இதமும் இருந்ததை உணர்ந்தவள், தான் சிரித்த முகமாக இருப்பதுதான் நன்றி கூறும் ஒரே வழி என்று உணர்ந்தாள். தான் பிறந்து வளர்ந்த ஊரைப் பற்றியும், தன் சிறுமிப் பருவத்தின் சிறுசிறு சுவாரஸ்யமான சம்பவங்கள் பற்றியும் அழகழகான கதைகள் சொன்னாள். ஹாஸ்யமும் சிரிப்புமாக நாட்கள் நகர்ந்தன.

எதிர்பார்த்தபடியே எலும்பிலிருந்த விரிசல் சில வாரங்களில் மறைந்து விட்டது. காலில் இரும்பு வளையத்தோடு ஆஸ்பத்திரி சென்ற கமலம் அது இல்லாமல் சக்கர நாற்காலியில் வீடு திரும்பினாள். இனி அவள் மெள்ள மெள்ள நடக்க ஆரம்பிக்கலாம். தன்னம்பிக்கை வரும்வரை கோகிலா உடனிருப்பாள் என்பதால் பிரச்சனையே இல்லை…

ஒரு நாள், நண்பகல் பொழுதில் இருவரும் பேசிக் கொண்டிருந்த போது கமலம் சொன்னாள். ”கோகிலா, நீ ஏதோ ஒரு ஜன்மத்தில் யாராகப் பிறந்திருக்க வேண்டும், தெரியுமா?”

”யாராக, மாமி?”

”ஃப்ளாரென்ஸ் நைட்டிகேல் என்ற நிகரற்ற நர்சாக!”

”இது என்ன திடீர் ஞானோதயம், மாமி?” என்றாள் கோகிலா, முறுவலித்தவாறு.

”உன் கண்களைப் பார்த்தால் மனம் அமைதி அடையறது… உன் புன்னகையைப் பார்த்தால் மனசில் தைரியம் பிறக்கிறது. உன் ஸ்பரிசத்தில் துயர் களையும் ஏதோ தன்மை இருக்கு… உடல் வலி குறைஞ்சு போறது… இதையெல்லாம் தவிர, உன் பெயரையே எடுத்துக்கொள்… கோகிலா… கோகிலம் என்கிற சம்ஸ்கிருத வார்த்தைக்கு அர்த்தம் ‘நைட்டிங்கேல்’ என்று ஆங்கிலத்தில் சொல்லும் பறவை… பொருத்தமாக இல்லையா?”

கோகிலா வாய்விட்டுச் சிரித்தாள். ”பொருத்தமோ இல்லையோ, எத்தனை அன்போடு சொல்கிறீர்கள்! அதற்கு ரொம்ப ரொம்ப நன்றி மாமி!”

மாதங்கள் மறைந்தன.

”உங்கள் ரெண்டு பேருக்கும் தெரியுமா? கோகிலாவின் ஜாதகத்தைப் போன தடவை பார்த்து ஜோசியம் சொன்னானே, அவன் மகா மடையன்!” என்றார் கோகிலாவின் தந்தை, மனைவி மகளிடம்.

”எப்படி?” என்றாள் கோகிலாவின் தாய்.

”வேறொருவனிடம் அவள் ஜாதகத்தைக் காட்டினேன். இவன் கெட்டிக்காரன். பார்த்த உடனேயே ‘இந்தப் பெண்ணுக்கு இருபது வயசுக்கு மேல்தான் கல்யாணமாகும்’னு சொன்னான்!”

”இருபது வயசுக்கு மேல் எத்தனை வருஷம்?” என்றாள் கோகிலா.

”என்னது?”

”இருபத்தொண்ணு, இருபத்தாறு, முப்பது, நாற்பது எல்லாமே இருபதுக்கு மேல்தானே அப்பா!”

“வாயை மூடு, அதிகப் பிரசங்கி… என்ன தெரியறதோ, இல்லையோ, எதிர்த்துப் பேச தெரியறது!”

“பேசாமல் என்னை காலேஜில் சேர்த்துவிடுங்கள் அப்பா!”

”ஏன்? இன்னும் ஆவேசத்தோடு எதிர்த்துப் பேசவா?.. இப்போ நான் சொல்றதைக் கவனமாய்க் கேள். ஞாயிற்றுக்கிழமை உன்னைப் பெண் பார்க்க ஒரு ‘பார்ட்டி வரது… அடக்க ஒடுக்கமாய் நடந்துகொள்! புரியறதா?”

”அப்பா! இன்னுமா உங்களுக்கு இந்தக் கேலிக்கூத்து அலுக்கலே?”

”எது கேலிக் கூத்து? பெண் பார்க்கிறது நம் ஊர் சம்பிரதாயம்… இது கேலிக் கூத்துன்னா காதல் கல்யாணம்தான் சிறப்போ? ஏன்தான் உன் புத்தி இப்படிக் கோணல்மாணலாய் வேலை செய்யறதோ?”

கோகிலா பதில் சொல்லவில்லை. மற்றுமொரு பிள்ளை வீட்டார் விஜயம். மற்றுமொரு முறை ”விருப்பமில்லை” என்ற நிராகரிப்பு… தெய்வமே!

வெள்ளிக்கிழமை காலை கோகிலாவின் தாய் அவளிடம் ஒரு பெரிய பையையும் பணத்தையும் கொடுத்தாள். கூடவே நிறைய உபதேசமும் செய்தாள்.

”நேரே பஸ் ஸ்டாண்டுக்குப் போ… வழியில் யாரோடும் பேசாதே… பஸ் வரும்வரை பொறுமையாய்க் காத்திரு… பஸ்ஸில் எந்தத் தடியனாவது பல்லை இளித்தால், வேறு பக்கம் பார்… சாமான் வாங்கும், லிஸ்ட்டும் பணமும் பத்திரம்!”

”லிஸ்ட் என்ன… பிரமாத லிஸ்ட்? கேசரிக்கு ரவை, நெய், முந்திரி, திராட்சை, பஜ்ஜிக்குக் கடலை மாவு… இதெல்லாம்தானே?”

”ஆமாம்… இதெல்லாம்தான்!” அம்மாவின் குரலிலும் எரிச்சல், அப்பாவின் குரலைப் போல்.

பஸ் ஸ்டாண்டில் அதிக நேரம் காத்திருக்க வேண்டாதபடி உடனேயே பஸ் வந்துவிட்டது. கோகிலா ஏறிக்கொண்டாள்.

கூட்டமான கூட்டம. உட்கார இடம் கிடைக்கவில்லை. ஒரு கையால் பையையும் மறு கையால் எதிர் சீட்டையும் பிடித்தபடி நின்றுகொண்டாள்… பஸ், கிளம்பிற்று… பஸ்ஸில் நாலைந்து இளைஞர்கள் பார்வையைப் பெண்கள் பக்கம் படர விட்டதைக் கவனித்தாள். தன் மேல் பட்ட பார்வை, சகஜமாக அகல்வதைக் கவனித்தாள். மற்ற பெண்கள் மேல் பார்வை பட்டு, அசிங்கமாகக் குத்தி நிற்பதையும் கவனித்தாள். அம்மாவின் உபதேசம் நினைவுக்கு வந்தது. ”எந்தத் தடியனாவது பல்லை இளிச்சால் வேறு பக்கம் பார்!”

சட்டென்று அவளுக்கு ஒர் உண்மை உணர்வாயிற்று… எத்தனையோ முறை அவள் பஸ்ஸில் பயணித்திருக்கிறாள், கூட்டத்தில் நின்று சாமான் வாங்கியிருக்கிறாள். யாருமே அவளைப் பார்த்துப் பல்லை இளித்ததில்லை. ”நான் அத்தனை குரூபியா?” என்று ஒரு கணம் எண்ணி மனம் நொந்தாள். ஆனால் சற்று யோசித்ததும் அந்த எண்ணம் அகன்றது. குரூபியான ஒருத்தியைக் கண்டால் காண்பவர்களின் முகத்தில், கண்களில், கொஞ்சமாவது அதிர்ச்சி தோன்றும். அவளைக் காண்பவர்களிடம் அந்த அதிர்ச்சி இல்லை. அவள்மேல் சாதாரணமாகப் படிந்த பார்வை, சாதாரணமாக அவளை ஆராய்ந்து, சாதாரணமாகவே விலகிற்று… அதில் அதிர்ச்சியுமில்லை, சுவாரஸ்யமும் இல்லை.

”என் தோற்றம் யாரையும் சலனப்படுத்தவில்லை, யாரையும் ஈர்க்கவில்லை. எந்தவிதமான விருப்பையோ வெறுப்பையோ தோற்றுவிக்கவில்லை!” என்று தெளிந்தபோது அடி மனத்தில் சட்டென்று ஒரு நிம்மதி படர்ந்தது.

ரோட்டில் யாரோ குறுக்கே பாயவே, பஸ் ஓட்டுனர் பிரேக்கை அழுத்தினார். பஸ் எதிர்பாராமல் குலுங்கி நின்றது. கோகிலா ஒரு கணம் தடுமாறினாள். ஆனால், விழாமல் சமாளித்தாள். கையிலிருந்த பை மட்டும் நழுவி விழுந்தது.

அவளருகே நின்றிருந்த ஒரு வாலிபன் குனிந்து அதை எடுத்து அவளிடம் கொடுத்தான்.

”ஓ… தாங்ஸ்!” என்று அதைப் பெற்றுக்கொண்டாள் கோகிலா.

”வெல்கம் ஸிஸ்டர்!” என்று அவன் மென்மையாய் முறுவலித்தான்.

மின்சாரம் பாய்ந்தாற்போல ஒரு கணம் சிலையாகிப் போனாள் கோகிலா. ஸிஸ்டர்! எத்தனை அழகான வார்த்தை இது!

அவள் பார்க்கப் பளிச்சென்று இல்லை.

வேண்டாம்… அவசியமே இல்லை.

அவளுடைய தோற்றம் காண்பவர்களின் மனத்தில் விருப்பு வெறுப்பைத் தோற்றுவிக்கவில்லை. கமலம் மாமி சொல்வது உண்மையென்றால், அவள் கண்களும் முறுவலும் ஒரு நோயாளிக்கு அமைதியையும் தைரியத்தையும் தருகின்றன. அவளுடைய ஸ்பரிசம் நோயுற்றவரின் துயர் களைகிறது, வலி மாற்றுகிறது.

இது ஒரு வரப்பிரசாதம். இதுவே பெரும் பாக்கியம்!

கோகிலா பஸ்ஸிலிருந்து இறங்கினாள். மற்றொரு பஸ்ஸில் ஏறி வீட்டுக்கு வந்தாள், காலி பையோடு.

”சாமானெல்லாம் எங்கே?” என்றாள் அவள் தாய்.

”நான் வாங்கலே…”

”ஞாயிற்றுக்கிழமை பிள்ளை வீட்டார் வரும்போது மானம் போகணுமா?”

”ஞாயிற்றுக்கிழமை யாரும் வரப் போறதில்லை.”

”உளறாதே, கோகிலா…”

”உனக்குத் தெரியுமா அம்மா? நான் நர்ஸாகப் போகிறேன். சந்தோஷமாயிருக்கப் போகிறேன்!”

”பைத்தியமா உனக்கு? உன் அப்பா இதைக் கேட்டால் ஆகாயத்துக்கும், பூமிக்குமாகக் குதிப்பார். வளர்ந்த பெண்ணுன்னு பார்க்காமல் கை நீட்டி அடிப்பார்.”

அவள் தாய் சொல்லிக்கொண்டே போனாள். ஆனால், கோகிலாவின் காதில் எதுவுமே விழவில்லை.

கற்பனை சிறகடித்துப் பறந்தது.

நர்ஸ் கோகிலா.

ஸிஸ்டர் கோகிலா.

கோகிலா நைட்டிங்கேல்!

***

ருக்மிணி பார்த்தசாரதி

1957ம் ஆண்டு முதல் நாவல்கள், குறுநாவல்கள், கதைகள் எழுதி வந்தவர். நூல்களின் எண்ணிக்கை 8. மனித நேயம், பெண்ணியம், உயர்ந்த சிந்தனை போன்ற கருத்துகளை படைப்பின் களனாகக்கொண்டு எளிமையான நடையில் கதைகளை எழுதியவர்.

சிறுகதைகளுக்காக இலக்கியச் சிந்தனை பரிசு, அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டி முதல் பரிசு, கலைமகள் பரிசு உள்ளிட்ட பரிசுகளை பெற்றுள்ளவர்.

‘விபுவா’ தெலுங்கு இதழ் நடத்திய அனைத்திந்திய பன்மொழிச் சிறுகதைகளுக்கான போட்டியில் தமிழ்ப் பிரிவில் பரிசு வென்றவர். இவர், எழுத்தாளர் ஆர்.சூடாமணியின் சகோதரி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *