காதலென்றும் சொல்லலாம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: September 2, 2012
பார்வையிட்டோர்: 9,267 
 

புத்தாண்டுக்கு முந்தின நாள் சச்சு போனில் அழைத்திருந்தான். அவன் அழைப்பது மிக அரிது. ஆடிக்கொரு நாளோ அமாவாசைக்கு ஒரு நாளோ நான்தான் அவனை அழைத்துக் கொஞ்சம் நேரம் பேசுவேன்.பெரும்பாலும் ஊருக்குள் நிகழும் ‘கிசுகிசு’க்களைத்தான் சுவாரசியமாகச் சொல்வான்.

நண்பன் என்றும் சொல்ல முடியாத, உறவினன் என்றும் சொல்ல முடியாததான ஒரு நெகிழ்வும் இறுக்கமும் கலந்த உறவே எங்களுக்கிடையே இருந்தது. பேச்சு அன்றைய தினம் சுவாரசியமான திசையில் நகரவில்லை. கொஞ்சம் தலையை வலித்துக் கொண்டிருப்பதாகச் சொன்னான்.

தொலைபேசியில் அழைத்து ஒருவன் தலையை வலிக்கிறது என்று சொல்வது அவன் குறித்தான நம் அக்கறையாக மாறுவதில்லை.பேச்சை நான் திசை மாற்றினேன். அவன் அசுவாரசியமாகவே பேசினான். துண்டித்து விட்டு கொஞ்சம் வெளியே போய்வரலாமா என்று யோசித்தேன்.

சச்சுவுக்கு அடுத்த தெருவில் வசிக்கும் ஒரு பெண்ணோடு தொடர்பு இருப்பதாக சொல்லிக் கொண்டிருந்தார்கள்.ஊருக்குள் இதுபற்றி பரவலாகவே பேசிக்கொள்கிறார்களாம். அவனிடம் நான் இது குறித்து பேசியதில்லை. இன்று அதைப் பற்றி பேச வேண்டும் என்று தோன்றியது. ஆனால் எப்படி துவங்குவது என்று தெரியாததால் அமைதி காத்தேன். அவனாக மீண்டும் தலையை வலிக்கிறது என்றான். அவன் எதையோ என்னிடம் குறிப்பாகச் சொல்ல விரும்புவதாக இந்த முறை தோன்றியது.

இரவில் உறக்கம் இல்லையா என்றதற்கு ஆம் என்றான். சத்யா பற்றியும் அவளோடான உறவை பற்றி பேச ஆரம்பித்தான்.சத்யாதான் அவனோடு தொடர்பில் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்ட பெண். வழக்கமாக அவன் பேச்சில் இருக்கும் சந்தோஷமோ, எப்பொழுதும் வார்த்தைகளில் அவன் உருவாக்க முயலும் கிளுகிளுப்போ இல்லாமல் சொல்லிக் கொண்டிருந்தான்.

அதே பேச்சு வேகத்தில் சத்யா போன வாரம் இறந்துவிட்டாள் என்றான். எனக்கு அதிர்ச்சியாக இல்லை. அவளை இதுவரைக்கும் நான் பார்த்திராதது கூட அதிர்ச்சியின்மைக்குக் காரணமாக இருக்கலாம்.தற்கொலை செய்து கொண்டிருக்கிறாள். அம்மியை தன் தலைக்கு மேலாக உயர்த்தி கைகளை அந்தரத்தில் விலக்கிக் கொண்டாளாம். மண்டை பிளந்து இறந்திருக்கிறாள்.
இதைச் சொல்லும் போது சச்சு உடைந்துவிட்டான்.மிகக் கொடூரமாக தன்னை வருத்தியிருக்கிறாள் என்று திரும்ப திரும்பச் சொன்னான்.

அவள் இறந்த நாளிலிருந்து அவளது வீட்டிற்கு இவன் செல்லவில்லையாம். அவளது உறவினர்கள் சச்சு மீது கோபமாக இருப்பதாகச் சொன்னான். நேற்றோடு ஐந்து நாட்கள் முடிந்திருக்கிறது. நேற்றிரவு நெடு நேரம் சுடுகாட்டில் அமர்ந்திருக்கிறான். அவள் வந்து இவனை தன்னோடு அழைத்துச் செல்லக் கூடும் என்றிருந்தானாம். அவள் மீதான தன் காதல் வெறும் உடல் இச்சை இல்லை என்பதைச் சொல்லி அவளோடான தன் உறவை நியாயப்படுத்த முயன்று கொண்டிருந்தான். அவனுக்கு ஆறுதலாக இருக்க வேண்டியாவது நான் அவன் சொல்வதை ஆமோதிக்க வேண்டியிருந்தது.

நள்ளிரவு தாண்டிய பின் அவனது அம்மாவும் மனைவியும் கைக்குழந்தையை தூக்கிக் கொண்டு இவனைத் தேடி மயானத்திற்கு வந்துவிட்டார்களாம். துணைக்கு பஞ்சாயத்து போர்டில் வேலை செய்யும் காளிமுத்துவும் உடன் வந்திருக்கிறான். சச்சுவின் மனைவி கதறி அழுதிருக்கிறாள். அவனது அம்மாவுக்கும் அழுகையை அடக்க முடியாமல் இருந்திருக்கிறது. அவர்களுக்கு
வேண்டி அந்த இரவில் வீட்டிற்கு வந்திருக்கிறான்.

சத்யாவுக்கு தான் துரோகம் செய்துவிட்டதாகச் சொன்னான். சத்யாவுடனான உனது உறவு காதலித்து திருமணம் செய்து கொண்ட மனைவிக்கு துரோகமாக ஆகாதா என்றதற்கு மீண்டும் அழுதான். நானேதான் பேச வேண்டியிருந்தது. சத்யா உயிரோடிருந்திருந்தால் பிரச்சினை சிக்கல் ஆகியிருக்கலாம். அவள் இறந்துவிட்டாள். இப்பொழுது அதிகம் குழம்பாமல் மனைவியோடு இரு என்றேன், குழந்தையை காக்க வேண்டியது பற்றியும் பேசினேன். சத்யா தனக்காகவே இறந்தாள் என்றான். இந்த மனநிலையில் வேறு என்ன பேசினாலும் அவனுக்கு மண்டையில் ஏறாது என்பதால் போய் உறங்கச் சொன்னேன். அழுது கொண்டே புத்தாண்டு வாழ்த்து சொன்னான்.

பிரகாஷ் எங்கள் இருவருக்குமே நண்பன், அவனை அழைத்து சச்சு குறித்துப் பேசினேன். தான் கவனித்துக் கொள்வதாகச் சொன்னான். பிறகு நண்பர்களின் புத்தாண்டு எஸ்.எம்.எஸ், வாழ்த்துச் செய்திகளுக்கு பதில் அனுப்பியவாறு தூங்கிப் போனேன். காலையில் 7 மணிக்கு சச்சு அழைத்திருக்கிறான். மிஸ்டு கால் ஆகியிருந்தது.

ஒன்றாம் தேதி அலுவலகம் முடித்து மாலையில் ஊருக்குக் கிளம்பும் போது, சச்சு தற்கொலைக்கு முயன்றதாக பிரகாஷ் போனில் சொன்னான்.ஆனால் பிழைத்துக் கொண்டானாம். மற்றபடி நன்றாக -வீட்டில் தான் இருக்கிறானாம். ஊருக்குப் போகும் போது இரவு மணி பதினொன்று ஆகியிருந்தது. நேராக சச்சு வீட்டுக்குத் தான் சென்றேன்.கூட்டமாக இருந்தது. மனது குறு குறுத்தது.அழுது கொண்டிருந்தார்கள்.

சச்சு இறந்திருக்கிறான்.

காலையில் 7.10க்கு பிரகாஷை அழைத்து தான் வஞ்சிபாளையம் ரயில்வே கேட் அருகில் நிற்பதாகவும் தண்டவாளத்தில் வரவிருக்கும் தொடர்வண்டியில் தலையைக் கொடுப்பதாகவும் சொல்லும் போது பிரகாஷூக்கு மிக விகாரமாக தொடரூர்தியின் சத்தம் கேட்டிருக்கிறது.அதோடு தொலைபேசியின் இணைப்பும் துண்டிக்கப்பட்டிருக்கிறது.

எல்லாம் முடிந்து ‘சவ’த்தை எடுத்து வரும் போது,முகத்தின் வலது பாகம் காணாமல் போய் இருக்கிறது. உடலுக்கு எந்த பாதிப்பும் இல்லை. நின்ற படி தலையை மட்டும் தொடரூர்திக்கு முன்பாக நீட்டியிருக்கிறான்.

பிரகாஷூக்கு முன்னதாக என்னிடம் பேசத்தான் சச்சு முயன்றிருக்கிறான் என்பதை நினைக்கும் போது தலை சுற்ற ஆரம்பித்தது. வேறு எதைப் பற்றியும் யோசிக்கவில்லை. திரும்பி வீட்டிற்கு வந்துவிட்டேன். அவன் குழந்தையை தொட்டிலில் போட்டு யாரோ பாடிக் கொண்டிருந்தார்கள். அது ஒப்பாரியா தாலாட்டா என்பதை கவனிக்க முடியவில்லை.

(நிகழ்ந்த சம்பவம். புனைவென்றும் கொள்ளலாம்)

– 04 ஜனவரி 2010.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *