கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: May 17, 2013
பார்வையிட்டோர்: 10,855 
 

வாசல் திண்ணையில் இருந்த மாடப் பிறையில் விளக்கேற்றி வைத்து விட்டு மைதிலி திரும்பும்போது, மஹாதேவன் வந்து கொண்டிருப்பது தெரிந்தது. அன்று ஒரு திருமண நிச்சயதார்த்தம் என்பதால், விடியற்காலையிலேயே கிளம்பிப் போனவர், இப்போதுதான் திரும்புகிறார்.

‘வாங்கோப்பா! இன்னிக்கு நிச்சயதார்த்தம், நல்லபடி பண்ணி வச்சேளா அப்பா?’…அவ்ர் நீட்டிய மஞ்சள் பையை வாங்கியபடி நடந்தவளிடம், வெகு உற்சாகமாகப் பேசினார் மஹாதேவன்.

‘எல்லாம், அவன் அருளாலே ரொம்ப நன்னா நடந்ததும்மா மைதிலி! வர்ற ஆவணி மாசம் முகூர்த்தத் தேதி குறிச்சுக் கொடுத்து, லக்னப் பத்திரிக்கையும் வாசிச்சாச்சு…அத்தோட, மனசுக்குத் திருப்தியா சம்பாவனையும் கிடைச்சுதம்மா’.

சற்றே நைந்து போயிருந்த பர்சிலிருந்து பணத்தை எடுத்தவர், ‘இந்தாம்மா, வழக்கம் போலக் காசி உண்டியல்ல வரும்படியின் கால் பங்கைச் செலுத்தி விட்டு, பாக்கியைச் சிவராமன் கிட்டே கொடுத்துடும்மா!’

திருச்சி மலைக்கோட்டையின்,வடக்கு ஆண்டார் தெருவில், புதுப்படிச் சந்துக்குள் இருந்தது அவர்கள் வீடு. மேலும் கீழுமாக, எதிரும் புதிருமாக இரண்டு வரிசைகளில் ஏறத்தாழ முப்பது, நாற்பது குடித்தனங்கள் வாழும் பகுதி என்பதால், எப்போதும் அங்கே கலகலப்புக்கும், சலசலப்புக்க்கும் பஞ்சமில்லாமல் இருந்தது. நவீனக் குடியிருப்பாக இல்லாவிட்டாலும், நாகநாத ஸ்வாமி கோவிலும், மெயின்கார்ட்கேட் கடைப் பகுதிகளும்
வாணப்பட்டரை மாரியம்மன் கோவிலும், அந்தப் பகுதிக்கு பலத்த நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றுத் தந்திருந்தது.

சிவராமனுக்குப் பத்து வயதாகும் போது, மஞ்சட்காமாலை வந்து அவரது மனைவி கண்ணை மூடியபோது, அவனைத் தாயுமானவர் போலக் கண்ணும் கருத்துமாக வளர்த்து ஆளாக்கினார் மஹாதேவன். அவரது புரோகிதத் தொழிலில், அப்படி ஒன்றும் வருமானம் சொல்லிக் கொள்ளும்படி வந்ததில்லை. ஆனால், சிவராமன் புத்திசாலித்தனமாகப் படித்து, ஓரளவுக்கு நல்லதொரு வேலையில் அமர்ந்து முன்னுக்கு வந்து கொண்டிருந்தான்.

வெளியூர், அன்னியம் என்று சுற்றி அலையாமல், கணவனை இழந்து, ஆதரவில்லாமல் தவித்துக் கொண்டிருந்த தனது ஒன்றுவிட்ட தங்கை பெண் மைதிலியைச் சிவராமனுக்குப் பேசி, மணம் முடித்து வைத்தார்.

மஹாதேவனின் மனம் அறிந்து, இதம்பதமாக நடந்து கொள்வதில் மைதிலியும் படு சமர்த்து. தினமும், அவர் குளிக்கத் தயாராக வென்னீர் போட்டு, சர்க்கரை குறைத்து டிகாக்ஷன் தூக்கலாய்க் காபி போட்டுக் கொடுத்து, நிதய பூஜைக்குரிய நியமனங்களைச் செய்து, மடி வேட்டி உலர்த்தி…அவர் ஒப்புக் கொண்ட வைதீக கார்யங்களைத் தேதி வாரியாக
அட்டவணைப் படுத்தி, சமயங்களில் மறந்து விடாமல் நினைவு படுத்தி…என்று மிகவும் அனுகூலமாக நடந்து கொள்வாள்.

குழந்தைகள் அருணாவுக்கும், ரமணாவுக்கும் பாடம் சொல்லித் தருவது மைதிலியாக இருந்தாலும், தினசரி உறங்கப் போகும் முன், ஏதேனும் புராணக் கதைகள் சொல்லி அவ்வப்போது, சிறுசிறு சுலோகங்களை மனனம் செய்வித்து, அவர்களை பயபக்தியோடு கொண்டு செலுத்துவது மஹாதேவன் தான்!

‘அப்பா, சூடா ரெண்டு இட்லி சாப்டுங்கோ’

‘வேண்டாம்மா! என்னவோ பசிக்கவே இல்லை. ஒரு தம்ளர் கரைத்த மோர் மட்டும் கொடு’ என்றவர், ‘ஏனம்மா, நம்ப காசி உண்டியல்ல இன்னி வரைக்கும், உத்தேசமா எவ்வளவு சேர்ந்திருக்கும்னு சொல்லு’.
‘கிட்டத்தட்ட, எட்டு இல்லாட்டா ஒன்பதாயிரத்துக்கு கிட்ட இருக்கலாம்பா… உங்களோட அஞ்சாறு வருஷச் சேமிப்பாச்சே’

‘அம்மா மைதிலி, இன்னிக்குக் கடைய நல்லூர் விஸ்வத்தைப் பார்த்தேம்மா. நிஜமாலுமே கொடுத்து வச்சவன் தான். ஆறாவது தடவையாக் காசிக்குப் போய்ட்டு வந்திருக்கான்! ஒவ்வொரு தடவை காசிக்குப் போய்விட்டு வரும் போதும், அவனோட தேஜஸ் கூடிக் கொண்டே வர்றது நன்னாத் தெரியறதும்மா… இந்தத் தடவையும், அவன் காசியைப் பத்தியும் கங்கையைப் பத்தியும் சொன்ன போது, நாள் முழுக்கக் கேட்டுண்டே இருக்கலாம்னு தோணித்து….

…மனுஷாளோட கற்பனையை மீறிய மகத்துவமா, கங்கா மாதா, ஜலப்ரவாகமா சுழிச்சிண்டு ஓடறாளாம்…ஹரித்வாரைப் பத்தியும், கயா சிரார்த்தம் பத்தியும் அவன் சொல்றச்ச மனசில ஆனந்தம் பொங்கறதும்மா…நினைச்ச மாத்திரத்துலயே, நம்மளோட அத்தனை பாவங்களையும் கரைச்சு, முக்தியைத் தரக்கூடிய மகத்தான சக்தி, ஒரு துளி கங்கா ஜலத்துக்கு உண்டுனு ஆதி சங்கர பகவத் பாதாளோட சுலோகத்துல படிச்சிருக்கேன்….

கங்கையைப் பார்க்கவே எட்டு ஜன்மா எடுக்கணும்னா, அதுல ஸ்நானம் பண்ணி, கயா சிரார்த்தம் பண்ணுவதற்கு எத்தனை புண்ணியம் செஞ்ச்சிருக்கணும்!’

காசியில், கங்கா ஸ்னானம் செய்பவனுக்குப், பத்து அஸ்வமேத யாகம் செய்த புண்ணியம் கிடைக்கும். காசியில் தான் பாவங்களைக் கரைக்கும் வல்லமை, கங்காதேவிக்கு உண்டு காசிக்கு வர முடியாதவர்கள், ‘காசி! காசி!’ என்று எத்தனை முறை உச்சரிக்கிறார்களோ, அதற்கேற்ற புண்ணியம் வரும். தர்ம நதம், தூதிபாபா, யமுனா, சரஸ்வதி என்ற நான்கு நதிகளும், கங்கையில் கலந்து, பஞ்ச நதியாகிப், பாபங்களைப் போக்கும் முழு வலிமையும் இந்த கங்காவுக்குக் கிடைக்கிறது.

காசிலே தான் அவளுக்குக் கங்கைனு பேர்…அப்புறம் காசியைக் கடந்துட்டா, அவள் ‘கோமதி’ ஆகி விடுகிறாள். அங்கேருந்து, ஹூப்ளிலே பாயும் போது, ‘கங்கா சாஹர்’னு பேரு.. .அப்புறம் பங்களாதேஷில், ‘பத்மாவதி’ங்கிற பேர்ல பாய்கிறாள். அதுனால தான், காசி-கங்கைலே நீராடுவது, முழுப்பலனைத் தரும்னு வேதத்தில் சொல்லி இருக்கு.’

மஹாதேவனின் குரலில் ஏக நெகிழ்ச்சி! தனது வாழ்நாளில், ஒரு முறையாவது காசிக்குப் போய் வர வேண்டுமென்பது அவரது தணியாத ஆர்வம். ஆனால், இது விஷயத்தில் தனது பிள்ளையைத் தொந்தரவு செய்யக்கூடாது என்று தீர்மானித்தவராய், சுவாமி அறையில் ஒரு உண்டியலை வைத்துச் சிறுகச் சிறுகச் சேமித்து வருகிறார். அவருடைய இந்த நியாயமான நிறைவேற்றும் வகையில், பணத்திலிருந்து பயணம் வரை சிவராமன் ஏற்பாடு செய்ய முன் வந்த போது, மஹாதேவன் நிர்தாட்சண்யமாக மறுத்து விட்டார்.. தானும் மைதிலியும் உடன் வருவதாகச் சொன்னபோது அவரது மறுப்புக்கான நியாயமான வாதங்களை எடுத்துரைத்தார்.

‘சிவராமா! காடு என்னை வாவாங்கிறது…வீடு போபோங்கிறது…ஒரு தகப்பனா இருந்து உன்னை வளர்த்து, ஆளக்கி, இன்னிக்கு ஒரு கிரகஸ்தனா பார்க்கிற போது, எனக்குப் பூரண சந்தோஷம் கிடச்சிருக்கு. ஆனால், என்னோட இந்தக் கடமை, லெளகிகத்துல தான் பூர்த்தியாகி இருக்கு. நான் செய்ய வேண்டிய கடமை இன்னொன்று இருக்குப்பா.

…காசிக்குப் போய், கங்கைலே ஸ்நானம் பண்ணி, பித்ரு தர்ப்பணங்களைப் பண்ணினால்தான் எனது கடமையைப் பண்ணின ஆத்ம திருப்தி எனக்கு ஏற்படும்னு எனக்குள் சதா தோன்றிக் கொண்டே இருக்குப்பா…

ஆனா, நீ அப்படி இல்ல. உனக்கு இன்னும் குழந்தைகளோட படிப்பு, அவர்களின் வருங்காலம் என்ற பொறுப்பெல்லாம் நிறைய இருக்கு. அதற்கு உண்டானதை எல்லாம் நீஅப்பப்ப செய்தாக வேண்டும்….அதனால காலம் கனிந்த பின், நீ காசிக்கு மைதிலியோட போகலாம்…சரியா?’

இப்படிப் பேசியே, சிவராமன் வாயை அடைத்து விடுவார்.

கூட்டிக் கழித்துப் பார்த்தால், கையில் ஒரு பத்தாயிரமாவது குறைந்த பட்சம் வேண்டும் என்று கணக்குப் போட்டவர், உண்டியல் சேமிப்பைத் தொடங்கிய போது, சிவராமனும் அவனது பங்குக்குக் கணிசமான ஒரு தொகையை மாதாமாதம் சேர்ப்பித்து விடுவான். எப்படியும், இந்த வருட இறுதியில் வரும் அம்மாவின் திதியைக் காசியில் செய்யும்படியாக, சேமிப்பு ஓரளவுக்குச் சேர்ந்து, மஹாதேவன் நல்லபடியாகக் காசிக்குச் சென்று வரணும் என்கிற உத்வேகம் அவனுக்கும் இருந்தது.

மைதிலியும் தினமும் மானசீகமாகப் பிரார்த்தனை செய்து வந்தாள். அவரது முதுமைப் பிராயத்தால், இயலாமையும், பலகீனமும் வந்து தொல்லை கொடுப்பதற்கு முன், சரீரத்தில் தெம்பு உள்ள போதே, மஹாதேவன் காசிக்குப் போய் வர வேண்டும் என்கிற கரிசனமும் அவளுக்கு இருந்தது.

‘தாத்தா!’…குழந்தைகளின் ஆரவாரக் குரல் கேட்டு நிமிர்ந்தார் மஹாதேவன்.

‘கதை சொல்லு தாத்தா’

‘சரி, இன்னிக்குக் காசி, கங்கையைப் பத்தின கதை சொல்றேன்’

ஏற்ற இறக்கங்களோடு, பகீரதனின் தவ முயற்சியையும், கங்கையின் பிரவேசத்தையும், காசி மா நகரின் சிறப்பையும், அரிச்சந்திரனின் கதையையும் சொன்னார்.

இந்துக்களை எல்லாம் இம்சை பண்ணிக், கோவில்களைச் சூறையாடின அவுரங்கசீப், இறுதி நாட்களில் கங்கையின் அருமையை உணர்ந்து, தான் மரித்த பின், தனது உடம்பை கங்கைக் கரையில் அடக்கம் பண்ணச் சொன்ன கதையையும் கூறினார். பல வருஷங்களுக்குப் பிறகு, பெற்ற தாயைப் பார்த்தால் ஏற்படக்கூடிய குதூகலமும், பரவசமும் அவரது குரலில் தெரிந்தன.

‘கங்கேச யமுனே சைவ கோதவரி சரஸ்வதி நர்மதே சிந்து காவேரி ஜலேஸ்மின் சந்நிதம்குரு’… மஹாதேவன் குளித்து முடித்து வெளியே கிளம்பத் தன்னை ஆயத்தம் செய்து கொண்டிருந்தார்.

அன்று புதன் கிழமை…முகூர்த்த நாள். சென்ற மாதம் நிச்சயதார்த்தம் செய்து விட்டு வந்த இடத்துத் திருமணம். இவர் போய் நடத்தி வைக்க வேண்டும்.

‘மைதிலி! நான் கிளம்பறேம்மா!’

‘சரிப்பா! ஜாக்கிரதையாகப் போய்ட்டு வாங்கோ!’

கல்யாண மண்டபம் நிரம்பி வழிந்தது. குழந்தைகளும், பெரியவர்களும், இள வட்டங்களும் பட்டுப் புடவை சரசரக்கப் பெண்டுகளுமாக, மண்டபம் கல்யாணக் களை கட்டியிருந்தது.

சந்தனமும், பூக்களும், தோரணமும், மங்கல இசையுமாக அந்தச் சூழல் அனைவருக்கும் மனம் நிறைந்த சந்தோஷத்தைத் தந்து கொண்டிருந்தது.

முதல் நாள் மாப்பிள்ளை அழைப்பின் போதே, கூட்டம் அனைவரின் எதிர்பார்ப்பிற்கும் மேலே போயிருந்தது.

பெருந்திரளாக வந்திருந்த அனைவரும், திருமணத்தைப் பார்ப்பதற்கு வசதியாக, அன்றைய இரவே ஆட்களை அழைத்து, மண்டபத்தின் வெட்ட வெளி மேல் மாடியில் ஒரு அவசரக் கூரை போட்டுப் பந்தல் அமைத்திருந்தார்கள். தாராளமாக அனைவரும் அமர்ந்து பார்க்க வசதியாக இருக்கைகளும், உயர்த்திக் கட்டிய மேடையுமாக அந்த இடம் ஜரிகைப் பூக்களாலும், வண்ண விளக்குகளாலும் பளபளவென்று ஜொலித்துக் கொண்டிருந்தது.

மந்திரங்கள் சொல்லப்பட்டு, சடங்குகளும், சம்பிரதாயங்களும் நடந்து கொண்டிருந்தன. ஹோமப் புகைக்கிடையே, வீடியோ காமிராக்களின் ஒளி வெள்ளமும், டிஜிட்டல் காமிராக்களின் வெளிச்சமும் இடையிடையே தோன்றி, அங்கிருந்த பளபளப்பை வெளிச்சம் போட்டுக் காட்டின. வரவேற்பும், உபசரிப்பும், பேச்சும், சிரிப்புமாக அமர்க்களப் பட்டுக் கொண்டு இருந்த போது தான்….யாருமே எதிர்பாராத அந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்தது.

அவரவர் வேலையில் அனைவரும் மும்முரமாய் இருக்க, அக்கினித் தேவனும், தனது பணியை ஆக்ரோஷமாகத் தொடங்கினான். சிறு பொறியாகக் கிளம்பிய தீ, கண்மூடித் திறக்கும் முன்பாகப் பந்தலின் மேற்கூரைக்குத் தாவியது.

கை சொடுக்கும் நேரத்தில், மேற்கூரையும், பக்கவாட்டு அலங்காரத் திரைச் சீலையும், திகுதிகுவென்று பற்றிக் கொண்டு, எல்லா இடத்திலும் வெகு வேகமாகப் படர்ந்த போது, மண்டபம் முழுவதும் புகையும், நெருப்புமாக நிறைந்தது….கதறலும், ஓலமும், கூச்சலும், அழுகையுமாகப் பயங்கரமான சம்பவம் அங்கே துரித கதியில் அரங்கேறிக் கொண்டிருந்தது!

மணப் பெண் எங்கே? மாப்பிள்ளை எங்கே? பெற்றவர் எங்கே? குழந்தைகள் எங்கே?…

…உயிர்! உயிர்!…எப்படியும், அங்கிருந்து ஓடி உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் வேகத்தில் அவரவர்கள், அரற்றிக் கொண்டும், கதறிக் கொண்டும், வலுவைத் திரட்டிக் கொண்டு, அந்த அடர்ந்த புகையில் வழி தெரியாமல், முட்டி மோதிக் கொண்டு, கால் போன போக்கில் ஓடியது இதயத்தை உறையச் செய்வதாய் இருந்தது.

மஹாதேவனுக்கு மூச்சை அடைத்தது. கண்கள் இருட்டிக் கொண்டு வர, மயங்கிச் சாய்ந்தார். பார்வைக்கு ஏதும் புலப்படாதபடிக்கு, நெருப்பும், புகையும், கமறலும், இரைச்சலும் அவரை நிலை குலையச் செய்தன. தட்டுத் தடுமாறி எழுந்து நின்ற போது, யாரோ அவரது கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு வெளியே ஓடினார்கள்…

ஒருவரை ஒருவர் மிதித்துக் கொண்டும், இடித்துக் கொண்டும், அனைவரும் ஓடியபோது மனித உயிரின் முன், பொருளும், பணமும், செல்வமும், செல்லாக் காசாகிப் போனது.
கொண்டாட்டமும், குதூகலமுமாகக் காணப்பட்ட அந்தக் கல்யாண மண்டபம், நொடிப் பொழுதில், குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை அனைவரையும் சுட்டுப் பொசுக்கும் மயான பூமியாகக் காட்சி அளித்தது.

உடம்பு ரணப் பட்டுப் போயிருந்தாலும், மஹாதேவனின் மனது மிகவும் விழிப்போடு இருந்தது. யாரோ தன்னை இழுத்து கொண்டு போவதை அவரால் உணர முடிந்தது…

கதறலோடு, சிவராமன் ‘அப்பா! அப்பா!’ என்று கைத்தாங்கலாகப் பற்றிய போது, அவருக்குத் தொண்டையை அடைத்துக் கொண்டு, குரல் எழும்ப முடியாமல் போனது. அவரது முதுகுப் புறமும், பின்னங்கால்களும் நன்றாக வெந்து போயிருந்தன. அவரது சிகை பொசுங்கிப் போயிருந்தது.

தனது கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு வந்தது யாரென்று தெரிந்தபோது, அந்தத் துயரச் சூழலிலும், ஒரு சந்தோஷம் அவருக்குள் எட்டிப் பார்த்தது.

‘கடவுளே! இது கல்யாணப் பொண்ணு இல்லையோ? அடப் பாவமே! தன்னோட அப்பா அம்மாவையோ, இல்லாட்டா மேடையில் இருந்த மாப்பிள்ளையோட கையையோ, புடிச்சு இழுத்துண்டு வராம, என்னை இழுத்துண்டு வந்திருக்கே இந்தப் பொண்ணு!’…. மஹாதேவனின் மனது உருகியது.

அவரையும், அந்தப் பெண்ணையும் சற்றும் தாமதிக்காமல், மருத்துவ மனையின் அவசரப் பிரிவில் கொண்டு போய்ச் சிவராமன் சேர்த்த போது…..மருத்துவ மனையின் வழி எங்கும் தீயால் பாதிக்கப்பட்டவர்களின் கருகிய உடலும், கதறிய ஜனங்களுமாக, அந்த இடம் ஒரு யுத்தபூமியாகக் காட்சியளித்தது.

இது என்ன கொடுமை! ஏன் இப்படி நடந்தது? அகோரப் பசியெடுத்து, அத்தனை பேரையும் விழுங்க அக்கினித் தேவனுக்கு எப்படி மனது வந்தது? எங்கே குறை? யார் செய்த குற்றம்?
அங்கிருந்தோரின் அரற்றலும், கண்ணீரும் வலுத்த போது, மனித சக்தியை விஞ்சிய இயற்கையின் சீற்றம் எத்தனை வலுவானது புரிந்தது!

எதையோ சொல்லத் துடித்தவராய் மஹாதேவன் தவிப்பதைப் பார்த்து, சிவராமன் அவர் அருகே போனான். அவரால் குழறிக் குழறித்தான் பேச முடிந்தது.

‘சிவராமா!…நான் பிழைக்க மாட்டேம்ப்பா’…திணறலுடன் அவர் சொன்ன போது, சிவராமன் பெருங்குரல் எடுத்து அழுதான்.

‘அப்பா! அப்படி எதுவும் நடக்காதுப்பா. எத்தனை வேணாலும் செலவு பண்ணிக் காப்பாத்திடுவேன் அப்பா! நீங்கள் உடம்பு சரியாகிக் காசிக்குப் போயிக் கங்கா ஸ்நானம் பண்ணிட்டு வரப் போறேள் பாருங்கோ’…

மஹாதேவனுக்கு மேல் மூச்சு, கீழ்மூச்சு வாங்கியது. …’காசிக்குப் போகணும், கங்கைலே ஸ்னானம் பண்ணணும்னு சொல்லிண்டு, அதுக்காகக் காசு சேர்த்துண்டு வந்தேனே! இப்போ நடந்த வேடிக்கையைப் பார்த்தியா? என் கையைப் புடிச்சுண்டு, பரபரனு வெளிலே இழுத்துண்டு வந்ததே இந்தக் கல்யாணப் பொண்ணு! இவ பேரு என்ன தெரியுமோ? சாட்சாத் கங்காதான்! பாவம். சகலத்தையும் இழந்துட்டு, நிர்க்கதியா நிக்கிற இந்த கங்காவைப் பார்க்கிறதே, எனக்குக் காசிகங்காவைத் தரிசனம் பண்ணின மன நிறைவைத் தந்துடுத்து. ஒண்ணு செய் சிவராமா… இந்தப் பொண்ணு கங்காவுக்குத்தான் அந்தக் காசி உண்டியல் பணம் தேவைப்படும். அத இந்தப் பொண்ணுக்குச் செலவழிச்சு, எப்படியாவது காப்பாத்திக் கரை சேர்த்து விடு’.

….சொல்லிக் கொண்டே வந்த மஹாதேவனின் வார்த்தைகள் மேற்கொண்டு வெளிவராமல் இதயக் கூட்டுக்குள்ளேயே சிக்கிக் கொள்ள, அவரது கண்கள் மணப்பெண் கங்காவைப் பார்த்தவாறே
நிலை குத்தின.

– பெப்ரவரி 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *