கள்ளிப் பாதையும் நுணாப் பூவும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: August 2, 2020
பார்வையிட்டோர்: 16,915 
 

’ரீது…….’.

’என்னம்மா’

‘இன்னைக்கு அம்மாவுக்கு ஆபிஸில் ஒரு மீட்டிங். முடிய 8 மணி ஆகிவிடும். வழக்கம் போல நீ டியூசன் முடிந்து வந்தவுடன் அம்மா வீட்டில் இருக்கமாட்டேன். இன்று ஒரு நாள் மட்டும் நீ பக்கத்து வீட்டு ஆண்டியோட இருக்கிறாயா? நான் சொல்லிட்டுப் போறேன்’.

’சரிம்மா. சீக்கிரம் வந்துவிடு. எனக்கு நீ இல்லாட்டி போர் அடிக்குமா…..’

’ஓகே ரீது…எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வந்து விடுவேன்.’

‘என் செல்ல அம்மா’. ரீது ஓடி வந்து என்னைக் கட்டிக் கொண்டாள். அவளின் அணைப்பு என்னை மெய் சிலிர்க்க வைத்தது.

‘என்ன தவம் செய்தேனோ’………என்ற பாடலை முணுமுணுத்துக் கொண்டே. அவளுக்கு முத்தம் தந்து மகிழ்ந்தேன்.

அலுவலகம் கிளம்புவதற்கு முன் ஞாபகமாகப் பக்கத்து வீட்டு மணிமேகலை அக்காவிடம் சொல்லி விட்டு வந்தேன். மிகப் பிரியமாக அவர்களும் ‘நான் பார்த்துகிறேன். நீ மீட்டிங் முடிந்து ரிலாக்ஸாக வா. எனக்கு ஒரு சிரமமுமில்லை. தீபக்கும் ப்ரண்சோட கிரிக்கெட் விளையாடப் போயிடுவான். நான் மட்டும் தானே. எனக்கு ஒரு சிரமமுமில்லை. ரீது….சமத்தான பொண்ணு. நீ கவலைபடாதே….’ என்று முத்தாய்ப்பாகப் பேசினாள் மணி அக்கா.

ரீது அப்பா முகுந்த், துபாய்க்கு வேலையாகச் சென்று இரண்டு மாதம் ஆயிற்று. அவள் பொறுப்பு முழுவதும் என் மீது இப்பொழுது……

முகுந்த் வேறு ……தினந்தோறும் போனில் ரீதுவைக் கவனமாகப் பார்த்துக் கொள்…அவளைத் தனியே விடாதே…அவள் வீட்டில் இருக்கும் பொழுது, அவளோடயே இரு……என்று ஓயாமல் சொல்வது சில சமயம் எரிச்சலாகக் கூட இருக்கும்.

மணி 5.40. இன்னும் இருபது நிமிடங்களில் மீட்டிங் தொடங்கி விடும். மற்ற பெண்கள் அவசரம் அவசரமாக முகம் திருத்திக் கொண்டிருந்தார்கள். நான் மணி அக்காவிற்குப் போன் செய்தேன். .

போனை எடுத்தவுடன் மணி அக்கா…’உமா..பயப்படாதே..ரீது வந்துவிட்டாள். டிபன் கொடுத்துவிட்டேன். ‘பூஸ்ட்’ வேண்டாம் என்று சொல்லிவிட்டாள். வீட்டுப் பாடம் செய்து கொண்டிருக்கிறாள். உன் பொண்ணு ரொம்ப சமத்து. நீ ஏன் கவலைப்படுகிறாய்……..’ என்றார்.

அப்பாடா………….என்று பெருமூச்சுடன், ’அக்கா தேங்ஸ்….நான் எட்டரை மணிக்கு அங்கிருப்பேன். நான் வந்து அவளுக்கு டின்னர் கொடுக்கிறேன்…தேங்ஸ் அக்கா’…..என்று போனை வைத்தாள்.

சரியாக எட்டு நாற்பது. ஆட்டோவை விட்டு இறங்கி, வேக வேகமாக வீட்டுக் காம்பவுண்டுக்குள் நுழைந்த உமா..நேராக மணி அக்கா வீட்டுக்குச் சென்றாள். அழைப்பு மணி அடிக்க கை வைத்தபோது….கதவு லேசாகத் திறந்திருப்பதைக் கண்டாள். ரீது………என்று அழைத்தவுடன் சோபாவிற்குப் பின்னால் இருந்து,ஒடி வந்து அம்மா……….என்று கட்டிக் கொண்டாள். அவள் கண்ணில் மிரட்சி .உடல் லேசாக நடுங்கியது.

‘வாம்மா….நம்ம வீட்டுக்கு…’என்றாள். ‘எங்கே மணி அக்கா…’என்றேன். ‘வாம்மா….நம்ம வீட்டுக்கு….வா’ என்று கையைப் பிடித்து இழுத்துக் கொண்டே நடக்கத் தொடங்கினாள்.

கண் மட்டும் வீட்டைத் துளாவியது .மணி அக்காவைக் காணவில்லை.

ரீது இழுத்த இழுப்பில் வீட்டிற்குச் சென்ற நான், வீட்டைத் திறந்து உள்ளே சென்றவுடன்……..என் மீது வந்து விழுந்தாள் ரீது. அம்மா….கதவை மூடு…..என்று கதறினாள்.

பதறி போய் கதவை மூடித் தாழிட்டேன். ஓடி வந்து என் காலைக் கட்டிக் கொண்ட ரீது…..அம்மா….அம்மா…..என்று விக்கினாள்.

அவளை அள்ளி அணைத்துக் கொண்டே வரவேற்பறை சோபாவில் உட்கார்ந்தேன். என்னம்மா ரீது….என்ன? என்றேன்.

கதவு தட்டும் சத்தம் கேட்டது. ரீதுவை என்னிடமிருந்து பிரித்து உட்கார வைத்துவிட்டு கதவைத் திறந்தேன். மணி அக்கா தான். என்ன உமா வந்து விட்டாயா…. நான் இப்ப தான் 15 நிமிடத்திற்கு முன் கோயிலுக்குச் சென்றேன். இன்னைக்கு சோமவார பிரதோசம். ரொம்ப விசேசம் அல்லவா. நான் மறந்தே போய்விட்டேன். தீடீரென்று ஞாபகம் வந்தது. தீபக்கும் சீக்கிரம் வந்துவிட்டான். அவ்னிடம் ரீதுவை விட்டுவிட்டு, நான் கோயிலுக்குச் சென்றேன்.

கோயிலில் கூட்டம் குறைந்துவிட்டது. மணி எட்டுக்கு மேல் ஆகிவிட்டது அல்லவா. சிவனுக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு ஓடிவந்தேன்….வீட்டுக் கதவு திறந்து கிடந்தது. தீபக்கையும் காணவில்லை. சரி…ரீதுவை நீ கூட்டி வந்துவிட்டாயா? என்று பார்க்க வந்தேன். உம் பொண்ணு ரொம்ப சமத்து. வீடு திறந்து கிடக்கு. நான் போறேன்.

தேங்ஸ் அக்கா….என்று கூறிக் கொண்டே , அவர் சென்றவுடன் கதவைப் பூட்டிவிட்டு ரீதுவிடம் வந்தேன்.

ரீது என்று குரல் எழுப்புவதற்கு முன் , அவள் என்னோடு ஒட்டிக் கொண்டாள். எட்டு வயது குழந்த……இப்படி ஒரு நாள் கூட என்னோடு ஒட்டிக் கொண்டது இல்லை.

அம்மா…அம்மா…என்று விசும்பினாள்.

வார்த்தை வெளி வரவில்லை. ரீது ………சொல்லுமா….ஏன் பயந்து இருக்க…..மணி அக்கா திடீரென்று தனியா விட்டு விட்டுச் சென்று விட்டார்களா? சொல்லுமா……நான் இனிமேல் உன்ன எங்கேயும் விடமாட்டேன்….

அம்மா….அம்மா…..அந்த தீபக் அண்ணா….இல்ல அவன் அண்ணா இல்ல. அவன் என்னை வேறு மாதிரி பார்த்தான் அம்மா…..என் மீது இங்கே இங்கே கை வைத்தான் அம்மா. என்னவோ செஞ்சான் அம்மா…..எனக்குப் பிடிக்கவேயில்லை..

விக்கித்து நின்றேன்.’

அம்மா…நீ தான் எப்பொழுதும் சொல்லுவேயே அம்மா….ஆம்பிள்ளை பார்வை வேறு பட்டா அங்கே நிக்காதே .ஓடி வந்துடுன்னு…நானும் வெளியே ஓடி வர நினைத்தேன். ஆனால் வீட்டிலே நீ இல்லையே அம்மா.வீடு வேற பூட்டி இருந்ததே ‘ என்றாள்.

நான் மிரண்டு போய் நின்றேன். கண்ணிலிருந்து என்னையும் அறியாமல் கண்ணீர் வடிந்தது.

அம்மா….ப்ளீஸ்….அம்மா…அழாதே. திரும்ப அவன் என்னிடம் வந்தான். அவன் கையைக் கடித்துவிட்டேன் . ரத்தம் வந்துவிட்டது. கத்திக் கொண்டே கையைக் கழுவ பாத்ரூம் நோக்கி ஓடினான். நான் ஓடிச் சென்று கதவை வெளியிலே பூட்டி விட்டேன். பின் சோபாவிற்குப் பின்னால் ஒளிந்து கொண்டேன். அதற்குள் நீயும் வந்துட்ட அம்மா. எனக்குப் பிடிக்கலை அம்மா அவனை. நீ ஏம்மா என்ன அங்க விட்டே…..இனிமே நான் நம்ம வீட்டிலேயே இருக்கிறேன் …ஏம்மா.அவன் அப்படிப் பார்த்தான். அவனை எனக்குப் பிடிக்கலேம்மா…….என்று தயங்கி தயங்கி சொன்னாள்.

ஒடிச் சென்று ரீதுவை அணைத்துக் கொண்டேன்.அவளுக்கு முகம் ,கை கால் கழுவி வேறு ஆடை அணிவித்தேன். ரீது! நீ ரொம்ப சரியாகச் செய்திருக்கிறாய்.. இனி நீ தீப்க்கிடம் பேசாதே. அவனை நான் கண்டிக்கிறேன். நீ பயப்படாதே. உனக்கு இனி மேல் இது போன்று நடக்காது.

ரீது …இனி உன்னை தனியே விடமாட்டேன். ப்ராமிஸ் கண்ணு…. என்று அவளைத் தேற்றி சாப்பிட வைத்துப் படுக்க வத்தேன்.

எனக்கு சுரீர் என்று மணி அக்கா மீது கோபம் வந்தது. அக்காவை நம்பியது தப்பு. இனி யாரையும் நம்பக் கூடாது. குழந்தை பாவம்…..எப்பொழுதோ குழந்தையிடம் சொல்லி வைத்தது நல்லதா போயிற்று. தீபக் பிடியிலிருந்து குழந்தை தப்பிவிட்டாள்.

ஒரு நிமிடம் தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

முருகா…..குழந்தையைக் காப்பாற்றி விட்டாய். ..என்று மனதிற்குள் இறைவனுக்கு நன்றி சொல்லிக் கொண்டேன்.

ரீதுவிற்கு இனி நான் அவள் வாழ்க்கையில் எதிர் கொள்ள இருக்கும் சவால்களைக் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துச் சொல்ல வேண்டும். அவளுக்குச் சொல்வது புரிகிறது. இனி அவள் குழந்தை அல்ல. அதை முதலில் நானும் உணர வேண்டும். அவளுக்கும் உணர்த்த வேண்டும்.

தீபக்கை நாளைப் பக்குவமாக எச்சரிக்க வேண்டும். தடி பய. ………மணி அக்கா பாவம். ……புருசனும் இல்லாமல்….இவனை நம்பி…..எப்படி வாழப் போகிறார்.

சிந்தனைகள் என் மனத்தில் வட்டமிட. தூங்கும் ரீதுவை அணைத்துக் கொண்ட போது தான், அவள் வளர்ச்சியும் அழகும் என்னைப் பிரமிக்க வைத்தது. என் முன் நிற்கும் இச்சவாலை எதிர் கொள்ள துணிய வேண்டும் என்ற மனவுறுதி என்னுள் பிரவாகமாகப் பெருகியது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *