கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: June 1, 2013
பார்வையிட்டோர்: 12,968 
 

“எல்லாரும் செட்டிலிருந்து பேக் அப் பண்ணுங்க. ஹீரோ போர்ஷான்ஸ் நாளைக்குத்தான்…” டைரக்டரின் குரல் அயர்வாய்க் கேட்டது. ஆர்யன் கேரவானில் ஏறி கதவுகளை அறைந்து மூடினான். சேரில் அமர்ந்து கால்களை நீட்டி பொத்தானை அமுக்கிவிட்டு ஜன்னலை லேசாய் திறந்து விட்டான். சேர் நீண்டு படுக்கை ஆனது. மெல்ல கண்களை மூடி படுத்துக் கொண்டான்.

செட்டில் உள்ள சாமான்களை அப்புறப்படுத்தும் சத்தம் மற்றும் ஆட்களின் குரல் கலவையாய் கேட்டது.

விலைமதிப்புள்ள சாண்டிலியர் விழுந்ததில் செட்டின் பிரதான தளத்தில் ஏகப்பட்ட நாசம். முழுக்க முழுக்க கண்ணாடியில் செய்த தளம். பாடல் காட்சி..எத்தனை பேரின் உழைப்பு..ஆர்ட் டைரக்டரின் கற்பனை எல்லாமும் இன்று தவிடு பொடியாகிவிட்டது.

“இன்னைக்கும் ஷுட்டிங் அவ்வளவுதானா?” கேமராமேன் சந்தோஷின் அலுப்பான குரல் ஆர்யனின் காதுகளுக்குள் விஷமாய் ஏறியது.

“பின்னே? ஆவி விளையாட்டில்ல? உசிருக்கு பயமிருந்தா ஓடிப் போயிடவேண்டியதுதான்..” இது டான்ஸ் அசிஸ்டண்ட் ஜீவா…

“என்னப்பா..ஆவி அது இதுன்னுக்கிட்டு? டைரக்டர் இதையெல்லாம் நம்பறாரா என்ன? பிழைப்பு கெட்டுப் போகுதில்ல? இப்போ அரை நாள் பேட்டா தானா?” லைட் பாய் முருகனுக்கு இரண்டு பெண்டாட்டி.. இரட்டை சுமை..

இவர்கள் சொல்வதெல்லாம் நிஜம்தானா? ஆர்யனுக்கு இன்னமும் நம்ப முடியவில்லை. அம்மா ஆவியாய் வந்து இவனைத் தொந்தரவு செய்வாளா?

****

சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் முதல் படம் முடியும் தருவாயில் தொடங்கியது இந்த கண்ணாமூச்சி. கேரளா ஷூட்டிங் போன பொழுது…அதுவும் காதல் காட்சி… மழைக் காட்சி..ஆர்யன், சர்மிஷ்டா இருவரும் உட்கார்ந்திருந்த ஹவுஸ் போட் திடீரென யாரோ உலுக்கி விட்டதுபோல நிலைகொள்ளாமல் ஆடியது. நடு ஆற்றில் நிற்கக்கூட முடியாமல் ஆர்யன் தடுமாற அந்த நீர்ப் ப்ரளயத்திலும் சர்மிஷ்டா ஆற்றில் குதித்து நீந்தி மறு கரைக்கு போய் விட்டாள். ஆட்கள் வந்து ஆரியனை கரை சேர்த்தார்கள். பத்தே நிமிடங்களில் மழை நின்று வானம் வெளுத்து விட்டது. அப்பொழுதான் பத்திரிக்கைகளில் இதைப் பற்றி எழுத தொடங்கிஇருந்தார்கள். விருது நடிகை ஜம்னா ஆவி ரூபமாய் மகன் ஆர்யானைத் துரத்துவதாக….
ஆர்யனுக்கு சொந்த அனுபவம் டார்ஜிலிங்கில்…ஆர்யன் மட்டும் காட்டேஜில்…குளிருக்கு இதமாய் சால்வையுடன் சிம்னியின் அருகே இருந்தபொழுது கரண்ட் நின்று போக..லேசாக கன்னங்களை வருடிய மெல்லிய மூச்சுக் காற்று..யாரோ அருகிலிருக்கிற பிரமை..

ஆர்யனுக்கு அப்பொழுதுதான் இந்த விஷயத்தில் ஒரு சின்ன நெருடல் ஏற்பட்டது. அதற்குப் பிறகு ஒவ்வொரு படத்தின் பொழுதும் இது மாதிரி சம்பவங்கள் மூலமாக .’அம்மா’ வருகை தராமல் இருந்ததில்லை. ஆர்யன் ஓரளவிற்கு பக்குவமாகி விட்டான். ஆனால் அவன் அளவிற்கு மற்றவர்களால் இந்த அமானுஷ்ய சம்பவங்களை ஏற்றுக் கொள்ள முடியவில்லை…இதோ இப்பொழுது மாதிரி ஷூட்டிங் கேன்சல் செய்து..தாமதமும், அலைக்கழிப்பும்தான் மிச்சம். இன்று மாதிரி பொருள் நாசமேற்பட்டால் எந்தத் தயாரிப்பாளரும் ஆர்யனை தங்கள் படங்களில் புக் செய்வது கஷ்டம்..இதுவரை பொறுத்தது பப்பாவின் முகத்திற்காக…

****

அம்மா! மனதின் மூலையில் படர்ந்து மங்கிக் கிடந்த அம்மாவின் முகத்தை நினைவுத் திரைக்குள் கொண்டு வர முயற்சி செய்தான் ஆர்யன். பப்பா அம்மா பற்றி சொன்னதாய் அவனுக்கு நினைவில்லை…சிறு வயதில் நன்னா மட்டுமே அவளைப் பற்றி அடிக்கடி நினைவு படுத்துவாள். “என் பொண்ணுடா…பெரிய்ய நடிகை ஆக்கும்..” என்பாள் சுருங்கிய கண்களில் பெருமை வழிய. “ஏன்? பப்பா நல்ல நடிகர் இல்லையா?” கண்களுக்கு முன்னாள் விஸ்வரூபமாய் புகழின் உச்சியில் நின்றிருந்த அப்பாவை தன் ஆதர்சன நாயகனாக்கிக் கொள்ளும் குழந்தை முயற்சியில் பல தடவை கேட்டிருக்கிறான் ஆர்யன். “அவளுக்கு முன்னால் உன் பப்பா தூசு..அதானே விட்டு வைக்கலை…” சொல்லிவிட்டு தலையை குனிந்தபடி தன் சேலை முந்தானையால் கண்களின் ஓரங்களைத் துடைத்துக் கொள்வாள் நன்னா. அதற்குப் பிறகு இரவின் நீண்ட மடியில் அம்மா நடித்த படங்களின் கதைகளை அவனுக்கு சொல்லுவாள். அவனுடைய படுக்கை அறையின் முகப்பில் இருந்த அவளின் போட்டோ துணையுடன் ஜ ன்னல் வழி தெரிந்த துண்டு இரவை தன் கற்பனை திரையாக்கி அம்மாவை பல பாத்திரங்களில் பார்த்து ரசிப்பான். நன்னாவின் அம்மா குறித்த கதைகள் இரவு தூக்கத்திற்கான சுவாரஸ்யமாய், தாலாட்டாய் இருந்திருக்கின்றன. பின்னிரவில் சில சமயங்கள் அப்பா ‘அந்த’ வீட்டிலிருந்து வந்து அவன் கன்னங்களை வருடும்போழுதுகூட அந்தக் கற்பனைகளின் பிடியிலேயே இருப்பான் ஆர்யன். அப்பொழுதே நடிப்பு அவன் இரத்தத்தில் ஊறி வந்திருக்க வேண்டும்.

நடிக்கத் தொடங்கிய புதிதில் நன்னாவிடம் ஆசீர்வாதம் வாங்கப் போயிருந்தான். முதுமை என்கிற சூறாவளி சிதைத்துப் போட்ட மென் பஞ்சுப் பொதி போல் இருந்தாள் நன்னா. படுத்த வாட்டத்திலேயே உணர்ச்சி வயப்பட்டு தேய்ந்த குரலில் சொன்னாள். “என் பொண்ணை அடிச்சிக்க முடியாதுடா உன்னால…இந்த நடிப்பு அவள் உனக்குக் குடுத்துட்டுப் போன பிச்சை..” என்று.

படம் வெளி வருவதற்கு முன்னேயே நன்னா போய் சேர்ந்து விட்டாள். படம் பெரிதாய் போகவில்லை ஆனால் ஆர்யனை ரசிகர்கள் ஏற்ற்றுக் கொண்டார்கள்.. அவன் நடிகை ஜம்னாவின் மகன் என்ற கூடுதல் தகுதியோடு.

அப்படி முகவரி கொடுத்த அம்மாவா இப்பொழுது ஆவியாய் வந்து இவனை அலைக்கழிக்கிறாள்?

****

“ஆர்யன்”

கேரவானின் கதவுகள் தட்டப் பட்டதிலேயே யாரென்று புரிந்தது ஆர்யனுக்கு. திஷா!

“என்ன திரும்ப ஷூட்டிங் கேன்சலா?” கண்களை சுழல விட்டபடி ஒய்யாரமாய் நடந்து கேரவேனுக்குள் வந்தாள். நேரே கூலரைத் திறந்து பெப்சி பாட்டிலை எடுத்து ஒரு மடக்குக் குடித்தபடி அவன் நீட்டியிருந்த சேர் படுக்கையில் சரிந்தாள். சொல்லமுடியாத எரிச்சல் மூண்டது ஆர்யனுக்கு.

“ஏய் எழுந்திரு!”

சொன்னவுடனேயே வெறி கொண்டது போல் ஹிந்தியில் கத்தத் தொடங்கினாள்.

” ஏன் இது உன் சொப்பன சுந்தரி சர்மிஷ்டாவுக்கு மட்டும்தானா? நான் படுத்தால் படுக்கை கசந்து போயிடுமா?” ஆர்யனுக்கு என்ன சொல்வதென தெரியவில்லை. சர்மிஷ்டா பேரழகிதான். ஆர்யன் சற்றே அவளிடம் தன வசம் இழந்ததும் நிஜம்தான். ஆனால் பத்திரிக்கைகளில் வந்த கிசுகிசுக்கள் சற்றே அதிகம்தான். இன்டர்நெட்டில் போட்டோக்கள் கூட வெளிவந்துவிட்டது. சந்தேகப் பிராணி திஷாவுக்கு இதைக் குத்தி காண்பிக்கா விட்டால் தூக்கம் வராது.

இருக்கிற பிரச்சினையில் அவளை எதிர் கொள்கிற சக்தி ஆர்யனுக்கு இல்லை. ஹேர் ஸ்டைலிஸ்ட் காருண்யா அக்காவின் மகள் என்ற சலுகை கொடுத்தது அவன் தவறு.

“ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து என்னைப் பாக்காதேன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்?”

“ஏன்? உன் காதலின்னு என்னை எழுதிடுவாங்களா? பாண்டிச்சேரிக்கு டூர் கூட்டிட்டுப் போகும்பொழுதும், பப் இருட்டுல சில்மிஷம் பண்ணும்போது இது தெரியலியா?” திஷாவிடம் பேசி ஜெயிக்க முடியாது. ஆயாசமாய் அருகிலிருந்த சோபாவில் பொத்தென உட்கார்ந்தான் ஆர்யன்.

அப்பா நடிகர், அம்மா பெரிய்ய நடிகை, வாய்ப்புகளுக்குப் பஞ்சமிருக்காது.. என எல்லோரையும் போல அவனைப் பற்றி தப்புக் கணக்கு போடுபவள் தானே திஷாவும். அவனுடைய தனித்துவம் மற்றும் அடையாளம் குறித்த கனவுகளையும், கட்டாயங்களையும் திஷாவிடம் பகிர்ந்து கொள்ள முடியாது. தனியாய் வளர்ந்த பெண்..அதோடு அப்பாவும் கிடையாது..கருணா அக்காவின் போராட்டங்கள்தான் அவள் பார்த்த வாழ்க்கையின் கோணம்.
திஷா எழுந்திருந்து இவனருகில் அமர்ந்து தலையை இதமாய் வருடினாள்.

“என்ன மூட் சரியில்லையா?”

கம்மென்ற லாவண்டர் மணம் நாசியைத் துளைத்தது. பெண்மையின் அருகாமை அவனுள்ளே இருந்த சுய பச்சாதாபத்தை அதிகமாக்கியது. அவள் அவன் தலையை தன மென் மார்புகளுக்கு நடுவே சாய்த்துக் கொண்டபோது ஆர்யனுக்குள் மெல்லிய கேவல் எழுந்து அடங்கியது.

“என்னடா?’ என்றாள் திஷா எப்போதும்போல் இவன் அவஸ்தை புரிந்து. அவளுடைய ஆதரவான பேச்சும், கட்டாயமில்லாமல் அவள் தருகிற நெருக்கமும் மட்டுமே ஆர்யனுக்கும் அவளுக்குமான புரிபடாத உறவை நீடித்தது. இந்த இண்டஸ்ட்ரியில் இது ஒன்றும் புதிதில்லை…ஆனாலும் சமீபமாய் திஷாவிற்குள்ளும் எதிர்காலம் குறித்த ஆசை இல்லாமலில்லை.

“பேசாம ஷூட்டிங் கேன்சல் பண்ணிட்டு நம்ப குன்னூர் கெஸ்ட் ஹவுஸ் போய் ரெஸ்ட் எடு. நாலு நாளில் எல்லாம் சரி ஆயிடும்..அப்புறம் ஷூட்டிங் தொடரலாம்.”

அப்போதைக்கு ஆர்யனுக்கும் அதுதான் சரியென்று பட்டது. இது உண்மையா பொய்யா என்ற விவாதங்களுக்கு அப்பாற்பட்ட நிலையில் இருந்தது அவன் மனது. ஆவி ஜோச்யத்தின் மூலம் றியவும் முயற்சி செய்து பார்த்து விட்டான் ஆர்யன். “இளகின மனசு இருக்கரவங்களைத்தான் ஆவி பிடிச்சிக்குமாம்”, “உனக்கு மனச் சிதைவு இருக்கான்னு செக் பண்ணிப் பாருடா,” என விதம்விதமாய் நண்பர்களை அறிவுரைகள். மந்திரம், தந்திரம் என்று முயற்ச்சி செய்யலாமென்றால் அவர்கள் வந்து பழியாகக் கிடந்தாலும் அம்மா அன்று விஜயம் செய்வதில்லை. அவர்களை தங்க வைத்த ஹோட்டல் பில்லும், செல் பில்லும் எகிறியதுதான் மிச்சம். ஆனால் கூடிய சீக்கிரம் இதற்க்கு முற்றுப் புள்ளி வைக்க வில்லையென்றால் அவனின் மார்க்கெட் சரிந்து படங்கள் இல்லாமல் கூடப் போகலாம். அப்பாவிற்கு போன் செய்து ஷூட்டிங் கேன்சல் ஆனது பற்றி மட்டும் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டான்.

****

குன்னூர் கெஸ்ட் ஹவுஸ் ஆர்யனைப் பொறுத்தவரை ரொம்பவும் பிரத்யேகமானது. அம்மாவின் கடைசி நாட்களைப் பெரும்பாலும் அவள் இங்கேதான் கழித்ததாக நன்னா சொல்லுவாள்.

“இந்த முறை உன்கூடப் போவதில் அம்மாவுக்குப் பெரிதாய் இஷ்டமில்லை ஆர்யன். அம்மா முன் மாதிரி இல்லை…நிறைய கேள்வி கேட்கறா..”

மௌனமாய் இருந்த அவன் முகம் பார்த்துக் கேட்டாள் திஷா.

“நீயும் எல்லோரையும் மாதிரி தானா ஆர்யன். சமயம் வரும் பொழுது என்னைக் கை கழுவி விட்டுடுவியா?”

முகத்திலிருந்த குழந்தைத்தனம் வடிந்து ஒருவித கிலி பிடித்தது போலிருந்தாள். வெடுக்கென திரும்பிய அவன் முகத்தின் அருகாமை தாங்க இயலாதவளாய்..

“அம்மாதான் சொல்றா ஆர்யன்..” என்றாள் தலை குனிந்தபடி.
ஆர்யனுக்கு சொல்வதற்கு ஒன்றுமில்லை போல் தோன்றவே தொடர்ந்து மௌனம் காத்தான்.

கேத்தி தாண்டும் வரை திக்கித் திணறி அவள் மற்றும் காருண்யா அக்காவின் எதிர்பார்ப்புகளைக் தயக்கமாகவும், மருட்சியுடனும் கொட்டித் தீர்த்துவிட்டு சட்டென உடல் சுருக்கிப் படுத்துக் கொண்டாள். கியர் பாக்சைத் தண்டி அவன் காலில் தலை வைத்து குழந்தைப் போல தூங்கிக் கொண்டிருந்தவளைக் கண்டபொழுது மனதில் ஒருவித பச்சாதாபம் எழுந்தது ஆர்யனுக்கு.

கெஸ்ட் ஹவுஸ் போய் சேரும்பொழுது நன்றாக இருட்டி விட்டிருந்தது. கேர்டேக்கர் வேணு வந்து கதவு திறந்து சாப்பாடு கொண்டு வைத்தான். உம்மென்ற முகத்துடனே முகம் கழுவி சாப்பிட்டு திஷா பெட்ரூமிற்குள் போய் விட்டாள்.

கெஸ்ட் ஹவுஸ் ஒரு மலை முகட்டின் உச்சியில், மனித நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதியில் இருந்தது. முழுக்க முழுக்க அம்மாவின் சம்பாத்யத்தில் வாங்கியதாக நன்னா சொல்லுவாள். பாப்பா இங்கு அதிகம் வருவதில்லை. அவரின் ‘அந்த’ குடும்பத்தினருடன் தீவுகளில்தான் பெரும்பாலும் அவரின் நாட்கள் கழிகின்றன. அவனுடன் பப்பா அதிக நேரம் செலவிடாததற்க்கும் அம்மாதான் காரணம் இருக்குமோ? கேட்க வேண்டிய கேள்விகளையும், பெற வேண்டிய உரிமைகளையும் விட்டுக் கொடுத்து விட்டோமோ என்று தோன்றியது ஆர்யனுக்கு.

ஹால் கப்போர்டிற்கு எதிரே இருந்த புத்தக அடுக்கில் அம்மாவின் சுயசரிதை சட்டென கண்ணில் பட்டது.

****

புத்தகத்துடன் ஹாலில் இருந்த ஈசி சேரில் உட்கார்ந்து கொண்டான். ஸ்கூல் படிக்கிற மாணவியாய், பருவ வயது கன்னியாய் கல்கத்தாவின் வீதிகளில் பட்டாம்பூச்சியாய் அம்மா திரிந்த வயதுகளில் தொடங்கியது புத்தகத்தின் முதல் அத்தியாயம். அவளின் வளர்ச்சி, சினிமா இயக்குனர்களின் கண்ணில் பட்ட தருணம், அவளின் இயற்கையான, மிகையில்லாத நடிப்பு, முதல் படத்திலேயே விருது, புகழின் உச்சியில் அவள் சந்தித்த மனிதர்கள், மற்றும் பப்பா…. ஆர்யன் முதல் முதலாய் அம்மாவை அருகில் கண்டது போல உணர்ந்தான்.

விருதுப் படங்களிளிருந்து கமர்ஷியல் படங்ககளில் நடிக்கத் தொடங்கிய கால கட்டத்திலிருந்து சரிதையின் இரண்டாம் பாகம் தொடங்கியது. தன் முதல் ஹிந்திப் படத்தில் சர்ச்சைக்குரிய குளியலறைக் காட்சி பற்றி அம்மாவின் வாக்கு மூலமும் புத்தகத்தில் பதிவாகி இருந்தது. “…இது எனக்குள்ளிருந்த சராசரிப் பெண்ணின் ஆற்றாமையும், நடிகையின் வேட்கையையும் வேறுபடுத்திக் கொள்ள எனக்கு நானே வைத்துக் கொண்ட அக்னி பரீக்ஷை..இதில் எனக்குள்ளிருந்த நடிகைதான் ஜெயித்தாள்… ” அம்மாவின் சொற்கள் அவளின் துணிச்சலைக் காட்டியது. கை தொட முடியாத உயரத்தில் இருந்ததினால் வந்த துணிச்சல் அல்ல; உண்மையான உணர்வுகளை வெளிக்காட்டுவதில் தயக்கமில்லாத துணிச்சல்.

இரண்டு ஹிந்திப் படங்கள் முடிந்த தருவாயில் பப்பாவைப் சந்தித்ததாக சொல்லியிருந்தாள். அவள் மாதிரி புகழின் உச்சியில் இல்லாத நடிகனாய் இருந்தாலும் “என் கனவுலகத்தின் ஆதர்ச நாயகன்” என்றதில் அவளின் வாழ்க்கைத் துணையை சந்தித்ததற்கான பூரிப்புத் தெரிந்தது. பப்பாவுடன் அவளின் திருமணம் குறித்த பாகத்தைப் படித்து முடிக்கும் பொழுது திஷா வந்து ஈசி சேரின் கைப்பிடியில் நெருக்கமாய் அமர்ந்து கொண்டாள்.

அவள் ஆர்யனைப் பார்த்த பார்வையில் தன்னை அவனுடையதாக்கிக் கொள்ளும் ஏக்கம் நிறைய இருந்தது. சி-த்ரூ நைட்டியில் தெரிந்த திஷாவின் தொடை வாழைத் தண்டுபோல பளபளத்தது. ஆர்யனுக்குள் புதியதாய் ஒரு படபடப்பு வந்து அமர்ந்து கொண்டது. சட்டென புத்தகத்தை மூடி வைத்து விட்டு திஷாவை ஒருபுறம் கட்டி அணைத்தவாறே சேரை விட்டு எழுந்தான்.

அவர்கள் இருவரின் மூச்சுக் காற்று மட்டுமே அவர்களின் தேடலுக்குப் பின்னணியாக.. திஷாவை இறுக அணைத்து அவளின் இதழ்களில் இதழ் பதித்த பொழுது… அம்மாவின் நினைப்பு ஆர்யானுக்குள் இடறியது. இத்தனை கனவுகளுடன் தொடங்கிய அம்மாவின் வாழ்க்கை ஏன் பரிதாப மரணத்தில் முடிந்தது? இவனின் மாமூலான முரட்டுத் தனத்தை எதிர்பார்த்தவளாய் திஷா நைட்டியை தலை வழியே கழட்டிக் கொண்டிருந்தாள். அம்மாவின் குளியலறைக் காட்சி ஆர்யனுக்கு நினைவில் வந்தது. திஷா போல அம்மாவும் தன்னை இழந்த தருணங்கள் இருந்திருக்குமா? அதைத்தான் சராசரிப் பெண்ணிற்கும் நடிகைக்குமான போராட்டமாய் அம்மா சொல்லிவிட முனைந்தாளா? அம்மாவை மரணத்திற்கு நெட்டித் தள்ளிய காரணம் எதுவாக இருக்க முடியும்? இன்று அவளின் ஆவி ஜனனத்திக்கும் அதற்க்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா?

கேள்விகள்..கேள்விகள்…கேள்விகள்…ஆர்யானுக்குள் நிறைய கேள்விகள்..

நனைந்த துணி போல அவன் மீது படர்ந்த திஷாவின் கழுத்துச் சரிவில் சுவர்க்கம் தேடுகிற முயற்சியில் கேள்விகளைப் புதைக்க முயன்றான் ஆர்யன். சட்டென சூழ்நிலையில் ஒரு இறுக்கம் படர்ந்தது. காற்றும் கால் பதித்து நடப்பது போல ஒரு இறுக்கம். ஜன்னல் கதவுகள் படபடவென அடித்துக் கொள்ள ஆர்யன் மெல்ல திஷாவை தன் வசமிடமிருந்து விலக்கினான். திஷாவும் இவன் மனது புரிந்து விலகி, படுக்கை ஓரமாய் விசிறி எறிந்திருந்த நைட்டியைத் தேடி மார்போடு போர்த்திக் கொண்டாள்.

இரவு நீண்டது. அடர்ந்த இருளின் பிடியில் அந்த விசாலாமான படுக்கையின் இந்த ஓரத்தில் அவன் அம்மவுக்காக காத்திருக்க…அந்த ஓரத்தில் திஷா இவனுக்காக காத்திருந்தாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *