கம்பி மேல் நடக்கிறார்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: November 19, 2022
பார்வையிட்டோர்: 3,031 
 

(1983ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

‘பளீர், பளீர், பளீர், ஒவ்வொரு பளீருக்கும் ஒரு முக்கல். வலது கையை இடது கையில் வைத்து அழுத்திக் கொண்டு உடம்பை ஒற்றைச் சுழி கொம்பு போல் வளைத்தபடி சண்முகம் அவன் நாற்காலியில் வந்து உட்கார்ந்தான்.

ஒரு நொடி, என்னைப் பார்த்துவிட்டு மேசையில் கவிழ்ந்து கொண்டான். மேசைக்குக் கீழ் வலது கையை இடது கையால் அழுத்தித் துடைத்துக் கொண்டிருந்தான். கண்களைப் போலவே கையும் சிவந்திருந்தது. மெல்ல விசும்பினான். மூக்கில் சளி ஒழுகியிருக்க வேண்டும். தலையைத் தூக்காமலே, “இசுக்”கென உறிஞ்சிக் கொண்டான். விம்மல் நிற்கவில்லை.

என் மனம் கசிந்து கொண்டு வந்தது. முரட்டுப் பிரம்பின் மூன்று அடிகளை அந்தக் குச்சி உடம்பு தாங்கமுடியாமல் குலுங்கிக் கொண்டிருந்தது.

அரக்கன், என்ன – ஏது என்று கேட்க வேண்டாம்? வந்து நிற்கும் எல்லா பிள்ளைகளுக்கும் சராசரியாக மூன்று முரட்டடி கொடுத்தனுப்பி விடுவதுதான் நியாயமா? இதற்காகத்தான் தலைமை ஆசிரியருக்கு மட்டும் அடிக்கின்ற அதிகாரத்தை அரசாங்கம் கொடுத்திருக்கிறதா?

அனுப்பி வைத்த நான், நானே அடிபட்டது போல் வெந்து வாசலில் மற்றொரு கொண்டிருக்கிறேன். அடித்தவர், துணையாசிரியரோடு ஏதோ சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார்.

வகுப்பு ஒரே அமைதியாக இருந்தது. எல்லாக் குழந்தைகளும் என்னையே வைத்த விழி வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

நான் பாடம் நடத்துவதுபோல் நடிக்கத் தொடங்கினேன்.

இடைவேளைக்கு மணி அடிக்கப்பட்டது. மாணவர்கள் தாவியெழுந்து ஓடினார்கள். சண்முகம், அவன் பள்ளி வராத இரண்டு நாட்களுக்கான பாடங்களை அவன் நண்பனின் நோட்டுப் புத்தகங்களைப் பார்த்து எழுதிக் கொண்டிருந்தான்.

நான் மெதுவாக அவனிடம் வந்து நின்றேன்.

“சண்முகம்…”

அவன் மெதுவாக எழுந்து நின்றான். அவனுடைய பணிவும் கெஞ்சுகின்ற பார்வையும் என்னை வதைத்தன.

“ஏன் திங்களும் செவ்வாயும் பள்ளிக்கூடம் வரவில்லை?”

அவன் மௌனமாக நின்றான். இப்படித்தான் காலையிலும் நின்றான். நான் தோளில் கையை வைத்து ஆதுரமாகத் தடவிக் கொடுத்தேன்.

“உடம்புக்குச் சரியில்லையா?”

அவன் மெதுவாகத் தலையை அசைத்தான்.

“இதை முன்பே சொல்வதுதானே, என்ன உன் உடம்புக்கு?” என்றேன்.

“எனக்கு ஒண்ணுமில்லங்க சார். எங்க அப்பாவுக்குத்தான் பல்வலி”

“அப்பாவுக்குப் பல்வலின்னா உனக்கென்னப்பா?”

“சார், எங்க அப்பாவுக்குப் பல்வலி வந்தா, ரொம்பத் துடிச்சிப் போயிடுவாரு. அடிக்கடி பல்வலி வரும். அப்படியே வேலைக்குப் போவாரு. நான் அவர்கூடப் போனாத்தான் அவரால் வேலை செய்ய முடியும்…”

“இன்னிக்கு….”

“இன்னிக்கு எங்கப்பா வேலைக்குப் போகல சார். ரொம்பப் பல்வலி. எங்கப்பா வீட்ல இருக்கிற அன்னக்கி நான் பள்ளிக்கூடம் வருவேன். அவர் வேலைக்குப் போற அன்னைக்கு நான் அவர்கூடப் போவணும். நான் இல்லாட்டி அவரால மரம் வெட்டிப் பால் எடுக்க முடியாதுங்க சார்…”

அதற்கு மேல் அவனிடம் என்னால் எதுவும் பேச முடியவில்லை. அவன் அடிபட்டதற்கு நானே முழுக்காரணம் என்று நொந்து கொண்டு ஆசிரியர்களுக்கான ஓய்வறைக்குச் செல்ல முயன்றேன். அப்போது இன்னொரு சிறுவன் சன்னல் வழியாகச் சண்முகத்தை எட்டிப் பார்த்தான். நான் வெளியே நடந்தேன். சட்டென நான் திரும்பிப் பார்த்தபொழுது சண்முகம் ஒரு காகிதப் பொட்டலத்தை அச்சிறுவனிடம் நீட்டிக் கொண்டிருந்தான். நான் பார்த்ததும் அவன் பயந்திருக்க வேண்டும். பொட்டலம் நழுவி விழுந்தது. அதற்குள்ளிருந்து மரவள்ளிக் கிழங்குத் துண்டுகள் சிதறியோடின. ஆனால் சிறுவன் எல்லாத் துண்டுகளையும் பொறுக்கியெடுத்துக் கொண்டு ஓடினான்.

“என்னங்க சார், வந்து ரெண்டு வாரமாவுது. இன்னும் எங்க பள்ளிக்கூடத்துப் பழக்கவழக்கமெல்லாம் புரிஞ்சிக்காம இருக்கிறீங்களே. இங்க இடைவேளைக்கு அஞ்சு நிமிஷம் முன்னால மணியடிப்போம். அஞ்சி நிமிஷம் கழிச்சித்தான் இடைவேளையை முடிப்போம். இடைவேளையில் யாரும் பாடம் நடத்த மாட்டோம். நீங்க என்ன, மணியடிச்சி பத்து நிமிஷமாவுது, இன்னும் பாடம் நடத்திக்கிட்டு இருக்கீங்க….” சக ஆசிரியர் சேகரன், விட்டால் பேசிக் கொண்டே இருப்பார் போல் தெரிந்தது.

நான் உடனே சண்முகத்தைப் பற்றிச் சொன்னேன்.

“அவன்தானே சார், அவன் போன வருஷம் அஞ்சாம் வகுப்பிலேயிருந்து அப்படித்தான். வாரத்திற்கு மூணு நாளைக்குத்தான் பள்ளிக்கூடத்திற்கு வருவான். எங்களுக்கு அனுப்பி அனுப்பிச் சலிச்சிப் போச்சு, அவருக்குக் குடுத்துக் குடுத்துச் நாங்க அவர்கிட்ட சலிச்சி போச்சு. இப்ப அவனை அனுப்பறதேயில்லை…”

“அப்படின்னா, வந்தவன் யாருன்னு கூடத் தெரியாமலா அந்த மனுஷன் போட்டு அடிச்சான்…” எனக்குள் நான் கேட்டுக் கொண்டேன். சண்முகத்தின் தகப்பனார் பற்றிய பேச்சு வந்தது.

“ஏன், இங்க தோட்டத்தில் கிளினிக் இருக்குந்தானே…?”

“சார், இந்த கிளினிக்கில மூனே மூணு மருந்துதான் இருக்கும். மேல பூசிக்க மஞ்சளா ஒரு மருந்து. எல்லாக் காயத்துக்கும் புண்ணுக்கும் அதுதான். உள்ளே முழுங்க பனாடால் மாத்திரை, குடிக்க அல்லூறு தண்ணி மாதிரி ஏதோ சளி மருந்துன்ற பேர்ல கிடைக்கும்”.

“கொஞ்சம் வேண்டிய ஆளுன்னா ஊசி போடுவாங்க. பெரும்பாலும் ஊசி போட்ட இடத்தில் ஒரு கட்டி வரும். கட்டியைப் பிளந்திட்டு அந்த மஞ்ச மருந்தை வைச்சிக் கட்டுவாங்க. அதனால் ஊசி போட்டுக்கிறதிற்கு யாருக்கும் தைரியம் வராது….”

கடைசி மணி அடித்தது, ‘நன்றி சார்’ என்று முதல் வார்த்தையை வகுப்பறையிலும் அடுத்த வார்த்தையை வகுப்புக்கு வெளியேயும் சொல்லிவிட்டு மாணவர்கள் பறந்தார்கள். சண்முகம் அந்தக் கூட்டத்தில் பறக்கவில்லை. அப்படிப் பறக்க அவன் உடலில் வலு இல்லையோ என்னவோ?

“சண்முகம்…, என் மோட்டார் சைக்கிள்ல ஏறிக்க, உங்க வீட்டுக்கு நானும் வர்றேன்…” என்றேன்.

சண்முகம் தயங்கி நின்றான். முகம் திகைத்துப் போயிருந்தது. ‘நீங்க எங்க வீட்டுக்கு வரவேண்டாங்க சார்’ என்றுதான் அவன் எண்ணுகிறான் என்று உறுதியாக நம்பினேன் நான்.

“சண்முகம் பயப்படாதே, ஏறிக்க…” என்றேன் மீண்டும்.

“பரவாயில்லைங்க சார்…” தொண்டையைப் போல குரலும் காய்ந்து போயிருந்தது.

“நான் உங்கப்பாவைப் பார்க்கணும். உங்க வீடு எனக்குத் தெரியாதே, அதுக்குத்தான் உன்னைக் கூப்பிடறேன்…” என்றேன் அழுத்தமாக. அவன் மோட்டார் சைக்கிளில் ஏறி உட்கார்ந்தான்.

சண்முகம் வழியைக் காட்டிக் கொண்டே வந்தான். அவன் காட்டிய வழியில் ஓட்டியவாறே தொழிலாளர் குடியிருப்புகளைப் பார்த்துக் கொண்டே சென்றேன்.

பச்சை சாயம் பூசப்பட்ட வீடுகள். நெருங்கிப் பார்த்தபோதுதான் தெரிந்தது; அந்த வீடுகளின் ஆயுளை மறைப்பதற்குப் பச்சைப் பூச்சு கடினமாய் முயன்று கொண்டிருந்தது

சண்முகம் வீட்டின் முன் போய் நின்றேன். என் மோட்டார் சைக்கிளிலிருந்து சண்முகம் இறங்கியதைக் கண்டதும் அக்கம் பக்கத்துப் பெரியவர்களும் குழந்தைகளும் எட்டிப் பார்த்துவிட்டு அப்படியே மலைத்துப் போய் நின்றனர். எல்லார் முகங்களிலும் கேள்விக் குறிகள் தொங்கின.

சண்முகம் இறங்கி வீட்டுக்குள் ஓடினான். வீட்டின் உட்புறம் கன்னங்கரேலென்றிருந்தது. யாரும் என்னை வரவேற்கவில்லை. அதனால் வீட்டுக்குள் போக முடியவில்லை. வெளியே என்னைப் பார்த்தவர்கள் இன்னும் பார்த்துக் கொண்டே நின்றனர். அதனால் வெளியே நிற்கவும் முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தேன். சண்முகம் வீட்டுக்குள் போனவன்தான், வெளியில் வரவில்லை. வீட்டில் யாரிடமோ குசுகுசுவென்று பேசிக் கொண்டிருந்தான்.

அப்போது பரபரப்போடு ஒரு பெண் என்னை நோக்கி வந்து கொண்டிருந்தாள்.

“என்னம்மா கிடைச்சுதா…” என்னைப் பார்த்துக் கொண்டிருந்த பக்கத்து வீட்டுக் கிழவி அந்தப் பெண்ணைப் பார்த்துக் கேட்டாள்.

“இல்லைம்மா, எல்லாருக்கும் வேல இருக்கும் போலிருக்கே”,

“அவர் மோட்டார்லயே ஏத்தி அனுப்பிடேன்…” என்ற கிழவியின் வார்த்தைகளைக் கேட்டதும் நான் திடுக்கிட்டேன். இருக் கின்ற சூழ்நிலையோடு ஒட்ட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் என்மேல் என்னைக் கேட்காமலேயே ஏதோ பொறுப்பையும் ஏற்றி விடுகிறாளே…. என்று நான் குழம்பிக் கொண்டிருந்தேன்.

“ஐயா, நீங்க நல்லா இருப்பீங்க, என் வூட்டுக்காரரு பல்வலியால துடிக்கிறாரு, இங்க இருக்கிற ஒரு காடிக்காரனும் காடி பழுதாப் போச்சி, வரமுடியாதுன்னுட்டான்”.

யாரிடம் உதவி கேட்கிறோம் என்பதைக் கூட எண்ணிப் பார்க்க முடியாதபடி அந்தப் பெண்ணின் துன்பமும் துடிப்பும் இருந்தன. முன்பின் பழக்கமில்லாத நானும், நீண்ட நாள் பழகியவனைப் போலத் திடீரென மாறிவிட்டேன்.

“சரிம்மா, அவரைக் கூட்டியாங்க” என்றேன்.

சிறிது நேரத்தில், வலது கன்னத்தை அழுத்திப் பிடித்துக் கொண்டு, ஒரு பக்கமாகச் சாய்ந்த பரட்டைத் தலையோடு ஓர் உருவம் வெளியே வந்தது. நான் மோட்டார் சைக்கிளில் உட் கார்ந்து கொண்டதும் அவரும் தட்டுத் தடுமாறி ஏறி உட்கார்ந்து கொண்டார். என்னை இறுக்கிப் பிடித்துக் கொண்டார். சண்முகம் அவருடைய அடையாளக் கார்டை என்னிடம் கொடுத்தான். சண்முகத்தின் தாயார் என்னென்னவோ பேச நினைத்திருக்கலாம். நான் அந்நியன் என்பதை இப்போதுதான் உணர்ந்தாளோ என்னவோ பேசாமல் இருந்தாள்.

பல் வைத்தியரிடம் அவரைச் சோதனைக்கு அனுப்பிவிட்டு வெளியே நான் நின்று கொண்டிருந்தபோது சண்முகத்தின் தாயாரின் முகமே என்முன் நிழலாடிக் கொண்டிருந்தது. தோட்டத்தின் ஒவ்வொரு ஆணும் சண்முகத்தின் அப்பாவைப் போலவும், ஒவ்வொரு பெண்ணும் அவனுடைய அம்மாவைப் போலவுமே எனக்குத் தெரிந்தனர்.

தோட்டத்தில் ஒரு பக்கமாய் ஒதுங்கியிருந்த பள்ளிக் கூடத்திற்கு ஒதுங்கியபடியே போய் வந்து கொண்டிருந்த எனக்குத் தோட்டத்திற்குள் நுழைந்த முதல் நாளே கிட்டிய அனுபவம் நெஞ்சைக் கீறிப் புண்ணாக்கிவிட்டிருந்தது. ‘இருட்டில் வாழும் குருட்டு வௌவால்களே’ என்று புதுக்கவிதைகளில் அடிக்கடி வரும் ஒரு தொடருக்கு இப்போது ஒரு புதுப்பொருள் எனக்குத் தெளிவாகிக் கொண்டு வந்தது.

அவருக்கு வாயில் புற்றுநோய் என்று நான் முதன் முதலில் கேள்விப்பட்டதும் எனக்குள் சில்லென்று ஏதோ பாய்ந்தது.

“கொஞ்சம் முன்னாடியே நீங்க ஆஸ்பத்திரிக்கு வந்திருக்கணும்….” என்றேன், விஷயத்தை அவரிடம் சொல்லாமலேயே.

“எப்படிங்க முடியும், வீட்டில இருந்தா, மாசத்துக்குப் பத்து நாளாவது பேரு போட்டு பிள்ளைங்களுக்குக் கஞ்சி ஊத்தலாம். படிக்க வைக்கலாம். இங்க வந்து படுத்துக்கிட்டா அது முடியுங்களா? அதோட எஸ்டேட் கிளினிக்கலதான் மருந்து குடுக்கிறாங்களேன்னு இருந்திட்டேன்… பெரிய டாக்டர் கூடப் பார்த்துட்டு ஒண்ணும் இல்லே, நீ வேலைக்குப் போலான்னுட்டாரு…” அவர் பேசுவதற்கு மிகத் துன்பப்பட்டார். நான் பேசுவதை நிறுத்திக் கொண்டேன்.

இரண்டு நாட்கள் சிரம்பான் பெரிய மருத்துவமனையில் இருந்த பின்னர் தனக்கு வாய்த்தது புற்றுநோய்தான் என்பதை எழுத்துப்பூர்வமாக எழுதி வாங்கிக் கொண்டு கோலாலம்பூர் பெரிய மருத்துவமனைக்கு மாற்றலானார் சண்முகத்தின் தகப்பனார்.

பத்துப் பதினைந்து நாட்கள் இருக்கும்.

“அவர் எப்படி இருக்கார்னு போய்ப் பார்த்திட்டு வர்றீங்களா வாத்தியாரய்யா” என்று சண்முகத்தின் தாயார் பள்ளிக்கூடத்திற்கே வந்து கேட்டுக் கொண்ட போது என்னால் அதைத் தட்ட முடியவில்லை. “கொஞ்சம் தேவலாங்க” என்று பார்த்துவிட்டு வந்து சொன்னேன். ஆனால் நான் பொய் சொல்கிறேன் என்று எனக்கு மட்டும் தெரியும். பிறகு ஒரு தடவை சண்முகத்தையும் அவன் தாயாரையும் ஆஸ்பத்திரிக்கு அழைத்துப் போய் வந்ததும் உண்டு.

“இந்தத் தோட்டத்திலேயே பொறந்து வளர்ந்தவங்க நானு, இதைத் தவிர வேற எடமே தெரியாது. ஐயா இல்லாட்டி எங்கள ஆஸ்பத்திரிக்குக் கூட்டிக்கிட்டுப் போவக்கூட நாதியில்லை. இவரைக் கட்டிக்கிட்டது எங்க வீட்டுல யாருக்கும் ‘புடிக்காமப் போயிடுச்சி, எல்லா ஜாதித் தகராறுதான். அப்பவே, என்னை இங்க விட்டுட்டு எங்க குடும்பத்தவங்க எல்லாரும் வேற தோட்டத்திற்குப் போயிட்டாங்க…” வழியில் சண்முகத்தின் தாயார் சொன்னது இது.

‘அறிவிப்பு இது தனியார் உடைமை. உத்தரவின்றி உள்ளே நுழையக்கூடாது’ என்ற சிவப்பு நிற போர்டைப் பார்த்ததும் சட்டென மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டேன். தார்ச் சாலையிலிருந்து மூன்று மைல் தூரம் மண்சாலையில் வந்து போர்டைப் பார்த்ததும் நின்ற பின் எங்கே போய் அனுமதி கேட்பது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தேன். ‘ஙொய்’ என்ற வண்டின் ஓசை. கண்ணுக்கெட்டிய தொலைவில் ரப்பர் மரங்கள்.

போர்டை மீண்டும் மீண்டும் படித்தேன். எங்கே உத்தரவு கேட்பது என்று குறிப்பிடவில்லை. ‘மேனேஜ்மெண்டார் உத்தரவு’ என்ற மட்டும் கீழே போட்டிருந்தது. அந்தப் போர்டைத் தவிர தடுத்து நிறுத்துவதற்கு பெரிய “கேட்” எதுவும் இல்லை. சாலைக்கு வலப்பக்கமும் இடப்பக்கமும் எப்பொழுதோ முள்வேலிகள் இருந்ததற்கான தடயங்கள் தேய்ந்து போயிருந்தன. வேலிக்கட்டைகள் இற்றுச் சாய்ந்திருந்தன. முள்வேலிகள் தொய்ந்து போயிருந்தன.

நல்லவேளை, பக்கத்தில் தமிழர் ஒருவர் மரம் வெட்டிக் கொண்டிருந்தார். அவரிடம் போய் உள்ளே போவதற்கு எப்படி அனுமதி பெறுவது என்று கேட்டேன். அவர் திருதிருவென்று விழித்தார். நான் அந்தப் போர்டைக் காட்டி மீண்டும் கேட்டேன்.

தோட்டத்திற்குள் யார் நுழைந்தாலும் “மேனேஜ் மெண்டார்” அனுமதி கேட்டுத்தான் நுழைய வேண்டும் என்ற விவரத்தை முதன்முதலில் நான் சொல்லித்தான் கேட்பவர்போல், அவர் என்னை விநோதமாகப் பார்த்தார்.

“ஆபீஸ் உள்ளே இருக்குங்க. அங்க போய்த்தான் கேக்கணும்” என்றார்,

உள்ளே நுழைந்துவிட்டு அப்புறம்தான் அனுமதி கேட்க வேண்டுமா என்று எண்ணிக்கொண்டு உள்ளே நுழைந்தேன். யாராவது தடுத்தால் பார்க்கலாம் என்று எண்ணிக் கொண்டேன்.

சண்முகத்தின் குடும்பத்தோடு எனக்குத் தொடர்பு ஏற்பட்டு, அவனுடைய தகப்பனாரைக் கோலாலம்பூர் மருத்துவ மனையில் விட்டுவிட்டு வந்த பின் தோட்டத் தமிழர்களின் பிரச்சனைகளைப் பற்றிப் பேசுவதே எங்கள் இடைவேளை நேர வேலையாயிருந்தது. சேகரன் தோட்டத்திலேயே பிறந்து வளர்ந்ததால் பல விஷயங்களைத் தெளிவாகச் சொன்னார்.

மோசமான குடியிருப்பு, அசுத்தமான சுற்றுப்புறம், நிர்வாகத்தினரின் சுரண்டல், இப்படி ஒவ்வொரு நாளும் உதாரணங்களோடு விவரிப்பார் சேகர். மட்டமான கர்ப்பத்தடை மருந்தைத் தோட்டக் கிளினிக்கில் இலவசமாகப் பெறும் பெண்களில் கைகால் வீங்கிப் போனவர்களைப் பற்றியும் பருத்துப் போனவர்களைப் பற்றியும், குச்சிபோல் இளைத்துப் போனவர்களைப் பற்றியும் சேகர் கூறும்போது பல சமயங்களில் என்னால் நம்ப முடியாததாய் இருக்கும்,

“தோட்டப்புற மக்களைக் கவனிக்க தொழிற்சங்கமும் தொழிலாளர் ஒப்பந்தங்களும் இருக்குதே” என்றேன்.

சேகர் விழுந்து விழுந்து சிரித்தார்.

“சங்கம், முதலாளி, அரசாங்கம் இப்படி முத்தரப்புத் தலைவர்களும் கட்டிப் பிடிச்சி, கைகுலுக்கிக் கையெழுத்துப் போட்ட ஒப்பந்தம் பத்திரமா இரும்புப் பெட்டியில இருக்கும். வேலியே பயிரை மேயும்போது ஒப்பந்தப்படி நடக்குதான்னு யாரு கண்காணிக்கிறது?”

அப்போது சண்முகம் தயங்கியபடியே வந்து நின்றான். நேற்று அவன் பள்ளிக்கூடத்திற்கு வரவில்லை. இன்றும் வரவில்லை. இப்போது இடை வேளையின்போது ஏன் வந்தான்? காலில் பாதத்தைச் சுற்றித் துணி கட்டியிருந்தான்.

“காலில் என்ன சண்முகம்?” என்றேன்.

“நேற்று உளி குத்திப்புடிச்சிங்க சார்…”

“மருந்து கட்டினியா?”

“நேத்து கிளினிக்கில மருந்து கட்டினாங்க சார்…”

“சரி, ஏன் நேத்தும் இன்னைக்கும் பள்ளிக்கூடம் வரல…?”

“நான் இனிமே பள்ளிக்கூடத்திற்கு வரமாட்டேங்க சார்…” என்றான் அவன். கண்கள் பனித்திருந்தன. அவனுக்குப் படிப்பு வரும். படிக்கவும் விரும்பினான்.

“எங்க அம்மா கூட வேலைக்குப் போகனுங்க சார், அவங்களால ஒண்டியா மரம் வெட்ட முடியலையாம்.”

சண்முகம் மௌமாக நின்றான். நானும் மௌனமாக நின்றேன். சிறிது நேரம்.

“பெரிய சாரு கிட்ட சொல்லிட்டுப் போ” என்று சேகர் சொன்னார். நான் கூப்பிட்டுச் சொன்னேன். “ஒழுங்கா புண்ணுக்கு மருந்து கட்டு, செப்டிக் ஆயிடும்…”

திரும்பிப் பார்த்த சண்முகம் தலையைத் தொங்கப் போட்டபடியே போய்விட்டான்.

“அவங்க அம்மா ஒரு ஆஸ்துமா கேஸ்” என்றார் சேகர்.

அன்றைய இடைவேளையில் என்னுடைய ‘ப்ளாஸ்கை’ நான் தொடவில்லை.

வீங்கிப் போயிருந்த சண்முகத்தின் கால் இன்னும் கண்ணிலிருந்து மறையவில்லை. சுற்றியிருந்த துணியில் சீழ்வடிந்து காய்ந்து போயிருந்தது. கட்டுக்கு மேலும் கால் கறுத்துப் போயிருந்தது. அவன் நடப்பதற்கு அந்தக் கால் பயன்படவில்லை. ஊன்றியும் ஊன்றாமலும் நொண்டியடித்துக் கொண்டே போனான்.

ஒரு மாதத்திற்குப் பிறகு ஒருநாள்.

“சலார்” என்ற ஓசையைக் கேட்டுத் திடுக்கிட்டுத் திரும்பினேன். பள்ளிக்கூடத்தை ஒட்டி ஓடும் ஆற்றிலிருந்து தட்டுத் தடுமாறி எழுந்து கரையேறிக் கொண்டிருந்தார் வெட்டியான் வேலு. ஐந்து அங்குல அகலத்தில் அமைந்த ஒற்றை மரப் பாலத்தில் நடந்து ஆற்றைக் கடந்தால்தான் பள்ளிக்கூடத்திற்கு வர முடியும். தவறி விழுந்த வேலு தெப்பமாக நனைந்து போயிருந்ததால் வந்த சேதியைச் சொல்லாமலேயே போய்விட்டார்.

ஒரே சமயத்தில் இரண்டு வகுப்புகளுக்குத் தாவித் தாவிப் பாடம் நடத்த வேண்டியிருந்ததால் “யார் செத்துப் போயிருப்பார்கள்” என்று என்னால் யோசித்துக் கொண்டிருக்க முடியவில்லை.

பள்ளி விடும் வரை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. வேலு – அவரேதான் ஓடும்பிள்ளையும், வந்து விழுந்து எழுந்து போன விவரத்தைச் சேகரிடம் சொன்னேன்.

“யார் செத்துப் போயிருப்பா” என்று அவரால் யூகிக்க முடியவில்லை. அதை மறந்துவிட்டு வழக்கம் போலத்துண்டும் துணுக்குமாய்த் தோட்டப்புறத்தைப் பற்றித் தகவல் கொடுத்தார்.

“எலக்ஸன் சமயத்தில் நம்ப மாண்புமிகுவெல்லாம் தேர்தல் பிரச்சாரம் பண்ண ள்ள வருவாங்க. நேராப் போய் மேனேஜரைப் பார்த்து அனுமதி கேட்டுக்கிட்டுத்தான் தோட்ட வீடுகளுக்குப் போவாங்க. “தராசு”ன்னா கைகுலுக்கி, குட்லக் சொல்வாரு. “கூலி”ங்ககிட்ட நானே சொல்றம்பார். தொரை சொல்ற ஆளுக்குத்தான் ஓட்டுப் போடணும். இல்லேன்னா வேலை இல்லைம்பார். அப்புறம் என்ன, மாண்புமிகு வரும், தொரை பங்களாவுக்குப் போய்ட்டுத் திரும்பிடும்.”

“நம்ம தலைவர்கள் இருக்காங்களே அவங்க ரொம்ப நேர்மையானவங்க. ரொம்ப நன்றியுள்ளவங்க. அஞ்சு வருஷத்துக்கு ஒருமுறை நாம் அவங்களுக்கு வாக்களிக்கிறோம். அவங்களும் பதிலுக்கு நமக்கு வாக்களிச்சிக்கிட்டே இருக்காங்க.”

ஐந்து அடி உயர பிளைவூட் தடுப்புத்தான் எங்கள் வகுப்பு அறைகள், ஆசிரியர்கள் நான்கு பேரும் எழுந்து நின்றால் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே பாடம் நடத்தலாம். தலைமை ஆசிரியர் எழுந்து நின்றதும் நானும் சேகரும் அவரவர் வகுப்புகளுக்குத் திரும்பினோம்.

வேலு திரும்பவும் வருவாரா?

வந்தார். பள்ளி கலையும் நேரம்.

வேலு பொதுவாகச் சேதியைச் சொன்னார். பின் எனக்கும் தனியாகக் கொஞ்சம் சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

ஒரு புதிய உலகத்திற்குள் கொண்டு சேர்ப்பது போல் டாக்ஸி கோலாலம்பூருக்குள் நுழைந்தது. தோட்டமும் பட்டணமும் இருட்டும் வெளிச்சமும் போல் தோன்றுகின்றன.

“டாசார் எக்கனோமி பாரு -உத்தோக் செமுவா”

“புதிய பொருளாதாரக் கொள்கை – அது எல்லாருக்கும் உரியது.”

“இனவேறுபாடின்றி ஏழ்மையை ஒழிப்பது புதிய பொருளாதாரக் கொள்கையின் நோக்கங்களின் ஒன்று….” இன்னும் என்னென்னவோ பரீட்சைக்குப் படித்ததெல்லாம் இப்போது நினைவுக்கு வந்தன.

ஆஸ்பத்திரியிலிருந்து தோட்டத்திற்குத் திரும்பும்போது லேசாக இருட்டிவிட்டிருந்தது.

“வாத்தியாரய்யா, எங்கங்க அவரு?” என்று பதறியபடி கேட்டாள் சண்முகத்தின் தாயார்.

நான் ஆஸ்பத்திரியில் நடந்ததைக் கூறினேன். அவள் பக்கத்தில் இருந்த ஒரு கிழவியைக் கட்டிப் பிடித்துக் கொண்டு கதறினாள்.

“அவர் ரொம்ப சீரியஸ். டாக்டர் வெளிய விட முடியாதுன்னுட்டார்”

“அவர் வர்றேன்னு பிடிவாதம் பிடிக்கலையா?” சேகர் கேட்டார்.

“இல்லை”

“அவர்தானே கொள்ளி போடணும்… அவர் இல்லாம எப்படி…” என்றபடி வேலு வேறு வேலை பார்க்கப் போய்விட்டார்.

என் கண்களை விட்டுச் சண்முகம் போக மறுத்தான்.

– தமிழ் ஓசை 3-11-83, 25 வெள்ளி பரிசுபெற்ற சிறப்புச் சிறுகதை, கம்பி மேல் நடக்கிறார்கள், முதற் பதிப்பு: 2006,சிவா எண்டர்பிரைஸ், கோலாலம்பூர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *