கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: September 14, 2014
பார்வையிட்டோர்: 14,370 
 

“புள்ளத்தாய்ச்சி பொண்ணு இப்டி கூன் போட்டு உட்காரதடீ..” செல்லமாக அதட்டினாள் கனகு. “அத்தே.. சக்கரைபொங்கலுக்கு பெரிய படிக்கு ரெண்டு படி அரிசி போட்டா சரியாயிருக்குமாத்தே..?” கனகுவிடம் கேட்டாள் நல்லமுத்துவின் மருமகள். “எக்கா சோத்தை வடிச்சு வுட ரெண்டு தட்டு கூடை போதுமில்ல..?” என்ற தேவானையை நல்லமுத்து அதட்டினான். “அதான் தவுசுப்புள்ள லிஸ்ட் போடுறாப்பல அண்ணி சொல்லிடுச்சே.. அப்பறமும் என்னா அதுக்கிட்ட தொணதொணத்துக்கிட்டு.. வளைவிக்காரன் வந்துட்டான்.. தேவைப்பட்டதை அது பாத்து எடுத்து வைக்குமில்ல..”

“பாட்டீ..” திரைசீலையை விலக்கி விட்டு தூக்கக்கலக்கத்துடன் உள்ளே நுழைந்த பேத்தி நித்யா அனிச்சையாக கனகுவின் மேல் விழுந்தாள். ‘அட.. கனவு கண்டேனாக்கும்..’ நித்யாவை அணைத்துக் கொள்ள கையை அசைக்கும் போது தான் முதுகு வலியின் தீவிரம் தெரிந்தது கனகுவுக்கு. ‘பாழாப்போன முதுவு வலி காலங்காத்தாலயே இப்டி கொல்லுதே..’ சிறிது நேரம் மல்லாந்து படுத்து ஆசுவாசம் செய்துக் கொள்ள தோன்றியது. “செத்த நவுருடா.. பாட்டி நேரா படுத்துக்கறன்..” நித்யாவிடம் பேசிக் கொண்டே அறையில் இருந்த கடிகாரத்தை பார்த்தாள். மணி ஆறை தாண்டியிருந்;தது. காற்றில் ஆடிய திரைசீலையின் இடுக்கில் எதிர் அறை சாத்தியிருந்தது தெரிந்தது.

தீபாவும் மாப்பிள்ளையும் இன்னும் எழுந்துக் கொள்ளவில்லை போலிருக்கிறது. மூன்றாம் வகுப்பு படிக்கும் பேத்தி நித்யா அடிக்கடி பாட்டியின் அறைக்கு ஓடி வந்து விடுவாள். அதனாலேயே கதவை சாத்திக் கொள்ள வேண்டியிருந்தது. கதவு சாத்தியப்படியே இருக்க நித்யா வந்து விட்டாள். தீபா கூட இப்படிதானே இருப்பாள். மகளை நினைத்துக் கொண்டாள் கனகு. ஒரே மகள் தீபா. அது குறித்து கனகுவின் கணவன் ராமசாமிக்கு பெரிய குறை தான். தரித்த சிசுவெல்லாம் என்ன காரணத்தாலோ தங்காமலேயே போய் விட்டது. தீபா தரித்ததிலிருந்து பிறந்தது வரைக்கும் கனகுவை உள்ளங்கையிலேயே ஏந்திக் கொண்டார் ராமசாமி. உள்ளுர் பள்ளியில் இடைநிலை ஆசிரியையாக வேலை பார்த்து வந்த கனகு குழந்தைக்காகவே இரண்டு வருடங்கள் விடுப்பு எடுத்துக் கொண்டாள்.

“நீ கொண்டார்ர காசுல தான் ஒல கொதிக்க போவுதாக்கம்.. போதுபோதுங்க வெள்ளாம காடு கெடக்கு.. பம்பு செட்டும் பாடுபட நானும் இருக்கும் போது நீ என்னாத்துக்கு தொண்ட தண்ணி வத்தி போவ கத்திக்கிட்டு கெடக்க..?” ராமசாமியின் பேச்சு இந்த ஒரு விஷயத்தில் மட்டும் எடுபடவில்லை. ஐம்பத்தெட்டு வயது வரை போதுமென்றளவுக்கு நின்று கொண்டிருந்ததாலோ என்னவோ இப்போதெல்லாம் நிற்பதும் நடப்பதுமே பெரிய பாடாகி விடுகிறது கனகுவுக்கு. வீட்டுக்குள்ளேயே என்றால் புழங்கி விடுவது சுலபமாக இருக்கிறது. வெளியில் போவதென்றால் பெரிய பாடு தான்.

நாளைக்கு கொழுந்தன் நல்லமுத்துவின்; மகளுக்கு வளைகாப்பு. கட்டாயம் போயாக வேண்டும். இங்கிருந்து ஒரு மணி நேர பயணம். அங்கிருந்து ஆறேழு கிலோ மீட்டர் உள்ளடங்கி இருக்கும் கிராமம். காத்திருந்தால் ஊருக்குள் செல்லும் பேருந்து அரை மணி நேர பயணத்தில் கொண்டு சேர்த்து விடும். இல்லையெனில் வந்திருக்கும் சேதியை தெரிவித்தால் யாராவது வந்து அழைத்து சென்று விடுவார்கள். ‘இந்த பயணமாவது தள்ளி போகாம இருந்தா சரி..’ எண்ணிக் கொண்டே தன்னை சிறைப்படுத்தியிருந்த நித்யாவின் கால்களை மெல்ல நகர்த்தி விட்டாள்.

கணவன் ராமசாமி உயிரோடு இருக்கும் போது அவருடன் மகள் வீட்டுக்கு பேருந்தில் வந்து போவது ஒன்றும் சிரமமாக இருந்ததில்லை. பணி ஓய்வுக்கு பிறகு கணவனும் இறந்து விட மகள் தீபாவின் வீட்டிற்கு வந்து விட்டாள். ஆரம்பத்தில் மகள் வீட்டிற்கு வந்து விட்டோமே என்ற தயக்கம் தான் இருந்தது, ‘எப்படா கிராமத்துல எதாவது விசேஷம் நடக்கும்.. ஓடுலாம்னு நினைப்பு வரும்.. இப்ப முட்டிவலியும் முதுகுவலியும் வந்தததுலேர்ந்து ஊருக்கு போய்ட்டு வர்றதுங்கறது பெரிய அவஸ்தையா மாறி போச்சு.’ தீபாவின் வேலை நேரம் வேறு மாறிக் கொண்டேயிருப்பதால் நினைத்து வைத்தது போல் ஊருக்கு போக முடிவதில்லை.
போன மாதம் பங்காளி வீட்டில் ஒரு சாவு. ‘என்னை பஸ் ஏத்தி வுட்டுடுமா பாப்பா.. நான் போறேன்..’; தகவல் வந்ததும் இப்படி தான் ஆரம்பித்தாள் கனகு.

“உன்னால தான் பஸ் படிக்கட்டுல ஏற முடியலேம்மா.. எப்டி போவ..?”

“நீயும் வாயேண்டீ.. உனக்கு பெரியப்பா முறை தானே அவரு..” மெல்ல மகளை துணைக்கழைத்தாள் கனகு. அவள் கைத்தாங்கலாக பிடித்துக் கொண்டால் பஸ்ஸில் ஏறி விடலாம்.

“நான் எங்க வர்றது..? அடுத்த வாரம் நித்தியோட டான்ஸ் ப்ரோகிராம் இருக்கு.. அதுக்கு வேற லீவு போடணும்…”

“ஆமாத்தே.. இன்னிக்குன்னு பார்த்து நித்யாவுக்கு அரை நாளு தான் ஸ்கூல்… வீட்டில ஆள் இருக்கணுமே.. கருமாதிக்கு போயிக்கலாம்..” மருமகன் முரளி வழிமொழிய அப்போதைக்கு விட்டு விட்டாலும் மனதில் உறுத்திக் கொண்டேயிருந்தது கனகுவுக்கு.

“பதினாறாம்நாளு தேவைக்கு கருமாதி பத்திரிக்க அனுப்பியிருக்கான் உன் தம்பி.. நீயும் தான் வாயேன் பாப்பா.. ஊருல எல்லாரையும் பாத்துட்டு வந்தாப்பல இருக்கும்.. எல்லாம் நம்ம பங்கும் பங்காளிங்க தானே.. நான் உசுரோட இருக்கப்பவே போக வர இருந்தா தானே நல்லது கெட்டது புரியும் உனக்கும்.. பொம்பளப்புள்ளய வேற வச்சிருக்க.. ஆவ தேவைன்னா அவுங்களும் வரணும்ல்ல..” மகளை சரிக்கட்ட பார்த்தாள்.

“எனக்கு எங்கம்மா நேரமிருக்கு.. வாரம் ரெண்டு நாளு லீவுன்னு தான் பேரு.. ஆனா சனிக்கிழமைக்குன்னு எதாவது ஒரு வேலை வச்சுக்கிருப்பாங்க ஆபிசுல.. சன்டே ஒரு நாளு தான் ரெஸ்ட்.. அந்த நாளையும் காலி பண்ணீட்டமுன்னா அடுத்த வாரத்துக்கு ஓடுற தெம்பே போயிடும்.. நீ போய்ட்டு வாம்மா..” மகள் தட்டிக்கழித்து விட அலுத்து போனது கனகுவுக்கு. கால்களை தொங்கவிட்டவாறு செல்லும்போது வீங்கி விடுகிறது. மடக்கவும் முடியவில்லை. கைகளின் தயவினால் பஸ்ஸில் ஏறுவதால் கை தசை வீங்கி போகிறது. அதுவும் உட்கார இடமில்லை என்றால்; அழுகையே வந்து விடுகிறது. ‘அப்பறம் பாத்துக்கலாம்.. பாத்துக்கலாம்ன்னே ஒவ்வொரு தேவையா கழிஞ்சு போவுது.. பாவம்.. பாப்பாவை கொறை சொன்னா அவ மட்டும் என்னா பண்ணுவா.. அவங்கப்பாரு சொன்னாப்பல அவளையும் என்னை மாதிரியே ஒரு டீச்சராக்கி வுட்டுருக்குணும்.. உள்ளுரு மாப்பிள்ளையா இருந்தா நிலம் நீச்சுக்கும் கேடு வராம இருந்துருக்கும்..’

“நித்தும்மா.. இன்னிக்கே வீட்டுப்பாடமெல்லாம் முடிச்சுடும்மா.. நாளைக்கு உன் சித்திக்கு வளகாப்பு.. நம்பள்ளாம் ஊருக்கு போலாம்..” வலியால் மொத்த உற்சாகத்தையும் ஆக்ரமிக்க முடியவில்லை.

“அப்டீன்னா இன்னைக்கு நீயும் எங்களோட வா பாட்டீ..” என்றாள் நித்யா தூக்கம் கலைந்தவளாக. அய்யய்யோ.. இந்த முறையும் தட்டிப் போயிடுமோ..’ மனது திக்கென்றிருந்தது. “பாட்டிய எங்கடா வர சொல்ற..?”

“நித்துவோட அத்தை பொண்ணு பெரியவளாயிட்டாளாம்.. நேத்து ராத்திரி பத்து மணிக்கு மேல ஃபோன் வந்துச்சு.. நீ தூங்கிட்டே.. சரி ஒன்ன டிஸ்டர்ப் பண்ண வேண்டாமுன்னு எழுப்பல..” கட்டிலில் அம்மாவின் அருகில் வந்து உட்கார்ந்துக் கொண்டாள்; தீபா.

“அந்த ராதிகாகுட்டியாடீ.. அதுக்குள்ள பெரிய மனுசியாயிட்டாளா..? நம்பவே முடியல பாரேன்.. என்ன.. ஒரு பத்து வயுசு இருக்குமா அந்த புள்ளக்கு.. நம்ப நித்திக்குந்தான் வயுசு எட்டாயிடுச்சு.. நீயும் தாயராயிக்குணும் போலருக்கு பாப்பா..” என்றவள் மருமகன் பேஸ்ட்டும் பிரஷ்ஷ{மாக நிற்பதை பார்த்ததும் மகளை அவசரப்படுத்தினாள். “சரி.. சரி.. தாய்மாமன் தான் இந்த மாதிரி விசயத்துக்கெல்லாம் மொதல்ல நிக்கணும்.. நீ போய் கௌம்பு.. போ..”

“நீங்க வர்றீங்களா அத்தே..?” வாயில் பிரஷ்ஷோடு வந்தான் முரளி.

“நான் வர்லப்பா.. பதினோராவது நாள் ராதிகாவ வீட்டுக்கு அழைச்சு வுடுவாங்க.. அப்ப வரேன்.. இப்ப நீங்க மூணு பேரும் போய்ட்டு வாங்க..” கட்டிலை விட்டு இறங்கினாள். காலைக்கடன்களை கழிப்பது கனகுவை பொறுத்தவரை சிரமமான வேலையாக மாறி விட்டது. மூட்டுவலியினால் கால்களை மடக்கி உட்கார முடிவதில்லை. அவளுக்காகவே கட்டிய வெஸ்டர்ன் டாய்லெட்டை உபயோகிப்பது என்பது இவ்வளவு நாளாகியும் பழக்கத்திற்கு பொருந்தாமலேயே இருந்தது.

அம்மாவின்; முகம் ஏதோ உணர்த்த “சித்தப்பா வீட்டு வளைகாப்பு என்னைக்கும்மா..?” என்றபடியே காலண்டரை பார்த்தாள் தீபா. கனகுவுக்கு ஞாபகமறதி அதிகமாகி விட்டதால் எல்லா விஷயங்களையும் மாதாந்திர காலண்டரில் எழுதி வைத்து விடுவாள்.

“பன்னென்டாம் தேதி.. அட நாளைக்காம்மா.. நீ எப்டி தனியா போவ..?”

“நாளைக்கு தான்டீ வளைகாப்பு.. நாம என்னா விருந்தாளியா.. இன்னிக்கு போனா தேவலன்னு பாத்தன்.. நீயும் வரேன்னு சொன்னியே..”

“சொன்னன் தான்.. திடீர்ன்னு என் நாத்தனாரு பொண்ணு பெரியவளாயிட்டாளே.. பேசாம குழந்தை பொறந்து போய்க்கலாம்..”

“வேணாம் பாப்பா.. அப்றம் அப்டியே தட்டிக்கிட்டே போயிடும்.. இன்னைக்கு போக முடியலேன்னாலும் நாளைக்குன்னாலும் போய்தான்டீ ஆகணும்..” கணவன் ராமசாமியின் தம்பி தான் நல்லமுத்து. திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பில் ராமசாமி இறந்து விட்டார். அவருக்கு பிறகு அவரின் தங்கைகள் இருவரும் அடுத்தடுத்து இறந்து விட இப்போது உயிருடன் இருப்பது நல்லமுத்து மட்டும் தான்.

“போகணும் தான்.. ஆனா திடீர்ன்னு நாங்க வெளிய கௌம்பறாப்பல ஆயிடுச்சே அத்தே.. இன்னிக்கு லீவு நாளுன்னு டாய்லெட் பைப்;ப பாக்க பிளம்பரை வர சொல்லியிருந்தேன்.. எப்போ வர்றானோ.. என்னவோ தெரியல.. இன்னிக்கு விட்டா இனிமே அடுத்த வாரம் தான் வருவான்..” இழுத்தவாறே பேசினான் முரளி.
கனகுவுக்கும் நல்லமுத்துவுக்கும் ஓரே வயது தான். தீபாவுக்கு ஒரு வயதாகும் போது நல்லமுத்துவுக்கு கல்யாணம். சொந்த அத்தை மகள். நிறைய நகைநட்டுகளுடன் வந்தாள். உடனுக்குடன் இரண்டு மகன்களும் ஒரு மகளுமாக மூன்று குழந்தைகள் பிறந்த விட பெரிய குடும்ஸ்தனாகி போனான் நல்லமுத்து. அந்த நாள் இன்றும் ஞாபகம் இருந்தது கனகுவுக்கு. அவள் பள்ளிக்கு சென்றிருந்தாள்.

“கனகு டீச்சர் வீட்டுக்காரருக்கு கரண்டு ஷாக் அடிச்சுடுச்சாம்..” வந்த தகவலில் வெலவெலத்து போனாள். நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக மோட்டார் போடும் போது கையில் சுருசுருவென்று கரண்ட் ஏற ஏதோ தோன்றி வெடுக்கென்று கையை இழுத்த வேகத்தில் மோட்டார் ரூமின் சிமிண்ட் தரையில் விழுந்து விட்டார். தலையில் நல்ல அடி. கனகு போவதற்குள் நினைவிழந்து கிடந்த ராமசாமியை மாட்டு வண்டியில் தூக்கி வைத்திருந்தனர். நல்லுமுத்துவின் மடியில் மயங்கிய நிலையில் கிடந்த கணவனை கண்டதும் கதறினாள் கனகு.
உள்ளுர் மருத்துவமனையில் கையை விரித்து விட்டனர்.

“அண்ணி.. நீங்க ஒண்ணும் கவலப்படாதீங்க.. இந்த ஊருல வச்சு வைத்தியம் பண்றதுக்கு வசதி பத்தாதுங்கறாங்க.. மெட்ராசுக்கு போனா பொளச்சுக்குலாம்னு சொல்றாங்கள்;ல்ல.. காரு வச்சு அண்ணன மெட்ராசுக்கு கூட்டிட்டு போவோம்..”

“அய்யோ.. தம்பி.. அம்புட்டு பணத்துக்கு எங்க போறது..?” கதறினாள்.

“நீங்க கவலப்படாதீங்க… எம்பொண்டாட்டி நகைங்கள்ல்லாம் எதுக்கு இருக்கு..? வித்துப்புடலாம்..”

“தேவானை எதும் நெனைக்காதே தம்பி..?

“அண்ணன் குத்துயிரும் கொலையுயிருமா கெடக்குது.. நகைநட்டுங்க தான் இப்ப முக்கியமா..?” பதினைந்து நாட்களுக்கு பிறகு அறுவை சிகிச்சை முடித்து அண்ணனை மீண்டும் அண்ணியிடம் ஒப்படைத்த கொழுந்தனை தெய்வமாகவே பார்த்தாள் கனகு.

“வேற யாரு வீட்டுல தேவைன்னாலும் போவாம இருந்துக்கலாம்.. இது சொந்த கொழுந்தனாச்சேப்பா..” மருமகனிடம் தணிந்து பேசினாள்.

“ப்ளம்பரை கூட அடுத்த வாரம் வர சொல்லலாம்… ஆனா நீங்க எப்டித்தே தனியா போவீங்க.. இந்த வாரம் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணலாம்னு நெனச்சேன்.. இன்னிக்கு தங்கச்சி வீட்டுக்கு போயாகணும்.. நாளைக்கு என் கொலீக் வீட்ல ஒரு பர்த்டே பார்ட்டி இருக்கு.. மிஸ் பண்ணவே முடியாது.. போய் தொலையுணும்.. ச்சே.. வீக் என்ட் சந்தோஷமே போச்சுத்தே..” இயல்பாக பேசினான் முரளி.

“மாப்ளை தான் புதுசு.. ஒண்ணும் தெரியாது.. ஒனக்குமாடீ தெரியாது உங்க சித்தப்பனோட குணம்.. உங்க சித்தப்பனுக்கு இந்த உடம்ப செருப்பா கூட தைச்சு போடலாம்.. நான் கட்டாயம் போகணும்…” உள்ளறையில் இருந்த மகளிடம் கிசுகிசுப்பாக பேசினாள் கனகு.

“உன் சென்டிமெண்ட் டயலாக்க எல்லாம்; மூட்டை கட்டும்மா.. மூட்டு வலியோட நீ எப்படி போக போற..? இங்கேயர்ந்து ரெண்டு பஸ்;ஸ{ மாத்தணும்… உடனக்கொடனே பஸ் வந்தா கூட போய் சேர எப்படியும் ஒன்றரை மணி நேரமாவது ஆவும்.. நாங்க கூட்டிட்டு போற மாதிரி இருந்தா நான் இவ்ளோ நேரம் பேசிக்கிட்டு இருக்க மாட்டேன்.. வாம்மா.. வந்து காருல ஏறுன்னு சொல்லிருப்பேன்…” பேசியவாறே காபி போட சென்றாள் தீபா.
‘நல்லா பேசக் கத்துக்கிட்டா இவளும்.. லட்சுமி அத்தாச்சி பேரப்புள்ளங்க காதுக்குத்துக்கு ஊருக்கு போனது தான் கடசி.. அதுந்தான் ஏழெட்டு மாசம் ஆயிடுச்சே.. பாழாப்போன மூட்டு வலி பஸ்ஸ{ல ஏற வுட மாட்டேங்குது.. ஒவ்வொரு தடவையும் வெளிய போகணும்னா காரோ ஆட்டோவோ தேட வேண்டியதாயிருக்கு.. நாலு பேரும் சேர்ந்து போனா பரவால்ல.. ஒத்த பொம்பளைக்கு போயி காரு எடுக்க முடியுமா…? தனியா காரு வச்சுக்கிட்டு அங்க போயி இறங்குனா தான் நல்லாருக்குமா..? நான் பணம் குடுக்குறேன்னு சொன்னாலும் கெழவிக்கு பென்ஷன் வாங்கற திமிர்ன்னு மாப்ள நெனைச்சுக்க மாட்டாராக்கும்..’ பலவித எண்ணத்தோடு காபியை குடித்தாள் கனகு.

“நீங்க எப்போ கௌம்புறீங்க பாப்பா..?”

“நேத்து பூரா இவ டி.விக்கு முன்னாடி உட்காந்துட்டா.. வீட்டுப்பாடம் அப்டியே கெடந்து போச்சு.. முடிச்சுட்டு தான் கௌம்பணும்..” தீபா சொல்லி முடிப்பதற்குள் வேலைக்காரப் பெண் அழைத்தாள்.

“எக்கா.. துணிமணிய எடுத்து போடு.. ஊற வச்சுட்டு பொறவு பாத்தரம் வெளக்கறன்..”

“நீ போடீ.. போய் வேலைய பாரு.. நித்திக்குட்டிய நான் பாத்துக்கறேன்..” நான்காம் வகுப்பு கணக்கு ஒன்றும் ஊருக்கு கிளம்புவது போல பிரம்மசூத்திரமாக இருப்பதில்லை கனகுவுக்கு. வகுத்தல் கணக்குகளை தமிழில் சொல்லி தந்தவாறு ஒருவழியாக பேத்தியின் வீட்டுப்பாடத்தை முடித்தாள்.

“தீபா.. நான் கடைக்கு போய்ட்டு வர்ரேன்..” மனைவியிடம் சொல்லியவாறே முரளி பைக்கை கிளப்பிக் கொண்டு போவது தெரிந்தது கனகுவுக்கு. ‘வண்டி ஓட்ட தெரிஞ்சா நானும் இப்படி கிளம்பி போயிருக்கலாமோ.. அட.. அப்போ மட்டும் என்னா வண்டியிலயா போனோம்.. தெரிஞ்ச எடம்.. சொந்தக்காரங்க.. நடையோ பஸ்ஸோ எல்லாத்துக்கும் தொணைக்கு ஆள் இருந்துச்சு. போகறதுக்கு தெம்பும் இருந்துச்சு..’ நித்யாவின் குரல் எண்ணத்தை தடைப்படுத்தியது.

“பாட்டி.. இந்த கோஷண்டையும் ரிமைண்டரையும் எங்க எடுத்து எழுதுணும்..?”

“ஈவு எத்தனைடீ வருது..? அதை தலைக்கு மேல எழுது.. மீதிய கணக்குக்கு கீழ எழுது..” ‘மீந்து போனா கீழ தான் கெடக்கணும் போலருக்கு.. தீபாவும் முரளியும் நல்லா தான் வச்சுருக்காங்க.. ஆனா கல்யாணம்.. தேவைன்னு அவங்க வீட்டு சனங்களோட மட்டும் எப்படி ஒட்டிக்கிட்டு கெடக்;கறது..? நம்ம ஊரு.. நம்ம சனங்கன்னு மனசு தேடுதே..’

இப்போது முதுகு வலி சற்று குறைந்தது போலிருந்தது. ஊருக்கு போனால் சுத்தமாக நின்று விடும் என்று எண்ணிக் கொண்டாள். தீபா சமையலறையில் ஏதோ செய்துக் கொண்டிருந்தாள். “நான் ஒண்டி ஆளு பாப்பா.. என்னத்தையோ தின்னுட்டு போறன்.. நீ சோறல்லாம் ஆக்க வேணாம்.. நித்திய குளிச்சு வுட்டு எங்கிட்ட அனுப்பு.. அவள கிளப்பி விடறன்..”

சமையல் வேலையும் குறும்புக்கார மகளை கிளப்பும் வேலையும் இல்லையென்றாகியதில் சட்டென்று ஒரு சந்தோஷம் வந்தது தீபாவுக்கு. “அடுத்த வாரம் நம்ப ஊரு பக்கம் தான் எனக்கு இன்ஸ்பெக்ஷன் இருக்கு.. எங்கூடவே கிளம்பி வந்தீன்னா உன்ன சித்தப்பா வீட்ல இறக்கி வுட்டுட்டு சாயந்தரமா கூப்டுக்குறேன்.. ஓகேவா.. என் செல்ல அம்மா..” அம்மாவின் கன்னத்தை கிள்ளி விட்டு சிறுபிள்ளையாக ஓடினாள் தீபா.

‘தேவானை கோவுச்சுக்குவா.. ஒரு போனை போட்டு சொல்லிப்புடணும்..’ மனசுக்குள் தோன்றியதை எண்ணமாக்க அலைபேசியை தேடினாள். ‘எங்க வச்சேன்..? இந்த நித்திக்குட்டி தான் எங்கையாவது எடுத்து போட்டுடுவா..’ செல்லமாக அலுத்துக் கொண்டே மகளின் அறையின் திரையை மட்டும் மெலிதாக விலக்கி எட்டிப் பார்த்தாள் கனகு. மற்ற அறைகளை புழங்குவது போல இந்த அறையை மட்டும் அவளால் எளிதாக புழங்க முடிவதில்லை. தீபா பேத்தியிடம் பேசிக் கொண்டிருந்தாள். “மம்மி சுடிதார் போட்டுக்கட்டுமா.. சாரி கட்டிக்கிட்டுமாடீ..?”; அரவம் கேட்டு திரும்பினாள்.

“என்னம்மா.. நான் என்ன உடுத்திக்கிட்டும்..?” கேள்வியை அப்படியே தாயை நோக்கி திருப்பினாள். திருத்தப்பட்ட புருவங்கள் வில்லாய் வளைந்திருந்தது.

“புடவையே கட்டிக்கோடீ..” என்றவள் “அந்த செல்போன எடும்மா..” என்றாள் பேத்தியிடம்.

“நீ சுத்த வேஸ்ட் பாட்டீ.. உள்ள கூட வர மாட்ட..” என்றவள் “சரி.. யாருக்கு போட்டு தரட்டும்..” என்றாள் பழக்கப்பட்டவளாக.

“நல்லமுத்து.. நல்லமுத்து தாத்தாவுக்கு..” செல்லும் கையுமாக இருந்த நித்யாவை பார்த்து கோபமானான் அப்போது தான் உள்ளே நுழைந்த முரளி. “எப்போ பாரு செல்லுல விளையாட்டு தான்.. அதான் மார்க்கெல்லாம் கொறையுது..”

“நான் ஒண்ணும் வெளயாடல.. பாட்டிக்கு கால் மேக் பண்ணி குடுத்தன்..” ரோஷமானாள் நித்யா. செல்போனை எடுத்துக் கொண்டு முன்கூடத்திற்கு வந்தாள் கனகு.

“அலோ.. தேவான.. நான் தான்டீ அக்கா பேசறன்.. நேத்துலேர்ந்து முதுவு வலி தாங்க முடியிலடீ.. படுக்கைய வுட்டு எழுந்துக்க முடியில.. பத்தாததுக்கு ரெண்டு முட்டியிலயும் பெல்ட் போட சொல்லியிருக்காரு டாக்டரு.. பஸ்சுலயும் ஏறி இறங்க முடியாது.. புவனேசுக்கு வளைகாப்பு போட்டு வீட்டுக்கு கூட்டியாந்துடு.. அடுத்த வாரமா வர்றன்.. உன் புருசன் தான் கோவிச்சுக்குவாப்பல.. செத்த சொல்லிப்புடு.. நா தூக்கி வளத்தவ புவனேசு.. அதுக்கு வளையல் அடுக்கறத பாக்கற குடுப்பின தான் இல்லாம போச்சு எனக்கு..” பேசிக் கொண்டே வந்தவளின் குரல் தழுதழுத்தது.

“எனக்கு தெரியாதுக்கா.. நீயே உன் கொளுந்தன்கிட்;ட பேசிக்க..” போனை கணவனிடம் நீட்டினாள் தோவனை.

“அக்காளுக்கு முதுவு வலியாம்.. வர முடியாதுங்கறாப்பல..”

“என்னாண்ணீ செய்யுது..?” பதறலாக வந்தது நல்லமுத்துவின் குரல்.

“ஒண்ணுமில்ல தம்பி.. எப்பவும் வர முதுவு வலியும்.. மூட்டு வலியுந்தான்.. நேத்து காய்கறி பையை தூக்கியாந்தன்.. நல்ல புடிச்சுக்குச்சு.. வர வாய்க்காது போலருக்கு.. புள்ளக்கு வளையலு அடுக்கி கூட்டியாந்துடு.. வர்ற வாரத்துல வாரேன்னேன் உன் பொண்டாட்டிக்கிட்ட.. அது பொசுக்குன்னு கோவப்பட்டு உங்கிட்ட குடுத்துடுச்சு..”

“முதுவு வலி தான.. பஸ்ல தான ஏற முடியாது உனக்கு.. நீ ஒண்ணும் செரமப்பட வேணாம்ண்ணீ.. நம்ப குடும்பத்துக்கு மூத்தது நீ தான்.. உன்ன வுட்டுப்புட்டு தேவ செய்றது எப்புடீ.. மருமவன்ட்ட எதும் சொல்லாத.. நான் காரு பேசி அனுப்பி வுடறன்.. உம்மவனையும் கூடவே அனுப்பறன்.. நீ படுத்துக்கிட்டே வந்து சேந்துருண்ணீ.. எம்பொறந்தவன் இருந்தா வுட்டு குடுத்துவாரா..? இல்ல நீதான் ஊர வுட்டு போயிருப்பியா..?” நல்லமுத்துவின் கரிசனத்தில் உரிமையும் கலந்திருந்தது.

அதற்குள் பட்டுப்பாவடையும் சட்டையையும் கையில் ஏந்திக் கொண்டு அருகில் வந்தாள் நித்யா. “பாட்டீ.. போட்டு விடேன்..” என்றவள் பாட்டியின் கண்கள் கசிந்தருப்பதை கண்டதும் சற்றே தயங்கினாள்.

“அவங்க ஊர்லேர்ந்து யார் பேசுனாலும் பாட்டி அழுதுடறாங்க.. ஏன் மம்மி..?” சுடிதாரின் துப்பட்டாவை தொங்க விடலாமா.. மடித்து போடலாமா என்று சிந்தித்த தீபா மகளின் பேச்சை கேட்டு முன்கூடத்திற்கு வந்தாள்.

“என்னண்ணீ.. பேச்சே காணாம்.. சொன்னது காதுல வுளுந்துச்சில்ல.. நீ கௌம்பி தயாரா இரு.. நாளக்கு வளக்காப்பு முடிஞ்சு புவனேசுவரிய கூட்டியார ஏற்கனவே காரு பேசி வச்சுருக்கு.. ராசாவும் வருவான்.. நீ மொதல்ல ஊரு வந்து சேரு.. நாளக்கு மகளும் மருமவனும் வர்றப்படி வரட்டும்..”

பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு போக வேண்டுமென்று முரளி சொன்னது நினைவிற்கு வந்தது அவளுக்கு.

“அதுங்க வந்துச்சுங்கன்னாதான் அவங்க கார்லய வந்துருப்பனேப்பா.. ஆபிசுல முக்கியமான வேலையாம் பாப்பாவுக்கு.. கட்டாயம் போவுணும்னு சொன்னா.. பேத்தி பள்ளிக்கூடத்துல ஆண்டுவிழாவாம்ப்பா.. அவ கூட ரெண்டு மூணு பிரைஸ் வாங்குறா.. அவளை மாப்ளை தான் அழைச்சுட்டு போறாரு.. அதான் அடுத்த வாரம் தங்கச்சிய பாக்க போவுலாம்ன்னுச்சு பாப்பா..” தயங்கி தயங்கி பேசினாள் கனகு.

“சரீண்ணீ.. அதுங்க வர்றப்ப வரட்டும்.. நீ வந்துடு.. சுருக்கா காரு வந்துடும்.. வந்து சேரு மொதல்ல..” என்றான் முடிவாக.

“இல்லப்பா.. முதுவு வலி குனிய நிமிர முடியில.. இப்ப கூட வெறுந்தரையில மல்லாக்கா தான் படுத்துருக்கன்.. தலைக்கு தலைகாணி கூட வைக்க முடியில.. நீ புவனேச பாத்து பதனமா கூட்டியாந்துடு.. நம்ப வீட்ல வந்து பாத்துக்கறன்.. புள்ளத்தாய்ச்சி புள்ள.. நா செய்ற பால்கொளுக்கட்டைன்னா உசிர வுடுவா.. செஞ்சு எடுத்தாரன்.. சம்பந்தசனங்க மனங்கோணாமா நீ நல்லப்படியா தேவைய முடிப்பா.. சரிப்பா.. நான் போன வச்சுடறன்..”

“கடவுளே.. அடுத்த வாரம் இதுங்க ரெண்டுக்கும் வேறெந்த வேலையும் வர கூடாதே..” மனம் மௌனமாக பிரார்த்தித்துக் கொண்டது.

“நித்திக்குட்டீ.. வாம்மா.. பாட்டீ பாவாடை கட்டி வுடறன்..” பேத்தியை அருகே அழைத்தாள் கனகு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *