கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அறிவியல்  
கதைப்பதிவு: July 29, 2016
பார்வையிட்டோர்: 13,119 
 

அவன்….? ஜீவன். இடையில் மட்டும் ஒரு உள்ளாடையுடன் வெட்டவெளியில் உட்கார்ந்து சூரியனின் வெப்பக் கதிர் வீச்சை உள்வாங்கிக் கொண்டிருக்கின்றான். உடலுக்கான வைட்டமின் D3 தயாரிப்பு. ஈரக் காற்று சிலுசிலுவென்று வீசுகிறது. சென்ற நூற்றாண்டில் மோதிய ஒரு வால் நட்சத்திரத்தின் தாக்குதலால் பூமியின் சுழற்சி அச்சியினுடைய கோணம் லேசாக மாறியது.. தாக்குதலின் விளைவாய் உலகில் கோடிக்கணக்கில் மக்கள் சில மணி நேரங்களில் மடிந்து போனார்கள். பேரழிவு. இந்த இயற்கை வலிமையானதும், கொடைத்தன்மை கொண்டதுவும் மட்டுமில்லை, கொடூரமானவையும் ஈவு இரக்கமற்றவையும் கூட. அந்த நிகழ்வுகளுக்கப்புறம் சூரியனிடமிருந்து கிடைக்கும் ஆற்றல் குறைந்து போனது. ப்ளஸ் தட்பவெப்ப நிலையும் மாறியிருந்தது. அ.ப்.ப்ப்பா…அந்த கொடூரமான நாட்களை இந்த உலகத்து மக்களால் பல தலைமுறைகளுக்கு மறக்க முடியாது. அது ஒரு காலை நேரம் காலை ஒன்பது மணியிருக்கும். உலகம் உறக்கம் தெளிந்து இயக்கத்தை துவக்கியிருந்த நேரம்.

ஆண்களும், பெண்களும் தத்தம் சம்பாதனைகளுக்காக ஒட ஆரம்பித்திருந்த நேரம். பட்டுச் சுருணையாய் பாலர் பள்ளி குழந்தைகளும், மாணவர்களும், மாணவிகளும், பெரியவர்களும் என்று சாலைகள் பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருந்த நேரம். திடீரென்று காது கிழியும்படி பெரிய இடி சத்தம். அதன் அதிர்வை உலகெங்கிலும் முழுமையாக உள்வாங்கிக் கொள்வதற்குள் பெருமழை பெய்வது மாதிரி, கருகிய கற்களும், நெருப்புக் குழம்புகளும், பூமாரி பொழிவது போல கொத்து கொத்தாய் வந்து விழ ஆரம்பித்தன. விழுந்த இடங்களில் எல்லாம் தீ பற்றி கொழுந்து விட்டு எரிந்தன. சடசடவென்று கற்குழம்பு மழை. ஒரு நிமிடத்தில் நாடகத்தின் அடுத்தக் காட்சி போல நிலைமை தலை கீழாய் மாறியிருந்தது. மக்கள் அலறியடித்துக் கொண்டு இங்குமங்கும் ஒண்ட இடம் தேடி ஓடினார்கள். அங்கங்கே எரிந்தவர்களும், செத்து விழுந்தவர்களும், எங்கும் அழுகை ஓலம். வீடுகளெல்லாம் பற்றியெரிந்தன. இந்த மோதலில் வால்நட்சத்திரப் பொழிவுகளின் மூன்றில் இரண்டு பகுதி பொழிவுகள் கடலில் வீழ்ந்தன. அதனால்தான் சற்று குறைவான அளவில் இறப்புகள் ஏற்பட்டன என்று விஞ்ஞானிகள் அறிக்கை விட்டிருந்தனர். இந்த கொடூர நிகழ்வு உலகம் முழுக்க நடந்திருக்கிறது. உலகமே அரற்றிக் கொண்டிருக்கும் அந்த பேரிடரில் தப்பிப் பிழைத்தவர்கள்தான் இன்றைக்கிருக்கும் மக்கள் கூட்டம்.

அதிக நேரம் சுரீரென்று வெய்யில் பட சாத்தியமில்லாத நிலையில் வைட்டமின் D3 குறைபாட்டால் படிப்படியாக குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை ரிக்கெட்ஸில் வளைந்த கால்களுடன் அவதிப் பட்டார்கள். வேறு வழியில்லை. சாலையோரங்களில், மைதானங்களில், திறந்தவெளிகளில், எங்கும் மக்கள் கூட்டம்கூட்டமாக சூரிய ஆற்றல் கிடைக்கும் நேரங்களில் முக்கால் நிர்வாணத்தில் வெய்யிலில் காய்ந்துக் கொண்டிருக்கிறார்கள். வீட்டு மொட்டைமாடிகளில் எல்லாம் பெண்கள் அதே நிலையில், அதே காரணங்களுக்காக.

ஜீவன் D3 வைட்டமினுக்காக காய்வதை முடித்துக் கொண்டு வீட்டிற்கு வரும்போது, வெளியே அவனுக்காக ரஷ்ஷு காத்திருந்தான். சென்ற ஆண்டு நிலவுக்கு போனபோது இவன் ஜீவனின் சக பயணி. “ஏய்! என்னப்பா இவ்வளவு தூரம்?.”—-ரஷ்ஷுவை கட்டிப் பிடித்துக் கொண்டான். “வாக்கிங். நேத்து உன் ஆளு சுமனாவைப் பார்த்தேண்டா.” “அது என்ன என் ஆளுன்னு பேர் வைக்கிற?.” “உன்னைப் பத்திதாம்பா அப்படி பேசறா.” “சே! அவ ஒரு நல்ல நண்பிடா, அதத் தாண்டி எதுவுமில்ல. நீ அவளைக் கேட்டுப்பாரு. அவளும் இதையேதான் சொல்லுவா. சரீ ராதா, பூஜால்லாம் எப்படி இருக்காங்க?.” “பூஜா யாரோ ஒரு புது பையனோட சுத்திக் கிட்டிருக்கா. ராதா தெரியல. நல்ல கட்டை இல்ல?.”—–இவர்களின் சம்பாஷனையில் பாடுபொருள் பெண்களைத்தாண்டி வேறு எதுவுமே இருக்காதோ?. ஆமாம், எத்தனை யுகங்கள் கடந்தால்தான் என்ன?, மனித குலம் இருக்கும் வரையிலும் ஆண்களுக்கு பெண்களைவிட வேறு ஈர்ப்பான விஷயங்கள் இந்த உலகத்தில் என்னவாக இருக்க முடியும்?.

“ஜீவன்! உங்களுடைய ஓரியன் பயணம் எப்ப?. “தெரியல, அநேகமா அடுத்த மாசமாக இருக்கலாம்.” “ஜாக்கிரதை. ஏவுதளம் பூரா உன்னைப் பத்திய பேச்சாத்தான் இருக்கு. விஷயம் தெரியல. ஆனா விஞ்ஞானிகள் மட்டத்தில் உன்னை அய்யோ பாவம்னு பேசிக்கிறாங்க. எப்படியோ நீ இந்த பயணத்தில் விட்டில் பூச்சியாக மாட்டியிக்கியோன்னு இருக்கு. ஜாக்கிரதைப்பா. அதைச் சொல்லத்தான் வந்தேன்.” “ஏன்…ஏன்..அப்படி சொல்றப்பா?.” “தெரியல. எதுக்கோ உன்னை குறி வெச்சிருக்காங்களோன்னு தோணுது.” “என் மடியில கனமில்ல சரி நான் பார்த்துக்கறேன்.” — ஏன் இப்படி சொல்றான்?. மனசஞ்சலத்துடன் ஜீவன் வீட்டிற்குள் நுழைய, ஹாலில் இருந்தபடியே கண்காணித்துக் கொண்டிருக்கும் கம்ப்யூட்டர் ஆதர்ஷ்–8 குரல் கொடுத்தது. எலெக்ட்ரானிக் இயந்திரன். எக்ஸ்பர்ட் சிஸ்டம், ஆர்ட்டிஃபிஷியல் இண்டெலிஜன்ஸ் துறையின் லேட்டஸ்ட் டிவைஸ். அர்ஷாதி அண்டு ஆத்ரூ நிறுவனத்தின் தயாரிப்பு. பேரலல் பிராஸசிங்கில் வடிவமைக்கப்பட்டு கோடிக் கணக்கில் புழக்கத்தில் விடப் பட்டிருக்கும் மாடல்களின் ஒரு பிரதி. சுயமாக சிந்திக்கும், வேகமாய் முடிவெடுக்கும். இந்த மாடல்களுக்கு இங்கே ஏகப்பட்ட கிராக்கி. அப்போது ஆதர்ஷ்—8 ன் குரல். “அரசிடமிருந்து உங்களுக்கு ஒரு செய்தி பேனலில் காத்துக் கொண்டிருக்கிறது.”—– விரைந்தான். மேசையில் திரையில் எழுத்துக்கள் திரும்பத் திரும்ப வந்துக் கொண்டிருக்கின்றன. “ 278—2790 ஆம் தேதி, அதாவது இன்றிலிருந்து நான்காம் நாள் காலை நான்கு மணிக்கு உங்கள் ஓரியன் பயணம் திட்டமிடப் பட்டிருக்கிறது தயாராகுங்கள்.”— தெரிந்த செய்திதான் என்றாலும், உள்ளே குபுக்கென்று ஒரு பயம் எழுந்தடங்கியது. அடுத்த மாதம் என்று தேதி குறிப்பிட்டு விட்டு திடீரென்று நாலு நாட்களுக்குள் என்றால், எனக்கெதிராக யாரோ வலை விரிச்சிருக்கிற மாதிரி உள்ளுணர்வு சொல்லுதே. இந்த நெடும் பயணத்துக்கு தன்னை ஏன் தேர்ந்தெடுத்தார்கள்? என்று ஆத்திரப்பட்டான். ஆனால் மறுக்க முடியாது. தேசத்துரோகம்.

“ஓரியன் கிரகத்தில் நீங்கள் ஆற்றவேண்டிய செயல்திட்டத்தை மீண்டும் ஒருமுறை சரிபார்த்து மனதில் நிறுத்துங்கள். இவள்தான் உங்களுடன் பயணிக்கப் போகிற பார்ட்னர் மிஸ்.இமா., வயசு—25, இடது கண் புருவத்திலும், வலது பக்க மேலுதட்டிலும் சின்னதாக இரண்டு கருப்பு மச்சங்களைக் கொண்டிருப்பவள். உயரம் 175 செ.மீ. வானியலில் உயர் படிப்பு.”– திரையில் அவளைக் காட்டினார்கள்.குறைவான உடையுடன் உரித்த கோழிபோல அப்போதே சாப்பிட்டு விடவேண்டும் போலிருந்தாள். இந்தப் பயணம் ஒரு வருடத்துக்கு முன்னரே திட்டமிடப் பட்டது. எட்டு மாதங்களுக்கு முன்பாகவே ஓரியன் பயணத்திற்கு ஜீவனையும், இமாவையும் தேர்ந்தெடுத்து தனித்தனியாக வெவ்வேறு இடங்களில் வைத்துப் பயிற்சி அளித்திருக்கிறார்கள். இந்த சூரியக் குடும்பத்தைத் தாண்டி நெடுந்தொலைவு போகும் பயணம் என்பதால் கடுமையான பயிற்சி. அதற்கான மற்ற வகை பயிற்சிகளுடன், தனிமைச் சிறையில் வைத்து, நாட்கணக்கில் உணவில்லாமல், தண்ணீர் கூட இல்லாமல் சாகடித்து, தாங்கும் திறனை அதிகப்படுத்தி, அ.ப்.ப்.பா.

இந்தக் கணத்தில் உங்களுக்கு ஒரு விஷயத்தைச் சொல்லியாக வேண்டும். இரவில் வானத்தைப் பாருங்கள் .நடுவானுக்கு சற்று வடக்குப் பக்கம் மினுக்கும் ஓரியன் நெபுலா விண்மீன்கள் கூட்டம் தெரிகிறதா?. ஒரு லட்சம் ஒளி ஆண்டுகள் தூரம் விட்டம் உள்ள அந்த பரந்த விரிந்த அதன் பரப்பில், வடகிழக்கு திசை மூலையில் சற்று இளஞ்சிவப்பில் மின்னுகிறதே, அதுதான் அந்த மண்டலத்தில் இருக்கும் கணக்கற்ற சூரியன்களில் ஒன்று.. அதைச் சுற்றிக்கொண்டிருக்கும், ஒரு குறிப்பிட்டகிரகத்திற்கு நம் மூதாதைய விஞ்ஞானிகள் சூட்டியிருக்கும் பெயர் ஓரியன்.தெரிந்ததவரையிலும் அது இந்த பிரபஞ்சத்தில் உயிர்கள் வாழ்ந்துக் கொண்டிருக்கும் இரண்டு கிரகங்களுல் ஒன்று. அதன் இன்றைய சராசரி சீதோஷ்ண நிலை— (–)6 டிகிரி முதல் +34° செல்ஷியஸ் வரை. அதன் விடுபடு திசை வேகம் பூமியை விட— 0.8 கி.மீ/நொடி அதிகம். ஒரு நாள் என்பது பூமியைப் போலவே அவர்களுக்கும் 24 மணி நேரந்தான். பருவகாலங்கள், வருடம் என்பது எல்லாமே அப்படியே டிட்டோ.

கிளம்ப வேண்டிய தினம் விடியற்காலை மூன்று மணிக்கெல்லாம் ஜீவன் தயாராகிவிட வெளியே ஊர்தி காத்திருந்தது. அவனுக்குள்ளே ரஷ்ஷு சொன்ன வார்த்தைகள் உள்ளே அலையடித்துக் கொண்டிருக்கிறது. அவன் விண்கலம்—838 ஐ நெருங்கியபோது இமாவும் வந்து சேர்ந்துக் கொண்டாள். அ.ப்.ப்.பா..36-24-36,ல் ஒரு சொர்க்கம். சுலபமாய் விழுந்துவிடுவான் போல, அவளுந்தான். அது ஒன்றும் பெரிய சமூகக் குற்றமில்லை.ஆண்கள் பெண்களை அடக்கியாளும் உத்தியாய் அவர்களிடம் மட்டுமே திணிக்கப் பட்டிருந்த `கற்பு’ என்ற அடிமைப் படுத்தும் மாயவலை மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பே அறவே நீக்கப்பட்டு விட்டது.

விண்கலம்—838, பிரமாண்டமாய் ஒரு அசுரனைப் போல உயர்ந்து நிற்கிறது. எரிபொருள்—-டியூட்ரியம், டிரிடியம்,அணுக்கரு பிணைவு முறையில் பெறப்படும் சக்தி. ஒப்புவிசைத்திறன்–1080 செகண்ட். விரிந்து ஓடும் அந்த பெரிய மைதானத்தில் அங்கங்கே சில விண்கலங்கள் கிளம்பத் தயாராக நின்றுக் கொண்டிருந்தன. அவைகள் இந்த சூரியக் குடும்பத்திற்குள் உள்ள கோள்களுக்கு பயணிக்கும் சிறிய ரக ஏவூர்திகள். இரண்டு குழுக்கள் வந்து விண்வெளி உடைகள் பொருத்தி சோதனை செய்ய ஜீவனையும், இமாவையும் அழைத்துச் சென்றார்கள். எல்லாம் முடிந்தது. ஜீவனும், இமாவும், வழியனுப்ப வந்தவர்களின் கடைசி சிரிப்பையும், கையசைப்பையும் வாங்கிக் கொண்டு உள்ளே பிரவேசித்தார்கள். அவனை பைத்தியமாக ஈர்க்கக் கூடிய அத்தனைப் பரிமாணங்களும் அவளிடத்தில் அபரிதமாக இருப்பதைப் பார்த்ததில் அவனுக்கு உள்ளே வியர்த்தது. ஹும்! இந்த ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு கேட்குது.

கொஞ்ச நேரம் இருவருக்கும் விஞ்ஞானிகளின் அறிவுரைகள் இயர்போன் வழியே அஞ்சல் செய்யப்பட்டுக் கொண்டிருந்தன.இவர்கள் இருவருக்கும் விண்வெளிப் பயணம் புதிதில்லை. சூரியக் குடும்பத்திற்குள் இருக்கும் கோளுக்கு ஒரு தடவை பயணித்த அனுபவம் இருக்கிறது.. ஆனால் முதன்முறையாக இந்த நெடும்பயணம். இருவருக்கும் உள்ளே வியர்க்க ஆரம்பித்தது. பயணத்தில் உயிர் நிச்சயமில்லை. குடும்பத்தைவிட்டு, மனிதர்களை விட்டு, இந்த உலகத்தின் அத்தனை உள்ளடக்கங்களையும் விட்டு, விலகிப் போகும் இந்த பிரிவு தற்காலிகமானதா, நிரந்தரமானதா?. என்ற விசாரத்தில் கொஞ்ச நேரம் சோகத்தில் மெளனித்தார்கள். இனி நடப்பது எதையும் அவர்களால் தவிர்க்க முடியாது .

இப்போது இருவரும் தங்கள் ஆளுமையில் இருக்கக் கூடிய உபகரணங்களை ஒருபார்வை பார்த்து சோதித்து முடித்தார்கள். மிஸ்.இமா மளமளவென்று போதிக்கப்பட்ட அடுத்த கட்ட செயலில் இறங்கினாள். விண்கலத்தின் இக்னீஷியனுக்காக விண்கலத்தின் கண்காணிப்பு கணினிக்கு ஆணை வழங்கினாள். கவுண்ட் டவுன் இரண்டாயிரத்தில் தொடங்கி, மெதுவான, சீரான ரிதத்தில் இறங்க ஆரம்பித்தது. 72—96 மணி நேர கவுண்ட் டவுன் என்பதெல்லாம் இப்போது வழக்கில் இல்லை. அங்கே விஞ்ஞானக் கூடத்தில் விஞ்ஞானிகள்கூட்டம் பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருக்கிறது.தலைமை விஞ்ஞானியின் மேற்பார்வையில் விஞ்ஞானிகள் குழு சோதித்தமுடித்துவிட்ட எல்லா சோதனைகளின் மீதும் ஒரு கடைசி கட்ட பார்வைகள். இப்போதெல்லாம் விண்கல பயணத்தின் போக்கை தீர்மானிப்பது விண்கலத்திலிருக்கும் மானிட்டர் மட்டுமே, தரை கட்டுப்பாட்டு அறை அல்ல. மூன்றாம் நிலையிலுள்ள விஞ்ஞானி பிரம்மாவிடம் சக விஞ்ஞானி ஒருத்தர் நெருங்கி தாழ்ந்த குரலில்

“என்ன சார் ஓரியனுக்கு இந்தப் பையனை அனுப்பறாங்க?. ஏற்கனவே மூணு வருஷத்துக்கு முன்ன போன நம்ம ஆட்கள் ரெண்டு பேரையும் அங்க அடிச்சே கொன்னுருக்காங்க. இந்தப் பையனும் பெண்கள் விஷயத்தில ரொம்ப வீக் ஆச்சே”

“உஷ்! அடக்கி வாசியும். நமக்கு வேணாம் அந்த விஷயம். தலைவர் காரணமாத்தான் இவனை அனுப்பறார்னு பேசிக்கிறாங்க. அநேகமாக திரும்ப மாட்டானாம். அதுதான் திட்டம்.”—கேட்டவர் அதிர்ச்சியாகி நின்று விட்டார்.

கிளம்ப சில நொடிகளே நிலுவையில் இருக்கும் அந்த நேரம், ஜீவன் ஓரியனுக்கான வழிகாட்டி சங்கதிகளை ஒரு கிளான்ஸ் பார்வையில் திரையில் மேய்ந்துக் கொண்டிருக்கிறான். இப்போது கவுண்ட் டவுன் ஜீரோவைத் தொட்டுவிட. “ஷ்…ஷ்…ஷ்….ட்..ட்…ட்..ட்..ட்..டு..டும்..ம்..ம்.”—வெடியோசையில் மூன்று கிலோமீட்டர் சுற்றுவட்டாரம் கிடுகிடுத்தது. அசுர வேகத்துடன் விசிறியடிக்கப்படும் நெருப்புக் கோளமல்ல, கடல். வெப்பம் தகித்தது, கண்கள் கூசின. சத்தம்—170 டெஸிபல்களைத் தாண்டியது. லாஞ்ச்பேட் சரியான கணத்தில் தன் பிடிமாணத்தை விட்டு விலகிக் கொள்ள,விண்கலம்—838 நெருப்பு ஜ்வாலையைக் கக்கிக் கொண்டு, மேலெழும்பியது. எடுத்த வேகப் பாய்ச்சலில் உள்ளேயிருந்த அவர்களுக்கு வயிறு எக்கியது.கிளம்பிய ஐந்தாவது நொடியில் 52 வது கிலோமீட்டர் உயரத்தில் பதினாறு டிகிரி சாய்ந்து தன் நெடிய பயணத்தைத் தொடங்கியது. ஜீவனிடம் எதையோ கேட்க திரும்பிய இமா, அவன் தன்னை விழுங்கிக் கொண்டிருப்பதை கவனித்தாள். கண்களை உருட்டி முறைத்து எச்சரித்தாள். அதில் நிஜம் குறைவாய் இருப்பதை ஜீவன் புரிந்துக் கொண்டான். ம்… நிச்சயமாக குட்டி ஜீவனுடனோ, குட்டி தேவதை இமாவுடனோதான் திரும்புவோம் போலிருக்கிறது தனக்குள் சொல்லிக் கொண்டான். இந்தப் பயணத்தில் இமாவின் பணி என்பது இந்த விண்கலத்தை சரியான பாதையில் செலுத்தி ஓரியன்னில் தரையிறக்குவது, ஓரியனில் ஜீவனின் செயல்களுக்கு உதவுவது, திரும்ப பூமிக்கு கொண்டுவந்து சேர்ப்பதுவுந்தான்.

விண்கலம் இப்போது100 வது கிலோமீட்டர் உயரத்தில் பூஜ்ஜியம் ஈர்ப்பு எல்லையைத் தாண்டிவிட, அந்த நொடியில். இருவரும்ஒரு மாதிரியான அந்த பரமானந்தத்தை உணர்ந்தார்கள். எடையற்ற நிலையில் அந்தரத்தில் மிதக்க ஆரம்பித்தார்கள். மிதந்தபடியே கொஞ்ச நேரம் முன்னும் பின்னும் போய்வந்து குதூகலித்தார்கள். இப்போது விண்வெளி உடையை கழட்டிவிட்டு சாதாரண உடைக்கு மாறிக் கொண்டார்கள். இமா விளையாட்டாய் எடுத்துப் போட்ட ஒரு குட்டி பென்சில் கண்ணெதிரில் அப்படியே அந்தரத்தில் நிற்கிறது. லேசாய் சுண்டிவிட, அந்த கோடிவரை அந்தரத்தில் மிதந்தபடி மேல்கீழாய் சுழன்றுக் கொண்டே போய் விண்கலத்தின் சுவரில் முட்டி திரும்பி வருவதை பார்த்து ரசித்தார்கள்.

“ஜீவன்! ஒரு சந்தேகம். ஏற்கனவே பிதுங்கும் மக்கள்தொகை பிரச்சினைகளில் திணறிக் கொண்டிருக்கும் நம் அரசாங்கம் கண்காணாத தொலைவிலிருக்கும் முகந்தெரியாத மனிதர்களுக்காக ஏன் இந்தப் பயணத்திற்கு வீண் செலவு செய்கிறது?,தேவைதானா?.” “அங்கே மனிதர்கள் அழிவின் விளிம்பில் இருக்கிறார்களாம். காரணம் தெரியவில்லை. காரணங்களை ஆராயக் கூடிய விஞ்ஞானிகள் பற்றாக் குறையாம். இந்த பிரபஞ்சத்தில் நம் பூமியிலும், ஓரியன் கிரகத்திலும் மட்டும்தான் உயிரினங்கள் வாழ்கின்றன. முதல் விஷயம் அவர்களும் நம்மைப் போன்ற மனிதர்கள். ஆதியில் விண்ணிலிருந்து தேவதூதர்களாக அவர்கள் மண்ணில் போய் இறங்கியவர்கள் நம் முன்னோர்கள்தான். நாம் ஒரு நாலைந்து முறை ஓரியனுக்கு போய்வந்திருக்கிறோம். அவர்களைக் காப்பாற்ற நாம் எதையாவது செய்தாக வேண்டும். லாப நஷ்டம் பார்க்கிற வேலை இல்லை இது. அதேசமயம் இதில் கொஞ்சமாய் நம்முடைய சுயநலமும் உண்டு. இன்றைக்கு அங்கே எப்படியென்று புரிந்துக் கொள்ள முடியாதபடிக்கு தொடர்ந்து மனிதகுலம் குறைந்துக் கொண்டே வருகிறதாம். உதவி கேட்டு கோரிக்கை வந்துக் கொண்டே இருக்கிறது. இங்கே பூமியில் இயற்கை சீற்றங்களால் கோடி கணக்கில் மக்களை நாம் இழந்திருப்பினும், பெருத்துப் போய் கிடக்கும் மக்கள்தொகையில் நாம் திணறிக் கொண்டிருக்கிறோம். குறைக்க வழி தெரியவில்லை. எனவே அங்கே குறைவதற்கான காரணிகளைக் கண்டுபிடித்து அவர்களுக்கு நிவர்த்தியும், அந்த காரணிகளை வைத்து இங்கே பூமியில் மக்கள்தொகையை குறைக்கவும் முடியுமா?. ஆமாம் இதுதான் இலக்கு. எச்சரிக்கை உனக்கு இதில் மாற்றுக் கருத்து இருக்குமானால் சொல்லாதே, விழுங்கி விடு. ராஜதுரோகம். ”

“ ஐயோ! சரி…..சரி… அதற்கு நாம ரெண்டுபேர் மட்டும் போய் என்ன செய்து விடமுடியும்?. சரி என்ன செய்யப் போகிறோம்.” “இதற்கு என் பதில் தெரியாது. ” “எனக்குப் புரியவில்லை இது என்ன மாதிரியான பதில்?. அப்படியென்றால் நாம் நம்முடைய தேன்நிலவுக்காகவா அங்கே போகிறோம்?.” —சொல்லிவிட்டு நக்கலாய் சிரித்தாள். ”இதற்கு என் பதில் சந்தோஷங்களுடன் நான் தயார். உன் இசைவுக்காக காத்திருக்கிறேன். அங்கே ஆராய்ச்சிகளைச் செய்து மக்கள்தொகை வீழ்ச்சிக்கான காரணங்களைக் கண்டுபிடித்து அதற்கான தீர்வையும் சொல்லப் போறது நானில்லை. இதோ இந்த ஸீகம்—I, ஸீகம்—II,கம்ப்யூட்டர்கள்.”—- அவன் சுட்டிய திசையில்40×40×45 சென்டிமீட்டர் அளவில் அடக்கமாக இரண்டு கம்ப்யூட்டர்கள் உட்கார்ந்திருந்தன. ஜீவன் இப்போது டெலஸ்கோப் வழியாக வியூஃபைண்டரை அட்ஜஸ்ட் செய்து வெளியே பார்க்க ஆரம்பித்தான்.

“ஹேய்! இமா! இங்க வந்துபார். நமக்கு சின்ன ஒளிப்புள்ளியாகத் தெரிஞ்சிக்கிட்டிருந்த ஒரியன் கோள் இப்போது ஒரு நிலவைப் போல பிரகாசிக்குது பார். ச்சே! என்ன அழகு?.—– கிட்டே வந்த இமாவை வியூஃபைண்டரிடம் அனுமதிக்கும் சாக்கில் அவளை அணைத்தபடி நின்றான். மறுப்பில்லை, அனுமதித்தாள். தூசுப் படலம் இல்லாத வெற்றிடம் என்பதால் ஒளிச்சிதறல்கள் இல்லாத இருண்ட பிரபஞ்சத்தில் பெரிய பிரகாசமாய் ஓரியன் நெபுலாவின் சூரியன்களில் ஒன்றும், அதைச் சுற்றி சின்னச்சின்ன வெளிச்ச நிலாக்களாக அதன் கோள்களும், அவை ஒவ்வொன்றை சுற்றியும் வெளிச்ச புள்ளிகளாக அவைகளின் நிலவுகளும், என்று பார்க்க ரம்மியமாக இருந்தன. சற்று நேரம் இருவரும் மெய் மறந்து பார்த்துக் கொண்டிருக்க, அப்போது கண்ட்ரோல் சிஸ்டம் கம்ப்யூட்டர் பீப்…பீப்…பீப்… அலர்ட் ஒலி கொடுத்துவிட்டு தகவலை ஸ்க்ரீனில் படர விட்டது. “விண்கலம்—838 க்கு எச்சரிக்கை தரப்படுகிறது. ஜாக்கிரதை. இன்னும் முப்பது நிமிடங்களுக்கு அப்புறம் ஆர்.ஜி.ஜி. 110 ப்ளாக் ஹோல் ஐ நெருங்கப் போகிறீர்கள். ஆபத்து…பெரும் ஆபத்து. அதில் மாட்டினால் ஒளி கூட தப்பித்து வெளியே போக முடியாது இழுத்துக் கொள்ளும். அந்த பகுதியைச் சுற்றி அதீத வெப்பக் காற்றும், சுற்றிலும் வெளிர் நீல வண்ணத்தில் பெரிய வளையமும் பிரகாசமாய் ஜொலிக்கும். .அதுதான் அடையாளம். இரும்பு அயான்கள் ஒளிர்வதினால்தான் அந்த நீல வண்ணம். இன்னும் 26 நிமிடம், 34 நொடிகள் முடிந்ததும் செல்லும் நம் பாதையிலிருந்து விண்கலம் 4° விலகும். அந்த நொடியிலிருந்து அதன் வேகம் உயரும். உயர்ந்து, எட்டு நிமிடங்கள் பயணித்து, அப்புறம் மீண்டும் பழைய பாதைக்கும், பழைய வேகத்துக்கும், மாறிவிடும். திசைமாற்றம், வேகமாற்றம் வருவதால் எழுந்து நடமாட வேண்டாம். இருக்கையோடு பிணைத்துக் கொள்ளுங்கள்..”——அவசரமாய் இருவரும் உட்கார்ந்து, தத்தம் இருக்கையோடு பிணைத்துக் கொண்டார்கள். ஜீவன் மீண்டும் பேச ஆரம்பித்தான்.

“இதோ இருக்கும் ஸீகம்—I, ஸீகம்.—II. சூப்பர் கம்ப்யூட்டர்கள். இரண்டும் இரண்டு எலெக்ட்ரானிக் விஞ்ஞானிகள், உபரியாக சமீபத்திய சில பொதுஅறிவுக் களஞ்சியங்களையும் கொண்டுள்ளன. திரும்பும் போது இரண்டையும் ஓரியன் நிவாகிகளிடம் ஒப்படைத்து விடச் சொல்லி நமக்கு உத்தரவு. அவர்களுக்கு நாம் அளிக்கும் அன்பளிப்பு. இந்தப் பயணத்தினுடைய சரியான நோக்கமும் இதுதான். இரண்டும் அங்கே திறமையான விஞ்ஞானிகளாய் செயல் பட்டு அங்கே விஞ்ஞானிகளின் பற்றாக் குறையைத் தீர்த்து வைக்கப் போகின்றன. எல்லா வகையான ஆய்வுகளுக்கும் அவர்களுக்கு உதவும். இவைகளுக்குத் தெரியாத விஷயங்கள் எந்த உலகத்திலும் இல்லை.”

”அட! அப்படியா?.நாம் நம்மைவிட இதுபோன்ற எலெக்ட்ரானிக்ஸ் இயந்திரங்களை முழுசாகச் சார்ந்திருப்பதே நம் இயல்பாக மாற்றிக் கொண்டு விட்டோம். சரி இதை நான் சோதிச்சிப் பார்க்கட்டுமா?.” ”தாராளமாக முயற்சி செய். எல்லை எதுவும் கிடையாது. எதைப்பற்றி வேண்டுமானாலும். ப்.ப்.பூ! ஆனால் அதை சோதிக்கும் அளவுக்கு உனக்கு ஞானம் உண்டா என்பதுதான் என் கேள்வி.”—அவன் சொல்லிக் கொண்டே ஸீகம்—II ஐ உயிர்ப்பித்தான். இமா அவனை முறைத்து விட்டு அதைக் கேட்டு திணறடிக்க வேண்டிய கேள்விகளை ஆழமாக யோசித்து, அணு விஞ்ஞானத்தில் ஆரம்பித்தாள்.. ”யுரேனியம்235 ன் கிரிட்டிகள் மாஸ் எவ்வளவு?.“ —கேள்வியை முடிக்கும் நொடியிலேயே பதில் வந்துவிட்டது. “52.4 Kg” “கடவுள் எங்கே இருக்கிறார்.?” “மனித மனங்களிலும், இலக்கியங்களிலும், மறை நூல்களிலும்.” ”சரி உம்…காஸ்மிக் சூப் பத்தி சொல்லு.” “முதன்முதல் உயிர்கள் தோன்றியதின் வரலாறு. மீத்தேன்,கரியமில வாயு, ஹைட்ரஜன் சேர்ந்த கூட்டுதான் அந்த மேற்படி சூப். அதிலிருந்து அமைனோ அமிலங்கள் தோன்றி அப்புறமாக அதிலிருந்து உயிர் உற்பத்தி என்பது ஒரு சித்தாந்தம்.”

“ஒரு அணுகுண்டு வெடிப்பது எந்த மூன்று விஷயங்களைச் சார்ந்துள்ளது?.” “கிரிடிக்கிள் மாஸ், கிரிட்டிகிள் பர்செண்டேஜ், பாதுகாப்பான இடைவெளி.” “ சரி…சரி இதற்கு சொல்.தூய்மையான காதல் என்பது என்ன?.” ”ஒப்பனை செய்யப்பட்ட காமம் .” —-அந்த பதிலில் லயித்தாள். “சரி..முட்டையிடும் ஆண் பறவை ஒன்று இருந்தது, தற்போது அது இல்லை. அழிந்துவிட்டது. அதன் பெயர்?.”—அது சற்று தாமதித்தது. தன் மெமரி செண்டரில் தேடுகிறது போல. இமா சிரித்தாள். “சில்லிமேட்.” இமா திகைத்து நின்றாள்.

” நம் பூமியில், புழங்கும் மறை நூல்கள், அணு, உயிரியல்,ரசாயணம், இயற்பியல். வானியல், தத்துவம் எதைப் பற்றியும் இதனிடம் சந்தேகங்கள் கேட்கலாம். ஓரியன்னில் புழங்கும் நூல்கள், அறிவியல் சங்கதிகளில் கூட புகுந்து விளையாடலாம். உனக்கு அவைகளில் திறமை இருந்தால்.. ”—என்று ஜீவன் சிரித்தான். “அப்படியா? ஒரு சுலபமான கேள்வி. இதுக்கு பதில் சொல்லட்டும் பார்ப்போம். ஒத்துக்கறேன். ஏய் ஸீகம்—II..! காயத்திரி மந்திரத்தைச் சொல்லு.” —-ஒரு நிமிடம் அது வேலை செய்யாமல் ஸ்தம்பித்தது. “பார்த்தியா இந்த டப்பா முழிக்குது. அது பேச்சு வழக்கில் இல்லாத ரொம்ப பழைய மொழி, சமஸ்கிருதம்.”—இமா சிரித்தாள். அதன் இயக்கங்கள் நின்று விட்டதோ?, இருவருக்கும் பயம் வந்துவிட்டது. பக்கங்களில் தட்டிப் பார்த்தார்கள். ஊஹும். “இதைவிஞ்ஞானின்னு சொன்னால் ஓரியனில் இருக்கிறவன் காரித் துப்புவான்.”–அதன் இயக்கங்கள்முடங்கி விட்டிருந்தன.

“என்ன கேப்டன்! ஒருவேளை இது போலி தயாரிப்போ?.”—– எப்படி இது நேர்ந்தது? ஜீவன் பலவிதமாய் முயற்சித்து விட்டு சோர்ந்து போனான்.. இதை அவன் எதிர்பார்க்க வில்லை. அவனும் பலவிதங்களில் முயற்சித்துத் தோற்றான். கொஞ்சநேரம் அதையே பார்த்துக் கொண்டிருந்து விட்டு, பூமிக்கு தகவல் அனுப்ப யத்தனித்த அந்த நிமிஷத்தில், திடீரென்று விளக்கெரிய அதன் இயக்கங்கள் உயிர் பெற்றன.. அதைத் தொடர்ந்து சில நொடிகளில் பாடல் வரிகள் திரையில் வர, அது கணீரென்று இசையுடன் பாட ஆரம்பித்து விட்டது. “ஓம்பூர் புவனஸ்ஸுவ: ஓம் தத் ஸவிது வரேண்யம்: பர்க்க தேவஸ்ய தீமஹி: தியே யோந பர்ஸோத யாத்.”——-திகைத்து நின்றாள், அருமையிலும் அருமை. அது தேடுவதற்கு இவ்வளவு நேரம் எடுத்துக் கொண்டிருக்கிறது போல.” —இருவரும் இப்போது அதிலிருந்து விலகி, வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார்கள். திடீரென்று ஆ..ஆ..! இமா பயத்தில் வீல் என்று கத்திவிட்டாள். ஜீவனை கெட்டியாக பிடித்துக் கொண்டாள். ஜீவனும் அதைப் பார்த்து விட்டான். வெளியே ஒரு பிணம், ஆணோ,பெண்ணோ சரியாகப் பார்க்க முடியவில்லை. கை கால்களை பரப்பிக் கொண்டு ஏதோ ஒரு கோளின் ஈர்ப்பு விசைக்கேற்ப தன்கதியில் மிதந்தபடி விண்கலத்தை லேசாக உரசிவிட்டு ஹோ வென்று வேகமாக போய் கொண்டிருக்கிறது. இருவருக்கும் இது போதிக்கப்பட்டுள்ள செய்திதான் என்றாலும் திடீரென்று பார்த்ததும் ஏற்பட்ட அலறல்.

“ பயப்படாதே இமா. ஏதாவது கைவிடப்பட்ட விண்ணூர்தியில் இருந்திருப்பான் பாவம் இனிமேல் தன்னைக் காப்பாற்ற யாரும் வரமாட்டார்கள் என்ற நிலை புரிந்ததும், வெளியில் வந்து விண்வெளி உடையைக் களைந்து விட்டு மரணத்தை ஏற்றுக் கொண்டிருப்பான். குறைந்த வலியுடன் சில நொடிகளில் மரணம் சம்பவித்திருக்கும்.. இந்த விண்வெளியில் கணக்கில்லா விண்கலங்களும், அதிலிருந்த மனிதர்களும் கைவிடப்பட்டு அநாதையாக இந்த பிரபஞ்சத்தில் பிணங்களாக சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். அதேசமயம் உடல்கள் எத்தனை வருடங்கள் ஆனாலும் எதுவுமற்ற இந்த சூன்யப் பிரதேசத்தில் அழுகிப் போவதில்லை, மாறாக தொடர்ச்சியான அதீத சூரிய வெப்பத்தில் உலர்ந்து போயிருக்கும்.. நம் சூரியக் குடும்பத்தின் எல்லைக்குள் பிணங்கள் இன்னும் நிறைய எதிர்படும். பயம் கொள்ளாதே.”—-விஞ்ஞானிகளின் ஆராய்ச்சியில் சாகும் எலிகளாய் மடிந்து போகும் மனிதர்களை நினைத்து வருத்தப் பட்டாள். இப்போது தானும், ஜீவனும் கூட எலிகளாய்தானே வந்திருக்கிறோம்? என்று சுய இரக்கத்தில் அழுகை வந்தது. ஜீவன் அவளை தேற்றினான்.

“அழாதே நாம் சாதனையாளர் நிலைக்கு உயர்ந்துக் கொண்டிருக்கிறோம். ஓரியனின் பிரச்சினைக்கு நாம் தீர்வு கண்டுவிட்டோமானால் எவ்வளவு ஓரியன்வாசிகள் நம்மை வாழ்த்துவார்கள்?. யோசித்துப் பார்.” “ ஜீவன்! விஞ்ஞானிகளின் பார்வையில் நாம் அவர்களுடைய சோதனைக்கு உதவும் எலிகள்தான்..”—அவன் மவுனமாகி விட்டான்.

ஆயிற்று, அந்த நேரம் வந்து விட்டது. விண்கலம்– 838 பல்வேறு நிலைகளைக் கடந்து, இடையில் எதிர்ப்பட்ட விண்கற்கள், குறுங்கோள்கள், கருப்புத்துளை போன்றவைகளால் ஏற்படும் பல பல ஆபத்துக்களிலிருந்து தப்பித்து தன் நெடிய பயணத்தை முடித்துக் கொண்டு, ஓரியன் கிரகத்தில் ஒரு காலை மழை நேரத்தில் தரையிறங்க ஆரம்பித்தது. இங்கே அடர்த்தியான காற்று மண்டலம் உண்டென்பதால், விண்கலம் தன் இயக்கங்களை நிறுத்திக் கொள்ள, அதை ஒரு பெரிய பாரசூட் ஏந்திக் கொண்டது., விண்கலம் காற்றில் அலையும் ஒரு சிறகுபோல ஆடியாடி மெதுமெதுவாக இறங்க ஆரம்பித்தது. அவர்கள் இறங்க வேண்டிய இடம் பிரிவு-88 அது இதுதான். இதற்கு சரியாக அட்சரேகை—13°—04’N, தீர்க்கரேகை—80°—17’E. இறங்கும் போதுகடற்கரைப் பகுதி தெரிய ஆரம்பித்ததும் மானிட்டர் எச்சரிக்கை ஒலி கொடுத்தது.

அவர்கள் பருந்து பார்வையாய் அந்த கிரகத்தைப் பார்க்க ஆரம்பித்தார்கள். ஆஹா என்ன அழகான ஓரியன் உருண்டை?. கோளின் மேல்,கீழ் பக்கங்களில் மூடிக் கொண்டிருக்கும் பனிப்பிரதேசம் வெள்ளைபூத்து பளீரென்று தெரிகின்றன. அல்டிமீட்டர் ரீடிங் விண்கலம் மூவாயிரம் அடி உயரத்தில் இருப்பதாக சொன்ன போது கீழே பசுமையான காடுகளும், செங்குத்தான கட்டடங்களும் குட்டி குட்டியாய் மினியேச்சர் உருவங்களாக தெரிந்தன. இந்த கிரகத்தில் அடர்ந்த காட்டுப் பகுதி அதிகம் போல் தெரிகிறது. சற்று தள்ளி பிரமாண்டமாக நீல வண்ணத்தில் கடல் அலையடித்துக் கொண்டிருக்கிறது. பரிச்சயம் இல்லாத புதிய பூமி என்பதில் உள்ளே இனம்புரியாத கலவரம் எழுந்தது. விண்கலம் தரையைத் தொடும் முன்பாக மானிட்டர் லேண்டிங் செக் ஓகே என்றது. மெதுமெதுவாக இறங்கி, விண்கலத்தின் கால்கள் நீண்டு தரையில் அழுந்தப் பதிந்தன. அந்த இடம் ஒருஅடர்ந்த காடு போல் தெரிகிறது.

வெளியே பயங்கரமாக மழை. கொட்டித் தீர்த்துக் கொண்டிருக்கிறது. அவர்கள் அதீத டென்ஷனுடன் காத்திருந்தார்கள். ஆபத்து என்ன ரூபத்தில் வரும் என்று தெரியாது. இந்த காட்டில் என்ன மாதிரி மிருகங்கள் இருக்கிறதோ?. அதில்லாமல் மனிதகுல அழிவுக்குக் காரணம் ஏதாவது பெயர் தெரியாத வைரஸ்களின் கொடூர தாக்குதல்களாகக் கூட இருக்கலாம். பாதுகாப்பு கவசம் இன்றி இறங்க வேண்டாம் என்று ஏற்கனவே எச்சரிக்கை செய்யப் பட்டிருந்தார்கள். ஆட்டோ அனலைஸர் வெளிக்காற்றை உள்ளிழுத்து பல்வேறு சோதனைகளுக்குப் பின்னர் அறிக்கையை துப்பியது. பூமியைவிடஆக்ஸிஜன் அதிகம்,32%, நைட்ரஜன்—62%, ஆர்கான்—0.93%, கரியமிலவாயு மிகவும் குறைவு, 0.010%., அதனால்தான் இந்த குளிரும், அதிக மழையும் என்றான் ஜீவன். மழை ஓய்ந்து அவர்கள் மெதுவாக வெளிவாங்கி சரிந்து நிற்கும் படிகளில் இறங்கினார்கள். இறங்கும் முன் இருவரும் பாதுகாப்புக்காக லேசர் கன்னை எடுத்து செருகிக் கொண்டார்கள். ஓரியன் தலைமைக்கு தகவல் போயிருக்கிறது. உங்களை அழைத்துச் செல்ல ஆட்கள் தயாராக காத்திருப்பார்கள் என்றார்கள், ஆனால் அங்கே யாரும் இல்லை. இங்கே இவர்களுக்கு ஒரு அதிர்ச்சியான அனுபவம் காத்திருக்கிறது. ஆமாம் அவர்கள் மனிதரல்லாத மனிதர்களை இங்கே சந்திக்கப் போகிறார்கள்

இறங்கி நடக்க ஆரம்பித்தார்கள்.இதுபோன்ற ஒரு இடத்தை கற்பனை செய்வதற்குக் கூட அவர்களுக்கு கடினமாக இருந்தது. மனித சஞ்சாரமில்லாத,ஆனால் அவர்கள் வாழ்ந்த, வாழ்கிற, வாழப்போகிற இடங்களில் உயர்ந்த காங்க்ரீட் கட்டடங்கள் நெருக்கமாய் நிற்க, அத்தனையும் நொறுங்கி, சிதைந்து, குட்டிச் சுவர்களாக நிற்கின்றன. இந்த இடம் ஒருகாலத்தில் வளர்ந்த நகரமாக இருந்திருக்க வேண்டும், இன்று சிதைந்த நிலையில் கிடக்கிறது. சாலைகள் இருந்ததற்கான அடையாளங்களாக, தார் கலவைகளும், சரளைக் கற்களும், சிதறிக் கிடக்கின்றன. அங்கங்கே சாலை இருந்த இடத்தை பிளந்துக் கொண்டு எழும்பி நிற்கும் பெரிய பெரிய மரங்கள், செடி கொடிகள், புதர்கள். மழையினால் தேங்கி நிற்கும் வெள்ளக்காடுகள். சேற்றில் கால்கள் புதைகின்றன.. இங்கே அடிக்கடி மழை கொட்டுகிறது போல. எங்கும் பச்சைப் பசேலென்று விரிந்தோடும் காடுகள். பலத்த காற்றைத் தவிர, ஆள் அரவமில்லாத, பயமுறுத்தும் அமானுஷ்ய அமைதி. “இமா! என்னை பலமாக பிடித்துக் கொள்.காற்று பலமாக அடிக்கிறது பார்.”—இமா அவனை கெட்டியாக பிடித்துக் கொண்டாள். அந்த இடிபாடுகளினூடே அவர்கள் மெதுவாக நடக்க ஆரம்பித்தார்கள். ஒரு அரைமணி நேரம் நடந்த பிறகும் எங்கும் மனிதர்களோ, விலங்குகளோ இருப்பதற்கான அறிகுறி எதுவும் தெரியவில்லை. பயமுறுத்தும் பயங்கர அமைதி. சுற்றி சுற்றி நாலாபுறங்களிலும் பார்வையை சுழலவிட்டபடியெ நடந்துக் கொண்டிருந்தார்கள். அப்போது அங்கங்கே கட்டட இடிபாடுகளுக்கிடையில் லேசாக தெரிந்த அசைவுகளை ஜீவன் பார்த்துவிட்டான்..

“இமா! சீக்கிரம் அவர்களை தொடர்பு கொள். இந்த குட்டிச் சுவர்களின் பொந்துகள் பக்கம் அசைவு தெரியுது பார். யாரோ அல்லது எதுவோ?. ஆ… மனுஷங்கதான். ஓ! அங்க பாரு அவங்க நம்மளை நோக்கித்தான் ஓடிவர்றாங்க. என்னா ஆவேசம் பாரு. ஆபத்து…ஆபத்து. இங்க காற்றில் பிராணவாயு அதிகம் என்பதால் உயிரினங்களின் பலம் நம்மைவிட அதிகம். நம்மால சமாளிக்க முடியாது.சீக்கிரம்…சீக்கிரம்.”—— அவர்கள் வித்தியாசமான உடையிலிருந்தார்கள். முட்டிவரைக்கும் தொளதொளவென்று ஒரு ஆடை, மேலே ஒரு துணியை போர்த்தியிருந்தார்கள்.

” இல்லை தொடர்பு கிடைக்கவில்லை. நாம இப்போது முடிந்த வரைக்கும் ஓடுவோம் வேறு வழியில்லை.” —- அவர்கள் இப்போது தலைதெறிக்க ஓட ஆரம்பித்தார்கள். பின்னால் நாலு பேர் பேய்க்கூச்சல் போட்டபடி இவர்களைத் துரத்த ஆரம்பித்தார்கள். இவர்கள் மரணபயத்தில் ஓடி ஓடி…, கொஞ்ச நேர ஓட்டத்திற்கப்புறம் ஒரு அகன்ற சமவெளியை அடைந்தார்கள்.. அந்தப் பகுதியை அடைந்தபோது, ஒரு நாலைந்து மனிதர்கள் எதிர்கொண்டு தடுத்தாட் கொண்டார்கள். கைகுவித்தபடி கிட்டே வந்தார்கள். துரத்தி வந்த மனிதர்கள் வேகத்துடன் ஜீவன், இமா, மேல் பாய, இமா வீல் என்று அலறினாள்.

இவர்கள் குறுக்கே வந்து தடுத்து, ஏதோ கையால் சமிக்ஞை காட்ட அவர்கள் திரும்பிப் போனார்கள். “ தோழர்களே! பிரிவு—88 ன் தலைவரின் சார்பாக உங்களை வரவேற்கிறோம். பயம் வேண்டாம் அவர்கள் உங்களின் உடையைப் பார்த்துதான் நீங்கள் வேற்று கிரகத்திலிருந்து வந்த எதிரிகள் என்று துரத்தினார்கள். உங்களின் இந்த உடையைக் களைஞ்சிடுங்க.இங்கே கிருமிகள் ஆபத்து எதுவுமில்லை.” —-இவர்களுக்கு அவர்கள் பாணியிலான மாற்று உடை அணிய ஏற்பாடு செய்தார்கள்.சற்று ஒதுக்குப்புரமாக சென்று இருவரும் உடையை மாற்றினார்கள். அவர்களுடன் வந்திருந்த ஸோம்னா என்ற அழகுப் புயல் நெருக்கமாக வந்து அவன் உடைகளைக் களைய உதவினாள், கண்ட இடங்களில் தயக்கமின்றி கையை வைக்க அவனுக்கு கூச்சமாக இருந்தது. ஆனால் அவள் எந்த பிரதிபலிப்புமின்றி இயங்கினாள். இமாவுக்கும் அவள்தான் உதவி செய்தாள். அதற்குள் ஜீவன் அவளை நெருக்கத்தில் நிதானித்து கண்களால் முழுசாக தின்று முடித்திருந்தான். விசிலடிக்கத் தூண்டும், சற்று கறுத்த, கட்டான,உடல்வாகு. கறுப்புமுத்து கூட ஒரு அழகுதான். ஆஹா அந்த அழகுப்புயல் இவர்களுக்கு வழிகாட்டியாம். “இமா! ஆச்சரியமாக இருக்கிறது. இவர்களுக்கும் நம்முடைய தமிழ் தெரிந்திருக்கிறது பார்த்தாயா?.”. “ஐயா! தமிழ் யாரால் இங்கிருந்து உங்கள் கிரகத்துக்கு பரவியது என்று எங்களுக்கு தெரியாது, ஆனால் அது எங்கள் மொழி.” –ஜீவன் சிரித்தான். “சரி…சரி..நமக்குள் மொழிப் போர் வேண்டாம். இந்த பிரபஞ்சத்தில் மனிதன் வாழும் இரண்டு கிரகங்களிலும் சில பகுதிகளில் தமிழ் பேசப் படுகிறது என்பதே மகிழ்ச்சி. மிகத் தொண்மையான காலங்களில்இரண்டு கோள்களின் மனிதர்களுக்கிடையில் பரிவர்த்தனைகள் இருந்திருக்கலாம். யார் கண்டது?. சரீ ஏன் வேற்று கிரகத்திலிருந்து வரும் எங்களை நீங்கள் எதிரிகளாக நினைக்க வேண்டும்? நண்பர்களாக இருக்க முடியாதா?.”—என்று கேட்டான் ஜீவன் ” வெளியே இருந்து வந்த வேற்று கிரகத்து ஆட்கள் பரப்பிய ஒருவகை வைரஸால்தான் நம் மக்கள் நிறைய அழிந்து விட்டார்கள் என்று அவர்கள் நம்புகிறார்கள், அதனால்தான்.”.

அடுத்து சூரியசக்தி வண்டி ஒன்று அவர்களை ஏந்திக் கொண்டு பறந்தது. கூடவே அவன் பக்கத்தில் கைடாக ஸோம்னா என்ற அந்த அழகுப் புயல். . ஜீவனும்,இமாவும், ப்ளஸ் விண்கலத்திலிருந்து கொண்டுவரப்பட்ட கம்ப்யூட்டர் ஸீகம்–I ,ஸீகம்—II வும், ஒரு பெரிய அறையில் தங்க வைக்கப் பட்டனர். காலை உணவாகக் களி போன்ற ஒரு வஸ்துவைத் தந்தார்கள். சில முக்கிய அதிகாரிகள் வந்து சந்தித்து விட்டுச் சென்றார்கள். இரவில் ஜீவன் இயற்கையின் உந்துதல் தாளமுடியாமல் இமாவிடம் சிருங்கார அஸ்திரங்களை வீசிப் பார்த்தான். அவள் ஆட்காட்டி விரலை நீட்டி துண்டாகிவிடும் என்று எச்சரித்ததும் சுருண்டுக் கொண்டது மனசு.

காலையில் எழுந்தவுடன் அவர்களுக்கு இடப்பட்டிருக்கும் ஆணைப்படி செயல்பட ஆரம்பித்தார்கள். இந்த கிரகத்தில் பல பாகங்களிலிருந்து எடுத்த மண் , காற்று, மனிதர்களின் ரத்தத் தடவல்கள். என்று எல்லாவற்றையும் பரிசோதிக்க வேண்டும். மண் மாதிரிகள் பரிசோதனைக்காக வரிசைஎண் கொடுக்கப் பட்டு, வந்திறங்கியிருந்தன. ஜீவன் அந்த மண் மாதிரிகளை எப்படி ஸீகம்—I னிடம் சோதனைக்காக கொடுத்து முடிவுகளை வாங்க வேண்டும் என்று இமாவுக்கு சொல்லிக் கொடுத்துவிட்டு, அ.பு. ஸோம்னாவுடன் ஸோலார் காரில் கிளம்பி விட்டான். அவளுடைய உதவிக்கு என்று மூன்று பெண்களை ஏற்பாடு செய்திருந்தார்கள்.

வெறிச்சோடி கிடக்கும் சாலைகளில் சூரிய மின்பலகைகள் போர்த்திய சிறியரக கார்களும், சிறு வேன்களும் எப்போதாவது ஒன்று என்ற அளவில் ஓடிக் கொண்டிருந்தன. மற்றபடி சாலை வெறிச்சோடி கிடக்க, அங்கொன்றும் இங்கொன்றுமாக மனிதர்கள் நடமாட்டம் மிக சொற்பமாக இருந்தது. எங்கும் நீக்கமற நிறைந்திருப்பது காற்றும், அமானுஷ்ய அமைதியும்தான். நெருக்கமாய் நிற்கும் உயர்ந்த கட்டடங்கள் விசோவென்று காற்றோடிக் கொண்டிருக்க,உள்ளே மனிதர்கள் இருக்கிறார்களா?, தெரியவில்லை.. மொத்தத்தில் ஒரு அடர்த்தியான அளவில் மனித சமூகத்தைக் கொண்டிருந்த பகுதியில் திடீரென்று மனிதர்கள் அழிந்து அவர்கள் உருவாக்கிய கட்டடங்கள் மட்டும் அடையாளச் சின்னங்களாய் நிற்பதைப் பார்க்க, வாழ்க்கையின் அநித்தியம் உறைக்கிறது. ஊடே நெடு நெடுவென்று நெருக்கமாய் மரங்கள். இங்கே வெய்யிலும், மழையும் மிக நன்றாகவே காயவும், பெய்யவும் செய்கின்றன.

வழியில் சொற்பமாய் எப்போதாவது எதிர்படும் ஒன்றிரண்டு இளம் பெண்களின் யவ்வனத்தில் ஜீவன் உருகினான். சே! என்னா வார்ப்பு?, என்னா கலர்?. சதா வெளுப்பு நிறங்களிலேயே பெண்களைப் பார்த்திருந்தவனுக்கு, கறுப்பு நிறத்தின் பல்வேறு ரகங்களில் வனப்பாக இருக்கும் அந்தப் பெண்கள் பெரிய ஈர்ப்பாக இருந்தனர். இங்கே மனிதசக்தியே பிரதான சக்தி என்பதால் ஆண்கள் கட்டுமஸ்த்தாக வலிமையுடனும், பெண்கள் ஒரேமாதிரியாக மதமதவென்று புஷ்டியாகவும் வலுவுடனும் இருக்கிறார்கள். அங்கிருக்கும் மாளிகைகளின் மேல்பகுதிகளில் எல்லாம் பாதுகாப்பாக பறவையினங்கள் ஆக்கிரமித்திருந்தன.அவைகள் போடும்விதவிதமான சத்தங்கள் இங்கே வரை கேட்கின்றன.. அவன் மெய் மறந்து பார்த்துக் கொண்டே வர, அப்போதுதான் கவனித்தான் வெளியே எதையோ காட்டி விவரிப்பாக அவனுக்குச் சொல்லிக் கொண்டேயிருந்த ஸோம்னா தாராளமாய் அவன் தொடையின் மேல் வலது கையை வைத்திருந்தாள்.,

பதிலுக்கு அவன் ஊக்கம் பெற்று அவள் தோளின் மேல் கையைப் போட்டு இழுத்து அணைத்து இச் பதிக்க முயற்சித்தான். எதிர் முனையில் மறுப்பில்லை. ஆஹா இந்த பழம் இவ்வளவு சீக்கிரம் நம்ம மடியில் வந்து விழுந்து விட்டதா?. அ..ஆ.னா.ல்.. என்னஇவள்? எவ்வித உணர்ச்சி பிரதிபலிப்புமின்றி ஒரு மரம்போல இருக்கிறாளே. இந்த விஷயத்தில் ஆண்களுக்கு தூண்டுதல்தரக்கூடிய வெட்கம் அவளிடத்தில் அறவே இல்லை.அவனுக்குஅது வித்தியாசமாகப் பட்டது. மீண்டும் அவள் புஜத்தைப் பற்றியபோது “ ஜீவன்! என்ன பண்ணப் போறீங்க?. அதற்கு இன்னும் ரெண்டுமாசம் பொறுங்கள்”—என்று சொல்லிவிட்டு ஸோம்னா வண்டியை நிறுத்தினாள்.சே! அதை கூட ஒரு நளினமில்லாமல் செத்தவனுக்கு வெத்தலை பாக்கு குடுத்தாற் போல சொல்லில் வறட்சி. “எதுக்கு ரெண்டு மாசம்?.”—அவள் பதில் சொல்லவில்லை. “ சரி ஸோம்னா! நாம் இப்போது எங்கே வந்திருக்கிறோம்?..” “ எங்கள் பகுதியில்இருக்கும் விஞ்ஞானி கோபன். அவரைத்தான் இப்போது பார்க்கப் போகீறீர்கள்.” .

விஞ்ஞானி சராசரிக்கு சற்று உயரமாக இருந்தார். வயோதிகம் காரணமாய் அவர் நிற்கும்போது கூன் விழுகிறது. இருவரும் பரஸ்பரம் வணக்கம் சொன்ன பிறகு நேரிடையாக விஷயத்திற்கு வந்துவிட்டார். “நண்பரே! மனித இனம் இங்கே வேகமாய் அழிந்துக் கொண்டு இருக்கிறது. எங்களுக்கு அதற்கான காரணங்களும் தெரியவில்லை, தீர்வுகளும் தெரியவில்லை. அதை ஆராயும் திறமையான விஞ்ஞானிகளும் இன்று எங்களிடம் இல்லை. இந்த கிரகத்தில் ஒரு காலத்தில் மின்சார தயாரிப்பு இருந்திருக்கிறது. மனிதர்களின் பற்றாக் குறையினால் பராமரிக்கும் நுணுக்கம் தெரிந்த ஆட்களின்றி இங்கிருந்த பல மின்நிலையங்களும், அணுமின் நிலையங்களும் வெடித்துச் சிதறி லட்ச லட்சமாக மனிதர்கள், உயிரினங்கள் அழிந்ததாக குறிப்புகள் இருக்கின்றன. இப்படித்தான் பலபல அறிவியல் முன்னேற்றங்களெல்லாம் எங்களிடமிருந்து போய்விட்டன.. இன்னும் சொல்லப் போனால்

எங்கள் பூமியிலிருந்து வெட்டி எடுக்கப்படும் திட,திரவ,வாயு, எரிபொருட்கள் சுத்தமாய் தீர்ந்து போய்விட்ட காலத்திலிருந்தே எங்கள் அழிவுகள் ஆரம்பித்து விட்டனவாம். இன்று அறிவியலில்…? பூஜ்ஜியம். இரண்டாயிரம் ஆண்டுகள் பின்னால் போய்விட்டோம். இப்போது நான் சொல்லிய அத்தனை விஷயங்களும் என் முன்னோர்கள் எழுதி வைத்த குறிப்புகளை வைத்துதான் சொல்கிறேன். நாங்கள் யாரும் நேரடிக் காட்சியாக எதையும் பார்த்ததில்லை என்பதுதான் உண்மை.ஆச்சரியமாக சூரியஒளி சக்தி பற்றிய விஷயஞானம் மட்டும் இன்றும் எங்களிடம் உள்ளது. “என்னா கதையாக இருக்கு?.கற்ற அறிவியல் தொழில் நுட்பங்கள் எப்படி மறந்து போகும்?.” “மறக்கவில்லை மறைந்து போனார்கள். ஒரு புள்ளி விவரம் சொல்றேன் கேளுங்க. முன்னொரு காலத்தில் எங்கள் பூமியின் மக்கள்தொகை நினைத்துப் பார்க்க முடியாத அளவு பெருகிப் போய் விட்டதாம்..1640 கோடி. அசுர வளர்ச்சி. ஒரு காலத்தில் உலகத்தின் மொத்த ஜனத்தொகையில் நூறு கோடிகள் கூடுவதற்கு இருநூறு வருஷங்கள் ஆயிற்றாம். கடைசியாக ஐந்து வருஷங்களிலேயே நூறு கோடிகள் என்ற வேகத்தில் கூடியிருக்கிறது. அந்தளவுக்கு வளர்ச்சி வேகம்.”—–ஜீவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

“அய்யய்யோ! எங்கள் பூமியின் இன்றைய ஜனத்தொகை 800 கோடி, இதற்கே நாங்கள் சொல்ல முடியாத கஷ்டங்களையும் பட்டினிச் சாவுகளையும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம். உணவு, தண்ணீர் எல்லாமே பற்றாக்குறை. 1640 கோடி என்றால் ஐயய்யோ!.” ”ஆமாம் காலங்காலமாய் எங்களுக்கு வாய்த்த தலைவர்கள் மக்கள் நலனும், தொலைநோக்குப் பார்வையும் இல்லாதவர்களாகப் போனது எங்களின் துயரம். மக்கள் தொகை பெருக்கத்தை தடுக்க அவர்கள் யோசிக்கவே இல்லை. அரசாங்கப் பணத்தை திருடுவதற்கு திட்டமிடவே அவர்களுக்கு நேரம் சரியாக இருந்தது. ஆனால் பின்னாளில் அவர்கள் சேர்த்த அத்தனை செல்வங்களும், அவர்களின் உயிர்களும் மக்களால் சூறையாடப்பட்டு விட்டன என்பது வேறு விஷயம். யோசித்துப் பாருங்கள் கற்பனைசெய்ய முடியாத அளவுக்கு மக்கள் வெள்ளம். சாப்பிட எதுவுமில்லை.

தண்ணீர் பற்றாக்குறை. பூமியின் சராசரி வெப்பம் ஏகத்துக்கு எகிறிவிட, ஜீவ நதிகளெல்லாம் வறண்டு போய், மழையும் அருகிப்போய், பசி..பசி…உணவுக்காகவும், தண்ணீருக்காகவும் அப்படி அலைந்து செத்திருக்கிறார்கள். எஞ்சியிருந்த மிருகங்களை எல்லாம் காலி பண்ணிவிட்டு, கடைசியில் பசிக் கொடுமை தாளாமல் அன்றைக்கு இங்கே சுலபமாய் கிடைக்கக் கூடியதாக இருந்த மனித மாமிசத்தை சாப்பிட ஆரம்பித்தார்களாம். எளியோரெல்லாம் வலியோருக்கு உணவாகினார்களாம். ஆமாம் நண்பரே! எங்களை நாங்களே தின்றோம். இந்த பசிப் போராட்டத்தில் தகுதியானது தப்பிப் பிழைக்கும் என்ற உயிரியல் கோட்பாட்டின்படி உடல் வலிமைகள் மட்டுமே வாழ்க்கைப் போராட்டத்தில் வெற்றி பெற்றன.. பல பல மேதைகளும், விஞ்ஞானிகளும், வல்லுனர்களும் காணாமல் போனார்கள். இன்றைக்கு யோசிக்கிற போது இப்படி கூட நடந்திருக்குமா? என்று அதிர்ச்சியாக இருக்கிறது. ஆனால் அப்படித்தான் நடந்ததாக குறிப்புகள் கூறுகின்றன.. இது இங்கு மட்டுமில்லை, உலகம் முழுக்க நிகழ்ந்த நிகழ்வுகள்.” —ஜீவன் அதிர்ச்சியில் உறைந்துபோய் நின்றான். பேசவாய் இல்லை. ஜீவன் சற்று இடைவெளி விட்டு சொன்னான் “கோபன் அவர்களே எல்லாருக்கும் எல்லாமும் கிடைத்துக் கொண்டிருக்கும் வரையில்தான் நாமும் மனிதர்கள். இல்லையென்றால் விலங்குகள்தான்.”

“உண்மை. அந்த காலக் கட்டத்திற்கு அப்புறந்தான் பிரச்சினையே எழுந்தததாம். இங்கே ஒரு அதிசயம் நிகழ ஆரம்பித்தது. மக்கள்தொகை எப்படி என்று தெரியாமலேயே படிப்படியாக அதேசமயம் படுவேகமாகக் குறைய ஆரம்பித்து விட்டதாம்.. அப்படி குறைந்து வருவதை எம்மக்கள் தெரிந்துக் கொள்ளவில்லை.ரொம்ப காலங்களுக்கப்புறம் நிலைமை கைமீறி போன பின்னால்தான் உணர்ந்திருக்கிறார்கள். அதற்கப்புறம் சுதாரித்துக் கொண்டு பல நாடுகளும் காரணங்களை ஆராய்ந்திருக்கின்றன. ஓரளவுக்கு காரணம் தெரிந்தது பிறப்பு விகிதம் குறைந்திருந்தது. எப்படி என்பதில் தீர்வு காணமுடியாமல் நாட்டுக்கு நாடு குழப்பங்கள். அப்படி நீடித்துக் கொண்டேயிருந்த குழப்பங்களூடே மக்கள்தொகை குறைந்துக் கொண்டே வந்து இன்றையதேதிக்கு உலகின் மொத்த மக்கள் தொகை வெறும் நூற்றுநாற்பது கோடிகள்தான். இதுவரையிலும் காரணம் தெரியவில்லை. எங்களுக்கு தெரிந்து விட்டது மனித குலத்திற்கு கேடு வந்திருக்கிறது, முழுமையாக அழியப் போகிறோம்.”—அவர் முகத்தை பொத்திக் கொண்டார்.”

“இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது?, மனுஷனே மனுஷனை தின்று தீர்த்திருப்பான்…” “அப்படி இல்லை, அது ஒரு கட்டம் வரைக்கும்தான். மக்கள் மனித மாமிசம் தின்பதை நிறுத்தி நானூறு ஐந்நூறு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன. பல தலைமுறைகள் கடந்து விட்டன. ஆனால் இன்றைக்கும் தானே குறைந்துக் கொண்டே இருக்கிறோம்?.இந்த இடைப்பட்ட காலத்தில் ஒன்பது தடவைகள் பெருத்த அளவில் பூகம்பங்களும், பத்து தடவைகள் ஆழிப்பேரலை சாவுகளும், அப்புறம் விபத்துக்களால், வியாதிகளால் சாவுகள், முதுமைச்சாவுகள், புதுசுபுதுசாகத் தோன்றும் வைரஸ் தொற்று சாவுகள் போன்ற பலப்பல இனங்களில் அழிவுகள் ஏற்பட்டுக் கொண்டேதான் இருக்கின்றன. ஆனால் இவை அதிவேக மக்கள்தொகை குறைவுக்கான பொருத்தமான காரணங்களில்லை. போதாது.”— ஜீவனுக்கும் குழப்பமாக இருந்த்து.

. மறுநாள் இரவு இமாவுடன் பேசிக் கொண்டிருந்தான். அதற்குள் அங்கே மண் பரிசோதனைகள் முழுமையாக முடிந்து, காற்று மாதிரிகள் அடைத்த சீலிட்ட பைகள் வந்திறங்கியிருந்தன. அந்நேரத்துக்கு இமா சற்று காட்டமாகக் கேட்டாள். அதற்குள் இவர்களுக்கிடையில் ஒரு நெருக்கம் வர ஆரம்பித்திருந்தது.

“என்ன நேற்று ஸோம்னாவை சீண்டிப் பார்த்தியா?” “இல்லையே. யார் சொன்னது?.” —-இப்போது இமா முகத்தில் சற்று கடுமை தெரிந்தது. “த்தூ! பொய்காரா! ஸோம்னாவை நீ உறவுக்கு பலவந்தப் படுத்தியிருக்கிறாய். அவள் ரெண்டு மூணு ஆளுங்களோட ரகசியமா பேசிக்கிட்டிருந்ததை நானே கேட்டேன். உன் சேட்டையைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தாள். அவர்கள் சமயம் பார்த்து உன்னை மடக்கிப் பிடிச்சி அவளுக்கு ஜோடியாக்கிட திட்டம் போட்டிருக்காங்க, ஜாக்கிரதை.”—-அவன் நம்பமுடியாதவனாக நின்றான். “வந்த இடத்தில் அப்படி நடந்தால் நீ இந்த ஓரியன் கிரகத்தின் பிரஜையாக ஆகவேண்டியதுதான். மறுத்தால் கொன்றுவிடுவார்கள். ஏற்கனவே நம்முடைய இரண்டு விஞ்ஞானிகள் இதே விஷயத்தினால் செத்திருக்கிறார்கள். இல்லை ஸோம்னாவை நம்ம பூமிக்கு கூட்டிட்டுப் போய்விடலாம் என்று நீ நினைத்தால், அது நடக்காது. நம்ம விண்கலம் துல்லியமாக நம் இரண்டு பேருடைய எடைக்குத்தான் வடிவமைக்கப் பட்டுள்ளது. அப்படி இல்லாமல் என்னை இந்த கிரகத்திலேயே உயிருடனோ,பிணமாகவோ தள்ளிவிட்டு அவளை கூட்டிப் போயிடலாம் என்று நீ யோசிப்பாயானால்.”

“இமா..இமா..! என்ன என்னை அவ்வளவு கேவலமாக எடை பொட்டு விட்டாய். உன்னை விடவா அவள்?.” “ஜீவன்!எனக்கு ஆண்களின் புத்தி தெரியும். அப்படி என்னை இங்கேயே தள்ளிட்டு அவளுடன் போய்விடலாம்னு நீ நினைத்தால், அதுவும் நடக்காது. இந்த ஏவூர்தியை சரியான பாதையில் செலுத்தி பூமியை அடையும் மார்க்கம் எனக்கு மட்டுமே தெரியும். சிஸ்டத்திற்கான பாஸ்வேர்ட் எனக்கு மட்டுமே தெரியும். அதற்காக மட்டுமே பணிக்கப் பட்டவள் நான். நல்லா யோசிச்சிக்கோ.”—ஜீவன் யோசனையில் ஆழ்ந்தான்.

இந்த கிரகத்தைப் பொறுத்தமட்டில் ஒரு விஷயம் மட்டும் ஆரம்பத்திலிருந்தே ஜீவனுக்கு உறுத்திக் கொண்டு இருக்கிறது. அதை யோசிக்கிற போது ஸோம்னாவின் திட்டம் பற்றி இமா சொன்னது, ஜீவனுக்கு நம்ப முடியாததாக இருந்தது. ஆணோ, பெண்ணோ, இரண்டு பேருமே இங்கே சரியாக இல்லை. இவர்களிடம் என்னவோ தப்பு இருக்கிறது. ஆமாம் எல்லோருமே ஒரு துறவு நிலையில் வாழ்கிற மாதிரிதான் இருக்கிறார்கள். ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையில் இருக்க வேண்டிய அந்த நேசம், நெருக்கம், எல்லா உயிரினங்களுக்கும் உள்ள அந்த ஆண் பெண் ஈர்ப்பு இங்கே மனிதர்களிடம் பார்க்கமுடியவில்லையே. எல்லோரும் மந்திரித்து விட்டவர்கள் போல ஓடிக் கொண்டிருக்கின்றார்களே. காதலோடு பேசிச் செல்லும் ஜோடிகளை எங்கும் பார்க்க முடியவில்லையே. சாலையில் ஒரு அழகிய பெண் நடந்து சென்றால் பூமியில் பத்து கண்களாவது மொய்க்கும். கிழவன் கூட ஒரு தடவை அழகை ரசித்து வைப்பான். இங்கே ஒருத்தன் கூடஅப்படி இல்லையே அது ஏன்?. ஸோம்னா கூட என் போன்ற ஆம்பளை கைபட்டும் கட்டை மாதிரி இருக்காளே. லயிப்போ, வெட்கமோ இல்லையே. ஒரு வேளை அவ பெண்ணில்லையோ. ஆமாம் ஏன் அப்படியிருக்கக் கூடாது?.நாளைக்கு என்ன ஆனாலும் சரி இந்த விஷயத்தை உறுதி செய்திட்றதே சரி.

மறுநாள் ஸோம்னாவுடன் வெளியே கிளம்பி கொஞ்ச தூரம் போனதும் ஒரு தனிமையான இடத்தில் நிறுத்தச் சொன்னான். “ஸோம்னா! எனக்கு உன்மேல் சில சந்தேகங்கள் இருக்கின்றன. நீதான் தீர்த்து வைக்க வேண்டும். தலை வெடிக்குது ”. “என்ன சும்மா வளர்த்தாம கேளு.”—இந்த இரண்டு மூன்று நாட்களிலேயே ஜீவனிடம் ஒருமையில் பேசும் உரிமையை எடுத்துக் கொண்டு விட்டாள். “உண்மையில் நீ பெண்ணில்லையா திருநங்கையா?.” “ஏய்! என்ன என்னைப் பார்த்தால் பெண்ணாய் தெரியலையா?.” “ ஆமாம் தெரியல நிரூபி.” “ எப்படி ?.” “ஈஸி. குழந்தைகளை ஆணா பெண்ணான்னு எப்படி கண்டுபிடிக்கிறோம்?.” –அவள் சிரித்து விட்டாள். “ உன்னுடைய இந்த பதில் நீ யார்னு உன்னை அடையாளம் காட்டுது ஜீவன். ஆனால் எனக்கு ஒரு விஷயம் புரியல. நான் பெண்தான்னு நிரூபிச்சிட்றேன். அப்புறம் நமக்குள்ள அப்படியென்ன நடந்துடும்?. அதுக்கு ரெண்டுமாசம் காத்திருக்கணுமில்ல?. உடனே ஏன் ரெண்டுமாசம்னு கேட்டு தொல்லை பண்ணக் கூடாது”— கண்டிப்புடன் சொல்லிவிட்டு மீண்டும் பளீரென்று சிரித்தாள். என்னடா இவ எப்ப பார்த்தாலும் ரெண்டுமாசம் ரெண்டுமாசம்னு பீலா விட்டுக்கிட்டு இருக்கா. அது என்னன்னு தெரிஞ்சிக்கலேன்னா மண்டை வெடிச்சிடும் போல இருக்குதே. இன்னும் வேகமாக முயற்சிக்கலாம்னா இந்த ஒரியன் கிரக மனுஷங்களைப் பத்தி பயம் வருது. அடிச்சே கொன்னுடுவாங்களாமே. ஒவ்வொருத்தனும் திம்சுகட்டை மாதிரி இருக்கான்.

ஏற்கனவே வரையறுக்கப் பட்டிருந்த திட்டப்படி மண், காற்று, ரத்தம் என்று மூன்று விதமான சோதனைகளும் முடிந்து விட்ட நிலையில் நேற்றுடன் இவர்கள் ஓரியன் கிரகத்தில் காலடி வைத்து ஒரு மாதமாகி விட்டது. இன்றுவரை ஒரு சின்ன விஷயம் கூட பிடிபடவில்லை. இடையில் தலைவர் சூர்யா அவ்வப்போது வந்து பார்த்துவிட்டுச் சென்றார். இன்றைக்கு ஸீகம்–I ,ஸீகம்-II, களிடம் இறுதி அறிக்கையைப் பெறவேண்டிய நாள். இதிலாவது காரணங்கள் ஏதாவது தெரியுதான்னு பார்க்கலாம். ஜீவனும் இமாவும் மண், காற்று , ரத்தத் தடவல்களின் மாதிரிகளை ஸீகம்—I யிடம் கொடுத்து பெறப்பட்ட அறிக்கைகளை ஸீகம்—II யிடம் கொடுத்து விட்டு காத்திருந்தார்கள். அந்த பெரிய ஹாலில் தலைவர் சூர்யாவும்,, விஞ்ஞானி கோபனும்கூட காத்திருந்தார்கள். எல்லாவற்றையும் அலசி முடித்து ஒருமணி நேரம் கடந்த பின்பு இறுதி அறிக்கை திரையில் வர ஆரம்பித்தது.

1) மண் ——- பரவலாக எல்லா பகுதிகளிலும் மண்ணில் அடர்த்தியாக பூச்சிக்கொல்லி ரசாயனங்கள் ஊடுருவியுள்ளன. இந்த விஷம் ஏறக் குறைய 6%—12% அளவுக்கு மனிதர்களிடம் மலட்டுத்தன்மையை உண்டாக்கியிருக்கக் கூடும். அதேசமயம் Y குரோமோசோம்களின் ஆதிக்கத்தினால் அதிக அதிகளவில் ஆண்குழந்தைகள் மட்டுமே பிறக்கும் நிலை வரும், வந்திருக்கும். (பிறப்பு விகித புள்ளிவிவரங்களை சரிபார்க்க அது சரி என்றது.)

2) வளிமண்டலம் — காற்றில் எல்லா வாயுக்களும் உயிரினங்களுக்கு ஆரோக்கியம் தரும் அளவில் கலந்திருக்கின்றன.

3) மனிதர்களின்ரத்தத்தடவல்கள்—- இங்குள்ள மனிதர்களின் dio.3 ஜீன் தொகுதிகள், மனிதர்களின் ஜீன்கள் போல் இல்லை. அமைப்பில் வித்தியாசப்படுகின்றன. ஜீவனும்,இமாவும் இப்போது பரபரப்பானார்கள். இந்த ரகசியம் சற்று குழப்பமாக இருந்தாலும் ஏன் என்பதற்கான விடைக்கு நெருக்கமாக வந்து விட்டதாக உள்ளுணர்வு சொல்லியது. (எல்லா உயிரினங்களிலும் dio.3 ஜீன்களின் தொகுப்பு தான் பிட்யூட்டரி, பீனியல் சுரப்பிகள், மற்றும் ஸ்ட்ரையேட்டம் பகுதியில் சுரக்கும் D2 டோப்பமைன் ரிஸப்டார் புரதம் மூலம் பாலியல் உணர்வுகளையும், செயல்களையும் கட்டுப்படுத்துகின்றன. பசி உணர்வையும், சாப்பிட்ட பின்பு போதும் என்ற நிறைவையும் கூட கொடுப்பது இந்த D2 டோப்பமைன் ரிஸப்டார் புரதங்கள்தான்).

சார்!….சார்!…சார்!…எங்க ஓட்றீங்க?. நிச்சயமா இது ஜீனோம் பத்தி கிளாஸ் இல்லை சார்!. கதைதான் சார், கதைதான் நம்புங்க. சரி…சரி.. விட்ருவோம்.சிலதை விலாவாரியா சொல்லலாம்னு நெனைச்சேன். சரி.. இங்க இருக்கிற மனுஷங்களுக்கு மட்டும் பாலியலை கட்டுப்படுத்துகிற ஜீன்ல ஏதோ வித்தியாசம் இருக்கு.அத்த மனசுல வெச்சிக்குங்க போதும்.. ஜீவன் இப்போது தன் கேள்வியை தட்டினான். “இதனால் மனிதர்களுக்கு என்ன பாதிப்புகள்” “கருத்தரிப்பு மோசமாய் குறைந்து போகும்.” “எப்படி?.” —–சிறிது நேரம் காத்திருந்தான். அதற்கு பதிலேதும் வரவில்லை.ஒருக்கால் அதனிடம் விடை இல்லையோ. அதற்குள் கோபன் குறுக்கிட்டு அவசரமாய தட்டினார். “இந்த மாற்றம் எப்படி ஏற்பட்டிருக்க முடியும்?.”— பதில் வார்த்தைகள் திரையில் வரத் துவங்கின.

” உயிரியல் ஆராய்ச்சியாளர்கள் இதற்கு விடை சொல்வார்கள். இது காலத்தின் கட்டாயம். அதுதான் பரிணாம மாற்றம். பரிணாமம் என்பதுஆயிரக் கணக்கான, லட்சக் கணக்கான வருடங்களில்தான் ஏற்படக் கூடும் என்றொரு சித்தாந்தம் உண்டு. ஆனால் கால இடைவெளிகளை நெருக்கடிகள்தான் தீர்மானிக்கின்றன என்ற கருத்தும் இருக்கிறது.. பரிணாமம் அசாத்திய பலம் பெற்றது. எந்த பரிணாமம் உயிரினங்களின் வெற்றிகரமான வாழ்க்கையை வடிவமைத்து, அதற்கு உறுதுணையாகவும் இருக்கிறதோ, அதே பரிணாமந்தான் உயிர்களின் அழிவுக்கும் காரணியாகிறது. இயற்கையின் சித்தாந்தம் இங்கே நிலைநாட்டப் பட்டிருக்கிறது. “இந்த உலகம் தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ளும் தன்மை கொண்டுள்ளது. மிகுதியாக பெருகிப் போகும் உயிரினங்களை அளவோடு அழித்து ஒரு மாதிரி சமன் செய்துக் கொள்ளும் தன்மையும் இருக்கிறது. பூகம்பங்களும், வெள்ளமும், மழையும், உயிரினங்களை சமன் செய்யும் பூமியின் சாகஸங்களில் ஒன்று என்பது இயற்கை சித்தாந்தம். ஆனால் மனிதனின் இனப் பெருக்கத்தை மட்டும் கட்டுப் படுத்த இயலவில்லை. அவன் தன் அறிவுக் கூர்மையால் எப்போதும் தப்பித்தே வந்திருக்கிறான். ஆனால் இந்த தடவை பரிணாமம் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. மனிதர்களின் ஜீனுக்குள் நுழைந்து மனித உற்பத்தியை குறைத்து, அவனும் தப்பிக்க முடியாதபடி தன் சர்வ வல்லமையை, தலைமைப் பண்பை நிலைநாட்டி இருக்கிறது.” —ஜீவன் தன் கேள்வியை தட்டினான். “இந்த கிரகத்தில் மனிதகுலம் முழுவதுமாக அழியப் போகிறதா?”

“பரிணாமத்தை கணிக்க முடியாது. இயற்கையை வரையறுக்க முடியாது. இதற்கு காலத்தால் மட்டுமே பதில் சொல்ல முடியும். மீண்டும் ஜீன்களில் மாற்றம் வரலாம், மனிதகுலம் துளிர்க்கலாம், அப்படி நிகழாமலும் போகலாம்.”

இப்போது விஞ்ஞானி கோபன் அடுத்த கேள்வியைத் தட்டினார். “மனித ஜீன்களில் நாங்கள் ஏதாவது திருத்தங்கள் செய்து பழைய மனிதர்களை உருவாக்க முடியுமா?..” —அது சிறிது நேரம் மவுனம் சாதித்தது. “வெற்றி கிட்ட வாழ்த்துக்கள்.”

மறுநாள் காலை விஞ்ஞானியிடமும்,தலைவரிடமும் சிலவற்றை கலந்து ஆலோசிக்க வேண்டி ஜீவன் வெளியே கிளம்பும்போது கவனித்தான். ஸோம்னா சற்று தொலைவில் யாரோ இரண்டு ஆட்களுடன் ரகசியம் பேசிக் கொண்டிருந்தாள். ஆட்கள் வாட்டசாட்டமாய் இருந்தார்கள். இமா எச்சரித்தது நினைவுக்குள் வந்துபோனது. ஆனால் ஸீகம்—II சொன்ன வித்தியாசப் படும் dio3 ஜீன்கள் இந்த மனிதர்களுக்கு என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தி உற்பத்தியை குறைக்கின்றன?, என்பது பற்றி உறுதி செய்ய வேண்டியிருக்கிறது. ஜனத்தொகை வீழ்ச்சிக்கான சூட்சுமம் இதில்தான் ஒளிந்திருக்கிறது. முக்கியமாக அதற்கான விடையை ஸோம்னா மூலம்தான் நாம்மால் தெரிந்துக் கொள்ள முடியும். அன்றைக்கு மதியம் என்ன ஆனாலும் சரி என்று அவன் ஸோம்னாவை மீண்டும் சீண்டினான்.

வேண்டுமென்றே சற்று எல்லை மீறினான். இழுத்து அவளை கட்டியணைத்து உணர்ச்சியுடன் அழுந்த இச் பதிக்க, அப்போதும் அவளிடம் எந்த பாதிப்பும் இல்லை, அதைவிட சுவாரஸ்யமாக வெளியே பார்த்துக் கொண்டிருக்கிறாள். இதென்ன சவம் போல. மீண்டும் அவளிடம் கூடுதலாக சேட்டையைக் காட்ட, அப்போதுதான் சற்று சினம் காட்டினாள். ”சும்மா இருங்க. இந்த விஷயத்திற்கு இன்னும் இரண்டு மாதங்கள் காத்திருக்கணும்னு ஏற்கனவே உங்களிடம் சொல்லியிருக்கிறேன். அப்புறம் எதுக்கு இப்படி?.”—என்றாள். “அதென்ன கணக்கு இரண்டு மாதங்கள்? சொல்லு..”—அதற்கு அவள் பதில் சொல்லாமல் தலையிலடித்துக் கொண்டு போய்விட்டாள். அவன் விடுவதாக இல்லை. அப்போதே கிளம்பி விஞ்ஞானி கோபனிடம் போய் நின்றான்.

“ஆமாம் திடீர்னு.அதில் என்ன உங்களுக்கு சந்தேகம்? நீங்களும் மனுஷன் தானே?. அதற்கு.இன்னும் ரெண்டு மாசம் போகணுமில்ல?…”. “அதான் ஏன் அந்த ரெண்டுமாசம்?.”—அவர் சிரித்து விட்டார்.

“சரி..சரி..இதுக்கு பதில் சொல்லுங்க அந்த விஷயத்துக்கு இப்ப நீங்க தயாரா?.” *

“நான் எப்பவுமே தயார்.” ——அவர் பலமாக சிரித்துவிட்டு “இல்லை, சாத்தியமில்லை.” — அவர் போய்விட்டார். ச்சே! இந்த கிழவனை நம்பியும் பிரயோஜனமில்லை. ஸோம்னாவைத்தான் பிடிக்கணும். இமாவையும் இழுத்துக் கொண்டு ஓடினான். அப்பொது ஸோம்னா அன்றைக்கு பேசிக்கொண்டிருந்த திம்சு கட்டை மனிதர்களுடன் பேசிக் கொண்டிருந்தாள். இவனுக்கு உள்ளே சிலீரென்று பயம் கவ்வியது. சே..சே..வெளியே காட்டி கொள்ளக் கூடாது

ஸோம்னா ஜீவனையும், இமாவையும் பார்த்ததும் அவசரமாக அவர்களை அனுப்பிவிட்டு வந்தாள்.

“ஸோம்னா! நான் முதலிலேயே சொல்லிட்றேன். உன்னிடம் கொஞ்சம் எல்லை மீறி நடந்துக் கொண்டது ஒரு ஆராய்ச்சிக்காகத்தான். தப்பா எடுத்துக்காதே.” “அதில தப்பு எங்கே இருக்கு?. எல்லோருக்கும் இருக்கும் இயற்கையான உணர்ச்சிதானே?. ரெண்டுமாசம் எப்ப முடியும்னு நானும் ஆர்வத்தோட காத்திருக்கேன் ஜீவன்.”—-இமா அழுதுடுவாள் போல இருந்தாள். “சரி ஸோம்னா இப்ப உன்னிடம் பேசிக் கொண்டிருந்த அந்த ரெண்டு நபர்கள் யார்?. அவங்களோடு உன்னை அடிக்கடி பார்க்கிறேனே.” “என் கணவர்கள்.” “ரெண்டு பேருமேவா?.” “ஆமாம்.” “ இதுக்கு மேல நானுமா?.ஐயோ! நான் அம்பேல்ரா சாமி. சரி..சரி..இங்க நீங்க எத்தனை பேரை வேணாலும் கட்டிக்கலாமா?.” “ஆமாம் அந்த விஷயத்திற்கு அவர்கள் கணவர்களாக இருக்க வேண்டும்என்பது கூட இல்லை.எதுவும் தடைகிடையாது. பற்றாக்குறைதான் காரணம்.. . ” —-ஜீவனும், இமாவும் பேஸ்து அடிச்சி நின்னுட்டாங்க. “இப்பவாவது சொல்லு அது என்ன ரெண்டு மாசம்?. மண்டை வெடிக்குது.” —

அப்புறம் ஸோம்னா ஜீவனிடம் நெருங்கி வந்து சொன்னதில் ரெண்டு பேருக்கும் அதிர்ச்சி. ஓ! கடவுளே! இதென்ன சபித்து விட்ட இனம் மாதிரி. ஒரு வேளை பல தலைமுறைகளுக்கு முன்பாகவே இந்த பண்பு மாற்றங்கள் வந்திருக்கலாமோ. அதனால்தான் இங்கே யாருக்கும் நிஜம் தெரியவில்லையோ. ஆச்சரியம், அதிர்ச்சி தாளமுடியவில்லை. ஒரு வேளை இவர்கள் மனிதர்கள் இல்லையோ. மனிதர்கள் மாதிரியான தோற்றத்தில் ஒரு விலங்கினமோ?. இல்லை இல்லை இது மனித இனம்தான் என்றால் எப்படி இது சாத்தியமாச்சு?. இவர்களும் நம்மைப் போன்ற மனிதர்கள்தானே?. அதனால்தானே அன்றைக்கு இங்கே மக்கள்தொகை1640 கோடியாக பெருகியது?. இந்தஉடலியல் பண்பு மாற்றம் எப்போது நடந்திருக்கும்?, எப்படி நேர்ந்திருக்கும்?.

. சே! உப்புசப்பு இல்லாத வாழ்க்கை. ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் எத்தனை விதமான வாழ்க்கையை அர்த்தப் படுத்தும் சுவாரஸ்யங்கள்?. இது எதுவுமில்லாமல், துறவு நிலையில் ஒரு வாழ்க்கை.ச்சே!. இந்த ஓரியன் கிரகத்து மனிதர்களை நினைக்க பாவமாய் இருந்தது.பாலியலில் இவங்க பிரச்சினையின் ரகசியம் என்னவென்பதை அன்றைக்கு ஸோம்னா போட்டுடைத்தாள், கோபன் அதை உறுதி செய்தார்.. “என்ன புரியாத மாதிரி நடிக்கிறீர்கள்?. நமக்கெல்லாம் இனச்சேர்க்கை காலம் என்பது வருடத்தில் பனிபெய்யும் அந்த ஒரேயொரு மாதம் மட்டும்தானே?. அதற்கு இன்னும் இரண்டு மாதங்கள் காத்திருக்க வேண்டுமே.. மற்ற சமயங்களில் நமக்கு அந்த உணர்வுகள் துளியும் இல்லாமல் நான் எப்படி உனக்கு உடன் படுவேன்?. நீயுந்தான் என்ன பண்ணிவிடுவாய், சொல்லு.”

ஜீவனுக்கும், இமாவுக்கும் விளங்கி விட்டது. நரிகள், சில வகை மான்கள் வருடத்தில் ஒரு குறிப்பிட்ட பருவ காலத்தில் மட்டும் இனச்சேர்க்கையில் ஈடுபடும். அது போன்ற பாலியல் குறைபாடுகளுடன் சுணங்கிக் கிடக்கும் இந்த ஓரியன் கிரகத்து மனிதர்களின் மேல் இரக்கம் சுரந்தது. இந்த விஷயத்தை யோசிக்க யோசிக்க ஆச்சரியமாகவும், அது ஒரு பெரிய ஆராய்ச்சிக்கான களமாகவும் உள்ள கனமான விஷயமாக இருந்தது. விடையை கண்டுபிடித்தாயிற்று. பரிணாமம் நான்கு விதங்களில் மனித இனப் பெருக்கத்தை ஒடுக்கியிருக்கிறது. 1)மக்களிடம் மலட்டுத்தன்மை அதிகரிப்பு.2)ஆண்களின் பிறப்பு விகிதம் மட்டும் மடங்குகளில் அதிகரிப்பு.3) வருடத்தில் ஒருமாதம் மட்டுமே ஏற்படும் இனச்சேர்க்கை காலமும், அதையொட்டி ஏற்படும் பாலியல் போர்களினால் மடியும் ஆண்களும், குறுகிப்போய்விட்ட கருத்தரிக்கும் வாய்ப்புகளும். 4)இயற்கைச் சீற்றங்களினால் உயரப் போய்விட்ட இறப்பு விகிதமும். போதும், மனிதகுல பேரழிவுக்கு இந்த காரணங்களே போதுமானது. உற்பத்தி இல்லாமல் செலவுமட்டும் அதிகம்,

அவர்கள் ஓரியன் கிரகத்திலிருந்து கிளம்ப வேண்டிய வேளை வந்துவிட்டது. எல்லாருக்கும் எல்லாவற்றிற்குமான காரண காரியங்கள் விளங்கி விட்டன. “கேப்டன்! நல்லவேளை நம்ம பூமியில் இந்த பாலியல் குறைகள் ஏற்படவில்லையோ தப்பித்தோம்.” “ இல்லை இமா! அளவைமீறி மக்கள்தொகைப் பெருக்கம் ஏற்படும் போது நம் பூமியிலும் இந்த நிலை வரும், வரலாம். இன்றைக்கு அங்கே நம்முடைய தேவைக்காக நிலத்தில் அதிகளவில் நாம் கொட்டிக் கொண்டிருக்கும் செயற்கை உரங்களும், பூச்சிக்கொல்லி மருந்துகளும் நாளை விஸ்வரூபம் எடுக்கும்.”

அவர்கள் விடைபெற்று பூமிக்கு கிளம்பும்பொது தலைவர் சூர்யாவும், விஞ்ஞானி கோபனும் கூட இவர்களை வழியனுப்ப வந்திருந்தார்கள். சூர்யா ஜீவனின் கையைப் பிடித்துக் கொண்டு “ஜீவன்! நாங்கள் எங்களுடைய ஜீன்களை திருத்த முடிவு செய்திருக்கிறோம்.இல்லையென்றால் முழுசாக அழிந்து விடுவோம்.எங்களுக்கு உங்களுடைய உதவி தேவை. உங்கள் நாட்டு தலைவருக்கு வேண்டுகோள் அனுப்பியிருக்கிறேன். எங்கள் கோரிக்கையை நீங்களும் சொல்லுங்கள்.”—-ஜீவன் தலையசைத்தான்.

விண்கலம்கிளம்பவிருக்கும்இந்தநேரத்தில் ஒரு விஷயத்தை நினைத்துப் பார்க்க, ஜீவனுக்கும், இமாவுக்கும் உள்ளே சில்லிடுகிறது. பெண்கள் எண்ணிக்கை குறைவாகவும், ஆண்கள் எண்ணிக்கை மிக அதிகமாகவும் பெருத்துப் போய் கிடக்கின்ற இந்த சூழலில் வருஷத்தில் ஒரேயொரு மாதம் மட்டுமே இனப்பெருக்கக் காலம் என்ற நெருக்கடியில் ஆண்களால் பெண்களுக்கு ஏற்படக்கூடிய மோசமான பாலியல் நெருக்கடிகளை, இம்சைகளை, வேதனைகளை, யோசிக்க மனசு பதைக்கிறது. பாவம் பெண்கள். ஆனால் அவர்களுக்கு இதெல்லாம் எப்போதோ பழகிப் போயிருக்கும். ரொம்ப காலங்களாக இப்படித்தானே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்?. என்று மனசு ஒரு பக்கம் சமாதானம் சொல்லிக் கொண்டிருக்கிறது. ஏற்படும் சூழ்நிலைக்கேற்ப தன்னை தகவமைத்துக் கொள்வதுதானே உயிர்கள் தப்பிப் பிழைப்பதற்கான தகுதி.

அவர்கள் கையசைத்து விடைபெற்று விண்கலத்தின் படியில் ஏறும் முன்பாக இமாதான் தலைவர் சூர்யாவிடம் கேட்டாள் . “ தலைவரே! இந்த கிரகத்தில் இந்த இடத்தை`பிரிவு—88’ என்று எண்களால் பிரித்திருக்கிறீர்களே. முற்காலத்திலும் இதற்கு இதே பெயர்தானா?.. ”

“ இன்றைக்குத்தான் இது பிரிவு—88,ஆதியில்இதன் பெயர்– `தமிழ்நாடு’. விண்கலம்நிற்கும்இந்தகாட்டுப்பகுதிதான்அன்றைய— `சென்னை—தேனாம்பேட்டை’.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *