கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம் சிறந்த சிறுகதைகள் 100 (எஸ்.ரா.)  
கதைப்பதிவு: August 10, 2012
பார்வையிட்டோர்: 11,004 
 

ருசியான கறி சாப்பிட வேண்டுமென்றால் முஸ்லீம்களை சிநேகிதர்களாய் வைத்திருக்க வேண்டியது அவசியம் என்பான் பக்தவச்சலம். அவனுக்கென்று பெயர்சொல்லக்கூடிய அளவில் ரகீம், மெகபூப் இருந்தார்கள். பக்தவச்சலம் வீட்டில் யாரும் கறி சாப்பிடுவது இல்லையென்றாலும் அவன் கிடைக்கிற பக்கம் சாப்பிடுவான், நான் கூட ரொம்ப நாளாய் பக்தவச்சலத்தை அய்யர் என்றுதான் நினைத்திருந்தேன், சிவப்பாய் நாமம் போட்ட முகத்தோடு அவனின் விதவை அம்மா வும், அவனின் அண்ணனின் பூணூல் உடம்பும், செத்துப் போய் படத்தில் இருந்த அப்பாவின் நாமம் போட்ட போட்டோவும் திரும்பத் திரும்ப அவனின் ஜாதியைப் பற்றி நினைக்கிறபோதெல்லாம் ஞாபகம் வரும்.

ஒருநாள் வீட்டில் கறி சமைத்திருந்தோம். பாதி சாப்பாட்டில் முகம் வியர்த்து கறியை ருசித்துக் கொண்டிருந்தபோது பக்தவச்சலம் வந்தான். அம்மா “கொஞ்சம் சாதம் சாப்பிடுப்பா” என்றாள். “ஐயோ ..அவங்கெல்லா கறி சாப்புடமாட்டாங்கம்மா..அய்யரு அவங்க ” என்றேன். “நாங்க அய்யரில்லீங்க..:சைவ செட்டியார் ” ரொம்ப நாளாக உறுத்திக் கொண்டிருந்த விஷயத்திற்குப் பதில் கிடைத்தது. “எங்க ஊட்ல சாப்பிடமாட்டங்க; நா அப்பப்போ வெளியே சாப்புடுவேன்”. அம்மா இன்னொரு தட்டை அவன் முன் வைத்தாள். அப்போதுதான் கறியை முதல் முதலில் மெகபூப் வீட்டில் சாப்பிட்டதைப் பற்றிச் சொன்னான் “சொல்லி வெச்சாப்புலே நாலே துண்டுதா; ஆனா ஒவ்வொன்னும் தனி ருசி”. பீங்கான் தட்டில் கறியும் மசாலாவும் துளிகூட இல்லாமல் எச்சில் பண்ணிச் சாப்பிட்டதைச் சொன்னான்.

பின் ஒரு நாள் மாதத்தில் கடைசி சனிக்கிழமையன்று மெகபூப்பிடம் சொல்லி ஸ்கூலிற்குக் கொண்டுவரும் டிபன்பாக்சில் அதே போல் நாலு துண்டு கொண்டு வந்தான். மெகபூப் வீட்டுக்கறியைச் சாப்பிட வேண்டும் என்று பக்தவச்சலத்திடம் நான் ஒரு முறை வெட்கத்துடன் சொன்னதை எப்போதோ சொன்னானாம். நாலாம் பீரிட் நடந்து கொண்டிருந்தபோது “முஸ்லீல் வீட்டுக்கறி சாப்புடலாமா இன்னிக்கு ” என்றான் பக்தவச்சலம். எச்சில் ஊறியது. “மெகபூப் கொண்ணாந்திருக்கான்” அந்த பீரிட் பூகோளப் பாடம் மனசில் பதியவில்லை. சொல்லி வைத்தமாதிரி நாலுதுண்டு மெகபூப்பிற்கு இரண்டும் எனக்கும் பக்தவச்சகலத்திற்கும் இரண்டும். நன்றாகச் சாப்பிட்டோம். அந்த வருஷத்து ரம்ஜானுக்கு என்னைக் கூப்பிடேன் என்று நான் மெகபூபிடம் சொன்னேன். ஆனால் அவன் கூப்பிடவில்லை. பக்தவசலம் மட்டும் போய்ச் சாப்பிட்டுவிட்டு வந்தான். அவன் மேல் எனக்கும் பொறாமைகூட. ஆனாலும் பக்தவச்சலம் ஒல்லியாகத்தான் இருப்பான் என்பதில் எனக்குச் சந்தோசம் உள்ளூர.

வீட்டில் கறி சமைப்பதை நினைக்கிற போதெல்லாம் சேக் மொகீதின் ஞாபகம் வருவார். அவரிடம்தான் எப்போதும் அப்பா மட்டன் வாங்குவார். மட்டன் வாங்குகிற அன்று திடீரென்று சொல்வார். அம்மா நிறைய நிறைய சின்ன வெங்காயத்தைப் பரப்பி உட்காருகிற போதே எங்களுக்குப் புரிந்துவிடும். அப்பா என்றும் சந்தோஷமாய்க் குரல் பிளக்கும். “வாடா மகனே மொகீதின் கடைக்குப் போகலாம்” என்பார். அப்பா மீறிப் போனால் அரைக் கிலோதான் எடுப்பார். அதற்குக்கூட முழுசாய்ப் பணம் கொடுப்பாரா என்பது தெரியாது. காரணம் ஒவ்வொரு முறையும் பொட்டலத்தை என்னிடம் கொடுத்தபின் மொகீதின் மீதியைச் சந்தையன்னிக்குத் தர்ரேனே என்றோ, இதையும் கணக்கிலே வச்சிக்கோ என்றோ, சரி வரட்டுமா என்றோதான் சொல்வார். அவர் அந்தக் கடனை எப்போது கொடுப்பார் என்றுதெரியாது. ஆனால் மொகீதின் அப்பாவிடம் கடன் கேட்டு வந்ததை நான் பார்த்ததில்லை.

வீட்டில் நுழைந்தால் அம்மா கண்களில் கண்ணீரோடு வெங்காயத்தை உரித்துக் கொண்டிருப்பாள். உரித்த வெங்காயத்தை வானலியில் போட்டு வதக்கி ஆட்டாங்கல்லில் போடுவதற்கு முன் எனக்கும், தம்பி பழனிவேலுக்கும் கொஞ்சம் வெந்து வதங்கின வெங்காயம் ஆட்டாங்கல் ஓரத்தில் இருக்கும்: அதை மென்றபடிதான் அம்மாவின் கைகளில் மேல் எங்கள் கைகளையும் ஓட்ட வைத்து மிளகு அரைப்போம். மிளகு இளக வேணும் என்பதற்காக அம்மா அவ்வப்போது தண்ணீர் ஊற்றிக் கல்லை உருட்டுவால்.சில சமயம் மிளகு தெறித்துக் கண்ணில் விழும். பின் எங்கள் கண்களை ஊதித்துடைத்து “வர்ராதேன்னா கேட்டியா..” என்று நகர்த்துவாள். உடனே அந்த இடத்தை விட்டுப் போயிடவேண்டும் என்று தோணாது ஆட்டாங்கல்லிற்குப் பக்கத்திலேயே இருப்போம். அம்மாவுடன் பேச்சுக்குத் துணை யாராவது இருக்கலாமே என்று தோணும். அம்மாவும் அதையே விரும்புவாள். சந்தனமாய் மிளகாய் அரைக்க வேண்டும் என்பாள். “தொட்டு நெத்தியிலே வெச்சுக்கடுமா” என்றால் “அட சீ ..” என்பாள்.

கறி சமைக்க என்று புழக்கடையில் இருந்து சட்டி எடுத்து வருவாள் பின் அங்கேயே அது போய்விடும். ‘மாமிசம் அதிகமா கூடாதடா’ என்பாள். மெகபூப் வீட்லே மட்டும் வாரம் நாலுதரம் ஏம்மா என்றால், அவங்க ஜாதி அப்பிடி, சூரத்தனம் என்பாள். கறி சமைக்க என்று தனியாய்ப் பாத்திரம் உபயோகிப்பதைப் பற்றி மெகபூப்பிடமோ, இரவியிடமோ கேட்க வேண்டும் என்று ரொம்ப நாளாய் மனசில்.

அப்பா அம்மாவிடம் கறி சமைக்கலாமா என்று கேட்டால் உடனே அம்மா சம்மதித்ததாய் எனக்கு நினைவில்லை. அம்மாவிற்கு கறி ஏன் பிடிக்காமற் போயிற்று என்பதற்கு ஏதாவது காரணம் இருகலாம் என்று நினைத்ததுண்டு. இதைப் பற்றி அப்பாவிடம் ஒரு முறை கேட்டேன். ‘அவளுக்கு பெரிய பாப்பா பொண்ணுனுன்னு மனசுல நெனைப்பு’ எரிச்சலாய் சப்தமிட்டுச் சொன்னார். அப்போதுதான் அய்யர்கள் கறி சாப்பிடமாட்டார்கள் என்கிற விஷயம் ஒரு தகவலாய் எனக்குத் தெரிந்தது.

அப்பாவிற்கு ஆட்டுத் தலைக்கறி பிடிக்கும். தலை வாங்கி வரும்போது சொல்லி வைத்தமாதிரி ஆட்டுக்கால்களையும் வாங்கி வருவார். தீயில் கருகினபின்பு ஆட்டுக்கால்களை கழுவி கயிற்றில் கோர்த்து சமையற்கட்டில் அப்பா தொங்கவிட்டு விடுவார். ‘அப்ப்றமா சூப்பு போட்டுக்கலா’என்பார். பின் கறி எடுக்காத ஞாயிறுகளில் சூப்பு கிடைக்கும். அப்பா தன்னிடம் காசில்லாத சமயங்களில்தான் சூப்பு போடச் சொல்வதாக நான் நினைப்பேன் அநேகமாக அது சரியாகத்தான் இருக்கும். தீயில் ஆட்டுத்தலையைக் கறுக்கும்போது வருகிற வாசமே தனி ’உம்’ என்று மூச்சிழுப்பேன். கத்தியால் மயிறை நன்றாகச் சுரண்டிச் சுத்தம் செய்துவிட்டு வெட்டிவர அப்பா அனுப்புவார். மொகீதின் கடையில் ஆட்டுத்தலையை சுத்தம் செய்து வெட்டித் தரவென்று பெரிய வீட்டு நடராஜன் இருப்பான். வெகு லாவகமாகவும் சீக்கிரமாகவும் வெட்டித் தருவான். ஆட்டு மூளை சிதைந்து விடாமல் தனி இலையில் கட்டிக் கொடுப்பான்.

சின்ன வானலியில் அரைத்த மிளகும், உப்பும் சேர்த்து மூளையைச் சமைத்து ருசிப்பதில் ஒரு தனி ருசி. பொட்டுப் பொட்டாய் நடுக் கையில் வைத்து நக்குவேன். அதைப் பங்கிடுவதில் எனக்கும் தம்பி பழனிவேலுக்கும் நிறையத் தடவை சண்டை வந்திருக்கிறது. அம்மாதான் நிவர்த்தி செய்வாள். ஆனாலும் ஒரு நாள்கூட எனக்கு கொஞ்சம் என்று அமா கை நீட்டியதில்லை. அம்மாவிற்கு மூளைக் கறி பிடிக்காது போனது அதிசயந்தான். சூடாக நாக்கில் போட்டுப் பஞ்சு மிட்டாய் மாதிரி அரைப்பது ஒரு அபூர்வமான விஷயம் பழனிவேலுவுக்கு அதெல்லாம் தெரியாது. உடனே முழுங்கிவிட்டுக் கையை நீட்டுவான். அதில் தான் எனக்கும் அவனுக்கும் நிறைய மனஸ்தாபம். அம்மா சொல்கிறாளே என்றுதான் அவனுடன் நான் அதைப் பகிர்ந்து கொள்வேன். முளை சாப்பிடுகிறபோது மட்டும் எனக்குத் தம்பியென்று ஒருத்தன் இல்லாமல் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைப்பேன். ஒரு நாள் அம்மாவிடமும் இதைச் சொல்லிவிட்டேன் ‘அடசச்ண்டாளா, இப்படியொரு ஈனப் புத்தியா உனக்கு..’என்றாள். அப்பாவுக்கும் இது தெரிந்துவிட்டது. ‘இனி எப்ப ஆட்டுத் தலைக்கறி எடுத்தாலும் ரெண்டுதலை எடுக்கப் போறேன். ஒரு தலை மூளை உனக்கு; இன்னொன்று அவனுக்கு..மொகதீன் கடைக்குத் தலக்கறி வெட்டப் போறப்போ நீயும் போயி ஒரு பங்கு தனியே வாங்கிக்கோ’ அப்படி நடந்ததாக எனகு ஞாபகமில்லை. அப்பா ஒரு ஆட்டுத் தலைதான் எப்போதும் எடுத்து வந்திருக்கிறார்.

மெகபூப் , ரகீம் வீட்டிலெல்லாம் அப்படி இல்லை. தலைக்கறியுடன் ஏதாவதொன்றும் கூட இருக்கும். ரகீம் ஈரலுக்கென்று தனிருசி என்பான். எனக்கு அப்படியொன்றும் தோன்றியதில்லை. மூளைக்கறி தனிதான். இதைத் தவிர ரத்தப் பொறியல், குடல்கறி, ஈரல் இவையெல்லாம் அபூர்வம்தான். ரத்தப் பொறியல் சாப்பிடுகிற அன்றைக்கு வெளிக்குப் போகிறபோது அதைக் கவனிப்பேன். கறுப்பாகத் தான் இருக்கும். முதல் தடவையாக அதைக் கவனித்தபோது ஆச்சர்யமாகவும் பயமாகவும் இருந்தது. அம்மாவிடம் ஏதோ வியாதிதோ என்று கேட்டேன்.

அப்பாவுடன் கறி வாங்கப் போகிற போதெல்லாம் பக்கெட்டில் இருகும் இரத்தக்கட்டியைத் தொட்டுப் பார்ப்பேன். லேசான பூச்சுமாதிரி கையில் ஒட்டிக் கொள்ளும். பக்கெட்டினுள் அழுத்த அழுத்த மேலே பிய்ந்து வருவது பார்க்க சுவாரஸ்யமாக இருக்கும். ஒரு நாள் யாருமே பார்க்கவில்லையென்று ஒரு துண்டை எடுத்து வாயில் போட்டுக் கொண்டேன். குமட்டுகிற மாதிரி இருந்தது.

இரத்தப் பொறியல் மாதிரியே கோழிக்கறியும் எங்கள் வீட்டில் அபூர்வம்தான். ஒடம்புக்கு ரொம்பவும் சூடு அது என்பார் அப்பா. அம்மாவுக்கு ஒரு முறை மஞ்சள் காமாலை வந்து விட்டதாம்.கல்யாணமான புதிதில் மஞ்சள் காமாலையே அதிக சூட்டில் வருவதுதானாம். சரியான பின்னும் அடிக்கடி கோழிகறி சாப்பிடுவது ஆகாது என்று வைத்தியர்கள்சொன்னதால் அப்பாவும் கோழி அடிப்பதை எப்போதாவது செய்வார்.

கோழிக்கறி போடுவது ஆட்டுக்கறி போடுகிற மாதிரி அல்ல விஷயம். ஒர் வாரம் முன்பே தெரிந்துவிடும் சந்தைக்குப் போய் வருகிறபோது, வீதியில் விற்றுக்கொண்டு போகிறபோதுவாங்குகிற கோழியை அப்பா வீட்டில் கட்டிப் போடுவார். நல்ல தீனியாய்ப் போடச் சொல்வார். ‘ஒரு வாரம் இருக்கணும். நல்ல தீனிதின்னு பெலமாயிட்டா கறி ருசியாஇருகும்கறதுதான் சூட்சமம்’ அரிசியில் ஊற வைத்த கேப்பையும், அபூர்வமாய் கோதுமையும் அதற்குப் போடுவதில் பழனிவேலுவிற்குத் தனி அக்கறை.

ஒரு வாரம், பத்து நாள் அதை வளர்த்து விட்டுக் கொல்லப் போகிற போது வருத்தமாக இருக்கும். அப்பா கோழியின் கால்களை ஒன்றாய் சேர்த்து வலுவான வலதுகையை நீட்டிக் கையின் இடைப்பகுதியின் அதன் தலைக்கும், உடம்பிற்கும் இடையிலான ப்குதி அடிபடுமாறு ஓங்கி அடிப்பார். அநேகமாய் கோழி தலை சாய்ந்து விடும். கூடவேகக் என்று ஒரு சத்தம் இருக்கும். அவ்வளவுதான். உடனே கத்தியால் அறுப்பார். அறுக்கிறபோது சின்ன வானலியில் ரத்தம் பிடிப்பேன். ஆட்டு மூளை மாதிரி கோழி ரத்தம்.

கோழியைப் பொசுக்குவதில் அப்பா சோம்பேறி. ஒவ்வொரு இறகாய்ப் பிய்த்தெடுப்பதில் சோர்ந்து போவார். ஆனால் எனகு அது அபூர்வமான விஷயமாக இருக்கும். இறகுகளின்வெவ்வேறு நிறங்களை இரசித்துக் கொண்டே பிய்த்தெடுப்பேன். இடைஇடையே கொத்தாய்ப் பிய்த்தெடுத்துப் பலமாகக் காற்று வீசுகிறபோது தூவி விடுவதில் சுகமுண்டு. வீதியில்போகிறவர்கள் முகத்தில் தெறிக்க ‘உங்க வீட்ல கோழிக் கறின்னா ஊர்பூரா சொல்லணுமா’ என்பாரகள். இறகுகள் பிய்த்தெடுக்கப்பட்ட கோழி உடல் கொஞ்சம் வெது வெதுப்பாகஇருக்கும். அந்தச் சூட்டை கொஞ்ச நேரம் எப்போதும் உணர்வேன்.

கோழியை அறுத்தபின் குடலை எறிந்து விடுவார் அப்பா முன்பெல்லாம். பின் ஒரு நாள் குடலைக் கழுவுவது பற்றிச் சொல்லித் தந்தார். பின் கோழியை அறுக்கிற போதெல்லாம்குடலைச் சுத்தம் செய்து அதைத் தனிச் சமையல் செய்வது என் இலாகாப் பொறுப்பாகிவிடும். நீளமான குடலின் உட்புறத்தை தென்னங்கீற்று குச்சியால் உள்புகுத்தி மலத்தைவெளியே எடுப்பேன். சர்ரென்று மேலிருந்து உருவுகிற போது மலம் வடிந்து விடும். சின்னத் துண்டுகளாய் அறுத்து நாலைந்து முறை தண்ணீரில் அலசிக் கையில் ஏந்திக்கொள்கிறபோது வழுக்கும். ‘பீன்ஸ்..பீன்ஸ் கறி’ என்பான் பழனிவேல். ஆட்டுக்கறி சாப்பிடுகிற போது சாப்பாட்டிற்கு ஒரு மணிநேரம் முன் மூளையை சாப்பிடுகிற மாதிரி கோழி விஷயத்தில்குடல். ஆனால் மூளைபோல் ருசிக்காது குடல்.

கறிக் குழம்பு கொதிக்கிற மணத்துக்காகக் காத்திருப்போம்; சமையல் அறையில் தலையை நீட்டி வரலாமா என்பேன். அம்மா டம்ளரில் இரண்டு கரண்டி குழம்பையும், நாலு துண்டுகறியையும் போட்டுக் கொடுப்பாள். சூடாக இருக்கும். ஆற்றி ஆற்றிக் குடிப்போம் மிளகுக் காரம் கண்ணீரை வரவழைத்து விடும். முழுசாய் வேகாத கறியை மெல்வதில் சிரமம்இருக்கும். முழுசாய் வேகவில்லையென்றால் என்ன மாட்டுக்கறி மாதிரி என்பார் அப்பா. அவர் அப்படிச் சொல்வதன் மூலம் மாட்டுக்கறி சாப்பிட கெட்டியாக இருக்கும் என்பதைஅறிந்து கொண்டேன். கொஞ்சம் ஜலதொஷமாய் இருந்து கோழிக்கறி சமைக்கிற அன்று அப்பா கறிக்குழம்பு இடையில் சாப்பிடுவார். மற்றபடி நாங்கள் தான்.

புரட்டாசி மாதங்களில் வீட்டில் கறியே எடுக்கமாட்டார்கள். அப்பா விரதம் இருப்பார். கடைசி சனி அன்று காரமடை தேருக்குப் போவதற்காக. எப்போது அக்கா வீட்டில் கறிசமைப்பார்கள் என்று காத்திருப்போம். அக்கா வீட்டிலேயே ஆட்கள் அதிகம் என்றாலும், அக்கா உடனே வந்து சொல்லிவிட்டுப் போய்விடுவாள். நானும் பழனிவேலும் அதற்காய்மோப்பம் பிடித்தவாறு இருப்போம். அப்பாவும், அம்மாவ்ம் தொடமாட்டார்கள். அக்கா வீட்டிலிருந்து நாங்கள் வரும்போது அம்மா குளிச்சிட்டு வந்திடுகடா என்பாள். சில சமய்ம்குளிப்போம். நிறையத் த்டவைகள் குளிச்சியாடா என்றால் ‘உம்’ என்றபடி நழுவி விடுவோம். அமாவாசை வந்து மூன்று நாள் கழித்துத்தான் கறி சமைக்க வேண்டும் என்று விதிமாதிரி ஒன்றை அம்மா எப்போதும் பின்பற்றி வந்தாள்.

கறி சமைக்கிற அன்றைக்கு நல்ல அரிசிச் சாதம் இருக்கும். வழக்கமாக இருக்கும், அரிசியைவிட நல்லதாக அப்பா வாங்கி வருவார். சுடச்சுடச் சோற்றை பிளேட்டில் போட்டுக்கறிக் குழம்பை அம்மா ஊற்றுவாள். முதல் கவளம் எப்போதும் நாக்கைச் சுட்டுவிடும். அம்மா விசிறியொன்றால் விசிறுவாள். நாலு கவளத்தைக் குழம்பில் பிசைந்துசாப்பிட்டபின் அம்மா கறி என்பேன். அம்மா கறியப் பிரித்து வைக்கிறபோது அம்மாவின் கைகளையே பார்த்துக் கொண்டிருப்பேன்.

அப்பாவிற்கு நாலு கறி அதிகம் வைப்பாள். எனக்கும், தம்பிக்கும் சரியான அளவாக இருக்கும். ‘அவன் தம்பிதானே எனக்கு ரெண்டு சேர்த்தி வைக்கிறது’ என்பேன். ‘அட,அங்கலாப்பே பாரு’ என்று சேர்த்து வைப்பாள். பழனிவேல் முகம் சுருங்கும். ஈரல் துண்டுகளை எண்ணிச் சமமாய் வைத்துவிட்டு மீதியை வாயில் போட்டுக்கொள்வாள்.அப்பாவிற்கு எலும்புக்கறி ரொம்பவும் பிடிக்கும். நாங்கள் கடிக்க முடியவில்லை என்று எச்சில் பண்ணி வைத்துவிடுகிற எலும்பைக் கூட அப்பா எடுத்து கடக்முடக்கென்று சுத்தம்செய்துகொண்டிருப்பார். ‘எலும்பிலே இருக்கிற ஊளெ நல்லதுடா’ என்பார். நீளமான எலும்பு கிடைக்கிறபோது அதை உடைத்து ’இதபாரு..இதுதா நான் சொல்றது’ என்று காட்டிவாயைத் திறக்கச் சொல்வார். அம்மா எனக்குத் தெரியகூடாது என்று மறைத்துக் குனிந்து சாப்பிடும்போது பழனிவேலுக்கு ரெண்டு துண்டுகளைப் போட்டுவிட்டால் முறைத்துப்பார்ப்பேன். அவன் ஒன்றும் தெரியாத மாதிரி சாப்பிட்டுக்கொண்டிருப்பான். ஆளுக்கு மொத்தமாய் பத்து துண்டு வருவதே அதிகபட்சமாய் இருக்கும். மீறி கேட்கிறபோதுஅம்மாவின் பங்கு குறைந்துவிடும் என்பது தெரியும். சிலசமயம் அப்படிப் பெயருக்கென்று ஓரிரண்டு துண்டுகள் மட்டுமே அம்மாவிற்குக் கிடைத்த நாட்கள் நிறைய இருக்கும்என்று தோன்றும். அதற்கு மேலும் அதிகமாய்க் கறி எடுத்து வர அப்பாவால் முடியாதுதான்.

கோழிக்கறி சமையலின்போது தலை யாருக்கு என்பதில் விரோதம் வளரும். குழம்புப் பாத்திரத்திலிருந்து கோழியின் தலையோடு கரண்டியை எடுக்கும்போது யார் பிளேட்டில்போடுகிறாள் என்பதில் அவளின் அதிகாரத்தை உபயோகப்படுத்துகிற மாதிரி செயல்படுவாள். போட்டுவிட்டு அன்னிக்கு யார் அதிர்ஷ்டக்காரன் என்பாள். கோழித்தலை எனக்குவிழுந்து விட்டால் சிரமங்கள் இருக்காது. இல்லையென்றால் சாப்பிடுகிறபோது தலை விழுந்துவிட்ட பிளேட்டைப் பார்த்து வெறுவெறுத்துக் கொண்டிருப்பேன். அம்மாவாய்பொத்திச் சிரிப்பாள். அது பழனிவேலின் பக்கமாய் இருந்துவிட்டால் அன்றைக்கு ஏதாவது விஷயத்தினை அவன் மேல சொல்லி நாலு அடி கொடுத்துவிடுவேன். பழி வாங்கினதிருப்தி பின்னரே அடங்கும்.

அன்றைக்கு அப்படித்தான் நடந்துவிட்டது. கோழித்தலை பழனிவேல் பக்கம் விழுந்துவிட்டதற்காய் என்முகம் சிறுத்துப் போனது. அப்பாவும் ஏதோ சொல்லிச் சிரித்துவிட்டதுமுகம் சிவக்கச் செய்துவிட்டது. சூடான சாப்பாட்டில் வேர்க்கிற முகம் அன்று அதிகமாய் வேர்த்துவிட்டது. எதுவும் பேசாமல் சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். அப்பாவும் என்னடாஇது என்றார். தன் பங்கிலிருந்து நாலு துண்டை எடுத்துப் போட்டார். நான் கோபத்துடன் அவற்றை அடையாளம் பார்த்துப் பொறிக்கி அவர் பிளேட்டில் போட்டேன். அப்போதுபழனிவேல் அவன் எச்சில் கையால் என் சிறு பிளேட்டில் இருந்த கறியில் ஈரல் துண்டை எடுத்துவிட்டான். பக்கத்தில் இருந்தவனின் தலைவை நச்சென்று சுவரில் மோதினேன்.அய்யோ என்றான். அவன் தலையிலிருந்து ரத்தம் வழிந்ததை அப்பா பார்த்துச் சத்தம் போட்ட பின்புதான் உணர்த்தேன். ‘அடப் பாவி’ என்று அம்மாவும் எழுந்தாள். அப்பா எச்சில்கையால் என் முகத்தில் அறைந்தார். நான் பயந்து ஓடிப்போய் வாசல் முன்புறம் அழுதுகொண்டே நின்றேன். இரண்டு துணிகளைக் கிழித்து கட்டுப் போட்டும் ரத்தம் நிறகாதபோதுஅம்மா அவனைத் தோளில் சாத்தி வெளியில் வந்தாள். என்னைப் பார்த்து மீண்டும் அடப்பாவி என்றாள். அப்பாவிடமிருந்து அடிவிழும் என்று தப்பி ஓடினேன். ரொம்ப நேரம்கழித்துதான் பசிப்பதை உணர்ந்தேன். எச்சில் கையை டெளசரில் துடைத்துக் கொண்டேன். வறண்டு போயிருந்தது. சாயங்காலம் அப்பா என்னை ரொம்பநேரம் வெளி இடங்களில்தேடி என்னைக் கண்டுபிடித்தார் ‘அடிக்கலை வாடா….’ என்று அழைத்துப் போனார். அவர் முன் நடந்து போக நான் ஐம்பது அடி இடைவெளியினைக் காப்பாற்றி வீடு சேர்ந்தேன்.பழனிவேல் தலைக் கட்டுடன் சோர்ந்து கிடந்தான். அம்மா ‘நாலு துண்டு கறிக்காக இத்தென ரத்தத்தெ வீணாக்கிட்டியேடா.. இந்த அஞ்சு வயசு கொழந்தே இதுக்கு எவ்வளவுகஷ்டப்படப் போகுதோ..நீ உருப்படுவியா..’ என்று அழுதாள். அன்றைக்கு மிச்சம் இருந்த குழம்பையும் கறியையும் யார் வாங்கிப் போயிருப்பார்கள் என்று யோசித்தேன். அம்மாசுத்தமாய் ருசி பார்த்துக்கூட இருக்கமாட்டாள் என்று தோணியது.

பழனிவேல் தலைக்காயம் ஆற இரண்டு மாதம் ஆகிவிட்டது. எப்போதும் தலையில் கட்டு இருந்துகொண்டே இருந்ததால் அவனுக்கு தலைக்குக் குளிக்கவோ சரியாகத் தலையைசீவிக் கொள்ளவோ முடியாமற் போயிற்று. தலைமுடி கூட ரொம்பவும் வளர்ந்து விட்டது. அந்த இரண்டு மாதத்தில் கறி சமைப்பது பற்றி அப்பா அம்மாவிடம் எதுவும்சொல்லவில்லை. இரண்டு மூன்று வாரம் கழித்து அப்பா கேட்டார் ‘எனக்கு வேண்டா..நீங்க வேணா சாப்புடுங்கோ’ என்றாள் அம்மா. அன்றைக்கு அப்பா மொகிதீன் கடைபோகவில்லை.

இதற்குப் பின்னாலும் ரெண்டு மூன்று முறை அப்பா கறி சமைப்பது பற்றிச் சொன்னபோது அம்மா பேசாமலேயே இருந்தாள். அப்பாவும் கட்டாயம் செய்யவில்லை. ஒரு நாள்பழனிவேலின் தலையைத் தடவி அவன் காயத்தை அம்மா பார்த்துக் கொண்டிருந்தாள். அவளையே நான் வெறித்துப் பார்த்தேன். ‘நாலு துண்டு கறிக்காக என்ன செஞ்சுட்டா இவன்.என்னோட சதைக் கறியும் ருசியா இருக்குமுன்னா என்னையே சாப்புட்டுவான் படுபாவி’ என்றாள். அம்மா என்னை வெறுக்க இப்படியொரு காரணமாகிவிட்டதே என்றுஅழுகையாக இருந்தது.

ஆறேழு மாதம் போயிருக்கும் வீட்டிக் கறி சமைத்து. இடையில் அக்கா வீட்டில் தான் அவ்வப்போது. அதுவும் ஒவ்வொரு முறையும் கறி சாப்பிடும்போது தம்பியின் காயம்ஞாபகம் வந்தாலும் யாராவது அதைப் பற்றி சொன்னதாலும் எனக்கு சாப்பிடுவதில் பிடிப்பே இல்லாமற் போயிற்று.

பக்கத்து ஊரிலிருந்து ஒரு நாள் குமரேசன் மாமா வந்திருந்தார். அவர் சேவல் சண்டைப் பிரியர். அதற்காய்ச் சேவல் வளர்ப்பார். சேவல் சண்டையில் சாகிற கோழியின் கறியைரொம்பவும் சுவைத்துச் சாப்பிடுவார். அதைக் கோச்சைக்கறி என்பார். அன்றைக்கு வெள்ளையூத்து சேவல்கட்டில் தன் கோழி ஜெயித்ததாயும், அந்தக் கோச்சைக் கறியைக்கொண்டு வந்ததாயும் சொன்னார். ‘இன்னிக்கு ராத்திரி நா இங்கதா இருக்கப் போறேன்..சமைச்சு வை..’ அப்பா சுரத்தின்றி சும்மா இருந்தார். யாரும் எதுவும் சொல்லாதபோது சத்தம்போட்டார். அப்பா எல்லாவற்றையும் விலாவரியாய்ச் சொன்னார். ‘என்னெக்கோ, எப்பவோ நடந்ததுக்கு இன்னுமா அதை மனசில வெச்சிட்டிருக்கணும். அவனும் ஒண்ணும்வெளவறியா தெரியாத பையன். அவன் ஏதோ செஞ்சுட்டான்னு ஆறு மாசமா இந்தப் பசங்களுக்கு கறியாக்கிப் போடாமெப் பட்டினி போட்டிருக்கியே..இது நல்லா இருக்கா..’சொல்லிக் கொண்டே போனார். இதை ஒருவர் சொல்லவேண்டும் என்று காத்திருந்த மாதிரி வீட்டினுள் போய் அம்மா வெங்காயக்கூடையை எடுத்து வந்து வெங்காயத்தப் பரப்பஆரம்பித்தாள். அப்பாவும் மாமாவுடன் சந்தோஷமாய் நடையை வெளியில் எட்டிப் போட்டார். அம்மா கலகலப்பாய் வெங்காயத்தை உரிக்க ஆரம்பித்தாள். கொஞ்சம் உரித்தசருகுகளை என் மேல் வீசியெறிந்து ‘வாடான்னா’ என்றாள். நானும் அவளின் தொடை அருகில் நெருக்கமாய் உட்கார்ந்தேன்.

பாதி வேலையில் குமரேசன் மாமாவைப் பற்றிப் பேச ஆரம்பித்தாள். அவரின் சேவல்கட்டுத் திறமையைப் பற்றி ரொம்பவும் சொன்னாள். ‘நாலு ஊருக்கும் சேவக்கட்டுசின்னதம்பின்னா ஒரு மருவாதை’ என்றாள். ‘கோச்சுக்கறி தின்னுவளர்ந்த ஒடம்புடா அது..வீர முனியப்பா மாதிரி கம்பீரமா..’ அம்மாவிற்கு மாமா மேல் சின்ன வயதில் ரொம்பவும் இஷ்டமாம் ‘நானே அவரெ கல்யாணம் பண்ணியிருந்தா இப்பிடியா ஒடக்கா மாதிரி இருப்பேன். சேவல் கட்டு கோழி மாதிரி கோச்சுக் கறியெத் தின்னுட்டு நிமிர்ந்து நிப்பேனே’

அம்மா இப்போது ஒரு புதுக்கதையைச் சொல்வதாய் எண்ணி நிமிர்ந்து அதை முழுசாய்க் கேட்கிற சுவாரஸ்யத்தில் உட்கார்ந்தேன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *