உந்துதல் (அ) ’சடையன்’

2
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: January 8, 2013
பார்வையிட்டோர்: 9,135 
 

ப்ளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று காலை பத்து மணிக்கு வெளியானது. அங்கங்கே மாணவர்கள் கூட்டம், கூட்டமாய் கம்ப்யூட்டர்களை மொய்த்துக் கொண்டிருந்தனர்.. சிலர் சந்தோஷத்தில் குதிப்பதும், சிலர் சோர்ந்து நிற்பதுமாக…., பொதுவாக எங்கும் ஒரே கூச்சலாயிருந்தது. இன்று ஒருநாள் எல்லா செல்போன்களும் முழு வீச்சில் கூடுதல் நேரம் வேலை செய்யப் போகின்றன. எங்கும் பரபரப்பு.

அடுத்த கேள்வி, மாநிலத்தில் முதல் மார்க் எவ்வளவு?.எந்த ஊர்?.,எந்த பள்ளி?, யார் எடுத்திருக்கிறது?.

எங்கள் நிரூபர்கள் குழு பறந்துப் பறந்து தேட, அந்த பரபரப்பான செய்தி இன்னும் வெளியாகவில்லை பல்வேறு பத்திரிகையிலிருந்து வந்திருக்கும் நாங்கள் எல்லாரும் அடாபுடா போட்டு பேசும் சமவயசுக்கார நண்பர்கள்..அவசரமாக தகவல்களைத் திரட்டி அவரவர்களின் எடிட்டோரியல்களுக்கு தகவல் அனுப்ப வேண்டும்.
“என்னய்யா.. இன்னும் வெளியிடாம என்ன பண்றாங்க?.”—கேட்டது சுந்தரராமன், தினமணி நிரூபர்.

“இருங்கய்யா! இதோ மேட்டர் வந்திடுச்சி பாருங்க. 1200க்கு 1194 மார்க். அடேங்கப்பா! பசங்க அள்றானுங்கப்பா. ஆமா போன வருஷம் எவ்வளவு? 1193ஆ?”

“நோ… நோ!…1190.”.

”எந்த ஊராம்? சென்னையா?”

“இன்னும் தெரியலையே. திருநெல்வேலியாக இருக்கும். ஒரு வேளை நெய்வேலி ஜவஹரோ என்னவோ?”

“எஸ்.பி.ஓ.ஏ, டி.ஏ.வி,.. அல்லது வேலம்மளாக இருக்கலாம். அங்கெல்லாம் சிறப்பா பாடம் நடத்தறாங்கப்பா பிழிஞ்சியெடுக்கறாங்க, ராசிபுரம், நாமக்கல்லுக்கு சான்ஸ் அதிகம்பா..”

“இல்லப்பா! கன்னயாகுமரிக்கு சான்ஸ் ஜாஸ்தி. கிருஸ்துவ பள்ளிக்கூடமாக இருக்க சான்ஸ் அதிகம். முன்ன எப்பவோ மாநிலத்தில் முதலாவதாக வந்திருக்கு..”

“இதோ போட்டுட்டான் பார்யா..! சடையன், அரசு ஆண்கள் மேநிலைப்பள்ளி, பெரும்பள்ளம், திருவண்ணாமலை மாவட்டம்…”

“அட! பார்றா! கவர்ன்மெண்ட் ஸ்கூலா? எப்படிய்யா? என்னா ஊரு இது.?. பெரும்பள்ளம், சிறும்பள்ளம்னு குக்கிராமமா இருக்கும் போலிருக்கே. அங்கேயா மாநிலத்திலேயே அதிக மதிப்பெண்கள் எடுத்த பையன் இருக்கிறான்? .நம்பவேமுடியலய்யா என்னய்யா புரட்சி நடக்குது இந்த நாட்ல?..” — இது தினமலர் சங்கரன். தினகரன் பத்திரிகை குமார் குரல் கொடுத்தான்.

“இதோ! இன்னொரு தகவல் பாரு. பையன் தமிழ் மீடியம். ஆளு – மலைவாழ் பழங்குடி இனத்துப் பையன்.”

“ஓ !” எல்லோரும் ஒரு நிமிடம் திகைத்து நின்றுவிட்டோம்.நிஜமாகவே புரட்சிதான்யா! —- என்றது தினமலர் சங்கரன்..

“தனியார் பள்ளிக்கூடங்கள்ல யாரும் எடுக்கலியா? விடமாட்டாங்களே. மாநிலத்தில் அதிக மதிப்பெண்கள், பாடங்களில் நூற்றுக்கு நூறு,, தொண்ணூறு சதவீதத்துக்கு மேல் தேர்ச்சி….. இவைகளுக்காக என்ன விலையும் குடுப்பாங்களே..”

ஏன் அப்பிடி?.

”ஒரு தடவை மாநிலத்திலேயே அதிக மதிப்பெண்கள் எடுத்துட்டா போதுமே. அடுத்த நாலஞ்சி வருஷங்களுக்கு அத சொல்லியே புது மாணவர்கள் சேர்க்கையில அள்ளிடமாட்டாங்க.. ஜனங்களும் யோசிக்காம தமதமன்னு பிள்ளைகளை அங்க சேர்க்கறதுக்கு என்ன விலையும் கொடுக்கத் தயாராயிருப்பாங்களே..’

அப்போது அங்கிருந்த எல்லா நிரூபர்களுக்கும் அவரவர்களுடைய பத்திரிகை ஆசிரியரிடமிருந்து பெரும்பள்ளம் போய் அந்த மாணவனிடம் பேட்டி எடுத்து அனுப்பச்சொல்லி உத்தரவு வர, ஒரு வேனை எடுத்துக்கிட்டு குழுவாகக் கிளம்பிவிட்டோம்.

“திருவண்ணாமலை மாவட்டத்தில பெரும்பள்ளம் எங்க இருக்காம்.?” மாலைமலர் தனசேகர் கேட்டான்.

“கலெக்டர் ஆபீஸுக்கு போன் அடிச்சிக் கேட்டுட்டேன்.. செங்கத்திலயிருந்து பதினஞ்சி கிலோமீட்டராம். மலையடிவார கிராமமாம்..’

பத்திரிகை நிரூபர்கள், டி.வி. சேனல்களின் கேமரா மேன்கள், கொண்ட எங்கள் குழுவில் எல்லோருக்கும் ஆச்சர்யமாக இருந்தது இந்தப் பையனுடைய வெற்றி.

”எஸ்! மாநில தலைநகரத்தில் வசிக்கும் மெத்த படித்த மேல்தட்டு வர்க்கங்களின் பிள்ளைகள்,, இதர நகரவாசிகள்,,அப்புறம் அரசு ஒதுக்கீடுகள் மூலம் பயன்பெற்ற, பெற்றுக்கொண்டிருக்கிற, முன்னேறிய, முன்னேறிக் கொண்டிருக்கின்ற, அத்தனைப் பிரிவுகளையும் அடிச்சித் தள்ளி விட்டு, ஒரு குக்கிரமத்திலிருந்து ஒரு மலைவாழ் பழங்குடி இனத்துப் பையன் இன்றைக்கு சாதிச்சிருக்கான்னா, அப்.ப்.பா பெரிய சாதனை.” என்றேன் நான்.

“ உற்சாகத்துடன் செய்யும்விடாமுயற்சியும், தீவிரமான உழைப்பும் மட்டுமே வெற்றியை தீர்மானிக்கிறது வேறு எதுவும் காரணமல்ல என்பதற்கு சாட்சி.”— என்றான் தினகரன்–குமார். எங்கள் எல்லோருக்கும் அந்த சாதனையாளனை சந்திக்கும் ஆர்வம் அதிகமிருந்தது..

“ஏம்பா! சில ஊருங்கள்ல பரீட்சையின் போது வெளிகேட்டைப் பூட்டிட்டு விடையை டிக்டேட் பண்றாங்களாமே, , அப்படி ஏதாவது நடந்திருக்குமோ?..” இது ஒரு டி.வி.சேனலின் கேமராமேன் கண்ணனின் சந்தேகம்..

”மே பீ. நடந்திருக்க சான்ஸ் இருக்கு.” எங்களில் பலர் ஆமோதித்தார்கள். எனக்கு ஆத்திரமாக இருந்தது.

“.ஒரு சாமானியன் மார்க் எடுத்தா அதில ஆயிரத்தெட்டு சந்தேகங்கள்.”
டெக்கான் க்ரானிகல் — தனுசு குறுக்கிட்டான

“அப்படி டிக்டேட் பண்றதால ஐம்பது வாங்கறவன் அறுபது வாங்கமுடியுமேயொழிய, மாநிலத்திலேயே அதிக மதிப்பெண்கள் என்பதெல்லாம் நடக்காது நண்பா1. பதில்களைக் கேட்டுக் கேட்டு எழுதறபோது. நேரம் பத்தாது. ”

நாங்கள் தேடிப் பிடிச்சி, அங்கங்கே விசாரித்துக் கொண்டு, மேடு பள்ளங்களைக் கடந்து, பெரும்பள்ளம் கிராமத்தை அடையும்போது களைத்துப் போய்விட்டோம். மாலை நாலு மணியாகிவிட்டது. நேராக பள்ளிக்கு படையெடுத்தோம். ஏற்கனவே.. அங்கே கோலாகலமாயிருந்தது. எல்லோரும் இந்த இன்ப அதிர்ச்சியில். சுற்றிக் கொண்டிருந்தார்கள். தமிழ் நாட்டின் ஒட்டுமொத்தப் பார்வையும் இப்போது இந்த கிராமத்தின் மேல் விழுந்திருக்கிறது அல்லவா?. மாணவர்கள்கூட்டம் திரண்டிருந்தது. ஊர் பிரமுகர்கள், பஞ்சாயத்து தலைவர், தலைமையாசிரியர், ஆசிரியர்கள், ஏன்? மாவட்ட கல்வி அலுவலரும் கூட தன் உதவியாளருடன் ஆஜராகியிருந்தார். ஆனால் அந்த மாணவன் இருப்பதற்கான அறிகுறிகள் ஏதும் தெரியவில்லை., தலைமையாசிரியரிடம் கேட்டேன்.

“பையன் ஊர்ல இல்ல சார். அவங்க அத்தை வீட்ல இருக்கான். இங்கிருந்து எட்டு கிலோமீட்டர், மலைமேல போவணும்.. கூட்டிவர காலையிலேயே ஆளனுப்பிட்டேன். இப்ப வந்திடுவான் சார்!” என்றார்.

“சரி சார்! வரட்டும், அதுவரைக்கும் அந்த மாணவனைப் பத்தி சொல்லுங்களேன்.”

அவர் செருமிக் கொண்டார். தயாராய் எங்கள் கேமராக்களெல்லாம் விழித்துக் கொண்டன.

“அவனை பல கட்டங்கள்ல கவனிச்சிருக்கேன்.. ஒழுக்கமான பையன், புத்திசாலி, மாணவர் மன்றக் கூட்டங்களிலே பல தடவை பேசியிருக்கான். தெளிவா புள்ளிவிவரங்களோடு பேசுவான் நல்ல ஞானம்.. நல்லா படிக்கக்கூடியவன்னுதான் அவன் கிளாஸ் டீச்சர்களேல்லாம் சொல்றாங்க. ஆனா இந்த அளவுக்கு யாருமே எதிர்பார்க்கல. இங்க எல்லாருக்குமே ஆச்சர்யம்…”

நெட்டையான ஒருத்தர் தலைமையாசிரியரின் அருகில் வந்து நின்றார். .

”சார்! நான் அவனுடைய கணக்கு ஆசிரியர்.. அவனால எங்க ஸ்கூலுக்கே பெருமை சார். நினைச்சிக் கூட பார்க்க முடியாத பெருமை. நம்பவேமுடியல.. கிராமங்கள் கூட நகரங்களுக்கு இணையாகப் போட்டியிட ஆரம்பிச்சிடுச்சின்னு தெரியுது.. பொதுவா சடையன் கிளாஸ்ல நல்லா கவனிப்பான்., நிறைய சந்தேகங்களைக் கேட்பான்.. அவன் சந்தேகம் தீர்றவரைக்கும் விடமாட்டான் அந்த ஒரு விடாமுயற்சிதான் அவனை இவ்வளவு உசரத்துக்கு கொண்டு வந்திருக்குன்னு நெனைக்கிறேன்.. ஒரு ஆசிரியனாய் அவனால எங்களுக்கெல்லாம் பெரிய கவுரவம்.”

இப்படியே ஒவ்வொரு பாட ஆசிரியர்களும் அவனுடைய அறிவு கூர்மையை, உழைப்பை, விடாமுயற்சியைப் பாராட்டிப் பேசினார்கள். ஆனால் ஒருத்தரும் அவனுடைய இவ்வளவு பெரிய சாதனையை எதிர்பார்க்கக் காணோம்.

ஒன்றுவிடாமல் எல்லாவற்றையும் எங்கள் கேமராவில் உள்வாங்கிக் கொண்டோம். இன்னும் சடையன் வரவில்லை. அதற்குள் பள்ளியை ஒரு சுற்று சுற்றி வரலாமென்று நான் மட்டும் அங்கிருந்து விலகி பள்ளியின் கேட் பக்கம் நகர்ந்தேன். இதுவரைக்கும் இந்த பள்ளியின் ஒரு முகத்தைத்தான் பார்த்தோம்,.. இதற்கு இன்னொரு முகமும் கண்டிப்பாய் இருக்கும்,,இருக்கவேண்டும். அப்படித்தான் போன வருஷம் மாநிலத்தில் அதிக மதிப்பெண்கள் எடுத்த பள்ளியில் ஆராய்ந்தபோது ஒரு விஷயம் உறுத்தியது.. எல்லா வகுப்புகளிலும் ரொம்ப சிரத்தையாக பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். . காலையில் ஒரு மணி நேரம், மாலையில் ஒரு மணி நேரம் என்று தனி வகுப்பு வேறு. ஆனால் விளையாட்டு துறை தூங்கிக் கொண்டிருந்தது.. உடற்பயிற்சி ஆசிரியர் ஏழாம் வகுப்புக்கு சமூக அறிவியல் பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.. விளையாட்டு உபகணங்கள் துருப்பிடித்துக் கிடந்தன. இங்கே எப்படி? என்று பார்க்கணும். அதற்கு யாராவது ஒரு மாணவனைப் பிடித்துக் கடையவேண்டும். தேட்டை போட்டேன். சங்கர் என்ற மாணவன் சிக்கினான்.. சடையனின் வகுப்புத் தோழன்.. சற்று தூர அழைத்துச் சென்றேன்.

“சங்கர்! உன் மார்க் எவ்வளவுப்பா?”

“748 சார்!”

“சரி சடையன் எப்படி? எப்பவும் அவன்தான் வகுப்புல முதல் மார்க்கு எடுப்பானா?.”

“ப்ளஸ்டூ வந்தப்புறந்தான் சார். பொதுவா மூணு நாலு ரேங்க்குக்குள்ள வருவான் சார். ஆனா படிப்புல கெட்டி சார்.. எப்பவும் படிச்சிக்கிட்டேயிருப்பான்..” ஒரு நிமிஷம் சுற்றுமுற்றும் பார்த்தான்.

“என்னப்பா.? எதாயிருந்தாலும் சொல்லு.”.

”“அவன் இங்க படிச்சி தமிழ் நாட்டிலேயே அதிக மார்க் எடுத்ததுதான் சார் எங்களுக்கெல்லாம் ஆச்சரியம்..

” ஏன் அப்பிடி சொல்றே?.

” இங்க சில வாத்தியாருங்க மோசம் சார். ஒழுங்காவே பாடம் நடத்தறது இல்ல.. வீட்டிலே டியூஷன் எடுக்கறாங்க.. கிளாஸ்ல சந்தேகம் கேட்டால், டியூஷன்ல வந்து கேட்டுக்கோம்பாங்க.. அதுக்காகவே. அவங்கக் கிட்ட டியூஷன் படிச்சாவணும்.. டியூஷன்லதான் நல்லா சொல்லிக் குடுப்பாங்க, சில வாத்தியாருங்க அவங்க சாதியான்னு பார்ப்பாங்க.. நாங்கள்லாம் டியூஷன் படிச்சதாலதான் பாஸ் பண்ண முடிஞ்சிது சார்.!.”.

ஹும்! கீழேயிருந்து மேல்மட்டம் வரைக்கும் எங்கும் நீக்கமற புரையோடிப் போயிருக்கிற இந்த சாதி உணர்வு. (வெறி ) தான் இன்றைய தமிழனின் பிரத்தியேக குணம்.. ஹும்! குரு ஸ்தானத்திலிருக்கும் சில ஆசிரியர்களும் கூட அந்த வெறிக்கு பலியாகியிருப்பதைக் கேட்க மனசு குமைகிறது.. தான் பிழைக்கவேண்டி .அந்த உணர்வுகளை வெறியாக்குவதும்,,அது நீர்த்துப் போகாமல் பார்த்துக் கொள்வதும் நம் அரசியல்வாதிகள் …

“சரி சடையன் யார் கிட்ட டியூஷன் படிச்சான்.?”

”பாவம் சார் சடையன். எந்த பாடத்துக்கும் அவன் டியூஷன் படிக்கல. அதுக்கெல்லாம் எங்கவூட்ல வசதி கிடையாதுன்னு சொல்லுவான்.. அவன் பாடத்தில நெறைய சந்தேகங் கேப்பான். சொல்லமாட்டாங்க. திட்டுவாங்க. நடத்திமுடிச்சிட்ட பாடம்தானே?. புக்கை நல்லா படிடா புரியும். அத்த வுட்டுட்டு எங்க உயிரை ஏன்டா வாங்கறம்பாங்க. மாதாந்திர டெஸ்ட்ல சில சமயங்கள்ல முதல் மதிப்பெண் எடுப்பான். அப்பல்லாம் எங்க கணக்கு வாத்தியாருதான் சார் ரொம்ப எரிச்சல் படுவாரு. ஹும்! இதெல்லாம் படிச்சிப்புட்டு மணியம் பார்க்கப் போவுதுங்க. ஹும்! என்பாரு. டேய்! உன்னை எவன்டா இவ்வளவு மார்க்கு எடுக்கச் சொன்னான்?… நீங்கள்லாம் கவர்ன்மெண்ட்டோட செல்லப் பிள்ளைங்கடா பாஸ் மார்க் எடுத்தாலே போதும், மெடிகல் காலேஜியிலேயே கூப்பிட்டு சீட்டு குடுப்பாங்கடான்னு கிண்டல் பண்ணுவாரு. கிளாஸ்ல பசங்கள்லாம் சிரிப்பாங்க. அப்பல்லாம் சடையன் அழுவான் சார். முரளீதரனும் நானும்தான் அவனைக் கூட்டிம் போயி சமாதானப் படுத்துவோம். முரளி அவனுடைய நோட்ஸுங்களையெல்லம் சடையனுக்கு படிக்கக் குடுப்பான்.”

“சரி! எல்லா வாத்தியார்களுமே இப்படித்தானா?.”

“இல்ல சார். நல்லா சொல்லிக் குடுக்கிற சில வாத்தியார்களும் இருக்காங்க. சார்!. எங்க இங்கிலீஷ் வாத்தியாரும்,, இயற்பியல் வாத்தியாரும், ஏழை பசங்களுக்கு பள்ளிக்கூடத்திலேயே சாயந்திரத்தில ஏழு மணிவரைக்கும் ஃப்ரீயா டியூஷன் எடுப்பாங்க.”.

”அதோ.. அதோ…! சடையன் வந்துட்டான்.” மாணவர்கள் படபடவென்று கைத்தட்டி, சடையா..! சடையா..! என்று கத்தினார்கள்.. ஓ! வென்று உற்சாகக் குரல் எழுப்பினார்கள். சடையன் வந்துக் கொண்டிருந்தான்.
இவனா? இந்தப் பையனா? இவனா 1194 மார்க்கு எடுத்தவன்?. குள்ளமாய், கருப்பாய், எண்ணை வழியும் முகத்துடன்,, பரட்டைத் தலையுடன், ஒல்லிப்பிச்சானாய், ஒன்பதாவது வகுப்பு மாணவனைப் போலிருந்தான்.. குருவித்தலை பனங்காய் போல ஒரே நாளில் உச்சிக்குப் போய்விட்ட இந்த அதீத புகழை ஏற்றுக்கொள்ளும் மன திடமில்லாமல் கூச்சத்துடன் மிரள மிரளப் பார்த்துக் கொண்டு நின்றான். தலைமையாசிரியர் அவனை வாஞ்சையுடன் அணைத்துக் கொண்டார்.

“சடையா! வாப்பா..! நீதாண்டா தமிழ்நாட்டிலேயே அதிக மார்க் எடுத்திருக்கே.. 1194 மார்க்கு. .நம்ம ஸ்கூலுகே உன்னால பெருமைப்பா. . உன்னைப் பார்க்க எவ்வளவு பேர் கூடியிருக்கோம் பாரு. சீ.இ.ஓ அய்யாவுக்கு வணக்கம் சொல்லு.”

அவன் அதிகாரிக்கு வணக்கம் சொன்னான்., அவர் அவன் கையைப் பற்றிக் குலுக்கினார். மற்ற ஆசிரியர்களும் போய் சூழ்ந்துக் கொண்டு வாழ்த்து சொன்னார்கள். அந்நேரம் யாரோ அவனுடைய பெற்றோர்களை அழைத்துக் கொண்டு வந்தார்கள். இரண்டு பேருக்குமே ஒடிசலான தேகம், ,அழுக்கேறிய உடை, பரட்டைத்தலை, வெற்றிலை புகையிலை போட்டுக் காவியேறிய பற்கள், ஒரு பழங்குடி இனத்திற்கான அத்தனை லட்சணங்களுடன் இருந்தார்கள். வரும்போதே பிள்ளைக்குக் கிடைத்திருக்கும் இவ்வளவு பெரிய புகழைப் பார்த்து விட்டு, தாளமாட்டாமல் அழ ஆரம்பித்துவிட்டார்கள். மாவட்ட கல்வி அலுவலர் தன் பங்கிற்கு ரெடியாய் கொண்டு வந்திருந்த லட்டை அவன் வாயில் திணிக்க, அவருடைய உதவியாளர் அதை போட்டோ எடுத்துக் கொண்டார். அவனுடைய பாட ஆசிரியர்கள் ஒவ்வொருவரையும் அவன் வணங்க, அவர்களும் அவனைக் கட்டிப் பிடித்து, சிரித்து, போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர்.
இதெல்லாம் முடியும் நேரத்திற்கு சடையன் ஒரு நிதானத்திற்கு வந்துவிட்டிருந்தான். நான் எல்லோரையும் ஓரங்கட்டிவிட்டு, எங்க குழுவிற்கு சிக்னல் கொடுத்துவிட்டு, அவனை நெருங்கினேன். கேமராக்களின் பிரகாசமான வெளிச்சத்தில் சற்று வெளுப்பாய்த் தெரிந்தான்.. முக்கியமாக அவனுக்குள் இப்படியொரு வெறி எப்படி வந்ததுன்னு தெரியணும்.அவனை கிளறிப் பார்க்கணும்.

“சடையன்! தமிழ் நாட்டில எவ்வளவோ பள்ளிகள், அவற்றில் படிக்கும் எவ்வளவோ கெட்டிக்கார மாணவர்கள். இருக்கிறார்கள் எல்லோரையும் பின்னால் தள்ளிட்டு, எங்கியோ ஒரு மலையடிவாரத்தில இருக்கிற இந்த குக்கிராமத்தில் தமிழ் மீடியத்தில் படித்த ஒரு ஏழை மாணவனான நீ மாநிலத்திலேயே அதிக மதிப்பெண்கள் எடுத்து ஜெயிச்சிருக்கேன்னா அந்த வெற்றியின் மதிப்பை சொல்லவேமுடியாது.. முதலாவதாக அதற்கு எங்கள் வாழ்த்துக்கள்..’” அவன் கையைப் பற்றிக் குலுக்கினேன்.. சிரிக்க முயன்றான். கண்விளிம்பில் நீர் தளும்புகிறது. உம் என்றால் கொட்டிவிடும்.

“சொல்லுங்க! எப்படி இதை சாதிச்சீங்க?”——

“நான் என் ஃப்ரண்டு முரளீதரனைப் பார்க்கணும்.” .

மாணவர்கள் கூட்டம் முரளீ..! முரளீ..! என்று கத்த, குண்டாய்,சிவப்பாய் ஒரு பையன் ஓடி வந்தான். சடையன் கையைப் பற்றி அவன் குலுக்க, சடையன் சடக்கென்று அவன் தோளில் முகம் புதைத்து கேவிக் கேவி அழ ஆரம்பித்தான். சற்று நேரம் உள்ளெயிருப்பது கிளர்ந்து அடங்கட்டும், என்று விட்டுவிட்டு ,அப்புறமாக ஒரு ஆசிரியர் போய் அவனை அதட்டி சமாதானப் படுத்த, கொஞ்ச நேரத்தில் கண்களை துடைத்துக் கொண்டு தெளிவுக்கு வந்தான்..

”சொல்லுங்க சடையன்! மாநிலத்திலேயே அதிக மதிப்பெண்கள் எடுத்து பாஸ் பண்ணியிருக்கீங்க. இதுக்கு யாரெல்லாம் காரணம்? இது போல ஒரு அசுர சாதனை செய்வதற்கு உங்களுக்குள்ளே நிச்சயமாய் ஒரு வெறி, அதாவது ஃபயர் இருந்திருக்கணும். அந்த ஃபயர் உங்களுக்கு எப்படி வந்தது?”

ஒரு நிமிடம் யோசித்தான். பேச்சை கோர்வைப் படுத்துவது தெரிந்தது. அவன் முகம் உணர்ச்சிக் கொந்தளிப்பை காட்டியது. அதற்குள் குமார் தலைமையாசிரியரையும், மற்ற ஆசிரியர்களையும் புகைப் படம் எடுப்பதற்குத் தயாராய் கேமராவின் குவிய எல்லையில் நிற்க வைத்தான். அவர்கள்தானே இந்த வெற்றியின் சூத்திரதாரிகள்.?.

“நான் பாஸ் பண்ணியதுக்கு என்னுடைய ஆசிரியர்கள், தலைமையாசிரியர், இவங்க எல்லாருடைய ஒத்துழைப்புதான் சார் காரணம்.. நான் என்னைக்கும் அதை மறக்கமாட்டேன் சார். ஆனா நான் தமிழ் நாட்டிலேயே அதிக மதிப்பெண் எடுத்ததற்கு இவங்க காரணமில்லே சார்.!.”

ஆசிரியர்களெல்லாம் அதிர்ந்துபோய் நின்றார்கள் .எல்லோருக்குமே அதிர்ச்சி. மாணவர்கள் கூட்டம் கப்சிப்பென்று அடங்கியது எங்கும் நிசப்தம்.. .தலைமையாசிரியரும் ,சி.இ.ஓ.வும் குழப்பமாய் ஒருத்தரையொருத்தர் பார்த்துக் கொண்டனர்’

”பின்னே?”

“அதுக்கு இங்கிருக்கிற ஒரேயொருத்தர் தான் காரணம் சார்.”

அவன் நடந்துப் போய் கணக்கு ஆசிரியரை கையைப் பிடித்து அழைத்து வந்தான்.

“நான் நம்முடைய மாநிலத்திலேயே அதிக மதிப்பெண் எடுத்ததற்கு அந்த ஃபயர் எப்படி வந்துச்சின்னு கேட்டீங்களே சார்.. எங்க கணக்கு வாத்தியாருதான் சார் அந்த ஃபயரை எனக்குக் குடுத்தாரு..” என்று அவரை வணங்கினான்.. .. மாணவர்கள் கூட்டம் ஓ! வென்று கத்தி, பலமாகக் கைத்தட்ட, கணக்கு ஆசிரியர் வேகமாக அந்த இடத்தை விட்டு வெளியேறினார்..

**************************
நன்றி—-இலக்கியப்பீடம் நடத்திய சிறுகதைப் போட்டியில் ’உந்துதல்’, என்ற தலைப்பில் பரிசு பெற்ற கதை—நவம்பர்2011

Print Friendly, PDF & Email

2 thoughts on “உந்துதல் (அ) ’சடையன்’

  1. சாதி என்ற நோயை, அழிப்ப‌தற்குப் பதிலாக புற்று நோய் போல ஒரு தீரா வியாதியாய் மாற்றுவதற்கு தற்போது ஒரு ஓநாய்க் கூட்டமே கொடி பிடித்து கிளம்பியிருக்கிறது. இந்த தருணத்தில் இதைப் படிக்கும் போது மிகவும் தத்ரூபமாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

    1. நன்றி.சாதி இல்லை என்று முழங்குகிக்கொண்டிருக்கிற நாம் எல்லோரும் பொய்தான் பேசிக்கொண்டிருக்கிறோம். இதுதான் இந்த நாட்டின் சாபக் கேடு. அடிப்படை கட்டமைப்புகள் மாறவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *