உதிர்ந்த சருகுகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: February 3, 2021
பார்வையிட்டோர்: 13,319 
 

வழக்கமாக வீட்டில் கேட்கும் டிவி அல்லது ரேடியோவின் ஒலி இன்று காலை இல்லை. அண்ணனும் அண்ணியும் ஊரிலிருந்து வருவதாக மகிமாவிடமிருந்து தகவல். அம்மாவிடம் சொன்னபோது பெரிதாக சட்டை செய்யவில்லை. ‘எவன் வந்தா உனக்கென்ன, நீ போயி உன் சோலியை பாரு’ என கூறிவிட்டு பாத்திரங்களை கொண்டு கழுவப்போய்விட்டாள். இது எதிர்பார்த்ததுதான் என்றாலும், இவ்வளவு சுலபமாக புறந்தள்ளிவிட்டு வழக்கம்போல தன் வேலையை பார்க்க சென்றுவிடுவாள் என நினைக்கவில்லை.

மகிமா மட்டும், குளித்து முடித்து, கொஞ்சம் புது டீ-ஷர்ட்டும், ஜீன்ஸ்-உம் போட்டுக்கொண்டு, ஒரு மூலையில் மொபைல் போன்-உடன் அமர்ந்துவிட்டாள். நினைத்ததை செய்ய இந்த வீட்டில் அதிகபட்சம் அனுமதிக்கப்படும் 11 வயது சிறைப்பறவை. அநேகமாக சுந்தருடன் சாட்டிங் செய்யத்தான் இருக்கும். சுந்தர், அண்ணனின் மூத்த மகன், 10 வயதோ, 12 வயதோ ஆகிறது. இருவரும் எப்படியோ facebook-ல் நட்பாகிக்கொண்டிருக்கிறார்கள். மகி என்னிடம் அவனுடைய facebook ஸ்டேட்டஸ்-ஐ காட்டியவுடன் தான் எனக்கும் ஊர்ஜிதமாகியது. “Sundar ramamoorthy – feeling wonderfull – Going native for first time.”

20 வயதில் வீட்டை விட்டு வெளியேறிய அண்ணன், 14 வருடம் கழித்து சொந்த ஊருக்கு விஜயம் செய்கிறான் குடும்பத்துடன். எங்கே வருவான்? மோகன் சார் வீட்டுக்குதானிருக்கும். ‘அவனை விட்டா இங்க வேற யாரு இவனை உள்ளவரச்சொல்லி, உபசரிக்கப்போறா, ஊரு பேரு தெரியாதவனெல்லாம் அவன் வீட்டுக்குள்ளே வந்து காலாட்டிக்கிட்டு கெடக்கும்போது, நம்மூரிலே புரட்சி பண்ணவனை தாங்காம விட்டுருவானாக்கும்’ பாத்திரம் தேய்ப்பதினூடே அம்மாவின் குரல் கேட்டது. அந்தத் தேய்ப்பில், ஏதோ நினைவுகளை அழுத்தி அழிக்கும் முனைப்பும் பரபரக்கிறது.

அப்பாவிடம் தெரிவிக்க எனக்கு திராணி இல்லை. அவருக்கு உவப்பான விஷயங்களை சொல்ல, வீட்டிலேயே கொஞ்சம் அனுமதிக்கப்படுபவள் மகி தான். அவளின் மழலைக் குரலில், வீட்டின் மனங்களை ஊடுருவி அறியத்தெரிந்தவர். ஆரம்பத்தில், பேத்தியின் அனைத்து ‘பிதற்றல்’களுக்கும் செவிசாய்த்து கொண்டிருந்தவர். பிறகு, திடீர் ‘ஞானோதயம்’ வந்தவராக, தன் வழியே அவளை திசைமாற்ற ஆரம்பித்தார். வீட்டுக்கு வெளியே யாரை நிறுத்தவேண்டும், உள்ளே யார் அனுமதிக்கப்படவேண்டும் என்று. கட்டளை மட்டுந்தான், காரணம் விவரிக்கப்படவில்லை. சிறுமி என்பதால், தேவையில்லை என நினைத்தாரோ என்னமோ.

குணவதி, ஏதோ இப்பொழுது தான் புகுந்தவீட்டிற்கு வந்ததுபோல், தனக்கு எதற்கு வம்பு என, சமையல் அறையில் காய்கறியை நறுக்கிக்கொண்டு, பிரளயம் ஏதும் வெடிக்கிறதா, என வீட்டின் முனகல்களை, கண் காது கொண்டு, ஆவலும், பதட்டமுமாக மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தாள். ஏனோ ‘இவள்தான் என் வாழ்க்கைத்துணை’ என இப்போது எண்ணிப்பார்ப்பது, புது அனுபவமாகவும், 11 வருட எரிச்சலாகவும் ஒருசேர இருக்கிறது. ஒரு டம்ளர் தண்ணீரால் அதை அணைத்துவிட்டு, மகியை தேடினேன்.

உள்ளறையில் என் மகள் அருகில் போய் உட்கார்ந்ததும், செல்போனிலிருந்து தற்காலிகமாக மீண்டு, உபசரிப்பாக ஒரு புன்முறுவலை தட்டிவிட்டு, மீண்டும் அதன் சிணுங்கல்களுக்கு தலை கவிழ்ந்தாள். வீட்டின் உயிரோட்டத்திற்கான ஆணிவேர். எனக்கிருக்கும் குறைந்தபட்ச ஆறுதல். மூன்று வயதிலேயே, வீடியோ கால், வாட்ஸப் என இணையத்தில் திளைத்து, இனம் புரியாத பெருமையை பெற்றோருக்கு உணரக்கொடுத்தவள். பாரம்பரிய கோட்பாடுகளை புறந்தள்ளி, மகிமா வாட்ஸப் ஸ்டேட்டஸ் இடுவதை, சாய்வு நாற்காலியில் அமர்ந்து TMS குரலை ரசித்துக்கொண்டிருக்கும் அப்பா அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஒருவேளை அதை வேரோடு பெயர்த்திழுக்க, இன்னும் வளர விடுகிறாரோ என்னவோ. அப்படி இழுக்கும்

போது அதைத் தடுத்திட முடியுமா?… இதற்கு முன் முடிந்ததா?…

திரும்பவும் ஏறிட்டுப்பார்த்த மகிமா, ஒரு புன்முறுவலுடன், என்னை அவளுடன் அனுமதிக்கப்பட்டவனாக, செல்போனை திருப்பி திரையை காட்டினாள், ‘தம்பி பாப்பா பா’. ராமு அண்ணனின் இரண்டாவது குழந்தை, அநேகமாக 2 அல்லது 3 மாதமிருக்கும். சுந்தர் தான் facebook-ல் பதிந்திருக்கிறான். குழந்தைகளுடன் அண்ணன் வருகிறானென்றால், என்ன காரணமாயிருக்கும், இங்கேயே செட்டில் ஆக வீடு பார்க்கிறானா, அல்லது ஏதோ இடம் வாங்கி வீடு கட்ட போகிறானா?

…’எதுக்கு வர்ராங்களா? உன்கிட்ட சொன்னானா?’

‘இல்லப்பா, கேட்டதுக்கு அப்புறம் சொல்றேன்னு சொல்லிட்டான்’

‘எவ்ளோ நாள் இங்க இருப்பாங்களாம்’

‘இங்க ரெண்டு நாள் தங்கிட்டு, ராமநாதபுரம் போறாங்களாம். 4 நாள்ல ட்ரெயினாம்’…

எனக்கு ஒன்றும் புரியவில்லை, கவிதா அண்ணியின் ஊருக்கு செல்வதாயிருந்தால், அங்கேயே நேரே போகவேண்டிதானே. இங்கே எதற்காக வந்து செல்ல வேண்டும். மோகன் சார் என்ன அவ்வளவு வேண்டப்பட்ட ஆளா அண்ணனுக்கு? அவரே கட்சி, மீட்டிங் என்று அலைந்து, தன் சித்தாந்தத்துடனும், குடும்பத்துடனும் மல்லுக்கட்டிக்கொண்டிருக்கிறார்.

‘உங்களுக்கு டீ போடணுமா?’ என்றாள் குணவதி, அங்கே எதேச்சையாக வந்தவளாக காட்டிக்கொண்டு.

வழக்கமாக இந்த நேரத்துக்கு கேட்காமல் கொண்டுவந்துவிடுவாள், இப்போது நாங்கள் பேசுவது, எதார்த்தமாக காதில் வந்து விழ, சந்தர்ப்பம் அமைக்கிறாள். நான் தலையசைத்ததும், முழுமை பெறாத தகவல்களை, உதட்டுச்சுளிப்பில் புறந்தள்ளிவிட்டு நகர்ந்தாள்.

‘அப்பா இங்க பாரு’

திரும்பவும் திரையை காட்டினாள் மகிமா. Cooling glass, 2 சென்டிமீட்டர் புன்னகை என விதவிதமாக சுந்தர் எடுத்துக்கொண்ட செல்ஃபிக்கள். நானும் இணையவழி நட்புக்கு சுந்தரிடம் அனுமதி கேட்டு முன்னொருமுறை சொடுக்கினேன். எதிர்வினை இல்லை. பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்களை ப்ரொபைல் பிக்சர்-ஆக வைத்திருப்பவர்களை தன் நட்பு வட்டத்திற்குள் அவன் அனுமதிப்பதில்லை போலும். என்னை, நான் அல்லாத வேறொருவனாக காட்டிக்கொள்ள வேண்டும், இவனிடம் நட்பு பாராட்ட. அல்லது தன் அப்பா ராமமூர்த்தியுடன் தொடர்பிலாவது இருக்க வேண்டும்.

பிரபலமான தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்தாலும், ராமமூர்த்தி அண்ணனுக்கு வருமானம் சொற்பம்தான், என மோகன் சார் ஒரு முறை சொல்லக்கேட்டிருக்கிறேன். அவர்தான் அண்ணனுக்கு அவ்வப்போது சிற்சில உதவிகள் புரிந்திருப்பதாக செய்தி. ஒருவேளை நல்ல வருமானமென்றாலும், பெங்களூரின் வாழ்வாதாரம் பெரும்பகுதியை உறிஞ்சியிருக்கும். ஆனால், தன் பிள்ளையை பெரிய கான்வென்டில் படிக்க வைக்கிறான் போலிருக்கிறது. இப்போது அவரிடம் ஏதாவது பணஉதவி கேட்டு வந்திருப்பான். அறிவில்லாத மடையன், எப்போதோ அவனை அறைந்ததை இன்னும் மனதில் வைத்துக்கொண்டு இன்றுவரை தம்பியிடம் பேசாமல் வீராப்பு காட்டுகிறான். இந்த கவிதாவாவது பேசலாம். காதல் திருமணம் செய்ததால், நிர்கதியாய் விடப்பட்ட தன் கணவனுக்கு ஆதரவளிப்பவளாய் கழுத்தறுக்கிறாள்.

‘ஏண்டி குணா, டீ போட்டுட்டினா அந்த பாத்தரத்தையும் கொண்டா’ பின்கட்டில் அம்மாவின் உருட்டல்கள் மருமகளிடம் இன்று கொஞ்சம் அதிகம்தான். தன் கணவனின் சாதி கௌரவத்தில் நீங்காத கறையடித்தவன் ஊருக்கு வருகிறானென்றோ அல்லது தன் மகன் பெற்ற தாயிடம் ஊருக்கு வருவதை ஒரு வார்த்தை கூட சொல்லாமல் இருந்துவிட்ட சந்தர்ப்பம் நேர்ந்துவிட்டதே என்றோ, அந்த உருட்டல்களில் உணர்த்த முயல்கிறாளோ?

எப்படியும் நான்கு நாள் கழித்து அண்ணன் திரும்பி சென்றுவிட்டான் என தெரிந்தவுடன், அப்பாவின் காதுகளுக்கு கேட்காமல் அம்மாவின் புலம்பல்கள் சுற்றிவரும். அப்பா கூட பழைய ஸ்திரத்தன்மையை இப்போது கொண்டிருக்கவில்லை. வயதின் மூப்பு உடலையும், மனதையும் கொஞ்சம் இளக வைத்திருக்கிறது. அல்லது அவருடைய பாரம்பரியத்தை இளையவன் காப்பாற்றியதால் ஏற்பட்ட ஆசுவாசமாக கூட இருக்கலாம்.

திக்கற்ற என் அனுமானத்தை பிடித்திழுத்தது, மகிமா நீட்டிய செல்போனின் அழைப்பொலி. மோகன் சார் தான்.

‘ஹலோ…’

எதிர்தரப்பில் குரலில்லை. ஒருவேளை தெரியாமல் மாற்றி அழைத்திருப்பாரோ..

…வைத்துவிடலாமா?

‘ஹலோ..’

‘ஹலோ.. ஜெகன்..’

ராமு அண்ணனின் குரல் தான்.

‘ராம்.. எப்படி இருக்க’

‘ம்ம்.. நீ எப்படி இருக்க?…’ கொஞ்சம் திணறினான் ‘..அம்மா அப்பா?…’

‘……….’

‘ஜெகன்..’

‘சொல்லுடா…’

வார்த்தைகள் தடுமாறி விழுந்தன.

‘காலைலதான் மோகன் சார் வீட்டுக்கு வந்தோம். சரி உன்கிட்டயும் பேசி ரொம்பநாள் ஆச்சுன்னு….’ இழுத்தான்.

இவன் என்ன ஏதோ தூரத்து சொந்தத்திடம், நலம் விசாரிப்பதாக எண்ணிக்கொண்டிருக்கிறானா?.. முண்டம்…

‘பரவால்ல விடு.. ஃபார்மாலிட்டிக்கு விசாரிக்கணும்னு அவசியம் இல்ல..’

சட்டென.. ‘இல்லடா.. எங்க வீட்டுக்கு அழைக்கத்தான் வந்திருக்கேன். ஆனா, அப்பா மாறியிருக்க மாட்டார்னு தெரியும்.. மோகன் சார் தான்….’

‘…………..’

போனை வேறு யாரோ பிடுங்கி.. ‘ஹலோ ஜெகன்..’

மோகன் சார்.

‘சார்.. நல்லாயிருக்கிங்களா..’

‘ம்ம்.. நீ எப்படி இருக்க?’

‘நல்லாருக்கேன் சார்..’

கொஞ்சம் அமைதி.

‘இத பாரு ஜெகன், இன்னும் எவ்ளோ வருஷம்தான் பழசை நெனச்சுட்டு இவன தண்டிச்சுட்டு இருப்பிங்க..?’

‘நா என்ன சார் பண்ண முடியும்..’

‘மூத்த பையனுக்கு தான் முடியாம போச்சு, ரெண்டாவது பையனுக்காவது அப்பா, அம்மா தம்பி குடும்பத்தோட கோவிலுக்கு போய் மொட்டை போட்டு, காது குத்தணும்னு நெனைக்கறான். நான்தா அவன வரச்சொன்ன, உங்க வீட்டுக்கு கூட்டிட்டு வர….’

‘சார்……’

‘உங்க அப்பாக்கு போன் பண்ணா எடுக்க மாட்டேங்கறான். அதா உனக்கு பண்ணேன்…’

‘என்ன இருந்தாலும் அவரோட பேச்சை மீறி அவன் பண்ணத எப்படி சார் அவரால மறக்க முடியும்….’

‘அது எத்தனை வருஷத்துக்கு முன்னாடி, இன்னும் தலைமுறை தலைமுறையா இது தொடர போகுதா?’

‘அவர் சொன்னா சொன்னதுதானே..’

‘சரி, நீ இன்னும் அதே மனநிலைல தான் இருக்கியா…’

‘…………..’

‘இல்ல உன் பொண்ணு, சுந்தர்கிட்ட போன்ல பேசறது, உங்கப்பாக்கு தெரியாதா?’

‘………….’

‘ஒருவேளை ஊர் உலகத்துக்கு இவங்க பேசறது தெரியாத வரைக்கும், கவலை இல்லைனு உக்காந்துட்டானா அவன்..’

சில எதார்த்தங்களை ஆண்டாண்டு கால பிடிவாதங்கள், மௌனத்தாலே புறந்தள்ளுகின்றன. அப்பாவின் மௌனம் அந்நியமாகப்பட்டது மோகன் சார் முன்னே.

‘இத பாரு ஜெகன், உங்கண்ணன் ஏற்கனவே நொந்துட்டாண்டா, தன் பக்கம் நியாயம் இருக்குனு தெரிஞ்சிருந்தும், உங்களுக்காக குற்றவாளி மாறி கூனி குறுகி உங்க வீட்டுக்கு வர அசிங்கப்பட்டு இங்க உக்காந்திருக்கான். இவன ஒதுக்கி வெச்சுட்டா இவன் அந்த வீட்ல உங்க அப்பா அம்மாக்கு பொறக்கலைனு ஆயிருமா? இதுல போகாத மானமா, அவன் பண்ணுன கல்யாணத்துல போயிருச்சு. சரி, இந்த வயசுலயே உங்க பேச்சை மீறி பழகற பசங்களையும் நாளைக்கு, வளர்ந்தப்பறம் இதே மாறி வீட்ட விட்டு……’

‘சார்….’

‘என்னபா….’

வறண்டு போன தொண்டையை விழுங்கி, ‘ராமுவை கூட்டிட்டு வாங்க, அப்பா என்ன சொன்னாலும், அவன் வீட்டு அழைப்ப நா ஏத்துக்கறேன்…’

வார்த்தைகள் திரும்ப வரும்முன் நிதானமாக துண்டித்தேன்.

பின்பக்க மரக்கிளைகள் அசைந்ததில், ஜன்னலின் வழியே உள்நுழைந்த காற்று வழக்கத்தை விட சற்று கூடுதலாக குளிர்ச்சியை உணர்த்தியது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *