இவர்களின் முன்னால்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: May 30, 2016
பார்வையிட்டோர்: 11,456 
 

உலகத்துல சின்ன இடத்தை பெற்றுள்ள குறைந்த மக்கள்தொகை உள்ள நாடுலாம் போட்டில தங்கமா குவிக்கிறாங்க.இவங்க ஒரு வெள்ளி பதக்கத்துக்கே முக்குறாங்க என்ற சிந்தனையுடன் அங்கே சுற்றிக்கொண்டிருந்தார் பிரபல தடகள பயிற்சியாளர் சுந்தர்.

என்றுமில்லாமல் அவருடைய கண்களுக்கு ஒரு இளைஞன் அகப்பட்டான். அவன் கால்கள் ஓய்வில்லாமல் ஓடிக்கொண்டிருந்தன. அவனிடம் ஏதோ ஒன்று இருப்பதை தெரிந்து கொண்டவர்.அவனை ஓட்டத்தை உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தார். அவனிடம் வேகம் , சக்தி , உத்தி என அனைத்தும் இருப்பதை தெரிந்து கொண்டார்.அவனிடம் எப்படியாவது பேசிவிட வேண்டும் என காத்திருந்தவருக்கு, அவனுடைய ஓய்வில்லா கால்கள் ஆச்சரியமாக இருந்தது.அநேகமாக அவன் இருபது அல்லது முப்பது சுற்று முடித்திருப்பான்.இன்னும் அவனிடம் ஒரு சக்தி இருந்தது, இத்தனைக்கும் ஒரு நொடி கூட தன் வேகத்தை குறைக்கவில்லை.

அவன் எப்போது தனது ஓட்டத்தை நிறுத்துவான் எனவும் தெரியவில்லை ஆனால் எனக்கு தடகள சம்மேளனத்திற்கு செல்ல வேண்டிய நேரம் நெருங்கியது. இப்போது சென்றுவிட்டால் ஒரு தடகள வீரனை இழந்துவிடுவோம் என்ற நினைவு தான் மனமெல்லாம்.ஒரு வழியாக அவன் ஓட்டம் நின்றது.நான் எனது கைக்கடிகாரத்தை பார்த்தேன். எனக்கு ஆச்சரியம் தான்.

“படுபாவி பய, ஒரு மணி நேரமா ஓடியிருக்கான்.” என மனதிற்குள் சொல்லிக்கொண்டேன்.

அவன் தன் வியர்வையை தன் சட்டையில் துடைத்துக்கொண்டே மைதானத்தை விட்டு வெளியேற வேகமாக நடந்தான்அவனுக்கு சட்டை என்பது வியர்வையை துடைக்கத்தான் என பார்த்த எனக்கு எண்ண தோன்றியது.நானோ என்ன செய்வதென்றே தெரியாமல் அவனை நோக்கி போனேன். “தம்பி, கொஞ்சம் நில்லுப்பா.” என வேகமாக கத்தியவாறே அவனை நோக்கி போனேன்.ஆனால் அவன் கவனிப்பதாக இல்லை.அவனை வேகமாக நெருங்கி அவனை இடைமறித்தேன். கொஞ்சம் என்னை ஆச்சரியமாக பார்த்தான்.

முதலில் யார் பேசுவது என்ற குழப்பம். எனக்கு வயது ஐம்பதை நெருங்கிவிட்டது ஆனால் அவனை பார்த்தால் ஒரு இருபத்திநாலு இருக்கலாம்.எத்தனை நாள் தான் என்னைப்போன்ற வயதானவர்கள் இளைஞர்களின் வாய்ப்பை பறித்து கொள்வது.இப்போது அவனே ஏதாவது பேசட்டும் என காத்திருந்தேன் சில விநாடிகளுக்கு.

“என்ன சார் உங்க பிரச்சினை.” என ஒருவித கோபத்துடன் கேட்டான். இதை கொஞ்சமும் நான் எதிர்பார்க்கவில்லை .என்னிடம் அனைவரும் மரியாதையாகவே பேசுவார்கள் ஏனெனில் என்னுடைய கையெழுத்திற்கு ஒருவனை சர்வதேச போட்டிக்கு தேர்ச்சி அடையவைக்கும் சக்தி இருந்தது.இதனால் என்னிடம் பயிற்சி எடுக்கும் மாணவர்கள் அனைவருமே நான் என்ன சொன்னாலும் அதை அப்படியே கேட்டு செய்யும் எந்திரங்களாகவே இருந்தார்கள்.ஆனால் என்னை எதிர்த்து பேசினால் என்னையறியாமல் வரும் எண்ணவியலா கோபம் இவனை கண்டதும் வரவில்லை.

மேற்கொண்டு பேச தயாராகிவிட்டு பேச தயாரானேன் . “தம்பி, ரொம்ப அருமையா ஓடுறியே.எதோ போட்டிக்கு பேரு கொடுத்திருக்கியா ?” என்றேன் தயக்கத்துடன் .அவனுடன் பேசும்போது மட்டும் எனது தைரியம் காணாமல் போய்விடுகிறது. இது ஏதோ புதியதாக என்னை உணரச்செய்தது. “ஆமா,நல்லா ஓடுறேன்.இப்ப அதுக்கென்ன.” என்றான்.எனக்கோ இப்படி பேசுகிறானே என நினைக்க தோன்றியது.நேரம் வேறு ஓடிக்கொண்டிருந்தது.சம்மேளன கூட்டம் வேறு எனக்கு இருந்தது. “தம்பி, நீ ரொம்ப நல்லா ஓடுற,நீ என்னோட வா,நான் உனக்கு இலவசமா பயிற்சி கொடுக்கிறேன் அப்படியே உன்ன நான் பெரிய பெரிய போட்டியில விளையாட வைக்குறேன்,என்ன சொல்ற” என்றேன்.”ஓ அப்படியா, வரேன் பெரிசு.ஆனா எனக்கு என்ன தோணுதோ அதைத்தான் செய்வேன் சரியா?” என்றான். “சரிப்பா,இந்தா கார்டு.இந்த அட்ரஸ்க்கு நாளைக்கு காலையில வந்துருப்பா.சரியா ஒரு 8 மணிக்கு. ” என்றேன். “பாக்கலாம் பெரிசு, கிளம்பு கிளம்பு காத்துவரட்டும். ” என்றான் சிரித்து கொண்டே.

சரி என்ன வேண்டுமானாலும் சொல்லிவிட்டு போகட்டும், திறமை கிடக்குதே என மனசுக்குள்ளேயே சமாதானம் செய்துகொண்டு கடைசியாக அவனை பார்த்துக்கொண்டே வேகமாக கிளம்பினேன்.ஆனாலும் அந்த இளைஞனை பற்றிய சிந்தனைகள் தான் என்னுள். அவன் யார்? அவனுடைய வாழ்க்கை என்ன? அவனை எப்படி நான் பெரிய தடகள வீரனாக ஆக்க போகிறேன் ? என்ற யோசனைகள் என்னை முழுவதும் ஆக்கிரமித்திருந்தது. எண்ண ஆறுகள் போகும் போது நுரை போல அமலை செடிகள் ஆக்கிரமித்திருக்குமோ அது போலத்தான். கொஞ்ச நேரத்தில் சம்மேளன அலுவலகம் வந்தது.எனது பைக்கை நிறுத்தி விட்டு அலுவலகத்திற்கு உள்ளே நுழைந்தேன். எனக்கு முன்னே எல்லோரும் வந்திருந்தார்கள். அதற்குள் ஒருவர் என்னருகே வந்து “சார்,மினிஸ்டர் ஐயா சிபாரிசு பண்ணியிருக்காரு.பையன் பேரு முரளி. ” என்றார். “சரி பாத்துக்கலாம் ” என்று சலிப்புடன் சொன்னேன்.

மீட்டிங் அறைக்குள் நுழைந்தேன். ஒரு சிலர் என்னை முறைத்தனர். உண்மையை வெளிப்படையாக சொல்லவேண்டும் எனில் அனைவரும் பணக்காரர்கள் ஆனால் நானோ ஒரு ஏழைக்குடும்பத்தில் இருந்து வந்த பிராமணன் .அதனால் எனக்கு கீழ் வேலை செய்ய பிடிக்கவில்லை.ஏதோ ஒரு சிலரின் ஆதரவாலும், எனது பயிற்சியளிக்கும் திறமையால் இந்த பதவி என்னுடன் ஒட்டிக்கொண்டிருந்தது.அனைவரும் நான் யாருடைய பெயர்களை வாசிக்க போகிறேன் என ஆர்வத்தில் இருந்தனர் என்பதை அவர்களது முனகல் பேச்சில் காணமுடிந்தது. ஆனால் எனக்குள் அந்த இளைஞனை பற்றிய சிந்தனைகள் தான் நிரம்பி கிடந்தது.இத்தனைக்கும் அவனுடைய பெயர்,முகவரி எதுவுமே தெரியாது .நானாகவே அவனுக்கு ஒரு பெயரிட்டுக்கொண்டேன் இப்போதைக்கு அவனுடைய பெயர் ஏகலைவன். எனக்கு மகாபாரதத்தில் மிகவும் பிடித்த கதாபாத்திரம் அது.எனவே அந்த பெயரை அவனுக்கு சூட்டினேன். நான் ஆழமாக யோசித்து அவனுடைய பெயரையும் சொல்வது என முடிவெடுத்து கொண்டேன்.

இப்போதும் ஒரு சிக்கல் நான் வைத்திருந்த பட்டியலில் உள்ள பத்து பேரில் ஒன்பது பேர் கடின உழைப்பு மற்றும் திறமையால் முன்னுக்கு வந்த தடகள வீரர்கள் ஆனால் ஒருவனின் பெயர் விளையாட்டு துறை மந்திரியின் சிபாரிசில் வந்தவன். அந்த ஒன்பது பேரின் பெயரை நீக்கிவிட முடியாது ஆனால் மீதியுள்ள சிபாரிசில் வந்தவனின் பெயரை நீக்கிவிடலாம் என தோன்றியது.வேறு என்ன செய்ய அவனின் பெயரை நீக்கிவிட்டு இன்று காலையில் பார்த்தவனின் பெயரை சேர்த்து விடலாம் என முடிவெடுத்து கொண்டேன் சற்று பயத்துடன்.

ஏகலைவன் உட்பட பத்து பேர் அடங்கிய பட்டியலை வாசித்தேன்.முதல் ஒன்பது பெயர்களை வாசிக்கும் வரை ஏதோ அமைதியின் ஆச்சரியமாக இருந்தவர்களால் கடைசியாக நான் சொன்ன ஏகலைவனின் பெயரால் அப்படி அமைதியின் ஆச்சரியமாக இருக்க முடியவில்லை. அனைவரின் கண்களும் என்னை பார்த்து கொண்டு யார் அவன்? யார் அவன் என கேட்பது போல இருந்தது.சிலர் கூச்சலிட்டனர், ஏன் முரளியின் பெயர் வரவில்லை என.நான் பதில் ஏதும் சொல்லவும் இல்லை.அமைதியாக இருக்கையை விட்டு எழுந்து நின்றேன்.என்னை நோக்கி கூச்சலிட்டவர்களை ஒரு முறை பார்த்தேன், அந்த பார்வையின் எதிர்காலம் அவர்களை பயமுறுத்தியது.என் மனதிற்குள் “அந்த பயம் இருக்கட்டும்,யாருக்கிட்ட சுந்தர்டா” என பெருமை பாராட்டிக்கொண்டேன்.
அப்படியே அங்கு வெளியே நின்றுகொண்டிருந்த உதவியாளரிடம் “டேய் இந்த பட்டியலை அறிவிப்பு பலகைல ஒட்டிருடா.” என உள்ளே கேட்குமாறு சொன்னேன்.உடனே அந்த இடத்தை விட்டு வெளியேறினேன்.அப்போது அடிமனதின் ஆழத்தில் நானும் இருக்கிறேன் என சொல்லிக்கொண்டு பசி வெளியே வந்தது.அதே நேரம் வெயில் அலை போல அடித்து காற்றை யாரோ குளிப்பதற்காக சூடாக்கி கொண்டிருந்தது.வியர்வை துளிகள் உழைக்காமலே வெளிவந்து கொண்டிருந்தது.உடனே கைகள் கைக்குட்டையை தேடியது.அதையும் காணவில்லை.என்ன செய்ய என மனதிற்குள் யோசித்து விட்டு சுற்றி முற்றி பார்த்துக்கொண்டு வேகமாக சட்டையால் வியர்வையை துடைத்துக்கொண்டேன்.ஏனெனில் பதவியில் உள்ளவன் ஆயிற்றே, எதையும் பார்த்து செய்ய வேண்டும் என எப்போதும் நினைப்பேன்.இந்த வியர்வை துடைத்த விஷயம் என் நண்பர்கள் யாருக்காவது தெரிந்து விட்டு, அவர்கள் என்னிடம் வந்து ” ஒரு கைக்குட்டை வாங்க கூட காசில்லையா” என சொல்லிவிட்டால் என்ற நினைப்பே கண்களில் இருந்தது.

பசிக்கிறது என உடல் சொன்னது ஆனால் மனமோ மணி பதினொன்று தான் என்றது மேலும் இப்போது உணவு விடுதிக்கு போனால் உன்னை பசி தாங்காதவன், வலிமை குறைந்தவன் என சொன்னது சிரித்து கொண்டே. என்ன புன்னகை உனக்கு என என் மனதை பார்த்து கேட்டுக்கொண்டேன்.இதற்கும் சிரித்தது என் மனது.இதற்கு மேல் உன்னிடம் பேசுவதற்கு ஒன்றும் இல்லை என நினைத்தேன்.நினைவே பேசி விட்டது என் மனதுடம்.என்ன செய்ய என்னவும் செய் என என் மனதை விட்டுவிட்டேன்.அந்த நேரம் நான் ஒரு பிரபல உணவு விடுதிக்கு வெளியே இருந்தேன்.உணவின் வாசனை கடையை தாண்டி உடலை தாண்டி மனதிற்குள் வீசியது. “சரி போ” என உத்தரவு கிடைத்தது.ஆனால் காலம் அப்போது பதினைந்து நிமிடம் நகர்ந்திருந்தது.

நான் உள்ளே போன போதுதான் தெரிந்தது, என்னைப்போல பசி தாங்காதவர்கள் உண்டு என.சிலரிடம் வெறுப்பை கண்டேன்.இன்னும் சிலரிடம் காத்திருப்பை கண்டேன்.இப்படி தான் அவர்களும் என்னிடம் எதையோ கண்டிருப்பார்கள் என நினைத்துகொண்டே கைகழுவி விட்டு அமர்ந்தேன்.ஒருவர் வந்தார், “என்ன சாப்பிடுறிங்க?” என்றார். “என்ன இருக்கு” என கேட்டேன். பதிலுக்கு வேகமாக உணவு பலகாரங்களின் பெயரை பாடல் போல பாடினார். “தம்பி, போய் ப்ரைடு ரைஸ் கொண்டா” என்றேன்.ப்ரைடு ரைஸ் என்பதை அவன் கேட்டிருப்பான் ஏனெனில் அத்தனை வேகம்.கொண்டா என்பதை அவன் கேட்டிருக்க வாய்ப்பில்லை.ஆனால் அவன் போன பிறகு பதினைந்து நிமிடம் உணவை என் மேசையில் பார்க்க முடியவில்லை.பசி வேறு தாங்க முடியவில்லை.நேரம் வேறு கொஞ்சமும் இரக்கமே இல்லாமல் வேகமாக சென்று கொண்டிருந்து வாழ்க்கை எனும் பாழடைந்த சாலையில்.அதோ என்றது மனது, அவன் வருவது போல இருந்தது.” இந்தாங்க சார், ப்ரைடு ரைஸ் ” என மேசையில் வைத்தான். வேறு என்ன உடனே சாப்பிட ஆரம்பித்தாயிற்று.அவன் அடிக்கடி என் மேசையையும் ,என்னையும் பார்த்துக்கொண்டிருந்தான்.சாப்பிட்டு முடித்து விட்டு வேகமாக கைகழுவும் இடத்திற்கு விரைந்து நடந்தேன்.குழாயை துறந்தேன், அந்த தண்ணீர் எரிச்சல் அடைந்தது போல சற்று சூடாக கையில் கொட்டியது.கொஞ்சம் தண்ணீரால் வாயை கழுவிக்கொண்டேன்.அப்போது இப்படி பேசிய வார்த்தைகளை கழுவ வழியிருந்தால் எப்படி இருக்கும் என யோசனை தோன்றியது.அதன்பின்பு எவ்வளவு வேடிக்கையானது என எண்ண தோன்றியது.

உடனே எனது மேசைக்கு போனேன்.அங்கு ஒரு தட்டில் ரசீது இருந்தது.அதே காசை அங்கு வைத்துவிட்டு சற்று எழுந்தால் அவன் அங்கிருந்தான்.தட்டை வேகமாக எடுத்துக்கொண்டு கடை முதலாளி இருந்த மேசைக்கு போனான்.காசை ஒப்படைத்தான்.மீண்டும் வேகமாக இன்னொரு மேசைக்கு போனான்.அதன்பிறகு என்ன என்னிடம் நடந்து கொண்ட முறை தான். சரியான மனித மிஷின் என திட்டிக்கொண்டே வெளியே வந்தேன்.ஒரே அதிசயமாக இருந்தது.

வெயில் அப்போது இல்லை, வானம் கருமேகம் சூழக்கிடந்தது.

வெயில் இல்லை.ஆனால் இது ஏதோ குறிப்பால் சொல்வது போல இருந்தது.அந்த குறிப்பை மனது உணர்ந்து கொண்டது.சொல்லப்போனால் அந்த குறிப்பு “ஏகலைவனை தேடிப்போ”.கால்கள் குறிப்புணர்ந்து நகர ஆரம்பித்தது.என்ன நம்பிக்கை என்று கூட தெரிவில்லை, அவன் இன்னமும் ஓடிக்கொண்டிருக்கிறான் என ஒரு இனம்புரியாத நம்பிக்கை.இந்த நம்பிக்கை பற்றி சொல்லவே ஒரு நம்பிக்கை வேண்டுமல்லவா.அந்த நம்பிக்கை பற்றிய நம்பிக்கை கூட அவன் இன்னமும் ஓடிக்கொண்டிருக்கிறான் என சொன்னது.நான் அந்த நகரத்தின் அமைதியற்ற வீதிகள் வழியே நடக்க ஆரம்பித்தேன்.ஆனால் என்னிடம் பணம் இருந்தது.அது மட்டுமல்லாமல் என் அலுவலக வாகனம் வேறு இருந்தது.ஆனாலும் வானமும் மனதும் எனக்கு சாதகமாக இருந்தபடியால் உடல் நடக்க ஒத்துழைத்தது என்று அதே மனதில் நினைத்துக்கொண்டேன்.

ஆனால் கண்ணில் எல்லாம் சாதாரணமாக தென்பட்டன.ஆனால் அப்படி கண்ணில் தென்பட்டது எல்லாம் மனதில் கண்ணீராக மாறிக்கொண்டிருந்தது.அங்கே ஒரு சிறுவன் ஒரு பெரிய சாக்குப்பையில் தெருவில் கிடந்த குப்பைகளின் விலை போகக்கூடிய பொருட்களை பொறுக்கி கொண்டிருந்தான்.இன்னும் அந்த சிறுவனை பார்த்தபடியே நடந்து கொண்டிருந்தேன்.ஆனால் அந்த சிறுவனின் கண்களில் ஏதோ ஒரு கவிதை இருந்தது.அது குழப்பமான கவிதை என்றே சொல்லும்படியாக இருந்தது.அந்த கண்களில் ஏக்கம், துக்கம் என கலந்து கிடந்தது.

இன்னும் அவனை பார்த்துக்கொண்டே நடந்ததில் இன்னொரு விசித்திரன் காணக்கிடைத்தான்.அவன் ஒரு பிச்சைக்காரன்.அதுவும் ஜெயகாந்தனின் குருபீடம் கதையில் வருபவனை போன்ற வர்ணனைகளுக்கு ஏற்புடைய தோற்றமுடைய பிச்சைக்காரன்.அந்த பிச்சைக்காரனின் பார்வை வித்தியாசமானதாக இருந்தது.ஏதோ எல்லாத்தையும் வாழ்ந்து முடித்த அனுபவம் உள்ள ஒரு சூரியனின் பார்வை.இதற்கு முன் பார்த்த சிறுவனின் பார்வையோடு ஒத்துப்போனது.ஆனால் கண்கள் அந்த சிறுவனுடையது போல அல்ல.அதில் ஒரு வித்தியாசம்.வித்தியாசம் உருவத்தில் என்றாலும் அதை இல்லை என்று சொல்லும்படியான ஏக்கம் நிரம்பிகிடந்தது.

இன்னும் நடந்துகொண்டே சென்றேன்.ஒரே யோசனை.ஏன் ஒரு குப்பை பொறுக்கும் சிறுவனின் கண்கள் எனக்கு என்னவோ மாதிரி இருக்க வேண்டும்.ஏன் ஒரு பிச்சைக்காரனின் கண்கள் எனக்கு என்னவோ மாதிரி இருக்கவேண்டும்.நேற்று இப்படி இல்லையே என மனதில் அரிசியாக யோசனையை ஊறப்போட்டு விட்டு நடந்தேன்.கண் எதிரே மைதானம் பரந்துவிரிந்து கிடந்தது.ஒரு பக்கம் அதிர்ச்சியாக இருந்தது ஏனெனில் மைதானத்தில் ஆங்காங்கே ஆணும் பெண்ணும் ஜோடி ஜோடியாக இருந்தனர்.அவர்களை தவிர மனித நடமாட்டம் இல்லை.அங்கே ஒரு ஜோடி நிழலில் ஓய்வு எடுத்து கொண்டிருந்த கறுப்பு நிற நாயை விரட்டிவிட்டு அங்கே அமர்ந்து கொண்டது.இந்த நிகழ்வை பார்த்த பின்பே வெயிலின் ஞாபகம் வந்தது.

இன்னும் ஆழமாக தேடிப்பார்ப்போம் என பார்த்ததில் ஒரு பாழடைந்த கட்டப்பட்டு வரும் கட்டிடத்திற்கு வெளியே ஒருவன் சட்டையை எடுத்து உடம்பை துடைத்து கொண்டிருந்தான்.இன்னும் அருகில் சென்று பார்த்தேன், அது அவன் தான். “ஏகலைவா” என அவனை நோக்கி காதில் விழுமாறு சொன்னேன். “இது யாருப்பா,லூசா நீயீ” என்றான். “இல்லை தம்பி, காலைல நீ ஓடினதை பார்த்துட்டு நல்லாருக்குனு சொல்லி கார்டு கொடுத்துட்டு போனேனே.மறந்திட்டியா..” என்றேன். ” ஓ, நீயா! சொல்லு கிழவா” என்றான். “நான் உன்னையும் எங்களுக்கு கீழ பயிற்சி எடுக்குறவங்க பட்டியல்ல சேத்துருக்கேன்,நாளைக்கு வருவலே” என்றேன்.”சாப்பாடு போடுவியா மூனு வேளைக்கு,ஆமானு சொல்லு வரேன்.என்ன சொன்னாலும் செய்றேன் ” என்றான். “சரிப்பா,மூனு வேளைக்கும் சாப்பாடு உண்டு.உன் வீடெது” என்றேன். “அதுவா பெரிசு ,இதான் என் வீடு.ராத்திரி அதோ தெரியுது பாரு கோழி கிடக்கிற மாதிரி இருக்கே அதுக்குள்ள படுத்துக்குவேன்.ஏன் வீடு கட்டி தரப்போறியா ” என்றான் சிரித்து கொண்டே.

எனக்கு பரிதாபமாக இருந்தது. “சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவே?” என்றேன். “அதுவா பசிக்கும் போது கோயிலுக்கு போவேன், அங்க போய் வாசல்ல உட்கார்ந்து அம்மா தாயே பிச்சைப்போடுனு பரிதாபமாக சொல்லுவனா,ஏதோ ஐந்து,பத்து விழும்.ஒரு அறுபது சேர்ந்தா கிளம்பி போய் சாப்பிடுவேன்.அவ்வளவு தான்.” என்றான்.ஆனால் அவனிடம் எந்த துயரத்தையும் காண முடியவில்லை.கிட்டத்தட்ட இதற்கு முன் வரும்வழியில் நான் கண்ட சிறுவன், பிச்சைக்காரன் போலவே இவனிடமும் எதை நோக்கி என்றே அறியாத ஒரு ஏக்கம் இருந்தது.என்னால் அதற்கு மேல் என்ன பேசுவது என்று தெரியவில்லை. “பெரிசு, சாப்பாடு உண்டுல” என்றான். “ஆமாப்பா, கண்டிப்பா.நீ எப்படி இவ்வளவு அருமையா ஓடுற” என்றேன்.”அதுவா பழக்கம் பெரிசு, அதுலாம் உனக்கெதுக்கு” என்றான். “அதுசரி, உன் பேரென்ன?” என கேட்டேன்.”அதுவா, நீங்க எப்படி நினைக்கிறீங்களோ அப்படியே இருக்கட்டும்.ஆனா என் நிசப்பேரு மாடன்.இந்த பேருல ஏதாவது உனக்கு பிரச்சினையா ” என்றான் சிரித்து கொண்டேன். “அதுலாம் இல்லை தம்பி, நாளைக்கு காலைல வந்துரு” என்று சொல்லிவிட்டு நாளைக்கு பாப்போம் என்ற பார்வையோடு அந்த இடத்தில் இருந்து புறப்பட்டேன்.

எப்படியோ அந்த கொடிய ஆடம்பர நகரத்தில் இருந்து விடுதலை கிடைத்தது என் வீட்டிற்குள் நுழைந்தவுடன்.என் வீடு மைதானத்திற்கு அருகில் தான் இருந்தது.சரியாக வீட்டின் கதவை பூட்டிவிட்டு கடிகாரத்தை பார்த்ததில் மணி மூன்று.என் மனைவி மரணதேவனின் அழைப்பிதழை ஏற்று சென்றிருந்தாள், அநேகமாக அவள் போய் இரண்டு வருடம் இருக்கும்.இது அந்த மூன்று மணி வீட்டுத்தனிமையில் என் நினைவை கிழித்துக்கொண்டு புரட்சியாளனை போல வந்தது.இன்னும் இருக்கிறது என ஒரு மாற்று சாதிக்கார இளைஞனான காதல் ஏற்பட்டு ஓடிப்போன அபிதாவின் நினைவு இன்று அவள் அமெரிக்காவில் இருக்கிறாள் என்பது என் நண்பர்கள் வழியே தெரியும். ஆனாலும் அவளிடம் பேச எனக்கு தயக்கம்.சமீபத்தில் பெரியாரை படிக்க முடிந்தது, அதில் இருந்து என்னை மாற்றிக்கொண்டேன்.எவ்வளவு அருமையான கருத்துக்கு சொந்தக்காரர் என வியந்து கொண்டு சாதி, மதம் எனும் சட்டையை கழற்றி வீசிவிட்டேன்.இப்போது என் மகளிடம் பேச வேண்டும் என்பது போலத்தான் இருந்தது. ஆனாலும் ஒருவேளை அவள் என்னிடம் “சாதி என்னைவிட உங்களுக்கு ரொம்ப பெருசாப்பா” என கேள்வி கத்தியை வீசிவிட்டால் நான் பைத்தியகாரன் ஆகிவிடுவேன்.அதற்கான சாத்தியம் அதிகமாக இருந்தது.சாத்தியங்கள் சத்தியம் செய்துவிடுகின்றன நான் தான் என பாசம், உறவுகள் விஷயத்தில்.இன்னும் நான் நான் அடுத்தவொரு சாட்டையடி மனதில். என் பெயர் மாடன்.என்னை தாழ்த்தப்பட்டவன் என்பார்கள்.என்னை பிச்சையெடுக்க வைத்தது நீ தான் என சொல்வது போல இருந்தது.அவனை நிச்சயம் ஒரு வெற்றியாளனாக மாற்றுவேன் என்று மனம் முடுக்கமடைந்தது.

அப்படியே மெல்ல நேரம் ஓடியது.ஒரு குட்டி தூக்கம்,ஒரு முந்நூறு பக்க புத்தகம் என எல்லாத்தையும் முடிக்க இரவு எட்டு மணி என கடிகார முள் ஓடிக்கொண்டே சொன்னது.சாப்பிடலாம் என முகத்தை கழுவி விட்டு சமையலறைக்கு போனேன்.ஏதோ அந்த நேரம் சாப்பிட தோன்றவில்லை.ஒரு வித குற்றவுணர்ச்சி.கண்ணாடியில் என் முகத்தை பார்த்தேன், முகம் வாடியிருந்தது.வேறு எதுவும் தோன்றவில்லை.நான் தூங்க முடிவெடுத்து வைத்திருந்த தூக்க மாத்திரை ஒன்றை விழுங்கி கொண்டேன்.மெல்ல உடல் தூக்கம் கண்டது.

சூரியனின் கதிர்கள் மெல்ல மெல்ல ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்திருந்தன.ஆதவனின் ஆதிக்க மனப்போக்கு என் இமைகளை தூண்டிவிட்டது.கண்விழித்து பார்த்தேன்.பொழுது விடிந்திருந்தது.இந்த உலகம் இயங்குவதும் அதில் என்னுடைய இயக்கமும் எவ்வளவு முக்கியம் என்பது நினைவுக்கு வந்து வேகமாக முகம் கழுவி, பல் விலக்கி, காலைக்கடனை கழித்து, குளித்துவிட்டு , வேகமாக உடையை அணிந்து விட்டு வீட்டு கதவை பூட்டிவிட்டு வெளியேறினேன்.அப்போது திடீரென கைக்கடிகாரம் கட்ட மறந்தது நினைவுக்கு வந்து மீண்டும் கதவை திறந்து என் மேசையின் மேலிருந்த கைக்கடிகாரத்தை வேகமாக அணிந்துவிட்டு வேகமாக மீண்டும் கதவை பூட்டிவிட்டு புறப்பட்டேன் நேரம் சரியாக ஏழு முப்பது.

போகும் போது “ஐய்யோ இன்னைக்கு சாப்டல, ஓடல, மறதி வேற என்ன நடக்க போதோ” என்ற சிந்தனைகள் கடலில் தெரியும் நுரை போல தோன்றி மறைந்து கொண்டிருந்தது. என்ன ஊருய்யா இது என வேதனைபடும் படி நடப்பவனுக்கு கூட வழிவிடாத வாகன நெரிசல் , தெருவோர சண்டை, பள்ளி பெண்களின் பின்னால் போய் கொண்டிருக்கும் ஒரு இருபது வயதான இளைஞன் என கண்ணில் பட்டு நெஞ்சில் குத்தின. இன்னும் ஒரு கால் முன்னே மற்றொரு கால் பின்னே வைப்பதை நிறுத்தவில்லை.எப்படி முட்டி மோதி வியர்வை சிந்தி சம்மேளன பயிற்சி மைதானத்திற்கு வந்தாயிற்று.
அங்கு போய் பார்த்தால் எனக்கு முன்னே ஒரு அணி இருந்தது. உள்ளே போனேன். மொத்தம் அந்த மைதானத்தில் மனித கால்களின் எண்ணிக்கை இருபத்திநான்காக இருந்தது.கணக்குப்படி இருபத்திரெண்டாக தானே இருக்கனும் என யோசித்து ஒவ்வொருத்தரின் பெயராக சொல்ல ஆரம்பித்தேன். நான் வேண்டாம் என்று நிராகரித்த மினிஸ்டரின் பையனும் இருந்தான்.

“தம்பி, உன் பேரு தான் பட்டியல்லயே இல்லியே?”

“ஆமா, இப்ப அதுக்கென்ன.”

ஒரு மாதிரியாக இருந்தது அவன் பார்வையை பார்க்கும்போது.

“தம்பி, உனக்கு என்னால பயிற்சி கொடுக்க முடியாது ,நீ பிரச்சினை பண்ணாம போயிருப்பா ” என்றேன்.

“பிரச்சினை பண்ணுனா அடிப்பியோ?” என்று இறுமாப்புடன் பேசினான்.

நான் அடுத்து பேச ஆரம்பிப்பதற்குள் அவன் தன் கன்னத்தில் கையை வைத்து கொண்டான். பளார் என்ற சத்தம் கேட்டது. ஏகலைவன் விட்ட அறை அப்படி.
“என்னையாடா அடிச்ச” என்று திமிரினான்.அதற்குள் “என்னடா பெரிய புடுங்கியா நீ” என ஏகலைவனிடம் இருந்து வார்த்தைகள் தெறித்தன.
நான் என்ன செய்வதென்றே தெரியாமல் திகைத்து நின்ற நேரம் மற்றவர்கள் இருவரையும் பிரித்து விட்டனர். கடைசியாக ஏகலைவனிடம் இருந்து வந்தது ” அந்த முதுகுல போதே ஒரு கயிறு அத்து எறிஞ்சிருவேன், ஓடுறா” என்ற வார்த்தைகள்.இந்த வார்த்தைகள் அவனுக்கு ,எனக்கு ,மற்றவர்களை நோக்கி சொல்லப்பட்டதாக இருந்தது. நான் அவனை தனியாக அழைத்து பேச சென்றேன்.

“ஏன்டா இவ்வளவு கோப்படுற”

“அது அவன் வந்தவுடன என்னை பாத்து பிச்சைக்காரன்லாம் தங்க பதக்கம் செயிக்க போறானு அசிங்கப்படுத்துற மாதிரி சொன்னான்.அதுமட்டும் இல்ல சார் கேளுங்க தெருவோர நாயிலாம் எல்லாம் எங்களுக்கு சமமா வந்தா நாங்க வேடிக்கை பாக்கனுமோ னு சொன்னான்.அப்பவே எனக்கு ஆத்திரம் அதிகமாயிருச்சு.அதுக்கு அப்புறம் உங்க கிட்ட வந்து ஒரு மாதிரியா பேசுனான் அதான் அடிச்சேன்.”

“அதுக்கு ஏன்டா சாதியை பத்தியெல்லாம் சொல்லி திட்டுற, அவன் மினிஸ்டர் பையன்டா”

“அதுக்கு, நான் பிச்சைக்காரன் தான்.கிழிஞ்ச அழுக்கு சட்டை போடுறவன் தான்.எனக்கு ஒரு அம்மா தான் ஒரு அப்பா தான்.அவனை பாத்தாலே தெரியுது அவன மாதிரி பணத்துக்கு அலையிற அப்பாவுக்கோ,அம்மாவுக்கு நான் பொறக்கல.இன்னும் தன்மானம் குறைஞ்சு போயிறல சார் எங்களுக்கு. ” என்று கம்பீரமாக சொன்னான்.

அது அந்த காலத்திய ஜெயகாந்தனின் கம்பீர மேடைப் பேச்சை நினைவுபடுத்தியது.

நான் பேசுவதற்குள் அவன் இடைமறித்து பேசினான்.

“ஐயா உங்களுக்கு நல்ல மனசு, தெருவில கிடந்த என்னையும் எடுத்துட்டு வந்து முன்னேத்தனும்னு பாக்குறிங்க ஆனா இந்த மாதிரி ஆளுங்க சிபாரிசு மயிறுனு வர்ற வரைக்கும் என்ன மாதிரி உள்ள எவனும் ஒன்னும் செயிச்சிற முடியாது”

“நான் என்ன பண்ணுறது தம்பி”

“அதுவா, இனி என்ன மாதிரியுள்ளவங்களை தயவு செய்து முன்னேத்திறன்னு இங்க கூட்டிட்டு வந்து இவனுங்க முன்னாடி அசிங்கப்படுத்தாதிங்க” என்றான்.
தம்பி என நான் பேச ஆரம்பிக்கும் முன் அவன் வேகமாக மைதானத்தை விட்டு வெளியேறும் வழியை நோக்கி வேகமாக நடக்க ஆரம்பித்தான்.அவன் வெளியேறுவதை மற்றவர்கள் மகிழ்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருந்தனர்.அதில் ஒருவன் விசில் அடித்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினான்.அந்த மைதானத்தின் நுழைவுவாயிலில் இருந்து கடைசியாக ஒரு பார்வையாக ஒரு முறை என்னை பார்த்தான்.அவ்வளவு தூரமாக இருந்தாலும் என்னால் அவன் கண்ணின் சோகத்தை தனியே காண முடிந்தது.

அந்த நிகழ்வுக்கு பிறகு அவனை நான் முதன்முதலில் சந்தித்த மைதானத்தில் பார்க்கவே முடியவில்லை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *