கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை  
கதைப்பதிவு: September 19, 2022
பார்வையிட்டோர்: 17,438 
 

(2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மனிதன்தான் தெய்வமாகிறான்.

தெய்வம் என்பது ஒரு சித்தி நிலை.

தான் இல்லாத, முடியாத தன்னிடம் இலக்கணங் களை, சிறப்புகளைத் தான் விருப்பப்பட்ட ஒரு உருவத்தில், இடத்தில் ஆவாஹனம் செய்து, அதைத் தரிசனமாக்கப் பாடுபடுவது மனித இயல்பு.

கூடவே தெய்வத்திடம் தான் விரும்பிய பலன்களை எதிர்பார்ப்பதும் மனித இயல்பு.

ஆனால் தெய்வீகம் தெய்வத்தைக் காட்டிலும் பெரிது. தெய்வீகம் தெய்வத்தின் அம்சங்களைக் குறிப்பிடுகிறது. தெய்வத்தின் உருவை, உருவின் எல்லைகளைக் கடந்தது. மானுடம் தெய்வீகத்தைக் காட்டிலும் உயர்ந்தது.

தெய்வத்திடம் காணாத ஒரு சிறப்பு மானுடத்துக்கு உண்டு. அதுதான் ப்ரயத்னம்.

தடுக்கியோ விழுந்தோ விடாது எழுந்து ஜாண் ஏறினால் முழம் சறுக்கினாலும் சறுக்கட்டும் நான் விட மாட்டேன். நினைத்ததை சாதித்தே தீருவேன் என்னும் தீவிரம்.

இது அரக்கர்களிடமும் உண்டு. இருக்கட்டும். இந்த சந்தர்ப்பத்தில் அவர்கள் வழிகெட்டுப் போய் அழிந்து போவதுடன் எனக்குச் சம்பந்தமில்லை. தீவிரத்துடன் மட்டுமே சம்பந்தம்.

மானுடத்தில் இன்னொரு விசேஷம்.
பரஸ்பரம்
உனக்கு நான். எனக்கு நீ.

இத்துள் எத்தனையோ அம்சங்கள் அடங்கும்.

தியாகம், தன்னம்பிக்கை, பொறுப்பு, விடாமுயற்சி, அன்பு, ஆதரவு… சொல்லிக்கொண்டே போகலாம். நானின் பிம்பம். விஸ்தரிப்பு ‘நீ’ என்கிறேன்.

ஜன்மேதி ஜன்மம் என ஜீவனின் கடையலில் படிப் படியான பக்குவநிலையை அடைந்துவிட்ட பிறவிகளில் மேற்கூறிய அம்சங்கள், அவைகளின் இத்யாதிகள் தனித்தனி யாகவோ கூடுதலாகவோ பரிமளிப்பதைப் பார்க்கிறோம். அந்த நோக்கில் தன்னம்பிக்கையின் அவதாரமாக இதோ பகவான் ராமகிருஷ்ணரைப் பாருங்கள். அல்லது நான் பார்க்கிறேன்.

***

பகவான் ராமகிருஷ்ணர் மானுடத்தின் சித்தி.

மானுடத்தின் சித்தியே முத்தி நிலை.

முத்தி என்பது என்ன? விடுதலை.

எதனின்று விடுதலை? பிறகு அதற்கு வருவோம். அதை முற்றிலும் விளக்க முடியாது. என்னால் முடியவே முடியாது.

ஆனால் ஒன்று சொல்வேன். மனிதன்தான் தெய்வ மாகிறான் என்ற கணிப்புக்கு என் எழுத்தைப் பயில்வதன் வழி, எப்பவோ வந்து விட்டேன். அந்த முடிவை மாற்றிக் கொள்ளும்படி எனக்கு இதுவரை எதுவும் நேரவில்லை.

கதாதரர்தான் பகவான் ராமகிருஷ்ணர் ஆனார்.
நரேந்திரர்தான் விவேகானந்தர் ஆனார்.
வெங்கட்ராமன்தான் ரமணமகரிஷி ஆனார்.

இப்படி விவரித்துக் கொண்டே போகலாம்.

பாரதத்தில் அவ்வப்போது அவதாரபுருஷர்களுக்குக் குறைவேயில்லை. இந்த 19/20 நூற்றாண்டிலேயே எவ்வளவு பேரைப் பார்த்துவிட்டோம்.

ராமகிருஷ்ணர், விவேகானந்தர், ரமணமகரிஷி, அரவிந்தர், பாரதி, ஸங்கீத மும்மூர்த்திகள், காந்திஜி, காஞ்சி மஹாப் பெரியவாள், பகவான் ரஜ்நீஷ்… இன்னும் எத்தனை பேர் தாமிருக்குமிடம் கூடத் தெரியக்கூடாது என்று குகை களில், காடுகளில் தவத்தில் ஆழ்ந்திருக்கிறார்களோ!

ஆன்மீகவாதிகளை மட்டும் இங்கு சொல்கிறேன். அறிவியல் மஹான்களிடம் போகவில்லை . ஆனால் அவர் களும் தேடல் தத்துவத்தில் சேர்ந்தவர்கள் தான்.

எங்கிருந்து வந்தோம்?
ஏன் வந்தோம்?
எங்கே போகிறோம்.
நான் யார் ?

அம்மா! அம்மா!!

கேள்விகள் எத்தனையோ அத்தனை பதில்கள். பதில்களை பயக்கும் மீண்டும் கேள்விகள். உயிர்த்தாது உண்பானது முதல் காலாந்த காலமாய் தன்னைத்தானே படைத்துக்கொண்டு பஞ்சபூதங்களை நீரில் வாழ்வன, நிலத்தில் வாழ்வன, நீரிலும் நிலத்திலும் வாழ்வன, தாவரம், ஜங்கமம் எனப் படிப்படியாக தடங்கள் உயர்ந்து மனம் படைத்ததால் மனிதன் எனும் பதவிக்கு உயர்வதற்குள் காலம் எத்தனை வரைகள் தாண்டியிருக்கும்! நினைப்ப தற்கே அசாத்யமாயில்லை? ஆனால் எல்லாவற்றுக்கும் காரண, காரியகர்த்தா உண்டு.

The Wisdom of India, Asia and China எனும் புத்தகத்தில் Lin Yu Tang எழுதுகிறார். கடவுள் தன்னை முன்னால் படைத்துக் கொண்டு பிறகு உலகத்தை சிருஷ்டிக்க ஆரம்பித் தார். அவர் கூற்று நம் வேதங்களினின்று எடுத்ததுதான். ஆனால் சொல்லும் வகையில் நான் ஈர்க்கப்பட்டேன். என் வயது அப்போது அப்படி எங்கிருந்து வாங்கிக் கொண்டால் என்ன? தசாவதாரங்களை நம் புராணங்கள் சொல்ல வில்லையா? The theory of evolution நம் புராணங்களுக்குத் தோள் கொடுக்கிறது.

ஒன்று. ஜீவனின் சரிதையுடன் மனிதன் உண்டான திலிருந்து மானுடத்தின் சரித்திரம் இணைந்து இங்கிருந்து ஆரம்பமாகிறது. நினைக்கவே, சொல்லிக் கொள்ளவே எத்தனை சந்தோஷமாய் இருக்கிறது! நான் மனிதன் உய்ய வும் உய்விக்கவும் என்னைக் கண்டு கொள்ளவும் இவ் வுலகுக்கு வந்திருக்கிறேன். உயிரின் இயக்கம், மனிதப் பிறவி யிலிருந்து அர்த்தம் கொள்ள ஆரம்பித்துவிட்டது.

***

பகவான் ராமகிருஷ்ணரின் உபதேசங்களால் ஈர்க்கப் பட்டு, அவரைப் படித்தவுடன் நான் பக்தனாகிவிடவில்லை. நான் எழுத்தை சாதகம் செய்பவன். இன்னமும்தான். அந்த வழியில் அவருடைய சொல்லின் இலக்கியத்தன்மையில் அசந்து போனேன். அந்த எளிமை, சொல்லாழம் ஊடவே ஓடும் அப்பாவித்தனம், அதே சமயம் விஷய அதிகாரம் மோஹனமந்தாரமாய்க் கவியும் ஒரு விசனம் (எனக்கு வேறெப்படி என்று சொல்லத் தெரியவில்லை) இந்த அம்சங்களை நானும் என் எழுத்தில் கொண்டு வர முடியுமா? இதுதான் என் முதல் கவலையாக எழுந்தது.

ஒரு சக தொழிலாளி என்று கூட அவரை நான் சொல்லிக் கொள்ள முடியாது. சரியாக எழுத்து வாசனைகூட இல்லாத ஆசாமி தான் பிறந்து வளர்ந்த ஊர், சுற்றுப்புற சூழ்நிலை, தக்ஷனேஸ்வரத்தைத் தாண்டி வெளியூர் என்று சென்றது கூட கிடையாது. ஆயினும் முதிர்ந்த அனுபவம் தோய்ந்த உண்மைகள், ஸ்வாரஸ்யமான சம்பவங்கள் எப்படி அந்த வாயினின்று அவ்வளவு அனாயசமாக உதிர்கின்றன? இது விடாமுயற்சி, சாதகம், முன் தயாரிப்பது மட்டும் சாத்ய மாகாது. இதற்குத் தனி அருள் வேண்டும். இவர்கள் சேதி சொல்ல வந்தவர்கள். ஸம்பவாமி யுகே யுகே புருஷர்களைச் சேர்ந்தவர்கள்.

கைகளைக் கோர்த்த வண்ணம் மடியில் வைத்துக் கொண்டு க்ஷவரம் செய்யாத முகத்துடன் நம்மைப் பார்க்கும் நிலையில் உள்ள ராமகிருஷ்ணரின் படத்துக்குத்தான் நாம் அதிகம் பழக்கப்பட்டவர்கள். ஆயினும் உன்னிப்பாய் பாருங்கள். மனிதன் நம்மைப் பார்க்கவில்லை. பார்வை உள் நோக்கில் திரும்பியிருக்கிறது. நான் ஏற்கனவே குறிப்பிட்ட காவிய விசனம், நெற்றியில் காண்கிறேன். அவர் கொணர்ந்திருக்கும் – நம்முடன் பங்கிட்டுக் கொண்டிருக்கும் சேதியுடன்தான் அவர் உறவு.

அல்லது இன்னொரு படம். தன்னை மறந்த ஆனந்தக் கூத்தில் ஆடிக் கொண்டிருக்கிறார். அதே தாடி, அதே குழந்தை முகம், அதில் அவர் கண்டு கொண்டிருக்கும் தரிசனத்தின் மேல் வெறி.

இந்தக் குழந்தைத்தனத்துடன் இத்தனை விவேகத்துடன் ஒரு மனிதன் சாத்யமா என்று நான் அவர் சரித்திரத்துடன் பரிச்சயமானதிலிருந்து இன்னும் வியந்து கொண்டிருக் கிறேன்.

ஹனுமானைப் பற்றியும் எனக்கு இந்த ஆச்சர்யமுண்டு.

ராமாயண ஹாரத்தின் ரத்னகண்டி என்று காவியகர்த்தா ஹனுமானைக் குறிப்பிடுகிறார். தன்னைப் பற்றியே நினைப் பில்லாமல் தன் பராக்ரமத்தையே மறந்துபோய் ராமனுடைய நினைப்பு ஒன்றே மூச்சாய் இப்படி ஒரு ஆள் இருக்க முடியுமா? தன்னில் அத்தனையுமே ராமஸ்மரணைக்கு மாற்றிவிட முடியுமா? ரொம்பவும் இந்த யோசனையில் ஆழ்ந்தால் அப்படி இருக்க முடியும் என்று என்னில் சந்தேகம் தோன்றுகிறது. இன்றைய சந்தேகம் நாளை நிச்சயம் தெளிவு ஆகிவிடும். சந்தேகமே அதனால்தானே! சந்தேகத் திற்குள்ளேயே தெளிவு ஒளிந்து கொண்டிருக்கிறது.

ஆகவே அனுமனுக்கு ராமநாமம் மூச்சானால் ராம கிருஷ்ணருக்கு மாதா! மாதா !!

பைத்தியம் பிடித்து அலைகிறார். Romain Ronald அவரை Mad man of God என்கிறார்.

ராமகிருஷ்ணருடைய அரற்றல் எனக்கு ஓரளவு புரிகிறது. ஏனெனில் என்னைப் பெற்ற பெற்றோரில் நான் பாக்கியம் செய்தவன். என் சின்ன வயதிலிருந்தே பெற் றோர்கள் தான் நடமாடும் தெய்வங்கள் என்று கண்டு கொண்டு விட்டேன். கண்ணெதிரில் இவர்கள் இருக்கையில் நாம் தெய்வம் என்ற ஒன்று தனியாய்த் தேடுவானேன்? என்று இப்பவும் தோன்றுகிறது. எனக்கு 84 வயதிலும் தம் தாயார் உயிருடன் இருக்கும் முதியவர்களைக் கண்டால் எனக்குப் பொறாமை ஏற்படுகிறது. தாயார் இருப்பவர்கள் மஹாபாக்யவான்கள். உடனே என்னை அறியாமலே கைகள் அவர்களுக்குக் கூம்புகின்றன. என் வயதில் நான் தாயாருக்கு ஏங்குவது துராசைதான். எனக்குத் தெரிகிறது. ஆனால் தாயாருடைய தன்மை எங்கே போகும், அதை இட்டு நிரப்ப யாரால் முடியும்?

லலிதா சஹஸ்ரநாமத்தில் முதல் நாமமே ‘ஸ்ரீமாத்ருவே நம’ அந்தப் பேருண்மையை எந்தக் கோணத்திலும் ஆதி சங்கரராலும் மறுக்க முடியாது. அம்பாளை ஸ்தோத்தரிக்கும் ஒரு இடத்தில் சொல்கிறார். “அம்மா ஸ்திரியில் கெட்ட ஸ்த்ரி என்று இருக்கலாம். ஆனால் தாயாரில் கெட்ட தாயார் என்று உண்டோ? இந்தக் கேள்விக்கு தெய்வமும் தோற்றுப் போக வேண்டியதுதான்.

ஆகவே ராமகிருஷ்ண சரிதத்துக்கு மறுபெயர் அன்னை யின் காவியம் என்பேன்.

உயிர் மனிதப் பதவிக்கு வந்தவுடன் (மனம் படைத்தத னால் தானே மனிதன்) சதா – ஏன் தூக்கத்திலும் கூட (கனவு மூலம்) எண்ணிக் கொண்டேதானிருக்கிறது. எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணி எண்ணிப் புண்ணானாலும் எண்ணங்கள் ஓய்வதில்லை. மனம் எண்ணம் படைக்கும் கருவி. கங்கோத்ரியிலிருந்து பன்றித் தொழுவம் வரை அதன் வரைக்கு எல்லையே இல்லை. அது ஒரு நிலை.

அந்த மனத்திலிருந்து அறிவு எனும் பகுதிக்கு எண்ணம் உயர்ந்து நல்லதுக்கும் கெட்டதுக்கும் பயனுள்ளதும், அற்றதும், சுத்தத்துக்கும், அசுத்தத்துக்கும் இந்த பேதங்களை அவையவை இடத்தில் இருத்தி அதன்படி வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ள முயல்கிறது. இடையே சந்தேகங்களுக்கும் தான் பாகுபடுத்தியதையே மறுப்பு களுக்கும் உழற்சிக்கும் ஓய்வில்லை. இந்த நிலை மரணம் வரை நீடித்தாலும் ஆச்சர்யமில்லை. இடையிடையே அற்ப சந்தோஷங்களைத் தாண்டி ஆசைவிட்ட குழப்பத்திலிருந்து விடாப்பிடியாக வழிதேடிக் கொண்டிருந்தால் ஞானம். அடுத்தபடி அதாவது தெளிவு, பக்தி, விக்ரஹ ஆராதனை, பூஜை புனஸ்காரம், விரதம், ஞானத்திற்கு வழிகாட்ட உதவும்.

விமோசனத்தைத் தேடி எந்த தெய்வத்தையோ (தெய்வ மாய்த்தானிருக்க வேண்டுமென்பதில்லை). அது ஒரு பொருளாயிருக்கலாம். ஸ்தலமாயிருக்கலாம். மனதுக்குப் பிடித்துப் போன ரூபமாகவோ, அரூபமாகவோ, ஆவாஹன மாயிருக்கலாம். அதன்மேல் அளவற்ற ஆர்வம். புரிந்தாலும் புரியப் புரிய ஆசை காட்டி இன்னும் எட்டி எட்டிப் போகும் புரியாத்தன்மை, ஒரு லேசான பயம், கூடவே கொள்ளை அன்பு, சிரத்தை இவையெல்லாம் சேர்ந்து, புத்தியும் உணர்ச்சியும் கலவை. அந்தக் கலவையில் ஒரு அமைதி யும், நம்பிக்கையின் விளிம்பும் தெரியும். நீ எனக்கு கிடைப்பாயோ இல்லையோ, உன்னைவிட்டால் எனக்கு கதியில்லை என்கிற திண்ண மான Statement. இதுவே இந்த சமயத்தின் திருப்தி.

சத்சகவாசம், பக்தி, பஜனை, கூத்தாட்டம் இவை மூலம் வரவழைத்துக் கொள்ளும் உணர்ச்சிப் பெருக்கு நிஜ வெள்ளி மலையே மாறலாம். மனதின் உண்மையைப் பொறுத்தது.

ஞானம் தாண்டி தியானம் நாம் வரித்த லட்சியத்தின் உருவை மனதில் நிலைநிறுத்தி அதையே எண்ணிக் கொண் டிருப்பது. தியான சமயத்தில் வேறு சலனங்களுக்கு இடம் கிடையாது, இடம் கூடாது. தியானம் பழகப் பழக வசத்துக்கு வரக்கூடிய மனப்பழக்கம். தவம் தீவிரமான தன் நினைவே அற்ற தியானம் ஒரு எண்ணம். ஒரே எண்ணத்தை உருவாக்கு வதிலேயே கருத்தும் ஸ்வயார்ப்பணம்.

தவத்தின் விளைவு தரிசனம்.

சுலபமாக சொல்லிவிட்டேன். இது நேர்வதற்கில்லை. ஆயுசுகள் கடக்க வேண்டி வரலாம். ஒரே திருப்பத்தில் நேரலாம். ஜன்மேதி ஜன்மமாய் நான் உழன்று அடைந்திருக் கும் பக்குவம் புஷ்ப்பிக்கலாம். நான் திடீர் எதிர்பாராமல் என்கிறேன். ஆனால் எத்தனை பிறவிகளாய் இந்த வேளைக்கு காத்திருந்தேன் என்பதை எவ்வாறு அறிவேன். எல்லா வேளைகளும் விதிக்கப்பட்டவை என்றே என் துணிபு. காலத்தை இரவாலும் பகலாலும் அளப்பது இங்கு சாத்தியமில்லை. என் வேளை வரும்போது நான் உய்வேன். இதுதான் மானுடத்தின் குரல்.

தரிசனம் என்பது பார்வையின் நிறைவு.
ப்ரக்ஞை (awarness)யின் விழிப்பு.

ப்ரக்ஞையின் விழிப்பு அவ்வப்போது நேர்ந்து கொண்டு தானிருக்கிறது.

அதனால் தரிசனத்தில் அகத்தின் ஒளியை அதிக மாகவே காண முடிகிறது.

இத்தனைக்கும் கச்சாப் பொருள் மனம். மனமும் ஓயாமல் மனதிலிருந்து எவ்வளவு தூரம் தனி மனிதனா லேயே வர முடியும். வந்துவிட்டான் என்பதை உணர்வதே தரிசனம்தான். ஆனால் இந்த மனப்பயிற்சியின் பிரயாணம் வெறும் தன் முயற்சியால் மட்டுமே நிகழ்ந்து விடாது. குருவின் வழி நடாத்தல் வேண்டும். கூடவே தெய்வத்தின் அருளும் வேண்டும். அருள் என்றால் என்னவென்று சொல்வது? நம் ஆசைகள், ஆசைகளின் உந்துதல்கள் விடா முயற்சி இத்தனைக்கும் அப்பாற்பட்ட பிரதேசத்தினின்று மனிதப் பாரம்பர்யம் தன் சத்தாய்ச் சிறுகச் சேர்த்த திரண்ட ஆசி என்று சொல்லலாமா? இல்லை. பற்றவில்லை. இத்தனைக்கும் அப்பால் நம்மைக் கணித்துக் கொண்டே யிருக்கும் சக்தியின் அபூர்வமான மனதுக்குக் கூட உணர முடியாது. ஒரு சைகை “நான் இருக்கிறேன் துணை.”

அற்ப விஷயம்தான். என்னைப் பற்றி சொல்கிறேன். நான் எழுத்தை சாதகம் செய்யும் ஆரம்ப நாட்களில் இந்தப் புத்தகத்தைப் படி. அவர் எழுதியிருக்கும் வழியை கவனித் தாயா? காலுக்கடியில் முளைத்திருக்கும் புல்லைப் பார்த் தாயா? ஆகாயத்தை அண்ணாந்து பார். உன்னைச் சுற்றி யிருப்பதைக் கவனி என்று வாழ்க்கை நயத்தையும் சொல் நயத்தையும் உணர்த்த அவ்வப்போது பெரியவர்களும், சின்னவர்களும் ஆனால் விஷயம் தெரிந்தவர்கள் வழி காட்டிப் போனார்கள். அதை அருள் என்பேன். என் அதிர்ஷ்டம் என்றும் சொல்லிக் கொள்ளுங்கள்.

இம்மாதிரி வாய்ப்புகள் கதாதரருக்கும் குறைவில்லை. அன்னை அவருக்கு முதலிலேயே தன்னைக்காட்டி ருசியை ஏற்படுத்திவிட்டாள். அதுவே அவள் அருள்தான். அவர் சாதகம் பூரணிப்பதற்காக அவ்வப்போது தவத்தில் அவர்கள் தனித்தனி வழியில் முதிர்ந்தவர்கள். சொல்லி வைத்தாற் போல் அந்தந்த கட்டத்தின் அடுத்தபடிக்கு அவரைப் பழக்கி வழிகாட்டிவிட்டு, வந்தபடியே போய்விட்டார்கள். அதுவும் அருள்தான். நடக்க வேண்டிய ஒரு சங்கல்பம். அதன் உரிய முறையில் நிறைவேறுவதிலேயே ஒரு சான்னித்யம் இருக்கிறது. ராமகிருஷ்ணர் ஒரு சான்னித்யன். அடிப் படையாக அவர்மேல் நம்பிக்கை அவருக்கு ஆதரவும் கடைசிவரை பிழறாமல் அவர் தன் நிறைவு அடைந்து பாதுகாத்துக் கொண்டிருந்த ராணி ராஸமணி தேவியும், மதுர்பாபுவுமே ராமகிருஷ்ணருக்குக் கிடைத்த அருளின் சான்றுகள்தாம்.

தரிசனம் என்பது என்ன? எப்படி? எப்போது நேர்கிறது? எனக்கு நேர்ந்த ஒரு சம்பவத்தைப் பணிவுடன் சொல்லலாமா?

அப்போது எனக்கு வயது 14. ஒருநாள் இரவுவேளை. சாப்பிட்டுவிட்டு எல்லோரும் உட்கார்ந்து பேசிக் கொண் டிருந்தோம். ராமகிருஷ்ணரைப் பற்றி பேச்சு எப்படி அந்தப் பக்கம் திரும்பிற்று தெரியவில்லை. சாதாரணமாக சிற்றப்பா அப்படி எல்லாம் பேசுவதில்லை.

“ராமகிருஷ்ணர் அம்பாளை எப்படிக் கண்டார் தெரியுமா? அவருக்கு முதன் முதலாகத் தெரிந்தது மூக்குத்தி. இருட்டில் திடீரென்று பிதுங்கிக் கொண்டு அது மட்டும் தனி ப்ரகாசமாய் –

சித்தப்பா குரலில் ஏதோ சக்தி வந்துவிட்டது. இல்லாட்டா-இல்லாட்டா-

எனக்கும் சுற்று முற்று நினைவு திடீரென்று அற்றுப் போய் ஏதோ குரல் மட்டும் ஸ்ருதி போல் தூரத்தில் என்னைச் சூழ்ந்த மையிருட்டில் அதோ… ஓ… ஓ… தூ… ஊ… ஊ…..ரத்தில் ஒரு க்ளாவர் நீலப்பொறியாய் ஆரம்பித்து கிட்ட நெருங்க அந்த ஒளிவீச்சு பெரிதாகிக் கொண்டே வந்து என்னைத் தன்னுடன் சுருட்டுகையில் என் உடம்பில் ஏதோ ஜிவ்வென்று கிளம்பி மண்டைக்கு கிர்-ர்-ர்-ர்-ர்.

என் கடைசி நினைப்பு அந்த திகுதிகுக்கும் மூக்குத்தி யுடன் மடேரென்று விழுந்துவிட்டேன். முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பினார்கள்.

இதில் என்ன இருக்கிறது என்று கேட்போருமுளர். அது கேட்போரின் உரிமை, அவரவர் தன்மை, பாகுபாடு, சமயத்துடன் ஈடுபாட்டைப் பொறுத்தது.

வயதுக்கு வந்த பின்னரும் சில அபூர்வமான நேரங் களில் இதுமாதிரி அவசங்கள் எனக்கு நேர்ந்திருக்கின்றன. ஆனால் அவைகளைப் பற்றி நான் பேசப் போவதில்லை. முதலில் தற்புகழ்ச்சியாய் தோன்றக்கூடும். திருப்பிச் சொல் வதனாலேயே அவைகளின் நளினம் அலர்ந்துபோம். இம் மாதிரி சமயங்களுக்கெல்லாம் சாக்ஷி சம்மன் கிடையாது. எனக்கு நான்தான் சாக்ஷி. நான்கூட இல்லை. சுயநினைப்பையே துடைத்துவிட்டுத் தலை தூக்கி நிற்கும் ஸர்வ ப்ரக்ஞையின் வெறும் விளிம்புதான் – தலை தூக்கிக் காண்பிக்கையில் அதன் அழுத்தத்தைத் தாங்க உடம்பு சக்தியற்றுப் போய் விடுகிறது. நானே எனக்கு இல்லாவிட்டா லென்ன? பயமாயிருக்கிறது. கூடவே ஒரு மட்டற்ற மகிழ்ச்சி. இந்த ‘த்ரில்’ மறுபடியும் கிடைக்காதா?

உன்னை உனக்கு லேசாக அடையாளம் காண்பிக் கிறேன். அவ்வளவுதான்.

யார் பேசுகிறது? அந்தப் புன்னகை? அம்மா! அம்மாடி!

அனாஹதத்வனி தனக்குக் கேட்டதாக ராமகிருஷ்ணர் சொல்கிறார்.

ஒலி கேட்காத மந்திரம் என்று அனாஹதத்வனி லலிதா ஸஹஸ்ரநாமத்தில் விளக்கப்படுகிறது (ஸ்வாமி ஸத்யா னந்தா)

ராமகிருஷ்ணர் அம்மா! என்கிறார்.

நான் பொதுவாக ‘அவள்’ என்று சொல்லிவிட்டுப் போகிறேன்.

இந்த சமயத்தில் ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

ராமகிருஷ்ணருக்கு அவளின் மூக்குத்தி தெரிந்தது. ராமகிருஷ்ணருக்கு அனாஹதத்வனி கேட்டது.

சந்திரா தேவிக்கு (ராமகிருஷ்ணரின் தாயார்) சிவனின் கர்ப்பக்ரஹத்திலிருந்த ஒரு ஜோதி தன் வயிற்றுள் புகுவதை உணர்ந்தாள்.

அதேபோல கன்னிமேரியின் வயிற்றுள் ஒளிக்கரண மாகக் கடவுள் புகுந்து இயேசு அவதரித்துக் கன்னிமேரி கன்னி மாதாவானாள்.

நான் ஏற்கனவே சொன்ன மாதிரி அவனவன் நம்புவது. இஷ்டத்தையும் பக்குவத்தையும் பொறுத்தது. நம்பினவருக்கு நடராஜா. நம்பாதவருக்கு யமராஜா என்கிற பழமொழி ஒரு பக்கமிருக்கட்டும்.

இதெல்லாம் நிஜமா பொய்யா என்ற கேள்வி ஒருபுறமிருக்கட்டும்.

கற்பனையா? சரி. அப்படியே இருக்கட்டும்.

தியானத்தில் கற்பனைக்கு இடம் கொடுக்க வேண்டும் என்கிறார் ஆதிசங்கரர்.

உண்மையில் கற்பனை என்பது என்ன? என் எழுத் தனுபவத்திலிருந்து சொல்கிறேன்.

கற்பனை. ஆங்கிலத்தில் Imagination. இந்த சொல்லுக்கு வேர்ச்சொல் Image உருவம். அனுமானத்தில் சில எண்ணங்கள் உருவம் பெறுகின்றன.

எண்ணங்கள் அழகிய எண்ணங்கள்.

அழகில்லாமல் உபாஸனை, வழிபாடு, சடங்குகள் என்ன பயன்.

What is truth? Pontius Pilate கேட்கிறான் (St. John, New Testament)

TRUTH IS BEAUTY – KEATS What is Beauty? இதை நிர்ணயிக்க முடியுமோ? செயலில் அழகு. நடை உடை பாவனைகளில் அழகு.

தொடர்ந்த ஆச்சார சீலத்தினால், காயத்ரி ஜபத்தினால், மௌனத்தினால் தானே முகத்துக்கு ஏறிவிடும் களை இவைகளை நான் உண்மையான அழகு என்பேன்.

எழுத்தின் மூலம் நான் அழகைத் தேடுபவன். நான் சௌந்தர்ய உபாசகன் என்று சொல்லிக் கொள்வதில் எனக்கு வெட்கமில்லை. அதற்கே ஆசைப்படுகிறேன். சௌந்தர்யம் உனக்குக் கிட்டிவிட்டதா? தெரியாது. அழகிய எண்ணங்களை எண்ணுவதிலேயே ஒரு தனி இன்பம் இருக்கிறது.

விசாரணையில் பைலேட் இயேசுவைக் கேட்கிறான். “நீ யூதர்களின் ராஜாவா?”

இயேசுவின் பதில். “நான் சொல்லவில்லை. நீ சொல்கிறாய்.”

இந்தக் கூற்றின் உள்ளர்த்தத்தை நான் இப்படித் தீர்மானிக்கிறேன்.

அவரவர் எப்படி நினைக்கிறார்களோ அப்படித்தான் உண்மை.

அவரவர் பூத்ததற்குத் தக்கபடி. மீண்டும் கற்பனைக்கு வருகிறேன்.

பின்னால் நிகழப் போவதன் முன் தரிசனம் அனுமானத்தில் உதயமாகிறது. இதைக் கற்பனை என்கிறேன். ராமாயணம், மஹாபாரதம், பாகவதம் (பார்க்கப் போனால் கிருஷ்ண சரித்ரம் பாரதத்தின் பகுதிதான்) போன்ற மஹா காவியங்களில் எது முன் நடந்தது? எது பின் நடந்தது? எது உண்மை ? எது பொய்? என்று ஆராயப்புகுவதெல்லாம் வியர்த்தமான காரியம். எங்கே நியாயம்? அநியாயம்? எல்லா வற்றையும் ஒட்டு மொத்தமாக எடுத்துக் கொள்ளவும் சொல்லவில்லை. ஆனால் எல்லாவற்றையும் அல்லது ஒவ்வொரு பாத்திரத்தையும் சாக்ஷிக் கூண்டில் ஏற்றிவிட முடியாது. அது சாத்யமுமில்லை . தவிர அவைகளில் விவரிக்கப்படும் அற்புதங்களின் (miracles) ப்ரமிப்பில் மனதையிழந்துவிட்டு காவியத்தின் நோக்கத்தில் கவனம் பிசகாது இருத்தல் வேண்டும்.

பல ஆயிர வருடக்கணக்கில் புழக்கத்திலிருக்கும் இந் நூல்களில் பின்னால் இலக்கிய அழகிற்காக என்ன சம்பவங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. எது மெய்யாகவே நிகழ்ந்தன என்று பிரிப்பது சாத்யமில்லை. நான் சொல்வது யாதெனில் காவியத்தின் சம்பவக் கோர்வைக்கு சிதை வில்லாமல் அதன் தருமத்துக்கு ஒவ்வி வந்தால் ஏற்றுக் கொண்டால் என்ன தப்பு? செய்யத்தகாத பாவத்தை செய்து விட்டோமா? என் தாயார் ஒன்று சொல்வார் : “பிடித்தால் சாப்பிடு , பிடிக்காவிட்டால் கடித்து விழுங்கு.”

உண்மையின் நியதி அப்படித்தான்.

***

ரமணமகரிஷி பூத உடலை நீத்த அன்று இரவு நக்ஷத்ரங்களிடையே ஒரு ஜோதி மிதந்து சென்றதாம். இந்தத் தகவலை ‘ஹிந்து’வில் நான் படித்தேன்.

அரவிந்தர் உயிர் அடங்கிய பின் மூன்று நாட்களுக்கு அவர் தேக காந்தி குறையவேயில்லை.

இதற்குத் தினசரிப் பேப்பர்களைத் தவிர ஆசிரமத்தில் சாக்ஷிகளே இருக்கிறார்கள்.

ஆனால் காலகதியில் இந்த மெய்ச் சம்பவங்களே வதந்திகளாகவும், பிறகு கற்பனையலங்காரங்களாகக் கருதப்பட்டு விடும்.

உண்மையை அளப்பதற்கு என்ன கஜக்கோல் இருக்கிறது?

***

தாய்க்கு குழந்தை ராமகிருஷ்ணரிடம் எப்படி ஏங்கிற்றோ அதே போல், கண்ணப்பன் சிவன் மேல், தாய்மை யில் தவித்தான். அவனைத் தன் பக்கம் இழுக்க வேண்டுமென்றோ பெருமான் விலங்கு ரூபத்தில் அவனை வேட்டை காட்டி, நடுவழியில் ஆற்றில் தாகத்திற்கு தண்ணீர் குடிக்க குனிந்து, தலை நிமிர்ந்ததும் அதோ மலைமேல் காளத்தி அப்பர் கண்ணில் பட அவன் ஓடோடி வந்து அவரை அணைத்துக் கொண்டதும் என்னப்ப கண்ணப்ப நில் நில் என்று லிங்கத்தினின்று கரம் புறப்பட்டு மறு கண்ணை அம்பால் தோண்ட ஆரம்பித்துவிட்ட அவன் கரத்தைப் பிடித்துத் தடுத்ததும் எனக்கு இன்னும் புல்லரிக்கும் அழியாத் தருணங்கள். கண்ணப்பனுக்கு மூன்றே நாட்களில் முக்தி. மூன்று நாட்கள் நீ முழு ஆர்வத்துடன் கடவுளைத் தேடினால் உனக்குக் கிடைத்து விடுவார் என்று ராம கிருஷ்ணர் சொன்னது இங்கு குறிப்பிடத்தக்கது.

நித்யத்துவத்தைத் தொட்டபின் வேளை ஏது? காலம் ஏது? சரித்திரம் ஏது? வரலாறு ஏது? இங்கு நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன். ” அப்போ நீ எண்ணுவதெல்லாம் உண்மை அல்லது உண்மையாக வேண்டுமென்று விரும்பு கிறாயா? அப்படி ஏதும் நான் எண்ணவுமில்லை. சொல்லவு மில்லை. ஆனால் எண்ணாமலிருக்கும் நிலையை நான் அடையவில்லை. வாழ்க்கையின் இகபரங்கள் இன்னும் இயங்கிக் கொண்டிருப்பதற்கு மூன்று காரணிகள் உண்டு என எனக்குப்படுகிறது.

1. TRUTH-இது குன்றின் மேலிட்ட தீபமோ அல்லது குஹையில் ஒரு பிறையில் அகலும் திரியு மின்றி அழியாச் சுடராய் உலகைக் காலம் கடந்த சக்தியாக நடத்திக் கொண்டிருக்கிறது. இதைத் தவிர இதன் உண்மை யான தன்மை என்றுமே புரியப் போவதே இல்லை. இதில் தேவர்களிலிருந்து தாவரம், சலனம், அசலனம், தவம், தரிசனம் உண்டு, இல்லை என்னும் எதிர்மறைகள் யாவும் அடங்கிவிட்டன. அவ்வளவுதான் எனக்குத் தெரியும்.

2. லட்சியம் (ideal) இதில் மனிதனுடைய ஆசைகள் (உயர்ந்தவை, எட்டக்கூடியவை, முடியாதவை, லோகாதய மானவை, ஆத்மீகமானவை இவைகளும் சேர்ந்துதான், மனிதன் TRUTHல் தன் சக்திக்கேற்றவாறு வகுத்துக் கொண்டு செயலில் சாதிக்க விரும்புகிறான். லட்சியம் சில சமயங்களில் முழுக்கவே கூடலாம் அல்லது ஒரு பகுதியே நிறைவேறலாம். அல்லது துருவ நட்க்ஷத்ரமாகவே நின்று விடலாம். இருந்தாலும் லட்சியத்திற்கு ஒரு வேகம் உண்டு. முயற்சியைத் தூண்டிவிடும் சக்தி.

3 யதார்த்தம் (REALITY) நடப்பதென்ன? இருப்ப தென்ன? முயற்சியின் விளைவு என்ன? செயல்பாடின் விளைவு என்ன? எண்ணியபடி செயல் விளைகிறதா? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் கிடைக்கும் பதில், அதிலிருந்து கிடைக்கும் தெளிவு. இவை எல்லாம் reality யைச் சேர்ந்ததுதான். மூன்று வினைகளும் கரை காணாத சமுத்திரங்கள்.

ஆனால் இவைகள் சோதனைகள் மூலம் ராமகிருஷ்ணர் கரைகண்டு வந்திருக்கிறார் என்பதை மறுக்க முடியாது.

சரி. முக்தி என்பது என்ன?

கேள்வி, பதில், உடைமை மூன்றிலிருந்தும் விடுதலை!

எல்லாம் நானே என்ற சர்வப்ரக்ஞை இது பரமானந்த நிலை என்கிறார்கள். யாரே அறிவர். கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர். ஹம்ஸம் என்பது ஜீவாத்மனைக் குறிப்பது. வேதாந்த மரபு என சுவாமி சித்பவானந்தா குறிப்பிடுகிறார். அப்போது பரமஹம்ஸன் என்பது பெரிய ஜீவாத்மா. அப்பொழுது ராமகிருஷ்ண பரமஹம்ஸர் பரமாத்மாவுடன் கலக்கவில்லை என்ற அர்த்தமில்லை. கலந்த பின்னும் தன்னை அல்லது தான் என்ற மனநிலையை நிறுத்தி வைத்துக் கொண்டிருக்கிறார். ஏன்?

திருவனந்தபுரத்தில் ஒரு சமயம் லக்ஷதீபம் பார்த்தேன். ஒரு அகலிலிருந்து இன்னொரு அகலுக்கு சுடர் ஏற்றி, அப்படி ஒவ்வொரு அகலாய் ஏற்றப்பட்டு பிறகு திரண்ட பேரொளி காட்சி தருகிறது. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பதுதான் விஸ்வப்ரேமை. மானுடத்தின் மிகப் பெரிய ரட்சணமாகிய பரஸ்பரம் நிர்விகல்ப சமாதி அடைந்தும் இந்த மானிட லட்சணத்திலிருந்து ராமகிருஷ்ண ரால் விடுபட முடியவில்லை என்று நினைக்கிறேன். விவேகானந்தருக்கு குருவாய் அமைந்ததோடு அல்லாமல் பக்குவநிலையை அடைந்துவிட்ட சில சீடர்களை உய்விக்க, தானே அவர்களிடம் தேடிச் சென்றார். நிஷ்களங்கமான குழந்தைத்தனத்திற்கும் கூடவே தாய்மையின் உச்ச நிலைக்கும் எடுத்துக்காட்டு வேறென்ன வேண்டும்.

எல்லாநானுமாகி எனும் தனித்தன்மை உணர்வதே சர்வப்ரக்ஞையில் ஆனந்தமாகவே இருக்கட்டும். ஆனால் அதைப் பங்கிட்டுக் கொள்வதன் மூலம் தானே அது முழுமை அடையும். இதை ஜீவாத்மாவுக்கும் பரமாத்மா வுக்கும் இடையே உள்ள உறவு எனலாம்.

பரஸ்பரம் – அதன் மந்த்ரம்

அம்மா!

– அலைகள் ஓய்வதில்லை (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: டிசம்பர் 2001, வானதி பதிப்பகம், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *