கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: April 1, 2015
பார்வையிட்டோர்: 9,148 
 

ரெண்டு நாளா மானம் இருட்டிக்கிணு தூறல் போட்டுக்கிணே கீது..வைகாசியில எப்பவும் இப்பிடி வுடாம பெய்யறதில்ல.. கோடைமழைன்றது இடியும் பொடையுமா அரைமணி நேரத்தில, இல்லே ஒரு மணி நேரத்தில கொட்டி தீத்துப்புட்டு மானம் வெளுத்து வாங்கிப்புடும்.. இன்னாவோ இப்பிடி பெய்ஞ்ச பாடுமில்லாம, காய்ஞ்சபாடுமில்லாம வுடாம தூத்த போட்டுக்கிணே கீது. கொட்டாய்ல மொத்தம் அம்பது ஆடுங்க . அதில்லாம ஒருமாசக் குட்டிங்க பத்து. அதில நாலு கெரிச்சல் குட்டிங்க, நாலு சேம்பாடு, ரெண்டு சல்லி..இதுல படிக்குபாதி கெடாய் குட்டிங்க. வெளங்க சொல்லிப்புட்றேனே. வெள்ளையும் கருப்புமா கீதே அது கெரிச்சலாடு, சின்ன காதுங்க—-சில்லியாடு, உத்த செவப்பு வயித்தில வெள்ளை புள்ளின்னா அது— சல்லி, உத்தசெவப்பு நெத்தியில வெள்ளை கொம்பும் இருக்கும் அது கொப்பாடு, சந்தனகலர்ல நெத்தியில மட்டும் வெள்ளை—-பல்ல நெத்தியாடு, இதுமாரி மறையாடு, பொலியாடு ,திருட்டாடு, காரசில்லியாடு ன்னு மந்தையில இதுங்களுக்குன்னு எங்க ஆட்டுக்காரங்க கிட்ட புழங்கற பரிபாஷை இது..

ரெண்டு நாளா மந்தைய கொட்டாய வுட்டு வெளிய நவுட்ட முடியல.. நாலுவூட்ல வாங்கின கஞ்சித்தண்ணிய காட்டி பொழுத ஓட்டியாச்சி. குட்டிங்களுக்கு பருக்கை இல்லாம நீர்க்க கூழு காச்சி குடிப்பிட்டியாவுது. இதெல்லாம் ஆங்காது. .படலைய தொறந்தா ஆடுங்க பறந்துடும், பச்சைய கடிக்கணும். இன்னும் ரெண்டுநாளு இப்பிடியே ஆடுங்கள அடைச்சி வெச்சா. கோமாரி நோய் தாங்கிப்புடும். வரதன் வந்து ஆடுங்களை ஒரு பார்வை பார்த்துப்புட்டு தயக்கமா நிக்கிறான். “பே..பே.ஏஏபே…. .பே.ஏ.ஏ.ஏ!.”——காரசில்லி கெடா குட்டி ஒண்ணுதான் அசந்து நிக்கிறாப்பல பட்டுது. நேத்திலயிருந்து எரை எடுக்கல லேசா நொண்டுது. பின்னங்கால் கொளம்பை தூக்கிப் பார்த்தா நொளநொளன்னு ரணம். கால்கோமாரின்னு பிடிபட்டுப் போச்சி. ஐயோ! பெருமாளே! அடுத்து வாய்கோமாரி வந்தா மந்தைய காலி பண்ணிருமே இன்னா பண்ணுவேன்?. அவசரமாய் நோவுதாங்கின கெடா குட்டிய புடிச்சி தாவாரத்தில கட்டிப் போட்டான்..மாட்டு.டாக்டர் கிட்ட போயி சொல்லணும். நாளைக்கே எல்லாத்துக்கும் ஊசி போடச் சொல்லணும். உள்ளேயிருந்து வேப்பெண்ணை, மயில்துத்தம், மிருதார்சிங்கி கூடவே ஒரு புடி குப்பைமேனி இலைய போட்டுக் காச்சிய தைலத்த கொண்டாந்து காரசில்லி குட்டி கால்ல சோர தடவி வுட்டான். கொஞ்சம்கொஞ்சம் பச்சிலை ஆட்டு வாகடம் கத்து வெச்சிங் கீறான்.. இந்த இடுக்குலயும் கெடாய்ங்க பொட்டைங்கள தொரத்தித் தொரத்தி மேல விழுதுங்க. அம்பது பொட்டைக்கு ரெண்டு கெடா வுட்றது வழக்கம், யதேஷ்டமா மூணு கெடா வுட்டு வெச்சிருக்கு. வரதன் மூஞ்ச தொங்கப் போட்டுக்குணு நேரா தன் ஆத்தாக்காரி கிட்ட போனான்.

“ தே!எம்மா! இருங்கூருக்குப் போயி குறி கேட்டுப்புட்டு வரணும்.. ஒண்ணும் .நேரம் செரியில்ல.. .போனமாசம் கெரிச்சல் குட்டி ஒண்ணு கைதவறிப் போச்சா?,எங்க போயி அடைஞ்சதோ தெரியல பெருமாளே!. அதுக்கும் முன்ன, போன கிருத்திகிக்கு பத்து நாளு முன்ன மூணுஆடுங்க,, அத்தினியும் மறையாடுங்க தொலஞ்சிப் போச்சில்ல?. உருப்படி ஒவ்வொண்ணும் எட்டு கிலோவுக்கு மேல தேறும். அதில ரெண்டு செனையாடு. இன்னும் ரெண்டு மாசத்தில குட்டி ஈனும். தேடாத எடமில்ல. இன்னிக்கு பார்த்தா காரசில்லிக்குட்டி ஒண்ணுக்கு கோமாரி நோவு தாங்கிப் போச்சி. இன்னும் இன்னான்னா நடக்கப்போவுதோ இப்பிடி.அடிமேல அடி விழுந்தா இன்னா பண்ணுவேன்?..”—-தலையில கையை வெச்சிக்கிணு குந்திக்கிணான்..பையன் அவன் கிட்ட “எப்போவ்! நம்ம கெரிச்சல் குட்டி குத்தனூரான் மந்தையில கீது. முந்தாநாளு மேச்சல்ல பாத்துப்புட்டேன்.” “படுவா! அத ஏன்டா அன்னிக்கே சொல்லல?.நிக்கிறதப் பாரு.” “அய்யே மேச்சலுக்கு ஆட்டை ஓட்றப்போ சொல்லலாம்னு இருந்தேன்.” “நல்லாப் பார்த்தியா?. நம்ம குட்டிதானா?. அங்க யாரு? ராகவன் மந்தைதான்.” “ஹக்காம்! அந்தாளுதான். நானு மூச்சிகாட்டல.” “செரி..செரி! அத நான் பாத்துக்கிறேன். நீ சடுக்குனு ஆட்ட ஓட்றா. மானம் வெளுத்துப் போச்சி பாரு. ட்ர்.ர்.ர்.ரீ…..ட்.ர்.ர்.ர்.ர்.ரீ …ப்பா..ப்பா..”—-படலைத் தொறந்து வுட ஆடுங்க நாலுகாலு பாச்சல்ல பாயுதுங்க. “எந்த பக்கம்டா ஓட்ற?” “ஏரி எதுவாய்லதான். மத்தியானத்துக்கு மேல ஏரிக்குள்ள மேய்க்கறேன். ஏரிதான் மொட்டுனு கெடக்குல்ல?. அதவுட்டா வேற எங்க மேச்ச பொறம்போக்கு கீது?. எல்லாந்தான் கவர்மெண்ட்ல பட்டா போட்டு குடுத்துப்புட்டாங்களே. வாங்கனவங்கள்லாம் சுத்தி வேலி போட்டு, கொள்ளும் தொவரையும் வெரைச்சிப்புட்டாங்க.. வேற எங்க போறது?. ”.

“இல்லடா அங்க வாணா இலுப்ப ஏரியோரமா மடக்கி வையி.. ராகவனும் மத்தியானத்துக்கு மேல அங்கதான் மந்தைய மடக்குவான். மத்தியானம் உனுக்கு கஞ்சி கொண்டார்றப்ப வந்து பாத்துக்கறேன்.. அவன்கிட்ட எதுவும் மூச்சி வுடாத. குட்டிய ஒளிச்சி வெச்சிடுவான்.தெர்தா?..” —-அவன் தலையாட்டிவிட்டு ஆட்டை தொரத்திக்கிணு ஓடினான்.

“டேய்! டேய்….! காரசில்லிக் குட்டிய தனியா எங்கனா தோது பாத்து வரப்புல வுட்டு மேயி. அதுக்கு நோவு தாங்கிட்டுதுடா.” “ ஹக்காங்! நீ சொல்றதுக்கென்னா. தாங்கலாண்ட அன்னிக்கு சேம்பாட்டுக் குட்டிய சின்னகரம்பு குப்பன் கெழ்னி வரப்புல வுட்டதுக்கு அடிக்கவர்றான் கம்மனாட்டி.” “டேய்! அடீங் ராஸ்கோலு! நமக்கு கோவம் ஆவாதுடா மடையா. நாம செய்றது தப்பு வேலை. வரப்புலன்னு சொல்லிப்புட்டு வெளைச்சல்ல மேய்க்கவுட்டா கொஞ்சுவானா?. சாமீ! கூத குட்டி சாமின்னு சொல்லு ஒண்ணுஞ் சொல்லமாட்டான்.” (நோய் தாங்கின ஆட்டுக்கு கூத ன்னு சொல்றது. கூதன்னா சம்சாரிங்களும் ஒண்ணும் சொல்றதில்ல. ஏன்னா கூத குட்டியால ரொம்ப மேய முடியாது ஒண்ணு ரெண்டு பச்ச கடிக்கும் பயிருக்கு சேதாரம் இருக்காது. ) ——பையன் ஆடுங்கள ஓட்டிக்கிணு போனவுட்டு வரதனோட ஆத்தா கிட்ட வந்தா.

“டேய்! வரதா! வெங்கிடேச பெருமாளு நம்மள வுட்ர மாட்டாண்டா. அசந்து போவாத. நம்ம குலதெய்வம்டா. அவனை வேண்டிக்கோ. பெருமாளே! உன் எடத்துக்கு வந்து குடும்பத்தோட மொட்டை போட்றேன்னு பெராத்தன பண்ணிக்கோ. எங்கப்பன் ஏழுமலை பார்த்துக்குவான்யா..” “ “ஆவட்டும். ஆடுங்க நல்லமாரி வூடு வந்து அடையட்டுமே,அப்படியே செஞ்சிப்புட்றேன். நமக்கும் நாலுவருச பெராத்தனை பாக்கி கீது இல்ல?. அத்தியும் செலுத்திப்புட்டு வந்திடுவோம்.”—- தவடையில போட்டுக்கிணு ரெண்டு நிமிஷம் கண்மூடி பெராத்தனை செஞ்சான். வரதன் பொண்டாட்டி வந்தாள். .”தே! இப்ப இன்னா.பூட்ச்சின்னு ஆட்ற?.தோ கெரிச்சல் கெடாகுட்டி எங்க கீதுன்னு ஒம் புள்ள பொலம் கொண்டாந்துட்டான் இல்ல?. எங்கப்பன் பெருமாளு வுடமாட்டாம்மே.. பார்த்துக்கிணே இரேன், ஆடுங்களுக்கும் பொலம் வந்துப்புடும் பாரு. ஆமா ஆடுங்க தொலைஞ்ச அன்னிக்கு பொயுது சாய எங்க மேச்ச? நாபகம் கீதா?..” “ராந்தம் மடுவாங்கரையிலதான்.” “ பக்கத்தில வேற மந்தைங்க மேச்சல்ல இருந்துச்சா?.” “ உம்…ம்…ம்..ஆமா ஆமா… மேச்சேரியான் ரங்கன் மந்தைதான். ஆனா அது ரோட்டுக்கு அப்பாலதான இருந்துச்சி?. அத்த வுட்டா உள்ளூரானுது பத்து பாஞ்சி வெள்ளாடுங்க இருந்துச்சிங்க..”.——உடனே அவள் இழுத்து மூச்சி வுட்டு கண்களை மூடி “மாதவா!,நாராயணா!,சீனிவாசா! என்னப்பனே! நீதாண்டா எப்பா எங்களுக்கு நல்லவழி காட்ணும். எங்களை சோதிக்காதடா சாமீ!.,”—-உரக்க சொல்லி தவடைல போட்டுக்குணு நிமிர்ந்தாள்

”அப்ப ரங்கன் மந்தையிலதாம்மே நம்ம ஆடு கலந்து பூட்டிருக்கணும். நாளைக்கு அங்க போயி பாரு. மேய்க்கிற ஆம்பளைக்கு இதெல்லாம் யோசனை வாணாம்?. இப்பிடி வெதரனை இல்லாத மன்சன வெச்சிக்கிணு ஐயோ! எப்பா ஹும்! `என்னிலும் கெதிகெட்டவன், எனுக்கு வந்து தாலி கட்னான்ற கதைதான் எங்கதை. .” —-வரதன் பொண்டாட்டி பொலம்பிக்கிணே போனாள். அவ ஆள் கெட்டி .ஆம்பள மாரி எல்லா நுணுக்கங்களும் அத்துபடி..

மதியம் புள்ளைக்கு கஞ்சி கொண்டாந்த வரதன், நேரா அங்கின மேஞ்சிக்கிணு இருந்த குத்தனூரான் மந்தையில பூந்துட்டான். மந்தை பெருசு நூறு ஆடுங்க

“டேய்! எவன்டா அவன்?. திருட்டாடு மாரி உள்ள பூந்தவன்.?.”—- வேகமா கிட்ட வந்த ராகவன்

“”இன்னா வரதா?.” “அட என் கெரிச்சல் கெடா குட்டி ஒண்ணு உன் ஆட்ல கலந்து போச்சிபா.” “இல்லியே. என் கணக்கு செரியா கீதே. கணக்கு ஒதைக்கணுமில்லே?.” “இன்னா உன் கணக்கு?.” ”பெருசு உருப்படி–101, குட்டிங்க—11. ,எண்ணி வுட்டுப்புட்டு உன் குட்டி இருந்தா தூக்கிக்கிணு போயேன்.” “ஆங்! டேய்! உன்னுது பத்து குட்டின்னுதானே அன்னிக்கு சொன்ன… இப்ப இன்னா ரெண்டு நாள்ல ஒண்ணு குட்டி போட்டுக்கிச்சா?.”—- பேசிக்கொண்டே நோட்டம் பார்த்தவன்

“ அதோ கருப்பும் வெள்ளையும் பெனைஞ்சாப்பல ஒட்டாத தனிச்சி நிக்குது பாரு கெரிச்சல் கெடாகுட்டி அதான் என்னுது.” “அடீங்! இன்னா பேமானித்தனம் இது?.குட்டி வளப்பமா கீதுன்னு லவட்ட பாக்கிறியா?.டியேய்! அப்புறம் நானு மனுசனா இருக்கமாட்டேன். ஹக்காங்.” “அடாவடி வாணாம் ராகவா. ஆடுங்க வேற மந்தையில கலந்து போறது நம்மள்ல சகஜந்தான். நாளைக்கு உனுக்கும் நடக்கும்..” “ஜேய்! அதுக்கோசரம் என்குட்டி உன்னுதா?.”. ”செரிப்பா அதும் ஆத்தா கிட்ட ஓட்டு. மடியில வாய வெக்கட்டும், அதும் ஆத்தா குட்டிய அண்ட வுடட்டும் ஒத்துக்கறேன்.” — பெரும்பாலும் குட்டி எந்த ஆத்தாகிட்டயும் ஊட்டிக்கும். ஆனா ஆத்தா ஆடு அம்மாம் சுலுவுல வேற குட்டிய ஊட்டிக்க அண்ட வுடாது. ராகவன் ஒரு நொடி சுதாரிச்சவன் “அதும் ஆத்தா போன மாசம் கழிசல்ல பூட்டுதுடா. பக்குவமா கூழும் கஞ்சியும் வெச்சி காப்பாத்திக்கிணு வர்றேன். வந்துட்டான் பூ……… இஸ்து கட்டிக்கிணு.” —– ராகவன் கிட்ட வரதன் மனம் நொந்து பேசிக்கிணு இருக்கிறப்ப ஏற்கனவே வரதன் சொல்லிட்டு வந்தாப்பல அவன் புள்ள மந்தைய இவங்க இருக்கிற எடத்துக்கு பக்கமா ஓட்டி வந்து மேய்க்க ஆரம்பிச்சிட்டான். “டேய்! வாணாண்டா.அசடா இருந்து கெட்டவனும் இல்லே, சமத்தா இருந்து வாழ்ந்தவனும் இல்லேன்னு சொல்றதுடா..” “அத்த எனுக்கு சொல்றியா நீ?. அது உனுக்குதாண்டா. எதிரி சொத்தை பெரட்டிக்கிறதுக்கு நானா அலையறேன்?.”

வரதன் சோர்ந்து போயி அங்கியே உக்காந்துட்டான். கொஞ்ச நேரத்து மேச்சலுக்கப்புறம் அந்த தாய் ஆடு தன் கெரிச்சல் குட்டிய பார்த்திடுச்சி போல. பேஏஏஏ….பே..ஏ.ஏ.ஏ.. பே..ன்னு உரக்க குரல் குடுத்தபடி குட்டிய நோக்கி ஓட, அந்த மந்தையில இருந்த கிடா குட்டி துள்ளித்துள்ளி ஓடி வந்து வேகவேகமா தாயி மடியில வாய வெச்சி முட்டுது..தாயி குட்டிய இழுத்து இழுத்து நக்கிக் குடுக்குது. பார்த்துப்புட்டு ராகவன் கம்முனு நவுந்துட்டான். “ ராகவா! இதுங்களுக்கு நம்மள மாரி பொய்,புரட்டு தெரியாதுடா. ”.—ராகவன் எதுவும் பேசாமல் குட்டிய வுட்டுப்புட்டு மந்தைய ஓட்டிக்கிணு பூட்டான். வரதன் போயி குட்டிய அலாக்கா தூக்கி அடீ என் ராஜாத்தீ! பிரிஞ்சி ஒருமாசமானாலும் ஒன் ஆத்தாவ தெரிஞ்சிப் போச்சாடீ ஒனுக்கு?.ன்னு சொல்லிகொஞ்ச, பார்த்துப்புட்டு புள்ள சிரிக்க, அணைச்சிக்கிணான். அப்புறம் புள்ள சாப்புட்டு முடியற மட்டும் அங்க இருந்துட்டு காலி ஏனத்தோட கெளம்பினான். கம்பங்கூழு கடிச்சிக்க உப்புகண்டத்த வறுத்து வெச்சிருந்துச்சி..

வரதனோட ஆத்தாளும், பொண்டாட்டியும் இன்னிக்கு காத்தாலயிருந்து மேச்சேரிக்கு கெளம்பச் சொல்லி அவனுக்கு தாத்துகோல் போட்டுக்கிணே இருக்குதுங்க. பட்டிமவன் கெளம்புவனான்னு அடத்துக்கு ஒக்காந்துங்கீறான்.. “அட யார்றீ இவ. நம்ம ஆட்டை இந்நேரம் கசாப்பு கடைக்கு ஓட்டியிருப்பான். அப்புறம் எங்கபோய் புடிக்கிறதாம்?”. “ஹக்காங்! இப்பிடியே நொண்டி சாக்கு நூறு சொல்லிக்கிணு இரு குடுத்தனம் வெளங்கிப் பூடும் செனை ஆட்ட எப்பிடியாப்பட்ட பாவியும் கசாப்புக்கு ஓட்டமாட்டான்..”

” தே! மேச்சேரி ரங்கனப் பத்தி உனக்கு தெரியாதுடீ.வெல்லுவாயன் மொரடன், அடிதடிகாரன் பேசறப்பவே கைய நீட்டிடுவான் .அம்மாம் திமிரு. அதில்லாம நாம அவன் எடத்துக்குப் போனா அவன் கையில்ல பலுத்துப் போவும்?. ஆளும் எருமைகணக்கா இருப்பான். எருமைகிட்ட எதுக்கு பிரச்சினைன்னுதான்..”

“ஐயே! எனுக்கு வாச்சது வீராதி வீரன் சூராதி சூரன்னுதான் உன்ன அவன் கிட்ட போயி மல்லுக்கட்ட சொல்லிப்புட்டேன் பாரு. நீயும் அப்பிடியே பொளந்து கட்டிப்புட்டுத்தான் மறுவேலை பாப்ப பாரு. த்தூ! அயிரைக்கு எதுக்கு வெலாங்கு சேட்டை?’. கமானமா போயி நோட்டம் பாரு. மந்தையில நம்ம ஆடு கீதான்னு தெரிஞ்சிக்கிணு வந்துடு. அப்புறம் நம்மூர்ல நாலு பெரிய மனுசங்கள கூட்டிக்கிணு போயி, அந்த ஊர்ல பிராது குடுத்து அவுங்கள வெச்சி ஓட்டியாறலாம்…”—— ஆத்தாளும்,பொண்டாட்டியும் தேத்தியனுப்ப, காத்தால பத்துமணிக்கு பஸ் ஏறியவன் மதியம் ரெண்டு மணிக்கெல்லாம் வந்துட்டான்.

“எம்மா! மேச்சேரி ரோட்ட ஒட்டி கீற கரம்புல அவன் ஆடுங்க மேச்சல்ல இருந்துச்சிம்மா. அசால்ட்டா பார்த்து கண்டுபிடிச்சிட்டேன். நம்ம மூணு ஆடுங்களும் மந்தையிலதான் கீதும்மா.” ——அவன் ஆத்தா கன்னத்தில புத்தி போட்டுக்கிணா. “என்னப்பா வெங்கடாஜலபதி! நாராயணா! பார்த்தியாடா. நம்மள அவன் காப்பாத்துவாண்டா. நீ யாரு?. அஞ்சி வருசம் கொயந்த இல்லாம தவமா தவமிருந்து, எங்கப்பன் பெருமாளு கிட்ட மடிப்பிச்சை கேட்டு, அப்புறமா பொறந்தவண்டா நீ அவன். வுட்ருவானா?. உன்னை ஜெயிக்க யாராலும் ஆவாதுடா.அந்த மாரி ஜாதகம் உன்னுது. வள்ளுவப் பண்டாரம் சொல்லிக் கீறாண்டா. செரி..செரி.. இப்பவே போயி பெரியபெர்தனத்த பார்த்துப்புட்டு வா.”——- கேட்டுக் கொண்டே வந்த மருமவ மொணமொணன்னு பொரிஞ்சிக்கிணே போறா. “ஆமாமா கெய முண்ட இன்னா சூரப்புள்ளய பெத்துப்புட்டா. பேச்சைப் பாரு..`பொரிமாவை மெச்சினானாம் பொக்கை வாயன்.”

மறுநாளு வரதன் விடி நேரமே எழுந்து, குளிச்சி முடிச்சி, நெத்தியில ஒத்தயா திரிசணத்த போட்டுக்குணு, உள்ளே வெங்கிடாஜலபதி படத்துக்கு முன்னால போயி அடக்கவொடுக்கமா நின்னு, ரெண்டு கைகளையும் மேல தூக்கி பெருமாளின் நூத்தியெட்டு நாமங்களையும்,அரைமணி நேரமா ஒப்பிச்சி, தீவார்த்தனை காட்டி, கோயிந்தம் போட்டு, சாஷ்டாங்கமா கீழ விழுந்து கும்பிட்டுப்புட்டு, கெளம்பி அவன் தாய்மாமனையும், ஊரு பெர்தனக்காரரையும் கூட்டிக்கிணு மேச்சேரிக்கு பஸ் ஏறினான்..அவன் பொண்டாட்டிக்கு எரிச்சலான எரிச்சல்.. இன்னமோ பெரிய சண்டைக்கு போற சண்டியனாட்டம் குளிச்சி நாமத்த போட்டுக்குணு, அரைமணி நேரமா பெருமாள ஏலம் விட்டுப்புட்டு..ஹும்! கடைசியில இது அங்க போய் மலக்க போறது ஒண்ணுமில்ல. வெவகாரத்த பேசப்போறது என்னமோ பெர்தனமும், மாமன்காரனுந்தான். ஹும்!`வெங்கல பூட்ட ஒடைச்சி, வெளக்குமாறு களவாண்ட கதைதான்.

இவங்க…நேரா மேச்சேரி போயி ஊர் பெர்தனக்காரரு கிட்ட பிராது சொல்ல, அவரும் தாமசம் பண்ணாம, அப்பவே கெளம்பி கூட வர, எல்லாரும் மேச்சேரி ரங்கன் வூட்டு ஆட்டுகொட்டாயாண்ட போய் நின்னுட்டாங்க. இவங்க நல்ல நேரம் இன்னும் ஆடுங்களை கொட்டாய்ல இருந்து கெளப்பல. கெளப்பற நேரந்தான். தகவல் போயி ரங்கன் ஒடி வந்தான். பெர்தனம் அவங்கிட்ட விசயத்த சொன்னதுதான் தாமதம் எகிறி எகிறி பாஞ்சான். வரதனை அடிக்க ஓடி வந்தான். வரதன் தடதடன்னு ஆட, தாய்மாமனுக்கு வெறியேறிப் போச்சிபோல

“டாய்! பெரிய ரவுடியா நீ? பெர்தனகாரங்க எதிர்லயே அடிக்க ஓடியார்ற?அவுங்களுக்கு இன்னா மரியாத?. சொம்மா துள்னா போலீஸை கூப்பிடுவேன்.” —–ரங்கன் அடிக்கிற மாதிரி கிட்ட ஓடிவந்து “டேய்! கம்னாட்டி! எங்கிருந்தோ வந்து என் ஆட்டை ஒன் ஆடுன்னு அடாவடி பண்ணுவ, நானு பூ பெறிச்சிக்கிணு நிப்பேன்.இல்ல? ஒத வாங்காம போவமாட்டீங்கடா.” —அதுக்குள்ள ரங்கனுக்கு சப்போர்ட்டா பத்து வூட்டு பங்காளிங்களும் டாய்!…டாய்!..னு ஓடியாந்துட்டாங்க.. வரதனுக்கு நாக்கு பெசுறுது. பேச்சி வரல. அந்த ஊரு பெர்தனம் எல்லாரையும் அதட்டி தடுத்துட்டு ஆரம்பிச்சாரு.

“ரங்கா! இந்தாளு மூணு மறையாடுங்க அவுங்களுது, மேச்சல்ல கலந்து வந்துடிச்சின்றாங்க. நீ இன்னா சொல்ற?.”.. “ புளுவுறானுங்க மாமோவ்! டேய்! த்தா! ஒதங்கடா இவனுங்கள. ஒச்சாதாண்டா செரிப் படுவானுங்க. போடு போடு..”—-அங்கிருந்த மொத்த கும்பலும் ஓடிவந்து சூழ்ந்துக்கிச்சி.. கொஞ்ச நேரம் அங்க தள்ளு முள்ளு நடந்துச்சி.ஒருத்தன் வரதனோட மாமனை இழுத்து கீழே தள்ளிப்புட்டான். அவ்வளவுதான். சாது மெரண்ட மாரி வரதனுக்கு எங்கிருந்துதான் அந்த தெகிரியமும் ரோசமும் வந்துச்சோ, தெரியல.ஆவேசமாய் பெருங்கூச்சல் போட்டு எகிறினான்..

“டாய்! அடிக்கிறேன்றீய அட்றா பாக்கலாம்.அட்றா சொல்றேன். டாய்அடிங்கடா.…இன்னிக்கு மெஜாரிட்டி கீதுன்னு கும்ப கூடி அடிச்சிப்புட்டா?. நாளைக்கு அந்தபக்கம் மேச்சலுக்கு வரமாட்டியா?. ஒரு ஆடு திரும்பாது ஜாக்கிரதை. நாங்க இன்னா சொல்றோம்னு கேளு,அத வுட்டுட்டு கைய நீட்னா, அப்புறம் எங்களுக்கு கை இல்ல?. .”—-அந்த ஊரு பெர்தனம் குறுக்கே வாயை தொறந்தாரு.

“ஏம்பா! அந்த மூணும் உன்னுதுன்ற, ரங்கன் அவனுதுன்றான். எப்படி நிரூபிக்கப் போற?.” “ தோ மேல எரிஞ்சிம் போறான என்னப்பன் அவந்தான்யா இவனுக்கு நல்ல புத்தி குடுக்கணும்..இவன் ஆடுங்கள மேச்சலுக்கு கெளப்பட்டுங்க, நான் என் ஆடுங்கள காட்றேன். ரங்கனுக்கு மனசாட்சின்னு ஒண்ணு இருந்தா எனுக்கு ஓட்டி அனுப்பட்டும். இல்லன்னா வுட்டுட்டு பூட்றேன்.” “பார்த்தியா மாமா! ஆளு இப்பவே ஜகா வாங்கறான் பார்த்தியா. நான் சொல்லல இவனுங்க திருட்டுப் பசங்க. இதே தொயிலு. எனுக்கு நல்லாத் தெரியும்.எங்கள்து கலவை சந்தையில ரெண்டு மாசக் குட்டியில ஓட்டியாந்தது. ஒண்ணு போல அத்தினியும் மறையாட்டுக் குட்டிங்க. இப்ப என் மந்தையில மொத்தம் இருவது மறையாடுங்க கீது மாமா..”. “சரி சரி நீ ஆடுங்கள கொட்டாய வுட்டு கெளப்பு.” —-அவன் ஓடிப்போயி படலையைத் திறந்தான். ”ப்பே.ஏ.ஏ.ஏ…ப்.பே.ஏ.ஏ.ஏபே…”—ஆடுங்க அம்புமாரி பாஞ்சி ஓடுதுங்க, வரதன் பேசாம பார்த்துக்கிணு நிக்கிறான். அவன் தாய் மாமன் பல்லைக் கடிக்கிறான். “டேய்! காட்றேன்னு சொல்லிப்புட்டு மரமாட்டம் நிக்கிறீயே இன்னா பண்ணப்போற?ஆடுங்கள்லாம் போயிக்கிணே கீதுடா.”—–அந்நேரத்துக்கு ஆடுங்க ஒரு நூறு அடி தூரம் பூட்ச்சிங்க.எல்லாரும் வரதனையே பாக்கறாங்க. வரதன் கம்முனு போற ஆடுங்களதான் பாத்துக்கிணு நிக்கிறான கண்டி ஒண்ணும் பண்ணல.. ஆடுங்க இன்னும் ஒரு நூறடி தாண்டியாச்சி. ரங்கனும் அவன் பங்காளிங்களும் எக்காளம் போட்டு சிரிக்கிறானுங்க. ரெண்டு பெர்தனங்களும் உச்சு கொட்டினாங்க.. அந்த நேரத்துக்கு வரதன் கையை வாயில வெச்சி ஒடைஞ்ச குரலுமில்லாம கீச்ச கொரலுமில்லாம “அ..அ..ழ்.ழ்ழ.யேஏஏ….!…., குவ்.வ்.வ்.வே..எ.எ!”—–நீளமாய் குரலெழுப்பினான்.

அந்த சத்தம் கேட்டதும் எல்லா ஆடுங்களும் தெற்கே சிதறி ஓட, இவனோட அந்த மூணு மறையாடுங்க மட்டும் ஒரு நிமிசம் தெகைச்சி நின்னுட்டுதுங்க. சுத்தி சுத்தி பாக்குதுங்க. “அ.அ.ழ்.ழ்.ழ.யே.ஏ.ஏ….!குவ்.வ்.வ்.வே.ஏ.ஏ…!”—– அவனுடைய ரெண்டாவது குரலுக்கு மூணு ஆடுகளும் இனம் தெரிஞ்சி ஓட்டமா ஓடி வந்து வரதன் கிட்டக்க தயக்கமா வந்து நின்னுட்டுதுங்க. அவ்வளவுதான் வேற பேச்சில்லை. எல்லாம் முடிஞ்சிப் போச்சி. ரங்கன் மொவத்தில ஈயாடல. அந்தூரு பெர்தனம் ரங்கனை மொறைச்சாரு. “சரி வரதா! நீ நிரூபிச்சிட்டப்பா நீ ஆட்டை ஓட்டிக்கிணு கெளம்பு. டேய்! ரங்கா! இன்னா வேல இது?.ஊரு மானத்த வாங்கிட்டியடா கம்மனாட்டி. தொழில் மேல ஒரு சுத்தம் இருக்கணும்டா. சாயந்திரம் ஊர்ல உன்னை விசாரிக்கணும் ஆறு மணிக்கெல்லாம் கோவிலாண்ட வந்து சேரு..”—-சொல்லிவிட்டு நடந்தாரு. வரதன் இட்டாந்த பெர்தனத்த அடுத்த பஸ்ஸில ஏத்தி அனுப்பிட்டு, அவனும் அவன் தாய்மாமனும் ஆடுங்கள பொனைச்சி ஓட்டிக்கிணு அரை கிலோ பட்டாணிய வாங்கி முடிஞ்சிக்கிணு, கொறிச்சிக்கிணே நடக்க ஆரம்பிச்சாங்க. பதினாறு மைலு. நடக்கணும். மாமங்காரன் சிரிச்சிட்டு “டேய் வரதா! இன்னாமாரி சண்டை போட்டடா நானே அலறிப்புட்டேன். .இம்மாம் பேசுவேன்னு நெனைக்கவே இல்லடா. அப்புறந்தான் அவனுங்க அசந்தானுங்க.” “ மாமோவ்! மொதல்ல நீ அவனுங்கள அதட்டல் போட்டியே.. அத்த பார்த்தப்புறந்தான் எனுக்கும் தெகிரியம் வந்துச்சி.” “நீ வாய்ல வித்த கத்தவன்னு அவனுங்க எதிர்பாக்கலடா..ஹ..ஹ..ஹா…” “ ஊஹும்! அவனுங்களும் நம்ம எனத்தானுங்கதான?. சூது தெரியும். அத்தாலதான் எங்கிட்ட அந்தமாரி வித்த ஒண்ணுமில்லடான்னு காட்டிக்கிறதுக்காவ சூரியபகவான் சாட்சி, மனசாட்சின்னு பேசினன்.. இல்லேன்னா ஆடுங்கள மறைச்சிட்டு இருப்பானுங்க மாமோவ்!. ஹக்காங் ”——சொல்லிவிட்டு சிரித்தான். “ இல்லடா. திருட்டாடுங்கள எப்பவும் வெச்சிக்கிறதில்ல. கைமாத்திட்றது இல்லன்னா கசாப்புக்கு ஓட்டிட்றது வழக்கம். ஆனா எப்பவும் செனையாடுன்னா விக்கமாட்டானுங்க. வாங்கறவன் சந்தேகப் படுவான்ல?.”

ஆடுங்க வூட்ட போய் அடையறப்போ சாயரட்சை ஆறுமணி ஆயிப்போச்சி. வைகாசி மாச வெய்யிலு., தோலுரிஞ்சிப் போச்சி. ரெண்டுபேரும் களைச்சிப்போயி ஒக்காந்துட்டாங்க. எங்கியும் எதுவும் சாப்பிடல. காத்தால மேச்சேரியில எறங்கினப்போ கூட்டிப்போன பெர்தனத்தோட ஆளுக்கு ஒரு டீயும், ரெண்டு உப்புபிஸ்கட்டும் சாப்பிட்டதோடு சரி..கொலபட்டினி. ரோடுமேல நேர்வழியா வந்தா தூரம் ஜாஸ்தின்னு கொடிவழியா ஊருமேல ஊருன்னு நடந்ததில டீ கூட ஆப்படல. ஆப்டதெல்லாம் பச்சைத் தண்ணிதான். ஹும்! நேர்வழியா வந்திருந்தா மட்டும் சாப்பிட்டு இருப்பானுங்களா?. எங்காளுங்க துட்டு விசயத்தில படுகெட்டி. சுலுவுல முடிச்சை அவுக்க மாட்டானுங்க. சாமிக்கு ஒண்டிதான் கணக்கு பாக்காம காசை வாரி வுடுவானுங்க.. முன்னாடி வந்துட்ட பெர்தனக்காரரு அங்க நடந்த சமாச்சாரத்த இவன் வூட்ல சொல்லிட்டுப் போய்விட, மாமியாளும் மருமவளும் ஏழுமலையான் சக்திய நெனைச்சி கலங்கிப்புட்டாளுங்க. பெராத்தன பண்ணிக்கிண சீக்கிரத்தில கைவுட்டுப் பூட்ட தன் வூட்டு ஆடுங்க பத்தின பொலத்தையும் காட்டி மீட்டும் குடுத்துப்புட்டான என்னப்பன்..சரி நாளை மறுநா சனிக்கியமையாவும் போச்சி. நாளைக்கே திருப்பதி கெளம்பறதுன்னு ஜரூரா தயாராவ ஆரம்பிச்சிட்டாளுங்க. பயபக்தியா ரெண்டு பேரும் அப்பவே குளிச்சிப்புட்டு மஞ்ச சேலை, நெத்தில பெருசா நாமம். புள்ளைக்கும் மஞ்சா சொக்கா டவுஸரு போட்டு நெத்தி நெறைய நாமம் வரைஞ்சி வெச்சிட்டா. வெங்கிடேச பெருமாளுக்கு உண்டியில செலுத்த மூணு வருசமா முடிஞ்சி வெச்ச பணம், எல்லாம் ரெடி. பயபக்தியா நிக்கிறாளுங்க. துணிமணிகளை பேக் பண்ண பொட்டியும் ரெடி. மருமவ புளியோதரை சோறு கிளற அரிசி ஊறப் போட்டுட்டு, புளிய கரைக்க ஆரம்பிச்சா. மாமியார்காரி எதிர்வூட்டு பாலன் கிட்ட சொல்லி ரெண்டு நாளைக்கு அவங்க ஆட்டோடு தன் வூட்டு ஆடுங்களையும் சேர்த்துவுட்டு மேய்க்கச் சொல்லி ஏற்பாடு பண்ணிப்புட்டா.

“ஏழுமலையானே!,வெங்கிடேசா! நாராயணா!, பெருமாளே! கொயிந்தா!…கொயிந்தா!…கோ…யிந்தா!.”- பெருமாளு துதியில வூடு அமளிதுமளி பட்டுக் கொண்டிருக்கிறது. வந்து உக்காந்த ஆம்பளைங்களுக்கு குடிக்க ஆளுக்கு ஒரு டம்ளர் மோரு குடுத்த கையோட பொட்டச்சிங்க ரெண்டு பேரும் சேர்ந்துக்கிணு அவங்கள உக்கார வுடல. எழுப்பி குளிக்க வெச்சி நாமத்த சாத்திப்புட்டாளுங்க.அவங்களுக்கு ஆயாசமா இருக்குது.. தூக்கம் கண்ணை சுத்துது. பசியில வவுறு கபகபன்னு இஸ்து புடிச்சிக்குணு கீது. வயசான மாமன் பசி தாளாம சுருண்டுக்கிச்சி.கூடவே அவருக்கு நீர்சுருக்கு வேற வந்துட்டுது. வரதன் ஆத்தாக்காரி கத்த ஆரம்பிச்சிட்டா..

“அய்யே! ரெண்டு பேரும் எந்திரிங்கடா. தெய்வகுத்தம் ஆயிப் போவும்டா.. டேய்! நாளைக்கே ஏழுமலையான் கிட்ட போறம்டா. வுட்டா அன்னு கெட்டா ஆறுமாசம் ஆயிப்புடும். சீக்கிரம் .இந்தா போயி பெருமா கோயில்ல கற்பூரம் ஏத்திக் காட்டி, மூணு சுத்து சுத்திப்புட்டு மஞ்சா சொக்கா மஞ்சா சோமனை கட்டிக்குணு வாங்கடா படையல் போடணும். உம்.ம்.ம்.”.—- அவன் ஆத்தாக்காரி அப்படி நவுந்தவுடனே பின்னலயே அவன் பொண்டாட்டி கத்தறதுக்கு வந்துப்புட்டா.

” தே! ஏம்மே! எந்திரி.இன்னைக்கு என் அப்பன் ஏழுமலையானுககு பூசை போட்டாவணும். பூசைசாமான்லாம் ரெடியா கீது. சக்கரைப் பொங்கல் பொங்கியாச்சி..பருப்பு ருப்பி உளுத்த வடை தட்டணும், பாயாசம் வெக்கணும். இன்னும் ஒரு வேலை ஆவல. ரெண்டுபேரும் எந்திரிங்கம்மே, உம் ஜல்தி..ஜல்தி..கைவுட்டுப் போன ஆடுங்கதான் வூட்டுக்கு வந்து சேர்ந்துப்புடிச்சில்ல?. அப்புறம் இன்னாத்துக்கு மூஞ்ச தூக்கி வெச்சிங்கீறயாம்?” “டியேய்! மூட்றீ தெரியும்.”.—வரதன் எரிஞ்சி விழுந்தான். “ அய்யே! இன்னா நோப்பாளம் உனுக்கு? அய்யே! திருப்பதிக்குப் போவ துட்டுக்கு இன்னா பண்றதுன்னு முழிக்கிறியா?. நீ டல்லவாரி ஆளுன்னு எங்களுக்கு தெரியாதா?.சாராய கடையில அயுதுட்டு வருவ. உன் பொவுசு தெரியாதாங்காட்டியும். வுடு.. உன் ஆத்தாக்காரி சிலுவானம் துட்டு ரெண்டாயிரம் வெச்சிங்கீறா பாரு. மொதல்ல அத்த புடுங்கு. அப்புறம்…அப்புறம். நானும் கொஞ்சம் வெச்சிங்கீறேம்மே. குடுக்கிறேன். மோரை வித்து தயிரை வித்து, வேவாத வெய்யில்ல அலைஞ்சி சாணி பொறுக்கியாந்து எரமுட்டை தட்டி வித்து, சிறுவ சிறுவ குருவியாட்டம் சேர்த்து ஒரு பத்தாயிரம் ரூவா வெச்சிங்கீறேன். அத்த சீட்டு புடிக்கிற கண்ணம்மா கிட்ட ரெண்டு வட்டிக்கு வுட்டு வெச்சிக்கிறேம்மே.. அத்த வாங்கியார்றேன். வெங்கிடேசபெருமாள் நம்மள வுட்ர மாட்டான்னு சொன்னனே பார்த்தியா? நம்ம பொருளு நம்மகிட்ட வந்து சேர்ந்துட்ச்சி பார்த்தியா?.அவன் சக்தியே சக்தி.”—– அவ கிட்டக்க போயி வரதன் கையை புடிச்சாள். வரதனுக்கு எங்கிருந்துதான் அம்மாம் ஆவேசம் வந்துச்சோ? விலுக்கென்று அவ கையை ஒதறிட்டு .

“ அடீ படுபாவிங்களே!. கம்னாட்டி முண்டைங்களே!. பொம்பளைங்களாடீ நீங்க?..ராஸ்கோலு! காத்தால குடிச்ச நீத்துப் போன கூழோட மனுசன் கொலபட்டினியா கொளுத்தற வெய்யில்ல பதினாறு கிலோமீட்டரு நடந்து வந்து வியுந்து கெடக்கறான். மனுசன் இன்னா நெலவரத்தில வந்து வியுந்து கெடக்கிறான்?, மன்சன் சாப்டானா இல்லையா?. எதுவும் ஒங்க புத்திக்கு ஒறைக்கலியாடீ. பெருமாளே ,நாராயணா,வெங்கடேசான்னு ரெண்டு பேரும் சிலுப்பிக்கிணு ஆட்றீங்களே. த்தூ! இப்ப இன்னா…இன்னாடீ அவங்களுக்கு?.சொல்றீ! இன்னா அவங்களுக்கு?. ஆங்!, சாமியாம் சாமி. இன்னாடி சாமி?. பசிக்கு மிஞ்சின சாமி எங்கடி கீது? பொறுக்கி நாயே!.”

– தாமரை ஜனவரி 2015 மாத இதழில் பிரசுரமான கதையாகும்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *