கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: June 24, 2021
பார்வையிட்டோர்: 3,935 
 

கோவை ராமநாதபுரம் சுங்கம் பகுதியில் ஒரே பரபரப்பு! துப்பாக்கி ஏந்திய போலீஸை நிரம்பிக் கொண்டு, போலீஸ் ஜீப்கள் சத்தம் செய்தபடி வேகமாகப் பறந்து கொண்டிருந்தன.

சுங்கத்திலிருந்து உக்கடத்திற்குப் போகும் சாலையில் நிறைய புல்டோஷர்கள் தன் ‘பக்கட்’ களை தூக்கிக் கொண்டி தயார் நிலையில் இருந்தன.

கூட்டம் கூட்டமாக சுங்கத்தில் வழியில் நின்று மக்கள் ஆர்வத்தோடு பார்த்துக் கொண்டும், பேசிக் கொண்டும் இருந்தார்கள்.

டூவிலரில் வந்த ஒருவன் வண்டியை நிறுத்தி “என்ன பிரச்னை?…” என்று ஆர்வத்தோடு கேட்டான்.

“அதையேன் கேட்கிறே? தம்பி!… இங்கு வாலாங்குளத்தில் குடிசை போட்டிருக்கும் குடிசைவாசிகளிடம் கலெக்டர், போலீஸ் கமிஷனர் மாநகராட்சி அதிகாரிகள் எல்லோரும் படாத பாடு பட்டு பேச்சு வார்த்தை நடத்துகிறாங்க!…ஆனா …இங்கே இருக்கும் மூன்று குப்பங்களில் ஆக்கரமிப்பு செய்திருப்பவர்களில் இருப்பவர்களில் யாருமே குடிசைகளை காலி செய்ய ஒத்து வருவதாகத் தெரியவில்லை!…”

“ இந்த போலீஸ் அதிகாரிகள் செய்வது சுத்தமாக சரியில்லை!.. முஸ்லீம் மக்கள் குடியிருக்கும் ரகுமான் குப்பத்தில் புகுந்த தான் காலி செய்யச் சொல்லி மிரட்டிக் கொண்டிருக்கிறாங்க! …” என்றான் டூட்டத்தில் இருந்த ஒரு இஸ்லாமியன்.

“ சார்!..நீங்க சும்மா தெரிந்த மாதிரி பேசாதீங்க!…காலை பதினொரு மணிக்கு நானே நேரில் பார்த்தேன்! எங்க கிருஸ்தவர்கள் குடியிருக்கும் டேவிட் காலனியில் பெண்களை எல்லாம் சட்டி பானையை எடுக்கும்படி மிரட்டிக் கொண்டிருந்தார்கள்!….”என்றார் இன்னொருவர்.

“ நீங்க பார்த்த லட்சணம் அவ்வளவு தான்!… முதல் முதல் அதிகாலையிலேயே பெரும்பான்மையான இந்துக்களும் தலித்துகளும் குடியிருக்கும் அங்கம்மா காலனியில் தான், எல்லா அதிகாரிகளும் தங்கள் கைவரிசையை காட்டினார்கள்! சட்டி பானையை எல்லாம் வெளியில் எடுத்து எறிந்தார்கள்… லேசான தடியடியும் நடந்தது!…ஆண் பெண்கள் எல்லாம் அங்கேயே தரையில் படுத்துக் கொண்டார்கள்!

“தமிழ் நாட்டுப் போலீஸைப் பற்றி எங்களுக்கு நன்றாகத் தெரியும்!…தூத்துக்குடியில் நடந்தது போல் எங்களைச் சுட்டுத் தள்ளி விட்டு நேரத்தை வீணாக்காமல் வந்த வேலையை முடித்துக் கொண்டு போங்க…என்று ஒரு இளைஞன் போலீஸ் கைகளில் இருந்த துப்பாக்கியை தன் நெஞ்சுக்கு நேராக திருப்பிப் பிடித்துக் கொண்டு “சுடு!சுடு!..” என்று சத்தம் போட்டான்…உடனே எல்லோரும் “.சுடு!..சுடு!..” என்று எதிரொலித்தார்கள்!

கலெக்டர் தலையில் கை வைத்துக் கொண்டு உட்கார்ந்து விட்டார்…அதன் பிறகுதான் அவர்கள் டேவிட் காலனி, ரகுமான் குப்பம் எல்லாம் போனாங்க!..எல்லா இடங்களிலும் வாலாங்குளத்தில் குடிசை போட்டு வசிக்கும் ஆக்கிரமிப்பாளர்கள் காலி செய்வதற்கான அறிகுறியே இல்லை!…” என்ற விபரம் தெரிந்த படித்தவர் ஒருவர் சொன்னார்!

மாலை வரை முயற்சி செய்து பார்த்து விட்டு அதிகாரிகள் எல்லோரும் வேறு வழியில்லாமல் அவரவர் வீடு திரும்பினார்கள்!

மத்திய அரசு கோவையை “ஸ்மார்ட் சிட்டி’ யாக மாற்ற ரூபாய் 1570 கோடி நிதியை ஒதுக்கி அந்த பணியை துரித கதியில் நிறைவேற்றும் முயற்சியில் ஈடுபட்டிருந்தது!

அதில் ஒரு திட்டம் தான் வாலாங்குளத்தில் இருக்கும் குடிசைகளை அப்புறப்படுத்தி, குளத்தை ஆழப் படுத்தி மழை நீரை அங்கு நிறைய தேக்கி வைத்து, நிலத்தடி நீரை உயர்த்தி, வெயில் காலத்தில் நகரில் தண்ணீர் பஞ்சம் வராமல் பார்த்துக் கொள்வது! அதோடு நகரத்தின் நடுவே உலகத் தரம் வாய்ந்த ஒரு பசுமை பூங்கா ஏற்படுத்தி பொது மக்களுக்கு கோவையில் ஒரு நல்ல பொழுபோக்கு இடமாக மாற்றித் தரப்படும் திட்டமும் அதில் இடம் பெற்றுள்ளது. அதை செயல் படுத்த பெரிய தடை இந்த குடிசைகள்! ஏற்கனவே நீதி மன்றம் அவர்களை காலி செய்ய உத்திரவு போட்டிருக்கிறது! காலி செய்ய யாரும் முன் வர வில்லை!

மாவட்ட நிர்வாகம், காவல் துறையை வைத்து மிரட்டியும் பார்த்தாகி விட்டது! மாவட்ட முக்கிய அதிகாரிகள் ஒன்று கூடிப் பேசினார்கள்!

“ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தை நிறை வேற்ற மத்திய அரசு அதற்காக ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியை நியமித்திருந்தார்கள். அவர் ஒரு தமிழர் மட்டுமல்ல, கோவை பெரிய நாயக்கன் பாளையத்தில் இருக்கும் ஸ்ரீராமகிருஷ்ணா மடத்தைச் சேர்ந்த கல்வி நிறுவனங்களில் படித்த ஒரு மாணவர் என்றும் தெரிய வந்தது!

அவரிடம் போய் நீதி மன்றத் தீர்ப்பிலிருந்து தாங்கள் அதுவரை எடுத்த நடவடிக்கைகள் பற்றி விபரமாக எடுத்துச் சொன்னார்கள்!

“நீங்கள் ஒன்று செய்யுங்கள்! தலித் குடியிருப்பில் இருந்து பத்துப் பேர், இஸ்லாமியர் குடியிருப்பில் இருந்து ஒரு பத்துப் பேர், கிருஸ்தவர்கள் குடியிருப்பில் இருந்து ஒரு பத்துப் பேர் ஆக குறைந்தது ஒரு முப்பது பேர்கள் என்னை சந்தித்து பேச ஏற்பாடு செய்யுங்கள்! நான் பேசிப் பிரச்னையைத் தீர்க்கப் பார்க்கிறேன்!…..”

மாவட்ட கலெக்டர் உடனே அதற்குரிய ஏற்பாட்டை மாவட்ட கலெக்டர் அலுவலத்திலேயே ஏற்பாடு செய்தார்.

மூன்று குப்பப் பகுதி மக்களின் பிரதிநிதிகளுக்கு மத்தியில் அந்த மத்திய அரசு அதிகாரி பேசத் தொடங்கினார்.

“ உங்களில் சிலர் இந்துக்கள் என்றும், மற்றும் சிலர் இஸ்லாமியர் என்றும், இன்னும் சிலர் கிருஸ்தவர்கள் என்றும் எனக்கு நன்றாகத் தெரியும்!

நான் ஒரு அரசு அதிகாரி! நானும் பிறவியில் ஒரு மதத்தைச் சார்ந்தவன் தான்! என் மதப் பற்றும் வழிபாடும் என் வீட்டோடு சரி! நான் அரசு அதிகாரியாக வெளியில் வந்தவுடன் நான் பொது மனிதன்! எந்த மதத்திற்கும் ஆதரவாக நான் இருப்பேன் என்று தயவு செய்து யாரும் நினைத்துக் கொள்ளாதீர்கள்!

குழந்தையிலிருந்து சுவாமி விவேகானந்தரின் அறிவுரைகளை கேட்டு வளர்ந்த உங்கள் ஊரைச் சேர்ந்த ஒரு சகோதரன் தான் நான்!

என் உடலில் ஒவ்வொரு அணுவிலும் அமெரிக்கர்கள் நிறைய வாழும் சிகாகோ நகரில் சுவாமி விவேகானந்தர் பேசத் தொடங்கிய பொழுது சொன்ன இரண்டே வார்த்தைகள் தான் நிரம்பி வழிகிறது! சாதாரணமாக அமெரிக்கர்கள் யார் பேசினாலும் ‘சீமான்களே!…சீமாட்டிகளே!..’.என்று தான் ஆரம்பிப்பார்கள்! இவரோ “சகோதரர்களே!…சகோதரிகளே!..”என்று அந்நிய மதத்தினர் மட்டும் நிறைந்த சபையில் ஆரம்பித்தார்!

அந்த இரண்டே வார்த்தைகளில் எல்லா மதத்தினரையும் தன் கூடப் பிறந்த சகோதரர்களாக நினைக்க வேண்டும் என்ற மனித நேயத்தையும் நல்லிணக்கமும் உலகிற்கு உணர்த்திய மகான் அவர்! அவர் கொள்கைகளை உயிராக மதிப்பவன் தான் நான்!

அதனால் உங்களிடம் நான் கேட்டுக் கொள்ளும் வேண்டுகோள் என்னவென்றால் நான் பிறப்பில் எந்த மதத்தைச் சார்ந்தவன் என்று தயவு செய்து யாரும் பார்க்காதீர்கள்! நான் வீட்டை விட்டு வெளியில் வந்தவுடன் மத நல்லிணக்கத்தையும்,சமத்துவத்தையும் கடைப் பிடிக்கும் சுவாமி விவேகானந்தரின் சீடன் மட்டுமல்ல, உங்கள் அனைவருக்கும் ஒரு பொதுவான அதிகாரி என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்!

என் கல்வி அறிவால் தெரிந்து கொண்ட சில விஷயங்களை நான் முதலில் உங்களிடம் சொல்கிறேன். நீங்களும் யோசியுங்கள்!

இன்றைய சமுதாயத்தில் கல்வியும், நாகரிகமும் வளர வளர அனைத்து மக்களும் தங்கள் பொருளாதார நிலையை வைத்து தான், எதையும் நிர்ணயம் செய்கிறார்கள்! மிகப் பெரிய பணக்காரர்கள் மத்தியில் ஜாதி மத வேறுபாடுகளே இப்போது இல்லை! அவர்கள் தங்கள் அந்தஸ்தை மற்றவர்கள் பொருளாதார நிலையைப் பார்த்தே முடிவு செய்கிறார்கள்!

அதற்கு அடுத்த நிலையில் உள்ள மக்கள் மத்தியில் கூட, அன்றாட வாழ்க்கைக்கு தேவையான பொருள் ஈட்டக் கூட தகுதி இருந்தால் போதும் என்று நினைக்கத் தொடங்கி விட்டார்கள்! அவர்களில் மிகச் சிலர் தான் ஜாதி மத வேறுபாடுகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்! அவர்கள் மத்தியிலும் விரைவில் மாற்றம் ஏற்பட்டு விடும்!

தினசரி பாடுபட்டால் தான் இங்கு கூடியிருக்கும் உங்கள் அனைவருக்குமே சாப்பாடு! அதனால் பொருளாதாரத்தைப் பொறுத்த வரை நீங்கள் எல்லோரும் ஒரே இனம்! ஒரே ஜாதி! உங்கள் முன்னேற்றத்தை விரும்பாத ஒரு சக்தி தான் உங்கள் அறியாமையைப் பயன் படுத்தி, மதத்தின் பெயரால், ஜாதியின் பெயரால் உங்களை ஒன்று சேராமல் பிரித்து வைத்திருக்கிறது!

சமுதாயத்தில் பொருளாதாரத்தில் பின் தங்கியிருக்கும் உழைக்கும் வர்க்கமே நீங்கள் ஒன்று படுங்கள்! ஜாதியின் பெயரால், மதத்தின் பெயரால் இனி உங்களுக்கு எந்த அமைப்பும் வேண்டாம்!

உங்கள் எதிர்காலத்தில் வசதியான குடியிருப்பு, உங்கள் வாழ்வாதாரம் பாதிக்காதபடி வேலை வாய்ப்பு எல்லாம் நான் நிச்சயம் செய்து தருவேன்!”

“ சார்!….இந்தக் கதை எல்லாம் வேண்டாம்!…உங்கள் நோக்கம் எங்களுக்குத் தெரியும்!…எதையாவது சொல்லி எங்கள் குடிசைகளை காலி செய்து, எங்களை தெருவில் அலைய விடப் பார்க்கிறீங்க!…நிச்சயம் நாங்க காலி செய்ய மாட்டோம்!…”

“ தம்பி! ஆத்திரப்படாதே!. !…எனக்கும் உன்னைப் போல் வயசு குறைவு தான் …நம்ம பெரியவங்க சொல்லியிருக்காங்க…ஆத்திரத்தோடு எழுந்தால் நஷ்டத்தோடு உட்கார நேரிடும் என்று!…. நீங்கள் குடிசைகளை காலி செய்வதால் .உங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்ன, என்ன என்று விபரமாகச் சொல்லுங்க……நான் எந்த எந்த வகையில் அவைகளை நிவர்த்தி செய்கிறேன் என்பதைச் சொல்கிறேன்..”
உடனே ஒரு வயசான பெரியவர் எழுந்து “டேய்!…பக்கிரி!…நீ உட்கார்!…நான் பேசிக் கொள்கிறேன்” என்றார்.

அந்த இளைஞன் பெரியவர் பேச்சுக்கு கட்டுப் பட்டு உட்கார்ந்து கொண்டான். உடனே பெரியவர் எழுந்து பேசத் தொடங்கினார். எல்லோரும் அமைதியாக இருந்தார்கள்!

“….சார் நீங்க பேசுவது கேட்க நன்றாகத் தான் இருக்கு!…இங்கே வந்திருக்கிற மூன்று குப்பத்தைச் சேர்ந்தவர்களுக்கும், தினசரி பாடு பட்டாத்தான் சோறு!….. நீங்க சொன்னபடி அதில் நாங்க ஒரே இனம் தான்!…அது எங்களுக்கும் புரியுது!…பிரச்னை அதுவல்ல!…

பல மதங்களைச் சேர்ந்த ஏழைங்க நாங்க…. இங்கே குடிசை போட்டுத் தான் பல வருஷங்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்!…எங்க அனுபவத்தில் காலி செய்யும் வரைதான் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்துவாங்க!…அதன் பின் அவர்களை எங்களால் பார்க்க கூட முடியாது……குடிசை மாற்று வாரியம் என்று தொலை தூரத்தில் எங்காவது அபார்ட்மெண்ட் கட்டுவாங்க!… அங்கு நாங்க குடி போனா இங்கு டவுனுக்கு எங்களால் வேலைக்கு வர முடியாது! எங்கள் எல்லோருக்கும் வேலை இந்த டவுனில் தான்.. எங்கள் வாழ்வாதாரம் முற்றிலும் போய் விடும்! …இங்கு பக்கத்தில் இருக்கும் ஸ்கூல்களில் கஷ்டப்பட்டு எங்கள் குழந்தைகளைப் படிக்க வைத்துக் கொண்டிருக்கிறோம்! அவர்களால் காலையில் நேரத்தில் எழுந்து அங்கிருந்து இங்கு வர முடியாது!

…அது மட்டுமல்ல புதியதாக கட்டும் வீடுகள் வேலை முடிந்தவுடன் பெரும்பாலான வீடுகள் அவர்கள் கட்சி தொண்டர்கள் பெயரில் தான் ‘அலாட்’ செய்யறாங்க!……நாங்க அவர்களுக்கு வாடகை கொடுத்து குடியிருக்கும்படி செய்து விடுவாங்க!.. எங்களுக்கு சொந்தமாக இருந்த குடிசையும் போய், வாழ்வாதாரமும் போய் எங்க குழந்தைகளின் எதிர் காலத்திற்குரிய படிப்பும் போய் விடும்! மொத்தத்தில் நாங்க குடிசைகளை காலி செய்வது சாவதற்கு சமம்!….”

“ பெரியவரே!…நீங்க சொல்வது அத்தனையும் நியாயமே! எனக்கு நன்கு புரிகிறது…அதே போல் நான் சொல்வதையும் நீங்க கேட்க வேண்டும்! நான் நிச்சயம் நீங்கள் எல்லோரும் பாதிக்காதபடி நான் உங்களுக்கு உதவுகிறேன்…நீங்கள் குடிசை போட்டிருக்கும் இடம் உங்கள் சொந்தமான நிலமல்ல..அது அரசுக்கு சொந்தமானது… அரசு உங்க நகரத்தின் வளர்ச்சிக்காக பல கோடி செலவு செய்து அசுத்தம் நிறைந்த அந்த இடத்தை தூய்மை படுத்த விரும்புகிறது! இந்த நேரத்தில் நீங்களும் அனுசரித்து போவது தான் நல்லது!..”

“அப்படினா?…நாங்க எல்லாம் செத்துப்போக வேண்டும் என்று சொல்கிறீர்களா?…” என்று ஆத்திரத்தோடு ஒருவர் எழுந்து கேட்டார்.

“அப்படி எல்லாம் யாரும் சொல்ல மாட்டாங்க….…நீங்களும் இந்த நாட்டுக் குடி மக்கள்!…நீங்கள் பாதிக்காத படி, உங்களுக்கு இந்த அரசு உதவி செய்ய நான் நடவடிக்கை எடுக்கிறேன்!…”

“அது எப்படி ஒரே நேரத்தில் இரண்டும் சாத்தியமாகும்?…”

“அவசரப் படாதீங்க!…நானும் உங்களைப் போன்று ஆதரவற்ற ஏழையாக இருந்து ராம கிருஷ்ண மடத்தின் உதவியால் படித்து இதே ஊரில் முன்னுக்கு வந்தவன். உங்க குழந்தைகள் அனைவரையும் என் கூடப் பிறந்த சொந்த தம்பி தங்கைகளாக நினைக்கிறேன்! இது சத்தியம்!

சிலமணி நேரம் என் கடமைகளைச் செய்யும் பொழுது தான் நான் ஆபிஸர்….மற்றபடி இந்த மனசு முழுக்க சுவாமி விவேகானந்தர் தான் குடியிருக்கிறார்!….என்னை நம்பி நீங்கள் உங்கள் குடிசைகளை காலி செய்து கொடுத்தால் இன்னும் ஆறே மாதங்களில் உங்கள் வாழ்வாதாரம் பாதிக்காத படி டவுனுக்குப் பக்கத்தில் மிக அருகிலேயே நீங்கள் வேலைக்கு வந்து போகும்படி வசதியான ஆரோக்யமான குடியிருப்பு வசதியும் செய்து தருகிறேன்!”

“சார்! நாங்க குடிசைகளை காலி செய்து விட்டு எங்கே போவது?…வேறு எங்காவது தொலைவில் போய் விட்டால், நாங்க வேலைக்கு தினசரி வர முடியுமா? ….குழந்தைகள் படிப்பெல்லாம் அதோ கதி தானா?..”

“அவசரப் படாதீங்க!……பிரச்னையை நன்கு அலசி நான் ஒரு தீர்க்கமான முடிவுக்கு வந்து விட்டேன்….நீங்க மட்டும் ஒத்துழைப்பு கொடுத்தால் போதும்! எல்லாப் பிரச்னைகளும் ஆறே மாதத்தில் சுமுகமாகத் தீர்ந்து விடும்!…”

“எப்படி சார்?… நீங்களே எங்கள் எல்லோருக்கும் புரியும்படி செல்லுங்க!…”

“ஏற்கனவே இங்கு குடிசை மாற்று வாரியம் உக்கடத்தை ஒட்டி ஒரு ஆயிரம் வீடுகள் கொண்ட அபார்ட்மெண்ட்ஸ் கட்டிக் கொண்டிருக்கிறார்கள்!…நான் அதை மாநில அரசின் அனுமதி வாங்கியோ, அல்லது அதற்கு தேவையான நிதியை ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணத்திலிருந்து ஒதுக்கியோ, வாலங்குளத்தில் குடியிருக்கும் உங்கள் எல்லோருடைய பெயர்களுக்கும் முறையாக வீடு ‘அலாட்’ செய்து உத்தரவுகளை உங்கள் கைகளில் தருகிறேன். இன்னும் ஆறே மாதத்தில் அங்கு கட்டிடப் பணிகள் பூர்த்தியாகி விடும்!..”

“சார்!..நாங்க அதுவரை எங்கே போய் குடியிருப்பது?..”

“நானும் உங்களில் ஒருவன் தான்!…அதைப் பற்றி சிந்திக்காமல் இருப்பேனா?…உங்கள் மூன்று குப்பங்களிலும் சேர்ந்து சுமார் எழுநூறு குடும்பங்கள் இருக்கின்றன…
இந்தப் பகுதியிலேயே பெரிய மூன்று தளங்கள் கொண்ட நான்கு பெரிய கல்யாண மண்டபங்கள் உள்ளன. அவைகளை வாடகைகளுக்கு எடுத்து, உங்கள் குடும்பங்களை நான்காகப் பிரித்து அங்கு தங்க வைக்கப் போகிறேன்!

இந்த ஆறு மாதங்களுக்கும் வேளா வேளைக்கு உணவு இலவசமாக சப்ளை செய்யவும் ஏற்பாடு செய்யப் போகிறேன்… நீங்கள் உங்களுக்கு அலாட் செய்யப் படும் வீட்டு வேலை பூர்த்தி செய்யப்பட்டு சாவி உங்கள் கைகளுக்கு வரும் வரை அங்கிருந்து கொண்டே வேலைக்குப் போகலாம்…குழந்தைகள் ஸ்கூலுக்குப் போகலாம்!..”

“சார்!…இதெல்லாம் சாத்தியமாகுமா?…ஆறு மாதம் தங்கும் வசதி, உணவு எல்லாம் எங்களுக்குத் தர அரசு ஒத்துக் கொள்ளுமா?…”

“அரசு என்பது மக்கள் தேவையைப் பூர்த்தி செய்யத் தானே இருக்கிறது?.. ஆயிரம் கோடிக்கு மேல் செலவு செய்யப் போகும் ஒரு திட்டத்தை சுமுகமாகவும், விரைவாகவும், மக்கள் மனம் கோணாமல் நிறைவேற்ற ஒரு கோடி அதிகம் செலவானாலும் பராவாயில்லை! இந்த செலவுக்கு கூட ஒரு புதிய திட்டத்தை உருவாக்கி அதற்கும் அரசின் அனுமதியை என்னால் வாங்க முடியும்!

நம் நாட்டில் இன்று இருக்கும் ஒரு முக்கிய பிரச்னை மத ஒற்றுமை குறைந்து வருவது தான்! நம் நாட்டில் இந்து, கிருஸ்வர்கள், இஸ்லாமியர் என்ற மூன்று மதங்களை சேர்ந்தவர்கள் தான் 90% சத விகிதம் பேர் இருக்கிறார்கள்! அவர்களிடம் தேவையில்லாத பிரச்னைகள் ஏற்பட காரணம், ஒருவருக்கொருவர் அவர்கள் சரியாகப் புரிந்து கொள்ளாததே ஆகும்!

நீங்கள் எல்லோரும் பொருளாதாரத்தில் ஒரே இனம் என்பதை இப்பொழுது புரிந்து கொண்டீர்கள்! ஒரே பிரச்னைக்குப் போராட ஒற்றுமையாக முன் வருகிறீர்கள்..நீங்கள் ஒரே இடத்தில் சேர்ந்து கலந்து வாழும் சூழ்நிலை ஏற்பட்டால் ஒருவருக்கு ஒருவர் இன்னும் நன்கு புரிந்து கொள்வீர்கள்! அதனால் மத ஒற்றுமை பலப்படும்! ஒவ்வொரு மண்டபத்திலும் இந்த மூன்று மதங்களைச் சார்ந்த குடும்பங்களை ஒன்றாக வாழும்படி செய்யப் போகிறேன்! ஒரே பொருளாதார சூழ்நிலையில் உள்ள உங்கள் மத்தியில் மத நல்லிணக்கம் நிச்சயம் பலப்படும்!

அதனால் “மத நல்லிணக்க ஆய்வு முகாம்!’ என்ற ஒரு புதிய திட்டத்தை அரசுக்குச் சொல்லி அதற்கும் என்னால் இந்த செலவுக்கு அனுமதி வாங்க முடியும்!

நீங்கள் செய்ய வேண்டிய முக்கியமானது உங்க மூன்று குப்பங்களில் வாழும் மக்கள் அனைவருடைய பெயர், வயசு, தொழில் அந்த குடும்பத் தலைவர் பெயர் அடங்கிய பட்டியலை உடனே தயாரித்து எனக்குத் தர வேண்டும். நான் மண்டபங்களை, ஏற்பாடு செய்து அதில் தற்காலிக தடுப்பு போட்டு, ஒவ்வொருவருக்கும் நான் அலாட் செய்து தரும் பகுதியில் நீங்கள் குடியேற வேண்டும்!
மிக முக்கியமான ஒன்று, இதில் உள்ளூர் அரசியல்வாதிகளை நுழைய விட்டு விடாதீர்கள்!”

“சார்!… நீங்க இதை மட்டும் நீங்க நிறைவேற்றிக் கொடுத்து விட்டால் எங்கள் கண் கண்ட தெய்வம் நீங்க தான்!..” அங்கு கூடியிருந்த மூன்று மதத்தினரும் உணர்ச்சி வசப்பட்டு ஒரே குரலில் சத்தமாகச் சொன்னார்கள்!

“அரசு என்பது மக்கள் நல் வாழ்வுக்காக அமைக்கப் பட்டது! நல்ல அதிகாரிகளின் கடமை அரசு மக்களுக்காகத்தான் இருக்கிறது என்பதை மக்களுக்குப் புரிய வைப்பது தான்!…..நான் அதைத் தான் செய்கிறேன்!.” என்று சொல்லி விட்டு அந்த அதிகாரி புறப்பட எழுந்தார்.

தன் குரு நாதர் ஸ்ரீராம கிருஷ்ணரின் ‘ஒரே ஆறு!….பல துறைகள்!’ என்ற அமுத மொழியின் மூலம் மத நல்லிணக்கமே மனித ஒற்றுமைக்கு அடிப்படை என்பதை உயிர்நாடியாகக் கொண்ட சுவாமி விவேகானந்தர், சிகாகோ நகரில் சொற்பொழிவு நடத்தி விட்டு எழுந்த பொழுது அவரிடம் காணப்பட்ட அதே கம்பீரம், அவரின் சீடரான அந்த ஆபிஸர் பேசி முடித்து விட்டு எழுந்த பொழுது, அவர் முகத்திலும் இருந்தது!

எல்லோரும் எழுந்து பணிந்து கும்பிட்டு அவர் காருக்குப் போக வழி விட்டார்கள்!

– ஶ்ரீராமகிருஷ்ண விஜயம் பத்திரிகை நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற கதை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *