கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: April 24, 2015
பார்வையிட்டோர்: 14,095 
 

“உங்கம்மாவுக்கு எப்பவுமே இங்க இருக்கறதுக்கு இருப்பே கொள்ளாது. எப்பவும் கால்ல கஞ்சி கொட்டிண்ட மாதிரி வந்தன்னிக்கே திரும்பி உங்க தம்பி வீட்டுக்கு போறதப் பத்திதான் நினைப்பெல்லாம்… பாருங்க நேத்துதான உங்கப்பா தெவசம் முடிஞ்சுது, இன்னிக்கு ஆரம்பிச்சுட்டா என்ன எப்ப கொண்டு விடப் போறேன்னு…”

“சரி கமலா. நீ அத ஏன் பெரிசு படுத்தற? அம்மாவுக்கு எங்க இருக்க பிடிக்கறதோ அங்க இருந்துட்டுப் போறா..”

மூர்த்தி தன் மனைவி கமலாவை சமாதானப் படுத்தினாலும், அவள் சொல்வதில் உண்மையில்லாமல் இல்லை என்பது புரிந்துதான் இருந்தது. இன்று நேற்றல்ல அப்பா இறந்தபிறகு கடந்த நான்கு வருடங்களில் வருடத்திற்கு மூன்று அல்லது நான்கு தடவைகள்தான் மயிலாப்பூரிலுள்ள மூத்த மகன் மூர்த்தி வீட்டுக்கு வருவாள், நான்கு நாட்கள் இருந்துவிட்டு குரோம்பேட்டையில் உள்ள இரண்டாவதும் கடைசி மகனுமான ராஜாராமன் வீட்டுக்கு திரும்பிச் சென்று விடுவாள்.

இத்தனைக்கும் மூர்த்தி வீட்டில்தான் வசதிகள் ஜாஸ்தி. லஸ் கார்னா¢ல் ஐந்து பெட்ரூம்களுடன் பெரிய தனிவீடு. அம்மாவுக்கென்று விஸ்தாரமான தனி பெட்ரூம், உள்ளேயே ஆண்டி ஸ்கிட் டைல்ஸ்களுடன் பெரிய பாத்ரூம், ஏ.ஸி., டி.வி., தனி பால்கனி, படிப்பதற்கு ஏராளமான சஞ்சிகைகள் என பார்த்து பார்த்துதான் கவனிப்பெல்லாம்.

டைனிங் ஹால், கூடத்தில் பெரிய ஊஞ்சல் என மற்ற வசதிகளுக்கும் குறைவில்லை. எட்டு வயது பேரன் ஹரனும், ஐந்து வயது பேத்தி ஹா¢ணியும் பாட்டியிடம் மா¢யாதையுடன் இருப்பார்கள். கோவிலுக்கு போகும்போது சொகுசு காரில் கமலாதான் டிரைவருடன் அம்மாவை கூட்டிச் செல்வாள். எப்போதும் ஸ்பெஷல் தா¢சனம்தான்.

இவ்வளவு இருந்தும் அம்மாவுக்கு மூர்த்தி வீட்டில் மனசே ஒட்டாது.

மாறாக ராஜாராமன் வீட்டிற்கு செல்வதிலேயே குறியாக இருப்பாள். நேற்று அப்பாவின் திவசத்திற்கு மூர்த்தியின் தம்பி ராஜாராமனும் அவன் மனைவி விஜயாவும் காலையில் வந்துவிட்டு மாலையில் சென்றுவிட்டார்கள். இன்று அம்மாவுக்கு இங்கு இருப்புக் கொள்ளவில்லை. எப்ப என்ன குரோம்பேட்டைக்கு கூட்டிண்டு போற? என்று மூர்த்தியிடம் காலையில் கேட்டாள். அதுதான் கமலாவுக்கு கோபம்.

மாலை அம்மா தன் பெட்ரூமில் டி.வி பார்த்துக் கொண்டிருந்தாள். ஏதோ ஒரு நகைச்சுவையை ரசித்து பெரிதாக வாய்விட்டு சிரித்தாள். மூர்த்தி உள்ளே சென்று அம்மாவுடன் சற்று நேரம் டி.வி பார்த்தான்.

பிறகு அம்மாவிடம் அன்பான குரலில், “ஏம்மா இன்னும் ஒரு பத்து நாள் இங்கேயே இரேம்மா… நாம எல்லாரும் இந்த வாரக் கடைசியில் காஞ்சிபுரம் கோவிலுக்கு போயிட்டு வரலாம்” என்றான்.

அம்மா பதிலேதும் உடனே சொல்லாது சற்று நேரம் அமைதியாக இருந்தாள்.

பிறகு “காஞ்சிபுரம் எத்தன தடவ பார்த்தாச்சு.. வேண்டாம்டா என்ன நாளைக்கு குரோம்பேட்டைல விட்ரு” என்றாள்.

மறு நாள் டிரைவருடன் காரில் குரோம்பேட்டைக்குச் சென்றுவிட்டாள்.

அம்மா சென்ற அடுத்த பதினைந்து நாட்களில் மூர்த்தியின் பெயருக்கு வீட்டு முகவரிக்கு அம்மாவிடமிருந்து ஒரு நீண்ட கடிதம் வந்தது.

கமலா கடிதத்தை மூர்த்தியிடம் கொடுத்துவிட்டு அருகிலேயே நின்றாள்.

என் அன்புள்ள மூர்த்திக்கு,

நாம் அடிக்கடி மொபைல் •போனில் பேசிக்கொண்டாலும், ஒரு நல்ல புரிதலுக்காக இந்தக் கடிதத்தை உனக்கு எழுதனும்னு எனக்கு தோணித்து. அப்பாவின் திவசத்திற்குப் பின், நான் தனியே நிறைய யோசித்துப் பார்த்ததில், நிறைய விஷயங்கள் எனக்குப் புரிந்தன.
பல விஷயங்களை பேசிப் புரியவைக்க முடியாது, அதனால்தான் இந்தக் கடிதம்.

கமலா அன்று உன்னிடம், ‘அம்மாவுக்கு எப்பவுமே இங்க இருக்கறதுக்கு இருப்பே கொள்ளாது’ என்று சொன்னதை நான் கேட்க நோ¢ட்டது. அவள் சொன்னது முற்றிலும் உண்மைதான். கடந்த நான்கு வருடங்களில் நான் உன்னுடன் மயிலாப்பூர் வீட்டில் இருந்த நாட்கள் மிகவும்
குறைவுதான். யோசித்துப் பார்த்ததில் இது இயல்பாக நடந்த ஒன்றுதான், வேண்டுமென்றே என்னால் செய்யப்பட்டதல்ல என்று எனக்குத் தோன்றியது.

உன் மயிலாப்பூர் வீட்டில் எனக்கு எந்த விதமான குறையும் இல்லை. மாறாக வசதிகள்தான் அதிகம். தேவைகள் எதுவும் இல்லை, நிறைகள்தான் ஜாஸ்தி. நீ நிறைய படித்தவன். ஒரு பெரிய கம்பெனியில் சி.ஈ.ஓ. உன் மனைவி கமலாவும் படித்தவள், கெட்டிக்காரி. அவள் அப்பா ரிடையர்டு ஆன ஐ.ஏ.எஸ் அதிகாரி. வசதியான குடும்பத்திலிருந்து வந்தவள், பண்பாடு தெரிந்தவள். ஹரனும், ஹா¢ணியும் காரில் பள்ளிக்குச் சென்று வருபவர்கள். உன் வீட்டில் அது அது திட்டமிட்டபடி வசதியுடன் நேர் கோட்டில் நடக்கிறது.

அனால் உன் தம்பி ராஜாராமன் ஒரு சிறிய கம்பெனியில் அஸிஸ்டெண்ட். உன்னை மாதிரி படித்தவனில்லை. சொற்ப சம்பளத்தில் இரண்டு பெண் குழந்தைகளுடன் வாடகை வீட்டில் சிரமப் படுகிறான். அவன் மனைவி விஜயா படிக்காதவள். சமர்த்து சாமர்த்தியம் போறாது. திருவானைக்காவலில் ஒண்டுக் குடித்தன வாடகை வீட்டில் தொட்டி மித்தத்தில் குளித்து வளர்ந்தவள். அவள் அப்பா திருச்சி பொன்மலையில் ஷண்டிங் ரயில் இஞ்சின் ஓட்டுனராக இருந்தவர்.

அம்மா ஊமை என்பதனால் விஜயாவுக்கு சின்ன வயதிலிருந்தே குரலை உயர்த்தி மிகுந்த சத்தம் போட்டு பேசித்தான் பழக்கம். அது இன்றும் மாறவில்லை. பண்பாடும், நாகா£கமும் அறியாதவள். அவர்களுக்கு உள்ள ஒரே நம்பிக்கை இரண்டு பெண் குழந்தைகளின் படிப்பும் முன்னேற்றமும்தான்.

விஜயாவுக்கு என் அருகாமையும், வழி காட்டுதலும்தான் யானை பலம். என்னக் கேக்காம எதையும் அவ செய்யறது இல்ல. குழந்தைகளுக்கும் என்னுடைய உதவிகள் நிறைய தேவை. அதுகளை எழுப்பி, குண்டான்ல வென்னீர் போட்டு குளிப்பாட்டி, தலை வாரி, தயார் பண்ணி, யூனிபார்ம் போட்டு தினமும் ஸ்கூலுக்கு அனுப்பறது நான்தான். பாட்டி பாட்டின்னு அதுகளுக்கு நான் இல்லாம எதுவும் நடக்காது. ராத்திரி தரையில் படுத்து தூங்கும் போதுகூட என் பக்கத்துல ஆளுக்கு ஒரு பக்கமா படுத்துண்டு கால என் மீது போட்டுண்டுதான் தூங்கும்.

மயிலாப்பூர் வாழ்க்கை எனக்கு அதீத சொகுசு. நான் நன்றாகக் கவனிக்கப்படும் கூண்டுக்கிளி. ஆனால் குரோம்பேட்டை எனக்கு சவாலான சுகம். உன் வீட்டில் என்னால் பயனடைபவர்கள் யாரும் இல்லை. ஆனால் இங்கு நான் தான் கிரியா ஊக்கி. எல்லா அம்மாக்களுக்கும் தன் குழந்தைகளிடம் அன்பும், பாசமும், வாஞ்சையும் சமம்தான்.
ஆனால் கஷ்டப்படும் குழந்தையின் மீது பிரத்தியேக கவனிப்பும், அருகாமையும் அதிகம். இது இயல்பான ஒன்று.

இப்போது உனக்குப் புரிகிறதா, எனக்கு ஏன் அங்கு இருப்புக் கொள்ளவில்லை என்று? எனக்கு உன் குடும்பமும், ராஜாராமன் குடும்பமும் இரண்டு கண்கள்.

என் அன்பும், வாஞ்சையும், பாசமும் உங்களிடம் சமமானதுதான். ஆனால் என் உடல் உழைப்பின் பங்கு ராஜாராமன் குடும்பத்திற்கு அதிகம். அது தேவையானதும், அவசியமானதும் கூட.

உன் புரிதலுக்கு என் சந்தோஷங்கள்.

கமலாவுக்கும், குழந்தைகளுக்கும் என் ஆசீர்வாதங்கள்.

அன்புடன்,
அம்மா

பக்கத்திலிருந்த கமலாவும் கடிதத்தை வாங்கி முழுவதுமாக படித்தாள். உடனே அம்மாவுக்கு •போன் செய்தாள்.

“அம்மா, இப்பதாம்மா நீங்க அவருக்கு எழுதின கடிதத்தை நானும் அவரும் படிச்சோம்….என்ன மன்னிச்சிடுங்கம்மா…உங்க அன்பும் ஆசீர்வாதங்களும் எங்களுக்கு நிறைய இருந்தா போதும்”

குரல் உடைந்து கண்களில் நீர் முட்டியது.

– ஏப்ரல் 2015ல் ஓம் சக்தி இதழில் பிரசுரமான கதை.

Print Friendly, PDF & Email

1 thought on “அம்மா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *